வெளிச்சமும் வெயிலும்

இப்போது பாதை சற்றே வளைந்து சென்றது. வளைந்த முனையில் ஒரு பெஞ்ச். என்ன எதிர்பார்ப்பில் இந்தக் காட்டில் பெஞ்ச், அதுவும் இவ்வளவு பெரிய, நான்கு பேர் தாரளமாக உட்காரக் கூடிய பெஞ்ச் அமைத்திருக்கிறார்கள், தெரியவில்லை. என்னைத் தவிர யாரும் இதுவரை அமர்ந்ததாகத் தெரியவில்லை. நுனியில் அமர்ந்தேன்.

நினைத்தது போலவே பாண்ட்டையும் தாண்டி பெஞ்ச் சில்லென மெல்லத் தொட்டது. சற்று “பழகிய” பின் நன்றாகச் சாய்ந்து கொண்டேன்.

இரு புறங்களும் மிக அடர்த்தியான, உயரமான மரங்கள் கொண்ட குறுகிய பாதை. இப்போது தலையை நிமிர்த்திப் பெஞ்ச் மேற் கட்டையில் வைத்து மேலே பார்த்தேன்.

photo 55

தரையிலிருந்து விர்ரென ஆரம்பித்து எங்கோ வானத்தின் மூலையில் போய் முடியும் மரங்களின் மஞ்சளும் பச்சையுமான நுனிகள் மிகத் தொலைவில் தெரிந்தன. உண்மையிலேயே இருபுற மரங்களின் நுனிகளுக்கு நடுவில் மேகங்களே இல்லாத வானம் ஓடையாகத்தான் தெரிந்தது.
மஞ்சள், பச்சைக் கரைகளுக்கு நடுவில் நுரைகளே இல்லாத வெளிர் நீல ஓடை. மர நுனிகள் அசைந்தாடிக்கொண்டிருந்தன. புறாக்களா அல்லது வேறு அது போல வேறு பறவைகளா, தெரியவில்லை. மாலை வேளைகளில் இந்த நேர்ப் பாதையின் மேல் படுதா – சிவந்து பாதையின் கடைசியில் புஸ்வாண பூச்சொரியும்
கண்கள் துளிர்த்தன. சரியான பளீர் ஜூன் மாத வெளிச்சம். ஆனால் சுரீரென உறைக்காத வெறும் வெளிச்சம் மட்டுமே. இது ஸ்வீடிஷ் வெளிச்சம் என்று போன வாரம் ஆல்ப் சொன்னதை நினைத்துக்கொண்டேன். என்னை அறியாமலேயே புன்னகைத்தேன்.

போட்டோக்களில் பளீரென வெளிச்சமாகவே இருக்கும், பின், ஏன் எல்லாரும் ஸ்வெட்டரும் கையுறைகளும் அணிந்திருக்கிறீர்கள் என்று அம்மா கேட்பார். வெளிச்சமும் வெயிலும் ஒன்றல்ல என்று சொன்னாலும் புரியாது. இப்போதும் கூட, இத்தனை வெளிச்சத்திலும் கனமான ஜில்லலை தாண்டிச் சென்றது. வெகு தூரமெல்லாம் தூரம் போகாது, பக்கத்திலேயே எங்காவது சுற்றிக்கொண்டிருக்கும். சில நொடிகளில் திரும்ப வரும்.

கழுத்தில் சுற்றியிருந்த மப்ளரை சற்று இறுக்கிக் கொண்டேன்.

