ராகவேந்திர பாடீலின் "தேரு"

தொன்மங்களின் தோற்றம், அவற்றின் சமூகத் தாக்கம், தொன்மங்களை உயிர்ப்புடன் வைத்திருத்தலின் மானுட விலை முதலானவற்றைத் ராகவேந்திர பாடீலின் தேரு என்ற நாவல் தன் கருப்பொருட்களாய் கொள்கிறது. 2003ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்தப் புதினம் சிறந்த கன்னட நாவலுக்கான சாகித்ய அகாதமி விருதை 2005ஆம் ஆண்டு ராகவேந்திர பாடீலுக்குப் பெற்றுத் தந்தது.

தொன்மங்கள் எவ்வாறு உருவாகின்றன, சடங்குகளைக் கொண்டு அவை இடையறாது எவ்வாறு காப்பாற்றப்படுகின்றன என்ற கேள்விகள் கலைப்படைப்புகளில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டிருக்கின்றன. அரவிந்தனின் ‘எஸ்தப்பன்’ என்ற திரைப்படம் தொன்மங்களின் துவக்கத்தைப் பேசுகிறது. ஜெயமோகனின் ‘மாடன் மோட்சம்’ என்ற சிறுகதை சடங்குகளின் தாக்கத்தையும், ஆதிக்க சக்திகள் சடங்குகளைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதையும் பேசுகிறது. தொன்மங்களிலும் சடங்குகளிலும் ஆர்வமுள்ளவர்கள் பாடீலின் தேரு நாவலை இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்.

தேருவின் துவக்கத்தில் எழுத்தாளன் கோகக் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறான். தரமனட்டி கிராமத்தைச் சேர்ந்த சோமப்பா என்ற முதியவரை அங்கு அவன் சந்திக்கிறான். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது தரமனட்டி விட்டல தேரோட்டத்தின் பின்னுள்ள சடங்குகளை விவரிக்கிறார் சோமப்பா. விட்டல தேரோட்டம் துவங்குமுன் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அதன் கல் சக்கரங்களில் தன் தலையை மோதிக்கொள்ள வேண்டும் என்ற ஒரு ஐதிகம் அந்த ஊரில் உண்டு. தன் தலையின் காயங்களிலிருந்து பெருகும் ரத்தத்தால் அவர் தேருக்குத் திலகமிட்ட பின்னரே தேரோட்டம் துவங்குவது அங்கே வழக்கமாக இருக்கிறது. ‘ரக்த திலக சேவா’ என்று இந்தச் சடங்கு அழைக்கப்படுகிறது. இந்தக் கதையைக் கேட்கும் எழுத்தாளருக்கு தேரோட்டத்தைக் காணும் ஆர்வம் எழுகிறது. சோமப்பாவுடன் தரமனட்டி கிராமத்துக்கு அவனும் செல்கிறான்.

theru-novel-raghavendra-patil-book-award-winner_Paavannan_Authors

‘ரக்த திலக சேவை’ துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்னர் கொண்டலிகர்கள் ஊருக்குள் வருகிறார்கள். தரமனட்டி தேருவின் கதையைப் பாடுபவர்கள் அவர்கள். தேர் நகர மறுத்து, அது அசைவதற்கு நரபலி கொடுக்க வேண்டிய சூழல் உருவானதை எழுத்தாளன் அவர்களின் பாடலின் வழி அறிகிறான்- தேர் நகர்வதற்காக பொம்மலாட்டக்காரர்களான தேவப்பா குடும்பம்தான் தன் மகனை பலி கொடுக்கிறது. இதனால் அவர்களுக்கே விட்டலனுக்கு ‘ரத்த திலக சேவை’ செய்யும் உரிமை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் எங்கிருந்தாலும் விசேஷ தினத்தன்று தரமனட்டி வந்து ஐதிகப்படியான அந்தச் சடங்கைச் செய்து தருகிறார். நூற்றுக்கணக்கானவர்கள் வடம் பிடித்து இழுத்தும் நகராத தேர் ஒரு நரபலி கோருகிறது என்ற பின்கதையும் உயர்சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியினரை வெகு சீக்கிரமாகவே நரபலி கொடுப்பதற்குரியவர்களாக அடையாளம் கண்டு கொள்வதும் இருண்மையான நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்தப் பின்கதை முழுதும் ஒரு பாடலாகப் பாடப்படுகிறது.

