ஃபார்மால்டஹைடில் குறியீடுகள் – வரலாற்றையும் புனைவையும் கலத்தலின் சாதக பாதகங்கள்

(Dissertation Reviews என்ற தளத்தில் முக்கியமான முன்னெடுப்புகளாகக் கருதப்படும் பல்கலைக்கழக துறைசார் ஆய்வுகளின் சுருக்கப்பட்ட வடிவை இடுகையிடுகிறார்கள். இங்கு எஜர் வெர்பா தன் ஆய்வறிக்கை குறித்த அறிமுகப்பதிவு ஒன்று செய்திருந்தார். வரலாற்றோடு புனைவை இணைத்தெழுதுவதில் ஒரு மெய்ம்மை உண்டு என்று வாதிடும் இக்கட்டுரைக்கு ஒரு சிறுகதைக்குரிய வசீகரம் உள்ளது. எனவே, இந்தக் கட்டுரையின் சற்றே தளர்வான தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.)

இது எப்படி நடந்தது என்பது எனக்குத் தீர்மானமாக நினைவில்லை – நான் இவ்வாண்டு மே மாதம் நிறைவு செய்த என் வரலாற்றுத் துறையாய்வின் பெரும்பகுதி ஒரு புனைவு.  

சிறைச்சாலைகளின் தோற்றம் குறித்த ஃபூகோவின் ஆக்கங்களை இளநிலை பட்ட வகுப்புகளில் நான் வாசித்தது என் நினைவில் இருக்கிறது. நான் அதை எதன் மீதோ அல்லது எவர் மீதோ பிரயோகிக்க விரும்பியதும் என் நினைவில் இருக்கிறது. அதன்பின் முதுநிலை வகுப்புகள் துவங்கியபோது பனாமாவில் ஒரு சிட்சாஸ்ரமம் (penal colony) இருப்பதைக் கண்டறிந்தேன். ஹ்ம்ம், பனாமாவில் ஃபூகோ, என்று சப்பு கொட்டியதும் நினைவிருக்கிறது – அந்தச் சொற்களுக்குதான் என்ன ஒரு தனிச்சுவை!

ஆய்வு செய்ய ஆரம்பித்ததும்தான் உணர்ந்தேன், பேனமாவின் சிட்சை அமைப்பு அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் செயல்படுவதாக அங்கு நம்பப்பட்டது. அங்கும் பல கமிட்டிகளும் திறனாளர்களும் நுட்பமாக அவதானித்து ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தனர். அவை சிறைச்சாலையின் செயல்பாட்டை இன்னும் கச்சிதமாகச் செம்மைப்படுத்தின.

இதைக் கண்டறிய எனக்கு ஃபூகோவே போதுமானதாக இருந்திருக்க முடியும் – பேனமா விஷயத்தில் அறிவும் விமரிசனமும் அதிகாரத்க் கட்டுப்படுத்துவதாக இல்லை. மாறாக, அவை அதிகாரத்தை இன்னமும் உறுதிப்படுத்தின. அவையிரண்டும் இணைந்து அங்கே அறிவு/அதிகாரம் என்ற அணிக்கோவை (matrix) ஒன்று தோற்றம் கண்டது. இந்த விஷயத்தில் எனக்கு ஒரு விஷயம்தான் உதறலாக இருந்தது.

ஃபூகோ விவாதித்தது உண்மையாக இருந்தால், சிட்சாஸ்ரமம் குறித்த அறிவு அதன் அதிகாரத்துக்கு எப்போதும் வலுகூட்டும் என்று ஃபூகோ முன்வைத்த விமரிசனம் உண்மையாக இருந்தால்… ஃபூகோவின் இந்த விமரிசனத்தின் கதி என்ன? அவ்வப்போது அளிக்கப்படும் ஆய்வறிக்கைகள், குற்றவியல் ஆய்வுகள் மற்றும் பிற பிரதிகளைக் கொண்ட தொகுப்பில் சிறைச்சாலைகளை விமரிசித்த ஃபூகோவும் அடக்கம் என்றல்லவா முடிவாகும்? ஃபூகோவே சொன்னபடி இது அத்தனையும் சிட்சாஸ்ரமங்களின் அதிகாரத்தை இன்னும் நிரந்தரமாக நிறுவுவதாக அல்லவா இருக்கும்?

