ஃபார்மால்டஹைடில் பாடமானதா வரலாறு? – சிலந்தியின் விஷக்கடி

தொடர்புள்ள கட்டுரை: ஃபார்மால்டஹைடில் குறியீடுகள் – வரலாற்றையும் புனைவையும் கலத்தலின் சாதக பாதகங்கள்

lego_yellow_Bricks

Toy Reviews and News கட்டுரையில் உள்ள இந்த லெகோ கட்டைகளாலான உரு ஒரு படமாகவும், குறியீடாகவும் பயனுள்ள விளக்கமே.

அதைப் பார்க்கையிலேயே, அனுமன் இதயத்தைக் கிழித்துக் காட்டி உள்ளே ராமபிரானும், சீதையும் அமர்ந்திருக்கும் காட்சியைக் கொண்ட நம் காலண்டர் படங்களோடு என் புத்தி உடனடியாக ஒப்பிட்டது. [அவை இப்போது அத்தனை புழக்கத்தில் இல்லாதிருக்கலாம். இருபதாண்டுகள் முன்பு வரை அந்தப் படம் நிறைய உணவு விடுதிகளின் சுவரில் தொங்கின.] என் புத்தி இந்தியத்தால் வண்ணப்பட்ட சாய்வு கொண்டது என்பதை நான் ஒளிக்கவில்லை.

அதால் லெகோவிலான உருவின் தாத்பரியத்தையும் அறிய விருப்பம் கொள்ள முடிகிறது, அதை, தற்போது மிகச் சிறு சதவீதத்தினரே அறியக் கூடிய ஒரு படத்தோடு ஒப்பிடவும் முடிகிறது. இது என்னைப் பொறுத்து ஒரு விந்தை.

அனுமனின் சித்திரத்தை, ஒரு பண்பாட்டின் நோக்கத்தை மதித்து நோக்குகையில். சுயம் ஒதுங்கி, சமூக ஒழுங்கும், அறமும், நற்பண்பும் மையப்படுவது உயர்வாகக் கருதப்படுவதை அது சித்தரிக்கிறது என்பது உடனே புரியும். லெகோ உருச் சித்திரமோ சுயம் என்பதே தொடர்ந்து கட்டப்படுவதையும், அதுவும் சுயத்தாலேயே கட்டப்படுவதையும் ஒரு புரியாத, தீர்வில்லாத புதிராகக் காட்டுவது தெரியும்.

முன்னது பண்டை நாகரீகத்தின் தாக்கம் என்றால், பின்னது தொழிற்சாலை நாகரீகத்தின், அனேகமாகப் பயனற்ற பொருட்களின் பெருக்கத்துக்காக சமூகங்களைப் பலி கொடுக்கத் தயாராக இருக்கும் நாகரீகத்தின் தாக்கம் என்று பார்க்க முடியும். முன்னதில் நம்பிக்கையைத் தொடர்ந்து மேன்மைக்கு வழி கிட்டுவது குறித்த தெளிவு சித்தரிக்கப்படுகிறது. பின்னதில் வாழ்வின் அர்த்தமின்மை குறித்த விசித்திர உணர்வே தலை. இன்னொரு கோணத்தில் இந்த லெகோ உருச் சித்திரம், நவீன மனிதனின் நிரந்தர பயம் ஒன்றையும் சுட்டும். நவீன மனிதரின் தொடர்ந்த, இடையறாத பயம் அவர்களுடைய தொடர்ந்த இடையறாத நம்பிக்கையோடே சம்பந்தப்பட்டது. நவீனரின் உலகு நிற்கக் கூடாத உலகு. அது தொடர்ந்து ஓடிக்கொண்டும், ‘முன்னேறி’க் கொண்டும் இருக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ள உலகு. அது நின்றாலோ, வேகமிழந்து மெதுவாகத் தொடங்கினாலோ, நவீன மனிதனின் வாழ்வும் உருக்குலையும், அவர்களின் வாழ்வு மீதான ஆர்வ நம்பிக்கையும் மிகவுமே களையிழந்து நீர்த்துப் போகத் துவங்கும்.

லெகோ சித்திர உருவில், நவீனம் கடந்த யுகத்தொழிலுற்பத்தியில் மனிதரை அகற்றி, தானியங்கி எந்திரங்கள் பெருவாரி வேலைகளைச் செய்ய முடியப் போகிற ஒரு காலம் வருவது குறித்த நவீன காலச் சிந்தனைகளோடே இன்னும் வாழும் மனிதரின் அச்சம் வெளிப்படுகிறது. ஒரு கட்டத்தில் தானியங்கி எந்திரங்க்ள் தாமே தம்மையே உற்பத்தி செய்து கொள்வதோடு, அனைத்து மனித வேலைகளையும் – பொருளுற்பத்தியைப் பொறுத்த வரை சொல்கிறேன் – செய்யவும் திறனுள்ளவையாகி விடும். அப்போது சாதாரண மனிதரால் பொருளுற்பத்தி அமைப்புக்கு ஒரு பயனும் இல்லை, அவர்கள் உடனடியாகத் தேவையற்ற உபரியாகி, வேலைகளிலிருந்து நீக்கப்பட்டு விடுவார். இப்படி ஒரு எதிர்மறை விளைவு பொருளுற்பத்தியில் ஏற்படும் அசாதாரண மேம்படுதலிலிருந்து விளைய ஒரு வாய்ப்புண்டு. அந்த நிலையில் தாம் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து நவீன மனிதரில் தொலைநோக்குச் சிந்தனை உள்ளவருக்காவது இன்றைய நிலையில் ஆழ்ந்த அச்சம் ஒன்று பீடித்திருக்கிறது. இது ஏதோ நாளையே எல்லாத் துறைகளிலும் நடந்து விடப் போவதில்லை என்பது உண்மை நிலை. ஆனால் நவீனருக்குப் பிடித்தமான ஒரு உளைச்சல், தொலை நோக்குப் பார்வையை வழிபடுவது. அந்த வழிபாட்டு நோக்கால்தான் அவர்கள் பண்டை நாகரீகம் என்பதை ஒரு தெங்கிய குட்டை என்பதாக்ச் சித்திரித்து ஒழித்துக் கட்ட ஏராளமான மக்களைத் தம்பால் ஈர்க்க முடிந்தது. அதே உளைச்சல் இன்று நவீனர்களுக்கே எதிரியாக நிற்கிறது.

அனுமனின் சித்திரத்தையோ, பழங்குடிப் பிற்போக்குச் சிந்தனை என்ற விமர்சனமின்றிப் பார்க்க இன்று ‘பக்தர்களாலேயே’ முடியும் என்பதே நவீனர்களின் கருத்தாக இருக்கும். நான் பக்தனில்லை என்றாலும் அதை அப்படி ஒரு அடைப்பில் போட்டு அணுக வேண்டிய அவதி எனக்கில்லை. அதைக் கதையாகவும், அதிபுனைவாகவும், உருவகமாகவும் எளிதாகவே என்னால் ஏற்க முடிகிறது.

குரங்கு ஒன்று, மேதாவியாக, சம்ஸ்க்ருதத்தில் புலமையோடும், மதுர பாஷிகனாகவும், ராஜதூதனாகவும், சிரஞ்சீவியாகவும் இருப்பதாகக் கற்பனையில் கூட ஏற்க முடியாத நவீனர்கள் நம்மிடையே பெருகி வருகிறார்கள். இவர்களே, அதே நேரம் அதி புனைவு என்ற வகையில், பல்லாயிரம் வருடங்கள் கழிந்த பின்னர், குரங்குகளைப் பரிணாமத்தில் முன்னேறிய கூட்டமாகக் கற்பனை செய்ய முடிகிறவர்களாக இருக்கிறார்கள். என்ன, அந்த அதிபுனைவு இந்தியாவிலிருந்து வரக் கூடாது. வேரற்ற கற்பனையாக, வழக்கம் போல மேற்கிலிருந்து வந்தால்தான் அதற்கு அத்தனை ஏற்பு கிட்டும்.