இப்பகுதியைத் தமிழாக்கத்தில் வாசிக்கும்போது அந்த மண்ணின் மணத்தை நம்மால் முழுமையாகச் சுவாசிக்க முடியவில்லை. பாவண்ணன் சிறப்பான மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார். ஆனால், இந்தப் பாடல் பகுதியை கன்னடத்தில் கேட்டால்தான் நன்றாக இருக்கும். ஏனெனில் இப்படிப்பட்ட பாடலிலும் கதையிலும் பிராந்தியச் சொற்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு.

இதன் பின் கதை பண்டைய காலங்களிலிருந்து நவீன காலம் நோக்கி நகர்கிறது. ஒரு சம்பவம் அடுத்த ஒருசில தலைமுறைகளிலேயே தொன்மமாய் வேரூன்றிவிடுவது எப்படி என்ற கேள்வியில் ராகவேந்திர பாடீல் அக்கறை கொண்டவராக இருக்கிறார். சமகால இளைஞர்களுக்கு சடங்குகள் குறித்த ஆர்வமின்மை, தரமனட்டி கிராமத்தில் நிலவும் சமயம் மற்றும் சாதி வேற்றுமைகள், கிராமத்து உட்பகைகள், ஐதிகங்களையொட்டிய சடங்கு சம்பிரதாயங்கள் தேவப்பா குடும்பத்தின்மீது செலுத்தும் தாக்கம் முதலானவையும் பாடீலுக்கு முக்கியமாக இருக்கின்றன. ஒன்றோடொன்று தொடர்பு கொண்ட பல்முனை ஊடுபாவுகளின் ஒருமித்த தோற்றமாய் விளங்கும் சிக்கலான சமூக அமைப்பைக் குறித்த ஒரு தெளிவான சித்திரத்தை அவரால் இந்நாவலில் வழங்க முடிந்திருக்கிறது. கதைப்போக்கில் சாதிய சமன்பாடுகளின் மாற்றங்களையும் தரமனட்டி கிராமத்தில் பொதுவாகவே நாளுக்கு நாள் மெல்ல அதிகரிக்கும் சீரழிவையும் சுரண்டலையும் விவரணைகளாக நாவலில் பதிவு செய்திருக்கிறார்.

தொன்மங்களின் தோற்றம் குறித்த ஆர்வம் இப்புத்தகத்தில் இருந்தாலும், தொன்மங்களுக்காக பலி கொள்ளப்படும் மனிதர்களிடம் பாட்டிலுக்கு உள்ள அக்கறையே இந்நாவலில் அதிக அளவில் வெளிப்படுகிறது. இந்தக் கதையில் தேவப்பாவின் குடும்பம்தான் சடங்குகளைக் கடைபிடிப்பதற்கான விலை கொடுக்கிறது. அவர்களது தியாகத்துக்குப் பரிசாக முதலில் நிலம் கிடைத்தாலும், சில தலைமுறைகளில் அவர்களுக்குரிய நிலங்கள் ஆதிக்க சக்திகளான கௌடாக்களால் அபகரிக்கப்படுகின்றன. சடங்குகளைத் தீவிரமான மன உறுதியுடன் கடைபிடித்தாலும்கூட அதை அங்கீகரிக்கும்விதமாக அவர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படி எதுவும் கிடைப்பதில்லை.