இந்த வட்டத்திலிருந்து வெளியேறும் வழியைத் தேடத் துவங்கினேன்; என் எழுத்து சிறைச்சாலை அமைப்புக்கு நேரடியாக உதவுவதாக இல்லாத ஒரு வழியைக் கண்டடைய வேண்டும் என்று எண்ணினேன். சிறைகளின் நடைமுறைச் செயல்பாடுகளை நிர்வகிக்கும் அறிவுத்துறை மேலும் நுட்பமான ஆயுதங்களைப் பெற என் எழுத்து பயன்படக்கூடாது. இது எவ்வாறு சாத்தியமாகும் என்ற கேள்விக்கு நான் கண்ட விடை பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியிருக்கக் கூடும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உண்மையில், – நிற்க. சரி, மன்னித்துக் கொள்ளுங்கள்.

இங்கே ஒரு கிளைக்கதை சொல்ல வேண்டும். நான் ஏன் இப்படி எழுத வேண்டுமென்று தேர்வு செய்தேன் என்பதற்கான உண்மையான காரணத்தைச் சொன்னால் வித்தியாசமாக இருக்கும். ஆனால் அதையும் நான் சொல்லியாக வேண்டுமே!

பனாமா நகரில் ஒரு அடுக்ககத்தில் இருந்த ஒரு வீட்டின் உபவாடகையாளனாக இரண்டு மாதங்கள் வசித்துவந்த நிலையில் ஒரு நாள் அதன் மித்ததின்கீழ் (sink) யாரோ ஒருவர் பெரிய ஜாடியொன்றை விட்டுச் சென்றிருப்பதைக் கண்டேன். அது ஒரு சிறு கந்தல் துணியால் போர்த்தப்பட்டிருந்தது, ஆனால் அதன் அடிப்பாகம் கண்ணுக்குத் தென்பட்டது. அதை ஒரு வார காலம் தினமும் கவனித்து வந்தபின் ஒரு நாள் ஆனது ஆகட்டும் என்று அதைக் கட்டவிழ்த்தேன்.

மூடப்பட்டிருந்த ஜாடியைக் கடந்து ஃபார்மால்டிஹைடின் மென்கந்தம் என் நாசியைக் கடுமெனத் தாக்கிற்று. அதுவும் நான் கண்ட காட்சியும்: டாரண்டுலா இனத்தைச் சேர்ந்த சிலந்திக் குஞ்சு, ஆலிவ் கருமை, தான் எப்போதும் காண்பதற்கில்லாத ஒரு அண்டத்தில் மிதந்து கொண்டிருந்தது. அந்த ஜாடியை அவசர அவசரமாகப் போர்த்து வைத்தேன். 

இரண்டு வாரங்களில் அந்த ஊரை விட்டு வெளியேறியபின்னும் அந்த நாற்றம் என்னோடிருந்தது. நான் காணுமிடமெல்லாம் களைத்த எட்டு கண்களைக் கண்டேன். எல்லா தேய்வழக்குகளைப் போல்தான் இந்தச் சிலந்தி என்பதைப் புரிந்து கொண்டேன் – விட்டால் போதும் என்ற ஆயாசம் நிறைந்த, களைத்த, உணர்ச்சியற்ற வரலாற்றுக் குறியீடு அது.

இரண்டாண்டுகளுக்குப் பின் என் ஆய்வுக் கட்டுரையை விரித்துச் செல்லும்போது, அதிகாரம் சார்ந்த எந்த ஒரு உறவும் ஏன் நீடிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கலாயினேன். அதிகாரத் தளங்களுக்கு உறுதிப்பாடு அளிக்கும் குறியீடுகள், தேய்வழக்குகள், பொருள்கோள் விளக்கமுறைமைகள் (interpretative schemes) என்று அனைத்தையும் பிரித்துப் பார்க்காமல் அதிகார உறவுகளின் புரிதல் சாத்தியப்படாது என்ற முடிவையடைந்தேன். இந்தக் கேள்வி மானுடவியல் துறைகள் (humanities) அனைத்தும் மொழிவழி ஆய்வின் திசைக்குத் திரும்பிய நாள் முதல் செலவொழியாது தயங்கி நிற்கும் பெருங்கேள்விகள் பலவுக்கும் தொடர்புடைத்து என்றும் உணர்ந்தேன்.

