30.12.2013. மார்கழித்திங்கள். மதிநிறைந்த நன்னாளில் நம்மாழ்வார் நம்மை விட்டு மறைந்துவிட்டார். இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் இறந்தும் உயிர்வாழ்பவர். கடந்த 20 ஆண்டுக் காலத்தில் இயற்கை விவசாயத்திற்காக தமிழ்நாடு முழுவதும் இவர் விதைத்த விதைகள் விருட்சங்களாகிவிட்டன. தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மாற்றிய மகாபுருஷர். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு இயற்கை விவசாயப் பண்ணையிலும் இவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தந்தை இவருக்கு நம்மாழ்வார் என்று பெயர் சூட்டியதால் தினமும் திருப்பாவை பாடப்படும் ஒரு மார்கழித்திங்களில், 75 வயது நிரம்பிய நம்மாழ்வாரை வைகுண்டத்திற்கு அந்தப் பெரிய பெருமாள் நற்கதி வழங்கிவிட்டார் போலும்!
எனக்கும் நம்மாழ்வாருக்கும் உள்ள உருவ ஒற்றுமை, பணி ஒற்றுமை, கொள்கை ஆகிவற்றுக்குமேல் வயதும் பிறந்த ஆண்டும் ஒன்றே. அவரும் என்னைப்போலவே 1938- ஆம் ஆண்டு பகுதானிய வருஷத்தில் பிறந்தவர், பகுதானியம் என்றால் `உணவு தானிய உற்பத்திப் பெருக்கம்` என்று பொருள். `விவசாயத்திற்காக உழை` என்று எனது பிறந்தநாளில் சிவபெருமான் வாழ்த்தியது போல நம்மாழ்வாரை வைகுண்டப் பெருமாள் வாழ்த்தியுள்ளார். அரியும் சிவனும் ஒண்ணு! அறியாதவன் வாயில் மண்ணு!!
நம்மாழ்வார் காணாமல் போனாலும் புளியங்குடியில் வாழும் பெரியாழ்வார் உள்ளபோது நமக்கென்ன கவலை. ஆமாம். ஆசான் கோமதிநாயகத்தின் இயற்கை விவசாயப் பணியை யாரும் மறப்பதற்கில்லை. இயற்கை விவசாயத்தில் நெல்லை நட்சத்திரமாக ஜொலிப்பவர், புளியங்குடியின் அடையாளமே இவர்தான்.
நான் இயற்கை விவசாய முன்னோடிகள் பலரையும் பத்திரிக்கைகளில் பேட்டி எடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் எனக்கு மறக்க முடியாத தாக்கத்தை இவர் ஏற்படுத்தியுள்ளார். நம்மாழ்வாரை விட வயதில் மூத்தவர். எண்பது பிராயத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த இளைஞர் மாபெரும் சிந்தனையாளர். தொழில்ரீதியாக இவர் ஒரு பள்ளி ஆசிரியர். உலக அறிவு மிக்கவர். மகாத்மா காந்தி வகுத்தளித்த ஆதாரக்கல்விப் பயிற்சி ஆசிரியராக இருந்ததால் காந்திஜியின் நிர்மாணத்திட்டங்களில் ஆர்வம் நிரம்பியவர். என்னுடன் இருபதாண்டுத் தொடர்புடைய கோமதிநாயகத்தைப் புளியங்குடியில் நான் பல முறை சந்தித்த அனுபவம் உண்டு. முதல் தடவையாக நான் தினமணி சார்பாகப் பேட்டி எடுக்க எண்ணியபோது முழுமையாக ஒரு நாள் வழங்கியதுடன் முதல் நாள் இரவு அவர் வீட்டு விருந்தினராகத் தங்கியபோது அவர் குடும்பத்தில் ஒருவனாகவே எண்ணி உபசரித்ததை மறப்பதற்கில்லை. திருநெல்வேலி சைவப்பிள்ளை சமையலைக் கேட்கவேண்டுமா! பலமுறை அவர் விருந்தால் கவரப்பட்டுள்ளேன்.
