சாண்பிள்ளை

ஆலிஸ் மன்ரோ விமரிசகர்களால் கனடா நாட்டு ஆன்டன் செகாவ் என அன்புடன் கொண்டாடப்படுகிறார். தனது கிராமத்தின் எளிய மனிதர்களை, அதன் பழமை வாசனையோடு அவர் கொண்டாடுகிறார். 2013ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவரது ‘டியர் லைஃப்’ (அட கடவுளே!) சிறுகதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டது.

தமிழில்: எஸ். ஷங்கரநாராயணன்

அப்பா நரிப் பண்ணை வைத்திருந்தார். அதாவது, ‘வெள்ளி’ நரிகள். வெண்திட்டுகள் கொண்ட செந்தாய்கள். நீள் முற்ற வெளியில் வரிசையாய் நரிக் கூண்டுகள். இலையுதிர் காலத்திலும், குளிர்காலத் துவக்கத்திலும் அவற்றின் தோல் திரட்சியடைந்திருக்கும். அப்பா அவற்றைக் கொன்று, தோலுரித்து, தோலிகளை ஹட்சன்ஸ் பே கம்பெனிக்கோ, மான்ட்ரியல் தோல் வியாபாரிகளுக்கோ தருவார். வருடம் பிறந்தால் இந்தக் கம்பெனிகளில் இருந்து எங்களுக்கு சாகசப்படங்களுடன் காலண்டர்கள் வந்தன. சமையல் அறைக் கதவில் தொங்கவிட்டு அவற்றை நாங்கள் அழகு பார்ப்போம். குளுமையான நீல மேகப் பின்னணியில் கருப்பான பைன்மரக் காடு. வடபுலத்தின் ஆபத்தான காட்டாறுகள். அத்தனை உயரமேறி நாட்டிய ஆங்கில, அல்லது பிரெஞ்சுக் கொடிகள். மலையேறிகள் முதுகு பாரத்தில் ஙப்போல் வளைந்திருப்பார்கள்.

கிறிஸ்துமஸ்சுக்கு பல வாரங்கள் முன்னிருந்தே அப்பாவுக்கு ராத்திரிஉணவு கொண்டபின் கூட, நிலவறையில் வேலையிருக்கும். நிலவறை வெள்ளையடித்த கீழறை. மேஜைக்கு வாகாக வயரில் தாழத் தொங்கும் நூறு வாட் பல்பு. தம்பி லெயர்துவுடன் நான் நிலவறையின் மேற்படியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பேன்.

அப்பா நரியின் தோலியை உரித்து அதன் உட்புறத்தைப் பிதுக்கி வெளித் திருப்பும்போது அது ஆச்சர்யப் படும்படி இத்துனூண்டாய்க் காணும். நரியா இது, பாவம், குட்டி எலி என்பதாய்க் காணும். இந்தத் தோல்தான் அதன் எடை, உள்ளே மத்ததெல்லாம் ஜுஜுபி, என்று தோன்றும். வழுவழுப்பான அவற்றின் வெற்றுடல்களை ஒரு சாக்குப்பையில் கொட்டி புதைத்து விடுவோம். எடுபிடி வேலை செய்கிற ஹென்ரி பெய்லி ஒருமுறை இந்தச் சாக்கை எடுத்துப்போகையில் என்னை அதால் ஒரு உரசு உரசிச் சென்றான். கிறிஸ்துமஸ் பரிசாக்கும் உனக்கு, என்கிற நக்கல் வேறு. அம்மாவுக்கு அவன் செய்தது வேடிக்கையாயில்லை.

வாஸ்தவத்தில் அவளுக்கு இந்த மொத்தக் கச்சடாவுமே, சாவடிப்பது, தோலை உரிப்பது, சீர்ப்படுத்துவது… அதுவும் வீட்டில் வைத்து இதையெல்லாம் செய்வது பிடிக்கவேயில்லை. என்ன ஒரு வாடை! தோலியை உரித்துத் திருப்பி பலகையில் போட்டு அப்பா அதை நறுவிசாகச் சுரண்டி தோலியின் உட்பக்கமாய் ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்த நாள திரட்சிகளை, சிறு சதைக் கதுப்புகளை நீக்குவார். இரத்தமும் மிருக ஊனுமாய் ஒரு வாடை. அத்தோடு நரிகளுக்கே இருக்கிற அந்த வாடையும் கிளம்பும். மொத்த வீட்டையுமே ஆக்கிரமித்து நெடிதுயர்ந்த நெடி. தோலுரிக்கிறதுக்கும் ஒரு பருவம் இருந்ததால், பைன் குச்சிகளின் தாவரநெடியைப் போல, ஆரஞ்சுப் பழ வாசனை போல, அந்த நெடியும் ஒரு பருவகாலத்தை நினைவூட்டும்.

Firefox_Silver_Haired_Portrait_Faces_Wolf_Canada_Skin_Alice_Munro

பெய்லிக்கு மூச்சிழுப்பு இருந்தது. முடிவே இல்லாமல் முகத்தில் சிவப்பு கொப்பளிக்க இருமி, வெறுப்பைச்சொல்கிற வெளிர்நீலக் கண்களில் ஜலம் ததும்பும். சற்று எட்ட நின்று கணப்பில் ஒரு கொத்து சளியைக் காறி உமிழ்வான். நினைத்த மாத்திரத்தில் இப்படி அடிவயிற்றில் இருந்து புரட்டி அவன் உமிழ்வதே ஆச்சர்யம். அவன் சிரிப்பே விநோதமானது. நெஞ்சுக்கூட்டின் உள்ளே சளிச் சதங்கை. லொடலொடத்த மிஷின் சத்தங்கள். அவன்பாட்டுக்குச் சிரிப்பான் அடிக்கடி. என்ன காரணம் தெரியாது. ஒருவேளை எங்களை ஏதும் நக்கலடிக்கிற  யோசனையோ என்னவோ!

நாங்கள் படுக்க அனுப்பப் பட்ட பிறகும் அந்த வாடையும், அவனது சிரிப்பும் எங்கள் கூடவே இருக்கும். என்றாலும் மேலே இங்கே இருக்கும் கூதல்காற்றைக் காட்டிலும் கீழே நிலவறையின் கதகதப்பும் வெளிச்சமும் பாதுகாப்புணர்வும் தேவலாம். குளிர்கால இரவுகளில் எங்களுக்கு பயமாய் இருக்கும். பனிப்பொழிவான காற்று எங்கள் வீட்டை உறங்கும் சுறாபோல சுற்றிப் படரும். ராப்பூராவும் வீட்டுக்கு வெளியே இடுகாட்டில் இருந்தும், சதுப்பு நிலங்களில் இருந்தும் காற்று சீழ்க்கையடித்துச் சுற்றி வரும். போதாக்குறைக்கு துயரமும் மிரட்டலுமாய் பூச்சியிரைச்சல்கள்… ஆனால் இப்படி வெளி உபத்திரவங்களால் அல்ல, வீட்டுக்கு ‘உள்ளே’ இரவு கலவரப்படுத்தியது எங்களை. நாங்கள் அப்போது மேலே மாடி கட்டிக்கொண்டிருந்தோம். வேலைகள் இன்னும் முடிந்தபாடில்லை. ஒரு சுவர் உயரம் செங்கல் புகைபோக்கி. தரையின் நடுப்புறத்தில் பெரும் துவாரம். மரப்பிடியுடன் அங்கே மாடிப்படிகள். இந்தக் குழியோடு ஒரு பக்கமாய், யாரும் பயன்படுத்தாத தட்டுமுட்டுச் சாமான்கள் கிடந்தன. லினோலியத் தகடுபோர்த்திய குதிர். சுள்ளி அள்ளிவரும் பல்லக்கு, பாசி சேகரிக்கும் கூடை. கீறல் விட்ட பீங்கான் பாத்திரங்களும் ஜாடிகளும். பலாக்லவா யுத்தக்காட்சியுடன் சித்திரம் ஒன்று, அதைப் பார்க்கவே துக்கமாய் இருக்கும்.

லெயர்து கொஞ்சம் விவரப்பட்ட நாளில் நான் சொன்னேன் அவனிடம். மேலே வௌவால்களும் எலும்புக்கூடுகளும் வசிக்கின்றன அப்பா. கிராமத்து சிறைச்சாலையில் இருந்து யாராவது கைதி தப்பித்ததாகத் தெரிந்தால், எப்படியோ அவன் எங்கள்வீட்டு ஜன்னல்வழியே உள்ளே புகுந்து அந்தக் குதிருக்குள் பதுங்கிக்கொண்டிருப்பதாக எனக்கு பிரமை. ஆனால் எப்படி எங்களைக் காபந்து பண்ணிக்கொள்வது என்கிற தீர்மானங்கள் எங்களிடம் இருந்தன. வெளிச்சம் இருந்தால் அதுவே எங்களுக்குப் பாதுகாப்பு. படுக்கையறையை அடையாளப்படுத்தும் இந்த கிழிந்த தரைக்கம்பளம், அதைத்தாண்டி நாங்கள் போகக்கூடாது. விளக்கு மட்டும் அணைந்ததானால், இந்தப் படுக்கை, இதைத் தவிர வேறு எந்த இடமும் பத்திரம் கிடையாது. படுக்கையில் தவழ்ந்தபடி கையை நீளவிட்டு வயர்வரை அலைந்து விளக்கை அணைப்பது என் வேலை. அவன் தம்பியாச்சே.

