முடிவிலாக் கண்ணீர், இடைவிடா போராட்டம்
சில மாதங்களுக்கு முன்பே இந்தப் புத்தகத்தை வாங்கிவிட்டேன். இரண்டு மூன்று முறை படிக்க ஆரம்பித்து முதல் பத்து இருபது பக்கங்களில் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் மூடி வைத்துவிட்டேன். இரண்டாவது பக்கத்திலேயே,
“சின்னாண்டை நாற்றுமுடிகளைக் கலைத்துக் கொண்டிருந்தான், சின்னாண்டை மகன் மோழி பிடித்திருந்தான் பத்திருபது நாட்களாய் சேடை அடித்து ஓய்ந்த மாடுகள் நடக்கவில்லை. மூலை நடவானதால் சனம் அதது அது வாட்டத்துக்கு வந்ததில் உழவை ஓட்டிக்கொடுக்கமுடியவில்லை. அடித்து ஓட்டினான். மாட்டாங்காலில் சேறு தத்தளித்து, நடவு நடுகிறவர்கள் மேலெல்லாம் தெறித்தது..”
என்ற பத்தி பயமுறுத்தியது. இரண்டு மூன்று தரம் படித்தபின்தான் புரிந்தது. உழவையும் விவசாயத்தையும் பற்றி ஒன்றும் தெரியாமல் அரிசியை மட்டும் வாங்கி உண்ணும் நகர மக்களில் ஒருத்தியாச்சே. சரி உழவு சார்ந்த சொற்கள் புரியவில்லையானால் ஒதுக்கிவிட்டுப் படிப்போம் , கதை புரியாமலா போய்விடும் என்று மேலே போனால் “கிண்டுக்காலி” “ஓமலு” என்றெல்லாம் வார்த்தைகள் அதிர்ச்சி கொடுத்தன. இதுவரை கேட்டுப் பரிச்சயப்படாத கடலூர் மாவட்ட வட்டாரப்பேச்சிலேயே எழுதப்பட்ட புத்தகம்..
‘தமிழ்தானே. அப்படி என்ன புரியாமல் போய்விடப் போகிறது’ என்று இம்முறை படித்தேன். இந்தத் திணறல் எல்லாம் முதல் முப்பது பக்கம் வரைக்கும்தான். அப்புறம் புத்தகத்தை கீழே வைக்க மனசு வரவில்லை. படித்து முடிக்கையில் புது வருடம் பிறந்திருந்தது. நூறு பக்கங்களுக்குப் பின் கதையில் எவராவது அநியாயமாய் நடக்கையில் ‘’இவ தெவைக்கறமாதிரி அவளும் தெவைக்கனும்” என்று மனதுக்குள் ‘வாசாங்கு’ சொல்லும் அளவுக்கு மொழி பழகிப்போனது. முதலில் முகத்தில் அடித்த வசைச்சொற்களெல்லாம் கதைமாந்தரின் சுற்றுப்புறமும் வாழ்வும் பரிச்சயப்பட்டதும் சாதாரண பேச்சுவழக்குகளாய் (ஆங்கிலப் புத்தகங்கள், சினிமாக்களில் SOB, MF போன்ற வார்த்தைகள் கேட்கையில் மரத்துப் போய் சலனப்படுத்தாது போல்) ஆகின.
வட்டார சார்பற்ற மொழியில் இக்கதை சொல்லப்பட்டிருந்தால் இத்தனை தாக்கம் ஏற்படுத்தியிருக்குமா என யோசிக்கிறேன். கதைமாந்தரின் வாழ்வை ஒரு நிருபர் வெளியில் நின்றுகொண்டு நமக்குத் தெரிவிப்பது போல இருந்திருக்கும். ஆனால் இந்த நடையில் படிக்கையில் நம்மைக் கூடவே அழைத்துப் போய் நம் கண் முன் கதை விரிவது போல் இருக்கிறது. நம்மிடம் யாரும் கதை சொல்லவில்லை. நாமும் அம்மக்களிடையே இருக்கிறோம். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு, கேட்டுக்கொண்டு. அவர்கள் மொழியை கண்மணி குணசேகரன் நமக்கு மொழிபெயர்க்க முயற்சிக்கவில்லை. ‘கேட்டுக்கொண்டே வா, கொஞ்ச நேரத்தில் தானே புரியும்’ என்பது போல் அந்த மொழியிலேயே எழுதுகிறார். கதைமாந்தரோடு நாம் ஒன்றிப்போகையில் மொழி ஒரு தடையாய் இல்லாமல் போகிறது.
