ஹயாவோ மியாசகி – இயற்கையின் மீது வரையப்பட்ட சித்திரம்

`நிகழ் திரை` புத்தகம் 2014 புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது. அதில் வரும் ஒரு கட்டுரையை சொல்வனம் இதழுக்கு அளித்த அய்யனார் விஸ்வநாத் அவர்களுக்கு நன்றி.

நிகழ் திரை

வம்சி வெளியீடு
விலை ரூ 200
புத்தகத் திருவிழாவில் வம்சி அரங்கில் கிடைக்கும்

ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்களின் கடவுள் என மியாசகியை உலகம் முழுக்க கொண்டாடுகிறார்கள். மியாசகியின் உலகத்திற்குள் போவதற்கு முன்பு இது எனக்கு கொஞ்சம் அதீதமாகப்பட்டது. இந்தத் துதி மனப்பான்மையை விட்டொழிக்கவே மாட்டார்களா? என்கிற சலிப்போடு மியாசகியைக் குறித்து வியந்து எழுதப்பட்ட கட்டுரைகளைத் தாண்டினேன். மியாசகியின் பிரின்சஸ் மோனோநோகி திரைப்படத்தைத்தான் முதலில் பார்த்தேன். பெரியவன் ஆகாஷ்கங்காவிற்கு அப்போது ஒண்ணரை வயது. கணினியில் படங்களை ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்திருந்தான். அவனுக்கான ஒரு நல்ல அறிமுகமாக இருக்கட்டுமே என்றுதான் இத்திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். அவ்வளவுதான் பிரின்சஸ் மோனோநோகி அதன் அற்புதமான உலகத்திற்குள் என்னை இழுத்துக் கொண்டது. படம் பார்த்து முடித்தபோது மலைத்துப் போயிருந்தேன். என்ன மாதிரியான திரைப்படம் இது என சிலிர்த்துப் போனேன். நான் பார்க்கும் திரைப்படங்களின் தேர்வு எப்படியிருக்கும் என்பதை இப்புத்தகத்தை வாசிக்கும்போதே நீங்கள் தெரிந்து கொண்டிருக்கலாம். ஹாலிவுட் படங்களைக் கூட அதன் பிரச்சார/ பிரபலத் தன்மைக்காக பார்ப்பதைத் தவிர்த்து விடுவேன். இலக்கியமாகட்டும் சினிமாவாகட்டும் என் தேர்வு அத்தனை கறார் தன்மை கொண்டது.

அனிமேஷன் படம்தானே என்ற அலட்சியத்தோடு பார்க்க ஆரம்பித்ததிற்கு பிரின்சஸ் மோனோநோகி திரைப்படத்தின் முடிவில் மானசீகமாய் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். உடனடியாய் மியாசகியின் அத்தனை படங்களையும் தேடிப் பிடித்துப் பார்க்கத் துவங்கினேன். ஆகாஷ் கங்காவிற்கு இப்போது நாலரை வயது. கூடவே மூன்று வயதான அகில் நந்தன். நாங்கள் மூவரும் ஸ்பிரிட்டட் அவேவை நேற்றும் எத்தனையாவது முறையாகவோ கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் மூவருக்குமே பிடித்த மை நெய்பர் டோடோரோ வை யும் இங்கனமே பார்த்துக் கொண்டிருப்போம். நான் இப்போது நம்பிச் சொல்கிறேன். மியாசகி ஜப்பானிய மட்டுமல்ல உலக அனிமேஷன் சினிமாவின் கடவுள்.

எல்லாக் குழந்தைகளைப் போலவே பால்யத்தில் நானும் சிறுவர் படக்கதைகள் வழியாகத்தான் கதைகளின் உலகிற்குள் போனேன். அந்தப் படக்கதைகள் தந்த பரவசம் நினைவின் அடியாழத்தில் தேங்கிப் போய் விட்டிருக்கிறது. மீண்டும் இத்தனை வருடங்கள் கழித்து மியாசகி வழியாகத்தான் அப்பரவசங்கள் மெல்ல மேலெழுந்து வந்தன. மியாசகியின் ஒவ்வொரு திரைப்படமும் என் பால்யத்தை மீட்டுத் தருகிறது. மிகப்பெரும் கனவு வெளியை, கிளைகளாய் பெருகும் கதைகளை, இயற்கையின் மீதான நேசத்தை இத்திரைப்படங்கள் என்னுள் விதைக்கின்றன.

