இருத்தலின் பறவை
மாலை நடையின்
மரங்களடர்ந்த பாதையில்
பறவையின் குரல்.
பிடுங்கி
தலைகீழாய் நட்டது போல்
இலையின்றி நிற்கும் மரங்களில்
தேடிச்சலித்தபோது
என் திசையின் முப்பரிமாணத்தை
கடந்து விட்டிருந்தது
பறவை.
பிறகு
ஏதோ ஒருகிளையில்
என்னை உற்றுநோக்கி
சிலையைப்போல்
அமர்ந்திருந்தது.
பறவையை உணர்ந்த பின்
சொற்களை அறிந்த மனம்
சொற்களால் நிரம்பியது.
சொற்கள் இன்றி
பறவையை உணர்ந்த கணம்
உணர்விலிருந்தும்
பிரிந்தது பறவை.
உணர்விலிருந்து
என்
இருப்பையும் பிரித்தபின்
முடிவற்று இருந்தோம்
நானும் பறவையும்
காலத்தின் வெளியில்.
oOo
தங்கநாற்காலி
தங்க நாற்காலி
தங்களுடையதென்றார்.
ஊர்சொத்து
உமதாகாதென்றேன்.
முப்பாட்டன்
விட்டுச் சென்றதென்றார்.
ஆறும் கோவிலும்போல
தங்கநாற்காலி
ஊரைச்சேர்ந்ததென்றார்.
உடனிருந்தவர்
ஊரென்பதே
எங்கள் வீட்டுக் கொல்லைதானென்றார்.
உயரே தொங்கும்
வாளைக்காட்டினார் வேறிருவர்.
வெண்ணைவெட்டும் வாள்
எம்மை யென்ன செய்யுமென்றார்.
ஊருக்கொரு பயனுமில்லை
உங்களாலென்றோம் நால்வரும்.
உள்ளங்கையில்
வைகுந்தம் பாருங்களென்றார்.
நாற்காலியைக் காலி செய்யுங்கள்
நாற்காலியைக் காலி செய்யுங்கள்
கூச்சல் பெருக கும்பல் திரள
குப்பனும் சுப்பனும் வந்துகொண்டிருக்கிறார்கள்.
oOo
அம்மாவும் அருவாமணையும்
– ச.அனுக்ரஹா
தலைகுனிந்து சிறகுகள் மடித்து
வளைந்த கழுத்துடன்
வைத்த இடத்திலேயே
நீந்திக்கொண்டிருக்கும்
உலோகபறவை.
அதன்மீது கால்மடித்தமர்ந்து
அம்மா அதன் தலையில்
தேங்காய் பூ சொரிவாள்.
பெருத்தபூசணியும்
இளைத்த முருங்கையும்
அரிவாள்.
பெருத்தபூசணியும்
இளைத்த முருங்கையும்
அரிவாள்.
எனக்கு ஒருபோதும்
அதில் நறுக்கவருவதில்லை.
வளையாத கத்தி
அம்மாவுக்கு பழக்கமில்லை.
பறக்காத பறவையாக
அம்மா எங்களுடன் நீந்திக்கொண்டிருக்கிறாள்.
அம்மா எங்களுடன் நீந்திக்கொண்டிருக்கிறாள்.
யாரும் கவனிக்காத மூலையில்
அருவாமணையும் குனிந்து அமர்ந்திருக்கிறது.
oOo