மகரந்தம்

வீட்டிற்கு ரேஷன்: நியு யார்க்

எதை எடுத்தாலும் அரசாங்கமே எடுத்துச் செய்யவேண்டும், ஏனெனில் தனியார் எல்லாரும் அயோக்கியர்கள், லாபம் ஒன்றைத் தவிர வேறெதையும் கருத மாட்டார்கள், ஏழை பாழைகளைச் சுரண்டுவதைத் தவிர வேறொன்றும் அவர்களுக்கு நோக்கமே கிடையாது என்று புலம்புவதைச் செய்வதைத் தவிர இடது சாரிகளுக்கு உலகெங்கும் வேறேதும் தெரியாது. இந்திய இடது சாரிகள் புலம்புவதில் பெயர் பெற்றவர்கள். தம் சொந்த வாழ்வில் எத்தனை வசதிகளை வைத்துக் கொள்ள முடியுமோ, அதையெல்லாம் வைத்துக் கொண்டு, முதலாளிகளே கயவர்கள், தனியார் நிறுவனங்களே சுரண்டல் வாதிகள் என்று ஓலமிடுவதில் இவர்களுக்கு ஒப்பீடாக யாரையும் சொல்ல முடியாது. அதுவும் கொல்கத்தா வங்க மத்திய வர்க்க மார்க்சியர்கள் இதில் மிகவுமே வல்லவர்கள். எதில்? தாம் தினசரி அரசு நிறுவனங்கள், அரசு அமைப்புகளில் போய் பெஞ்சைத் தேய்த்து விட்டு வந்து, பேனாவை மூன்று அங்குலம் மட்டுமே நகர்த்தி விட்டு வந்து (கையெழுத்துப் போட்டு ஆஜர் என்று தெரிவிக்க மட்டுமே அந்த நகர்த்தல்) உலகில் உள்ள மற்றெல்லாரும் அயோக்கியர்கள் என்று சாயா குடித்தபடி வம்பளப்பதில் இவர்களுக்கு நிகரே கிடையாது. இதை அட்டா என்று நாமகரணம் சூட்டி அதை ஒரு புனிதப்பசுவாகக் கூட ஆக்கி இருக்கிறார்கள். அதில்தான் தன்னுடைய அனைத்து விமர்சனக் கருத்துகளுக்கும் பாதை திறந்தது, தன் கூரிய விமர்சனத் திறனின் வேர்கள் இந்த அட்டாவில் என்று புல்லரிக்கும் ஒரு உலக மஹா இடது சாரி விமர்சகர் தீபேஷ் சொக்ரபர்த்தி என்னும் உலகச் சுற்றில் எப்போதும் இருக்கும் பல்கலை மார்க்சியர். (பார்க்க இவரது ‘ப்ரொவின்ஷியலைஸிங் யூரோப்’ என்கிற புத்தகத்தில் அட்டா பற்றிய கட்டுரையை.)

அது இப்போதெல்லாம் அத்தனை நன்கு நடக்கவில்லை, உலகமயமாதலில் முதலியம் வந்து இந்த அட்டாவுக்குக் கூட வேட்டு வைத்து விட்டது என்று வேறு கவலைப்பட்டார். கொல்கத்தாவுக்குக் கடந்த சில ஆண்டுகளில் போகாததால் இவர் சொன்னது நிஜமா என்பது தெரியவில்லை. ஆனால் மிகச் சமீபத்து ஒளிப்படங்கள் எல்லாம் கொலகத்தா இன்னும் 19ஆம் நூற்றாண்டிலேயே இருப்பது தெரிந்தது. 40 ஆண்டு மார்க்சிய ஆட்சியின் நோக்கமே அதுதான்-, 21 ஆம் நூற்றாண்டுக்கு மக்கள் வந்து விடாமல் அவர்களை மூன்று நான்கு சத வருடங்கள் (நூறாண்டுகள்) பின்னே தள்ளி வைப்பது என்பது அது. இதேதான் மாவோயிஸ்டுகளின் மொத்த அஜெண்டாவும். எல்லாருமாகக் கற்காலத்துக்குப் போய் வாழ்ந்தால் முழு சமத்துவம் கிட்டும், அங்கே முதலாளிகளே இல்லை என்ற மாயாவாதம் அவர்களுடையது! – ஆம் 19ஆம் நூற்றாண்டிலேயே கொலகத்தா இருக்கிறது என்பது தெரிய வந்தது.

