தமிழ் மொழி பெயர்ப்பு: மீனாக்ஷி பாலகணேஷ்
அன்றைய இரவு ஜீலினால் உறங்கவே முடியவில்லை. இரவுகள் குறுகியதாக உள்ள காலமாதலால் பகல் வெளிச்சம் சுவரிலிருந்த ஒரு குறுகிய பிளவின் வழியாகத் தென்பட்டது. அவன் எழுந்து, அந்தப் பிளவை இன்னும் பெரிதாக்குமாறு அதைச் சுரண்டி வெளியே நோட்டமிட்டான்.
அந்தத் துளையின் வழியே அடிவாரத்துக்குச் செல்லும் ஒரு பாதையை அவன் கண்டான்; வலது பக்கம் ஒரு தார்த்தாரியக் குடிசை அதனருகே இருந்தது; அதன் வாயிலில் ஒரு கறுப்பு நாய் படுத்திருந்தது, ஒரு வெள்ளாடும் குட்டிகளும் வால்களை ஆட்டிய வண்ணம் ஓடியாடிக் கொண்டிருந்தன. பளிச்சென்ற நிறத்தில் நீளமான ‘தொள தொள’வென்ற சட்டையையும் அதனடியிலிருந்து தென்பட்ட டிரௌசரும் உயரமான பூட்ஸுகளையும் அணிந்திருந்த ஒரு இளைய தார்த்தாரியப் பெண்ணையும் அவன் கண்டான். அவள் தலைமீது ஒரு கோட்டைக் கவிழ்த்துக் கொண்டு அதன் மீது ஒரு நீர் நிரம்பிய பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சென்றாள். ஒரு சட்டையைத் தவிர வேறொன்றும் அணியாத ஒரு மொட்டைத் தலை தார்த்தாரியச் சிறுவனை அவள் கையில் பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தாள்; அவ்வாறு அவள் நடந்து சென்ற போது, அவளது பின்புறத்து தசைப்பகுதிகள் அசைந்தன. அப்பெண் நீரை அக்குடிசைக்குள் எடுத்துச் சென்றாள்; சிறிது நேரத்தில் நேற்றுக் கண்ட சிவந்த தாடித் தார்த்தாரியன் ஒரு பட்டு உடையை அணிந்து வெளியே வந்தான்; அவனது இடையிலிருந்து ஒரு வெள்ளிப்பிடி கொண்ட குறுவாள் தொங்கியது; வெறும் கால்களில் ஷூக்களை அணிந்து கொண்டு தலையின் பின்புறமாக கறுப்பு ஆட்டின் தோலாலான ஒரு உயரமான தொப்பியையும் அணிந்திருந்தான். அவன் வெளியே வந்து உடலை நீட்டி முறித்து, தனது சிவந்த தாடியைத் தடவிக் கொண்டான். சிறிது நேரம் அங்கு நின்று விட்டு தன் வேலையாளுக்கு ஒரு கட்டளையிட்டுவிட்டுச் சென்றான்.
பின்பு இரு பையன்கள் நீர் அருந்தச் செய்த தங்கள் குதிரைகளின் மீது சவாரி செய்து சென்றார்கள். அந்தக் குதிரைகளின் நாசிகள் ஈரமாக இருந்தன. டிரவுசர்கள் இல்லாமலும் சட்டைகளைத் தவிர வேறொன்றும் அணியாத இன்னும் சில மொட்டைத் தலை சிறுவர்கள் ஓடினர். அவர்கள் கும்பலாக அந்தக் கட்டிடத்திற்கு வந்து ஒரு சிறு குச்சியை எடுத்து அந்தச் சிறிய துவாரத்தின் உள்ளே நுழைக்கலாயினர். ஜீலின் ஒரு அதட்டல் போட்டான்; உடனே அந்தச் சிறுவர்கள் கிறீச்சிட்டுக் கொண்டு தங்கள் வெறுமையான முட்டங்கால்கள் பள பளக்க ஓட்டமாக ஓடினார்கள்.