இருட்டு. நாங்கள் எங்கள் படுக்கையில் படுத்துக் கிடக்கிறோம். இரவைக் கடக்கும் லைஃப் போட்டுகள் அவை, எங்கள் படுக்கைகள். மேல்கூரையின் மாடிப்படி துவாரத்தில் இருந்து கிணற்றுக்குள் போல வரும் மிதமான வெளிச்சம். எங்கள் கண் அங்கே. மெல்ல வாயில் பாடல்கள் கிளம்பின. லெயர்து, ஜிங்கிள் பெல்ஸ், எனப் பாடினான். கிளிஸ்துமஸ் என்றில்லை எப்போது வேண்டுமானாலும் நாங்கள் அந்தப் பாடலைப் பாடுகிறது உண்டு. டேனி பாய், என்று நான் பாடினேன். என் குரல் எனக்கே பிடித்திருந்தது. கரகரப்பான பணிந்த குரல் இருட்டில் எழும்பி வளையவந்தது. உயரமான பனிப்படலமான வெண்மைநிற ஜன்னல்கள். அந்தப் பாடலின் ஒரு வரி, நான் இறந்துவிட்டால்… என் சப்தம் அடங்கி, சப்தநாடியும் ஒடுங்கிவிட்டால்… உடம்பில் சிறு நடுக்கம். போர்வைக்குள் குளிரால் வந்த நடுக்கம் இல்லை. வார்த்தைகளின் உணர்ச்சித் தீவிரம் என் வாயை அடைத்துவிட்டது. பாடலின் அடுத்த வரி… நீ மண்டியிட்டு, என்மேல் ஒரு ‘ஏவ்’ பிரார்த்தனை வைப்பாய் – என்ன பிரார்த்தனை அது? ஒவ்வொருநாளும் யோசிக்கிறேன். தெரியவே இல்லை.

லெய்ர்து பாடி முடித்த ஜோரில் தூங்கிவிடுவான். உறிஞ்சி இழுத்த திருப்தியான அவனது ஈர மூச்சுகளைக் கேட்டபடி நான் படுத்திருப்பேன். அந்த கணங்கள். இப்போது நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு மிக நெருக்கமான கணங்கள் அவை. அந்த முழு நாளின் அற்புதமான கணம் அதுவே. இறுக்கமாய்ப் போர்த்திக்கொண்டு இப்படிக் கிடக்கிறேன். ராத்திரிக்கு ராத்திரி இக்கணங்களில் நான் எனக்குள் எத்தனையோ கதைகள் பின்னிக்கொண்டிருப்பேன். என்னைப் பற்றியதான கதைகள். ஆனால் அந்தக் கதைகளில் நான் இன்னும் பெரிய பெண்! அது எனக்கேயான, எனக்குப் பிடித்த உலகம். அதில் நான் தைரியமாய் காரியங்கள் செய்ய முடிந்தது. சாகசங்கள். வீரதீர பராக்கிரமங்கள். தியாகம் நிரம்பியவளாய் நான் இருந்தேன்.

வெடி விபத்தான கட்டடத்தில் இருந்து சனங்களை நான் மீட்டேன். (அப்போது எங்கள் பகுதி அமைதிப்பட்டு யுத்தம் வேறெங்கோ நடந்து கொண்டிருந்தது. எனக்கு வருத்தம் தந்தது அது. இங்கே இல்லையே!) வெறிபிடித்துத் திரிந்த இரு நரிகளை என் பள்ளி வளாகத்தில் நான் சுட்டுக் கொன்றேன். என் முதுகுக்குப் பின் பம்மிய, பயந்த வாத்திமார்!) ஜுபிளியின் பிரதான சாலையில் நான் குதிரையேறி ஓட்டிவந்தேன். ஜனங்கள் என்னை வாயைப் பிளந்து பார்க்கிறார்ப் போலாச்சு. (யாரும் பெருவீதியில் அப்படி குதிரை ஓட்டி பார்க்க முடியாது. ஆரஞ்சுமனித திருநாள்ப் பேரணியில் மாத்திரம், அரசர் பில்லி மாத்திரம் அப்படி குதிரையில் வருவாராக்கும். அதற்கு அடுத்த நபர்… நானே!)

என் கதைகள் பூராவிலும் இப்படி நிறைய குதிரைப் பாய்ச்சலும், டுமீல்களும் இருந்தன. வாஸ்தவத்தில் நான் குதிரையில் ஏறியதே ரெண்டே முறை தான். எங்கள் வீட்டில் குதிரைமேல் போட்டு அமர சேணம் எதுவும் இல்லை. அதிலும் ரெண்டாம் தடவை நான் குதிரை மேலிருந்து வழுக்கி நேரே குதிரையின் காலடியிலேயே தொபீரென்று விழுந்தேன். என் மேல் குதிரையின் கால் பட்டது. நல்லவேளை அது மிதித்துவிடவில்லை. அப்போது நான் சுடவும் பழகிக்கொண்டிருந்தேன். வேலிக்குச்சிகளில் காலி டின்களை தொப்பிபோல் தொங்கவிட்டு, குறிபார்த்து, ஒன்றைக்கூட சரியாய்ச் சுடவில்லை!

Horse_Lady_Women_On_Animal_Ride_Mule_War_Alone_Sun_Light_Shades_Horizon_She_Females

சரி. விஷயத்துக்கு வருவோம். அப்பா அமைத்துக்கொடுத்த கூண்டுகளில் அந்த நரிகள் ஒரு ஒழுங்கில் வாழ்ந்தன. கடுமையான காவல் போடப்பட்ட சுற்று வேலி. ராத்திரி அரண்களைப் பூட்டிவிடுகிற கோட்டைகளைப் போன்ற களம். உள்ளே பாத்திகளாகப் பிரிக்கப்பட்டு இரு மருங்கும் வலிமையான நரிக் கூண்டுகள். அந்தக் கூண்டு கதவுவழியே பெரியாள் ஒருத்தன் குனியாமல் நுழையலாம். நரிகள் ஓடித் திரிய உள்ளே ஓரமாய் மரத்தில் சாய்தளம். தவிர தனி சிற்றறையும். சிறு காற்று துவாரங்களுடன், துணிமணி வைக்கிற அளவிலான சிற்றறைகள் அவை. அவற்றில்தான் நரிகள் குடித்தனம் பண்ணி குழந்தைகள் பெற்றன. வெளியில் இருந்து தண்ணீரோ உணவோ வைக்க, திரும்ப தட்டை எடுக்க, சுத்தம் செய்ய என கூண்டில் சிறு கதவுத்திறப்பு. பழைய தகர டின்னில் செய்த தட்டுகள். பழைய மர மிச்சத்திலும் ஓட்டை உடைசலை வைத்தும் அமைத்த சாய்தள மேடை. எல்லாமே சுத்தமாகவும் சமத்காரமாகவும் அப்பாவால் கையாளப்பட்டன. அப்பா அடிக்கடி எதாவது பயனுள்ள மாற்றங்களைச் செய்கிறவராக, ஓய்வில்லாமல் அதையே சிந்திக்கிறவராக இருந்தார். அவருக்குப் பிடித்த புத்தகம் ராபின்சன் குரூசோ.

தகர டிரம் ஒன்றில் சக்கரப்பலகை மாட்டி கூண்டுகளுக்கு தண்ணீர் எடுத்து வருவார். கோடையில் தண்ணீர் எடுத்துவரும் வேலை என்னுடையது. கோடையில் நரிகள் நாளைக்கு ரெண்டுமுறை நீர் அருந்தும். காலை ஒன்பது, பத்து மணி வாக்கில் ஒருதரம். ராத்திரி உணவுக்குப் பின் இன்னொரு தரம். குழாயடியில் இருந்து தண்ணீர் சுமந்து கூண்டுகளுக்கு எடுத்து வருவேன். அந்தப் பக்கம்தான் தண்ணீர் வண்டியை விட்டிருந்தேன். பெரிய தகரப் பாத்திரத்தை நான் எடுத்துவந்தால், கூட லெயர்து, சின்ன டப்பாவில் அவனும் தண்ணீர் மொண்டுவருவான். டப்பா வழிய வழிய நீரை நிரைத்து சிந்தச் சிந்த ஷுவை நனைத்துக்கொண்டு வருவான். என் தண்ணீர் கேன் பெரியது. அப்பா அதில்தான் தண்ணீர் சேந்தி வருவார். என்னால் அதன் முக்கால் பங்குதான் தூக்க முடிந்தது.

நரிகள் ஒவ்வொன்றுக்கும் பேர் தனித்தனியே உண்டு. தகரத்தில் பேர் எழுதி கூண்டு உள்ளே தொங்கவிட்டிருந்தது. பிறந்தபோது அவைகளுக்குப் பெயர் வைப்பதில்லை.  முதல் வருடத்தில் நரிகள் தோலுரிபடும் போது அவை தப்பித்த பின், உடல் தேறித் திரள, அவைகளுக்குப் பெயர் அமையும். அப்பா வைக்கும் பெயர்கள், பிரின்ஸ், பாப், வாலி, பெட்டி… இப்படி. செல்லமாய் அழைக்கிற பெயர்கள். நான் வைத்த பெயர்கள், ஸ்டார், தர்க், மௌரீன், டயானா… இப்படி. கொஞ்சம் படிப்பு வாசனை தட்டின. எங்கள் லெயர்து, அவனும் பெயர் வைத்தான். மாத். அவன் குழந்தையாக இருந்தபோது எங்களிடம் வேலைக்கு இருந்த சிறுமியின் பெயர் அது. ஹெரால்ட். அது அவனது பள்ளிக்கூட சிநேகிதன். மெக்சிகோ என்று கூட ஒரு பெயர். அதை எப்படி வைத்தான் அவனுக்கே தெரியவில்லை.