சுற்றி இருந்த நிசப்தம் பழகிவிட்டிருந்தது, கடந்த சில மாதங்களில். வந்தபுதிதில் இந்த நிசப்தம் மூச்சு முட்டியது, இறுக்கியது. எதையாவது பிடித்துக்கொண்டு மேலே வந்துவிடவேண்டும் என்று பரிதவித்தது. அலுவலகம் விட்டு வீட்டிற்கு வந்தால் மாலை ஐந்து மணிக்கு சோபாவின் மேல் சுவர் கடிகார நொடி முட்கள் ஓடுவது அவ்வளவு துல்லியமாக கேட்கும். நான் சென்னையில் இருந்தவரை நொடி முள்ளிற்கு சத்தம் இருக்கும் என்று தெரியவே தெரியாது. தாங்க முடியாமல் சுவர் கடிகாரத்தை எடுத்து வார்ட்ரோப்பின் உள் வைத்துவிட்டேன்.

மணி என்ன? சிரமத்துடன் மெல்லிய கோட், ஸ்வெட்டர்களை ஊடுருவி மொபைல் போனை தேட வேண்டும். அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன். மதிய உணவு கூடத்திற்கு வந்த போது பனிரெண்டு இருக்கும். அந்த சாலட்டை சாப்பிட ஒரு பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்குமா. நான்கு மணிக்குத்தான் அடுத்த மீட்டிங்.

சுற்றி மனிதர்களே இல்லாத, மூச்சு முட்டும் நிசப்தத்தில், இவ்வளவு அடர்த்தியான மரங்களுக்கு மத்தியில் பரிசுத்தமான காற்றில், நான் வெளிச்சத்தில் காய்ந்துகொண்டிருப்பது ஓர் அலுவலக வேலை நாள் மதியம்.

மறுபடியும் புன்னகைத்துக்கொண்டேன்.

உலகின் பிரபல கார்களின் ஒன்றின் தலைமை அலுவலகமான இது ஒரு காட்டின் நடுவில் அமைந்திருக்கிறது. அலுவலகத்தைச் சுற்றி காட்டினூடே போடப்பட்டிருக்கும் வட்டப் பாதையில்தான் நான் இப்போது இருக்கிறேன். மொத்த பாதையும் ஒரு மைலுக்குச் சற்று அதிகமாக இருக்கும்

மழை இல்லா நாட்களில் மதிய வேளைகளில் இந்தப் பாதையில் ஒரு சுற்று சுற்றி வருவேன். சில நாட்களில் மாலை, வீட்டிற்குத் திரும்பும் முன்.

ஆல்ப் வாரத்தில் இரு நாட்கள் இந்தப் பாதையில் மதிய ஓட்டம் ஓடுவார். காதன்பர்க் மராத்தானில் வருடாவருடம் ஓடுவார்.

ஆல்ப் நான் இருக்கும் அணியின் என்னைப் போலவே ஓர் உறுப்பினர். என்னை விட குறைந்தது முப்பது வருடங்களாவது பெரியவராக இருக்ககூடும். வயது, போன வாரம் மிட் சம்மர் பார்ட்டியில் அவரது குடும்பத்தினரைப் பார்த்து நானே ஊகித்துக்கொண்டதுதான். இந்த வருடம் பல்கலை கழகத்திற்குப் போகிறாள் என்று மூத்த பெண்ணை அறிமுகப்படுத்தினார். துளி இடம் கூட விட்டு வைக்காமல் அழுத்தி அழுத்தி வண்ணம் பூசிய ஓவியம் போல் அவ்வளவு அடர்த்தியாக உறுதியாக இருந்தாள்.

கூட்டத்தில் தெரியாமல் கால் தடுக்கி என் மேல் சரிந்தால் நான் கண்டிப்பாக காயப்பட்டு போவேன்.

அனிக்கா இப்படியில்லை. பெயருக்கும் உருவத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல் மெல்லியராய் இருந்தார். பொன்னிற கூந்தலும் உள்ளடங்கிய உதடுகளும் எல்லாவற்றிற்கும் மேல் பளீரென சிரிப்பு, தயக்கமே இல்லாமல், முற்றிலும் புதியவர்களிடமும் இப்படி சிரிப்பவர்களை நான் இதற்கு முன் சந்தித்ததாய் நினைவில்லை. முக்கியமாய் ஒரு மேலதிகாரியை, அணித் தலைவியை.