சர்வோதய இயக்கத் தலைவராயிருந்த தெய்வத் திருமிகு ஏ. பி. சி. வீரபாகுவியின் உதவியுடன் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இவர் உருவாக்கிய `புளியங்குடி சேவா சங்கம்` புளியங்குடி விவசாயிகளின் வரப்பிரசாதமாக விளங்கியது. விவசாயிகளுக்கு இலவச உழவியல் தொழில்நுட்பப் பணிகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. முதற்கண் அந்தக்காலத்திலேயே நீர்த்திட்ட நடவடிக்கையாக விவசாயிகளுக்குச் சொட்டு நீர்ப்பாசனத்திற்குரிய குழாய் வடிவமைப்பு கற்றுத்தரப்பட்டது. உழவுக்கருவிகள், மின்மோட்டார், ஆயில் இஞ்சின் பழுதுபார்க்கும் பணி கற்றுத்தரப்பட்டது. விவசாயிகளுக்குரிய நிதி ஆதாரத்தை சுயநிறைவுடன் வட்டியில்லாக் கடன்பெறும் வசதியாக 100 உறுப்பினர் கொண்ட குழு ஏற்படுத்தி மாதம் ரூ 1500/- என்ற கணக்கில் சீட்டு நிர்வாகம் சிறப்புற நிகழ்ந்து வருகிறது. புளியங்குடி சேவாநிலையம் போல் ஒவ்வொரு கிராமங்களில்/பேரூராட்சிகளிலும் அமைந்துவிட்டால் விவசாயிகள் தன்மானத்துடன் வாழ வழிபிறக்கலாம்.
சேவாநிலையத்தின் மூலம் தமிழ்நாட்டு சமூக ஆர்வலர்கள், இயற்கை விவசாயத் தொழில் நுட்ப வல்லுனர்கள், வனத்துறை, தோட்டக்கலைத்துறை, நறுமணப்பொருள் வாரியம் சார்ந்த வல்லுனர்களை வரவழைத்து உரையாற்ற வைப்பவர் கோமதி நாயகம். என்னைப் பலமுறை உரையாற்ற அழைத்து கவுரவப்படுத்தியுள்ளார். ஊர்ப்பிரச்சினைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு வாங்கித் தருவதுண்டு. புளியங்குடியிலிருந்து மேற்குத்தொடர்ச்சி மலை வரை பொதுப்பணித்துறை உதவியுடன் விவசாய சேவா சங்கம் 5 கி.மீ சாலை அமைத்து வேளாண் விளைபொருள் போக்குவரத்துக்கு உதவியுள்ளது. ஏனெனில் புளியங்குடி விவசாயிகளின் நிலத்தின் ஒரு முக்கியப்பகுதி மேற்கு மலையை ஒட்டியுள்ளதால் சாலைப்பணி ஒரு அரும்பணி அல்லவா?
இன்று புளியங்குடிப் பெரியாழ்வாரின் கவனம் எல்லாம் மரம் வளர்ப்புதான். பொது இடங்களில் மரம் நடும்பணி தொடர்கிறது, ஆண்டு தோறும் 5000 மரக்கன்றுகளை பள்ளி மாணவர் மாணவியர் மூலம் தெருக்களில் நட்டு வளர்க்கும் பணியை விவசாய சேவா சங்கம் வழியே கோமதிநாயகம் செய்து வருகிறார். `வீதியெல்லாம் சோலை` என்ற திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி வருகிறது. புங்க மரம், வேம்பு மரம், வாழை மரம் வீதிதோறும் நடப்படுகின்றன. 11 ஆண்டுகளாக 55000 மரங்களை நட்டுள்ளார். இவருக்கு உறுதுணையாக வனத்துறை, ரோட்டரி கிளப், சில தனியார் நிறுவனங்கள் உதவி செய்கின்றன.
இவருடைய இயற்கை விவசாய ஈடுபாட்டில் தன்னை முன்வைத்து இதர விவசாயிகளையும் கைகோர்த்து ஈடுபட வைப்பது இவர் சிறப்பு. இவருக்கு விவசாயத்தில் ஏற்பட்ட ருசியே வித்தியாசமான கதை.