அஞ்சலை அழகான பெண். எத்தனை அழகென்றால்,
“மாஞ்செவலையில், செதுக்கி வைத்த மாதிரி உடம்பு. அழகான வட்டமுகம். கன்னத்தில் பாய்ந்து கிடக்கும் காதோர முடிகள். ஆரம்பத்தில் இரட்டை மூக்குத்தி போட்டு, இப்போது ஒற்றைக்கல்லில் ஒரு மூக்குத்திதான். அடுத்து பக்கத்தில் துளை இருந்த அடையாளம் மட்டுமே தெரியும் கருத்த புள்ளி.”
கார்குடல் நெல்வயலில் ஆண்பிள்ளைகளுக்கு நிகராய் வேலை செய்யக்கூடிய நல்ல உழைப்பாளி. அதன் ‘பயிர், பச்சை, சேறு, மண்ணில்’ ஊறி வளர்ந்தவள். ‘பெறாக்காய்’ இருக்கும் அழகான இளம்பெண்ணை சும்மா விட்டுவைக்குமா ஊர்வம்பு. அவள் வயலில் ஒரு ஆண்பிள்ளையுடன் சிரித்துப் பேசுவதை வைத்து வம்பளக்கிறது.
“பையனும் வயசி பையன், புள்ளயும் கம்னேட்டி வளக்கிற புள்ள. சிரிக்காமெ என்னா செய்யும்?”
“காற்று வாட்டத்தில் வந்து விழுந்து குத்துகிற சீவு முள்ளாய் வார்த்தைகள்.”
தந்தையில்லாத பெண்ணை ஊர்வாயின் வம்பிலிருந்து காப்பாற்றி ந்ல்ல இடத்தில் கட்டிக்கொடுக்கவேண்டுமே என்ற பரிதவிப்பில் தாய் பாக்கியம் இரண்டாவது மாப்பிள்ளையான ஒன்றுவிட்ட தம்பியை மாப்பிள்ளை தேட உதவி கேட்கிறாள். அவனோ தானே இரண்டாம் தாரமாய் கட்டிக் கொள்கிறேன் என்கிறான். ஆண்பிள்ளையற்ற வீட்டில் ஆதாயம் தேடுபவர்கள்தானே அதிகம் நம் சமூகத்தில்.
மறுக்கப்பட்ட வன்மத்தில் மணக்கொல்லையிலிருந்து ஒரு சம்பந்தம் பிடித்து வருகிறான். பார்க்க நன்றாக சிவப்பாய் இருக்கும் அண்ணனை மாப்பிள்ளை என காட்டி ஆள்மாறாட்டம் செய்து ‘பொயலக்கட்டய அடக்கிட்டு, ஒத்தக் காலை லேசா தாங்கனாப்ல நடந்துகிட்டு, கன்னங்கரேல்னு’ சோப்ளாங்கி போல் இருக்கும் தம்பிக்கு அஞ்சலையை மணம் செய்துவைத்துவிடுகிறார்கள். அழகாய் இருந்தவனுடன் கற்பனையில் குடித்தனமே நடத்தியிருந்த அஞ்சலையால் இந்த துரோகத்தை மன்னிக்க முடியவில்லை. கட்டியவனை நெருங்கவிடுவதில்லை. அவனுடன் பேசுவதும் இல்லை. கணவன் வீட்டவருடனான வாய்ச்சண்டை ஒரு நாள் எல்லைமீறி அடிதடிக்குப் போக, அஞ்சலை கார்குடலுக்குத் திரும்ப முடிவெடுக்கிறாள்.