ஜப்பானில் மங்கா காமிக்ஸ் மிகவும் புகழ்பெற்றது. இந்த படக்கதை புத்தகங்களில் இருக்கும் படங்கள் யாவும் கைகளால் வரையப்படுபவை. இப் புத்தகங்களுக்கு படம் வரைய தேர்வு பெறுவது அத்தனை சுலபமான விஷயம் இல்லை. இதற்காகவென்றே தனியாய் பயிற்சிப் பள்ளிகள், ஓவியக் கல்லூரிகள் போன்றவை உண்டு அதில் பயின்று தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே காமிக்ஸ் புத்தகங்களில் படம் வரைய முடியும். மியாசகியின் கனவும் மங்கா காமிக்ஸில் படம் வரைய வேண்டும் என்பதாகத்தான் இருந்தது.

தேர்ச்சி பெற்ற மங்கா கலைஞராக ஆனபிறகு, மியாசகி தொலைக்காட்சியில் சேர்ந்து அனிமேஷன் படங்களில் வேலை செய்தார். பிறகு அனிமேஷன் துறைகளின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து விட்டு 1979 இல் தன் முதல் படமான The Castle of Cagliostro வை இயக்கி வெளியிட்டு சிறந்த வெற்றிப்படமாக்கிப் புகழ்பெறுகிறார்.

மியாசகி தன் திரைப்படங்களுக்குக் கணினியைப் பயன்படுத்துவதில்லை. இன்று வரை இவர் படங்களில் வரும் அத்தனைக் காட்சிகளையும் சித்திரங்களாக கைகளில் தான் வரைகிறார். அநேகமாக உலக அனிமேஷன் சினிமாவில் கைகளால் வரையும் ஒரே மனிதர் இவராகத்தான் இருப்பார்.

hayao_miyazaki

1984ல் மியாசகி தன் இரண்டாவது படமான நாசிகா, (Nausicaa, the Princess of the valley of the wind) வை இயக்கினார். இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பே இதே பெயரில் படக்கதை வடிவ நாவலை ஒரு மங்கா இதழில் தொடராக எழுத/வரைய ஆரம்பித்திருந்தார். 1982 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் அந்நாவலின் முதல் இரு பாகங்களை எழுதி முடித்தார். அந்த இரு பாகங்களை அடிப்படையாக வைத்தே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

போரால் அதிகம் பாதிக்கப்பட்ட உலகநாடுகளில் ஜப்பானுக்கு தனி இடம் உண்டு. வரலாற்றின் பக்கங்களில் ஜப்பானின் அழிவு இன்றும் துயரம் மிக்கதாகவே இருந்து வருகிறது. ஹிரோஷிமா, நாகசாகி சம்பவங்கள் ஒட்டுமொத்த ஜப்பானையுமே தலைகீழாக்கின. கிட்டத்தட்ட அந்நாட்டில் எல்லா மக்களுமே அச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டனர். அதோடு மட்டும் நிற்காமல் அவர்களின் தலைமுறைகளும் கொடுந் துயரை அனுபவித்தன. இந்த நெடிய துன்பம் ஜப்பானின் கலை வடிவங்களின் இன்னொரு முகமாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. உலகின் மிக முக்கியமான இயக்குனர்களான ஜப்பானைச் சேர்ந்த அகிரா குரசோவா வும் சோஹைப் இமாமுராவும் இந்த வரலாற்றுத் துயரத்தை தொடர்ந்து தம் படங்களில் பேசினார்கள். இமாமுராவின் black rain திரைப்படம் இந்த அணுகுண்டு வெடிப்பை மிக நேரடியாகப் பேசுகிறது. அகிராவின் பெரும்பாலான திரைப்படங்களில் இந்த ஹிரோஷிமா நாகசாகி சம்பவங்கள் திரைக்கதையின் ஊடாய் இணைந்து வரும். ட்ரீம்ஸ், ரேப்ஸ்டடி இன் ஆகஸ்ட் போன்ற திரைப்படங்கள் மிக நேரடியாகவும் காட்சிப் படுத்தியிருக்கும்.

