தமிழ் மொழி பெயர்ப்பு: மீனாக்ஷி பாலகணேஷ்
ஜீலின் என்ற பெயர் கொண்ட ஒரு ஆபீஸர் காகசஸ் மலை ராணுவத்தில் பணி புரிந்து கொண்டிருந்தான்.
ஒரு நாள் அவன் வீட்டிலிருந்து, அவன் தாயிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அவள் பின்வருமாறு எழுதியிருந்தாள்: “எனக்கோ வயதாகிக் கொண்டிருக்கின்றது. இறப்பதற்கு முன்பு என் அருமை மகனைக் கடைசி முறையாகப் பார்க்க ஆசையாக உள்ளது. வந்து எனக்கு விடை கொடுத்து என்னை அடக்கம் செய்து விடு. பின், கடவுளின் விருப்பம் அதுவானால், எனது ஆசிகளுடன் உன் பணிக்குத் திரும்பிச் செல்வாயாக. நான் உனக்காக ஒரு நல்ல, புத்தியுள்ள, கொஞ்சம் சொத்தும் உள்ள பெண்ணைப் பார்த்து வைத்திருக்கிறேன். உன்னால் அவள் மீது அன்பு செலுத்த முடியுமானால், நீ அவளை மணந்து கொண்டு வீட்டிலேயே தங்கி விடலாம்.”
ஜீலின் இதைப் பற்றி யோசித்தான். அந்த முதியவளின் நாட்கள் எண்ணப் பட்டுள்ளன என்பது உண்மையே. அவளை உயிருடன் காண அவனுக்கு இன்னொரு வாய்ப்புக் கிட்டாது. அதனால் அவன் செல்லத் தான் வேண்டும்; மேலும் அந்தப் பெண் நல்லவளாக இருந்தால், அவளை ஏன் மணந்து கொள்ளக் கூடாது?
ஆகவே அவன் தனது துணைத் தளபதியிடம் சென்று, விடுமுறை பெற்றுக் கொண்டு, தோழர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு, பிரிவுபசாரமாக படைவீரர்களுக்கு நான்கு வாளிகள் வோட்காவும் கொடுத்து உபசரித்து, வீடு செல்லத் தயாரானான்.
காகசஸ் பகுதியில் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. சாலைகள் இரவில் மட்டுமின்றிப் பகலிலும் கூடப் பாதுகாப்பற்றி-ருந்தன. யாராவது ரஷ்யன் அவனது கோட்டையிலிருந்து சிறிது தூரம் நடந்தாலோ, அல்லது குதிரையில் சவாரி செய்தாலோ, தார்த்தாரியர்கள் அவனைக் கொல்லவோ அல்லது மலை மீது இழுத்துச் சென்று விடவோ செய்தார்கள். அதனால் வாரத்திற்கு இருமுறை ராணுவ வீரர் குழு ஒன்று ஒரு கோட்டையிலிருந்து புறப்பட்டு அடுத்த கோட்டை வரை அணிவகுத்துச் செல்லும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் மற்ற பயணிகள் அல்லது வழிப்போக்கர்களைப் பாதுகாப்பாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அழைத்துச் செல்வர்.
அது வேனிற் காலம். பொழுது புலர்ந்ததும் சாமான்களை ஏற்றிச் செல்லும் வண்டி கோட்டையிலிருந்து புறப்படத் தயாராக இருந்தது; ராணுவ வீரர்கள் அணிவகுத்து வெளியே வந்தனர். சாலை வழியே அவர்கள் சாமான் வண்டியுடன் கிளம்பினார்கள். ஜீலின் குதிரை மீது அமர்ந்திருந்தான்; அவனது உடைமைகள் கொண்ட ஒரு தள்ளு வண்டி, சாமான் வண்டியுடன் சென்றது. அவர்கள் பதினாறு மைல்கள் செல்ல வேண்டும். சாமான் வண்டி மெதுவாக நகர்ந்தது; சில சமயம் வீரர்கள் நடப்பதை நிறுத்துவர்; அல்லது, ஏதாவது ஒரு தள்ளு வண்டியிலிருந்து ஒரு சக்கரம் கழன்று வந்து விடும்; அல்லது ஒரு குதிரை நகராமல் சண்டி செய்யும்- அப்போது எல்லாரும் காத்திருக்க வேண்டி வரும்.