பெயர் வைப்பதால் அந்த மிருகங்களோடு பிரியம் கொண்டாடுவது, அது மாதிரியெல்லாம் கிடையாது. சொல்லப்போனால் அப்பா மாத்திரமே அந்தக் கூண்டுகளுக்குள் போவார். நரி கடித்து ரெண்டுமுறை அவர் ரத்தத்தில் விஷமேறி அவஸ்தைப்பட்டார். கூண்டுகள் பக்கமாய் நான் தண்ணீர் கொண்டுபோகும் போது அவை உள்ளே சாய்தளத்தில் இங்குமங்குமாய் ஓடியபடி என்னையே பார்த்தன. கூம்பெடுத்த முகத்தில் அந்தக் கண்கள் சொக்கத் தங்கமாய் ஒளிர்ந்தன. உருமல் கிருமல் இல்லை. (ராத்திரிகளில் தான் அவை ஒட்டுமொத்தமாய் ஒரு ஊளை எடுத்தன.) மெலிந்த அழகான கால்கள். அடர் குஞ்சம் வைத்த வால். வெண்புள்ளி தெரித்த பளிச்சென்ற முதுகுத் தோல். அதனால் தான் அவற்றுக்கு வெள்ளி நரி என்று பெயர். குறிப்பாக அந்த செதுக்கினாப் போன்ற கூரிய முரட்டுத்தனமான முகமே அழகு. ஆ அந்தப் பொன்னிறக் கண்கள்.

தண்ணீர் எடுத்து வருவது மாத்திரம் அல்ல. அப்பாவுக்கு புல் வெட்டவும் நான் உதவி செய்வேன். கூண்டுகளின் இடைப்பகுதிகளில் அழகான பூச்செடிகள். அவற்றுக்கும் தண்ணீர் ஊற்றுவது என் வேலை. அப்பா புல்வெட்டியால் புல்லை சர்ரக் சர்ரக் என்று வெட்ட நான் அவற்றை கோபுரமாய்க் குவிப்பேன். அப்பா ஒரு புல்வாரியால் அந்தப் புற்களை அள்ளி கூண்டுகளின் கூரைமேல் பரத்திப் போடுவார். உள்ளே குளிர்ச்சியாய் இருக்கும். அதேசமயம் நரிகளின் மேல்தோலுக்கும் சூடுதட்டாது நிழல் கிடைக்கும். இல்லையானால் அதிகப்படியான வெயிலில் அவை ஒருமாதிரி பழுப்பாய் ஆகிவிடும்.

வேலை தவிர வேறு பேச்சு அப்பா என்னிடம் பேச மாட்டார். அம்மா அப்படியில்லை. அம்மாவுக்கு உற்சாகம் வந்துவிட்டால், வாய் ஓயவே மாட்டாள். எல்லா விஷயமும் அவள் பேச்சில் கலந்துகட்டும். அவளது சிறுவயதில் அவளோடு இருந்த நாய். கொஞ்சம் பெரியாளாய் ஆனதும் அவளோடு பழகிய பையன்கள். அவளிடம் இருந்த அழகான உடைகள். அவையெல்லாம் எங்கே எப்படிப் போச்சு என்றே தெரியலை, என்பாள் அம்மா. அப்பாவின் எண்ணங்களோ, அவர்பற்றிய கதைகளோ என்னிடம் பகிர முடியாத அளவு அவருடைமையாக இருந்தன. அவரிடம் கதைபேச எனக்குக் கூச்சம். அவரைப்பற்றி நான் அவரிடம் பேச்சு கொடுத்ததே இல்லை. ஆனால் அவர்பார்வையில் வேலைசெய்ய எனக்கு ரொம்பப் பெருமிதம் உண்டு.

ஒருசமயம் தீவனக்காரன் ஒருவன் வந்தபோது அப்பா அவனிடம், “பாரப்பா, எங்கவீட்டின் புதிய வேலைக்காரி. நீ பாத்ததில்லை இல்லையா?” என்றார்.  சட்டென முகம் திருப்பிக் கொண்டேன். முகத்தில் ஜிவுஜிவுத்த கோபம். ஆனால் நான் வேலை செய்கிறவளாக, என்னை அவர் சொன்னதில் சந்தோஷமும் இருந்தது.

“இவளா? பண்ணைவேலை தெரிஞ்சவளா? சின்னப்பொண்ணுன்னில்ல நினைச்சேன்”  என்றான் அவன்.

புல்லை வெட்டியதும் அந்தப் பிரதேசத்தின் முகமே மாறி வேறு பருவத்துக்கு வந்துவிட்டாப் போலிருந்தது. அந்தி மயங்குகிற வேளை. புல் கழித்த கூளத்தில் நடந்தேன். மேல வானம் சிவந்து கொண்டிருந்தது. சப்தங்கள் அடங்க ஆரம்பித்திருந்தன. இலையுதிர் காலம். தண்ணீர் வண்டியை படலுக்கு வெளியே ஓட்டியபடி, நாதாங்கியைப் போட்டேன். இருட்டு நன்றாகக் கவிந்திருந்தது இப்போது. இப்படியொரு நாளில் முற்றத்தின் எதிர்வாடையில் சிறிய மண்மேட்டில் அப்பாவும் அம்மாவும் நின்று எதோ பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்பா கசாப்புக்கூடத்தில் இருந்து அப்பதான் திரும்பியிருந்தார். இரத்தம் உறைந்து விரைத்த அழுக்கு மேல்துணி. கையில் வாளியில் மாமிசம்.

அம்மா முற்றம் வரை வருவதே அபூர்வம். அநேகமாய் அவள் வீட்டைவிட்டே வெளியே வருவது கிடையாது. தோய்த்த துணிகளைக் காயப்பபோட என்றோ, தோட்டத்தில் உருளைக்கிழங்கு தோண்ட என்றோ தான் வெளியே வருவாள். காலில் எப்பவும் செருப்பு வேண்டும் அவளுக்கு. சூரியன் படாத, மொத்தையான அவள் கால்கள் செருப்பு இல்லாமல் பார்க்க என்னவோ போலிருக்கும். அவளுக்கு அப்படித் தோன்றியது. வீட்டுவேலை உடையைக் கழற்றாமல் இருந்தாள். வயிற்றுப் பக்கம் அவள் பற்றுப் பாத்திரங் கழுவிய ஈரம். தலைமுடியை கைக்குட்டை கட்டி மூடியிருந்தாள். என்றாலும் அந்த அந்தியில் அந்த முடிப் பிசிர்கள் தெரிந்தன. காலைகளில் கூந்தலை இம்மாதிரி அள்ளி முடிவது உண்டு. ஒழுங்கா வாரிக்க நேரம் எங்கே என்பாள். பகல் பூராவும் தலையை சீர் பண்ண அவளுக்கு ஒழியவே ஒழியாது. அந்தத் தலையின் முடி(ச்சு) அப்படியே தான் காணும்.

இந்நாட்களில் எங்கள் பின்கட்டில் பீச் பழங்கள், திராட்சை. பேர் பழங்கள் என்று கூடை கூடையாய் இருக்கும். நகரத்தில் இருந்து வாங்கி வந்தவை அவை. வெங்காயம், தக்காளி, வெள்ளரி எல்லாம் வீட்டில் விளைந்தவை. எல்லாத்தையும் குழைய அடித்து, ஜெல்லியாக, ஜாமாக ஆக்குவோம். கார சாஸ், ஊறுகாய் மற்றும் சிரப் செய்வோம். சமையல் கூடத்தில் எப்பவும் நெருப்பு அணையாது. கெட்டிலில் நீர் கொதித்தபடி யிருக்கும். திராட்சை வடிகட்டிய துணி சிலசமயம் நாற்காலி மேல் அப்படியே கிடக்கும்.

சமையல்கட்டில் எனக்கு வேலைகள் இருந்தன. வேக வைத்த பீச் பழங்களை நான் தோலுரித்துத் தருவேன். வெங்காயம் நறுக்கிக் கொடுப்பேன். கண்ணே அப்போது பெரிதாகி வீங்கி நீர்பொங்கும். வேலை முடிந்து நான் வீட்டை விட்டு வெளியே ஓடிவிடுவேன். இருந்தால் அம்மா அடுத்த வேலை வைப்பாள். ஐய, கோடைகாலங்களில் அந்த சமையல்க்கூட இருட்டை நான் வெறுத்தேன். சன்னல் பச்சைவண்ணத் தட்டிகள். பூச்சி ஒட்டிக்கொள்கிற எண்ணெய்க் காகிதம். எண்ணெய்ப் பிசுக்கான மேசைத் துணி. ரசம் போன கண்ணாடி. அறையில் பதித்த லினோலியம் அநேக இடங்களில் ஆணி உருவி பொம்மித் தெரிந்தது.