ஜப்பானிய கலைஞர்களின் இந்தப் பொறுப்பும் துயரமும் அனிமேஷன் படங்களிலும் தொடர்ந்தது, நாசிகா எனப் பெயர்கொண்ட பள்ளத்தாக்கு நாட்டின் இளவரசி போரை விரும்பமாட்டாள். தோரக்மியா மற்றும் டோரக் எனப் பெயர் கொண்ட பக்கத்து நாடுகளின் போர் திட்டங்களை சாத்வீகமான முறையில் முறியடிக்கப் போராடுவாள்.
இத்திரைப்படம் எதிர்காலத்தில் நிகழும் கதையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். உலகின் மிகப்பெரிய போர் ஒன்று நிகழ்ந்து எல்லா வளங்களையும் மாசுப்படுத்திவிடுகிறது. விஷக்காடுகள் உலகை வேகமாக சூழ்ந்து கொள்கின்றன அவ்விஷக்காடுகளெங்கும் ராட்சத பூச்சிகளும், வண்டுகளும் பரவி விடும். தோரக்மியா மற்றும் டோரக் மற்றும் சில சிறிய நாடுகள் எஞ்சுகின்றன. தத்தமது தேசங்களைக் காப்பாற்றிக் கொள்ள தோரக்மியாவும் டோரக்கும் தொடர்ந்து போரில் ஈடுபடுகின்றன. இந்த சிறிய நாடுகளோ இரண்டில் ஏதோ ஒரு நாட்டிற்கு போரில் உதவியே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன. அப்படி ஒரு சிறிய நாடான பள்ளத்தாக்கின் இளவரசி நாசிகா இப்போரை நிறுத்தப் பாடுபடுவாள்.

இத்திரைப்படத்தின் மிகப் பிரதான அம்சம் இந்த எல்லா தரப்புகளுக்கும் இருக்கும் நியாயத்தை மிக நிதானமாக முன் வைப்பதுதான். இந்த தனித்தன்மை மியாசகியின் எல்லாப் படங்களிலுமே மைய இழையாக இருக்கும். அவரின் உலகத்திற்குள் முழுமுதற் தீமை என்றோ சுயநலம் என்றோ எதுவுமிருக்காது. தீயவர்களாக சித்தரிக்கப்படுவோரின் நியாயங்களை மிக வலுவாக முன் வைப்பதில்தான் மியாசகி தனித்துவம் பெறுகிறார்.

Princess Mononoke 1997

நாசிகா திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜப்பானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிப்லி தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் பிரின்சஸ் மோனோநோகி. இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றி மியாசகியை உலகம் முழுக்க கொண்டு சென்றது. இத்திரைப்படம் 1337 லிருந்து 1573 வரைக்குமான Muromachi காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவமாக சொல்லப்படுகிறது. ஒரு நாள் எமிஷி கிராமத்தை தாக்க ஒரு வினோத மிருகமொன்று வருகிறது. கிராமத்தை நெருங்குவதற்கு முன்னரே அக்கிராமத்தின் இளவரசனான அஸ்தகா மிருகத்துடன் போர் புரிந்து அதைக் கொன்று விடுகிறான். ஆனால் அவன் வலது கையை அம்மிருகம் பதம் பார்த்து விடுகிறது. அங்கு வரும் மூதாட்டியும் கிராமத்தவர்களும் அம்மிருகத்தின் அழிவிற்கு மன்னிப்பு கேட்கிறார்கள். இளவரசனின் தழும்பை சோதிக்கும் மூதாட்டி அந்த மிருகம் ஒரு சபிக்கப்பட்ட பன்றி கடவுள் என்றும் அதன் மூலம் ஏற்பட்ட தழும்பு பெரிதாகி இளவரசனை கொன்றுவிடும் என்றும் சொல்கிறார் இந்த சாபம் நீங்க மேற்குத் திசை நோக்கி பயணம் செய்து மான்களின் கடவுளை சந்திக்குமாறும் கூறுகிறார்.

அஸ்தகா மேற்கு நோக்கி தன் பயணத்தைத் துவங்குகிறான். வழியில் சாமுராய் வீரர்களை ஒரு கும்பல் விரட்டி அடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அவர்களிடமிருந்து சாமுராய் வீரர்களைக் காப்பாற்றுகிறான். அந்த கும்பல் யபோஷி என்கிற இரும்பு நகரத் தலைவியின் ஆட்கள். யபோஷி காட்டை அழித்து விட்டு ஒரு இரும்பு நகரத்தைக் கட்டத் தீர்மானிக்கிறாள். அதற்காக கிராமத்து மக்களை நிர்பந்தித்து சுரங்கம் தோண்டி, நிலக்கரி மற்றும் இரும்புத் தாது எடுத்து அந்நகரத்தைக் கட்டுகிறாள். யபோஷியிடம் ஆயுதங்கள் இருப்பதால் அங்கிருக்கும் இனக்குழுக்களால் அவ்வளவு எளிதாய் அவளை எதிர்த்துப் போரிட முடியாமல் போகிறது.