வழியில் விருத்தாசலத்தில் அவளை அடையாளம் காணும் மூத்த அக்கா கல்யாணி இவளுக்கு ஆறுதலாகப் பேசி தன் வீட்டுக்கு அழைத்துப் போய் அழகாய் சிவப்பாய் இருக்கும் தன் கொழுந்தனுக்கு மணம் செய்து வைக்கிறாள். அக்காவுக்கும் கொழுந்தனுக்கும் இருக்கும் கள்ள உறவு தெரியவருகையில் அக்காவும், கணவனுமாய் சேர்ந்து கொள்ள இன்னும் கொடுமைக்குள்ளாகிறாள். அக்காவின் கணவன் மட்டும் அவ்வப்போது இவளுக்கு ஆதரவாய் இருக்கிறான். இதற்கிடையில் கர்ப்பம், குழந்தை. அக்காவின் கைப்பாவையாய் இருக்கும் கணவனும் இவளையும் குழந்தையையும் லட்சியமே செய்வதில்லை. அக்காவும் கர்ப்பமாக, அஞ்சலையை வார்த்தையாலும் அடியாலும் துன்புறுத்தி கைக்குழந்தையுடன் வீட்டைவிட்டு விரட்டிவிடுகிறாள். கைக்குழந்தை வெண்ணிலாவுடன் அம்மாவிடமே கார்குடலுக்கு வந்து சேர்கிறாள்.
அம்மாவும் இரண்டாவது அக்காவும் இவளுக்கு ஆதரவாய் இருந்தாலும் ஊர் சும்மா இருப்பதில்லை. இவளை நடத்தை கெட்டவள், ‘நாடுமாறி’ என்றெல்லாம் தூற்றுகிறார்கள். ‘இந்த கார்கொடல்லே எத்தினி ஊட்டு ஒலய அமிக்க போறான்னு” பார்க்கலாம் எனப் பேசுகிறர்கள்.ஆண்களை மயக்கி வேலை தேடுவதாய் குற்றம் சாட்டுகிறார்கள். ஊர் ஆண்களோ ‘சும்மா அருமாத்துக்கு ஏங்கனா தாங்கனா பாத்துட்டு உட்டுக்கெடாசி’ விடலாம் எனத் திட்டம் போடுகிறர்கள்.
திரும்பவும் குழந்தையை தாயிடம் விட்டுவிட்டு கால்போனபோக்கில் கிளம்பி மணக்கொல்லை நாட்களில் கிடைத்த தோழியான வள்ளியிடம் போகிறாள். மண்ணாங்கட்டி இன்னும் அவள் நினைவாய் இருப்பதாய் வள்ளி சொல்வதைக்கேட்டு மீண்டும் மணக்கொல்லை போய் அவனுடன் குடும்பம் நடத்துகிறாள். இரண்டு பெண்கள் பிறந்ததும், அம்மாவிடம் விட்டு வந்த முதல் குழந்தையைப் பற்றிய குற்ற உணர்வு அஞ்சலையை ஆட்டிப்படைக்கிறது. தம்பியின் கண்பார்வையில் வளர்பவளை அவனுக்கே திருமணம் செய்து வைத்துவிடலாம் என்றெல்லாம் கனவு காண்கிறாள். அழகான நிலாவை ஊர் ஆண்கள் பார்க்கும் பார்வையும் அதுதான் சரி என அவளுக்கு உறுதிப்படுத்துகிறது.
ஆனால் மறுபடியும் அக்காவின் பணபலம் தம்பியை விலைக்கு வாங்கிவிடுகிறது. இவளைத் தேடிவந்த பெண்ணை உடன் வைத்து காப்பாற்றவும் வழியில்லை. ஒருகாலத்தில் இவள் வெறுத்தும் இவளையே நினத்து வாழ்ந்த கணவனே ஒரு கட்டத்தில் அவளை அடித்து. ஊர் அவளைப் பற்றிக் கொண்டிருந்த எண்ணத்தின் வெளிப்பாடான ‘தேவுடியா’ என்ற வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி “இந்த சிரிப்பா சிரிச்ச கறிய வெச்சுக்கிட்டு, பங்கப்பட்டுக்கிட்டு கெடக்காத. எம்மாம் முந்திரி மரம் கெடக்குது. போயி நாணுகிட்டு சாவு. உசுரோட இருக்காத” எனச் சொல்ல அஞ்சலை மீண்டும் உடைந்துபோகிறாள்.