சூரியன் உச்சிப் பொழுதை அடைந்த நேரம் அவர்கள் பாதி தூரம் கூடச் சென்றிருக்கவில்லை. புழுதியும் வெப்பமுமாய் இருந்தது, சூரியன் எரித்து கொண்டிருந்தான்; தங்குமிடம் ஒன்று கூட எங்கும் இருக்கவில்லை: சுற்றிலும் வெட்ட வெளி, ஒரு மரமோ, ஒரு புதரோ அச்சாலையில் இருக்கவில்லை.
ஜீலின் முன்னால் சவாரி செய்தான்; பின் நின்று, சாமான் வண்டி தன்னைக் கடந்து போகும்வரை காத்திருந்தான். அப்போது சைகை கொடுக்கும் கொம்பு வாத்தியத்தின் ஊதல் தன் பின்னாலிருந்து ஒலிக்கக் கேட்டான். திரும்பவும் குழு நின்று விட்டிருந்தது. ஆகவே அவன் இவ்வாறு நினைத்தான்: ‘நானே தனியாக சவாரி செய்தால் நல்லதல்லவா? என் குதிரை மிக நல்ல குதிரை; தார்த்தாரியர்கள் என்னைத் தாக்கினால், என்னால் குதிரையில் பாய்ந்தோடி விட முடியும். இருந்தாலும், காத்து நிற்பதே புத்திசாலித்தனம்.’
இவ்வாறு அவன் யோசனை செய்து கொண்டிருந்த பொழுது, கஸ்டீலின் என்ற ஒரு ஆபீஸர்- அவனிடம் துப்பாக்கி இருந்தது- ஜீலின் பக்கம் சவாரி செய்து வந்து சொன்னான்:
“வா ஜீலின், நாம் தனியாகச் செல்லலாம்.இது படு மோசமாக இருக்கிறது; நான் பசியால் வருந்துகிறேன், இந்தச் சூடும் பொறுக்க முடியவில்லை. எனது சட்டை பிழியும்படி ஈரமாகி விட்டது.”
கஸ்டீலின் ஒரு பருத்த, கனத்த சரீரமுடைய ஆள்; வியர்வை அவனது சிவந்த முகத்தில் வழிந்தோடியது. ஜீலின் கொஞ்சம் யோசித்தான்; பின்பு கேட்டான், ” உன்னுடைய துப்பாக்கியில் தோட்டாக்கள் உள்ளனவா?”
“ஆம். உள்ளன.”
“நல்லது. அப்பொழுது நாம் போகலாம்.ஆனால், நாம் ஒருவரை ஒருவர் பிரிந்து போகக் கூடாது என்பது கட்டாயம்.”
ஆகவே அவர்கள் அந்தப் பரந்த வெட்ட வெளியில், உரையாடியபடி, ஆனால் இரு பக்கமும் பார்வையைச் செலுத்தியபடியே முன்னால் சவாரி செய்தார்கள். அவர்களால் தங்களைச் சுற்றிலும் பார்க்க முடிந்தது. ஆனால் வெட்ட வெளியைக் கடந்த பிறகு, சாலை இரு குன்றுகளுக்கிடையே இருந்த ஒரு பள்ளத்தாக்கின் வழியாகச் சென்ற போது ஜீலின் கூறினான்: “நாம் அந்தக் குன்றின் மேலேறிச் சுற்றிலும் ஒரு நோட்டம் விடுவது நல்லது; இல்லாவிடில், நமக்குத் தெரியும் முன்பே தார்த்தாரியர்கள் நம் மீது பாய்ந்து விடுவார்கள்.”
அதற்குக் கஸ்டீலின் சொன்னான்: “என்ன பிரயோஜனம்? நாம் போகலாம் வா.”