அந்நாட்களில் அம்மா ரொம்ப அலுப்பாய் இருப்பாள். என்கூட பேசக்கூட தெம்பு இருக்காது அவளிடம். பள்ளி ஆண்டுவிழா நடன நிகழ்ச்சிகள் பற்றியோ, இன்ன பிறவோ பேசமாட்டாள். எப்பவும் அவள் முகம் வியர்த்து கசகசத்துக் கிடக்கும். மூச்சிரைக்கிற அளவு பரபரப்பாய், பழ எசன்ஸ், சிரப் செய்கிற மும்முரத்தில் இருப்பாள். வேலை ஆக ஆக, வேண்டிய சர்க்கரை, வேண்டிய ஜாடிகளை எண்ணிக்கொண்டிருப்பாள். ஐய இந்தவீட்டு வேலை, இதற்கு முடிவே இல்லையோ என்றிருக்கும். ஓய்வு ஒழிச்சல் இல்லாத கடுப்பான வேலைகள். வீட்டுக்கு வெளியேயான வேலைகள். ஆனால் அப்பாவைப் பொறுத்தவரை இதெல்லாம் அத்தனை ஒழுங்காக சடங்காகச் செய்ய வேண்டியிருந்தது.

தண்ணீர் வண்டியை முற்றத்தில் வழக்கமான இடத்தில் விட்டேன். அம்மா பேசுவது கேட்டது. “லெயர்து கொஞ்சம் பெரியவனாகட்டும். அதுவரை பார்க்கலாம். அப்ப அவன் உமக்கு உதவிகரமா இருப்பான்…”

அதற்கு அப்பா என்ன சொன்னார் எனக்குக் கேட்கவில்லை. அம்மாபேச்சை அவர் கேட்டபடி அப்படி நின்றதே எனக்குப் பிடித்திருந்தது. வியாபாரியிடமோ, புதிய நபரிடமோ அவர் அப்படித்தான் பவ்யம் பேணுவார். தலைபாட்டுக்கு ஆட, வேலை பாட்டுக்கு ஓடும். இங்கே இப்போது அம்மாவுக்கு வேலை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அப்பா அம்மாவை அனுப்பிவிடலாமாய் நான் நினைத்தேன். லெயர்து பத்தி என்ன சொல்ல வருகிறாள்? யாருக்கும் அவன் என்ன உதவியும் கிடையாது. இப்ப எங்க என்ன பண்ணிட்டிருக்கானோ. தட்டாமாலை தாமரைப்பூ சுத்திச் சுத்தி சுண்ணாம்புன்னு ஆடிட்டிருப்பான். காடுகளில் புழுப் பூச்சிகளைப் பிடித்துக்கொண்டிருப்பான். உதவுகிறது போல என்னுடன் வந்தாலும் கடைசிவரை இருக்க மாட்டான். அதற்குள்ளே கவனம் மாறி வேறெங்கோ ஓடிவிடுவான்.

“அதுக்கப்புறம் இவளை நான் வீட்டு வேலைக்குன்னு அதிகமா கூட்டிக்குவேன்”, என்கிறாள் அம்மா. என்னைப் பற்றி எப்பவுமே அப்படித்தான் சிறிது தொண்டையடங்கிய தொனியில் அவள் பேசுகிறாள். என்னையிட்டு அவளுக்கு உற்சாகம் இல்லையோ என நினைக்க எனக்கு என்னவோ போலிருக்கும். அம்மா தொடர்கிறாள்… ‘உள்வேலையில் நான் சித்த இப்பிடித் திரும்பக் கூடாது, அவ வெளிய ஓடிர்றா. நம்ம வீட்ல ஒரு பொண்ணு இருப்பதுபோலவே இல்லை.”

மூலையில் கிடந்த தீவனச் சாக்கில் போய் அமர்ந்துகொண்டேன். அவர்கள் பேசும்போது எந்த நேரத்தில் நான் உள்ளேநுழைந்து கலந்துகொள்ளலாம் என்று காத்திருந்தேன். ஹ அம்மா என்னை நம்பவில்லை. அப்படித்தான் இருந்தது. அப்பாவை விட அம்மா என்னிடம் பிரியமானவள். அம்மாவை டபாய்த்துவிடலாம். என்றாலும் ஒரு அமயஞ் சமயத்துக்கு அவள் நம்மை அனுசரிப்பாள் என்று சொல்லேலாது. என்னைப்பத்தி இப்ப எதுக்கு அப்பாவிடம் இந்த வத்தி, அதன் அவசியம் என்ன காரணம் என்ன தெரியவில்லை. அம்மாவுக்கு என்னைப் பிடித்திருந்தது. நான் பிரியப்பட்ட மாதிரி எல்லாம் ராத்திரி தூக்கம் முழித்து எனக்கு உடைகள் தைக்கிறாள். அதைப் போட்டுக்கொண்டு பள்ளிக்குப் போகிறது அம்சமாய்த் தான் இருக்கிறது. என்றாலும் அவளுக்கும் எனக்கும் ஆகவில்லை. என்னை எப்பவுமே அவள் அதிகாரம் செய்கிறவளாய் இருந்தாள். இப்பகூட என்னை வீட்டோடு இருத்திக்கொள்வதாக ஒரு திட்டம். எனக்கு வீட்டுள் முடங்க இஷ்டம் கிடையாது என்பது தெரியும் அவளுக்கு. நல்லாவே தெரியும். நான் அப்பாவோட வேலைசெய்யாமல் அவளோடு வைத்துக்கொள்ள நினைக்கிறாள். ஏன் அவள் அப்படிச் செய்கிறாள்? வக்ரம் தான். அதிகாரம் செய்ய அவளுக்குக் கீழே ஆள் வேண்டும். இதற்கு அவள் தனிமையோ, பொறாமை உணர்வோ காரணமாய் இருக்குமா? சேச்சே. பெரியவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இப்படிப்பட்ட விஷயஙகள் அவர்களை அண்டுவது இல்லை, என்றே பட்டது. காலை உதைத்ததில் தீவனத் தவிடு புகையாய்ப் பொங்கியது. அம்மா போகும்வரை நான் எழுந்துபோகவே இல்லை.

அம்மா சொல்றதை அப்பா இந்தக் காதில வாங்கி அந்தக் காதில விட்டுறணுமாய் இருந்தது. என் வேலையை லெயர்து செய்வதை என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை. வேலி நாதாங்கியைப் போடவே அவனுக்கு எட்டாது. ஏதாவது மரக்குச்சியை இலையோடு ஒடித்து எட்டிப்போட வேண்டும். தண்ணீர் ஊற்றவேண்டும். சிந்தாமல் அந்த வண்டியைத் தள்ளிவர அவனுக்கு எப்படி முடியும். இதெல்லாம் அத்தனை சுலபமான வேலைன்னு அம்மா நினைக்கிறாப் போலிருக்கிறது. அவளுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.

நரிகளுக்கு என்ன தீவனம், அதைச் சொல்ல விட்டுவிட்டது. அப்பாவின் அந்த ரத்தம் தோய்ந்த வேலையுடை எனக்கு அதை ஞாபகப்படுத்தி விட்டது. அவைகளுக்கு குதிரை மாமிசம் தான் உணவு. இந்தக் காலங்களில் எல்லா பண்ணையாட்களிடமும் குதிரைகள் இருந்தன. அவற்றுக்கு மூப்பாகி வேலைசெய்யக் கொள்ளவில்லை என்றாலோ, காலை கீலை (கால் முட்டியின் கீலை) ஒடித்துக்கொண்டாலோ, விழுந்துவாரி எழுந்து நிற்கவே நொண்டினாலோ, சில சமயம் அப்படி ஆகிப்போகிறது அவைகளுக்கு… அவர்கள் அப்பாவைக் கூப்பிட்டனுப்புவார்கள். அப்பாவும் ஹென்ரியுமாய் வண்டி யெடுத்துக்கொண்டு போவார்கள். பொதுவாக அந்தக் குதிரையை அங்கேயே சுட்டு, கூறு போட்டு, ஒரு அஞ்சு முதல் பன்னெண்டு டாலருக்கு அவற்றை வாங்கி எடுத்து வருவார்கள். ஆனால் கைவசம் ஏற்கனவே மாமிசம் நிறைய இருந்தால், அந்தக் குதிரைகளை அப்படியே உயிரோடு ஏற்றிவருவதும் உண்டு. அவை சில நாட்களோ வாரங்களோ எங்கள் லாயத்தில் இருக்கும். அதன் மாமிசம் தேவைப்படும் வரை.

யுத்தத்திற்குப் பிறகே, சம்சாரிகள் டிராக்டர் வாங்க, குதிரைகளை ஏறக்கட்ட ஆரம்பித்திருந்த காலம் அது. அவைகளுக்கு வேலை இல்லை, அவைகள் தேவை இல்லை என்றான நிலை. குதிரைகள் குளிர்கால அளவில் இங்கே வந்தால் சில சமயம் வசந்த காலம் வரை கூட எங்கள் லாயத்தில் இருக்கும். வெளியே கடும் பனி. எங்களிடமும் காய்ந்த புல்லும் வைக்கோலும் தாராளமாய் இருந்தது. தெருக்களில் பனியைச் சுரண்ட தோண்ட அத்தனை சுலபமாய் முடியாது. குதிரையை அப்படியே பட்டணத்துக்கோ, கறிபோடவோ அழைததுப் போக வேண்டியிருந்தது.