இந்தக் கதையை உயர்சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் இடையிலான போராட்டமாகவோ ஏழை பணக்காரன் சண்டையாகவோ எழுதியிருக்கலாம். ஆனால் பாடீல் உண்மை எளிய உருவம் கொண்டதல்ல என்பதை அறிந்திருக்கிறார். தங்கள் மகனை பலி கொடுக்கும் விருப்பம் இல்லாத காரணத்தால்தான் பணக்காரர்கள் தேவப்பாவின் மகன்களில் ஒருவனைப் பறித்து கொண்டிருக்கின்றனர் என்பதை தேவப்பாவும் அவனது மனைவியும் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். இருந்தாலும்கூட தேவப்பாவிடம் ஒரு சாது அவனது குடும்பம் பலி கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பம் என்று சொல்லும்போது தேவப்பா தன் கிராமத்து சமூக வாழ்வில் தனக்கொரு உயர்ந்த இடம் இருக்கிறது என்று நம்பத் துவங்குகிறான். ரக்த திலக சேவைக்கு அவன்தான் தன் நெற்றியில் வழியும் ரத்தத்தைத் தந்தாக வேண்டுமென்பதால் தேவப்பா மூலிகைகளை உட்கொண்டும் தரமனட்டி கிராமத்துக்கு வருமுன் வழியிலுள்ள பல கோயில்களுக்குச் சென்றும் தன்னைச் ‘சுத்திகரித்துக் கொள்கிறான்’. தேவப்பா புதிதாய் துவக்கி வைக்கும் பழக்கங்கள் பின்வரும் தலைமுறைகளின் சடங்குகளாகின்றன.

துவக்கத்தில் உள்ள சில சடங்குகள் மட்டுமே கோயில் பூசாரியாலும் உயர்சாதியினராலும் வலியுறுத்தப்படுகின்றன, ஆனால் அதன்பின் தேவப்பா சுயேச்சையாக இன்னும் சில சடங்குகளை உருவாக்குகிறான், மெல்ல மெல்ல அனைத்து சடங்குகளும் அவனுக்கே உரியனவாக மாறுகின்றன. தேவப்பாவுக்குப் பின் வரும் தலைமுறைகள் அத்தனையும் அவன் சுயமாக உருவாக்கிய சடங்குகளையே பின்பற்றுகின்றன.

ஒரு புனிதப் பணிக்காக தன் குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டிருகின்றது என்று தேவப்பா நம்புகிறான். விழாவில் அவனுக்கும் அவனது குடும்பத்துக்கும் தாம் மட்டுமே செய்யக்கூடிய சடங்குகள் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பெற்றுத் தந்திருப்பதாக நினைக்கிறான். துவக்கத்தில் மறுப்பு சொல்ல முடியாதவனாக கீழ்ப்படியும் தேவப்பா பின்னர் தன் சுதந்திர எல்லைகளை வெவ்வேறு சடங்குகளை உருவாக்கி விரித்துக் கொள்வது ஒரு சிக்கலான சித்திரத்தை வரைகிறது. அவனுக்கும் ஒரு சுதந்திரம் உண்டு, அவனுக்கும் சமூகத்தில் ஒரு கௌரவமான இடமுண்டு என்ற நிலையை தேவப்பா தன்னிச்சையான தேர்வுகளால் உறுதி செய்து கொள்கிறான். இந்தச் சுதந்திரமும் கௌரவமும் சமய வழிபாடுகளின் ஒரு சிறு எல்லைக்குள்தான் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் இவற்றின் எல்லைகளுக்குள் அவன் தன் உரிமையை நிலைநாட்டிக் கொண்டு சுதந்திரமாகச் செயல்பட முடிகிறது என்பதை கவனிக்க வேண்டும்.