அந்த அதிபுனைவில், மனிதர் அழிந்த உலகில் குரங்குக் கூட்டமே உலகெங்கும் ஆளும் கூட்டமாக எழுந்திருக்கையில், காலம் கடந்து விண்கலத்தில் வீடு திரும்பும் ஓரிரு மானுடர்களைச் சிறைப் பிடித்து அவர்கள் ஏதோ விபரீதம், தமது மொத்த வரலாற்றுப் பார்வையை, இன மையக் கருத்துகளை உடைக்கப் போகிறவர்கள் என்றுணர்ந்து கொல்ல முயலும் கூட்டமாக நவீனர்களால் கற்பனை செய்ய முடிகிறது. அதை அதீதப்புனைகதையாக, மானுடர்களுக்கு ஒரு எச்சரிக்கைக் கதையாக எடுத்துக் கொள்வதில் சிறிதும் தயக்கமற்றவர்கள் உலகில் பற்பல நாடுகளிலும் இன்றுள்ள நவீனர்கள்.

ஆனால் அவர்களே அனுமனை ஒரு கதையாகக் கூட எடுத்துக் கொள்ள முடியாததுதான் ஒரு துர்ப்பாக்கியம். அனுமனோ, கணபதியோ எத்தனை அபூர்வமான கற்பனைகள்? அதை நவீனர்களால் சிறிதும் தாங்க முடிவதில்லை.

அனுமனையோ, இதர இந்தியப் புராணத்து நாயகர்களையோ திட்டமிட்டு ஆபாச உருக்களாகக் காட்டுவதில் நவீனர்களுக்குத்தான் எத்தனை பெருமிதம், ஆனந்தம்? இப்படிச் செய்பவர்கள் ஏதோ தெரு ஓரத்துத் தற்குறியான விடலைகள் இல்லை. பெரும் பல்கலைகளில், உலகத் தரமானவை என்று கருதப்படக் கூடிய மேலைப் பல்கலைகளில் பேராசிரியர்களாகவும், பல பண்பாட்டிய ஆய்வாளராகவும் தம்மைக் கருதுபவர்கள், அப்படி உலா வருபவர்கள். அறிவு மட்டும்தான் தெரு ஓரத் தற்குறி விடலைகளின் அறிவை ஒட்டியதாக இருக்கிறது. நடத்தையும் அப்படியே.

தம் மக்களின் புராதன நாகரீகத்தை, நம்பிக்கைகளைக் குப்பையாகவும், ஆபாசமாகவும் சித்திரிப்பதில் பெருமை கொள்ளும் ஒரே மக்களாக நாம்தான் இருப்போம். அதுவும் வேறேதும் தகவலில்லாத வெற்றிட வெளியைக் குறித்து அல்ல இந்தக் கற்பனைகள்.

கிரேக்க நாகரீகத்தோடு ஒரு சம்பந்தமும் இல்லாத அமெரிக்கரோ கிரேக்க நாகரீகமே தங்கள் முன்மாதிரி என்று கூடப் பெருமை கொள்கின்றனர். அந்த நாகரீகத்தை உலகின் முதல் குடியரசு என்றெல்லாம் பிரகடனப்படுத்தி மகிழ்கின்றனர். அது அடிமைகளால் பராமரிக்கப்பட்ட ஒரு ஆக்கிரமிப்பு நாகரீகம் என்று நன்கு தெரிந்த வரலாறுகூட அவர்களின் பெருமிதத்தைச் சற்றும் குறைப்பதில்லை. பன்னாடுகளில் படையெடுத்துப் போய், பெரும் அழிப்பையும், கொலைகளையும், வன்முறையையும் பல நாகரீகத்து மக்கள் மீது சுமத்திய அலெக்ஸாந்தரை மாபெரும் தீரன், வீரன் என்று பாராட்டி மகிழும் அற்புதர்கள் நம் நவீனர்கள்.

மாறாக நெறிகளின் நாயகனாக, பிறர் நலனுக்காகத் தன்னை, தன் அரசுரிமைகளை இழக்கத் தயாராக இருந்த கதாபாத்திரத்தை பல பண்பாடுகள் வழியே எப்படையும் இல்லாமல் தனியனாகப் பயணித்து, ஆக்கிரமிப்புக்குப் பதிலாக நண்பனாகப் பழகி அவர்களோடு இசைந்து வாழ்வதை முறைமை என்று காட்டும் ஒரு நாயகப் படைப்பை, எப்படி எல்லாம் ஆபாசச் சொற்களால் குறைப்படுத்தலாம் என்று யோசித்து ஆயிரமாயிரம் பக்கங்களில் புத்தகங்கள் எழுதி மகிழும் அற்புதர்களாக நாம் இருக்கிறோம்.

‘மற்றவர்’ பற்றிய குரோதத்தை வளர்த்து எடுத்துத் தீயாகப் பற்ற வைத்து பழம் நாகரீகங்களை அழிக்க வேண்டிய மன உளைச்சல்,. செமிதிய மதப்பார்வைகளுக்கே உரிய ஃபாசிஸச் சிந்தனை,. இன்று நவீனர்களுக்கு அறிவியல் என்ற பெயரில் கை மாற்றிக் கொடுக்கப்பட்டிருக்கிறது, ‘முற்போக்கு’ என்ற உருவில். உள்ளீடு மட்டும் மாறவில்லை- அழிப்பு நோக்கமே தலை.

இந்தச் சூழலில் வரலாறு என்பது பாடம் செய்யப்பட்ட சிலந்தி என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. அது விஷச் சிலந்தியாக, ஒரு கொட்டலில் மொத்த ஆளையும், ஏன் மொத்த சமூகங்களையுமே மரணக் குழியில் தள்ளக்கூடிய ஒரு ஜந்துவாகவே அனேக நேரம் இருக்கிறது.

அல்லது அப்படி அதைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களே நவீனர்கள், அதுவும் சுயசிந்தனை என்பதையே முன்னிறுத்துபவர்கள், உலக நாகரீகங்களிலேயே மிக ‘முற்போக்காகத் தம்மை உருவகிப்பவர்கள்.

என்ன ஒரு விந்தை இந்த சுயமயக்கங்களும், பொய்மையைப் பீடமேற்றும் அறிவின்மையின் அவசரங்களும்? இவை மறுக்கும் புராணங்களா கட்டுக்கதைகள்? அல்லது ஒப்பீட்டில் அவையே அழிக்கப்பட முடியாத மானுட வரலாறாக நிற்கக்கூடியவை போலத் தெரிகின்றனவா?

oOo

இந்தச் சூழலில் திரிப்பு வரலாற்றுக் கதைசொல்லல் ஒரு கொலை ஆயுதமாகவே மாறும் என்பதில் என்ன ஐயம் இருக்க முடியும்? பின் அதை ஒரு பாடம் செய்யப்பட்ட சிலந்தியாக எப்படிப் பார்க்க முடியும்? வரலாறு பாடம் செய்யப்பட்ட சிலந்தி அல்ல.

ஃபார்மல்டஹைட் கரைசலுள்ள கண்ணாடிப் பாத்திரத்தைத் திறந்து பார்த்ததாகச் சொல்கிறார் கட்டுரையாளர். நவீனர்கள் அப்படிப் பண்டைக் காலத்தைத் திறந்து பார்த்துவிட்டு நீங்குபவர்கள் அல்ல. தற்காலத்தில் தம் அதிகாரத் தேட்டைக்கு, தம் அநாகரீக நடத்தைக்கு, தம் ஏகாதிபத்தியப் பேராசைகளுக்கு, தம் இனக் குழு தவிர இதர மக்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணும் இனவெறி நோக்கத்துக்கு எப்படி எதையும் கருவியாக்கலாம் என்று பார்க்கவே பண்டை நாகரீகம் பற்றிய ஆய்வுகளைச் செய்கிறார்கள்.