எனக்கு பதினோரு வயசாய் இருக்கையில், எங்கள் லாயத்தில் ரெண்டு குதிரைகள் இருந்தன. இங்க வந்தடையும் முன்னால் அவற்றுக்கு என்ன பெயரோ தெரியாது. இப்ப அவற்றுக்கு மேக் என்றும் ஃப்ளோரா என்றும் பெயர் நாங்கள் வைத்திருந்தோம். வயசான கருத்த, சவாரிக் குதிரை மேக். கரிக்கருப்பு. முரடு. பழுப்பு நிற பெண் குதிரை ஃப்ளோரா துடிப்பு மிக்கது. மேக் சாவகாசமானது. அதைக் கையாள்வது எளிது. ஃப்ளோரா தான் உள்பதட்டமாய் உடல் நடுங்கியது. கடக்கும் வண்டிகளை, பிற குதிரைகளைப் பார்த்து அலைபாய்ந்தது. என்றாலும் அதன் பாத வீச்சையும் வேகத்தையும் நாங்கள் ரசித்தோம். இயல்பான அதன் துள்ளல் துடுக்கும் கயிறுஉதறி ஓடுவதும் நன்றாய்த் தான் இருந்தது.

சனிக்கிழமை யானால் நாங்கள் லாயத்துக்குப் போவோம். புல்லும் மிருக நெடியுமான அறையைத் திறக்கையிலேயே ஃப்ளோரா துள்ளி மூக்கை நீட்டும். கண்ணால் பெரு முழி முழிக்கும். அதற்கேயான புர்ர் பெருமூச்சு ஓசை. அதன் மொத்த உடம்புமே பயந்து ஒரு சிலிர்ப்பு ஓடும். அப்படியே அவளது கொட்டடியில் நுழைந்துவிட முடியாது. சவட்டி விடும்.

அந்தக் குளிர்காலத்தில், அப்பாவிடம் அம்மா பொழுதன்றைக்கும் வலியுறுத்தி வந்தாளே, அதே எண்ணத்தினை இன்னும் தீவிரமாகவே கேட்க நேர்ந்தது. இதற்கு விமோசனம் தான் என்ன தெரியவில்லை. இங்கே சனங்களுக்கு எப்பவுமே உள்ளூற யோசனை ஒரே மாதிரியே இருக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்பு அது. அதை யாரும் மீறி தாண்டி வெளியே நழுவ முடியாது. சிறுமி என்கிற வார்த்தை, எத்தனை மாசு மருவற்ற சுத்தமான வார்த்தை என நினைத்திருந்தேன். குழந்தை என்கிறாப் போல. சுமை அறியாத வார்த்தை. இப்ப, அப்படி எல்லாம் இல்லை எனப் படடது.

பெண் என்றால், நான் நினைத்து வைத்திருந்தேனே, அதுமாதிரியான விஷயம் அல்லவாக்கும் அது. அது முன்தீர்மானம் கொண்டது. அந்த முன் தீர்மானம் என் தீரமானம் அல்ல. பந்தம் செய்த நிர்ப்பந்தமாக அது இருந்தது. சமுதாயத்தில் பெண் என்பதற்கு ஒரு வகைமாதிரி, அச்சு இருக்கிறது. உன்னை அழுத்தக் கூடிய வருத்தக் கூடிய ஏமாற்றக் கூடிய பிம்பம் அது. அந்த பிம்பம் நிசமான உன்னை கேலிக் கூத்தாக்கி விடுகிறது. அவ்வாறன்றி, நீ அபத்தமாகிப் போகிறாய்.

லெயர்துவும் நானும் ஒருமுறை கைகலந்தோம். என் பலம் அனைத்தும் திரட்டி நான் அவனை எதிர்கொண்டேன். என்றாலும் என்னை அவன் மேலமுக்கி என் கையை ஒருவிநாடி தரையோடு அழுத்திவிட்டான். ச். என்னால் தாளவே முடியவில்லை அதை. ஹென்ரி இதைப் பார்த்துவிட்டான். சிரிச்சுக் கிட்டே அவன் சொன்னான். “ஏய் போகப்போக உனக்குத் தெரியும். ஆம்பளைங்க எவ்வளவு முரடுன்னு நீயே தெரிஞ்சிக்குவே.” லெயர்து உருத் திரண்டு பெரியாளாகி வந்தான். நானும் தான்.

சில வாரங்கள் எங்களோடு பாட்டி வந்து இருந்தாள். அவள் தொணதொணப்பு தனி மாதிரி. “பொம்பளையாட்கள் அப்படி அறைந்து கதவைச் சாத்துவாங்களா?” “பொட்டைப்பிள்ளையா லெட்சணமா காலை ஒடுக்கி உட்காருடி.”  இதுல ரொம்ப மோசமான விஷயம், நான் எதாவது கேள்வி கேட்டுறக் கூடாது அவளிடம். “பொட்டச்சிக்கு அதெல்லாம் தேவை இல்லை!” எனக்கு ஆத்திரம். நான்பாட்டுக்கு கதவுகளை அப்படி அடித்துச் சாத்திவிட்டுத் தான் போவேன். கன்னாபின்னான்னு தான் உட்கார்வேன். என் இஷ்டம் அது. யார் கேட்கிறது?

வசந்த காலத்தில் குதிரைகளைக் களத்து வெளியில் விட்டுவிடுவோம். மேக் சற்றுச் சுவரில் கழுத்தை முதுகை தொடையை உரசி சொறிந்துகொள்ளும். ஃப்ளோரா தான் அங்குமிங்கும் வேலி வரை அலைந்து திரியும். வேலி பட்டைகளைக் குளம்புகளால் அசைக்கும்.

பனி விழுதல் அடங்கி தரை இளகி இப்போது மண் அதன் இறுக்கத்துடனும் பழுப்பு நிறத்துடனும் தெரிய ஆரம்பித்தது. குளிர்கால அழகுகள் விலகி இப்போது, அந்தப் பிரதேசமே மேடு பள்ளம் சமவெளி என்பதான இயல்புக்கு மீண்டன. கட்டுத்தளர்ந்த ஆசுவாசம் எங்கும். இப்போது ரப்பர் நடையன்கள். கால்கள் எத்தனை லேசாய் உணர்கின்றன!

சனிக்கிழமை லாயத்துக்குப் போனோம். எல்லா கதவுமே சன்னல்கள் உட்பட பப்பரக்கா! உள்ளே நல்ல காற்று. வெளிச்சம். ஹென்ரி இருந்தான். அவனிடம் இருந்த காலண்டர்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். லாயத்தின் பின்பக்கப் பொந்துகளில் அவற்றை அவன் அம்மாவுக்குத் தெரியாமல் பதுக்கி வைத்திருப்பான்.

“ஏய் உன் பழைய சிநேகிதன் மேக், அவனுக்கு குட்பை சொல்ல வந்தியா?” என்று கேட்டான் தம்பியிடம். ஒரு கொத்து ஓட்ஸ் அள்ளிக் கொடுத்தான். “உன் கையால மேக்குக்குக் கொடு. ” லெயர்து மேக்கிடம் போனான். மேக்கின் பற்கள் மகா மொண்ணை. சாவகாசமாய் மேக் அதைத் தின்றது. அதன் வாயில் இங்கும் அங்குமாக தானியங்கள் புரண்டன. அதை அரைக்க சிரமப்பட்டது மேக்.

”மேக் பாவம்” என்றான் ஹென்ரி. ”ஒரு குதிரைக்குப் பல்லு போனால் எல்லாமே போனாப் போலத்தான்.” ஹென்ரியிடம் நான் கேட்டேன். ”இவனை இன்னிக்குச் சுட்டுருவீங்களா?” ரொம்ப காலமாக ரெண்டுமே அங்கே இருந்ததில் அவைகளைச் சுடும் வேளையே எங்களுக்கு ஞபாகத்தில் தட்டவில்லை.

ஹென்ரி பதில் சொல்லவில்லை. அவன்பாட்டுக்கு நடுங்கும் குரலில் போலி துக்கத்துடன் பாட்டெடுத்தான். ஐயகோ நெத் மாமாவுக்கு இல்லே சோலி. பாரு இனி அவர் ஆளே காலி… மேக்குடைய கருத்த கெட்டியான நாக்கு லெயர்துவின் கைகளை நக்கித் துழாவியது. அவன் பாட்டு முடியுமுன்னால் நான் லாயத்துக்கு வெளியே வந்துவிட்டேன்.

குதிரை எப்படி சுடப்படுகிறது நான் பார்த்ததே இல்லை. ஆனால் குதிரைகள் சுடப்படும் இடம் தெரியும். போன கோடை. நானும் லெயர்துவும் குதிரையின் மிச்சங்களை புதைக்கு முன் பார்க்க வாய்த்தது. பெரிய கருத்த பாம்பு போல் வெயிலில் சுருண்டு. கிடந்தது. களத்துப் பின்பக்க வெளி அது. லாயத்தில் இருந்து எதுவும் குறுக்குப் பலகையில் கீறலோ துவாரமோ இருந்தால் அதுவழியே துப்பாக்கி சூட்டை எங்களால் ஒருவேளை பார்க்க முடியும். பார்க்க விரும்பும் காட்சி அல்ல அது. ஆனால் ஒண்ணு நடந்தால், அதை எப்படி நடக்கிறதுன்னு தெரிஞ்சிக்காம எப்படி?