புளியங்குடிப் பெரியாழ்வாருக்கு விவசாயத்தின் மீது அக்கறை பிறந்த நிகழ்ச்சிக்கும் கோவை விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவுக்கும் தொடர்பு உண்டு. ஜி.டி.நாயுடு எழுதிய `நான் கண்ட உலகம்` நூலைப்படித்த கோமதி நாயகம் அவரைப் பாராட்டி எழுதிய கடிதம் ஜி.டி.நாயுடுவின் மனதைத் தொட, அவர் அழைப்பை ஏற்றுப் பெரியாழ்வார் 2 நாட்கள் நாயுடுவின் பங்களாவில் சிறப்பு விருந்தினராகப் பொழுதை அற்புதமாகக் கழித்துள்ளார். விவசாயத்தில் மண்வளம் காக்க பலதானிய விதைப்பு, குலைமிதித்தல் போன்ற நுணுக்கங்களை அறிந்து கொண்டதுடன், கோவையிலிருந்து திரும்பிய பெரியாழ்வார் முழுமூச்சுடன் நாயுடுவின் யோசனைப்படி விவசாயத்தில் 1958-இல் கவனம் செலுத்திய காலகட்டத்தில் பசுமைப்புரட்சி தமிழ்நாட்டில் தலைதூக்கவில்லை.
அன்றைய காலகட்டம் விவசாயத்தின் பொற்காலம். புளியங்குடிப் பெரியாழ்வார் தனக்கிருந்த 8 ஏக்கர் மானாவரி விவசாய நிலத்தில் நான்காயிர ரூபாய் அரசுக் கடன் பெற்றுக் கிளறு வெட்டிக் குழாய் நீர்ப்பாசனம் செய்தார். 4 ஏக்கரில் தென்னை விவசாயம், 330 மரங்கள் நட்டார். நெல், வேர்க்கடலை, மிளகாய், கேப்பை என்று பலவகைப் பயிர்கள் சாகுபடி செய்தார். பள்ளியில் ஆசிரியர் பணி செய்து வந்ததால் பள்ளிக்குச் செல்லும் முன்பும், பள்ளியிலிருந்து திரும்பிய பின்னும் தினம் 6 மணிநேரம் தன் நிலத்தில் கவனம் செலுத்தினார். `இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்` என்ற குறள் நெறிப்படி விவசாயம் செய்த நம்மாழ்வாரை ஸ்ரீதேவி வாழ்த்தி அருள்புரிந்தாள்.
விவசாயத்தில் நல்ல லாபம். மேலும் லாபம் பெற அவரும் அவரைச் சார்ந்த புளியங்குடி விவசாயிகளும் பசுமைப்புரட்சி மயக்கத்தில் கட்டுண்டனர். மேலும் லாபம் வந்தது. மண்வளம் இழந்தது. விளைச்சல் குன்றியது. ஸ்ரீதேவி விலகினாள். விவசாய பூமியில் மூதேவி அடியெடுத்து வைத்தாள். கடன் கடன் என்று கடன் தொல்லை பெருகியது. பின்னர் இயற்கையின் சதி வேறு. 1996-இல் வீசிய புயல் புளியங்குடியில் தென்னை மரங்களையும் எலுமிச்சை மரங்களையும் நாசமாக்கிற்று.. இந்த சோதனைகளில் இருந்து மீளும் உத்தியாக மண்ணை வளப்படுத்தும் இயற்கை விவசாயத்தில் பெரியாழ்வார் ஆர்வம் காட்ட நம்மாழ்வாரும் உந்துசக்தியாக விளங்கியது குறுப்பிடத்தக்கது.
மண்ணை வளப்படுத்த மாடுகள் வேண்டுமென்று சீமைப்பசுக்களை வாங்கிப் பால் பண்ணை நிறுவினார். பால் துணை வருமானமாகவும் கிடைத்தது. இந்த சமயத்தில் இயற்கை விவசாயத்தை ஒட்டுமொத்தமாக கிராம வளர்ச்சியின் ஒரு அங்கமாகவும் நோக்கும் நார்டெப் (Natural Resources Management Project) திட்டத்தைச் செயலாற்றி வரும் கன்னியாகுமாரி விவேகானந்த கேந்திரா பெரியாழ்வாரின் கவனத்தைக் கவர்ந்தது.