ஐயோ, இந்திய முதலியம் இந்தியாவைச் சுரண்டி ஓட்டாண்டி ஆக்குகிறதே என்று தினம் எல்லாப் பத்திரிகைகளிலும் கட்டுரை எழுதிக் களைத்துப் போகும் மாவோயிசங்களும், மார்க்சீயங்களும், அரசாங்க அலுவலகங்களில் தங்கள் இசவாதிகள் உட்கார்ந்து வாரத்துக்கு ஐந்து நாட்கள் ஒழுங்காக வேலை செய்தாலே இந்த முதலியச் சுரண்டலுக்கு ஏதாவது வழி செய்யலாம். மக்களுக்கு அவர்களுக்கு அரசு மூலம் கிட்ட வேண்டிய ஒரு வசதிகளையும் அவர்களுக்குப் பெற்றுத் தர இந்த இடது சாரிகளால் இத்தனை பத்தாண்டுகளில் முடியவில்லை. எங்கும் அக்கறையின்மை, எங்கும் வேலைச் சுணக்கம், எங்கும் தரம் பற்றிய முழு அலட்சியம் இதாலேயே அரசுச் சொத்துகள் பல்லாயிரம் கோடிகளில் ஒவ்வொரு வருடமும் வீணாகின்றன. நாம் ஒவ்வொருவரும் போகும் எந்த அரசுக் கட்டிடமும் எத்தனை புழுதி, எத்தனை குப்பை, எத்தனை கந்தரக் கோளமாக இருக்கிறது என்று யோசியுங்கள். தம் வேலையிடத்தைக் கூடத் துப்புரவாக வைக்க முடியாத இந்தப் பேனா சுழற்றும் வீர விமர்சகர்கள் இந்திய வறுமைக்கும், மக்களின் பெரும் துன்பங்களுக்கும் அனைத்து விடைகளும் தமக்கே தெரியுமென்று தினமும் பத்திரிகைகளில் ஆவேசம் கொள்வதைப் பார்க்கையில் இவர்கள் சாப்பாட்டுக்குப் பதில் கஞ்சாதான் உண்ணுவார்களோ என்றுதான் தோன்றும்.

ஏதோ இப்படி ஒரு அலட்சியம், மக்களின் நலன் குறித்த பூரணமான அக்கறையின்மை ஆகியன இந்திய அரசு அலுவலர்களுக்கு மட்டுமே உரித்தானது என்று நினைக்க வேண்டாம்.

முதலியச் சுரண்டலில் உலகிலேயே வேறெந்த நாட்டாலும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் அமெரிக்க முதலிய நாட்டின் அரசு அதிகாரிகள் என்ன கிழிக்கிறார்கள் என்று பாருங்கள். நியுயார்க் நகரத்தில் பல்லாயிரக் கணக்கான வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் இருக்க இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கையில், அரசுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் குறை வாடகை இருப்பிடங்கள் பல்லாயிரக்கணக்கில் யாருக்கும் தரப்படாமலும், பழுதுபார்க்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும் வீணாகின்றன, அதுவும் பற்பல ஆண்டுகளாக இந்தக் கேவல நிலை என்று அமெரிக்க முதலியத்தின் பிரசார பீரங்கியாகச் செயல்பட்டுக் கொண்டு, ஏதோ இடது சாரி போல பாவனை செய்யும் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை சொல்கிறது.

உலகெங்கும் அரசு அமைப்புகள் என்றால் தீராத ஊழல் என்பதுதான் விதி. அரசுடைமை ஆக்குதல் என்பதன் மேல் உலக இடது சாரிகளின் அணையாக் காதல் என்பதே அனைத்து மக்களும் தினம் பீடி குடித்து, சா கிளாஸில் தேநீரைச் சுழற்றியபடி டீக்கடை பெஞ்சில் அமர்ந்து, உலக அரசியல் பேச அதுதான் ஒரே வழி என்பதுதான் என்று நினைத்தீர்களானால், அதுதான் மிக மிகச் சரியான கணிப்பாக இருக்கும். வாழ்க டீக்கடை பெஞ்சுகள், வாழ்க ’அட்டா’. இவ்வளவு சுலபமாகப் பாட்டாளிகளின் சொர்க்கம் கிட்டுமென்று மார்க்சுக்குத் தெரியாமல் போய் விட்டதே, என்ன துரதிருஷ்டம் அவருக்கு!