இச்சூழலில் வரலாற்றைப் பாடம் செய்யப்பட்ட சிலந்தி என உருவகமாகச் சொல்ல வசதியாகவோ அல்லது இலேசாகவோ இருக்கலாம், ஆனால் எதார்த்தத்தில் அப்படி இல்லை.

எந்த நாட்டிலுமே வரலாறு அப்படி இல்லை. வரலாறு பலவிதங்களில் சமகால வாழ்வில் நெடுகப் பரவி இருக்கிறது. ஒவ்வொரு கோவிலும், மசூதியும், சர்ச்சும் ஒருவித வரலாறு. ஒவ்வொரு தெருவின் பெயரும், கட்டிடத்தின் பெயரும் ஒருவித வரலாறு. ஒவ்வொரு சதுக்கமும், இடப்பெயரும். பலரின் பெயர்களும், புனைப்பெயர்களுமே ஒரு வகை வரலாறு. இவை இலேசான திரைகளாகக் காற்றிலாடுபவை.

oOo

historical-fiction image

நண்பர், ஒரு முன்னாள் மானுடவியல்/ பொருளாதாரப் பேராசிரியர், இரு தினங்கள் முன்பு ஒரு பதில் சொன்னார்- முன்னதாக நான், எப்படி ஒரே தெருவுக்கு அரை மைலுக்கொரு பெயர் வைக்கிறார்கள் என்று கேட்டிருந்தேன். இப்படித் தனி நபர்களின் பெயர்களைத் தெருக்களுக்கு வைப்பதே வெள்ளைக்காரனிடம் கற்றதுதான். முந்தைய சமுதாயத்தில் ஜாதிகளின் பெயர் வைப்பார்கள், தொழில் குழுக்களின் பெயர்களை வைப்பார்கள், அல்லது சும்மா மேற்குத் தெரு, மேட்டுத் தெரு, கிழக்குத் தெரு, மாட வீதி, உத்தியான வீதி என்று வைப்பார்கள். நெடுநாள் நிற்கக் கூடியவற்றைப் பிரதானப்படுத்துவது இந்தியரின் பழக்கம், குற்றுயிரில் அழிவதைச் சாசுவதமாக்கத் துரத்துவது மேலை வழக்கம் என்று சாதாரணமாகச் சொல்லிப் போனார். அது எத்தனை சரியானது என்பது எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு சுருக்கச் சுட்டாகத் தெளிவாக ஒன்றைச் சொல்வதாகத் தெரிந்தது.

தனிநபரின் அகந்தையை முன்னிலைப்படுத்துவதே நாகரீகம் என்று எண்ணுவது யூரோப்பியரின், குறிப்பாக இந்திய நவீனரின். விசித்திரமான வரலாற்று அணுகல். அதன் இன்னொரு பக்கம்தான் பழமையை, பணடை நாகரீகத்தை, பழம் இனக்குழுக்களை எப்படிக் களங்கப்படுத்தி நாகரீகமற்ற காட்டாட்களாய் காட்டுவது என்று யோசிக்கும் குரூரம் உள்ளெங்கும் ஊறியிருப்பது.

இத்தனைக்கும் மானுட சரித்திரத்திலேயே அதி பயங்கரமான ஆயுதங்கள், உலகளாவிய பெரும் யுத்தங்கள், கொடும் அடிமை முறைகள், தாவர, ஜந்துக்களை பெரும் கூட்டங்களாக அழித்தல் என்று பற்பலக் கொடுமைகளுக்குக் காரணங்களே இந்த நவீனர்களின் அகந்தைதான், அற்ப ஆசைகள்தான். ஒரே நூற்றாண்டில் கோடிக்கணக்கான மக்களைச் சிறிதும் குற்ற உணர்வின்றி அழித்த பெரும் ஆபாசங்கள் நவீனர்களின் பல நாயகர்கள். இருந்தும் சிறிதும் குற்ற உணர்வின்றி அதே நாயகர்களை விடுதலை வீரர்களாகச் சித்திரிக்கத் தயங்காத அறிவுச் சூன்யங்கள் இந்த நவீனர்கள். அதே காரணங்கள் உந்துவதால், மண்புழுவையும், நுண்ணுயிர்களையும்கூட படைக்கலமாக மாற்றி பல கோடி மக்களை அழிப்பது எப்படி என்று ஆராயப் பெரும் நிதியை ஒதுக்கும் வினோதர்கள் இந்த நவீனர்கள்.

பள்ளிப்புத்தகங்களில், கல்வெட்டுகளில், மேடைப் பேச்சுகளில், புனைகதைகளில், பாடல்களில், நடனங்களில் எல்லாம் கதைகளாகவோ, அறப் பிரச்சாரமாகவோ அல்லது உணர்வெழுப்புதலாகவோ வெளி வருவனவும் வரலாறே. ஏன் அனேக அறிவியல் சோதனைகளும், முடிவுகளைத் தெரிவிக்க எழுதும் கட்டுரைகளும், புத்தகங்களும்கூட ஒரு வகை வரலாறுதான். Narrative என்பதெல்லாமே வரலாறு என்று கூட நாம் சொல்லி விட முடியுமா என்று தெரியவில்லை.  அத்தனை தூரம் எல்லாம் வரலாறு என்று சொல்ல முயல்வது ஒரு அளவுக்கு ஏற்கக் கூடியது என்றாலும், அது மிக அதீத நிலைப்பாடு.

அதற்கு ஒரு சிறு ஆதாரமாவது உண்டு என்பதை நாம் நினைவு வைத்திருக்கலாம்.

மொழி என்பதே வரலாற்றின் கருவூலம்தான்.

அதைப் பயன்படுத்தும் ஒவ்வொரு கணமும் நாம் வரலாற்றையே பயன்படுத்துகிறோம். இதை அறிந்த நுட்ப உணர்வுடன் தான் ஆர்வெல் தன் புனைவுலகில் மொழி சிதைக்கப்படுவதையே கூட, பெரும் பயங்கரமாகக் காட்டுகிறார். (1984 நாவலில் சமூகக் கட்டுப்பாட்டுக்கு அடித்தளமே மொழிச் சிதைப்பும், அர்த்தக் குளறுபடியும். ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியர்களான, அடார்னோ, மார்கூஸா ஆகியோரின் பல பத்தாண்டு உளைச்சல்கள் இந்த மொழித் திரிப்புக்கும் இருண்மை நிறைந்த மானுட நடத்தைக்கும் உள்ள நேரடித் தொடர்புதான்.) அதே காரணத்தால்தான் சோவியத் அரசுகளும் மொழி அரசியலில் மிக்க கவனம் செலுத்தின. அதை ஆயுதமாகவே அவை பயன்படுத்தின. மேற்கிற்கு மொழி என்பது பிரிவினையைப் பண்டை நாகரீகங்களிடையே விதைக்கப் பயன்படுத்தக்கூடிய ஆயுதம் என்பது துவக்கத்திலிருந்தே தெரியும். அங்குதான் மேற்கின் ஆய்வுப் பிரிவாகிய மொழியியல் என்பதன் துவக்கமே.

மொத்தத்தில் உயிருள்ள வரலாறு என்பது, கடந்த காலத்தை நிகழோடு தொடர்ந்து பின்னும் ஒரு முயற்சிதான். இதைப் பிரக்ஞைபூர்வமாகச் செய்யலாம், செய்ய வேண்டும் என்பது இடது சாரிகளின் பிரச்சாரம். நடைமுறையில் அவர்கள் வரலாற்றை அதன் பல சிக்கல்களை, அறிவு பூர்வமாக மட்டும் அணுகுவதில் எழும் புரியாமைகளை இருட்டடிப்பு செய்வதில் முதல் நிலைக் குற்றவாளிகள். வலது சாரிகளில் பஞ்சாங்கவாதிகள் ஒரு வகையாகவும், ஃபாசிஸ்டுகள் ஒருவிதமாகவும் வரலாற்றைத் திரிப்பார்கள் அல்லது பூசி மெழுகி தம் விருப்பக் களியாக ஆக்குவார்கள்.