ஜீலினுக்கு மிகவும் தாகமாக இருந்தது. அவனது தொண்டை உலர்ந்து போயிருந்தது; அவன் இவ்வாறு எண்ணலானான்: ‘அவர்கள் மட்டும் இங்கு வந்து என்னைப் பார்த்தார்களானால் நன்றாக இருக்குமே!’
யாரோ அந்தக் கட்டிடத்தின் பூட்டைத் திறக்கும் ஓசையைக் கேட்டான். சிவந்த தாடித் தார்த்தாரியன் பளபளக்கும் கருவிழிகளும், சிவந்த கன்னங்களும், குட்டையான தாடியும் கொண்ட இன்னொரு கரிய சிறிய மனிதனுடன் உள்ளே நுழைந்தான். அந்த இன்னொரு மனிதன் எப்போதும் சிரித்த முகத்தினனாக விளங்கினான். இவன் மற்றவனை விடப் பகட்டான உடைகளை அணிந்திருந்தான். அவன் நீல நிறத்துப் பட்டில் சரிகை வேலைப்பாடு செய்த ஒரு அங்கி, இடுப்புக் கச்சையில் செருகிய ஒரு பெரிய வெள்ளிக் குத்துவாள், வெள்ளியில் வேலைப்பாடு செய்த மொராக்கோ செருப்புகள், அவற்றின் மீது அணிந்த கெட்டியான காலணிகள், வெள்ளை நிறத்தில் ஒரு ஆட்டுத்தோல் தொப்பி இவற்றை அணிந்திருந்தான்.
சிவந்த தாடித் தார்த்தாரியன் உள்ளே நுழைந்து, கோபத்தில் இருப்பதைப் போல் எதையோ முணுமுணுத்துக் கொண்டு தன் குறுவாளுடன் விளையாடிய வண்ணம் ஜீலினை சந்தேகப் பார்வை பார்த்தபடி ஓநாய் போலக் கதவுக் கட்டையின் மீது சாய்ந்து நின்றான். அந்தக் கரியவன் ஸ்ப்ரிங்க் மீது நடப்பதைப் போல் விரைந்து நடந்து வந்து ஜீலின் முன்பு சம்மணமிட்டு அமர்ந்து, அவன் தோளின் மீது ஓங்கித் தட்டி விட்டு தன்னுடைய பாஷையில் வெகுவேகமாகப் பேச ஆரம்பித்தான். அவன் பற்களைக் காட்டி இளித்த வண்ணம் கண்களைச் சிமிட்டியபடியும், நாவால் ஒலியெழுப்பிய படியும் திரும்பத் திரும்ப, “நல்ல ருஸ், நல்ல ருஸ்,” என்றபடி இருந்தான்.
ஜீலினுக்கு ஒரு வார்த்தையும் புரியவில்லை. ஆனால் அவன், “எனக்குக் குடிக்க நீர் கொடுங்கள்,” என்றான்.
கரிய மனிதன் சிரிக்க மட்டும் செய்தான். “நல்ல ருஸ்,” என்று தனது பாஷையில் பேசிக் கொண்டே இருந்தான்.
ஜீலின் தனது கைகளாலும் உதடுகளாலும் தனக்குக் குடிக்க நீர் வேண்டும் என்று சைகை செய்தான்.
கரிய மனிதனுக்கு இப்போது புரிந்தது. அவன் சிரித்த வண்ணம், கதவின் வெளிப்புறம் நோக்கி யாரையோ கூப்பிட்டான், “டீனா.”