வீட்டுக்குள்ளிருந்து வெளியே வரும் அப்பா. அவர் கையில்… துப்பாக்கி. ”இங்க என்ன பண்ணிட்டிருக்க?” என்று கேட்டார். ”சும்மா.” ”போ. வீட்டுப் பக்கமா போய் விளையாடு. போ.” லெயர்துவை லாயத்துக்கு வெளியே அனுப்பிவிட்டார். “ஏய் மேக்கை எப்பிடி சுடறாங்க, நீ பாக்கணுமா?…” என்று லெயர்துவை நான் கேட்டேன். கேட்டபடியே அவனை அப்படியே களத்தின் முன்வாசல் பக்கமாக இழுத்துப் போனேன். மெல்ல நாதாங்கியை நீக்கினேன். “ஷ். சத்தம் வரப்டாது. அவங்க காதுல விழுந்துரும்,” என்று எச்சரித்தேன். லாயத்தின் உள்ளே ஹென்ரியும் அப்பாவும். பேச்சுக்குரல். வெளியே மேக் இழுத்து வரப்படும் சத்தம்.

கொட்டகை மேல்பலகை. ஜில்லென்று இருட்டாய்க் கிடந்தது. குறுக்குப் பட்டைகள் வழியே வெளிச்சக் கீற்றுகள் குறுக்கு மறுக்காக விழுந்திருந்தன. சுற்றுச் சுவரைத் தடவியபடியே தவழ்ந்து போனோம். சுவரில் நிறைய பொத்தல்கள், எனக்கு வாகாய் ஒன்று. முற்ற ஓரம், கதவு அருகே. தளவாட மூலை. லெயர்து பார்க்கத் தோதாக துவாரம் கிடைக்கவில்லை. அவன் முரண்டு பிடிக்க ஆரம்பித்தான். ரெண்டு பலகைகளின் இடைவெளியை அவனுக்குக் காட்டினேன். “ஷ். சத்தம் போடாமப் பொறுமையாப் பாரு. அவங்களுக்கு உன் சத்தம் கேட்டால் நாம ரெண்டு பேருமே மாட்டிக்குவோம்.”

அப்பா. கையில் துப்பாக்கி. ஹென்ரி கயிறைப் பிடித்து மேக்கை இழுத்து வருகிறான். கயிறை விட்டுவிட்டு பெட்டியைத் திறந்து சிகெரெட் சுருள் காகிதத்தையும் புகையிலையையும் எடுத்தான். தனக்கும் அப்பாவுக்கும் சிகெரெட் அடைத்தான். இதுபாட்டுக்கு நடக்கிறது. மேக் காய்ந்த புல்லை குனிந்து முகர்ந்து கொண்டிருந்தது. திடல்பக்கக் கதவை அப்பா திறந்து மேக்கை வெளியே விட்டார். மேக் வெளியே போய் ஈரமான புதுப் புல்லை மேய ஹென்ரி வெளியே அனுப்பினான். அப்பாவும் அவனும் எதோ பேசிக்கொள்கிறார்கள். எங்களுக்கு என்ன பேசுகிறார்கள் கேட்கவில்லை. குனிந்தபடி ஈரப் புல்லைத் தேடியபடி மேக்.

ஒரு நேர்கோட்டில் போல அப்பா நடந்து வசம் பார்த்து நின்றுகொண்டார். ஹென்ரி மேக்கின் பக்கவாட்டில் நகர்ந்து தள்ளிப் போனான். கையில் இன்னும் குதிரைக் கயிறு. தளர்வாய்ப் பிடித்திருந்தான். அப்பா துப்பாக்கியை உயர்த்தினார். மேக் எதையோ கவனித்து தலையை உயர்த்தியது. அப்பா சுட்டார்.

அப்படியே மேக் அடங்கிவிடவில்லை. லேசான தள்ளாட்டம். ஒரு பக்கமாய்ச் சரிந்து பக்கவசத்தில் விழுந்து, அப்படியே உருண்டு, ஆகா, காற்றை அப்படியே உதைத்தது. பெரிய சர்க்கஸ் காட்சிபோல அதைப் ரசித்து ஹென்ரி சிரித்தான். துப்பாக்கியின் டுமீல் சத்தத்தைக் கேட்டதுமே லெயர்து ஹா என நீளமாய் மூச்செடுத்தான். “அது சாகல,” என்று கத்திவிட்டான். எனக்கும் அது சரி என்றுதான் பட்டது. ஆனால் அந்தக் கால்கள் அப்படியே நின்றன. அப்படியே திரும்ப பக்கவசத்தில் சரிந்தது. உடம்பெங்கும் நடுக்கம் குதிரை துவண்டு அடங்கியது. அவர்கள் இரண்டு பேரும் அதன் கிட்டேபோய் நிலவரம் பார்த்தார்கள். வருத்தம் கிருத்தம் எதுவும் இல்லை அதில். குனிந்து அதன் நெற்றியைப் பார்த்தார்கள். குண்டு பாய்ந்தது அங்கே தான். இப்போது அதில் இருந்து காய்ந்த புல்லில் குபுக்கியது ரத்தம்.

“இப்ப அதைத் தோலுரித்து மாமிசத்தைத் கூறுபோடப் போறாங்க,” என்றேன். “வா, நாம போலாம்.” என் கால்கள் வெடவெடத்துக் கொண்டிருந்தன. மெத்தென்ற வைக்கோல் புடைப்பில் குதித்தேன். “இப்ப நீ குதிரையைச் சுடறதைப் பாத்தாச்சி இல்லியா?” அவனை ஊக்கப்படுத்த இப்படிச் சொன்னேன். என்னவோ நான் இதைப் பலமுறை பார்த்திருக்கிறாப் போல. “புல்வெளியில் பூனையோ அதோட குட்டிகளோ இருக்குதா தேடுவோம்,” என்றேன். அவனும் கூளத்தில் குதித்தான். திரும்பவும் சிறு பையனாக அடங்கி ஒடுங்கி என்னுடன் வந்தான்.

சின்ன வயசில் அவனைக் கூட்டிவந்து ஏணி வழியாக உத்திரம் வரை ஏறுவதை அவனுக்கு நான்தானே சொல்லிக் கொடுத்தேன் என்று சட்டென்று ஞாபகம் வந்தது. அதுவும் வசந்த காலம்தான். அப்பவும் புல் அடர்த்தியற்று தான் இருந்தது. அந்த வயசில் எதாவது சுவாரஸ்யமா வேண்டியிருந்தது எனக்கு. எதையாவது நான் செய்து நாலு பேரிடம் அதைச் சொல்லி சந்தோஷப்படும் துறுதுறுப்பு. பழுப்பும் வெளுப்புமான கட்டங்களுடன் புஸ்சென்ற கோட் அணிந்திருந்தான் அவன். என்னுடைய பழைய கோட்டை வெட்டி அவனுக்குப் பொருத்தமாக்கியது. நான் சொல்லித்தந்து ஊக்கப்படுத்தினேன். அவன் மேலே மேலே ஏறி மேல் கட்டையில் போய் உட்கார்ந்துகொண்டான். கீழே ஆழத்தில் புல்தரை. மத்த பக்கத்தில் வைக்கோல் போருக்கான களம், கூட தளவாட தோட்டவேலை சாமான்கள். அப்படியே திரும்பி உற்சாகமாய் அப்பாவிடம் ஓடினேன். “அப்பா, நம்ம லெயர்து பாருங்க, மேல் பலகை வரை ஏறியாச்சு!”

அப்பா வந்தார். அம்மாவும் ஓடிவந்தாள். அப்பா தணிந்த குரலில் பேச்சு கொடுத்தபடியே ஏணியில் ஏறி அப்படியே லெயர்துவைக் கையில் ஏந்தி கீழே கொண்டுவந்தார். அம்மா அப்படியே ஏணியில் சாய்ந்தபடி அலறினாள். “ஏட்டி, அவன் என்ன காரியம் பண்ணியிருக்கான்? என்ன பாத்துக்கறே நீ?”

அவர்கள் யாருக்குமே உண்மை தெரியாது. நான்தான் அவனை மேலே ஏற்றிவிட்டேன், என்பதே தெரியாது. லெயர்துவுக்கும் அத்தனை சுத்தமா தெளிவா எதையும் சொல்கிற வயது வந்திருக்கவில்லை. ஆனால் அன்னிலேர்ந்து இன்னிவரை அந்த பழுப்பு வெள்ளை கட்டம்போட்ட கோட், ஆணியில் தொங்கும்போதோ, பழந்துணி பெட்டியிலோ எப்ப அதைப் பார்த்தாலும், என அடிவயிறு கனக்கும். எனக்கு மட்டுமே தெரிந்த, நான் பண்ணிய ஏடாகூடம் அல்லவா அது! மனதைவிட்டு வெளியே துப்ப முடியாத தப்பு.

லெயர்து, என்னுடன் வந்துகொண்டிருந்தவனைப் பார்த்தேன். பழைய அந்த நிகழ்ச்சி அவன் மனதில் இல்லை. இந்தக்காட்சி, குதிரை சுடப்பட்டதை அவன் தாளவில்லை. அவன் முகம் சத்தற்று வெளிறியிருந்தது. கலவரமாகவோ, திகைத்தாப் போலவோ அது இல்லை. ஆனால் உள்ளே அவனில் அது வேலைசெய்து கொண்டிருந்தது. “பார்றா,” என்றேன் உற்சாகமும் சிநேகமும் த்வனிக்க. “நாம பார்த்தோம்ன்றதை நீ யாராண்டையும் சொல்லாதே. சொல்லமாட்டே, இல்லே?”