சமூக இயக்கத்தின் ஒரு முக்கியமான இயல்பை நாம் இங்கு காண்கிறோம். ஒருவன் ஆதிக்கம் செலுத்துகிறானா அல்லது அடங்கி வாழ்கிறானா என்பது இங்கு முக்கியமாக இல்லை – சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் தேவைப்படுகிறது. சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் தேவப்பா தன்னால் சமூகத்தில் ஒரு முக்கியமான இடத்தைக் கோர முடியும் என்று கண்டறிந்த காரணத்தால், சுரண்டலை ஏற்றுக் கொண்டு, அதன்மூலம் தனக்குரிய இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறான் என்று வாதிட முடியும். சாதி அமைப்பு ஒவ்வொரு சாதிக்கும் அதற்குரிய தனித்துவம் மிக்க இடத்தை வழங்கியிருக்கிறது என்றும் இதன் நீட்சியாக ஒரு கருத்தை முன்வைக்க இயலும். சுரண்டலும் சமூக உறுப்பு என்ற அங்கீகாரமும் இணைந்த சிக்கலான ஒரு வலைப்பின்னலாக தோற்றம் கொள்ளும் இந்திய சமூக அமைப்பு எத்தனையோ சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் தொடர்ந்து சாதி அமைப்பாகவே நீடிப்பது ஏன் என்ற கேள்வியைப் புரிந்து கொள்ள இத்தகைய அணுகுமுறை ஒரு விடை அளிக்கக்கூடும்.

Ragavendra_Patil_Kannada_Writers_Authors_Karnataka_Award_Prizes

சடங்குகளில் மிகுந்த பற்றுதலோடு இருக்கும் தலைமுறையின் பிரதிநிதியாக சோமப்பா இருக்கிறார். அவருக்கும் அவரைப் போன்றவர்களுக்கும் சம்பிரதாயங்களும் விட்டலனும் வாழ்வின் அங்கங்கள். தொன்மங்களின் தோற்றம் குறித்து அவர்களுக்கு கேள்விகள் இல்லை, அவை சார்ந்த வழக்குகளில் முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். தீவிரமான நம்பிக்கை உருவானபின் தொன்மம் வரலாற்றைக் காட்டிலும் முக்கியமானதாகிவிடுகிறது. மெல்ல மெல்ல ஐதிகங்கள் உறுதிப்பட்டு, அவற்றை உடைப்பது கடினமாகிறது. சடங்குகளைக் கடைபிடிப்பது அறுபடும்போது அதன் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்ற அச்சத்துடன் மீறல்கள் நம்பிக்கையின் மீதான தாக்குதல்களாகக் கொள்ளப்படுகின்றன. தொன்மங்களும் சடங்குகளும் கலந்த இந்தச் சிக்கலான அமைப்பில் யார் யாரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று உறுதியாகச் கொள்ள முடியாது – சுரண்டுபவர்களுக்கு சுரண்டப்படுபவர்களும், சுரண்டப்படுபவர்களுக்கு சுரண்டுபவர்களும் அவசியமாக இருக்கிறார்கள். இந்த உறவே அவர்களது வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்து, அதன் அடிப்படை நம்பிக்கைகளைக் காப்பாற்றிக் கொள்ள உதவுகிறது.

நம்பிக்கையைக் கட்டிக்காத்தாக வேண்டியவர்கள் தங்கள் நம்பிக்கைகளை இழக்கும்போது என்ன ஆகிறது? நாவலின் பிற்பகுதி இந்தக் கேள்வியை விவாதிக்கிறது. ஆதி தேவப்பாவின் வம்சத்தில் வந்தவனான தற்காலத்திய தலைமுறையில் இளையவனான தேவப்பா தன்னைச் சுற்றிலும் சுரண்டல் மட்டுமே இருப்பதாகக் காண்கிறான். அவர்களது நிலம் சக்திவாய்ந்த கௌடாக்களால் அபகரிக்கப்பட்டுவிட்டது. அவன் நவநிர்மாண் இயக்கத்தில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு சிறை செல்கிறான். பின்னர் அவன் ஒரு விதவையிடம் காதல்வயப்பட்டு அவளை மணமுடிக்க விரும்புகிறான். உத்தவர் அனுமதித்தால் அவன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக இறைவனின் சம்மதம் கிடைப்பதில்லை. அதனால் கோவிலில் இருப்பது தெய்வமல்ல, ஒரு திருடன்தான் என்ற முடிவுக்கு வருகிறான் தேவப்பா. அங்கே இருப்பது சாமானியனின் துயரங்களில் அக்கறையில்லாத ஒரு சிலை – அது கடவுளாயிருந்தால் எப்போதும் ஊமையாய் இருக்கும் கடவுள்.