அதுவரை, அதாவது 1960கள் வரை, நீங்கள் எந்த ஒரு சரித்திர நூலைப் பிரித்து வாசித்தாலும் அதில் எல்லாமறிந்த ஒரு கதைசொல்லியைச் சந்திக்கும் வாய்ப்புகளே அதிகம் – அவர் மாபெரும் ஆளுமைகளைப் பற்றி கதை சொல்லுவார். இந்த ‘வரலாற்றில் விட்டுப்போயிருந்த’ ஏனைய பாத்திரங்களையும் கருப்பொருட்களையும் அதற்குப் பிற்பட்ட காலகட்டத்தின் வரலாற்றாய்வாளர்கள் கவனிக்கத் துவங்கினர். ஆனால் அதே சமயம் இந்த இருவேறு அணுகல்கள் உணர்த்தும் முரணுரை (paradox) குறித்த கவனமே இல்லாமல் இதே வரலாற்றாய்வாளர்கள் வரலாற்றை அறிவியல் சார்ந்த, புறவய ஆய்வுகளைக் கொண்டு முடிவு காணப்படக்கூடிய விவாதங்களின் தொகுப்பாகவும் கண்டனர். வரலாறு மனிதனின் கடந்த காலம் குறித்த ஒரு மொழிபு (narrative) என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

அதன்பின் 1980களில் எப்போதோ மானுடவியல்துறை, மொழியாய்வின் திசைக்குத் திரும்புதலின் உறுப்பாக, வரலாற்றாய்வாளர்ககளில் ஒரு பகுப்பினர் வரலாற்று மொழிபில் சோதனைகளை நிகழ்த்தத் துவங்கினர் – ஆனால் இப்போது அகவயப்பாடு (subjectivity), கருத்துரிமை (voice), வரலாற்று முகவாண்மை (historical agency), மொழிபமைப்பு (narrative structure) குறித்த புதிய கேள்விகள் எழுந்தன. 

Wall_Frame_Look_Women_She_Lady_Graffiti

புதிதாய் வரலாற்று மொழிபு எழுத முயற்சித்தவர்களில் பலர் அப்படி ஒன்றும் பிரமாதமான புரட்சியாளர்களல்ல. அவர்கள் வரலாறு அறிவியல்துறையல்ல என்று மட்டும்தான் நினைத்தனர். கல்வியறிவுத்துறையின் (academic) ஆக்கங்கள் பழைய வசீகரத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற விருப்பம் இவர்களுக்கு இருந்தது. தங்கள் ஆய்வுகள் இன்னும் பரவலான வாசக வட்டத்தை அடைய வேண்டும் என்றும் இவர்கள் நினைத்திருக்கலாம்.

இப்படி நினைத்தவர்களின் மிக வெற்றிபெற்றவற்றுள் ஒன்று, மிகப் பெரும் சோதனை முயற்சி என்று சைமன் ஷாமாவின் “Dead Certainties” என்ற நூலைச் சொல்லாம். ஒரு சில வரலாற்றுச் சூழல்களைக் கற்பனை கலந்து மீட்டுருவாக்கம் செய்த படைப்பு இது. ஷாமா தன் ஆக்கத்தை ஆவணக் காப்பக ஆய்வுகளின் அடிப்படையில்தான் உருவாக்கினார் என்றாலும், அதில் வரலாற்று முறைமைக் கருவிகளைப் பயன்படுத்தும் துணிச்சல் அவருக்கு இருக்கவில்லை. என்றபோதிலும் தன் நூல் வரலாறல்ல, ஒரு புனைவாக்கம் என்று அவர் விளக்கியும்கூட அது மிகப்பெரும் சர்ச்சைக்குள்ளானது.

ஆக, சில வகைகளில் பார்க்கும்போது அதிகாரம்/அறிவு பிரச்சினைக்கு நான் கண்டுள்ள கிறுக்குத்தனமான தீர்வு மிகப் புதிய ஆச்சரியமாக இருக்க முடியாது. ஆனால் முறைமை சார்ந்த சிக்கல்களுக்கு விடை தேடுவதில் பிற வரலாற்று மொழிபுகளைக் காட்டிலும் என் ஆய்வு தொலைதூரம் முன் செல்கிறது. 