ஜீலின் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
“இல்லை,” என்றவன், “நீ வேண்டுமானால் இங்கேயே காத்திரு. ஆனால் நான் போய்ப் பார்த்து விட்டு வருகிறேன்.’’ குதிரையை இடப்புறம் திருப்பிக் கொண்டு குன்றின் மேல் செல்லலானான். ஜீலினின் குதிரை ஒரு வேட்டைக் குதிரை; அது அவனைக் குன்றின் மேல் சிறகுகளால் பறந்து செல்வது போல் கொண்டு சேர்த்தது. ( அவன் அந்தக் குதிரையை குட்டியாக இருக்கும் பொழுதே ஒரு மந்தையிலிருந்து நூறு ரூபிள்களுக்கு வாங்கித் தானே அதை நன்கு பழக்கி இருந்தான்).அவன் குன்றின் உச்சியைச் சென்று அடைவதற்கும், கிட்டத்தட்ட முப்பது தார்த்தாரியர்களைத் தன் முன்னாலிருந்து நூறு கஜ தூரத்தில் காண்பதற்கும் சரியாக இருந்தது. அவர்களைக் கண்டதுமே அவன் திரும்ப எத்தனித்தான்; ஆனால் தார்த்தாரியர்களும் அவனைக் கண்டு விட்டனர்; முழு வேகத்தில் தங்கள் குதிரைகளை முடுக்கி விட்டு துப்பாக்கிகளை உயர்த்தியபடி அவனைத் தொடர்ந்தார்கள். “உனது துப்பாக்கியைத் தயாராக வை,” என்று கஸ்டிலீனை நோக்கிக் கத்தியவாறு, தன் குதிரையினால் முடிந்த அளவு வேகமாகப் பாய்ந்து இறங்கினான் ஜீலின்.
தனது எண்ணங்களில் தன் குதிரையிடமும் பேசினான்: ‘என் செல்லமே, என்னை இந்த இக்கட்டிலிருந்து தப்புவித்து விடு; இப்போது மட்டும் நீ தடுமாறினாயானால், எல்லாமே முடிந்து விடும். துப்பாக்கி இருக்குமிடத்தை நான் அடைந்து விட்டால் பின் அவர்களால் என்னைப் பிடித்துக் கைதியாக்க முடியாது.’
ஆனால் காத்திருப்பதற்குப் பதிலாக கஸ்டீலின் தார்த்தாரியர்களைக் கண்டதுமே கோட்டையை நோக்கி முழு வேகத்தில் ஓட ஆரம்பித்து விட்டான்; குதிரையையும் இரு புறங்களிலும் மாற்றி மாற்றி சாட்டையால் அடித்து விரட்டிய வண்ணம் ஓடிய அவனது குதிரையின் வால் ஒன்றே அந்தப் புழுதியினூடே காணக் கிடைத்தது.
ஜீலின் நிலைமை கடினமானதைக் கண்டான்; துப்பாக்கி போயாயிற்று. தன் கையிலுள்ள வாளை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்ய முடியும்? தனது குதிரையை தங்கள் பாதுகாப்புக் குழுவை நோக்கித் திருப்பினான்; ஆனால் ஆறு தார்த்தாரியர்கள் அவனை அந்த வழியில் மறைக்க விரைந்து வந்தார்கள். அவன் குதிரை வலிமை வாய்ந்தது தான் ஆனால் அவர்களது குதிரைகளோ இன்னும் வலிமை வாய்ந்தவை; மேலும், அவர்கள் இப்பொழுது அவனது பாதையின் குறுக்கே வந்து விட்டனர். அவன் தன் குதிரையின் சேணத்தைப் பிடித்திழுத்து வேறு வழியில் செலுத்த முயற்சித்தான்; ஆனால் அது மிக வேகமாகச் சென்றதனால் நிற்க முடியாமல் தார்த்தாரியர்கள் இருந்த திசை நோக்கி ஓடி, அவர்கள் மேலேயே மோதியது. சாம்பல் நிறக் குதிரையின் மீதமர்ந்த ஒரு சிவப்பு தாடிக்காரத் தார்த்தாரியன் தனது துப்பாக்கியை உயர்த்திய வண்ணம் சப்தமிட்டவாறு பல்லைக் காட்டி இளித்தபடி தன்னை நோக்கி வருவதைக் கண்டான்.
‘ஆஹா, உங்களை எனக்குத் தெரியும்; நீங்கள் பிசாசுகள் அல்லவோ? என்னை நீங்கள் உயிரோடு பிடித்து விட்டால், ஒரு குழியில் போட்டு அடித்துத் துவைத்து விடுவீர்களே. என்னை உயிரோடு பிடிக்க விட மாட்டேன்!’ என்று எண்ணிக் கொண்டான் ஜீலின்.