பல்லுயிர்ப் பெருக்கம், நீர்வள நிர்வாகம், சிக்கன வீடு கட்டுதல், இயற்கை விவசாயம், மூலிகை மருத்துவம், மரம் நடுதல், சாண எரிவாயுத் தொழில்நுட்பம் எல்லாம் கற்றுத்தரப்பட்டது. அப்பயிற்சியில் பங்குபெற்று அவர்கள் யோசனைப்படி சாண எரிவாயுக்கலன் அமைத்து வீடுகட்குத் தேவையான எரிபொருளுடன் நிலத்தை வளப்படுத்தும் மீத்தேன் நீக்கப்பட்ட சாணக் கூழையும் பெற்றார்.
புளியங்குடியைப் பற்றி ஒரு வார்த்தை. புளியங்குடியில் புளி உண்டு. ஆனால் புளியங்குடி விவசாயிகளின் வாழ்வு எலுமிச்சைதான். தமிழ்நாட்டிலேயே புளியங்குடி முதல்நிலை எலுமிச்சை அங்காடி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மண்ணுக்கு எலுமிச்சை அற்புதமாக விளைகிறது. இதில் பெரியாழ்வாரின் சிஷ்யர் அந்தோணிசாமி கொடிகட்டிப் பறக்கிறார். அந்தோணி சாமியைப் பற்றித் தனியே கவனிக்கலாம்.
எனினும் புயல்சேதம் பற்றிய மறுசிந்தனை இல்லாமல் கோமதிநாயமும் மற்ற விவசாயிகளும் எலுமிச்சை சாகுபடியில் இறங்கினர். இயற்கை உரங்களும் சொட்டிநீர்ப்பாசனமும் கைகொடுத்தது. தினம் ரூ 1500/- வருமானம் சீகனில் எலுமிச்சை மூலம் பெற்றார். காலத்தின் கோலம் வேறுவிதமான இருந்தது. ஒரு நெருக்கடி காரணமாக மானாவாரி நிலங்களை விற்றுவிடும்படியான சூழ்நிலை ஏற்பட்டது. பால் மாடுகளையும் குறைத்துக் கொண்டார். தினம் சாப்பாட்டைக் கருதி நெல்வயலை மட்டும் விற்காமல் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவர் நெல்லுக்குக் கடைபிடிக்கும் தொழில்நுட்பமாவது.
அறுவடை முடிந்ததும் நிலத்தை நன்கு காயவிடுகிறார். பின்னர் வீட்டுக்கு வேண்டிய காய்கறிகளை சாகுபடி செய்கிறார். பின்னர் பட்டம் வந்ததும் தரிசோட்டம் செய்து நிறைய குளத்து வண்டல் அடிக்கிறார். குலை மிதித்து நாற்றுப்பாவிப் பாய்ச்சல் நீரில் சாண எரிவாயுக் கலனில் உள்ள கரைசல் விடப்படுகிறது. நடவுக்குப் பின் பஞ்சகவ்யம், தேங்காய்ப்பால் மோர்க்கரைசல், மீன்குணபம், மூலிகைப் பூச்சி விரட்டி பயனாகிறது. அறுவடையில் விதைக்கும், வீட்டுப்பயனுக்கும் ஒதுக்கிவிட்டு நெல்லை அரிசியாக்கி விற்பனை செய்கிறார்.
