அமோல் பாலேகரின் பங்கர் வாடி

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை லோக் சபா தொலைக்காட்சியில் Old Indian Classics என்று மத்திய நாடாளுமன்றம் தன் பொறுப்பில் நடத்தும் தொலைக்காட்சியில் பழைய திரைப்படங்கள் ஒளி பரப்பப் படுகின்றன. எல்லா அரசு நிறுவனங்களையும் அதை நிறுவகிக்க அமர்த்தப்படும் அதிகாரிகளையும் போல, க்ளாஸிக்ஸ் என்று சொல்லத்தக்க படங்களைத் தான் ஒளிபரப்ப வேண்டும், தரங்கெட்ட வணிகப் படங்களைக் காட்டி நமக்கு விளம்பர வருவாய் தேடவேண்டிய அவசியமில்லை என்று ஒரு வழிகாட்டுதல் இருந்த போதிலும் க்ளாஸிக்ஸ் என்றால் என்னவென்று அந்த அதிகாரிகளுக்குத் தெரியவேண்டுமல்லவா? அனேகமாக தில்லியிலிருக்கும் இதற்குப் பொறுப்பு ஏற்கும் அதிகாரிகள் பலருக்கு தெரிகிறது. கணிசமான பேருக்கு தெரிவதில்லை. இருபது முப்பது வருஷம் பழசானால் அது க்ளாஸிக் தான் என்று இப்போதெல்லாம் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.  அதிகாரிகளுக்கு பொறுப்பாக ஒரு காரியத்தைச் செய்யத்தான் பயிற்சியே தவிர கலை உணர்வு என்பது IAS பயிற்சியில் சொல்லித் தரப்படுவதில்லை. அது சாத்தியமுமில்லை. ஆக, அனேகமாக லோக்சபா தொலைக்காட்சியின் சனிக்கிழமைப் படம் என்றால் ஒரு நல்ல படம் பார்க்கக்கிடைக்கும் என்ற ஆரம்ப எதிர்பார்ப்பு இப்போதும் பொய்ப்பதில்லை தான். ஆனாலும் சில சமயங்களில், நம்மூர் காப்டன் விஜயகாந்த் ஹீரோவாக நடிக்கும் தமிழ்ப் படமும் க்ளாஸிக் ஆக வந்துவிடுகிறது. இருப்பினும் அனேக பார்க்கக் கிடைக்காத அரிய படங்கள், பல மொழிப் படங்கள், பழையவை, ஒரியா, அசாமிய, வங்காளி, படங்கள் எனக்கு லோக் சபா தொலைக் காட்சியில் தான் பார்க்கக் கிடைத்தன. அனேகமாக, எந்த மொழிப்படமானாலும் ஆங்கிலத்தில் சப் டைடிலோடு அவை கிடைக்கின்றன. இடையில் விளம்பரங்கள். சன் டிவியில் படம் பார்ப்பது போல பத்து நிமிடம் படம் எட்டு நிமிடம் விளம்பரம் என்று இரவு 11 மணிக்கு முடிய வேண்டிய  நம் அவஸ்தை நடு இரவு ஒரு மணி வரை நீள்வதில்லை

ஒரு படத்தைப் பற்றி எழுத வந்தவன் இவ்வளவு நீட்டி முழக்கி லோக் சபா தொலைக்காட்சியின் மகிமைகளைப் பற்றி எழுதக் காரணம், நல்ல படங்களை விரும்புவதாக சும்மா சொல்லிக்கொள்வதில் மாத்திரம் பவிசு காணாமல், உண்மையாகவே நல்ல விஷயங்களைக் காணும் தாகம் கொண்டவர்களுக்கு உதவுவதற்காகவே. நான் இதற்கு முன்னதாகவே கூட சில சமயங்களில் லோக் சபாவில் பார்த்த சில படங்களைப்பற்றி எழுத நேர்ந்த போது இது பற்றி பிரஸ்தாபித்திருக்கிறேன். ஆனால் ஏதும் பலன் இருந்ததாகத் தெரியவில்லை. உண்மையான தாகம் இருந்தால் எங்கே தண்ணி கிடைக்கும் என்று எந்த தூண்டுதலும் இல்லாமல் தேடச் சொல்லும். வரண்ட நாக்கும் தொண்டையும். தாகமும் தவிப்பும் உள்ளிருந்து வரவில்லையெனில் என்ன சொன்னாலும் அது பலனளிக்கப் போவதில்லை. உண்மையிலேயே நம் ரசனை மாறியிருந்தால், அதற்கேற்ற படங்கள் எங்கே கிடைக்கும் என்று தேடச் சொல்லும். நம் ரசனை சிம்புவும் ரஜனியும் தான் என்றால்… எந்த பலனும் எதனாலும் ஏற்படப் போவதில்லை. இன்னமும் நாம் கமல் ஸாரையும் ரஜனி சாரையும் தான் ஆராதித்துக்கொண்டு பாலாபிஷேகம் செய்துகொண்டிருக்கப் போகிறோம். என் எரிச்சல் இத்தோடு நிற்கட்டும்.