வறுமை, நம்பிக்கைத் துரோகம், பசி, பட்டினி, வெறுப்பு, ஏச்சு, அவமானம் தப்பிக்க வழியே இல்லாமல் எல்லாத் திக்கிலிருந்தும் இடைவெளியே இல்லாத துன்பம் – இதுதான் அஞ்சலையின் வாழ்க்கை. வாழ்வு இத்தனை துயரமானதாக ஆவதற்கு அவள் ஆசைப்படக்கூடாத எதையும் கேட்டுவிடவில்லை. உண்டைச்சோறிலேயே திருப்தி அடைந்துவிடும் சிறுமி அஞ்சலை. பருவத்துக்கு வந்தபின் ஆசைப்படுவதெல்லாம் மனதுக்குப் பிடித்த கணவன், குழந்தைகள், பசிவேளைக்குக் கூழோ, சோறோ. அதையும் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட நினைப்பவள் இல்லை, எத்தனை உடல் உழைப்புக்கும் தயாரானவள். ஆனால் இந்த நியாயமான அடிப்படையான விருப்பங்கள்கூட அவளுக்குக் கிடைப்பதில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் பிறரால் வஞ்சிக்கப்பட்டு, ஏசப்பட்டு, சிறுமைப்படுத்தப் படுகிறாள்.
ஆள்மாறாட்டத் திருமணம். இதற்கு உடந்தை அக்கா புருஷன். மனதுக்குப் பிடிக்காத, தனக்குப் பொருத்தமில்லாத ஏமாற்றி மணம் முடித்துவைக்கப்பட்டவனுடன் வாழ மனம் வரவில்லை. இது நியாயமான, தார்மீகமான கோபம்தானே? ஆனால் அவளைப்பற்றி வம்பு பேசுபவர்கள் எவரும் அவளை ஏமாற்றியவர்களைக் குற்றக்கூண்டில் நிறுத்தவில்லை. இரண்டாம் திருமணத்திலும் மற்றுமொரு துரோகம். இம்முறை வஞ்சிப்பவள் சொந்த அக்கா. இம்முறையும் அஞ்சலையை நாடுமாறி எனத் தூற்றுபவர்களுக்கு அவள் அக்காவின் நடத்தையையோ, அவளுடன் சேர்ந்து இவளை கொடுமைப்படுத்தும் கணவனையோ விமரிசிக்க தைரியம் இல்லை. அக்கா வேலைக்காக ஊரை அண்டியிருக்கவில்லை. அவளும் அவள் கொழுந்தனும் வியாபாரம் செய்பவர்கள். ஊர் என்ன பேசினாலும், ஒதுக்கி வைத்தாலும் கவலையில்லை. அப்படிப் பேசுபவர்களையும் அதட்டி அடக்கும் பலமும் அவளுக்கு இருக்கிறது. ஆனால் அஞ்சலை பிழைப்புக்கு ஊர் தயவு தேவை. அதனால் அவர்கள் அவளைக் குத்திப் பேசி புண்படுத்தலாம். விமரிசிக்கலாம், வம்பளக்கலாம்.
இங்கு எதிரிகள் யாரும் வெளியாட்கள் இல்லை. சொந்தக் குடும்பம், அண்டை வீட்டவர்கள், அதே சேரியை சேர்ந்த மக்கள், இவர்களே அவள் துயரத்துக்குக்கெல்லாம் காரணம். இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் மேல் பொறாமை வரலாம். இங்கு இல்லாதவர்களுக்கிடையே இத்தனை பொறாமை, துவேஷம். துயரவாழ்வின் வேதனை தெரிந்தவர்களால் அஞ்சலையின் துயரத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் போவது எப்படி? இல்லை, சுற்றிலும் துயரத்தைப் பார்த்துப் பழகியவர்களுக்கு அந்தத் துயரத்தின் -உணர்ச்சி மரத்துப் போய்விடுமா? பிறந்த சூழலின் காரணமாய் தவிர்க்கமுடியாத வறுமையும் அதன் கொடுமைகளும். இதனிடையில் பிறரின் காயத்தைக் கீறி ரணத்தை அதிகப்படுத்துவதில் அப்படி என்ன சுவாரசியம் இவர்களுக்கு? உன்னை விட நான் உயர்ந்தவள் என பீற்றிக்கொள்ள பணமோ படிப்போ இல்லாதபோது உன்னைவிட நான் ஒழுக்கமானவள் அதனால் நீ தாழ்ந்தவள் என சுட்டிக் காட்டுவதில் கிடைக்கும் பெருமையா?