ஒரு சிறிய பெண் ஓடோடி வந்தாள்: அவளுக்குப் பதின்மூன்று வயதிருக்கலாம்; மெலிந்து ஒல்லியாக, கரிய தார்த்தாரியனை ஜாடையில் ஒத்து இருந்தாள். அவள் அவனுடைய மகள் என்பது புலனாகியது. அவளுக்கும் கரிய விழிகளுடன் முகம் பார்க்க நன்றாக இருந்தது. அகலமான கைகளையுடைய நீளமான ஒரு நீல நிறச் சட்டையை இடுப்பில் கட்டும் கச்சையில்லாமல் அணிந்திருந்தாள். அவளுடைய ஆடையின் ஓரங்களிலும் முன்புறத்திலும் சிகப்பு நிறத் துணியால் தைக்கப் பட்டிருந்தது. அவள் காற்குழாயும் செருப்புகளும் அணிந்து அதன் மீது உயரமான குதிகால்களைக் கொண்ட காலணிகளையும் அணிந்திருந்தாள். அவள் கழுத்தில், வெள்ளி ருஷ்யக் காசுகளாலான ஒரு மாலை இருந்தது. அவள் தலையைத் துணியால் மூடவில்லை; அவளது கருநிறத் தலைமுடி ரிப்பனால் பின்னப்பட்டு ஜரிகைப் பின்னலாலும் வெள்ளிக் காசுகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
அவள் தந்தை ஏதோ கட்டளையிட்டதும் அவள் ஓடோடிப் போய் உலோகத்தாலான ஒரு நீர்ப் பாத்திரத்துடன் ஓடி வந்தாள். அதை ஜீலினிடம் கொடுத்தவள், தன் தலையைக் குனிந்து முழங்காலளவு புதைத்துக் கொண்டு அவன் முன்பு அமர்ந்து கொண்டாள்; ஜீலின் நீர் பருகுவதை, தன் கண்களை அகல விரித்து அவன் ஒரு காட்டு மிருகம் என்பது போலப் பார்த்தாள்.
ஜீலின் காலியான நீர்ப் பாத்திரத்தை அவளிடம் திரும்பக் கொடுத்ததும், அவள் ஒரு ஆட்டைப் போல் பின்புறம் துள்ளிக் குதித்தது அவள் தந்தையைச் சிரிப்படையச் செய்தது. அவன் அவளை வேறு ஏதோ வேலைக்காக அனுப்பினான். அவள் அந்த நீர்ப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினாள்; ஒரு வட்டமான மரப் பலகையின் மீது சிறிது ரொட்டியைக் கொண்டு வந்தாள். பிறகு அவள் முன்பு போலக் கவிழ்ந்து அமர்ந்தபடி அவனை வெறித்த கண்களால் பார்க்கலானாள்.
பின் அந்தத் தார்த்தாரியர்கள் கதவைப் பூட்டிக் கொண்டு சென்றனர்.
சிறிது நேரத்தின் பின் நோகை வந்து,” அய்டா, எஜமான், அய்டா,” என்றான்.
அவனுக்கும் ரஷ்ய மொழி தெரியவில்லை. தன்னை வேறு எங்கேயோ போகச் சொல்கிறான் என்று மட்டும் ஜீலின் புரிந்து கொண்டான்.
ஜீலின் அந்த நோகையைப் பின் தொடர்ந்து சென்றான்; தளைகள் கால்களை இழுத்தமையால் நடக்க முடியாமல் நொண்டியவாறு சென்றான். அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்ததும் அவன் கிட்டத் தட்ட பத்து வீடுகளையும் சிறிய கோபுரத்தைக் கொண்ட ஒரு தார்த்தாரிய தேவாலயத்தையும் உடைய ஒரு தார்த்தாரிய கிராமத்தைக் கண்டான். சேணம் பூட்டப் பெற்ற மூன்று குதிரைகள் ஒரு வீட்டின் முன்பு நின்றன; சிறு பையன்கள் அவற்றின் கடிவாளங்களைப் பிடித்தபடி நின்றனர். கரிய நிறத்தானாகிய தார்த்தாரியன் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்து, தன்னைத் தொடருமாறு ஜீலினுக்கு சைகை செய்தான்.பின் தனது மொழியில் ஏதோ கூறி நகைத்தவாறு, திரும்பவும் அந்த வீட்டுக்குள் சென்றான்.