ஆக இங்கு வரலாறு என்பதுதான் என்ன, எது வரலாறில்லை என்ற கேள்வி எழும்.

ஒரு காட்டு: புராணங்கள் வரலாறா?

இந்தக் கேள்விக்கு மேற்கின் எவாஞ்சலியர் தொடர்ந்து சொல்வது- இந்தியாவின் புராணங்கள் வெறும் கட்டுக்கதைகள், மேற்கின் பதிவு செய்யப்பட்ட தகவல் தொகுப்பே வரலாறு. [மேற்குதான் அறிவுக்கே ஊற்றுக் கண் என்று நம்பும், பிரசங்கிக்கும் அதிபுத்திசாலிகள்- இந்தியரே ஆனாலும்- மேற்கின் எவாஞ்சலியர் என்று அழைக்கப்படக்கூடியவர்.] இந்து மனோபாவமும், பாதையும், அந்த நாகரீகத்தின் இத்தனை கால இயக்கமும் தொடர்ந்து மேற்காலும், இந்தியாவிலிருக்கும் மேற்கின் கொத்தடிமைகளாலும் இழிக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணம் இங்குள்ளது.

பண்டைச் சமூகங்கள் பற்றிய தகவல் இந்தப் புராணங்களில் அனேகமாகச் சார்புகளால் கறைப்பட்டு, தொடர்ந்து திரிப்பாகவே, புனை கதையாகவே, அதிலும் அதீதப் புனைவாகவே இருக்கிறது என்பது குற்றச்சாட்டு. சாடிக்கொண்டே தம் புத்தகங்களில் இந்தியர்களையும், இந்துக்களையும், ஒட்டாத மொழி இனக் கூட்டங்களாகப் பிரித்துப் பார்த்து தாம் செய்த ‘ஆய்வுகளில்’ நெடுகத் திரிப்புகளால் நிரப்பிய அருமையான மனிதர்கள் மேலையினர். இவர்களின் வாதங்களில் ஒரு பகுதி சரி. அதாவது தகவல்கள் என்று இவர்கள் கொடுப்பன சில உண்டு, அவை ஓரளவு சரியானதாக இருக்கலாம்.

காந்தி இந்த ஊரில், இத்தனாம் தேதி, இந்த நேரத்தில் இப்படிக் கொல்லப்பட்டார் என்று சொல்வார்கள். அது சரியாக இருக்கும். ஆனால் அதிலிருந்து பின்புலன், முன்புலன் என்று பார்வையை ஓட்டி அவர்கள் பெறும் முடிவுகளில் அனேகமாக எல்லாமே, தம் அறியாமையாலும், தம் இனக்குழு சார்பாலும், தம் கிருஸ்தவ மதிப்பீடுகளாலும், தம் வரலாற்றாலுமே பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தும் அறியாதவராகவே இவர்கள் செயல்பட்டிருக்கின்றனர். அவற்றை அறியாதவர்களாகவே பெறும் நாம், அவை மாறாத உண்மைகளே என்பதாக நம் பள்ளிகளில், கல்லூரிகளில் அவற்றைப் போதித்துக் கொண்டிருக்கிறோம். நம் அன்றாட வாழ்வின் அனுபவங்கள் இந்தப் போதனைகளோடு பொருந்தாத இடங்களில், நம் அனுபவங்களைச் சந்தேகித்து, அவற்றைக் கடன் வாங்கிய செருப்புக்கேற்ப வெட்டிக் கொள்ளவும் நாம் தயங்குவதில்லை.

ஜாதி என்ற, தினசரி வாழ்வில் புழங்குகிற சொல்லை ஒழித்து, கேஸ்ட் என்ற, தினசரி வாழ்வில் நாம் காணாத ஒன்றை, அதுதான் இந்திய சமூகத்தைக் கட்டமைக்கிறது என்ற வாதத்தை எத்தனை இந்தியர்கள் புத்தகங்களில், செய்தித்தாள் அறிக்கைகளில், ஏன் பாராளுமன்ற/ மக்கள் மன்ற அறிவிப்புகளில் கூடப் பயன்படுத்தி மகிழ்கிறோம்! வெள்ளையரின் புத்திசாலித்தனத்தின் மீது அத்தனை நம்பிக்கை, அவர்களிடம் அங்கீகாரம் பெறுவதில் அத்தனை முனைப்பு. அத்தனை ஆழமாக அடிமைத்தனம் ஊறிய புத்தி.

இந்திய இடதுசாரி வாளை மேற்கில் சுழற்றிக் கொண்டு, சௌகரியமாக இருக்கும் இன்னொரு வீரர் ஒருவர் சமீபத்தில் எழுதத் தலைப்பட்டது போல, நாம் யூரோப்பை அதனிடத்தில் வைத்துவிட முயல வேண்டும். அதாவது அவர் சொன்னது போலவே, உலகின் பெரும் நிலப்பரப்பில் அது ஒரு மாவட்டம். அவ்வளவுதான். அவர் மட்டும் யூரோப்பிய வரலாற்றியலான மார்க்சியம் என்கிற ஏகாதிபத்திய நோக்குள்ள வரலாற்றியலைக் கை விட மாட்டார். இந்திய எதார்த்தத்தை அந்த கடன் வாங்கிய பாதணிக்கு ஏற்பத் துணித்துத்தான் பார்க்க முடியும் அவருக்கு.

யூரோப்பியத்தின் பார்வை, மதிப்பீடுகள், முடிவுகள், வரலாற்றுப் புனைவுகளை உலகுக்கே பொருந்துவன என்று எடுத்துக் கொள்ளும் தவற்றை நாம்தான் செய்கிறோம். அவர்கள் செய்வது அவர்களுக்கு இயல்பு. நாம் செய்வது அடிமைத்தனம். அவர்கள் நம்மிடையே அந்தக் கருத்தைப் பரப்பக் கடும் முயற்சி செய்வதும் அவர்களின் பல நூறாண்டு ஏகாதிபத்திய முயற்சிகளின் நீட்சி. அந்தக் கருத்துகளை ஏற்றுப் பாதுகா பட்டாபிஷேகம் செய்து அவற்றின் பிரதிநிதியாக நம்மைக் குறைத்துக் கொள்வது ஆயிரம் ஆண்டுக் காலனியத்துக்கு அடிபணிந்த நம் கோழைத்தனம், முட்டாள்தனம்.

oOo

நான் நேற்று மதியம் 3.30 மணிக்குக் கிளம்பி புத்தகக் கண்காட்சிக்குப் போன காதையை, வீட்டு வாயிற்படியில் எங்கள் வீட்டில் போட்ட கோலத்தில் துவங்கி, தகவல்களால் நிரப்பலாம். அதெல்லாம் ஒரு ‘வரலாறு’தான். அதனால் யாருக்கு என்ன பயன்? சுய சரிதை என்பதைக்கூட அளப்பிற்கு எல்லை இல்லாத தகவல்களால் நிரப்ப முடியாது.

தகவல்கள் அனைத்தையும் வரலாறாக ஆக்க யாராலும் முடியாது. ஒலிப்பதிவு நாடாக்களில் இருந்து பேட்டிகளை எழுதுபவர்களுக்குத் தெரிந்த ஒன்று இது, அந்த நாடாக்கள் அல்லது பதிவுகளில் இடையிடையே எழும் மௌனம் என்பது ஒன்று இருக்கிறதே அது எத்தனையோ கதைகள் கொண்டது. சரி விடியோவே எடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம், அதிலும் ஒவ்வொரு சட்டகத்தில் உள்ள பிம்பமும், சட்டகத்துக்கு வெளியே, காமிராவால் காட்டப்படாத மாற்று பிம்பம்/ காட்சிகளும் சேர்ந்த ஒரு எதார்த்தம், வெட்டி ஒட்டித் தொகுத்துக் காட்டப்படும் சித்திரத்துக்கு வெளியில் உள்ளதை நமக்கு எப்படியோ உணர்த்திக் கொண்டே இருக்கும்.

