அணிகலன் அணிவகுப்பு

பள்ளியில் படித்த எண்பதுகளில் காதலைத் துவக்குவது எளிதாக இருந்தது. எதிரில் வரும் மாணவியிடம் சென்று, “டைம் என்ன?” என்று வினவுவது கால்கோள். ரவி நடராஜன் போல் நேரம் சரியாக (http://solvanam.com/?series=time_measurement_clocks_estimates) சொன்னால், காதல் தேறாது என்றும், “ச்சீ… போ” என்றால் தனுஷ் போல் ‘பார்க்கப் பார்க்க பிடித்துப் போகலாம்’ என்னும் பிடிப்பும் தோன்றிய காலம்.

இன்றைய யுவதிகள் மணிக்கட்டில் கடியாரம் கட்டுவதில்லை. கைப்பையில் இருந்து பத்து இன்ச் அகலத்திற்குப் பெரிய பெட்டியைத் திறந்து நேரம் அறிந்து கொள்கிறார்கள். ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் இராஜேஷ்குமார் கதைகளிலும் மட்டுமே உலவிக் கொண்டிருந்த கையளவு நுட்பங்கள் இன்று சாமனியரின் கைகளிலும் புழங்குகிறது.

சென்ற அக்டோபரில் சாம்சங் தன்னுடைய கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்தது. புதியதாக மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று பன்னிரெண்டு வினாடிக்கொருமுறை செல்பேசியை திறந்து பார்க்க வேண்டாம். எவராவது ஃபேஸ்புக்கில் என்னுடைய பதிவை விரும்பியிருக்க்கிறாரா என சென்று போய் பார்த்து ஏமாற வேண்டாம். நிலைத்தகவல், தட்பவெட்பம், போக்குவரத்து, என எல்லாமே ஸ்டாம்ப் அளவு திரையில் அறிந்து கொள்ள முடிந்தது. கேலக்ஸி கியர் என்ற நாமத்தில் வெளியான சாதனம் முன்னூறு டாலருக்கு விற்கப்படுகிறது.

Samsung_Galaxy_Gear_Watch_Note_Tablet_Wearable

இந்த கடிகாரத்திற்கென பிரத்தியேகமான சாம்சங் உபகரணங்கள் இருக்கும். அவற்றை மட்டும்தான் பயன்படுத்தலாம் என்பது முதல் எரிச்சல். சரியான நேரத்தை காதலி சொல்லமாட்டாள் என்பது போல் வராத மின்னஞ்சலைப் பார்ப்பதற்காகத்தான் செல்பேசி என்பதை அறியாத சாம்சங் நுட்பம் இரண்டாம் எரிச்சல். என்னுடைய ஐஃபோன் போன்ற பெரும்பாலான சாதனங்கள் இதனுடன் இணைந்து ஒத்துழைக்காது என்பதும் மின்னஞ்சலை எவர் அனுப்பித்தார் என்று முன்னோட்டம் கூட காண்பிக்காத நுட்பமும் ’தூக்கி ஓரத்தில் கடாசு’ என்று சொல்ல வைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, கடிகாரம் எனப்படுவது நிற்காமல் ஓடிக் கொண்டேயிருப்பது என்னும் சாஸ்திரத்தைப் புறந்தள்ளி, பத்து மணி நேரத்திற்குள்ளாகவே அதனுடைய பெரிய முள்ளும் சிறிய முள்ளும் உறங்கச் சென்றுவிடுகின்றன.

சாம்சங் கடிகாரத்தை ஒப்பிட்டால் கூகுள் கண்ணாடி எவ்வளவோ தேவலாம்.

கூகுள் கண்ணாடி எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஏன் உங்களுக்கு கண்ணாடி வேண்டும் என்று பெரிய காதல் கடிதத்தை கூகிளுக்கு எழுத வேண்டும். அதைப் பொதுவில் டிவிட்டர், ஃபோர்ஸ்கொயர் என எல்லா சந்து பொந்துகளிலும் விளம்பரிக்க வேண்டும். அதன் பிறகு ஃபேஸ்புக்கில் உங்களைப் பின்தொடர்வோர் எக்கச்சக்கமாக இருக்க வேண்டும். கூடவே நாள், நட்சத்திரம், முகூர்த்தம் எல்லாம் கூடினால், ஆயிரத்தி ஐநூறு அமெரிக்க டாலர்களையும் அதற்கான சுங்க வரியையும் செலுத்தினால் உங்களுக்கு கூகிள் கண்ணாடி வாய்க்கப் பெறலாம்.

இப்படி கெடுபிடி செய்தே தன்னுடைய பொருள்களை சந்தைப் படுத்துவது கூகுளின் தந்திரம். அதனால், இந்த வருடத்தை அணிகல்ன்களின் ஆண்டாகக் கருதுகிறார்கள். சமீபத்தில் நடந்த “நுகர்வோர்களுக்கான மின்சாதன மாநாடு” (Consumer Electronics Show) சூடும் நுட்பங்களைக் (wearable tech) கொண்டாடியிருக்கிறது.