கடந்த சனிக்கிழமை இரவு ஒளிபரப்பாகும் க்ளாஸிக் திரைப்படம்  ஒரு மராத்தி மொழிப் படம் பங்கர் வாடி என்று கண்டிருந்தது. அது பற்றி சுருக்கமாக இரண்டு வரிகளில், “ஒரு கிராமத்தில் பள்ளிக்கூடம் ஒன்று துவங்க இளைஞன் கிராமத்துக்கு வருகிறான். அவனது அனுபவங்கள்….. என்று இப்படி ஏதோ சொல்லப்பட்டிருந்தது. கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. இதுவும்  மத்திய கல்வி அமைச்சரகத்தின் விளம்பர டாகுமெண்டரியாக இருக்குமோ என்ற சந்தேகம் ஒரு ஓரத்தில். இருந்தாலும் சரியான கைகளில் எதுவும் உருப்படச் செய்துவிட முடியும். ஷாம் பெனிகல், குரியனுக்காகவும் கைய்ரா பால் கோ ஆபரேடிவ் சொசைட்டிக்காகவும் ஆமுல் பால் நிறுவனத்திற்காகவும் மந்த்தன் படம் எடுக்கவில்லையா? அது என்ன விளம்பரப் படமாகவா இருந்தது? எதையும் கெடுக்க ஒரு வணிக மூளையிடம் கொடுத்தால், அது பாலிவுட்டொ இல்லை கோலிவுட்டோ, கெடுத்துத் தர உத்தரவாதம். ஷாம் பெனிகலிடம் ஒரு விளம்பரப்படம் எடுக்கக் கொடுத்தால் கூட அது ஒரு சினிமாவாகத்தான் வந்து சேரும் மந்த்தன் போல.

அமோல் பாலேகர் தலையிட்டிருப்பது தெரிந்ததும் சரி பார்க்கலாம் என்று தைரியமும்  உத்சாகமும் பிறந்தது கடைசியில், ஏமாற்றமும் இல்லை. நேரம் வீண் போகவும் இல்லை.

gsayr

1939 என்று முதல் காட்சியே சொன்னது. ஒரு இருபது வயது இளைஞன் தன் தாய் தந்தையரிடம் ஆசீர்வாதம் பெறுகிறான். மகாராஜா கொடுத்த வேலை இது.  பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும்.  என்று தந்தை ஆசீர்வதிக்கிறார்.  இன்னமும் ராஜ விஸ்வாசம் நிலவும் ஒரு காலம் என்று தெரிகிறது. அடுத்து அந்த இளைஞனை பங்கன் வாடிக்கு தன் வேலையில் சேர நடந்து போய்க்கொண்டிருக்கிறான். அந்த கிராமம் ஒரு வரண்ட பிரதேசத்தில். எங்கும் வரட்சி. கடைசியில் அவன் வந்து சேரும் பங்கர் வாடி கிராம எல்லையில் நம் ஊரில் ஒரு பிள்ளையார் கோயிலோ இல்லை, ஐயனார் சிலையோ இருப்பது போல இந்த கிராம எல்லையில் நிறைய கிட்டத்தட்ட நாற்பது ஐம்பது படமெடுத்த நாகங்களின் சிலைகள். அரசமரத்தடியில் இருக்கும் பிள்ளையாருக்கு இரு புறமும் இருக்கும் நாகங்களின் சிலைகள் போல் இங்கு நாகராஜ சிலைகள் நிறைய அடுக்கடுக்காக நெருக்கமாக நிலத்தில் பதிக்கப்பட்டிருந்தன. அதைக் கடந்து தான் ஊருக்குள் செல்லவேண்டும். இந்த நாகராஜ சிலைகளின் கூட்டத்தை நாம் அடிக்கடி பார்ப்போம்.