நாம் கதைகளில் நம்மை ஆழ்த்திக் கொண்டு அதோடு ஓடவே முழுதும் தயாராக உள்ள மனிதரானால் இந்த வெறுமைகள் அல்லது இடைவெளிகள் நம்மை அதிகம் பாதிக்காமல் இருக்கலாம். வெறுமைகளாலேயே பாதிக்கப்படுவோராக நாம் இருந்தால் கதையோட்டத்தை நாம் ஏற்க முடியாமல் போவோம்.

அதனால்தான் அறத் தேட்டம் என்ற பார்வையை  மட்டுமே கைக்கொண்டு வாழ்வையோ அல்லது இலக்கியத்தையோ/ கலைகளையோ அணுகும் குகைப் பார்வைக்காரர்கள் வேறெப்படியும் இயங்கத் தெரியாது, நிரந்தர வாளேந்திகளாக இருக்கிறார்கள், சக மனிதர்களை அறியக்கூட முடியாதவர்களாக மாறி விடுகிறார்கள். களேபரமான எதார்த்தம் அவர்களைத் தொடர்ந்து அச்சுறுத்துகிறது. அதைப் புரட்டிப் போட்டுக் கொன்றுவிட்டு, தம் ஒற்றை அளவையால் சீர்மைப்படுத்தப்பட்ட (homogenized, streamlined, standardized) புது எதார்த்தம் ஒன்றை, தம் விருப்பத்துக்கு உட்பட்ட உலகில் நிறைந்த ஒரே எதார்த்தமாகப் படைக்க எண்ணி, அதற்கென சக மனிதர்கள் அனைவரையும் வெறும் காலாட்படையினராக உருக்குறைக்கும் முயற்சியில் ஆரவாரத்தோடு இறங்குகிறார்கள். அது இறுதியில் இவர்களால் கொல்லப்பட்ட எதார்த்தத்தைவிட அப்படி ஏதும் மேலான அறத்தைக் கொண்டிருப்பதில்லை. மாறாகப் புது அறம் நரபலி கேட்கும் துர்த்தேவதையாகவே இருக்கிறது.

இதெல்லாம் தெரிந்ததுதான், இதில் நான் என்ன சுட்ட விரும்புகிறேன்?

விவரங்கள் ஏராளமாகத் தெரிந்தாலே வரலாறு நேர்ப்படக் கிட்டி விடாது. விவரங்கள் எப்படி, யாரால் சேமிக்கப்பட்டன என்பதேகூட ஒரு கேள்வியாக எழும். அது, பற்பல சேமிப்புகளை ஒத்துப் பார்த்து, அவற்றிலிருந்து ஒரு கலப்படச் சித்திரம் தயாரித்தாலாவது நேரானதாக ஆக்கப்பட முடியுமா என்றால், அங்கும் பற்பல சேமிப்புகளில் எவற்றை நாம் நேரானவை என்றும், எவற்றைத் திரிப்புகள் என்றும் பார்க்கிறோம் என்பது கேள்வியாக மாறும்.

ஆக, நேரான வரலாறு என்பது கிட்டவே கிட்டாதா என்றால் ஜீனோவின் புதிர்ச் சிக்கல் போன்றது இது எனலாம். தர்க்கப்படி, ஆமையை முயலால் ஒரு போதும் தாண்டவோ, எட்டவோ முடியக் கூடாது. ஆனால் இயற்பியலோ, காட்சியோ அந்தப் புதிரின் தர்க்கத்திலுள்ள பிழையை எளிதே சுட்டும். [ஜீனோவின் புதிர் மட்டும் மேலைப் புதிர் இல்லையா? ஆம், மேலைப் புதிர்தான். அதைச் சொன்னால்தானே நமக்கு எதுவும் புரிகிறது இப்போது?] இந்தியப் புதிர்க் கதை வேண்டுமானால், துரியோதனப் பார்வைக்கு உலகில் அனைவரும் தீயோராகவே தெரிந்ததாக மஹாபாரத உபகதை ஒன்று சொல்கிறதே, அதை நினைவு கொள்ளுங்கள். தருமனின் பார்வையில் அனைவரும் நல்லவர்களாக, சுயோதனனின் பார்வையில் அனைவரும் தீயராகத் தெரியவும், பாரதம் மறைமுகமாக அறிவுறுத்துகிறது, உண்மை எப்போதும் கலந்தே காணும் என்று. அதை நாம் இன்று எதிலாவது ஏற்கிறோமா என்றால், நம் அரசியலியலில் கோட்பாட்டளவில் ஏற்பதில்லை. நடைமுறையளவில் யாரையும் நிரந்தர எதிரியாகக் கொள்வதில்லை, யாரையும் நிரந்தர நண்பராகவும் கொள்வதில்லை.

[இந்தியர்களும்., குறிப்பாகத் தமிழர்களும் முழுதும் நடைமுறைவாதிகள், இவர்களிடம் அறம் என்பதை விதைக்க முயல்வதைப் போல வியர்த்தமான வேலை ஏதும் இல்லை என்று நான் முன் சொன்ன பேராசிரியர் அவ்வப்போது சலித்துக் கொள்வார். அவர் பயன்படுத்தும் சொல் ‘cynics’. அவர் சொல்வதை வைத்துப் பார்த்தால் நடைமுறை சாதுரியத்தை அப்படி வருணிக்கிறார் என்று தெரியும். அவரது உணர்வு ஒரு தற்காலிகச் சலிப்பு என்று நான் எடுத்துக் கொள்வேன். ஏனெனில் அவருக்கும் அறம் என்பது எழும் என்ற நம்பிக்கை 50 ஆண்டுகள் கழித்தும் போய்விடவில்லை.

தர்க்கப்படி முழு நேரான வரலாறு என்பதை நாம் அடைய முடியக்கூடாது. ஆனால் கத்திமுனை போன்ற கருக்கை நாம் எந்த மனிதச் செயலிலுமே எதிர்பார்க்க முடியாது, பார்ப்பதில்லை. ஒரு அளவு கருக்கு நம் காட்சியின் சக்திக்குப் போதுமானதாக இருக்கிறது. கத்திக் கருக்கு என்பதிலுமே ஏதும் முடிவான கருக்கு என்று உண்டா என்ன?

கைத்தொழில் போலல்லாது, தொழிற்சாலைகள் நாடெங்கும் ஏதோ ஒரு Standardization எனப்படும் சீர்மையைக் கொணர்கின்றன. மையப்படுத்தப்படுதல், வசதிக் குவிப்பு ஓரிடத்தில் என்பதெல்லாம் சீர்மையைக் கொணர்வதாகவோ, அல்லது அதை வலியுறுத்துவதாகவோ இருக்கும். வரலாற்றுப் படைப்பிலும் தொழிற்சாலைகளாக ஆனவை உலகப் பல்கலைகள்.

இவை கொண்டு குவிக்கும் ‘சீர்மைப்’படுத்தப்பட்ட வரலாற்றை ஏராளமான நூல்கள் நமக்குக் கொடுக்கின்றன. அவற்றை, வைக்கோல் போராகக் கருதி, நுழைந்து ஊசியைத் தேடுவது சாத்தியம். அந்த ஊசி நமக்குப் பொருந்துவதாக, பயன்படுவதாக மட்டும் இருந்தால் அந்தத் தேடல் பயன் தராத தேடல். அது பொதுப் பயன்பாட்டுக்கு உதவும் ஊசியாக இருக்க வேண்டும். இங்கு வரலாறு என்பதன் இன்னொரு சிக்கல் எழுகிறது.