”மாட்டேன்” என்றான் சுரத்தில்லாமல். ”சத்தியமா?” ”சத்தியம்” என்றான். அவன் கையை அப்படியே முதுகோடு பிடித்துக்கொண்டேன். சட்டென கை விரல்களை மாத்தி மடித்து பொய் சத்தியம் பண்ணிவிடுவானோ, என்று பயம். ஆனாலும் ராத்திரி தூககத்தில் அலறி கிலறி குட்டை உடைத்துவிடக் கூடும்!

எப்படியாவது, அவன் என்ன பார்த்தானோ, அதை அவன் மனதில் இருந்து வெளிய தள்ளிவிட்டால் நல்லது. சட்டுனு அவன் கவனத்தை வேற எங்காவது மாத்திட்டால் இதை மறந்துருவான். சினன மனசு. நிறைய விஷயத்தை அது ஞாபகம் வெச்சிக்காது, என்றிருந்தது. கொஞ்சம் பணம் சேர்த்து வெச்சிருந்தேன் ஏற்கனவே. ஜுபிலிக்குப் போய் ஒரு நிகழ்ச்சி பார்த்தோம். ஜுடி கனோவாவோட அதில் ஒரே சிரிப்பு. அத்தோட இதெல்லாம் அவனுக்கு மறந்துரும்னு எனக்கு இருந்தது.

ரெண்டு வாரமாயிற்று. இப்ப அவர்கள் ஃப்ளோராவை சுடப்போகிறார்கள் என்று தெரியும் எனக்கு. “போதிய அளவு புல் இருக்குதா, “என்று அம்மா கேட்டதும், அதற்கு அப்பா, “போதும். நாளைக்கு அப்புறம் பசு மட்டும் தான்… அடுத்த வாரம் அதை வெளிய மேய விடலாம்,” என்று பதில் சொன்னார். நான் புரிந்துகொண்டேன். அதாக்கும் சங்கதி. ஃப்ளோராவை காலையில் சுடப் போகிறார்கள்.

இப்ப நான் அதைப் பார்க்கலாம் என்று யோசிக்கவில்லை. திரும்ப வேடிக்கை பார்க்கிற சமாச்சாரம் இல்லை அது. நிசத்தில் அதை நான் அடிக்கடி நினைக்கிறது கிடையாது. ஆனால் சில சமயம் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கையில், அல்லது கண்ணாடி முன்னால் தலை வாரியபடி பெரிய பெண்ணாய் ஆனால் நான் எத்தனை அழகாய் இருப்பேன் என்கிற கனவில் மிதக்கும் போதும், சட்டென அந்தத் திகில் முன்வந்து குதிக்கும். அப்பா எத்தனை சகஜபாவனையோட அந்தத் துப்பாக்கியை உயர்த்துகிறார். மேக் காற்றில் காலை உதைக்கிறபோது ஹென்ரி இளிக்கிறான். இதில் எனக்கு திகிலோ, எதிர்ப்பு உணர்வோ கூட இல்லை. பட்டணத்துப் பெண்ணைப் போலவே நான் இதனால் பெரியதாய் பாதிக்கப் படாமலேயே தான் இருந்தேன். மிருகங்களின் மரணத்தை வைத்து தான் எங்கள் வாழ்க்கைப் பாடே ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதுசார்ந்து எனக்கு லேசான குற்றவுணர்வு இருந்தது. அப்பாவும், அவர் பண்ணும் காரியங்களும் பற்றி ஒரு சங்கடம் இருந்தது.

அழகான நாள். கூதல் பெருங்காற்றில் ஒடிந்து விழுந்த சுள்ளிகளை பண்ணையில் பொறுக்கி சிறு விறகுக்கூம்புகளாக அங்கங்கே குவித்து வைக்கிறதும் எங்கள் வேலைதான். ஃப்ளோராவின் சிணுக்கம் கேட்டது. கூடவே அப்பாவின் குரல். ஹென்ரி சத்தம் போடுகிறதும் கேட்டது. என்ன நடக்கிறது என்று பார்க்க, தடதடவென்று ஓடினோம்.

லாயத்தின் கதவு திறந்து கிடந்தது. ஹென்ரி அப்போதுதான் ஃப்ளோராவை வெளியே நடத்தி வந்தான். குதிரை முற்றத்தில் அதுபாட்டுக்கு இங்குமங்குமாய்த் திரிந்து கொண்டிருந்தது. நாங்கள் வேலி ஏறினோம். குதிரை ஓடுவது பார்க்க ஜோராய் இருந்தது. அவ்வப்போது கனைப்பு. முன்காலைத் தூக்கி ஜிங்குஜக்கா அசைவுகள். மேற்கத்திய சினிமா போல. உடல் சேதாரம் எதுவும் இல்லாத பட்டிக் குதிரை. மேய்ந்து திரியும் வயசான பழுப்பு சவாரிக்குதிரை..

அப்பாவும் ஹென்ரியும் அதன்பின்னால் ஓடி அதன் கயிறைப் பிடித்து ஒருமாதிரி ஒரங்கட்ட முயற்சி செய்தார்கள். கிட்டத்தட்ட செய்தாகிவிட்ட நிலையில் திடுதிப்பென்று அது அவர்கள் நடுவே புகுந்து கண்தெரிக்க பண்ணையின் முடுக்கு எங்கோ மறைந்துவிட்டது. வேலிப்பக்கமாக அது வந்து மோதியபோது பட்டைகள் அதிர்ந்து கிறீச்சிட்டன. ஹென்ரி கத்தினான். அது கரடு பக்கமா போயிட்டது.

வீட்டைத் தாண்டி வெளியே ஒரு எல் வடிவ கட்டாந்தரை. அதன் நடுப்பகுதிக்கு அது வந்தால், வாயில் திறந்துதான் இருக்கிறது. காலையில் சரக்குவண்டி உள்ளேவர திறந்ததை அடைக்கவில்லை. நான் வேலியின் வெளிப் பக்கமாய் இருந்தேன். அப்பா என்னைப் பார்த்துக் கத்தினார். “ஏய் போ வாசல் கதவைச் சாத்து.”

நான் சூப்பரா ஓடுவேன். தோட்டத்துள் ஓடி ஊஞ்சல் கட்டியிருந்த மரத்தைத் தாண்டி, சிறு பள்ளம். அதையும் ஒரே தாவு, பாதைக்கு வந்தாச்சு. குதிரை இன்னுமாய் பாதையில் தட்டுப்படவில்லை. வேறு பக்கம் எங்கும் ஒடியிருக்குமா. (அந்தப்பக்கம் இதைவிட கனமான கிராதிக்கதவு.) கதவு தரையோடு அழுந்திக்கிடந்ததைத் தூக்கி தெருவுக்குத் தள்ளி நகர்த்தினேன். பாதி திறந்திருப்பேன். ஆ அதோ குதிரை. என்னைப் பார்த்து ஓடிவந்தது அது. கதவைச் சாத்தி சங்கிலி போட வேண்டியிருந்தது. அப்பதான் அந்தக் குழியைத் தாண்ட முடியாமல் தாண்டி தள்ளாடி லெயர்து வந்தான்.

கதவை அடைக்கவில்லை நான். விரியத் திறந்து விட்டேன். அதுபத்தி பெரிய யோசனை யெல்லாம் இல்லை. அட சட்டென அதைச் செய்தேன். ஃப்ளோரா ஓரே ஓட்டமாய் ஓடிவந்தது. என்னைத் தாண்டி.. லெயர்துவானால், “கதவைச் சாத்து, சாத்து,” என்று குதித்தான். அது அவன் கத்தி முடிக்குமுன் ஓடிவிட்டது. அப்பாவும் ஹென்ரியும் அதற்கு அப்புறமாகத் தான் பாதையில் தட்டுப்பட்டார்கள். ஃப்ளோரா நகரச் சாலையில் ஓடிக்கொண்டிருந்ததை அவர்கள் பார்த்தார்கள். நான் கதவருகே வருமுன் அது தப்பித்திருக்க வேண்டும், என்றுதான் அவர்களுக்குப் பட்டிருக்கும்.

விசாரிக்க நேரம் இல்லை. திரும்ப உள்ளேபோய் துப்பாக்கியும், கத்தி கபடாக்களும் எடுத்து வண்டியில் அள்ளிப்போட்டு, ஒரு உருமலான சுற்று அடித்து கிளம்பி கதவை நோக்கி வந்தார்கள். “நானும் வரேன். நானும்…” என லெயர்து கத்தினான். ஹென்ரி வண்டியை நிறுத்தி அவனையும் ஏற்றிக்கொண்டான். அவர்கள் போனதும் நான் கதவைச் சாத்தினேன்.

லெயர்து நடந்ததைச் சொல்லி விடுவான் என்றிருந்தது. என் கதி என்ன தெரியவில்லை. ஃப்ளோரா கதி என்ன, தெரியும். வண்டிக்கு அது எப்படி தப்பிக்க முடியும்? அட இவங்க கண்ணுக்கு அது தப்பினாலும், அதை வழியில் பார்க்கிற யாராவது மதியமோ காலையிலோ தொலைபேசியில் தகவல் சொல்லி விடுவார்கள். ஒளிந்து அது தப்பிக்க அடர் புதர்கள் இநதப் பக்கங்களில் இல்லை.