ஜீலின் உள்ளே நுழைந்தான். அந்த அறை நன்றாக இருந்தது: சுவர்கள் களிமண்ணால் நன்கு மெழுகப் பட்டிருந்தன. முன்பக்க சுவரின் அருகே பறவைச் சிறகுகளினாலான படுக்கைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன; பக்கத்துச் சுவர்களில் தரை விரிப்புகள் தொங்க விடப் பட்டிருந்தன. அவற்றின் மீது வெள்ளியால் வேலைப்படுகள் செய்யப்பட்ட துப்பாக்கிகள், சிறு கைத் துப்பாக்கிகள், வாட்கள் ஆகியவை பதிக்கப் பட்டிருந்தன. ஒரு சுவரினருகே மண்தரையில் பதிக்கப் பட்ட ஒரு அடுப்பு இருந்தது. தானியப் போரடிக்கும் களம் போலத் தரையே சுத்தமாக இருந்தது. ஒரு மூலையில் இருந்த பெரிய இடத்தில் தடிமனான கம்பளி விரிக்கப்பட்டு அதன் மீது ஜமக்காளங்களும், அவற்றின் மீது மிருதுவான இறகுகளால் நிரப்பப் பட்ட மெத்தைகளும் இருந்தன. அந்த மெத்தைகளின் மீது ஐந்து தார்த்தாரியர்கள் அமர்ந்திருந்தனர்; கரிய நிறத்தவன், சிவப்புத் தலையன், மேலும் மூன்று விருந்தினர்கள். அவர்கள் வீட்டினுள் அணியும் காலணிகளை அணிந்து, பின்னால் உள்ள திண்டுகளில் சாய்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் முன்பு ஒரு வட்டவடிவமான பலகையில் தானியக் கேக்குகளும், ஒரு கிண்ணத்தில் வெண்ணையும் ஒரு ஜாடியில் பூஸா எனப்படும் தார்த்தாரிய பியரும் இருந்தன. அவர்கள் அந்தக் கேக்குகளையும் வெண்ணையையும் கைகளால் எடுத்துத் தின்றனர்.
கருப்பு மனிதன் குதித்தெழுந்து, ஜீலினை ஜமக்காளத்தில் அல்லாமல் தரையில் ஒரு பக்கமாக அமர வைக்குமாறு கட்டளையிட்டான்; பின் அவன் ஜமக்காளத்தில் அமர்ந்து கொண்டு தனது விருந்தினர்களுக்கு தானியக் கேக்குகளையும், பூஸாவையும் வழங்கினான். ஜீலினை அமர வைத்த பின் அந்த வேலைக்காரன் தனது காலணிகளைக் கழற்றி கதவருகே மற்றவர்களின் காலணிகள் இருந்த இடத்தில் வைத்தான்; கம்பள விரிப்பில் தன் எஜமானர்களின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவர்கள் உண்பதைப் பார்த்த வண்ணம் தன் உதடுகளைச் சப்புக் கொட்டிக் கொண்டான்.
தார்த்தாரியர்கள் தமக்கு வேண்டிய மட்டும் உண்டனர்; அந்தச் சிறிய பெண்ணைப் போலவே நீண்ட அங்கியும் கால் சராயும் அணிந்து தலையில் ஒரு கைக்குட்டையைக் கட்டியிருந்த ஒரு பெண்மணி வந்து எஞ்சிய உணவுப் பொருள்களை எடுத்துக் கொண்டு போனாள்; ஒரு வாயகன்ற பாத்திரத்தையும். நீண்ட வளைந்த கழுத்து கொண்ட ஜாடியையும் கொண்டு வந்தாள். தார்த்தாரியர்கள் தங்கள் கைகளைக் கழுவிக் கொண்டு, முழங்காலிட்டுக் கைகளை மடித்துக் கொண்டு நான்கு பக்கங்களையும் நோக்கி வாயால் ஊதிவிட்டுத் தங்கள் பிரார்த்தனைகளைச் செலுத்தினர். அவர்கள் தங்களுக்குள் சிறிது நேரம் உரையாடிய பின்பு அவர்களுள் ஒருவன் ஜீலினை நோக்கித் திரும்பி ருஷ்ய மொழியில் அவனுடன் உரையாட ஆரம்பித்தான்.