இளவரசன் அஸ்தகா காட்டில் ஒரு ஓநாய் இளவரசியை சந்திக்கிறான். ஓநாய்களால் வளர்க்கப்படும் அவளின் மீது காதல் வயப்படுகிறான். இளவரசி யபோஷிகா வை அழிப்பதே தன் இலட்சியம் என்கிறாள். இதற்கிடையில் காட்டின் கடவுளால் தழும்பு மறையப் பெறுகிறான். இளவரசியும் அஸ்தகாவும் ஒரு படையைத் திரட்டி யபோஷிகா வை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெறுகிறார்கள். காட்டின் அழிவு தடுக்கப் படுகிறது.

யபோஷிகா என்கிற பெண் கதாபாத்திரம் முற்றிலும் எதிராக சித்தரிக்கப்பட்டிருக்காது. எபோஷிகா தன் தொழிற்சாலையில் தொழு நோயாளிகளுக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கும் வேலை கொடுத்திருப்பார். அவர்களின் நல் வாழ்விற்கு உதவுவார். மேலும் அத்தொழிலாளிகள் யபோஷிகாவிடம் மிக விசுவாசமாகவும் இருப்பார்கள். முற்றிலுமான தீமை என்ற ஒன்று கிடையவே கிடையாது என்பதுதான் மியாசகியின் படங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் செய்தி. அது இத்திரைப்படத்திலும் கச்சிதமாய் வெளிப்பட்டிருக்கும்.

மேலோட்டமாகப் பார்த்தால் இத்திரைப்படம் ஒரு சாகச அனிமேஷன் படமாகத் தோன்றினாலும் இதன் அடிநாதமாய் பல அற்புதமான இன்றைய சூழலுக்கும் பொருந்தக் கூடிய பல விஷயங்கள் இழையோடியிருப்பது புரிய வரும். காட்டை அழித்து இயற்கை வளங்களை சுரண்டி அங்கிருக்கும் இனக்குழுக்களை விரட்டியடிக்கும் நாச வேலைகள் இன்று இந்திய அரசின் பலத்த பாதுகாப்புடன் சகல மலைப் பிரதேசங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த மீறல் உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றாக இருக்கிறது
இயற்கையும் காடும் கடவுளின் பிரதேசம். இயற்கையின் மீதான நேசிப்பையும் கடவுள் தன்மையின் அன்பின் நெகிழ்வையும் இத்திரைப்படம் மிக வலுவாய் முன் வைக்கிறது.

வழக்கமான சிறுவர் சாகசக் கதைகளில் இளவரசனின் வாகனமாக குதிரை இருக்கும் ஆனால் இதில் ஒரு மான் அஸ்தகாவின் வாகனமாக வரும். மேலும் எல்லா சிறுவர் கதைகளிலும் ஓநாய் ஒரு மோசமான மிருகமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் ஆனால் இதில் ஓநாய் அன்புமிக்க மிருகமாக சித்தரிக்கப்பட்டிருக்கும். இப்படியாய் குழந்தைகள் உள்ளத்தில் திணிக்கப்படும் பல வழமைகளை மியாசகியின் படங்கள் மாற்றியமைக்கின்றன.

இத்திரைப்படத்திற்காக மியாசகி ஒரு இலட்சத்தி நாற்பத்தி நான்காயிரம் சித்திரங்களை கையால் வரைந்திருக்கிறார். மேலும் இந்தக் கதையை பதினாறு வருடங்களாக மாற்றி மாற்றி எழுதிப் பார்த்திருக்கிறார். ஜப்பானின் மரபான ஓவியங்களும் வண்ணங்களும் படத்தை நிறைத்திருக்கும். காட்டின் தனித்துவமிக்க அழகு முழுவதுமாய் வெளிப்பட்டிருக்கும்.

princess mononoki

My Neighbor Totoro 1988

பேராசிரியர் டாட்சுவோ வும் அவரின் இரண்டு மகள்களும் அவர்களின் சொந்த கிரமத்தின் பழைய வீட்டிற்கு குடிபெயர்கிறார்கள். பேராசிரியரின் மனைவி தீராத நோய் ஒன்றினால் அவதிப்படுகிறாள். அவளைக் குணப்படுத்தும் மருத்துவமனைக்கு அருகாமையில் அப்பழைய வீடிருப்பதால் அங்கு குடிபெயர்கிறார்கள். மூத்தவள் சாட்சுகிக்கும் இளையவள் மேய் க்கும் அந்த வீடு மிகவும் பிடித்துப் போகிறது. அந்த வீடு முழுக்க கருப்பு நிறத்தில் தூசியைப் போன்று ஒரு பூச்சிக் கூட்டத்தைப் பார்க்கிறார்கள். வெளிச்சமோ ஆளரவமோ கண்டால் black soots எனப்படும் அந்ததூசிப் பூச்சிக் கூட்டம் விரைந்து மறைகிறது.