இந்த ஒழுக்கக் கட்டுப்பாடெல்லாம் பெண்களுக்குத்தான். மனைவி இருக்கையிலேயே இன்னொரு பெண் மீது ஆசைப்படும் ஆணின் நடத்தையை கண்டும் காணாததுபோல் இருக்கும் சமூகம்தான் மனதுக்குப் பிடிக்காதவனை, பொருத்தமில்லாத கணவனை ஒதுக்கி இன்னொருவனை மணம் செய்யும் பெண்ணை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி அவள்மேல் ஆளாளுக்குக் கல்லெறியத் துடிக்கிறது. “ஆம்படையான் அடிச்ச அடியும் அருவா அறுத்த காயமும் வலிக்காது போ” என இந்த சமூகத்தின் சொல்வழக்குகளிலேயே ஆணாதிக்கமும் அதை எதிர்ப்பின்றி ஏற்கும் மனப்பாங்கும் தெரிகிறது.
அஞ்சலை எடுக்கும் ஒரே தவறான முடிவு. வெண்ணிலாவை தாயிடம் விட்டுவிட்டு முதல் கணவனுடன் திரும்பி வாழச் செல்வது. அதையும் தவறான முடிவு எனச் சொல்லத் தயக்கமாகவே இருக்கிறது. பிறந்த ஊரிலேயே பிழைப்புக்கு வழியில்லை என்றானதும், ஆண்துணை இல்லாத ஒரு இளம் பெண்ணுக்குப் பாதுகாப்பும் இல்லை என தெரிந்தபின் தன்னை இன்னும் நினைத்துக் கொண்டிருக்கும் முதல் கணவனிடம் திரும்பப் போகிறாள். தன்னையே நினைத்து உருகும் அவன் தன்னை ஏற்றுக் கொண்டதைப் போல முதல் குழந்தையையும் உடன் கொண்டு வைக்க அனுமதிப்பான் என்ற நப்பாசை இருந்திருக்கலாம். ஆனால் அது நடக்காமல் போகிறது. அப்போதைய அனுபவத்துக்கும் அறிவுக்கும் சரி எனத் தோன்றுவதை வைத்துத்தான் ஒவ்வொரு கட்டத்திலும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அது உண்மையில் சரியா தவறா என்பது விளைவுகளை வைத்து பின்னோக்கிப் பார்க்கும்போதுதானே தெரிகிறது? தற்காப்புக்கும் பாதுகாப்பான வருங்காலத்துக்கும் அவளுக்கு ஒரு ஆண் தேவைப்படுகிறான். மூன்றாவதாய் இன்னொருவனைத் தேடியிருந்தால் மட்டும் இந்தச் சமூகம் அவளை சும்மா விட்டிருக்குமா? அவர்களிடம் வார்த்தைகளுக்கா பஞ்சம்?
அப்படியும் கதையில் தவறு செய்பவரெல்லாம் தண்டனைக்குள்ளாவதில்லை. ஆள்மாறாட்ட துரோகம் செய்த கணேசனின் குடும்பத்தினர் அதனால் எந்த விளைவையும் அனுபவிப்பதில்லை. அதேபோலத்தான் கல்யாணியும் அவள் கொழுந்தனும். அஞ்சலைக்கும் கல்யாணியின் கணவனுக்கும் அவர்கள் இழைக்கும் துரோகத்துக்கு அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள். அஞ்சலையின் நடத்தைக்காக அவளுடன் பேசாமல் இருக்கும் தம்பி பணமிருக்கும் அக்காவின் நடத்தையில் எந்தத் தவறும் காண்பதில்லை. மாறாய் அவள் மகளை மணக்க ஒப்புக் கொள்கிறான். அதான் முன்னுரையிலேயே குணசேகரன் சொல்கிறார்: “இருக்கப்பட்டவள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். நியாயப்படுத்தி வாதாடலாம். ஆனால் இல்லாதவளுக்கு… எத்தனை உண்மையான காரணம் இருந்தாலும் உலகம் ஒப்பாது. ஊர் மேஞ்ச பட்டந்தான்.”