பையன் களைத்துப் போய் ஒர் மரத்தடியில் உட்கார்ந்து முகத்தின் வியர்வையைத் துடைத்துக்கொண்டு களைப்பாறுகிறான். அப்போது கையில் நீண்ட தடியுடன் ஒரு கிராமத்தான், “நீ யாரு, என்னத்துக்கு இங்கே வந்திருக்கே” என்று அதட்டலும் வெறுப்புமாகக் கேட்கிறான். “நான் ஒரு மாஸ்டர் இங்கே படிப்பு சொல்லிக் கொடுக்க வந்திருக்கேன்” என்கிறான். “கேட்டவனுக்கு அலட்சியச் சிரிப்பு, இங்கே ஆட்டிடையர்கள் கிராமத்தில் மாஸ்டருக்கு என்ன வேலை?” என்று அதட்டி விட்டுப் போகிறான். கொஞ்ச நேரம் கழித்து ஒரு வயதான பெரியவர் வருகிறார். அவரது கேள்விக்கும் “நான் மாஸ்டர்ஜி” என்று பதில் சொல்கிறான். அவன் பேசுவதிலிருந்தே மிகவும் பயந்த சுபாவம் உள்ள இளைஞன் என்பது தெரிகிறது. “அந்த பெரியவர் கிராமத்து காரோபார். கிராமத்து தலைவன். “இங்கே ஏன் உட்கார்ந்திருக்கிறாய். வா. பள்ளிக்கூடத்தையும் நீ தங்க வேண்டிய இடத்தையும் காண்பிக்கிறேன்” என்று அவனை அழைத்துக்கொண்டு ஒரு குப்பையும் புழுதியும் நிறைந்த இடம் இரண்டையும் அவனது பள்ளியையும் தங்குமிடத்தையும் காண்பிக்கிறார். அவன் இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறான். இடையில் காரோபாரின் சிறு பெண் ஒருத்தி அவனுக்கு குடத்தில் தண்ணீர் எடுத்துவந்து ஒரு சின்ன சொம்பையும் அவனுக்குக் கொடுக்கிறாள். அவன் தன் மூட்டையை அவிழ்த்து கொண்டு வந்த ரொட்டியைத் தின்ன ஆரம்பிக்கிறான்.

அன்று இரவு காரோபார் கிராமத்து ஜனங்களையெல்லாம் கூட்டி மாஸ்டரையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவரவர் வீட்டுப் பசங்களை படிக்க அனுப்பச் சொல்கிறார். அவர்களுக்கு சர்ச்சை கிளம்புகிறது. ‘பள்ளிக்குப் படிக்க அனுப்பி விட்டால் ஆடு மேய்க்கறது யார்?’ என்று கேள்வி. ‘படித்து என்ன பன்ணப் போகிறான்கள்’ என்று இன்னொரு கேள்வி. எல்லோருக்கும் இது கேலியாகவும் வியர்த்தமாகவும் தெரிகிறது. காரோ பார் அவர்களை அதட்டி, “உங்களைப் போல தற்குறிகளாக உங்கள் பிள்ளைகளும் இருக்கணுமா? என்று அதட்டுகிறார்.

மறு நாள் இரண்டு பசங்களோடு பள்ளி ஆரம்பிக்கிறது. பள்ளி அறையைச் சுற்றி நிற்கும் கிராமத்து ஜனங்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்களையெல்லாம் உங்கள் வேலையைப் பாருங்கள் என்று மாஸ்டர்ஜி சொல்ல அவர்கள் கலைகிறார்கள். அடுத்தடுத்து பிள்ளைகள் நிறைய சேர்கிறார்கள். ஆனாலும் எல்லா கிராமத்தாருக்கும் இதில் மனம் இருப்பதில்லை. இடையில் வகுப்பு நடக்கும் போது ஒரு பெண் தன் பையனை வகுப்புக்குள் புகுந்து வெளியில் இழுத்துச் செல்கிறாள். யாரோ சொந்தக் காரர்கள் வந்திருக்கிறார்கள் என்று காரணம் சொல்கிறாள். தன் குடிசைக்கு இழுத்துச் சென்று தன் மகனை ஆடு மேய்க்கச் சொல்கிறாள்.

கிராமம் 1930-40 களின் கிராமம் என்ற காட்சி மிகத் தெளிவாக ஸ்பஷ்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறதா, அல்லது மகாராஷ்டிரத்தில் விதர்பா போன்ற இடங்களில் இன்னமும் நாற்பதுகளிலேயே கிராமம் உறைந்து கிடக்கிறதா தெரியவில்லை. இடிந்த மண் சுவர்கள், தாழ்ந்த கூரைகள், நடுவில் ஒற்றை மரத்தைச் சுற்றிய கிராமத்து சாவடி. நடுவில் சாக்கடை ஓடாத, புழுதி மாத்திரமே எழுப்பும் குறுகிய தெருக்கள்.. நாற்பதுகளின் கிராமக் காட்சி தான். அடிக்கடி கிராமத்தில் ஆட்டு மந்தைகள் ஓட்டிச் செல்லப்படுவதும், பின்னர் ஓட்டி வரப்படுவதும், கிராமத்து தெருக்களில் ஆடுகளின் மந்தை மந்தையாக நடமாட்டம் ஆட்டிடையர்கள் கிராமம் என்ற சூழலை காட்சிப்படுத்துகின்றன.