தன் குடும்பத்தினர் முழுமையான அர்ப்பணிப்புடன் அத்தனை சடங்குகளையும் செய்தாலும்கூட தங்கள் வறுமை நீங்கவில்லை என்பதும் உயர்சாதியினரின் ஆதிக்கத்துக்கு முடிவு வரவில்லை என்பதும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியாத உண்மைகளாக இருக்கின்றன. எனவே நூற்றைம்பது ஆண்டு கால மரபை நிராகரிக்கிறான் அவன். ரக்த திலக சேவையில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று தீர்மானமாக மறுத்து விடுகிறான். அவனது இந்த முடிவு கிராம வாழ்விலும், அவன் வருகையின்மையை ஒரு தீய சகுனமாகக் கருதும் சோமப்பா போன்ற சாமானியர்கள் வாழ்விலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று விவரிக்கிறார் பாடீல்.

நம்பிக்கை, சடங்குகள், தொன்மம் முதலான கேள்விகளுடன் கிராமம் எதிர்நோக்கும் சமூக பிரச்சினைகளையும் நாவலினூடே விவரிக்கிறார் பாட்டில். இவற்றுக்குள் மிக ஆழச் செல்லும் தேவையைத் தவிர்த்து மிக புத்திசாலித்தனமாக அவர் இந்த பிரச்சினைகளை கவனப்படுத்துகிறார். சோமப்பாவின் பாத்திரத்தைக் கொண்டு கிராம வாழ்வின் பன்முகத் தன்மையையும் எப்போதுமிருக்கும் சமய வேறுபாடுகளையும் இந்நாவலில் விவரித்திருக்கிறார். சோமப்பா ஒரு ஜைனராக இருந்தாலும்கூட அவர் விட்டலனை நம்புகிறார், தேரோட்டம் துவங்கும்போது விழாக் கொண்டாட்டங்களில் எப்போதும் அவர் முன்னிற்கிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக, கிராமத்தில் உள்ள அயோக்கியர்கள் அவரது சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவசியப்பட்டபோது அவரைத் தோற்கடிக்கின்றனர் – எப்போதும் அவரை விட்டலனிடமிருந்து பிரிக்கவே முனைந்தவாறு இருக்கின்றனர்.

இந்நாவலில் பாடீல் இளைய தலைமுறையினரின் பதவியாசையையும் பதிவு செய்கிறார். அவர்களுக்கு மரபார்ந்த விஷயங்களில் உள்ள அக்கறையின்மை, காவல்துறையினரின் அதிகாரம், கிராமத்தில் உள்ள சாதிய, வர்க்க கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்வதிலும் தவறவில்லை.

பாடீல் இந்த நூலில் பல்வேறு கூறுமொழிகளைக் கையாள்கிறார். துவக்கப் பகுதிகளில் தேரின் கதையை நாட்டார் பாடல்களின் வடிவில் விவரிக்கிறார். பின்னர் தேவப்பாவின் தலயாத்திரைகள் நுண்மைகள் நிறைந்த விவரணைகளாக எழுதப்பட்டிருக்கின்றன – அதன் வடிவில் ஒரு செவ்வியல் தன்மை உள்ளது. சமகால யதார்த்தங்களைப் பேசும் கதையின் பின்பகுதிகளில் நியோ ரியலிஸ்டிக் அணுகுமுறை கையாளப்பட்டிருக்கிறது. இருந்தாலும்கூட கதையின் மையத்தில் எப்போதும் தேரே இருப்பதால் நாவலில் வடிவ ஒருமைப்பாடு இருக்கிறது. ஆக்கத்தில் தேர் கிராமத்தின் பெருமைக்கு உருவம் கொடுக்கிறது, முதல் அசைவில் அது தியாகத்தின் வடிவம் பெறுகிறது, ரக்த திலக சேவை துவங்கும்போது தேர் சாத்திரங்களின் குறியீடாகிறது.