காலில் போட்டிருக்கும் கொலுசு நம்முடைய பாதம் எவ்வளவு தூரம் ஓடியிருக்கிறது, எத்தனை தப்படி வைத்திருக்கிறது, என்றெல்லாம் கணக்கு போட்டு உடல்நலத்தைப் பேண உதவும். இடுப்பில் போட்டிருக்கும் ஒட்டியாணம், உங்களுக்குப் பின்னால் எவர் வருகிறார் என்பதைப் புகைப்படம் எடுத்து, உங்கள் கண் முன்னே காட்சியாக்கும். தலையில் அணியும் சூடாமணி உங்களுக்கு விருப்பமான இசையை, காதுகளின் இடையூறின்றி, நேரடியாக கேட்கவைக்கும். நெற்றிச்சுட்டியில் ஒலியடித்தால் செல்பேசியில் யாரோ அழைக்கிறார் என அர்த்தம். கழுத்தை ஒட்டி வரும் ஆரம் உங்களுக்குத் தேவையான புகைப்படங்களையும் விழியங்களையும் சேமிக்கும். கை மோதிரம் கொண்டு அவற்றை நீக்கலாம்… மாற்றலாம்… பகிரலாம்.

இப்படி ஒரு தங்க மாளிகைக்கான காலம் எப்படி சாத்தியம் என்பதை லாஸ் வேகாஸில் சொல்லியிருக்கிறார்கள்.

ஒழுங்காகப் பல் தேய்க்கிறோமா, எத்தனை நிமிஷம் தேய்த்தோம், எவ்வளவு தடவை தேய்த்தோம் என்னும் அனைத்து தகவல்களையும் உங்கள் பல்துலக்கியே பல் வைத்தியருக்கு தகவல் அனுப்பிவிடும். மாத்திரையை தினசரிப் போட்டுக் கொள்கிறீர்களா என்பதை மாத்திரை டப்பாவில் இருக்கும் ஒளிப்படக் கருவியே விழியமாகப் போட்டுக் கொடுக்கும்.

இதெல்லாம் வேவு பார்ப்பதற்காகவே அணிகலன் மென்கலன் கண்டுபிடிக்கப்பட்டது போல் தோன்ற வைக்கலாம். ஆனால், கூகுள் கண்ணாடி அணிந்து கார் ஓட்டும் போது எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை உங்கள் காரின் முகப்புக் கண்ணாடியிலேயே கூகிள் தோன்ற வைக்கிறது. கவனமும் சிதறாது. கையைக் கொண்டு அங்கும் இங்கும் நகர்த்தி நிலப்படத்தையும் பயணத்திற்கான வழிகாட்டியையும் உபயோகிக்கும் சிரமம் இல்லவே இல்லை.

அதே போல், சமைக்கும் போது கூகுள் கண்ணாடி அணிந்தால், “அடுத்து தாளிச்சுக் கொட்டணும்… கடுகு இன்னும் கொஞ்சம் போடலாம்!” என்றெல்லாம் உடனடியாக அவதானிக்கவும் செய்கிறது. சமைத்துப் பார் புத்தகத்தின் கிழிந்த பக்கத்தை நுணுக்கி நுணுக்கிப் படிக்க வேண்டாம். உப்பின் அளவும் உளுந்தின் கணக்கு வழக்குகளையும் கூகுள் நிரலியே அளந்து சரி பார்க்கும். கண்ணெதிரே செய்முறை தோன்றி, கீழே நடக்கும் காரியங்களுக்கேற்ப சமையலை சுளுவாக்கி சுவையையும் சரியாக்குகிறது.

தட்ப வெட்பத்திற்கேற்ப மாறும் ஆடையையும் போட்டுக் கொள்ளலாம். காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் போது மார்கழி மாத குளிர். அடக்கமான கோட் போல் தடித்துக் கொண்டிருக்கும். அதுவே மதியம் சாப்பிட செல்லும்போது வெயில் கொளுத்துகிறது… ஆடை உடனே பருத்தியாக இதமாக இருக்கும். சாயங்காலம் திடீரென்று மழை… ஆடை உடனே தண்ணீர் புகா சட்டையாக மாறும். இந்த நுட்பம் இன்றே அணிவதற்கு கிடைக்கிறது.