“காஸி-முகம்மது உன்னைச் சிறைப் பிடித்தான்,” சிவப்பு தாடித் தார்த்தாரியனை நோக்கிக் கை காட்டிய வண்ணம் அவன் சொல்லலானான், “இப்போது காஸி-முகம்மது உன்னை அப்துல் முரத்துக்குக் கொடுத்துள்ளான்,” கரிய நிறத்தவனை நோக்கிக் கை காட்டினான், “ஆகவே அப்துல் முரத் இப்போது உன்னுடைய எஜமானன்.”
ஜீலின் பேசாமலிருந்தான். இப்போது அப்துல் முரத் சிரித்த வண்ணம் பேச ஆரம்பித்தான், “ருஷ்ய சிப்பாய், நல்ல ருஷ்யன்,” என்று ஜீலினைக் காட்டித் திரும்பத் திரும்பக் கூறினான்.
மொழிபெயர்ப்பவன் ஜீலினை நோக்கி, “உன் வீட்டிற்குக் கடிதம் எழுதி உன்னை மீட்க ஒரு தொகை அனுப்புமாறு அவன் கட்டளை இடுகிறான். பணம் வந்தவுடன் உன்னை விடுதலை செய்வான்,” என்றான்.
ஜீலின் ஒரு நிமிடம் யோசித்த பின்பு, “எத்தனை மீட்புத் தொகை அவன் கேட்கிறான்?” என்றான்.
தார்த்தாரியர்கள் சிறிது நேரம் தங்களுக்குள் பேசிக் கொண்ட பின்பு, மொழி பெயர்ப்பவன் ஜீலினிடம், “மூவாயிரம் ரூபிள்கள் (ருஷ்யப் பணம்),” என்றான்.
“முடியாது,” என்றான் ஜீலின், “என்னால் அவ்வளவு பெரிய தொகை கொடுக்க இயலாது.”
துள்ளிக் குதித்து எழுந்த அப்துல், கைகளை ஆட்டிக் கொண்டு முன்பு செய்ததைப் போல அவன் புரிந்து கொள்வான் என எண்ணிக் கொண்டு ஜீலினிடம் பேசலானான்.
மொழிபெயர்ப்பவன் மொழி பெயர்த்தான்: “எவ்வளவு கொடுப்பாய்?”
ஜீலின் சிறிது யோசித்த பின், “ஐநூறு ரூபிள்கள்,” என்றான்.
இதனைக் கேட்ட அந்தத் தார்த்தாரியர்கள் எல்லாரும் ஒரே சமயத்தில் தங்களுக்குள் பேசிக் கொள்ளலாயினர். சிவப்பு தாடிக்காரனை நோக்கி அப்துல் கத்த ஆரம்பித்து வேகமாகப் பிதற்றியதில் அவனது வாயிலிருந்து எச்சில் பீச்சித் தெறித்தது. சிவப்பு தாடிக்காரன் கண்களை உருட்டிய வண்ணம் நாவால் ஒலியெழுப்பினான்.
சிறிது நேரத்திற்குப்பின் அவர்கள் அமைதியாயினர். மொழிபெயர்ப்பாளன், ” எஜமானனுக்கு ஐநூறு ரூபிள்கள் போதாது. அவனே உனக்காக இருநூறு ரூபிள்கள் விலை கொடுத்திருக்கிறான். காஸி-முகம்மது அவனிடம் கடன் பட்டிருந்ததால் அதற்கு ஈடாக உன்னை எடுத்துக் கொண்டான். மூவாயிரம் ரூபிள்கள்! அதற்குக் குறைய முடியாது. நீ கடிதம் எழுத மறுத்தால், உன்னை ஒரு குழியில் போட்டு நன்றாக ஒரு சாட்டையால் அடிப்பார்கள்,” என்றான்.
“ஆஹா! எத்தனைக்கெத்தனை ஒருவன் பயப்படுகிறானோ, அத்தனைக்கத்தனை நிலைமை மோசமாகிறது,” என ஜீலின் எண்ணிக் கொண்டான்.