புளியங்குடி பக்களிடம் பெரியாழ்வாராகிய கோமதிநாயகம் மிகவும் மரியாதைக்குரிய மனிதராக எண்ணப்படுவதால் இவர் கூறுவதை மற்றவர்கள் வேதவாக்காக எடுத்துக்கொள்கிறார்கள். ஆசிரியர் பணியிலிருந்தபோது எவ்வாறு நற்குணமுள்ள மாணமணிகளை உருவாக்கினாரோ அவ்வாறே ஓய்வு பெற்றபின் நல்ல நல்ல இயற்கை விவசாயிகளை உருவாக்கியுள்ளார். விவசாயசேவா சங்கத்தின் மூலம் பயன்தரும் பயணங்களை மேற்கொண்டு புதிய விவசாயத் தொழில்நுட்பங்களைத் தான் கற்பதுடன் மற்றவருக்கும் கற்பிக்கும் இவர் இன்று முழு கவனத்தையும் இயற்கை அங்காடியில் செலுத்திவருகிறார். ‘
பெரியாழ்வாரின் கருத்துப்படி விவசாயிகள் வெறும் உற்பத்தியாளர் என்ற நிலையில் வாழ்ந்தால் போதாது. தங்களின் விளைச்சல் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்றால்தான் லாபம் பெற முடியும் என்பதை விவசாயிகள் உணரவேண்டும் என்ற எண்ணத்தில் புளியங்குடியில் கடந்த ஆறு ஆண்டுகளாக இயற்கை விவசாய அங்காடியை நடத்திவருகிறார். திருநெல்வேலியிலும் நிறுவப்பட்டுள்ளது. மூன்றாவதாக சமீபத்தில் கடையநல்லூரிலும் திறக்கப்பட்டுள்ளது. இயற்கையில் விளைவித்த அரிசி, அவல், வெல்லம், பருப்புவகைகள், காய்கறிகள் விற்பனைக்கு மேல் பெரியாழ்வாரின் ஒரு வித்தியாசமான சிந்தனையைப் பாராட்டியே ஆகவேண்டும். சிறுதானியங்களான கம்பு, தினை, வரகு, கேப்பை, சாமை ஆகியற்றைப் பயன்படுத்தி பல்வேறு திண்பண்டங்கள் விற்பனையில் உள்ளது. நவதானிய லட்டு, சம்பாப் பொடி, இட்லிப்பொடி, அப்பளம், வடாம் வகைகள், கோதுமை, பார்லி, குதிரைவாலி, கம்பு, திணை, நிலக்கடலை ஆகியவற்றை முறைப்படி வறுத்து சத்துமாவாக்கி விற்கிறார். உடலுக்கும் நன்மை தரும் பாரம்பரியத் திண்பண்டங்கள் புளியங்குடியில் உண்டு.
இயற்கை விவசாயம் என்பது ஒரு இனிய வாழ்வியல் பயணம். புளியங்குடி எனக்கு ஒரு புனிதத்தலம். ஒவ்வொரு முறையும் கோமதிநாயகத்தைப் பார்க்கும்போது நம்மாழ்வாரை விட இவர் பெரியவர் என்ற எண்ணம் எனக்கு ஏற்படுவதுண்டு. ஆகவே அவரை ஒரு பெரியாராகப் பார்க்காமல், பெரியாழ்வாராகப் பார்க்கிறேன். கீதையில் கண்ணமன் கூறும் ஸ்திதப்பிரக்ஞன் ( தன்னை உணர்ந்த ஞானி) புளியங்குடியில் கோமதிநாயகனாக வாழ்கிறார்.
துக்கேஷ்-வனுத்விக்ன மனோ ஸுகேஷூ விகித-ஸ்பருஹ:
வீதராக பயக்ரோத: ஸ்திததீர்-முனிருச்
யதே!! (கீதை 103)
தன்னை உணர்ந்த ஞானி துன்பத்தைக் கண்டு துவண்டு விட மாட்டான். இன்பத்தில் லயனம் இருக்காது. விருப்பம், பயம், கோபம் இல்லாத முனிவன். வாழ்க அவர் பணி.
(தொடரும்)
தொடர்பு எண்கள்:
கோமதி நாயகம் – 04636 – 233235
ஆர்.எஸ்.நாராயணன் : 944243588
சென்ற இதழ் இயற்கை விவசாய முன்னோடிகள்
- அரியன்னூர் ஜெயச்சந்திரன் – 9444894181
- கலசபாக்கம் அ.மீனாட்சி சுந்தரம் – 9787941249