ஒரு நாள் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் மேய் இரண்டு முயல் குட்டிகளைப் போன்ற தோற்றம் கொண்ட சிறு விலங்குகளைப் பார்த்து அவற்றைத் தொடர்ந்து விரட்டிப் போகிறாள். அந்த முயல் குட்டிகள் அவளைக் காட்டின் மையத்திற்குக் கூட்டிப் போகின்றன கிளைகள் விரித்துப் படர்ந்திருக்கும் ஒரு மாபெரும் Camphor மரத்தின் பொந்திற்குள் அம்முயல் குட்டிகள் ஓடுகின்றன. அதற்குள்ளும் போகும் மேய் அங்கொரு மிகப்பெரிய முயல் சாயல் கொண்ட விலங்கொன்றைப் பார்க்கிறாள். அதன் உருமும் சப்தத்தை வைத்து அதற்கு டொடொரோ எனப் பெயரிடுகிறாள் ( இந்த டொடொரோதான் மியாசகியின் படங்கள் அனைத்தையும் தயாரித்த கிப்லோ தயாரிப்பு நிறுவனத்தின் படமாக இருக்கும்) பின்பு அப்பெரும் விலங்கின் மீது மேய் தூங்கிப் போகிறாள்.

பள்ளி விட்டு வரும் சாட்சுகி தங்கை மேய் ஐ தேடுகிறாள். தந்தையுடன் அவளைத் தேடி காட்டுக்குள் வரும்போது அவள் தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறாள். மேய் கண்விழித்ததும் தானொரு மிகப்பெரிய விலங்கைப் பார்த்ததாக இருவரிடமும் கூறுகிறாள். அதோடு நில்லாமல் அந்த மாபெரும் மரமிருந்த இடத்தை நோக்கி ஓடுகிறாள். ஆனால் அந்த மரத்தில் இருந்த பொந்து காணாமல் போய்விட்டிருக்கிறது. அக்கிராமத்தில் காண்ட்டா என்றொரு சிறுவன் இருக்கிறான். இந்த இரண்டு சிறுமிகளின் மீது அவனுக்குப் பிடித்தம் ஏற்படுகிறது. ஆனால் இருவரையும் பார்த்துப் பேச தயங்குகிறான். ஒரு மழைநாளில் பள்ளி விட்டு வரும் சாட்சுகியும் மேய் ம் மழைக்காக ஒதுங்கி நிற்கிறார்கள். அப்போது குடையோடு வரும் காண்ட்டா குடையை அவர்களிடம் கொடுத்து விட்டு மழையில் நனைந்த படியே வீட்டிற்கு ஓடிவிடுவான்.

அதே நாளில் தந்தையின் வருகை தாமதமாகவே இரு குழந்தைகளும் மழையில் பேருந்து நிறுத்தத்தில் தந்தைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். நேரம் அதிகமாகி இருள் சூழ்ந்து விடுகிறது. மேய் உறங்கிப் போகிறாள். அப்போது மிகப்பெரிய விலங்கான மேய் பார்த்த டோடொரோ பேருந்து நிறுத்தத்தில் அவர்களுக்கு அருகாமையில் வந்து நிற்கிறது. சாட்சுகி தன்னிடம் இருக்கும் தந்தையின் குடையை பிடித்துக்கொள்ளும்படிச் சொல்லி குடையை டோடொரொ விற்கு கொடுக்கிறாள். டோடொரோ குடை பிடித்துக் கொண்டு நிற்கிறது. அருகாமையில் இருக்கும் மரத்திலிருந்து நீர் பெரிய பெரிய சொட்டாய் டோடொரொவின் குடை மீது விழும். உடனே அம்மிருகம் எகிறி ஒரு குதி குதிக்கும் மொத்த மழைத்துளியும் சடசடவெனக் கொட்டி மழை நின்று போகும். அப்போது பஸ்ஸின் தோற்றம் கொண்ட ஒரு மாபெரும் காட்டுப் பூனை வந்து நிற்கும். டோடொரொ ஒரு சிறு பரிசை மேய் யின் கையில் கொடுத்து விட்டு பஸ்ஸில் ஏறி மறைந்து விடும். சற்று நேரத்தில் பேராசிரியர் பேருந்தில் வந்து சேர்வார். சாட்சுகியும் மேய் ம் டோடொரொவைப் பார்த்தமகிழ்ச்சியை தந்தையிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