என் ஆய்வுக் கட்டுரையின் வாசகர் புனையப்பட்ட ஒரு கதைக்கருவை எதிர்கொள்கிறார்: 1980களில் கொய்பா தீவிலுள்ள சிட்சாஸ்ரமத்தில் உள்ள கைதிகள் நால்வருக்கு தாம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறையின் வரலாற்றை எழுதும்படி உத்தரவிடப்படுகிறது. கோட்பாடுகளும் முறைமை சார்ந்த பேதங்களும் ஆய்வறிக்கையின் துவக்க அத்தியாயங்களை நிறைவு செய்யவிடாமல் சிறைக் கைதிகளை முடக்குகின்றன – இவர்களில் சிலர் அரசியல் கைதிகள்.

தோல்வியின் பின்விளைவுகளுக்கு அஞ்சி இந்த நால்வரும் ஒரு எந்திரத்தை உருவாக்குகின்றனர்- பாணன் (The Singer) என்பது அதன் பெயர். ஆவணக்காப்பகத்தில் உள்ள பிரதிகளைத் தங்களுக்கு பதில் அது உள்வாங்கிக் கொண்டு, அறிவியல்பூர்வமான, புறயவப்பட்ட வரலாறு ஒன்றை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். புனைபாத்திரங்களின் விவாதங்களில் சிட்சாஸ்ராமத்தின் துவக்க ஆண்டுகள் (1919 – 1940) குறித்த ஒரு சித்திரம் உருவாகத் துவங்குகிறது. இந்த விவாதங்கள் முடிவுக்கு வருவதே இல்லை என்பதால் பிரதி தன் வழுமையையும் (ambiguity) சிடுக்கையும் (problematic) இழப்பதில்லை. இறந்த காலத்தை நேரடியாகப் பேசும் அடுக்குகளும் என் ஆய்வறிக்கையில் உண்டு- ஆனால் அவை எப்போதும் ஒரு பாத்திரத்தின் பார்வையிலேயே பேசப்படுகின்றன. பாத்திரங்கள் தங்களைப் புரிந்துகொள்ள இந்த விவாதம் எப்படியெல்லாம் உதவுகிறது, பாத்திரங்களின் வியாக்கியாயனங்களைக் கட்டுப்படுத்தும் சட்டகங்கள் எவை என்பன போன்ற புரிதல்களை அளிப்பதால் கடந்த காலம் குறித்த விவாதத்தில் எப்போதும் நிகழ்காலத்தின் இருப்பும் உள்ளது. 

வரலாற்றியலாளர்கள் உருவகத்தைப் பற்றியும் வரலாற்றில் குறியீடுகளுக்குரிய முக்கியத்துவத்தையும் எழுதுவதுண்டு; இவர்கள் தங்கள் எழுத்திலும் உருவகத்தைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் அது ஒரு மிக எளிமையான பயன்பாடாகவே இருக்கிறது. நான் என் ஆய்வறிக்கையில் குறியீட்டு முறைமையை பிரக்ஞைப்பூர்வமாகவும் (consciously) விரிவாகவும் (elaborately) பயன்படுத்தியுள்ளேன்.

எடுத்துக்காட்டாக, என் ஆக்கத்தின் இரண்டாம் பகுதி 1955ல் அரசமைப்பின் பலமான அடியாளாக (strongman) இருந்த யோசே அந்தோனியோ ரமோன் (Jose Antonio Remon) கொலை செய்யப்பட்டபின் நிகழ்ந்த வழக்காடுமன்ற விசாரணைகளைப் பேசுகிறது. கொலை செய்யப்பட்ட ஜனாதிமதி ரமோனோ அவரைக் கொலை செய்த குற்றத்துக்காக விசாரணைக் கூண்டில் நிறுத்தப்பட்டவர்களில் எவருமோ மக்களால் நேசிக்கப்பட்டவர்கள் அல்லர். மக்கள் மன்றம் (legislature), காவல் துறை போன்றே நீதித் துறையும் மக்களின் நம்பிக்கையை முழுமையாக இழந்து விட்டிருந்தது. நிலைமை இவ்வாறிருக்க, சாமானிய பனாமானியர்கள் ஏன் மூன்றாண்டு காலம் தொடர்ந்த வழக்கு விசாரணையில் அத்தனை ஆர்வம் காட்டினர்? இறுதி விசாரணைக் காலகட்டத்தில் தேசமே ஸ்தம்பித்து நின்றது ஏன்? குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதும் மக்கள் ஏன் தெருக்களில் ஆடிப்பாடி கொண்டாடினர்?