முகத்தினுள் புன்னகை எப்போதுமே கொப்பளித்துக்கொண்டிருக்கும் என்று தோன்றும். சிரமப்பட்டு முக தசைகள் மூலம் தேக்கிக்கொண்டிருப்பதாக படும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தசைகள் இளகி, ஒரு வாளிப் புன்னகை கண்கள் மட்டுமல்ல, வாய், புருவங்கள் வழியாகவும் கொட்டும்.

சென்னையில் போன் வழியாக “டிஸ்கஷன்” எனப்படும் இண்டர்வியுவின் போது பெரிதாய் குறிப்பிடும்படி ஒன்றும் தோன்றவில்லை. அனிக்கா இங்கிலீஷை தட்டு தடுமாறி பேசியது அவ்வளவு வியப்பாக இல்லை. நம்மைப் போலவே இந்த ஸ்வீடிஷ்காரர்களுக்கும் இங்கிலிஷ் இரண்டாவது மொழிதான். தைரியமாக பேசு என்று முன்னரே எங்கள் எங்கேஜ்மெண்ட் மேனேஜர் சொல்லி வைத்திருந்ததால் சகஜமாகப் பேசினேன்.

ஆனால் காதன்பர்க் வந்திறங்கி நேரில் பார்த்தபோது பிரமித்துப் போனேன். சந்தேகமே இல்லாமல் பேரழகி. முப்பதெட்டு வயதிற்கும் இவரது தோற்றத்திற்கும் வெகு தூரம் இருந்தது.

எங்கள் அணி ஒரு சர்வதேச அணி. இருந்த பதினோரு பேர்களில் ஆறு உள்ளூர் ஸ்வீடிஷ்காரர்கள், இரு நார்வேயர்கள், ஒரு நைஜீரியர் மற்றும் இரு இந்தியர்கள்.

ஒரு மேலாளர் போல் முதல் நாளிலிருந்தே யாரிடமுமே நடந்துகொள்ளவில்லை. அணி கூட்டம் நடந்துகொண்டிருக்கும் போது சட்டென எல்லாருக்கும் பெரிய ப்ளாஸ்க்கில் காப்பியையும் செம்லார் எனப்படும் இனிப்பு பன்களையும் கொண்டுவருவார்.

இந்த அணி, பதறாமல் வேலை செய்யும் முறை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. சென்னையில் எப்போதும் எல்லாமே “நேற்றே” வேண்டும். ஒரு புராஜக்ட் கூட அடித்துப் பிடித்து கடைசி நிமிடம் வரை பதறாமல் செய்ததே இல்லை. இங்கோ, பொறுமையாய் வாரக் கணக்கில் திட்டமிடல் மீட்டிங்குகளே போய்க் கொண்டிருக்கின்றன.

எல்லாருமே தயக்கமே இல்லாமல் பேசுவார்கள். முக்கியமாக அனைவருமே “எனக்கு இது புரியவில்லை” அல்லது “இது தேறாது என்று தோன்றுகிறது. இல்லை என்று என்னை கன்வின்ஸ் செய், பார்ப்போம்” என்றுதான் ஆரம்பிப்பார்கள். சென்னையிலிருந்து வந்திருக்கும் எனக்கு ஆச்சரியமாக இருந்தாலும் போகப்போக பழகிக்கொண்டேன்…

அப்பாவிற்கு போன் செய்யவேண்டும் என்ற எண்ணம் நினைவிற்கு வந்தவுடன் உட்கார்ந்திருக்க முடியவில்லை. மெல்ல எழுந்து பாதையில் நடக்க ஆரம்பித்தேன். இன்னும் சற்று தூரம் போனால் ஓர் ஏரி வரும். ஓரப் பாறைகளில் முட்டி ததும்பிக் கொண்டிருக்கும். மேகமில்லாத நாட்களில் அதன் கரையில் அமர்ந்திருப்பேன். இந்த ஊரில் வானம் என்னவோ மிக அருகில் தெரிவது போலத் தோன்றும். நான் ஒரு ஒற்றைக் கண் ராட்சதனாக கண்ணாடி பூமிப் பந்தை கண்ணிற்கு அருகில் வைத்துப் பார்ப்பது போல.