அடுத்த நாள் சாட்சுகி அந்த அனுபவத்தை தாய் க்கு கடிதமாக எழுதி அனுப்புவாள். டோடொரொ கொடுத்த பரிசுப் பையில் நிறைய விதைகள் இருக்கும். இருவரும் அவ்விதைகளை அவர்களின் தோட்டத்தில் ஊன்றுவார்கள். அன்று இரவு டோடொரொ வும் சின்னஞ்சிறு குட்டிகளும் அவர்களின் தோட்டத்திற்கு வருவார்கள். அவ்விதைகள் ஊன்றப்பட்ட இடத்திற்கு அருகாமையில் நின்று கைகளை கீழிருந்து மேலாய் உயர்த்து வார்கள். சாட்சுகியும் மேய் ம் ஓடிப்போய் அவர்களோடு சேர்ந்து கொண்டு கைகளை உயர்த்துவார்கள். ஊன்றப்பட்ட விதைகள் சடசடவென மேலெழும்பும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு மாபெரும் மரம் வளர்ந்து நிற்கும் டோடொரொ ஒரு பம்பரத்தை கீழே சுற்றவிட்டு அதன் மீது ஏறி நிற்கும் அதன் குட்டிகளும் சாட்சுகியிம் மேய் ம் டோடொரொவின் மீது தாவி ஏறிக் கொள்வார்கள். டோடொரொ வானில் பறக்க ஆரம்பிக்கும். அந்த மரத்தை சுற்றி வரும் குழந்தைகள் காற்றில் பறந்தபடியே சந்தோஷத்தில் கத்துவார்கள். பின்பு அம்மாபெரும் மரத்தின் உச்சியில் டோடொரோ வும் நான்கு பேரும் அமர்ந்து கொண்டிருப்பார்கள்.

அடுத்த நாள் காலை அனைவரும் தூக்கத்திலிருந்து விழிப்பார்கள். அந்த மரம் அங்கிருக்காது ஆனால் அவ்விதைகள் முளைவிட்டிருக்கும்.

அடுத்தநாள் இரண்டு குழந்தைகளும் பக்கத்து வீட்டுப் பாட்டியோடு தோட்டத்தில் காய்கறிகளைப் பறித்துக் கொண்டிருப்பர்கள். சாட்சுகி வீட்டிற்கு வந்த தந்தியை காண்டா எடுத்து வருவான். அத் தந்தி தாய் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் இருந்து வந்திருக்கும். பயந்து போகும் குழந்தைகள் காண்ட்டா உதவியுடன் அவரின் தந்தைக்கு தொலைபேசுகிறார்கள். தந்தை மருத்துவமனைக்குப் பேசி அந்த வாரம் வர இருக்கும் தாயால் வர முடியாமல் போன தகவலை சொல்வார்.

மேய் பெருத்த ஏமாற்றம் அடைவாள். சாட்சுகியும் கடிந்து கொள்ளவே ஓட ஆரம்பிப்பவள் வழி தவறிப் போகிறாள். மொத்த கிராமமும் மேய் ஐ தேட ஆரம்பிக்கும். ஒரு குளத்தில் மேய் இன் காலணிகளில் ஒன்று கிடக்கும் அதைப் பார்த்து சாட்சுகியும் கிராமத்தவர்களும் பயப்படுவார்கள்.

சாட்சுகிக்கு டோடொரொவின் நினைவு வரும். டோடொரொ வசிக்கும் அந்த மாபெரும் மரத்தை நோக்கி ஓடுவாள். அங்கு உறங்கிக் கொண்டிருக்கும் டோடொரொவிடம் மேய் காணாமல் போன விஷயத்தைச் சொல்வாள். டோடொரோ தன் வாகனமான காட்டுப்பூனையை அழைக்கும். பேருந்தின் தோற்றத்தில் இருக்கும் காட்டுப்பூனை கண்ணிமைக்கும் நேரத்தில் டோடொரொ நின்று கொண்டிருக்கும் பெரும் மர உச்சிக்கு வந்து சேரும் சாட்சுகி அதில் ஏறிக் கொள்வாள். பறந்து செல்லும் பூனை மேய் தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும் இடத்திற்கு வந்து சேரும். பிறகு அவர்கள் இருவரையும் ஏற்றிக் கொண்டு தாய் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்குப் பறந்து செல்லும். தாய் நலமுடன் இருப்பதை வானத்தில் இருந்து குழந்தைகள் பார்த்து மகிழ்வார்கள். பின்பு இரு குழந்தைகளையும் காட்டுப் பூனை கிராமத்திற்குள் கொண்டு வந்து விடும். பாட்டி ஓடி வந்து குழந்தைகளை அணைத்துக் கொள்வாள். படம் முடிந்து போகும்.