ஜீலின் உருவத்தில் பெரிய ஆகிருதியை உடையவனாக இல்லாவிடினும், மிகவும் தைரியசாலி. தனது வாளை உருவிக் கொண்டு அந்த சிவந்த தாடித் தார்த்தாரியன் மீது பாய்ந்தான்: ‘குதிரையைச் செலுத்தி இவனை வீழ்த்துவேன் அல்லது எனது வாளால் இவனை முடமாக்குவேன்,’ என எண்ணிக் கொண்டான்.
அவனிடமிருந்து இன்னும் ஒரு சிறிது தூரமே இருக்கும்போது, அவன் பின்னாலிருந்து துப்பாக்கியால் சுடப்பட்டான்; அவனது குதிரை அடிபட்டது. தனது மொத்த கனத்துடன் தரையில் விழுந்த அது ஜீலினைத் தரையில் நன்கு அழுத்தியது.
அவன் எழ முயற்சி செய்தான்; ஆனால், துர்க்குணம் படைத்த இரு தார்த்தாரியர்கள் ஏற்கனெவே அவன் மீது அமர்ந்து அழுத்திக் கொண்டு அவன் கைகளைப் பின்புறமாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அவன் பெரும் முயற்சி செய்து அவர்களைத் தள்ளி விட்டான்; ஆனாலும் மேலும் மூன்று பேர் தங்கள் குதிரைகளிலிருந்து குதித்திறங்கி, அவனது தலையைத் தங்கள் துப்பாக்கிக் கட்டையினால் விளாசலாயினர். கண்கள் இருள, அவன் கீழே விழுந்தான். தார்த்தாரியர்கள் அவனை இழுத்து, தங்கள் குதிரைகள் மேலிருந்த கயிறுகளால், அவனது கைகளை வளைத்துப் பின்புறமாகக் கட்டி தார்த்தாரியர்களுக்கே உரிய ஒருவித முடிச்சிட்டனர். அவனது தொப்பியைத் தட்டி விட்டு, பூட்சுகளைக் கால்களிலிருந்து இழுத்து, துணிகளைக் கிழித்து, அவனை முழுதும் சோதனையிட்டு அவனது பணத்தையும் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டனர்.
ஜீலின் திரும்பித் தனது குதிரையை நோக்கினான். அந்தப் பாவப்பட்ட ஜீவன் ஒரு பக்கமாக விழுந்த வண்ணமே கிடந்தது; கால்களை உயரே உதைத்துக் கொண்டு தரையைத் தொட முடியாமல் தவித்தது. அதன் தலையில் குண்டடி பட்ட இடத்திலிருந்து கருங்குருதி பீய்ச்சியடித்து புழுதித் தரையை இரண்டடி தூரத்திற்குச் சேறாக்கியது.
ஒரு தார்த்தாரியன் அக்குதிரையின் பக்கம் சென்று அதன் சேணத்தைக் கழற்றி எடுக்க முயன்றான்; அது இன்னும் உதைத்தது; உடனே அவன் தனது குறுவாளை எடுத்து அதன் மூச்சுக் குழாயை அறுத்தான்.அதன் தொண்டையிலிருந்து ஒரு ஊதல் சப்தம் வந்தது, ஒருமுறை எம்பியபின் அக்குதிரையின் கதை முடிந்தது.
தார்த்தாரியர்கள் சேணத்தையும் மற்ற கயிறுகளையும் எடுத்துக் கொண்டனர். சிவப்பு தாடிக்காரத் தார்த்தாரியன் தனது குதிரையில் ஏறிக் கொண்டான்; மற்றவர்கள் ஜீலினை அவன் பின்னால் தூக்கி உட்கார வைத்தனர். அவன் விழுந்து விடாமலிருக்கும் பொருட்டு அவனை அந்தத் தார்த்தாரியனின் இடுப்புக் கச்சையுடன் பிணைத்தனர்; பின் அவர்கள் எல்லோரும் குன்றுகளை நோக்கிச் சவாரி செய்தனர்.