மாலை வேளைகளில் வலம் வரும் போது, பார்த்துக்கொண்டிருக்கும் போதே வானம் வெளிறிய இளஞ் சிவப்பு வர்ணத்திற்கு மாறும். அல்லது ரோஜா பின்னர் அடர் சிவப்பு. அடர்ந்துகொண்டே வந்து தகதகக்க ஆரம்பிக்கும். கண்களை எவ்வளவுதான் விரித்து வாங்கிக்கொள்ள முடியும்?

சில சமயங்களில் அந்தப் பக்கமாக வரும் மேகங்களிலும் அந்த நிறம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொள்ளும். மேக ஓரங்களில் சிவந்து, சிவந்து ஏதோ கடுமையான வர்ணத்தில் ஜொலிக்கும். எரியும் டார்ச் விளக்கை மூடிப் பிடித்துக் கொள்ளும் கை விரல்களின் வர்ணத்தில். கொஞ்சம் எட்டி எப்படியாவது பறந்து அதன் அருகில் போய்விட்டால் நானும் அந்த வர்ணத்திற்கு மாறிவிடுவேன்.

ஏதாவது ஒரு ராட்சதப் பறவை என்னைக் கொத்தி வானத்தின் பக்கம் கொண்டு போனால் நானும் தகதகக்க ஆரம்பிப்பேன். ஆரம்ப இளஞ் சிவப்பு வர்ணம் அனிக்காவை நினைவூட்டும். அருகே நெருங்கத் தயங்க வைக்கும், தூரத்திலிருந்தே ரசிக்கவைக்கும் வர்ணம்.

சற்று நேரம் கழித்து, கணக்கில்லா அழியா கணங்களுக்குப் பின் வானக் கண்ணாடி மெல்ல மெல்ல அணைய ஆரம்பிக்கும். எனக்கோ கிறுகிறுத்து வரும்…

Evening Walk2
இன்று சற்று நேரம் ஏரிக்கரையில் நின்று ஏரியின் அந்தப் பக்க கரையை சற்று நேரம் துழாவிக்கொண்டிருந்தேன்.

பின் பாதையில் நடந்துகொண்டே மொபைலை எடுத்து காலிங் கார்ட் “பின்” எண்ணை, எட்டு அல்லது ஒன்பது எண்களை பொறுமையாக அழுத்தி அப்பாவை அடைந்தேன். வழக்கமான கேள்விகளான “அங்க இப்ப என்ன மணி, குளுருதா” போன்றவைகளைத் தாண்டி சற்று ஊர் கதைகளைப் பேசும் போது கவனம் தவறி விட்டேன்.

சங்கரு வீடு பால்காச்சு அடுத்த வாரம்தானே என்று கேட்டுவிட்டேன். “உனக்கு எப்படிலே தெரியும் ” என்ற கேள்விக்குப் பொய் சட்டென வரவில்லை.

“கோலப்பன் சொன்னான்”

மௌனமாக இருந்தார்.

“கீழப்பாவூர் பயலுக கிட்ட பாத்து நடந்துக்கோ” என்றவர் வழக்கமான வாக்கியத்தையும் சொல்லிதான் முடித்தார்.

“அவனுங்களுக்கு ரத்தத்திலேயே கள்ளத்தனம் உண்டுடா, பாத்துக்கோ”

இத்தனைக்கும் கோலப்பன் எனக்கு அண்ணன் முறை – கோலப்பனின் அப்பா, பெருமாள் எனக்கு பெரியப்பா முறை வேண்டும். என் அப்பா, கோலப்பன் அப்பா எல்லாருமே நெல்லை கிராமங்களில் இளமையில் ஒன்றாக விளையாடி, வயலுக்குப் போய் பின் என் அப்பா மட்டும் “பட்டணம்” வந்துவிட்டவர்.