மியாசகியின் படங்கள் அனைத்துமே எனக்குப் பிடித்தமனவை என்றாலும் கூட மை நெய்பர் டோடொரோ அதில் முதன்மையானது. இயற்கையின் அதி அற்புத பரவசங்களை இத்திரைப்படத்தின் வழியாய் பெற முடிந்தது. அன்பும் கருணையும் மிக்க மனிதர்கள். தீங்கே நிகழாத உலகமென டோடொரோ ஒரு பெரும் பரவச அனுபவமாக இருந்தது. படமெங்கும் வரும் அந்த மாபெரும் மரத்தின் பிரம்மாண்டம் இன்றளவும் மனதில் நிற்கிறது.

my_neighbour_totoro_desktop_3053x1668_wallpaper-251820

Spirited Away ( 2001)

மியாசகி குடும்ப நண்பரின் பத்து வயது மகள் இத்திரைப்படத்தின் கரு உருவாக காரணமாக இருந்தாள். ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் மியாசகி தன் குடும்பத்துடனும் நண்பர்கள் குடும்பத்துடனும் இருப்பது வழக்கம். மியாசகியின் முந்தைய படங்களில் பத்து வயது சிறுமிக்கான தளமே இல்லாமலிருப்பதை உணர்ந்து பத்து வயது சிறுமிக்காக ஒரு படம் செய்ய நினைத்தார். அதுதான் ஸ்பிரிட்டட் அவே. இத்திரைக்கதை எழுத எழுத மிகப் பெரிதாய் வளர்ந்தது. மூன்று மணி நேரங்களுக்கு மேல் ஓடக்கூடியதாய் அமைந்தது. படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகவே மூன்று மணி நேரத் திரைக்கதையை குறைக்க நினைத்திருந்தார். அப்போது ஹாலிவுட்டின் புகழ் பெற்ற பிக்ஸார் நிறுவனத்தின் இயக்குனரான ஜான் மியாசகியை சந்திக்கிறார். ஜான் மியாசகியின் பெரும் ரசிகர். வால்ட் டிஸ்னி நிறுவனத்தோடு பேசி ஸ்பிரிட்டட் அவே வை ஹாலிவுட்டிலும் திரையிட ஏற்பாடு செய்தார்.

2001 ஆம் வருடம் வெளிவந்த ஸ்பிரிட்டட் அவே உலகம் முழுக்க வசூலைக் குவித்தது. ஜப்பானிய சினிமா வரலாற்றில் முதன் முறையாக இத்திரைப்படம் 274 மில்லியன் டாலர்களைக் குவித்தது. உலகெங்கும் உள்ள எல்லா அனிமேஷன் விருதுகளையும் வென்று வந்தது.

சிஹிரோ என்கிற பத்து வயது சிறுமி தன் பெற்றோருடன் காரில் புது வீட்டிற்கு செல்கிறாள். வழியில் பாதை மாறிவிட ஒரு வினோத உலகத்திற்குள் போய்விடுகிறார்கள். அது ஒரு மாய உலகமாக இருக்கிறது. பெரிய கடைவீதிகள். அழகான கட்டிடங்கள், உணவகங்கள் என மிக அழகான நகரமாக இருக்கிறது. எல்லா உணவகங்களிலும் சுவையான உணவுகள் சுடச்சுட தயாராக இருக்கின்றன. ஆனால் மனித நடமாட்டமே இல்லாமல் இருக்கிறது கடைகள் எல்லாமும் திறந்தே கிடந்தாலும் ஆட்கள் யாருமில்லை. சிஹிரோ வின் தந்தையும் தாயும் அங்கிருக்கும் ருசியான உணவுகளை உண்ண ஆரம்பிக்கிறார்கள். சிஹிரோ வையும் சாப்பிடச் சொல்கிறார்கள். சிஹிரோ மறுத்துவிடுகிறாள்.

சற்று நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தந்தையும் தாயும் பன்றிகளாக மாறிவிடுகிறார்கள். அதைப் பார்த்து பீதியடையும் சிஹிரோ அங்கிருந்து தப்பி ஓட நினைக்கிறாள். ஆனால் அங்கிருக்கும் ஒரு பெரிய ஆறு அந்நகரத்தை துண்டித்திருத்திருக்கிறது. அந்நகரம் ஆவிகளுக்கு சொந்தமானது. அங்கு ஒரு புகழ்பெற்ற குளியல் விடுதி இருக்கிறது. அந்தக் குளியல் விடுதியையும் அழகான நகரத்தையும் ஒரு சூனியக்காரி நிர்வகிக்கிறாள்.

