படுக்கையில் பேசிக் கொள்ளுதல்
படுக்கையில் பேசிக்கொள்வது சுலபமாகவே இருந்திருக்க வேண்டும்,
சேர்ந்து படுத்துக்கொள்வது நெடுங்கால பழக்கமென்பதால்,
இரண்டு நபர்கள் நேர்மையாக இருப்பதன் முத்திரையாக.
எனினும் இன்னம் இன்னம் காலம் கழிகிறது மௌனமாக.
வெளியே, நம்மைப் பற்றிய கவலையின்றி:
வானத்தில், வளியின் முடிவுறாத அலைகழிப்பு
கட்டிக் கலைக்கும் மேகங்கள்,
மற்றும் தொடுவானத்தில் குவியும் இருண்ட நகரங்கள்.
எதுவுமே விடையளிப்பதில்லை,
தனிமையிலிருந்து விலகிய பிரத்தியேகமான தொலைவிலும்
ஏன் இன்னமும் அரிதாகவே இருக்கிறது,
உடனடியாகவே உண்மையான, அன்பான,
அல்லது பொய் அல்லாத, வெறுப்பற்ற
வார்த்தைகளைக் கண்டறிய.
– பிலிப் லார்கின்
oOo
தாம்பத்திய அன்பு
ஒவ்வொரு மாலையும்
என் வருகையை எதிர்பார்த்து
கலைந்த கூந்தலும், சமையலறையின்
பிசங்கற் சீலையுமாய்
என் மனைவி
வாசலில் காத்திருக்க,
என் ஆதிகாலத்து கார்
உள்ளே வருகையில்
கேட்டின் கதவுகளில் தொங்கிக் கொண்டிருக்கும்
இரு பெண்களில்
ஒருத்தி என் பையையும்
மற்றொருவள் சாப்பாட்டு கூடையையும்
தூக்கிச் செல்ல,
நாளின் பணி முடித்து வீட்டை வந்தடைவேன்.
நாள் முழுக்க அவர்களை மறந்துவிட்டு, இப்பொது
திடீரென்று நினைவு கூர்கிறேன், அவர்களுக்கு மீண்டுமின்று
ஏமாற்றம் அளிக்க போகிறேனென்று:
மாலையை அர்த்தமற்று பார்களில்
கழிக்க திட்டமிருப்பதால்.
மனைவி கொடுத்த காப்பி
வாயில் ஆறிப் போக,
குழந்தைகளின் பள்ளிக் கதைளோ
காதில் மந்தமாகத் தொனிக்கிறது.
அவர்கள் மேல் வைத்திருக்கும் அன்பையும் மீறி
அவர்களுக்கு இன்றிரவும் ஏமாற்றத்தை தரத் தான் போகிறேன்.
– ஸ்ரீனிவாஸ் ராயப்ரோல்
மொழியாக்கம்: நம்பி கிருஷ்ணன்