என்னுடைய குழந்தை நினைவுகள் எல்லாம் சென்னையில் ஒரு காலத்தில் உண்மையிலேயே மாந்தோப்பு இருந்த காலனியில்தான்.

என்னவோ வாக்குவாதம், மனஸ்தாபம், வளவில் இருக்கும் குடும்ப வீட்டை தனக்கு எழுதிக் கொடுக்காமல் ஏதோ வாக்குவாதத்தில், வீம்பில் வெளியாளுக்கு கொடுத்துவிட்டாராம் பெருமாள் பெரியப்பா. என்றோ நடந்த இந்த “கடைசி காலத்ல சொந்த ஊருக்கு போகமுடியாம பண்ணிட்டானே” புண் அப்பா மனதில் இன்றும் ஆறாது இருக்கிறது.

அந்த புண்ணை ஆறாமல் எனக்குக் கடத்துவதில் அப்பா முயன்று கொண்டே இருக்கிறார். எனக்கு இது என்றோ சலித்துவிட்டது. பொதுவாக காதில் போட்டுக் கொள்ள மாட்டேன்.

அப்பாவை கூட்டி வந்து உலகத்தின் இந்த பகுதியைக் காட்ட வேண்டும். இந்த பூமிப் பந்தில் விதவிதமான நிலங்கள், வித விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று காட்டவேண்டும் இன்னும் பழைய கதையை நினைத்துக் கொண்டிராமல் வளவை விட்டு மனதாலும் கொஞ்சம் வெளியே வரச் சொல்லவேண்டும். அப்படியும் நைஜீரிய கென்னடியைப் பார்த்து என்ன சொல்வார் என்று சொல்லமுடியாது. கென்னடியின் கை விரல்களை, கறுத்து சுருக்கங்களுடன், காய்ந்த விரல்களைப் பார்த்து அய்யே என்று முகம் சுளிக்கலாம்.

யோசித்துக் கொண்டே பாதையில் தொடர்ந்தேன். சற்று நேரம் கழித்து எதிரே சற்றே சலனம் கேட்டது. யாரோ மதிய ஜாகிங் வருகிறார்கள் என்று முதலில் நினைத்தேன்.

இல்லை, ஒரு கொழுத்த மான்.

பாதையை கடந்து கொண்டிருக்கும் போது என்னுடைய நடைச் சத்தத்தை கேட்டு நின்றிருக்கும் போல. தலையைத் திருப்பி என்னையே பார்த்துக்கொண்டு நின்றது. எனக்கு ஆச்சரியமாக இல்லை. இந்த ஊரில் மான்கள் தென்படுவது பழகிவிட்டிருந்தது. இரு கால்களில் நின்றால் என் இடுப்புத் தாண்டும் அளவிற்கு முரட்டு முயல்கள் தென்படும். ஆனால் வேறு எந்த மிருகங்களும் இருப்பதாக தெரியவில்லை.

கொஞ்சம் புதராக இருந்தாலே பூச்சி பொட்டாவது இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வளர்ந்த எனக்கு இவ்வளவு பெரிய காட்டில் வெறும் முயல்களும் மான்களும் அணில்களும் மட்டும் தென்படுவது ஒரு மாதிரி ஏமாற்றம்தான். அழகான, வித விதமான வர்ணங்களுடன் ஆனால் வாசனையே இல்லாத பூக்கள் போல.

பாதையில் நின்ற மானிற்கு நான் ஆச்சரியமளித்திருக்க வேண்டும். இந்த நிறத்தில் இதற்கு முன் மனிதர்களைப் பார்த்திருக்காது. மானிற்கு ஸ்வீடிஷ் புரியுமா? தெரியவில்லை, ஆனால் நாய்களுக்குத் தெரிந்திருக்கிறது., ஸ்வீடிஷில்தான் அதட்டுகிறார்கள்.