அவன் துள்ளியெழுந்து கூறினான், “அவன் என்னைப் பயமுறுத்தினால், நான் கடிதமே எழுத மாட்டேன் என்று நீ அந்த நாயிடம் சொல். அவனுக்கு ஒன்றுமே கிடைக்காது. எனக்கு நாய்களாகிய உங்களிடம் பயமில்லை, இனியும் பயப்பட மாட்டேன்.”
மொழிபெயர்ப்பாளன் இதை மொழி பெயர்த்ததும் அவர்கள் திரும்பவும் எல்லாருமாக ஒரே நேரத்தில் பேச ஆரம்பித்தனர்.
ரொம்ப நேரம் பேசிய பின்பு கரிய நிற மனிதன் துள்ளியெழுந்து ஜீலினிடம் வந்து கூறினான், “திகிட் ருஸ்! திகிட் ருஸ்!.” (அவர்கள் மொழியில் திகிட் என்றால், தைரியமானவன் என்று அர்த்தம்). பின்பு சிரித்தபடி, மொழிபெயர்ப்பாளனிடம் ஏதோ கூறினான். அவன் அதை ஜீலினுக்கு மொழி பெயர்த்தான், “ஆயிரம் ரூபிள்கள் அவனுக்கு திருப்திகரமாக இருக்கும்.”
ஜீலின் விடாப்பிடியாக, “நான் ஐநூறுக்கு மேல் கொடுக்கவே முடியாது. நீங்கள் என்னை கொன்று விட்டால் பின் அதுவும் உங்களுக்குக் கிடைக்காது,” என்றான்.
தார்த்தாரியர்கள் திரும்பவும் தமக்குள் கூடிப் பேசினார்கள்; பிறகு எதையோ கொண்டு வர வேண்டி வேலைக்காரனை அனுப்பி விட்டுக் கதவையும் ஜீலினையும் மாறி மாறிப் பார்த்த வண்ணம் இருந்தனர். ஒரு பருமனான, கிழிசல் உடையணிந்த, வெறுங்கால்களுடன், காலில் தளை அணிவிக்கப்பட்ட மனிதன் பின் தொடர அந்த வேலைக்காரன் திரும்பி வந்தான்.
ஜீலின் அவனைக் கண்டு வியப்பால் வாய் பிளந்தான்: ஏனெனில் அது கஸ்டீலின்! அவனும் சிறை பிடிக்கப் பட்டிருந்தான். இருவரையும் பக்கத்தில் இருத்தினர்; உடனே அவர்கள் தமக்கு நேர்ந்தவைகளை ஒருவருக்கொருவர் கூறிக் கொள்ளத் துவங்கினர். அவர்கள் பேசிக் கொள்வதைத் தார்த்தாரியர்கள் சப்தமிடாமல் கவனித்தனர். ஜீலின் தனக்கு என்ன நேர்ந்தது என விவரித்தான்; கஸ்டீலினும் தன் குதிரை நின்று விட்டதையும், தன் துப்பாக்கி குறி தவறியதையும், இதே அப்துல் அவனை முந்தி வந்து பிடித்ததையும் கூறினான்.
அப்துல் துள்ளியெழுந்து, கஸ்டீலினைச் சுட்டி ஏதோ கூறினான். மொழிபெயர்ப்பாளன் அவர்கள் இருவரும் இப்போது ஒரே எஜமானனுக்கு சொந்தம் என்றும், முதலில் மீட்புத் தொகையைக் கொடுப்பவன் முதலில் விடுதலை செய்யப்படுவான் என்றும் கூறினான்.
“இதோ பார்,” என்று அவன் ஜீலினிடம், ” நீ கோபப் படுகிறாய், ஆனால் உன் நண்பன் அமைதியாக இருக்கிறான்; அவன் ஐயாயிரம் ரூபிள்கள் அனுப்பும்படி தன் வீட்டிற்குக் கடிதம் எழுதியிருக்கிறான். அதனால் அவனுக்கு நல்ல உணவு கொடுக்கப்பட்டு, நன்றாக நடத்தவும் படுவான்,” என்றான்.