ஏற்பு கிட்டும் வரலாறு, ஏற்பு மறுக்கப்படும் வரலாறு என்று இவை கிளை பிரிகின்றன. ஏற்பு கிட்டாமல் போவதற்கு அவற்றின் கருக்கு போதாதது என்பதோ, அல்லது அவற்றில் பயன்படும் அளவைகள் போதாதவை என்பதோ என்று நாம் சுலபமாகக் கருதி விட முடியாது.

வரலாற்றின் ஒரு பிரச்சினை அதில் அளவைகள் பொதுவாக ஒப்புக் கொள்ளப்படக் கூடியவையாக வளரவில்லை. துவக்கத்திலேயே கறாரான அளவைகள் என்று ஏதும் உருவாகவில்லை. அதனால் அவை படிப்படியாக வளர்க்கப்பட்டு மேம்படுத்தப்படவும் இல்லை. இதை வரலாற்றாளர்களோ, இதர அறிவுத் துறையாளர்களோ ஒரு குறை என்று பேசி, அதை எப்படித் தீர்க்கலாம் என்று யோசித்து நடவடிக்கைகள் எடுத்ததாகவும் தெரியவில்லை.

ஒப்பீட்டில் உளவியல், பொருளாதாரம், மேலும் சமூகவியல் துறைகள்கூட ஏதோ தகிடுதத்தம் செய்து சில அளவைகளை உருவாக்க முயன்றுள்ளன. அவை அப்படி ஏதும் வெற்றி பெற்ற அளவைகளாக வரவில்லை என்றாலும் குறைந்தது இயல்பான விரிவு (normal distribution) என்ற ஒரு பொது அளவை முறைமையையாவது மேற்படித் துறைகள் பயன்படுத்த முடிகிற நிலையில் உள்ளன. வரலாறு என்ற அறிதுறைக்கு அதுகூட இல்லை. இப்படி, பிழையான கருவிகள், பிழையான அளவைகள், பிழையான முறைமைகள், பிழையான நோக்கங்களால் பீடிக்கப்படும் ஒரு துறையை எப்படி மனிதர் நம்ப முடியும்?

இந்தக் கேள்விக்கு ஒரு விடை, பிழை என்று எந்த அளவையை வைத்து நாம் தீர்மானிக்கிறோம்? இதற்கு விடை இல்லை என்பதே சமீபத்து அலையாக மேற்கில் தோன்றி ஓய்ந்திருக்கும் நவீனக் கடப்பு என்ற அறிமுறை.

விடை இல்லாதபட்சத்தில், எந்த வகை வரலாற்றை நாம் பொறுக்குகிறோம் என்பதை \விட எந்த வகை வரலாற்றை நாம் பொறுத்துக் கொள்கிறோம் என்பதே நடப்பாக ஆகிவிடுகிறது. இப்படி ஏதோ ஒப்புதலை, எப்படியோ அடைந்துவிட்ட ஒரு வரலாற்றுச் சித்திரிப்பு அதன் போக்கில் கால வழுவுள்ளதே என்பதை நாம் முழு விழிப்புணர்வோடு கருத வேண்டும். அதன் வழி கருத்துகளை, மதிப்பீடுகளை, செயல் நோக்கங்களை வளர்த்தெடுத்து அவற்றை நியாயமானவை என்று கருதி என்றென்றுமாகத் தொடர முடியுமா என்ற கேள்வி எழுந்தால் அதற்கு விடை ஏற்கனவே புலப்பட்டிருக்கும்.

முடியாது.

அதனால்தான் கருத்தை விட, சிந்தனையை விட, கருத்தியலும், சிந்தனை முடக்கம் தேடும் வழிமுறைகளும் வரலாற்றின் பயன்பாட்டிலும் சரி, அறிமுறைகளிலும் சரி ஏராளமாகக் கிட்டுகின்றன. இவை எல்லாமே திரும்பத் திரும்ப தனி மனிதரின் பார்வைக் குறைபாட்டை நம்பி, சமூகக் குழுக்களின் நினைவு மறதியை நம்பி நடத்தப்படும் அரசியல்/ பண்பாட்டு அதிகாரச் சூதாட்டங்கள்.

அறிதுறைத் தேடல்கள் அல்ல.

oOo

மனித சமுதாயத்தின் இயல்பு குறித்தும் இன்னமும் அப்படி அளவைகள் உருவாகவில்லை. மகிழ்வான சமுதாயம், கவலைப்படும் சமுதாயம், மிக்க போர்க்குணம் கொண்ட சமுதாயம் என்றெல்லாம் உளவியல் அளவைகளை உருவாக்க உளவியலாளர் முயல்கிறார்கள், அவை இன்னமும் அப்படி பொதுவான ஏற்புடையதாக வளரவில்லை என்று என் புரிதல். இப்படி அளவைகள் உளவியல் பார்வையில் கிட்டாது, அரசியலியலிலும் தக்க அளவைகள் இல்லாது போகையில், பொருளாதாரம் ஒன்றே சில அளவைகளைக் கொடுக்கிறது.

ஆனால் வெறும் பொருளாதார அளவைகளால் வரலாற்று நிகழ்வுகளை எடை போட முடியாது என்பது நமக்கு முதலிலேயே தெரியும்.

தானியங்களும், எண்ணெய் வித்துக்களும் நிறைய விளைந்த ஒரு காலத்தில்தான் தாது வருஷப் பஞ்சம் என்பது நாட்டின் சில பகுதிகளைத் தாக்கியிருந்தது. அதற்கு முன் பின் வருடங்களும் அத்தனை பஞ்ச காலமில்லை. தானியங்களை அரசு கையாண்ட விதம், தேவையின்றி விதித்த வரிகள், கஷ்ட காலத்தில் நிவாரண முயற்சிகள் மேற்கொள்ளாது கொண்ட மெத்தனம் ஆகியன பல லட்சம் மக்களின் சாவுக்கு வழி வகுத்தன.

பொருளாதாரச் சித்தாந்தங்கள் மற்றும் இனப்பெருமையின் காரணமாக, உலகளாவிய சுரண்டலுக்காகக் குரூரத்தின் மொத்த வடிவாக உலகெங்கிலும் இருந்த பிரிட்டிஷ் ஆட்சி தன் காலனிகள் பலவற்றிலும் நிகழ்த்திய தொடர் பேரழிவின் ஒரு பகுதியே இந்தியாவின் தாது வருஷப் பஞ்சம் – Late Victorian Holocaust என்றே இதை ஒரு நூலாசிரியர் அழைக்கிறார். – ஆனால் நம்மால் உள்ளூரில்தான் இந்தப் பேரழிவுக்கான பழியைத் தேட முடிகிறது. காலனியத்துக்கு ஆட்பட்ட புத்தி என்ன சாமானியமாகத் தேறுமா?

அளவையில் ஓரளவு சுலபமாகவும், நேர்த்தியாகவும், கறாராகவும் செய்யப்படக்கூடிய பல அளவுகளே கூட அடித்தளத்திலிருந்தே ஆட்டம் கொண்ட அளவுகள்தாம் என்கையில் காலனியக் கல்வியால் நோய்மையுற்ற நம் வரலாற்றுப் பார்வை என்பது எத்தனை ஆட்டம் கொண்ட தகவல் கட்டமைப்பு, சேமிப்பு என்பது நாம் ஊகிக்கத்தான் முடியும்.

வரலாற்றாளர்கள் இதையெல்லாம் அறிவார்கள். முறையான பயிற்சி கொண்ட வரலாற்றாளர்கள் இவற்றால் மனம் தளர்ந்து விடுவதில்லை. என்னென்ன விதங்களில் தகவல்களில் சாய்வுகளும், பொய்களும், மறைப்புகளும், இடைவெளிகளும் எழலாம் என்பதை கூடிய வரையில் சர்ச்சித்து அவற்றை முற்றிலுமோ, அல்லது கணிசமான அளவிலோகூட நம்மால் அகற்ற முடியாத பட்சத்தில் மாற்று நடவடிக்கைகளில் என்னென்ன சாத்தியம் என்று பேசுவார்கள். இதையும் வரலாற்றை முதல் ஆய்வுத் துறையாகக் கற்கும் மாணவர்களும், ஆய்வாளர்களுமே கற்கிறார்கள். அமெச்சூர் ஆய்வாளர்களுக்கு இவை அனேகமாகத் தெரிந்திராது.