நான் வழியில் நின்ற மரங்களிடம் நாளை பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டே பாதையின் முடிலிருந்த அலுவலக கட்டிடத்திற்கு வந்தேன். புகை பிடிப்பவர்களுக்கான இடத்தில் கைகளில் சிகரெட்டுகளும் இன்னும் சிலரின் கைகளில் ஐஸ்க்ரீம் கோன்களுமாய் கூட்டம்.

என் இருக்கையின் முன் புறத்தில்தான் அனிக்காவின் இருக்கை. ஆளைக் காணவில்லை. இன்றைய நான்கு மணி கூட்டம், நாளை காலை 6:30 மணிக்கு ஆஸ்திரேலிய மார்க்கெட் அணியினருடன் நடக்க விருக்கும் கூட்டத்திற்கு தயாராக இருக்கிறோமா என்பதற்கான கூட்டம்.

கூட்டத்திற்கான கூட்டம். சற்று வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆஸ்திரேலிய மார்க்கெட் லாஞ்ச் பற்றிய இந்த முன்னேற்பாடு கூட்டங்கள் கடந்த இரு மாதங்களாகவே போய்க்கொண்டிருக்கின்றன. மிக மந்தம்தான். உலகின் அந்த மூலையில் இருப்பவர்களிடம் மெதுவாக கதை பேசி விஷயத்திற்கு வருவதற்கு முன் திட்டமிட்டிருந்த நேரத்தில் பாதி முடிந்துவிடும்.

நாளை காலை டாக்ஸ் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். பின் அலுவலகம் திரும்ப பத்து மணி ஆகிவிடும். இன்று நான்கு மணி மீட்டிங் முடிந்தவுடன் அனிக்காவுடன் இதை மறக்காமல் சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

நான்கு மணி கூட்டம் வழக்கம்போலத்தான் ஆரம்பித்தது. அல்லது அப்படிதான் நினைத்துகொண்டிருந்தேன். கூட்டத்தில் அனிக்காவின் தலைவியும் கலந்துகொண்டார். இந்த ஊரில் எல்லா பெரிய பதவிகளிலும் பெண்களே இருக்கிறார்கள் என்று பட்டது.

அனிக்கா இன்று மிக நேர்த்தியாக உடை அணிந்திருந்தார். என்னை நோக்கி முறுவலித்தாலும் அவர் இன்று சற்று பதட்டமாக இருப்பது போலத் தோன்றியது.

வழக்கம்போலவே இங்கிலிஷில் ஆரம்பித்த கூட்டம் சற்று நேரத்திலேயே ஸ்வீடிஷிற்குச் சென்றுவிட்டது. ஆனால் வழக்கம் போல நான் இருக்கிறேன், இங்கிலீஷில்தான் பேச வேண்டும் என்று மற்றவர்களிடம் சொல்லும் அனிக்கா இன்று ஸ்வீடிஷ்ஷிலேயே மூழ்கி விட்டார். ஆஸ்திரேலிய மார்கெட் அணியினரைப் பற்றிதான் இருக்கவேண்டும். மார்கெட் லாஞ்ச் ஸ்டேடஸ் மிக மெதுவாய், மோசமாய் இருந்ததை யாரும் சொல்லவேண்டியதே இல்லை. கண் முன்னே திரையில் சம்மரி ரிப்போர்ட்டில் இருந்த நாட்கள் தெளிவாகச் சொல்லின.