??ணையாக் காதல் –

http://www.nytimes.com/2013/12/16/nyregion/in-public-housing-units-languish-in-limbo.html?hp&_r=0

oOo

மன அழுத்தத்தில் பெரு: பௌத்தம்

Buddhism_in_Peru_Lama_Zen_Brazil_Japan_Religion_Meditation_Stress_Converts

ஜப்பான் அல்லாமல் ஜப்பானியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் பெரு இருக்கிறது. இருந்தாலும் அவர்களில் பலர் கத்தோலிக்கர்களாக மாறிவிட்டார்கள். அப்படியிருந்தும் புத்த மதம் பெரு-வில் வளர்கிறது. மன அழுத்தத்திலும் வேலை நெருக்கடியிலும் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளிலும் சிக்கித் தவிக்கும் பெரு நாட்டினருக்கு தியானமும் புத்துணர்வு அடைவதற்கும் புத்தம் சரணம் கச்சாமி என ஒருமுகப்படுத்திக் கொள்வது உதவுகிறது.

http://www.pri.org/stories/2013-12-30/limas-stressed-out-are-turning-zen-buddhism

oOo

உங்கள் மாநகரத்தை மாபெரும் சொர்க்கமாக்குவது எப்படி?

City_Great_Mirror_Rearview_Landscape_Mayors_Analysis_Government_Growth_2020

வளரும் நாடுகளில் நகரங்கள் பெருவளர்ச்சி காண்கின்றன. வாய்ப்புகளைத் தேடி மனிதர்கள் குவியும் இடமாக நகரம் ஆகியிருக்கிறது. வளர்ந்த நாடுகளிலோ நகரங்களின் வசதிகள் பழையதாகி விட்டன. காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்ள நேரமில்லாத ஓட்டத்தில் பிதுங்கி நிற்கின்றன. 2030ஆம் ஆண்டில் ஐந்து பில்லியன் பேர்கள் நகரங்களில் வசிப்பார்கள்; உலக மக்கள்தொகையில் ஐந்து பேரில் மூவர் நகரங்களில் இருப்பதாக மாறியிருக்கும். இந்த வளர்ச்சியை எப்படி சமாளிப்பது? எவ்வாறு குறைந்த வரிச்சுமை கொண்டு சகல வசதிகளும் செய்து தருவது? மாற்றத்தை எதிர்கொள்வதற்கான திட்டமும் ஆய்வும் மெக்கின்ஸி மேற்கொள்கிறது.

http://www.mckinsey.com/insights/urbanization/how_to_make_a_city_great

oOo

மூளையும் நரம்பியலும்: சமூக அறிவியல்

Plugged_in_Social_Science_Neuroscience_Imaging_Human_Brain_Project

நம்முடைய தலைமைச் செயலகம் எவ்வாறு இயங்கும் என்பதை கணினி மூலம் பார்க்கலாம். என்ன என்ன செயல்களை நடத்தும்போது எவ்வாறு இயங்கும் என்பதை கணித்திரை வழியாக உருவகப்படுத்தி பார்க்கலாம். ஆனால், சிரியாவில் உயிர்க்கொல்லிகுண்டுகளை அரசே போடும்போது தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று ஒரு சாரார் மூளையும்; ”அது அவர்கள் உள்ளூர் பிரச்சினை… அதில் தலையிட நாம் மூன்றாம் மனிதர்கள் யார்?” என ஒதுங்கி நிற்கும் மூளையும் எப்படி முடிவெடுக்கிறது? அதை படம் பிடித்து அறிவது எப்படி என்னும் ஆராய்ச்சி கடந்த பதினைந்தாண்டுகளில் எங்கே முன்னேறி இருக்கிறது?

http://www.edge.org/panel/headcon-13-part-vi

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.