கதியற்ற அஞ்சலைதான் ஒவ்வொரு கட்டத்திலும் அவதிக்குள்ளாகிறாள். இதற்குக் காரணம் பெண்ணாகப் பிறந்ததா? அழகான பெண்ணாய் பிறந்ததா? இல்லை, வறுமையான சூழலில் பெண்ணாய் பிறந்ததா? ஒருவேளை வயல்வேலையில் கிடைக்கும் உண்டைச் சோறுக்கு ஆசைப்பட்டு பள்ளிக்கூடத்தை விட்டு ஓடிவராமல் இருந்து ஒழுங்காய் படித்திருந்தால், இப்படி ஒருவனை அண்டி நிற்கவேண்டிய நிலைமைக்கு வராமல்,கூலிப்பிழைப்புக்கான போட்டி பொறாமையில் ஊர் வாயில் அகப்பட்டு அரைபடாமல் இருந்திருப்பாள். அவள் பெண் வெண்ணிலாவுக்கு வாழ்வை எதிர்நோக்கும் தன்னம்பிக்கை அந்தப் படிப்பு பலத்திலிருந்துதான் வருகிறது எனத் தோன்றுகிறது.

Photo Courtesy : The Hindu
இக்கதையில் வரும் பெண்களில் ஒருத்திகூட பலவீனமானவள் அல்ல. கணவன் இறந்தபின் ஒற்றை ஆளாய் கூலிக்கு உழைத்து தன் மூன்று பெண்களுக்குத் திருமணம் செய்து மகனையும் ஐ.டி ஐ வரை படிக்க வைக்கும் பாக்கியம். அஞ்சலை படும் பாட்டால் மனமொடிந்து போன நிலையிலும் மாட்டை கார்குடலிலிருந்து மணக்கொல்லை வரை ஓட்டி வந்து அஞ்சலை கன்னுக்குட்டியைத் திருடவில்லை என நிரூபிக்கிறாள். பெரிய அக்கா கல்யாணி, வெளிப்படையாய் கொழுந்தனுடன் உறவு வைத்துக்கொள்வது மட்டுமில்லாமல் ஊர்வாயை அடக்கவும் தெரிந்தவளாய் இருக்கிறாள். அவர்கள் இவளை ஒதுக்குவது பற்றி இவளுக்குக் கவலை இல்லை. சின்ன அக்கா தங்கமணி தன் அன்பாலும், நல்ல குணத்தாலும் குடும்பத்தில் உள்ளவர்களிடையே ஒரு பாலமாய் இருக்கிறாள். அஞ்சலையை ஊர்வாய் சீண்டிகொண்டே இருப்பதில் அவள் அடிபட்டாலும், அது அவளை ஒடுங்கச்செய்வதில்லை. ஒருவேளை அவள் தவறு செய்தவள் போல ஒடுங்கி அவர்கள் ஏச்சுகளை வாய்மூடிக் கேட்டுகொண்டு போயிருந்தால் அவர்கள் அவளை சும்மா விட்டுவைத்திருப்பார்களோ என்னவோ? சும்மா இராமல் அவர்கள் சீண்டும்போதெல்லாம் அவள் படமெடுத்து அவர்களுக்கு பதிலடி கொடுத்ததுதான் அவர்களின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியதோ? இந்தச் சமூகமும், உலகமும் மாறாது. ஆணைச்சாராமல் சொந்தக் கால்களில் நிற்கும் வரை பெண்ணுக்கு விடுதலை கிடைக்காது. அதற்கு முதல் படி கல்வி, அடுத்தது அக்கல்வி மூலம் பெறக்கூடிய பொருளாதார சுதந்திரம். இந்த படிப்புதான் அவள் குடும்பத்தின் மற்ற பெண்களுக்கும் மேலான தைரியத்தை சிறுபெண் வெண்ணிலாவுக்குக் கொடுக்கிறது.