உண்மையில் அந்த சிட்னி அணியினர் ஆச்சரியமளித்தார்கள். வாரத்தில் இரு நாட்கள் ஏற்பாடு செய்திருக்கும் ஆடியோ கூட்டத்திற்கு ஒன்று மிக தாமதமாய் வருவார்கள். அல்லது மிக தேவைப்படும் விவரம் தெரிந்தவர் வரமாட்டார். சில சமயம் வேண்டுமென்றே இழுத்தபடிப்பது போலத் தோன்றும். என்ன அய்யா ஸ்டேடஸ் என்றால் கடந்த இருவாரங்களாக சொன்னதையே புதிதாய் அன்றுதான் சொல்வது போல சொல்வார்கள். ஸ்வீடிஷில் அனைவரும் அதிர்ந்து பேசிக்கொண்டிருக்க நான் கூட்ட அறையை நோட்டம் விட்டேன். அட, இந்த அறையா. மெல்ல எழுந்து சன்னலுக்கு வெளியே பார்த்தேன்.

நான்காவது மாடியில் அமர்ந்திருந்த அறைச் சன்னலுக்கு வெளியே நான்காவது மாடி சன்னல் வரை வளர்ந்திருக்கும் மரத்தின் உச்சியில் பெரிய கூடு. பக்கத்து ஊஞ்சலாடிய கிளைகளில்  சிறு தலைக்கு பொருத்தமில்லாத குண்டு உடல்களுடன் குருவிகள். இந்த வகையான குருவிகள் இந்த ஊரில் எங்கும் பார்த்திருக்கிறேன். நேற்று மாலை  கூட ட்ராம் நிலையத்தில் வைத்துப் பார்த்தேன்.

மனிதர் யாருமே பார்த்திருக்க மாட்டாத இந்தக் கூட்டை இவ்வளவு உயரத்திற்கு இணையாக நின்று நான் பார்த்துகொண்டிருப்பது எனக்கு எப்போதுமே உவப்பான ஒன்று…

“ஹேய் Hey” என்று அனிக்கா என் தோளைத் தொட்டார்.

சற்றே திடுக்கிட்டு “என்ன” என்றேன்.

“நாளை கண்டிப்பாய் க்ளிப் ரிவ்யு செய்து சைன் ஆப் (sign off) கொடுத்துவிடுவார்தானே” என்று கேட்டார்.

“க்ளிப்பா? அவர் இன்னும் இரு வாரங்களுக்கு விடுமுறை என்று இன்று அலெக்சான்ரா சொன்னாரே” என்றேன்.

“What? இன்னும் இருவாரங்களுக்கா?”

“ஆமாம். ஆனால் போன வார மீட்டிங்கில் கூட விடுமுறையைப் பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை?” என்றேன்.

அனிக்கா சட்டென தலையைத் திருப்பிப் பார்த்தார். முகம் மாலை நேர ரோஜா வர்ணத்திலிருந்து சிவந்த நிறத்திற்கு மாறிய வானம் மாதிரியிருந்தது.

“அப்படியா”

சில நொடிகளுக்குப் பின் “ஹூம்… BLOODY CONVICTS. All in their BLOOD. What else can we expect from these BLOODY CONVICTS?” என்று நறுநறுத்துக் கொண்டே எனக்குப் பின்னே வெறித்தார்.

நான் மெல்ல தலையைத் தாழ்த்தினேன். பின், சன்னலுக்கு வெளியே வெறித்தேன். மேகங்களே இல்லாமல் வானம் அப்போதுதான் உறை பிரித்தது போல இருந்தது.

சுளீரென வெளிச்சம், கண்களைக் கூச வைத்தது.

0 Replies to “வெளிச்சமும் வெயிலும்”

  1. அன்பு சிவா,
    அருமையான கதை. வருணனை பிரமாதம்
    ஆனால் “கீழப்பாவூர் பயலுக கிட்ட பாத்து நடந்துக்கோ”
    இந்த இடத்தில் முடிவு ஏற்கனவே தெரிந்து விட்டது. வாழ்த்துக்கள். மனிதர்கள் அனைத்து இடத்திலும் இருப்பார்கள் என்று.
    அன்புடன்
    கணேஷ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.