என்னுடைய மகள் பிறந்த சமயத்தில் இரவெல்லாம் எனக்கு சரியாகவே உறக்கம் வராது. அவள் நன்றாக குறட்டை விடாமலே உறங்குவாள். நானோ ஒரு மணி நேரத்திற்கொருமுறை அருகே சென்று நாடி பிடித்து, அது கிடைக்காமல், நெஞ்சில் காது வைத்து, அதுவும் கேட்காமல், கிள்ளி எழுப்பி அழ வைத்து நிம்மதி கொள்வேன். இப்பொழுதோ இண்டெல் நிறுவனம், குழந்தைக்கு பீதாம்பரத்தை மாட்டிவிடுகிறார்கள்.

baby_Intel_Edison_Android_Wearble_ces_2014-rest_devices_mimo-Kid_alerts

உங்கள் குழந்தைக்கு ஏதாவது பிரச்சினை என்றாலோ, அல்லது மூத்திர துணியை மாற்ற வேண்டும் என்றாலோ, உங்களுக்கு அழைப்பு மணி வந்து விடும். அதோடு நில்லாமல், அடுப்பை மூட்டி, பாலை வெதுவெதுப்பாக்கி தயாரும் செய்து வைத்துவிடும். மகள் அழ ஆரம்பித்த பிறகு பால் கலக்க செல்ல வேண்டாம். பசித்த மகவிற்கு, தானியங்கியாக புத்தம் புது பால் உடனடியாகக் கிடைக்க வைக்கிறார்கள்.

இதைப் போல் புத்தம் புதியதாக, அதே சமயம் பயனுள்ளதாகவும் உருவாக்கும் நிரலிகளுக்கு ஒன்றேகால் மில்லியன் டாலர்களுக்கு பரிசுகளை இண்டெல் நிறுவனம் வழங்குகிறது.

ஆனால், இந்த மாதிரி வித்தியாசமான கண்டுபிடிப்புகள் அறமாக இயங்குமா? அதை இயக்குபவர்கள் நெறிப்படி நடந்து நியாயமாக பயன்படுத்துவார்களா?

உதாரணத்திற்கு, கூகுள் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு கண்ணடித்தால் போதும்… எதிரில் போவோர் வருவோரின் புகைப்படம் எடுக்கப்பட்டுவிடும். தங்களின் விருப்பமில்லாமல் புகைப்படம் எடுப்பதும், உங்களுக்குத் தெரியாமல் பேச்சைப் பதிவைதும் வெகு சுலபமாக செய்யலாம். அதை அணிந்திருப்பவரே தீர்மானிக்கிறார்.

அடுத்ததாக இந்த அணிகலன்களில் வரும் விளம்பரங்களை எவ்வாறு புறக்கணிக்கப் போகிறோம்? தொலைக்காட்சியில் விளம்பரம் வந்தால் கைபேசியில் நோண்டுகிறோம்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து விளம்பரங்களை விலக்குகிறோம். கைபேசியின் உலாவியில் விளம்பரம் வந்தால், அப்படியே அதை x போட்டு நொடியில் மூடுகிறோம். ஆனால், கட்டிக் கொண்டிருக்கும் அணிகலனைக் கொண்டு உங்களின் சரித்திரம் முழுக்க விளம்பரதாரர்கள் அறிய முடிகிறது. நம்முடைய அணிகலனின் மென்கலன்கள், என்னுடைய வங்கி எது, எவ்வளவு பணம் வைத்திருக்கிறோம் போன்ற விஷயங்கள் முதல் ஃபேஸ்புக் வரை எல்லாமே தெரிந்து வைத்திருக்கிறது. இதை வைத்து குறைந்த பட்ச விளம்பரத் தாக்குதலில் ஆரம்பித்து அதிகபட்ச மிரட்டல் வரை எல்லாமே சாத்தியம்.

முந்தாநேற்று திருட்டுப் படம் பார்க்க டெக்சதீஷ்.காம் மாதிரி ஏதோ எசகுபிசகான வலையகம் செல்ல, அந்த வலையகமோ, ஓசிப் படத்துடன் கூடவே நச்சுக்கிருமியையும் என்னுடைய மடிக்கணினிக்கு உள்ளே நுழைத்து விட்டது. எப்பொழுது மடிக்கணினியைத் திறந்தாலும், ஒலிபெருக்கியில் ஏதோ விளம்பரம் அலறிக் கொண்டிருந்தது. அந்த மாதிரி உங்களின் கம்மலும் மூக்குத்தியும் கொந்தர்களிடம் பறி போகும் அபாயமும் இந்த அணிகலன் மென்கலன் உலகத்தின் மிகப் பெரிய பிரச்சினை.

அதை விடுங்கள்.

அலுவலில் ஏந்திழைப் பெண்களை எதிர்பார்த்த காலம் போய், ஏந்திழை அணிந்துதான் வேலையே பார்க்க வேண்டும் என்னும் காலம் கூடிய சீக்கிரமே வரலாம். அந்த ஏந்திழையோ, ஐந்தாம்படை வேலையாக, எப்பொழுது அசல் அலுவல் பார்க்கிறீர்கள், எவ்வளவு நேரம் ஊர் மேய்கிறீர்கள் என மேலாளருக்குப் போட்டுக் கொடுக்கும் காலம் வெகு விரைவில் வந்து விடும்.

தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்னும் முதுமொழியை ஒத்து உங்களின் உள்ளாடையைக் கூட உங்கள் உணர்விற்கேற்ப ஆட்டுவிக்கலாம்; வாருங்கள் என்கிறது அணிகலன் காலம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.