ஒரு கட்டத்தில் மாஸ்டர்ஜியை கிராமம் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. பக்கத்து டவுனுக்குப் போகும் போதெல்லாம் கிராமத்து ஜனங்கள் ஒருத்தர் இல்லாவிட்டால் ஒருத்தருக்கு ஏதாவது ஒரு காரியம் மாஸ்டர்ஜியால் ஆகவேண்டியிருக்கிறது. மாஸ்டரும் சந்தோஷமாக தன்னால் ஆன உதவியைச் செய்கிறார். முதலில் இது ஒரு கிராமத்தானின் தன் வெள்ளி ஒரு ரூபாயை சில்லரையாக மாற்றித் தருவதிலிருந்து தொடங்குகிறது. உதவி கேட்பவனுக்கு முதலில் ஒரு ரூபாயை மாஸ்டரிடம் நம்பிக் கொடுக்கலாமா, மாஸ்டர்ஜி கொடுத்த பணத்தை பத்திரமாக பாதுகாப்பாரா என்றெல்லாம் சந்தேகம் வரத்தான் செய்கிறது. இப்படி ஓரிரண்டு தடவை நடந்த பிறகு, மாஸ்டர்ஜியால் பாடம் சொல்லிக்கொடுப்பது மட்டுமல்லாமல் இன்னும் உபயோகரமாக இருப்பதில் மாஸ்டர்ஜியின் மதிப்பு உயர்கிறது. பக்கத்து டவுனிலிருந்து கிராமத்து ஜனங்களுக்கு எத்தனையோ வேலைகள். அதிகாரிகளுக்கு மனு எழுதிக்கொடுப்பது. உறவினருக்கு கடிதம் எழுதி தபாலில் சேர்ப்பது. இப்படி எத்தனையோ. இது முதலில் மாஸ்டர்ஜி கிராமத்துக்கு வந்த அன்று  ஆடு மேய்க்கிற ஊரில் உனக்கென்ன வேலை என்று கேட்டவனுக்கு தன்னைக்கண்டு கிராமத்தில் பயம் குறைவது, தம் மதிப்பும் குறைவது கண்டு மாஸ்டரிடம் பொறாமையும் கோபமும் வருகிறது.

கிராமத்து பெரியவர் காரோபாரின் பெண் மாஸ்டருக்கு அவ்வப்போது தண்ணீர் இன்னும் மற்ற உதவி செய்பவளுக்கும் மாஸ்டர்ஜியிடம் டவுனிலிருந்து செய்ய வேண்டிய காரியங்கள் அடிக்கடி வந்து விடுகின்றன. ஒரு நாள் அவள் மாஸ்டர்ஜியிடம் தன் துணியைக் கொடுத்து ரவிக்கை தைத்து வரச்சொல்கிறாள். அளவுக்கு ஒரு பழைய ரவிக்கையும் கொடுக்கிறாள். கொடுக்கும் போது இது காரோபாருக்குத் தெரியவேண்டாம் என்று வேறு எச்சரிக்கிறாள். இதை எப்படியோ அந்த பொறாமைக்கார பால்டியா பார்த்துவிட்டான். பார்த்து காரோபாருக்கும் சேதி சொல்லியாயிற்று.  காரோபாருக்கு மாஸ்டர்ஜியிடம் கோபம். போனால் பேசுவதில்லை. மாஸ்டரும் முறைத்துக்கொண்டு திரும்பி வருகிறான். ‘இருக்க இடமில்லை’ என்று  மாஸ்டருடன் தங்கியிருக்கும் அயூப் வந்து சொல்கிறான் இது பால்டியாவின் வேலை என்று.  அஞ்சி, காரோபாரின் பெண் சொல்கிறாள். பால்டியா கோள் சொல்லி, காரோபார் தன்னை அடித்ததாகச் சொல்கிறாள். ஒரு பெரிய தொகையை டவுனிலிருந்து ஒரு கிராமத்தானுக்காக சில்லறை மாற்றி ஒரு துணியில் மூட்டையாகக் கட்டித் தலைக்கு வைத்துப் படுத்திருக்க அது களவு போகிறது. என்ன செய்வது என்று தெரியாது தன் ஊருக்குப் போய் அப்பா அம்மாவிடம் சொல்கிறான். “உன்னை நம்பி மகாராஜா ஒரு வேலை கொடுத்திருக்கிறார். மகாராஜா பேரைக்காப்பாத்தணும்னு சொன்னேன். கெடுத்திட்டியேடா, என்று அப்பா திட்ட, அம்மா சொல்கிறாள் தன் நகையை வித்து அந்த பணத்தைக் கட்டிடலாம் என்று.