தார்த்தாரியனின் பின்பு ஜீலின் இப்படியும் அப்படியுமாக ஊசலாடிக் கொண்டும், அவனது தலை தார்த்தாரியனின் நாற்றமெடுக்கும் முதுகில் இடித்தவாறும் அமர்ந்திருந்தான். கட்டுமஸ்தான முதுகுப் பகுதியையும், வலிமை பொருந்திய கழுத்தையும் அதன் நன்றாக மழிக்கப்பட்ட நீல நிறமுள்ள பிடரியுடன் பார்ப்பதைத் தவிர வேறு ஒன்றும் அவனால் பார்க்க முடியவில்லை. ஜீலினின் தலையில் அடிபட்டிருந்தது.; கண்களின் மேல் ரத்தம் காய்ந்து போய் இருந்தது; அவனால் நகரவோ, அல்லது ரத்தத்தைத் துடைக்கவோ இயலவில்லை. அவனது கழுத்து எலும்புகள் வலிக்கும் வண்ணம் அவனது கைகள் இறுக்கிக் கட்டப் பட்டிருந்தன.
அவர்கள் குன்றுகளின் மேலும் கீழுமாக நெடுந்தூரம் சென்றனர். பின் ஒரு நதியை அடைந்து, அதை நடந்து கடந்து, ஒரு பள்ளத்தாக்கின் குறுக்காகச் செல்லும் கரடுமுரடான பாதையை அடைந்தனர்.
ஜீலின் அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று பார்க்க முயன்றான்; ஆனால் அவனுடைய கண்ணிமைகள் காய்ந்து போன ரத்தத்தால் ஒட்டிக் கொண்டிருந்தன; மேலும் அவனால் திரும்பக் கூட முடியவில்லை.
அந்தி மயங்க ஆரம்பித்தது; அவர்கள் இன்னொரு ஆற்றைத் தாண்டி கற்கள் நிறைந்த குன்றின் மீது சவாரி செய்தனர். இங்கு புகை வாசம் வந்தது, நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன. அவர்கள் ஒரு ஆவுலை ( தார்த்தாரியர்களின் கிராமம்) அடைந்தனர். தார்த்தாரியர்கள் தங்கள் குதிரைகளிலிருந்து இறங்கினர்; தார்த்தாரியச் சிறுவர்கள் வந்து ஜீலினைச் சூழ்ந்து கொண்டு நின்று மகிழ்ச்சிக் கூச்சலிட்டுக் கொண்டு அவன் மீது கற்களை வீசி எறிந்தனர்.
தார்த்தாரியன் அச்சிறுவர்களை விரட்டி விட்டு, ஜீலினைக் குதிரை மேலிருந்து இறக்கிய வண்ணம் தனது உதவியாளைக் கூப்பிட்டான். கன்னத்து எலும்புகள் மேல்நோக்கித் துருத்தியபடியும் ஒரு மேல்சட்டை மட்டும் (அது மிகவும் கிழிந்திருந்ததால் அவனது மார்பு முழுவதும் வெறுமையாக இருந்தது) அணிந்திருந்தவனுமான நோகை என்பவன் கூப்பிட்டவுடன் வந்தான். தார்த்தாரியன் அவனுக்கு கட்டளை பிறப்பித்தான். அவன் சென்று விலங்கினைக் கொண்டு வந்தான்; வலுவான ஓக் மரத்தினாலான இரு கட்டைகளுடன் இரும்பு வளையங்கள் இணைக்கப்பட்டு, ஒரு கொக்கியும் பூட்டும் ஒரு வளையத்தில் இணைக்கப் பட்டிருந்தன.
ஜீலினுடைய கைகளின் கட்டை அவர்கள் அவிழ்த்து விட்டு, விலங்கினை அவன் கால்களில் பூட்டி, அவனை ஒரு கட்டிடத்திற்கு இழுத்துச் சென்று, உள்ளே தள்ளிக் கதவையும் பூட்டினார்கள்.
ஜீலின் ஒரு எருக் குவியலின் மீது விழுந்தான். கொஞ்ச நேரம் அசையாமல் கிடந்து விட்டுப் பின் மென்மையாக உள்ள ஒரு இடத்தை துழாவிக் கண்டுபிடித்து அமர்ந்தான்.
(தொடரும்)
_