துறையில் இறங்கும்போதே ஒரு முன் \திட்டத்தோடு தம் விருப்பத்துக்கு வரலாறு எழுதப்பட வேண்டும் என்று இறங்கும் ‘ஆய்வாளர்கள்’ நிறைய தகவல்களை மறைக்கவும், ஒதுக்கவும் செய்கிறார்கள். இதில் நம் போன்ற வெளி நபர்களுக்கு நிஜத்தை அறியவென்று இருக்கும் ஒரு சிறு சாதனம், அந்த வகை வரலாற்று விரிப்பை, கூடிய மட்டும் இதர களத் தகவல்கள், மாற்றுச் சித்தரிப்புகள், எதிர் வாதங்கள் ஆகியவற்றின் பின்னணியில் வைத்துப் பார்ப்பதே. இது சாமானிய மக்களுக்குச் சாத்தியமான செயல் இல்லை என்பது தெளிவு. அனுபவ அறிவு இப்படி ஒரு பின்னணியைக் கொடுத்து சாமானியருக்கும் நிஜத்தை அணுக உதவலாம். அதற்கு அவர்கள் விமர்சன அணுகலை நாடுபவர்களாக இருப்பது ஒரு முன் தேவை.

எப்படியும் நாம் ஒவ்வொருவருமே, வரலாற்றையும், அதன் மாந்தர்களையும் பின்னணி பற்றிய கூடுதலான அறிதலோடும், மிக்க அனுதாபத்தோடும் அணுக வேண்டும், அதே சமயம் எத்தனை கருத்து நேர்மை நமக்கு எட்டுகிறதோ அதை மீறிய கருத்து நேர்மைக்கு முயன்று சாதிக்க வேண்டும் என்பன சுலபத்தில் தெரியும் விடைகள்.

இதைத்தான் ஆய்வுப் பயிற்சி பெற்றும், மாற்றுத் துறைகளின் தாக்கத்தால் நிலை குலைந்தவராகத் தெரியும் கட்டுரையாளர் எஜர் வெர்பா எதிர் கொள்கிறார். அவருக்கு ஏராளமாக வரலாற்றியலில் முன்னோடிகள் உண்டு. அவர்களை முறையாகக் கற்றுத் தேர்ந்திருந்தால் இப்படி அனைத்தும் புனைகதை முறையில் சொல்லப்படுதல் சாத்தியம் என்றோ, அல்லது அதில் விடுபடலுக்கு வழி உண்டு என்றோ கருதத் துவங்கி இருக்க மாட்டார். ஃபூகோவியம் என்பது மேற்கில் சில காலம் உலவிய ஒரு மாயை. இந்திரஜித்தனின் ஜாலம் போல மேலைச் சிந்தனையாளர்களை ஆயுதங்களைக் கீழே போடச் செய்து செயலற்று நிறுத்திப் போன ஒரு கட்டுக் கதை அது. முந்தைய ஜால வித்தையில் ஃப்ரா(ய்)டு என்ற ஒரு ‘சிந்தனை’யாளர்’ – நிஜத்தில் இவர் ஒரு புராண உபன்யாசகர் மட்டுமே, ஆனால் அறிவியலாளராகப் பீடமேற்றப்பட்டு உலகெங்கும் நிறைய அழிப்புகள் நிகழக் காரணமானவர்- இதே மேலை ஆய்வாளருக்கு எங்கும் எதிலும் வீசிக் காயப்படுத்தக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய சில கருத்து ஆயுதங்களைக் கொடுத்திருந்தார். அந்த ஆயுதங்கள் ஃபூகோவின் தாக்கத்தால் திடீரென்று செயலிழந்து நிற்கும் நிலை இன்று.

நான் முன் சொன்ன பேராசிரியர், இது குறித்து நாங்கள் உரையாடியபோது, நேரடியாகவே சொன்னார், திரிப்பு வரலாற்றையே இயல்பாக, புழக்கத்திலெங்கும் உள்ள வரலாறாக ஆக்குவதென்று அலைபவர்கள், தம் இஷ்டத்துக்குப் பட்டம் விடத்தான் செய்வார்கள். வரலாற்றியல் என்பது வான வெளி போல. அளவில்லா இடம் கொண்டது, என்றார். [எனக்கு ஈவெராவியம் என்ற பட்டம் விடும் செயல் இன்று தமிழக வரலாற்றியலில் ஆக்கிரமித்திருப்பது நினைவுக்கு வந்தது.]

அப்போது எதை நாம் நம்புவது? என்ற என் கேள்விக்குப் புன்னகை செய்தார். அது என்ன வகைப் புன்னகை என்று என்னால் அறிய முடியவில்லை. ஆவணங்களிலிருந்து நேராகத் தகவலை எடுத்து ஒரு நோட்டுப் புத்தகத்தில் பிரதி செய்வதே ஒரு வகையில் தகவலை மாற்றுவதுதானே என்றார். பிரதானப்படுத்துவது என்பதைச் சொல்கிறார் என ஊகித்தேன். நோட்டுப் புத்தகத்தில் எல்லாவற்றையுமா பிரதி எடுக்க முடியும்?

போர்ஹே எழுதிய சிறுகதை நினைவு வந்தால் நீங்கள் சூட்சுமத்தை உணர்ந்தீர்கள் என்று அர்த்தம். நிலப்பரப்பளவு வரைபடம் விரிந்தால் என்னவொரு பேராபத்து விளையும் என்று சிரிக்காமல் சொல்லும் போர்ஹே, அந்த வரைபடம் கால ஓட்டத்தில் எப்படிக் கிழிந்து நார் நாராக, துண்டு துண்டாகச் சிதைந்து ஆனால் இன்னும் எங்கோ குற்றுயிரும் குலையுயிருமாக ஜீவிக்க முயல்கிறது என்று கொஞ்சம் சிரிப்போடு எழுதியிருக்கிறார்.

oOo

ஃபூகோவின் உள்ளுணர்வு சார்ந்த கருத்தில், வரலாற்றுத் தகவல் மிகக் குறைவு. அவர் எழுதிப் புகழடைந்த மனநோயாளிகள் அடங்கிய கப்பல் என்ற ஒரு கதை, கதை மட்டுமே. அப்படி ஒரு கப்பல் இருந்ததே இல்லை என்று இன்று வரலாற்றாளர்கள் ’நிறுவி’ இருக்கிறார்கள். ஆனால் கப்பலை ஒத்த அமைப்புகள் இருக்கின்றன, இருந்தன. அவற்றின் அமைப்பு முறைமை, நிர்வாக முறைமை என்பனவற்றை அறியவும், ஆய்ந்து முடிவு கட்டவும் ஏராளமான வருடங்கள் தேவைப்படும் என்பதோடு பல பரிமாணத் தகவல்கள் எளிதில் கிட்டா. அரசுகளுக்கு அவற்றை மூடி மறைக்க எத்தனையோ அவசியம் இருந்திருக்கும். அப்படி ஏராளமான தகவல்களைச் சேகரித்து, அவற்றை முறைமைக்குட்படுத்தி, சமூகவியல் சார்ந்த வரலாற்றை எழுத முனையாத ஃபூகோ, முந்தைய தலைமுறை ஆய்வாளர்கள் சிலரின் உத்திகளைப் பயன்படுத்தி ஒரு புதுப் புராணக் கதை மூலம் மாற்று வரலாறு ஒன்றைப் படைக்கிறார். அது தவறென்று யார் சொல்லக் கூடும் என்பது அவர் வாதம். [அவர் கருதியது போலவே, சில பத்தாண்டுகள் அது நிஜ வரலாறே போன்ற தாக்கத்தைக் கொணர்ந்து வரலாற்றியல், சமூக ஆய்வுகள் ஆகியவற்றில் பெரும் தட மாற்றத்துக்கு வழி வகுத்தது. ]

அதனால் ஃபூகோ இந்த வழியில் கதை சொல்லி மேலை அரசுகளின் சுய பிம்பத்தை உடைத்து, அவற்றின், அம்மக்களின் ‘தாமே உலக அறத்துக்கு வழிகாட்டிகள்’ என்ற இறுமாப்பை, பிரமையை அழிக்க வழி செய்து, புதுப் பாதை ஏதும் தெரியாத நிலையின் அவதியையும், மனக்கிலேசத்தையும் அந்நாட்டு அறிஞர்கள் நடுவே விதைத்துக் ‘கலகம்’ செய்தார். அந்தக் கலகத்தின் விளைவுகளால் மேலைக் கருவம் அழியத்தான் அழிந்திருக்கிறது.