திடீரென்று ஒரு நாள், “இந்த உன் பணம் சரியா இருக்கா எண்ணிப்பார். மூணு ரூபா குறையும். அதை நான் செலவழிச்சிட்ட்டேன். அது கிடைக்காது. பாக்கியையும் நானே எடுத்திண்டிருக்கலாம். ஆனால் நீ இவ்வளவு நல்ல மனுஷன், உன்னை ஏமாத்துறதா என்று என் மனசே என்னத் திட்டித்து. இந்தா, எண்ணிப் பாத்துட்டு கொடுக்க வேண்டியவன் கிட்ட கொடு” என்று ஒரு கிராமத்தான் சொல்கிறான்.

ஒரு நாள் கிராமத்து கிணற்றில் மூழ்கி குளித்துக்கொண்டிருக்கும் போது காரோபார் கிணற்று மேட்டிலிருந்து கேட்கிறான் மாஸ்டர்ஜியை. “உனக்கு என்ன ஆச்சு. ஏன் முன்னப் போல இல்லை நீ.” “நீ தான் கோபித்துக்கொண்டு பேசலியே, நான் என்ன செய்ய?” என்று கோபத்துடன் மாஸ்டர் பதில் சொல்கிறான். “என்கிட்டே கேட்கறது தானே. நீ சின்னவன். நீ அல்லவா பணிந்து போகணும். காலம் மாறிப் போச்சு. சின்னவங்க கிட்ட வயசானவன் வந்து பேசவேண்டியிருக்கு” என்று காரோபார் அலுத்துக்கொள்கிறான்.  ”உன் பெண் தான் சொன்னாள், உன் கிட்டே சொல்லக் கூடாதுன்னு, அதனால் தான் சொல்லலை. ஏதோ நம்ம காரியத்தைப் பாத்துக்கொண்டு இருக்காமல் கிராமத்துக்கு என்னால் ஆன உபகாரம் செய்யலாம்னா, இப்படி பெயர் கெடறதாக இருந்தால், நான் என்ன செய்ய?” என்று மாஸ்டர் காரோபாருக்கு பதில் சொல்கிறான். “நீ விஷயத்தைச் சொல்லியிருந்தா நான் அனாவசியமா அஞ்சியை அடிச்சிருக்க மாட்டேன். பாவம் அது அடிபட்டுது நல்லா” என்கிறான் காரோபார்.

மறுபடியும் மாஸ்டர்ஜிக்கு மதிப்பு உயர்கிறது. “ஒரு உடற்பயிற்சிக் கூடம் ஆரம்பிக்கலாம். மகாராஜாவை அழைத்து வந்து காண்பிக்கலாம். அவரை வைத்து திறப்பு விழா நடத்தலாம்” என்று மாஸ்டர்ஜி சொல்ல எல்லோருக்கும் மகாராஜா பேர் சொன்னதும் உற்சாகம் பிறக்கிறது.  கிராமத்து ஜனங்களே கூடி மண் பிசைத்து சுவர் எழுப்பி கூரை வேய்ந்து எல்லாம் நடக்கிறது. இடையில் அயூப் ஏதோ தகராறில் அடிபட்டு காயம் பட்டு காரோபார் தன் வீட்டுல் வைத்துக் காப்பாற்ற எடுத்துச் செல்கிறான்.

அஞ்சு தான் அவனைக் கவனித்துக் கொள்கிறாள். மகாராஜா வரப் போகிறார், வந்துவிட்டார் என்று செய்தி பரவி கிராமம் பூராவுமே ஊர் எல்லைக்கு வருகிறது.  நாகராஜா சிலைகள் குவிக்கப்பட்டிருக்கும் எல்லையிலிருந்து பார்த்தால் தூரத்திலிருந்து மகாராஜாவின் கார், ஒரு 1930 மாடல் கார் முன்னும் பின்னும் தர்பார் ஆட்கள் புடை சூழ, ரப்பர் ஹார்ன் ஒலிக்க மகாராஜா வருகிறார். கிராமத்துக் காரோபார் முன் நின்று அவர்களை வரவேற்கிறார். காரோபாரைப் பார்த்து மகாராஜா. ”பாட்டீல் இல்லையா நீ. எப்படி இருக்கிறாய்? சுகமா?” என்று கேட்கிறார். பாட்டீலுக்கு உச்சி குளிர்ந்து விடுகிறது. ”மகாராஜா என்னை விசாரித்து விட்டார்.வேறு என்ன வேண்டும் எனக்கு” என்று பரவசம் அடைகிறார்.  சுற்றி இருக்கும் ஜனங்களும் மகாராஜாவே,”பாட்டீல்” என்று அழைக்கிறார்” என்று வியந்து போகிறார்கள். மாஸ்டரை மகாராஜா முன்னால் நிறுத்தி, “இவர் தான் மகாராஜா, எங்க பள்ளிக்கூடத்து மாஸ்டர்” என்று அறிமுகப் படுத்துகிறார்கள். “ நீ போஸ்ட் மாஸ்டர் ரிடையர் ஆனவர் மகன் தானே? என்று அவனையும் ஆதரவுடன் விசாரிக்க, மாஸ்டர்ஜிக்கும் சரி, கிராமத்து மக்களுக்கு பெரு மகிழ்ச்சி. பிறகு உடற்பயிற்சிக்கூடம் திறந்து வைக்கப் படுகிறது. சில சிறுவர்கள் மல்பயிற்சி செய்கிறார்கள். பெண்கள் லாவணி ஆடிக் காட்டுகிறார்கள். மகாராஜாவுக்கு.  அயூபுக்கு தன் கிராமத்துக்கு மகாராஜா வந்திருக்கிறார். என்னால் பார்க்க முடியவில்லையே, யாரும்  தன்னை தூக்கிச் சென்று மகாராஜாவைப் பார்க்க உதவ வில்லையே என்று கோபமும் துக்கமுமாக படுத்துப் புலம்புகிறான் எல்லோரிடமும்.