சிஹிரோ வை ஹகு காப்பாற்றுகிறான். அவளுக்கு அந்நகரத்திலேயே குளியல் விடுதியிலேயே வேலை வாங்கித் தருகிறான். சூனியக்காரி சிஹிரோ வின் பெயரை சென் என மாற்றுகிறாள். சென் எல்லோருக்கும் பிடித்தமானவளாக இருக்கிறாள். நோ ஃபேஸ் என பெயர் கொண்ட ஒரு ஆவி அங்கு வேலை செய்யும் நபர்களுக்கு தங்க ஆசை காட்டி விழுங்கிவிடும். நோ பேஸ் தன்னை மிக தனியனாக உணரும் மனிதர்களை விழுங்கி தனக்குள் அடைத்துக் கொண்டால் தனிமை போய்விடும் என அது நம்பும். ஆனால் சென் தங்கத்திற்கு மயங்காமல் நோ ஃபேஸையும் நல்வழிப்படுத்துவாள்.

ஸ்டிங்கிங் ஆவி ஒன்று குளியல் விடுதிக்கு வரும். அது ஏகப்பட்ட கழிவுகளை தனக்குள் கொண்டிருக்கும். அது தூரத்தில் பெரும் நாற்றத்தோடு மாபெரும் அலையாய் வந்து கொண்டிருக்கும்போதே நாற்றம் தாங்காமல் ஆட்கள் சிதறி ஓடுவர். சென் அந்த ஸ்டிங் ஸ்பிரிட்டை பெரும்பாடுபட்டு குளிப்பாட்டுவாள். இப்படியாக ஏராளமான புதுப்புது கதாபாத்திரங்களும் பல சுவாரசியமான திருப்பங்களும் படம் முழுக்க நிகழ்ந்து கொண்டிருக்கும்.

சென் சூனியக்காரி பிடியிலிருந்து மீண்டு சிஹிரோ வாக மாறி தன்னையும் தன் பெற்றோர்களையும் அந்த ஆவி உலகத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் கதை மிக சுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கும்.

பேராசையின் வெளிப்பாட்டையும் அது தரும் சிக்கல்களையும் ஒரு இழையில் பேசினாலும் மிக சுவாரசிய கதாபாத்திர உருவாக்கங்களின் மூலம் ஸ்பிரிட்டட் அவே முற்றிலும் ஒரு புத்தம் புதிய உலகத்தை காட்சிப்படுத்தியிருக்கும். எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பேற்படாத காட்சிப் படங்கள் மிகத் திறமையாகக் கையாளப் பட்டிருக்கும். ஒவ்வொரு முறையும் இத்திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பிக்கும் கணம் தான் பிரக்ஞையில் இருக்கும். படத்திற்குள் நாம் விழுந்ததும் மொத்த படமும் முடிந்த பின்னர்தாம் சுற்றம் நினைவிற்கு வரும். அந்தளவிற்கான புனைவுத்தன்மையும் திருப்பங்களும் நிறைந்த படமிது.

மியாசகி இதுவரை பதினோரு முழுநீளத் திரைப்படங்களையும் ஏராளமான குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மியாசகியின் மகன் கோரோ வும் அனிமேஷன் பட இயக்குனர்தாம். மியாசகியின் மனைவியும் ஒரு ஒவியரே. அவரும் ஆரம்ப காலங்களில் தனது கணவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்

மியாசகியின் திரைப்படங்கள் என் குழந்தைகளுக்கு கதைகளின் உலகிற்குள் போவதற்கான முதற்படியாய் அமைந்திருப்பதை என் பேறு என்றே நினைக்கிறேன். மியாசகியின் திரைப்படங்கள் நல்லவை கெட்டவை என்கிற இருமைகளை முதலில் களைகின்றன. இரண்டு பொம்மைகளை உருவாக்கி அவை சதா அடித்துக் கொள்ளும் முட்டாள்தன ஹாலிவுட் கார்டூன்கள்களைப் பார்த்து மட்டுமே வளரும் குழந்தைகளிடமெல்லாம் மியாசகியின் திரைப்படங்கள் போய் சேர வேண்டும் என்கிற விருப்பமும் ஆசையும் இந்தக் கணத்தில் மிக அதிகமாய் மெலெழுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.