எனது பிரதியில் புனையப்பட்ட பாத்திரங்களில் ஒருவர் ஏற்கனவே விடுதலையாகி பனாமா நகரில் 1990களில் வாழ்பவர். அவர் ரமோன் காலகட்டத்தைக் குறித்து தொடர் கட்டுரைகள் எழுதுக் கொண்டிருக்கிறார். பல்கலைக்கழக நாடகமொன்றில் தங்கள் மகள் பங்கேற்பது குறித்து தனது மனைவி ஏன் அத்தனை பதட்டப்படுகிறார் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிவதில்லை. சுதந்திரத்தைப் பற்றி பேசுபவர்கள் தன் உரிமைகளில் ஏன் குறுக்கிடுகிறார்கள் என்பது அந்தப் பெண்ணுக்கு புரிவதில்லை. 

ஆனால் அம்மாவுக்கோ, தன் மகள் நடிக்கும் நாடகம் மானுவேல் பூச்சின் Kiss of the Spider Woman என்ற நாடகத்தின் தழுவல் என்பது தெரியும் – அதில் இரு சிறைக் கைதிகள், ‘அவர்களில் ஒருவனின் உடலில் சித்திரவதைக் காயங்கள் கண்ணுக்குத் தெரிவதாக இருக்கும்,’ நேரம் போக்குவதற்காக பழைய திரைப்படங்களை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அவளது அச்சம் இதுதான்: தன் மகள் நடிக்கும் நாடகம் தன் கணவனின் சிறைக்கால வதையின் நினைவுகளுக்கு உயிரூட்டக்கூடும். தன் மகள் அரங்கேற்றப் போகும் பாலியலைச் சுட்டும் கருப்பொருட்கள் குறித்த கவலைகளும் அவளது அச்சத்தோடு கலந்திருக்கின்றன.

உள்ளீட்டையும் அதைப் புரிந்து கொள்வதற்குரிய சட்டகங்களையும் ஒன்றின் மேல் ஒன்றென இருத்துவதில் நான் மானுவேல் பூச், ராபர்டோ போலானோ போன்ற லத்தின் அமெரிக்க உரைநடை எழுத்தாளர்களின் கூறுமொழியை கொஞ்சம் கடன் வாங்கியிருக்கிறேன். வரலாற்று மொழிபான 1955-58 காலகட்டத்து விசாரணைகள் புனைவுப் பாத்திரங்களான டெல் வால் குடும்பத்துடன் ஓரிழையில் இயைந்து வாசிக்கப்படும்போது வேறு அர்த்தங்களைப் பெற்றுக் கொள்கின்றன. எங்கெல்லாம் சாத்தியமோ, அங்கெல்லாம் மெய்யான சமகால நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள இரவல் சட்டகங்களை மனிதர்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் காட்டியிருக்கிறேன் – இவை வேறொரு வரலாற்று பின்புலத்தைச் சார்ந்தவையாக இருக்கலாம், அல்லது, புனைவு மற்றும் தொன்மங்களின் உலகுக்குரிய சட்டகங்களாகவும் இருக்கலாம்.

ஒரு காட்டாகச் சொன்னால், ரமோன் வழக்கின் இறுதி கட்டங்கள் குறித்த விசாரணைக் குறிப்புகள் அக்காலத்திய செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம் பெற்றன. அதே பத்திரிக்கைகளின் மூன்றாம் பக்கங்களிலும் நான்காம் பக்கங்களிலும் டிக் ட்ரேஸியின் கதை ஸ்பானிஷ் மொழியாக்கத்தில் இடம் பிடித்தது. சில சமயம் செய்தித்தாள்கள் விசாரணைகளில் பேசப்பட்ட வரலாற்றுத் தகவல்களை கார்டூன் வடிவத்தில் சித்தரிக்கவும் செய்தன என்பதைக் கண்டேன்.