ஊரில் பஞ்சம் நிலவுகிறது. தண்ணீர் இல்லை.  அது என்றுமே வரண்ட நிலமாகத்தான் அடிவானம் வரை கண்ணுக்கெட்டிய தூரம் வரை கட்டாந்தரையாகக் காட்சி தரும் பூமி. ஆடுகளுக்கு மேய புல் இல்லை. கசாப்புக்கடைக்குக் கொடுக்க மனம் இல்லை. கிராமத்து மக்கள் ஒவ்வொரு குடும்பமாக, சட்டி சாமான்கள் ஆடுகள் எல்லாவற்றையும் வண்டியில் போட்டுக்கொண்டு கிராமத்தை விட்டுப் போகிறார்கள்

இடையில் எத்தனையோ சம்பவங்கள். எல்லா கிராமத்திலும் எங்கும் எல்லாக் காலத்திலும் நடப்பவை. திருட்டுத் தனமாக இன்னொருத்தன் பெண்டாட்டியை இழுத்துக்கொண்டு ஓடுகிறவன். அவனை விரட்டிப் பிடிக்கும் கிராமத்தார்கள். வரண்ட அகண்ட பூமியில் வரப்பு மேட்டில் ஓடும் கிராமத்து மக்கள் கூட்டம் கூட்டமாக விரட்டும் காட்சிகள். அரிவாளை எறிந்து ஓடுகிறவனை வெட்டிச் சாய்க்கும், கூட ஓடமுடியாமல் களைத்து விழும் பெண், பிடிபட்டு மறுபடியும் கிராமத்துக்கு இழுத்து வரும் சம்பவங்கள்.

இடையில் ஒரு நாள் காரோபார் மாஸ்டர்ஜியிடம் விடைபெற்றுக்கொள்ள வருகிறார். “உன்னிடம் சொல்லிக்கொண்டு போக வந்தேன்” என்கிறார். “இந்த ஊரை விட்டு எங்கே போகிறது?” என்று மாஸ்டர் கேட்க, “ஊரை விட்டு இல்லை. உலகத்தை விட்டு.நேற்று கனவில் அம்மன் வந்து “ நீ எப்போ வரப் போகிறாய், சீக்கிரம் வா” என்று சொல்லிவிட்டுப் போனாள். நான் போகவேண்டும்” என்கிறார். கனவாவது மண்ணாவது என்று மாஸ்டர் சொல்ல, மறு நாள் மாஸ்டருக்கு செய்தி வருகிறது. ”காரோபார் சாகக் கிடக்கிறார். உன்னைக் கூப்பிடுகிறார்”. என்று. காரோபார் படுத்துக் கிடக்க, காரோபார் தன் பெண் அஞ்ஜியை அவள் விரும்புகிறவனின் கையில் ஒப்படைக்கிறார்.  கிராமத்து ஜனங்களிடம், ”ஆடுகளை இனி காப்பாற்ற முடியாது. பஞ்சம் ஏற்படும்போதெல்லாம், அதன் கழுத்தில் “இதன்  உயிர் காப்பாற்றவும்” என்று எழுதி ஒட்டி விரட்டி விடுங்கள். அப்படித்தான் செய்வோம். கசாப்புக்குக் கொடுக்க மாட்டோம்” என்று அறிவுரை.  மாஸ்டரிடம், “மகாராஜாவைப் பார்த்து விட்டேன். அவரும் என்னைப் பாட்டீல் சௌக்கியமா இருக்கியா? ன்னு என்னை எவ்வளவு கருணையோடு விசாரித்துவிட்டார்! இனி எனக்கு வேறு என்ன வேண்டும். ரொம்ப சந்தோஷமா வாழ்ந்தாச்சு இனி போகவேண்டிய வேளை வந்தாச்சு. அம்மனே அழைத்துவிட்டாள்” என்று சொல்கிறார். அவர் உயிரும் போகிறது.