[இதில் ஒருங்குபட்ட கட்டமைப்பால் இயங்குவதில் பெருமைப்பட்ட மேற்கின் கருத்துலகு அதே வழியில் குலைக்கப்பட்டது. எட்வர்ட் சயீத், ஹோமி பாபா, ஃப்ரெஞ்சு கட்டுடைப்பினர், அவர்களின் அமெரிக்க சிஷ்ய கோடிகள், பெண்ணியர்கள், இன உரிமைக் குழுவினர், வந்தேறிகளின் உரிமைப் பாதுகாவலர் என்ற பல குழுக்களும், அவர்களின் கருத்தை ஏற்காவிடினும், செயல்முறைகளை, போராட்ட முறைமைகளை ஏற்றுச் செயல்படும் விசித்திரமாக கிருஸ்தவ வலது சாரித் தீவிரவாதிகளுமாகவே இந்த சுயப் பெருமிதத்தை அழித்தனர்.

ஒருங்குபடாத அமைப்புகளை வைத்துக் கொண்டு எப்படி இயங்குவது என்பதை இன்னும் புரிந்து கொள்ள மறுக்கும் அதிகார மையங்கள் ஒரு புறமும், ஒருங்குபடுதல் வளர்ச்சிக்கு ஊறு என்று கருதும் அடுத்தடுத்த தலைமுறையினரின் வெளி வட்ட சிறு குழு நடவடிக்கைகளால் தொடர்ந்த முன்னேற்றத்துக்குக் கிட்டும் வழிகள் மறு புறமுமாக மேற்கு இப்போது தத்தளிப்போடு இருக்கிறது. ஆனால் இன்னமும் முன்னேற்றப் பாதையாகவே தன் முன் இருப்பதாக உணர்கிறது.

அதன் ஒரு அடித்தளம் கரைந்து அரித்துப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தே, வலதுசாரி உழைப்பாளி ஆண் குழுவினரும், அதிகார மையத்தில் உள்ள வெள்ளை ஆண்களும் கருக்கலைப்பு, கருத்தடை ஆகியனவை பெண்களுக்கான உரிமைகள் என்ற நிலையை மறுதலித்து, அவற்றை ஆண்களின் கட்டுப்பாட்டில் கொணர முயல்கின்றனர். இது ஏற்கனவே இன்னொரு செமிதிய மதம் சாதித்த ஒன்று என்பதை அந்த வலது சாரியினர் உணர்ந்தே இருக்கின்றனர் என்பது வரலாற்று விசித்திரங்களில் ஒன்று- ஏன் விசித்திரமெனில் அந்த மறு செமிதிய மதக் கட்டுப்பாட்டை இழிவு என்று தினம் பிரச்சாரம் செய்வது இந்தக் குழுக்களின் மையச் செயல்பாட்டில் ஒரு கூறு.]

இன்று மேலை நாடுகளின் அற நிலைப்பாடுகளை அனேகமாக எந்த மூன்றாம் உலக நாடுகளும் அப்படி எல்லாம் முக்கியமாகக் கருதுவதில்லை. இப்படி மேலை நாட்டு அற நிலைப்பாடுகளை ஒதுக்குவதை அவை முன்பு சோவியத்/ மார்க்சியச் சாய்வு அல்லது ஏகாதிபத்தியத்தை இழிவோடு நோக்குதல் என்ற கருத்தியல் வழியே கடைப்பிடித்தன. அந்த ஒதுக்கலை மேற்கு தனக்கு வசதியான முறையில் பொய்க் கருத்தியலின் பாதிப்பு, அடக்கு முறை ஆட்சிகளுக்குக் கைக்கூலி இவை என்றெல்லாம் முத்திரையிட்டு உலகக் கருத்தரங்கில் ஓரம் கட்ட முடிந்திருந்தது. இன்று அவை நடைமுறைச் சாதுரியத்தைப் பயன்படுத்தி மேலைத் தீர்ப்புகளை அலட்சியம் செய்யத் தலைப்பட்டிருக்கின்றன. இது ஓரளவு முன்னேற்றம் என்றுதான் கருத வேண்டி இருக்கிறது. ஏனெனில் மேலைத் தீர்ப்புகளின் மையத்தில் அப்படி ஏதும் அறவுணர்வு கோலோச்சவில்லை. அந்த நிலப்பரப்பின் அரசுகளுடைய ஏகாதிபத்திய நோக்குதான் அத் தீர்ப்புகளின் மையத்தில் இயங்கு சக்தி.

மூன்றாம் உலக நாடுகளின் சுயாபிமானத்துக்கான உந்துதல் என்பது சென்ற நூற்றாண்டில் மேலைக் காலனிய சக்திகளுக்கு ஒரு இடையூறாக இருந்தது. எனவே, பிரிவினை வாதம், மொழி தேசியம், மேலும் இதர சமூகக் குழு விரோதங்களை எப்படி வளர்த்து அந்த நாடுகளின் தேசியத்தைச் சிதைப்பது என்று இயங்கி இருக்கின்றன மேலை நாடுகள்.

இன்று அடையாள அரசியல் என்பது பீடமேறிய நிலையில், மேற்படி முயற்சிகளில் நேரடி அமெரிக்க ஏகாதிபத்திய முயற்சிகள் தோற்றிருக்கின்றன. இந்தியாவில் மட்டுமே வரலாற்றுக் கசடுகளான பற்பல குழுக்கள், இன்னும் வரலாற்றின் பெயரில் மொழி தேசியம், அடையாள அரசியல் வழியே பிரிவினை வாதம், காலாவதி ஆன செம்புரட்சி வாதம் என்று பல 20 ஆம் நூற்றாண்டின் எச்ச சொச்சங்களால் பீடிக்கப்பட்டு முன்னாள் காலனிய அடிமைகளான இந்தியருக்குச் சுய அபிமானம் வளராமல் பார்த்துக் கொள்ளும் முயற்சியைத் தீவிரமாகவே செயல்படுத்துகின்றனர்.

இந்த விதத்தில் இவர்கள் மேலை ஏகாதிபத்தியத்தின் கைக் கூலிகளே. இவர்களின் கைக்கு கிடைத்த வரலாறு பாடம் செய்யப்பட்டச் சிலந்தியாகவோ ஒரு தேய்வழக்காகவோ இருக்க முடியாது. வரலாற்றைப் புனைவுகளின் வழி அணுகலாம் என்பது பாடம் செய்யப்பட்டச் சிலந்தி என்ற நம்பிக்கையில் அதன் விஷக்கொடுக்கில் கை வைக்கும் செயலாக இருக்கும்.

இது குறித்து எழுத இன்னும் இருக்கிறது. பிற்பாடுதான் அதைச் செய்ய வேண்டும்.

புள்ளி விவரங்களைச் சேகரிப்பதில் உள்ள குறைபாடுகள் பற்றி ஒரு கட்டுரை இங்கே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.