இவற்றைக் கொண்டு எளிய முடிவுகளுக்கு வந்துவிட முடியாது என்றாலும் அக்காலத்தில் வாழ்ந்த பனாமானியர்களின் உள்ளத்தில் இத்தகைய வேறுபட்ட சட்டகங்கள் எவ்வகைகளில் கலந்துரையாடின என்ற கேள்வி நாம் கவனத்தில் கொள்ளத்தக்க முக்கியத்துவம் கொண்ட ஒன்று. என் ஆக்கத்தில் புனைவின் அடுக்குகளை எவ்வளவு வெற்றிகரமாகக் கோர்த்திருக்கிறேனோ, அவ்வளவுக்கு புரிதலுக்குரிய சட்டகங்கள் ஒன்றின் மீதொன்று அடுக்கப்படும்போது மெய்ம்மையில் எத்தகைய விளைவுகள் உருவாகின்றன என்பதை வாசகர்கள் உணர முடியும். உதாரணத்துக்கு, எந்த ஒரு வரலாற்றுப் பிரச்சினை குறித்தும் முரண்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்ட எந்த இரு பாத்திரங்களையும் வாசகரால் புரிந்துணர்வோடு அணுக முடியலாம். அப்படிப்பட்ட நிலையில், என் வாசகர் முரண்பட்ட இருவேறு பொருள்படும் ஒரே வரலாற்றுப் போக்கை ஏற்றுக் கொள்ளக்கூடும். இது மட்டுமல்ல, இந்த முரண்பாடு குறித்த தெளிவை அடைந்திருப்பதால் அந்த வாசகருக்கு வரலாறு குறித்த மேலும் சிடுக்கான (complex), நுட்பமான (nuaned), வினயமான (humble) புரிதல் சாத்தியப்படலாம்.

இப்போது இது தெளிவாகியிருக்கும்: நான் வரலாற்றியலாளர்களை மட்டும் இங்கு கேள்விக்குட்படுத்தவில்லை, மானுடவியல் துறைகளைச் சேர்ந்த விரிந்த வாசகப் பரப்பையும் சோதனைக்குட்படுத்துகிறேன் – அதிலும் குறிப்பாக இலக்கிய விமரிசனத்துறையினருக்கு எனது அணுகல் ஒரு சவாலாக இருக்கும்.

உரைநடையின் முறைமை சார்ந்த பகுதிகளைத் தங்கள் பகுப்பாய்வுக் கருவிகளைக் கொண்டு பிரித்துப் பார்ப்பதில் முழு கவனம் செலுத்துகிறார்கள் இவர்கள். ஆனால் மிக அபூர்வமாகவே தாம் விவரிக்கும் விஷயம் குறித்த புரிதலை உணர்த்துவதில் தங்கள் எழுத்தில் உள்ள முறைமை சார்ந்த பகுதிகள் எவ்வளவு முக்கியமான பங்காற்றுகின்றன என்பதை முன்னிலைப்படுத்துகிறார்கள். சமகால திரைக்கர்த்தாக்களும், காட்சி ஊடக கலைஞர்களும், நாவலாசிரியர்களும் அதிசயிக்கத்தக்க சோதனை முயற்சிகளில் யதார்த்தத்தையும் புனைவையும் வேறுபடுத்தும் எல்லைக்கோடுகளுக்குள் புகப் புறப்படுகிறார்கள். ஆனால் இலக்கிய விமரிசகர்களோ, இந்த விஷயத்தில் பெரும்பாலும் முன்செல்லும் விருப்பமற்றவர்களாகவே இருக்கின்றனர்.

ராபர்ட்டோ போலானோவின் நாவல்களை விவாதிக்கும் விமரிசகர் போலானோவின் மொழியில் பேசினால் என்னவாகும் என்று தெரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஒரு கதைசொல்லி தன் விமரிசனத்துக்கு ஒரு கணம் ஓய்வளித்து, பியோ பரோயாவின் பாதாள உலகுள் சென்று தன் பெற்றோர்களின் விருப்பத்தை மீறியதால் ஒரு சிலந்தியாக மாறிய பெண்ணோடு திரும்பி வந்து, பூச் (Puig) கதையில் உள்ள வலையின் அர்த்தத்தை விளக்கக் கூடுமா? தெரியவில்லை. ஆனால் நானறிந்தவரை, முதல் காட்சியில் யாரோ வைத்துவிட்டுப் போன அந்தச் சிலந்தி இன்னும் பார்மால்டிஹைடில் மூழ்கிக் கிடக்கிறது. அங்கேயே இருக்கிறது அது இன்னமும், தனக்கு யாரேனும் வாழ்வு கொடுப்பார்களா அல்லது இறுதி மரணத்தை அளிப்பார்களா என்று காத்துக் கொண்டிருக்கிறது.

 

Ezer Vierba
Program in History and Literature
Harvard University

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.