கிராமம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிறது. மூட்டை முடிச்சுகளுடன் வண்டியில், கால் நடையாக மக்கள் சாரி சாரியாகப்போகும் காட்சி தொடர்கிறது.

இடையில் மாஸ்டர் ”கிராமம் பஞ்சத்தில் வாடுகிறது உதவ் வேண்டும்” என்று எழுதிக் கொடுக்கும் எந்த மனுவுக்கும் ஏதும் பதில் வருவதில்லை. இப்படி முன்னால் எத்தனை மனு கிராமத்து மக்களுக்காக எழுதி எவ்வளவு உதவியிருக்கிறான். இப்போது எதுவுமே நடப்பதில்லை.

இந்த ஊரில் பிறந்தவன். இங்கே வாழ்ந்தவன் இங்கேயே தான் சாகப் போகிறேன் என்று மரத்தடியில் உட்கார்ந்து தன்  மரணத்திற்காகக் காத்திருக்கும் ஒரு கிராமத்து வயோதிகர்.

சுற்றிலும் வரட்சி. காலியாகிக் கிடக்கும் கிராமம். புழுதிக் காற்றிடையே வெற்று வெளியை அடிவானம் வரை வெறித்துக் கிடக்கும் நிலத்தை பார்த்த படியே மாஸ்டர்……

bangarwadi_book
வ்யங்கடேஷ் மல்கோவ்ன்கரின் நாவல்

இப்படி நான் பிரமித்துப் பார்த்த படத்தின் காட்சி விவரத்தை, 1940 வரண்ட பூமியின் வாழ்க்கையை, கிராமத்து வாழ்க்கையை அந்த மக்களைக் காட்சிப் படுத்தியதை விவரித்துச் சொல்கிறபோது, இது இதில் என்ன இருக்கிறது என்று படிப்பவர்களுக்குத் தோன்றலாம். படம் பார்த்த  நான் 80 வருடங்கள்முந்தைய ஒரு கிராமத்து வாழ்க்கையை அதன் வரட்சியை பார்த்த அனுபவம் வேறு நினைப்பில்லாமல் அதிலேயே ஆழ்ந்திருக்கச் செய்தது.  வ்யங்கடேஷ் மல்கோவ்ன்கரின் நாவல் படிக்க எப்படி இருக்குமோ தெரியாது.

ஓர் அரிய அனுபவத்தை காட்சி பூர்வமாக பதிவு செய்த சாதனை அமோல் பாலேகரது சாதனை தான். தான் நடித்த எல்லா படங்களிலும் ஒரு அசட்டு பிள்ளையாக, காதல் செய்யும் அடுத்த வீட்டு சாதாரண இளைஞனாக, காட்சி தந்த அமோல் பலேகருக்குள்ளிருந்து  எத்தகைய ஒரு  கலைஞன் வெளிப்பட்டிருக்கிறான்! சந்தோஷமாக இருக்கிறது. தன்னால் முடிந்த வரை முப்பது நாற்பதுகளின் பங்கர் வாடி கிராமத்தை, அதன் மக்களை அவர்கள் வாழ்க்கையை வ்யங்கடேஷ் மல்கோவ்ன்கர் உருவாக்கித் தந்ததை, காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கிருக்க அதை உண்மையுடன் நேர்மையுடன் செயல்படுத்தியதே அமோல் பாலேகரின் பங்கர் வாடி.

இதில் என்ன இருக்கிறது என்று நம்மவர் நினைக்கக் கூடும். கூடும் என்ன? அப்படித்தான் நினைப்பார்கள். இது தான் எத்தனை சர்வதேச திரைப் பட விழாக்களில் எத்தனை பரிசுகளும் அங்கீகாரமும் பெற்றிருக்கிறது! எளிமையும்  வாழ்க்கை உண்மையும் தான் கலையாகும். பொய்மையும் அலங்காரங்களும் அல்ல.

0 Replies to “அமோல் பாலேகரின் பங்கர் வாடி”

  1. பகிர்ந்து கொண்டமைக்கு உங்களுக்கும் சொல்வனம் நண்பர்களுக்கும் நன்றி. சுமார் 20 வருடங்களுக்கு முன் இந்த “பங்கர்வாடி” நாவலைப் படித்திருக்கின்றேன்.ஒரு நல்ல நாவலைப் படித்த கிறக்கத்தில் அதன் பாத்திரங்கள் பல காலங்கள் என் மனப்பதிவுகளில் வாழ்ந்திருந்தார்கள். மிக அற்புதமான நாவல் அது.அக்கதை திரைப்படமாக உருவாகியுள்ளது என்பது இப்போது உங்கள் விமர்சனத்தில் இருந்து அறிகின்றேன்.நன்றாக எடுக்கப்பட்டுள்ளதாக நீங்கள் சொல்வதில், மனம் ஆறுதல் அடைகின்றது. பங்கர்வாடி நாவல், நாம் தலையில் வைத்துக் கொண்டாடவேண்டிய நாவல் என்று என் வாசிப்பில் இருந்து சொல்கின்றேன். -நடராசா சுசீந்திரன்,ஜெர்மனி