அதன் மாமிசம் எங்களுக்கு வேண்டும், நரிகளுக்குப் போட. நரிகள் வேண்டும், எங்கள் பிழைப்பே அதை நம்பித்தான். நான் செய்தது என்ன? அப்பாவுக்கு அதிக சிரமம் வைத்துவிட்டேன். ஏற்கனவே அவர் கடுமையாய் உழைக்கிறார். நடந்ததை அவர் கேள்விப்பட்டால், இனி அவர் என்னை நம்புவாரா? மாட்டார். நான் அவர்கட்சி அல்ல. ஃப்ளோரா கட்சி, என அவர் உணர்வார். அதனால் யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை, அந்த ஃப்ளோரா உட்பட. எல்லாம் ஒண்ணுதான். ஆனால், எனக்கு நான் செய்த காரியத்தையிட்டு வருத்தம் இல்லை. அது என்னைப் பார்த்து ஓடிவந்தது. அபயம். நான், எனக்கு வேறு வழியில்லை, நான் கதவை திற்ந்து விட்டுவிட்டேன் அதை.

வீட்டுக்கு வந்தேன். அம்மா கேட்டாள். “அங்க என்ன கலாட்டா?” நான் சொன்னேன். அம்மா, ஃப்ளோரா வேலியை மிதிச்சி தாண்டிப் போயிட்டது. “பாவண்டி உங்க அப்பா,” எனறாள் அவள். “பட்டி தொட்டியெல்லாம் இப்ப அவர் அதைத் தேடிப் போகணும். அவங்க ஒருமணிக்குள்ளாற வருவாங்களா சந்தேகம். சாப்பாட்டுக்கு இப்பவே மெனக்கெட வேண்டியது இல்லை.”

ரொம்ப சமத்தாக நான் வீட்டுக்காரியங்களில் இறங்கினேன். கரையிட்ட பழைய திரைச்சீலைகளை படுக்கைமீது விரித்தேன். எனக்கான அலங்கார மேஜை தயார் செய்தேன். பாவாடை தைத்த மிச்ச ஜரிகையெல்லாம் வைத்து அதை அழகுபடுத்திக் கொண்டேன். என் படுக்கைக்கும், லெயர்துவின் படுக்கைக்கும் இடையே சிறு தடுப்பு மறைப்பு வைக்கலாமெனப் பட்டது.

வெளி வெளிச்சத்தில் அந்த திரைச்சீலை லேஸ்கள் லாலி பீலி என்று அசிங்கமாய்த் தெரிந்தன. இனி ராத்திரி ஒண்ணா அவனோடு நான் பாடமாட்டேன். ஒருநாள் நான் பாடும்போது லெயர்து சொன்னான். “கண்றாவியா இருக்குடி.” நான் பாட்டுக்கு அன்னிக்கு தொடர்ந்து பாடித்தான் முடிச்சேன். ஆனால் அடுத்தநாள் நான் பாடவே இல்லை.

ஆனால் பாட்டு கீட்டுல்லாம் இப்ப தேவையும் இல்லை. எங்களுக்கு பயம் போயாச்சி. மேல பழைய மர சாமான்கள் தான் இருக்கு. ஓட்ட உடசல் அடசல். ஒழுங்கா அதை அடுக்குவார் இல்லை. லெயர்து தூங்கட்டும் என நான் அதுவரை படுக்கைக்கு வரவேயில்லை. இப்ப எனக்கே எனக்காய் நான் கதைகள் சொல்லிக்கொண்டேன். ஆனால் இந்தக் கதைகளிலும் என்னென்னவோ நடந்தன. திடுக் திருப்பங்கள். அது வழக்கம்போல ஆரம்பித்து, அதில் ஒரு ஆபத்து கணம், நெருப்பு, காட்டு விலங்கு… நான் சனங்களைக் காப்பாற்றி… அத்தோடு விஷயம் மாறிவிடுகிறது. ஐயோ இப்ப என்னை யாரோ காப்பாத்துகிறார்கள். என் வகுப்பில் அல்லது பள்ளியில் என்னோடு படிக்கும் பையன், பெண்பிள்ளைகளை முட்டிக்குக் கீழ் கிள்ளுவாரே அந்த காம்ப்பெல் சாராகக் கூட இருக்கலாம். அந்தக் கட்டத்தில் அந்தக் கதை, நிசத்தில் என்னைப் பத்தி எனக்கு உணர்த்தியதாகப் பட்டது. அதோ நான். என் கூந்தல் நீளத்தை கவனிக்கிறேன். என் உடைகளை கவனிக்கிறேன். இதெல்லாம் தெரிய ஆரம்பித்தபோது, அந்தக் கதையின் சுவாரஸ்யம் அடிபட்டே போனது.

வண்டி திரும்பிவர ஒருமணிக்கு மேலேயே ஆகிவிட்டது. பின்பகுதியை தார்ப்பாலின் ஏற்றி மறைப்பு. உள்ளே மாமிசம் இருக்கிறது என்பது புரிகிறது. அம்மா உணவை திரும்ப சுடவைக்க வேண்டும். ஹென்ரியும் அப்பாவும், ரத்த மேலாடைகளை மாற்றி, வேலைக்கான வேறு மேலாடைகளில் வந்தார்கள். கை கால் கழுத்து முகம் எங்குமான கறைகளை அவர்கள் கழுவிக் கொண்டார்கள். தலையில் தண்ணீரடித்து படிய வாரிக்கொண்டார்கள். லெயர்து தன் கையை உயர்த்தி ரத்தக்கறையைக் காட்டினான். “கிழட்டுக்குதிரை ஃப்ளோராவை சுட்டாச்சு”, எனறான் அவன். “அதை அப்படியே 50 துண்டா போட்டோம்.”

“அதெல்லாம் எனக்குக் கேட்க வேண்டாம்,” என்றாள் அம்மா. “அடேய், கையக் கழுவாமல் கொள்ளாமல் சாப்பிட வந்து உட்காராதே.” அப்பா அவனை அழைத்துப்போய் அலம்பி விட்டார்.

அப்பா சாப்பிட உட்கார்ந்து, “கடவுளின் கருணை”, என்றார். ஹென்ரி முள்கரண்டியில் தனது சூயிங்கம்மை அப்பினான். அதை அவன் உரித்தெடுக்கும்போது என்னமாச்சும் உருவம் போலத் தெரியும். நாங்கள் ஆச்சர்யப்படுவோம், என்கிற அவன் விளையாட்டு அது. கிண்ணங் கிண்ணமாய் குழைந்த காய்கறிக் கூட்டுகள், கொதியுடன் ஆவிபறந்தன அவற்றில் இருந்து, கைமாறின

லெயர்து என் கண்ணை நேராகப் பார்த்தான். பெருமிதமான அழுத்தமான குரலில் அவன் பேசினான். “ச், அப்பா, இவளால ஃப்ளோரா ஓடிட்டது.”  “ம்?…” என்றார் அப்பா. “ஆமாப்பா, அக்கா, கதவை மூடியிருக்கலாம். அவள் செய்யவில்லை. இவள் என்ன பண்ணினாள், கதவை பப்பரக்கான்னு திறந்து விட்டாள், ஃப்ளோரா ஓடிட்டது.”

“என்னடி? அப்பிடியா,” என்று கேட்டார் அப்பா. மேஜையில் எல்லாருமே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் என்ன சொல்ல? மெல்ல தலையாட்டினேன். தொண்டைக்குள் சண்டித்தனம் செய்யும் உணவு. இறங்க மறுத்தது. அவமானமாய் இருந்தது. கண்ணில் கண்ணீர் பொங்கி வழிந்தது.

ஹ்ரும், என்கிற மாதிரி கனைத்தார் அப்பா. ” ஏண்டி அப்பிடிப் பண்ணினே?”

எனக்கு பதில்சொல்ல முடியவில்லை. கரண்டியை நழுவ விட்டேன். இதோ என்னை வெளிய அனுப்பி விடுவார்கள், என எதிர்பார்த்தேன். தலை தாழ்ந்தே யிருந்தது.

ஆனால் அது நடக்கவில்லை. யாருமே கொஞ்சநேரம் எதுவும் பேசவில்லை. “அப்பா, அவ அழறா,” என்றான் லெயர்து. அதில் ஈவு பச்சாதாபம் எதுவும் இல்லை.

“அழட்டும்,” என்றார் அப்பா. கசப்பான குரல். எகத்தாளமாய் அவர் என்னை எள்ளியதாய்க் கூட இருக்கலாம். “பொட்டைப்பிள்ளை தானேடா அவள்,” என்றார் அப்பா.

நான் ஆட்சேபிக்கவில்லை. அது நிசந்தானோ என்னவோ.

BOYS AND GIRLS – Alice Munro

0 Replies to “சாண்பிள்ளை”

  1. ஒரு சிறு விளக்கம் பின்னிணைப்பாகச் சேர்த்து விடலாம். ஆலிஸ் மன்ரோ நோபல் பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதி DEAR LIFE – தமிழில் அதை அட கடவுளே, என நான் முன் அறிமுகத்தில் தந்திருப்பது பற்றிய சிறு விளக்கம். கனடா நாட்டில் பெரியவர்கள், வாழ்க்கை சார்ந்து அங்கலாய்ப்புடன், ஓ டியர் லைஃப், என பேசிக்கொள்கிறதாக மன்ரோ குறிப்பிடுகிறார். அதன் அடிப்படையில் டியர் லைஃப், தமிழில் அட கடவுளே, என என்னால் உள்வாங்கப்பட்டது! நன்றி.
    எஸ். ஷங்கரநாராயணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.