புத்தகத்தைப் படிக்கையில் கதாசிரியர் என்ற ஒருவரின் குறுக்கீடு எங்குமே தெரியாமல் கதை நகர்கிறது. கதையின் போக்குக்கு அந்நியமாய் ஒரு குரலும் இல்லை. ஒரு நியாயப்படுத்தலோ வியாக்கியானமோ கிடையாது. நடப்பதை அப்படியே விவரித்துக் கொண்டுபோகும் வருணனை மட்டுமே. ‘
முந்திரிக்காட்டுச் சூழல், முந்திரிக்கொட்டை பொறுக்கும் வேலை இவற்றை வர்ணிக்கும் விதத்திலேயே படம்பிடித்துக் காட்டிவிடுகிறார் குணசேகரன். இதுபோன்ற வெறும் கடினமான உடலுழைப்பு சார்ந்த வேலையில்கூட இத்தனை சுவாரசியமான விஷயங்கள் உண்டா என வியக்க வைக்கும் விவரணை.
நல்லவன் வாழவேண்டும் கெட்டவன் தண்டிக்கப்படவேண்டும் என்ற தார்மீக நிபந்தனைகளெல்லாம் இக்கதையில் இல்லை.. நிஜ வாழ்வு அப்படித்தானே இருக்கிறது. பிழைக்கத்தெரிந்தவன் பிழைக்கிறான். அது தெரியாதவன் பலியாகிறான். யாரும் பெண் கொடுக்கவில்லை என்பதால் தம்பிக்காக ஆள்மாறாட்டம் செய்யும் அண்ணன் அதற்கு பலியாகும் பெண்ணைப் பற்றி யோசிப்பதில்லை. தம்பியின் நன்மைக்கு என்று செய்கிறான்.. நல்லவன், கெட்டவன் என்று வகை பிரிக்க இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் கறுப்பு வெள்ளையாய் இருப்பதில்லை. பசியில் வாடுபவன் உணவைத் திருடுவது குற்றமா என்பது போல் ஒரு தார்மீக அளவில் ஒரு பழுப்புவெளியில்தான் அவை இருக்கின்றன. இவர்களின் பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன என்றால், அதை அவரவர்தான் கண்டுபிடிக்க வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பது கதாசிரியனின் வேலை அல்ல.
‘இன்னம் கெடந்து யார் யாரு கையால வெட்டுப்பட்டுச் சின்னப்படப் போறமோ…’ உள்ளுக்குள் நடுக்கம் இருந்தாலும், இறுக்கிப் பிடித்திருந்த நிலாவின் கைத்தெம்பை நம்பி, மெல்ல அடி எடுத்து வைத்தாள் அஞ்சலை.’ என முடிக்கிறார்.
அஞ்சலையும் நிலாவும் இனி எடுக்கும் முடிவுகள் அவர்களின் பிரச்சினையை தீர்க்கும் அல்லது புதிய பிரச்சினைகளை உருவாக்கும். அது வேறு கதை. இப்போதைக்கு நாமும் நிலாவின் கைத்தெம்பு அஞ்சலையை முன்னேற்றிப் போகும் என்ற நம்பிக்கையுடன் கதையிலிருந்து விலகிவருகிறோம்.
கதை நடக்கும் மண்ணிலேயே விளைந்த சொற்களில் அவர் எழுதும் சூழலைப் பற்றி பரிச்சயமே இல்லாத வாசகன்கூட கதையின் முடிவில் ஏதோ நெருக்கமானமான மக்களின் வாழ்வைக் கிட்டத்திலிருந்து பார்த்தது போன்ற ஒரு உணர்வை எற்படுத்தும் விதமாய் எழுதுகிறார் கண்மணி குணசேகரன். அருமையான நடை. வாசகரைக் கட்டிபோடும் சுவாரசியமான கதைசொல்லல். சொல்வனத்தில் வெளிவந்த இவருடைய சமீபத்திய படைப்பான நெடுஞ்சாலை பற்றிய விமரிசனத்தில் ‘இயல்புவாத எழுத்தில் தமிழின் சிறந்த படைப்பாளி கண்மணி குணசேகரன்’.’ என்கிறார் நாஞ்சில் நாடன். இதற்கு இன்னோரு எடுத்துக்காட்டு அஞ்சலை
அஞ்சலை
கண்மணி குணசேகரன்
பதிப்பு: தமிழினி
This review is just superb. I will now look for this book, and read it. Who is the publisher?
நன்றி மீனாக்ஷி. இப்புத்தகம் தமிழினி பதிப்பு.