கிராம மக்களுக்கு எப்போதும் சிரத்தையின் வடிவமாக நிற்கும் அந்தத் தேர், ஒரு மாபெரும் மரபாகவும் அந்த மக்களின் அகங்காரத் தோற்றமாகவும் மாறுகிறது – ஆனால் துவக்கம் முதல் இறுதி வரை எப்போதும் மரபுக்கு எதிராகத் திரும்பும் தேவப்பாவுக்கு அது பலி கேட்கும் சக்கரங்களைத் தரித்த ஒடுக்குமுறையின் வாகனமாகவே இருக்கிறது. நாவலின் மையத்தில் தேரை இருத்தி பாடீல் கதையின் அனைத்து சரடுகளையும் அதன் அச்சில் நேர்த்தியாகக் கோர்த்திருக்கிறார்.

தேரு நம்பிக்கையின் உள்ளடக்கமாய் இருக்கும் சிக்கல்களைப் பதிவு செய்தபோதும் அது மட்டுமே அல்ல கதை என்பதை நாம் உணர வேண்டும். சீரழிவின் கதை, சுரண்டலின் கதை, மரபு மீறலின் கதை என்பதெல்லாம் வேறு ஒரு பெரும் கதையின் பகுதி மட்டுமே. நம் தேசம் எங்கிலும் மரபின் ஒரு பகுதி அழிகையில், நம்பிக்கையின் ஒரு பகுதி மறைகையில், வேறொரு மரபும் வேறொரு நம்பிக்கையும் துளிர்க்கிறது. ஒரு சந்நியாசியின் பெயர் மறக்கப்படும்போதே வேறொரு சாமியார் உருவாகிறார். சமய மோதல்களையும் மகோன்னதமான பன்மைகளையும் சம அளவில் நாம் காண்கிறோம். அடிப்படையில் சிரத்தையே இங்கு மேலோங்கி நிற்கிறது. மரபின் கை இன்னும் தாழவில்லை, நம் மனத்தொகுப்பு சடங்குகளைக் கைவிடவில்லை. பல பரிமாணங்களைக் கொண்ட இந்தப் பிரச்சினையின் ஒரு கீற்றை பாடீல் வெளிப்படுத்தியிருக்கிறார். இதை அவர் மிகப் பிரமாதமாகச் சாதித்திருக்கிறார்.

தேருவின் வெற்றி என்று எதைச் சொல்லலாம்? தன் முன் நிற்கும் சிக்கலான கேள்விகளுக்கு விடை காண பாடீல் எளிய கோட்பாடுகளைத் தஞ்சம் புகுவதில்லை. அவரது மனம் தேவப்பா போன்றவர்களுக்கு இரங்குகிறது, ஆனால் நம்பிக்கை கோரி நிற்கும் சோமப்பாக்களையும் அவரால் புரிந்து கொள்ள முடிகிறது. இதனால்தான் அவரால் நாவலின் நுட்பமான சிக்கல்களைச் சேதமின்றி தன் நாவலில் இடம் கொடுத்து ஏற்றுக் கொள்ள முடிகிறது –  எளிய விடைகள் கிடையாது என்ற புரிதலை வாசகனுக்கு அளிக்கிறார்.

தொன்மங்களின் தோற்றம், சடங்குகள், சிரத்தை, வகுப்பு, சாதி, இவை சார்ந்த வேற்றுமைகளையும் சுரண்டல்களையும் கொண்டு சிக்கல்கள் நிறைந்த கிராம வாழ்வின் சமூக அமைப்பை மிக அருமையாகச் சித்தரிக்கிறது இந்த நாவல். பாடீல் எழுப்பும் கேள்விகள், அவற்றுக்கு விடை காண அவர் மேற்கொள்ளும் அணுகுமுறை, அவர் இந்த நாவலைக் கொண்டு நமக்கு உணர்த்தும் உண்மைகள் – சாகித்ய அகாதமி விருது பெறும் தகுதி கொண்ட நாவல்தான் இது, சந்தேகமில்லை.

இந்த நாவலை நான் தமிழில் வாசித்தேன். சாகித்ய அகாதமி பிரசுரம். பாவண்ணன் தமிழாக்கம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.