  2. பங்கர்வாடி நாவல் படித்த ஒருவர் கிடைத்துள்ளது சந்தோஷமாக இருக்கிறது. 20 வருடங்களுக்கு முன் படித்ததாகச் சொல்கிறீர்கள். அப்போது இது தமிழில் அல்லது ஆங்கிலத்தில் கிடைத்ததா என்ன? ஆச்சரியம் தான்.எந்த மொழிய்ல் படித்தீர்கள்?
    இரண்டாவது, உங்களை 2000 ஆண்டு சென்னையில் காலச்சுவடு நடத்திய தமிழ் இனி 2000 என்றோ என்னவோ கருத்தரங்கிற்கு வந்திருந்தீர்களா?அப்போது சேரன், கண்ணன் போன்றோடு, நீங்களும் ஜெர்மனியில் வந்துள்ளதாக எனக்குச் சொல்லப்பட்டு நாம் அறிமுகமானோம் என்று எனக்கு நினைவு.Of I might have been one among the hundreds you might have met for the first time that day. and you may not remember that. 1951-ல் ஒரிஸ்ஸாவுக்கு நீங்கள் தேர்தல் பிரச்சரத்துக்கு வந்தபொது சம்பல்பூர் பொதுக்கூட்டத்தில் உங்கள் காருக்கு அருகில் நான் நின்றிருந்தேனே, நினைவு இருக்கிறதா என்று நேருவைக் கேட்டால் அவர் என்ன சொல்வார் பாவம்.

  3. வெங்கடேஷ் மாட்கூல்கரின் பங்கர்வாடி நாவல் வாசித்துள்ளேன்.அந்த கிராமமும்,அதன் மக்களும் அத்தனை எளிதில் மனத்தை விட்டு அகலாதவர்கள்.அந்நாவல் திரைப்படமாக வந்திருப்பது புது செய்தி.அப்பாவின் அலமாரியில் கொட்டிக் கிடக்கும் பொக்கிஷங்களில் ஒன்று இந்த நாவல்.என்னிடம் உள்ள பதிப்பின் விவரம் கீழே
    வெளியீடு – நேசனல் புக் டிரஸ்ட்;மொழி பெயர்ப்பு – உமா சந்திரன்;
    முதல் பதிப்பு (1977)
    அருமையான கட்டுரை.மிக்க நன்றி.தேடிப் பார்க்கத் தூண்டும் திரைப் பார்வை!

  4. உங்கள் வரிகள் மூலம், வாசிப்பவரும் உங்கள் அருகே அமர்ந்து படம் பார்த்த உணர்வு .
    வரிகள் மூலம் காட்சிகள் என் கண் முன்னால் விரிந்தது. இது போதும்.
    இனி படத்தைப் பார்த்தல் ஒன்ற முடியாது .

  5. யூடியூபில் இத்திரைப் படம் காணக் கிடைக்கிறது. அருமையான திரைப்படம். மனிதர்கள் மற்றும் கதைக் களத்தின் நிலப்பரப்பு மனதை வசீகரிக்கிறது.

  6. அன்புநிறை வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு,
    நான் மிகவும் மதிக்கின்ற பெரியவர் நீங்கள், நீங்கள் என் நோக்கி எழுதியிருந்ததை இன்று தான் தற்செயலாகக் கண்ணுற்றேன். உடல் நலத்துடன் நீங்கள் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்வருடம் நான் சென்னை வந்தபோது உங்கள் வந்து பார்க்க ஆசை இருந்தும் அவகாசம் இருக்கவில்லை. மன்னிக்கவும். ஆம் நான் “பங்கர் வாடி” நாவலை முதலில் தமிழ் மொழியில் தான் வாசித்தேன். அது சாஹித்திய அக்கட்மி மொழிபெயர்ப்பு என்று நினைக்கின்றேன். இந் நாவல் ஜெர்மன் மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆர்வக் கோளாறில் அம் மொழிபெயர்ப்பினையும் வாங்கி வைத்துள்ளேன். 2000 ஆண்டு உங்களை முதன் முதலில் சந்தித்தபோது புகலிட வாழ்வின் அவலமான பக்கத்தினை நீங்கள் முன்னுணர்ந்து என்னுடன் பேசியதை நான் எப்படி மறக்கமுடியும். tragedy என்கிற ஆங்கிலச் சொல்லைக் காணும் போதெல்லாம் உங்களை நினைத்துக் கொள்கின்றேன். உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள். மிக்க அன்புடன் ந.சுசீந்திரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.