“என் நண்பன் அவன் விருப்பப்படி செய்யட்டும்; அவன் பணக்காரனாக இருக்கலாம், நான் இல்லை. அது நான் கூறிய படி தான். வேண்டுமானால் என்னைக் கொன்று விடுங்கள்- உங்களுக்கு அதனால் ஒன்றும் லாபம் கிடைக்கப் போவதில்லை; ஆனால் நான் ஐநூறு ரூபிள்களுக்கு மேல் அனுப்ப எழுத மாட்டேன்,” என்றான் ஜீலின்.
அவர்கள் ஒன்றும் பேசவில்லை. திடீரென்று அப்துல் துள்ளிக் குதித்தெழுந்து, ஒரு சிறிய பெட்டியைக் கொண்டு வந்தான்; அதிலிருந்து ஒரு பேனா, மசி, ஒரு துண்டுக் காகிதம் எல்லாவற்றையும் எடுத்து ஜீலினிடம் கொடுத்து, அவன் தோளைத் தட்டி, கடிதம் எழுதுமாறு சைகை செய்தான். அவன் ஐநூறு ரூபிள்களைப் பெற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டு விட்டான்.
“சற்றுப் பொறு,” என்றான் ஜீலின் அந்த மொழிபெயர்ப்பாளனிடம்; “எங்களுக்கு ஒழுங்காக சாப்பாடு போட வேண்டும்; உடைகள், பூட்ஸுகள் கொடுக்க வேண்டும்; நாங்கள் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று அவனிடம் சொல். எங்களுக்கு அது மகிழ்ச்சியை அளிக்கும். மேலும் இந்தத் தளைகளை எங்கள் கால்களிலிருந்து எடுத்து விட வேண்டும்,” என்றபடி அந்த எஜமானனைப் பார்த்துச் சிரித்தான்.
எஜமானனும் சிரித்த வண்ணம் மொழிபெயர்ப்பாளன் கூறியதைக் கேட்டுவிட்டுக் கூறினான், “நான் அவர்களுக்கு மிக உயர்ந்த ஆடைகளைக் கொடுக்கிறேன்; திருமணம் செய்து கொள்ளத் தகுதியான ஒரு போர்வையையும் பூட்ஸுகளையும் தருகிறேன். இளவரசர்களுக்குக் கொடுப்பது போன்ற உணவை அளிக்கிறேன்; அவர்களுக்கு விருப்பமானால், இந்தக் கொட்டிலில் அவர்கள் சேர்ந்தே இருக்கலாம். ஆனால் நான் அவர்களுடைய கால் தளைகளைக் கழற்ற மாட்டேன்; ஏனெனில் அவர்கள் தப்பித்து ஓடி விடுவார்கள். ஆனால் இரவு வேளைகளில் வேண்டுமானால் அவற்றைக் கழற்றி விடலாம்.” அவன் குதித்தெழுந்து ஜீலினின் முதுகில் ஓங்கித் தட்டிய வண்ணம் சொன்னான், “நீ நல்லவன், நான் நல்லவன்!.”
ஜீலின் வேண்டுமென்றே தவறான முகவரிக்குக் கடிதம் எழுதினான்; அது தன் இலக்கைச் சென்றடையாது என அவனுக்குத் தெரியும். ‘நான் தப்பி ஓடி விடுவேன்,’ என அவன் நினைத்துக் கொண்டான்.
ஜீலினும் கஸ்டீலினும் கொட்டிலுக்குத் திரும்ப அழைத்துச் செல்லப் பட்டு, அவர்களுக்கு சிறிது சோளப் புல், ஒரு பாத்திரத்தில் நீர், சிறிது ரொட்டி, இரு பழைய மேலங்கிகள், மேலும் தேய்ந்து பழையதான சில ராணுவ பூட்ஸுகள் ( நிச்சயமாக இவை இறந்து போன ருஷ்ய வீரர்களின் சடலங்களிலிருந்து எடுக்கப் பட்டவை ஆகும்) கொடுக்கப்பட்டன. இரவு வேளைகளில் அவர்கள் கால்களிலிருந்து விலங்குகள் எடுக்கப் பட்டு, அவர்கள் கொட்டிலில் பூட்டி வைக்கப் பட்டனர்.
(தொடரும்)