வைரத் தீவு: ஆல்கட்ராஸ்

அஞ்சல் பெட்டிக்குள் ஒரு கடிதம் மட்டுமிருந்தது. அது உடனடியாக கவனிக்க பட வேண்டியது என பட்டது. சிரமப்பட்டு எழுதப்பட்டிருந்தாலும், அதிலிருந்த முகவரியை புரிந்து கொள்வது கடினம் – சதுரமாக குழந்தையின் கையெழுத்தில் ஒவ்வொரு எழுத்தும் நிறைவு பெறவில்லை. உள்ளே, ஐந்து தாள்களில், இரு பக்கங்களிலும் எழுதப்பட்டிருந்தது. மழுங்கலான வடிவத்திலிருந்த சொற்கள் தாளில் தம்மை அழுத்திக் கொண்டிருந்தன. என்னால் வாசிக்க இயலவில்லை ஆனால் தகவலை உணர்ந்து கொண்டேன். “ஆல் ட்ராஸ்” முதல் பத்தியில் உடைந்து, சிதறிக் கிடந்தது. இறுதி பக்கத்தின் முடிவில் – இடமில்லாததால் – தன் பெயரை கிறுக்கி வைத்திருந்தார். அது இறுதி பக்கத்தின் வலது விளிம்பைத் தாண்டி கீழே வளைந்து சென்றது. அவருடைய பெயரின் கடைசி எழுத்தான “ன்”க்கு இடமில்லை : கிப்ஸ. அது 1971ஆம் ஆண்டின் குளிர்காலம். அவருடைய வீட்டை நோக்கி விரைந்தேன்.

காலிஃபோர்னியாவின் ரெட்டிங் நகரத்திற்கு கிழக்கே 100 மைல் தொலைவிலிருந்த சம நிலத்தில் (ஆட்வம்) என் தாத்தா வாழ்ந்து வந்தார். மாயக் கதைகளில் வருவதைப் போன்ற கோணலான, பழைய வீட்டில் இருந்தார். அவருடைய வயதை அறிந்து கொள்வதற்காக என் மக்களுள் வயது முதிர்ந்தோரிடம் என் பாட்டனாரின் வயதைக் கூற முடியுமா என கேட்டுள்ளேன். நீண்ட மௌனத்திற்கு பின் தங்களுடைய பழுப்பு-வெள்ளி நிற தலையை அசைத்து கூறுவார்கள், “எனக்கு தெரியாது. என் நினைவுகளின் ஆரம்பத்திலிருந்தே அவன் சுருக்கங்கள் கொண்ட வயோதிகனாகவும், வெள்ளி நிற தலை முடியை கொண்டவனாகவும் தான் உள்ளான். என் பால்யத்திலிருந்தே அப்படித் தான் உள்ளான்.” அவர் 1850 இலிருந்து 1870க்குள் பிறந்திருக்கலாம்.

1989இன் நவம்பர் மாதத்தின் இறுதி வாரக்கடைசி (மக்கள் பரஸ்பர நன்றி உரைக்கும் நாள்). ஆண்டின் இந்த காலங்களில் தான் தாத்தாவையும் அவருக்கு நேரிட்ட சோதனைகளையும் எண்ணிக் கொள்வேன். அவருடைய கதையை எழுதுவேன் என எனக்கு நானே உறுதியெடுத்துக் கொள்வேன் ஏனென்றால் ஆல்கட்ராஸ் தீவிற்கு சரியான அடையாளத்தையும், அதன் “உண்மையான” வரலாற்றையும் கொடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. வேற்று நாட்டு கப்பல் ஒன்று வளைகுடாவிற்குள் நுழைந்த போது, அதிலிருந்த டான் யுவான் மானுயெல் டி அயாலா என்ற அன்னியன் அங்கிருந்த “பாறை”யை பார்த்து தன் குறிப்பேட்டில் “ஆல்கட்ராஸ்” என ஆவணப்படுத்திய பொழுது தான் ஆல்கட்ராஸ் தீவின் வரலாறு ஆரம்பமானது என்று எண்ணிக் கொள்வது நவீன மனிதர்களுக்கு சுலபமாக இருக்கும். அந்த சம்பவம், அந்த கடற்பயணம், அந்த ஆவணப்படுத்தல் எல்லாம் சில கணங்களுக்கு முன்பு நடந்தவை மட்டுமே.

பல காலங்களுக்கு முன் சாக்ரமென்டோ பள்ளத்தாக்கு மாபெரும் ஏரியாக இருந்தது என தாத்தா சொன்னார். அந்த ஏரி இன்றிருக்கும் நிலம் அளவிற்கு நீளமாக (வட காலிஃபோர்னியாவிலிருந்து தென் காலிஃபோர்னியா வரை) கிடந்தது. பிறகு பூமியின் அடியிலிருந்து கோபத்துடன் அசைந்து எழுந்த ஆவியால் கடற்கரையின் ஒரு பகுதி உடைந்து சமுத்திரத்தில் விழுந்துவிட்டது என்றார். ஏரியின் நீர் கடலுக்குள் வடிந்து, பூகம்பத்தின் அலைகள் அடங்கிய பின்பு சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாவும், அங்கு தனிமையில் தனக்குள் ஒரு “உண்மையை” வைத்திருக்கும் வைரத் தீவும் (ஆல்கட்ராஸ்) உருவானது.

பனிக்காலம் ஒன்றில், தன்னுடைய ஒற்றை அறை கொண்ட வீட்டில் வைத்து இந்த கதையை தாத்தா என்னிடம் கூறினார். அங்கு பனிக்காலங்களில் குளிர் வாட்டியெடுக்கும். பின்மாலைப் பொழுதில் என் காரில் வந்து சேர்ந்தேன். அவருடைய வீட்டை நோக்கி செல்லும் வாகனப் பாதையில் வரிசையாக உறைந்த, சேற்றுக் குழிகள் இருக்கும். வாகனத்தின் முகவிளக்கு கட்டுப்பாடற்று எம்பிக் கொண்டிருந்தது.

1948இன் வடிவமைக்கப் பட்ட பாரவண்டியின் உள்ளேயும் வெளியிலிருக்கும் அளவிற்கு குளிர் நிரம்பியிருந்தது. வண்டி இன்னும் ஓடிக் கொண்டிருந்தது, பனிக்காலங்களில் அதை ஓட்டுவது பெரும் பாடு. யாரோ தங்களுடைய வீட்டிற்கான பாதை தெரிவதற்காக வெட்டி குவித்துப் போட்டிருந்த பனியில் பெரும் குலுங்கலுடன் நானும், என்வண்டியும் இடித்து நின்றோம். திக்கிக் திணறும் இருமலுடன் எஞ்சின் நின்றுவிட்டது, கூடவே முகவிளக்கும் அணைந்தது.

வெளியில் இருட்டாக இருந்தாலும், பொருக்காக திரண்ட பனி பூமியின் மேல் பேயைப் போல எல்லா திசைகளிலும் கிடந்தது. நீல நிற வைரங்களைப் போல படபடக்கும் ஒரு கோடி நட்சத்திரங்களால் வானம் நடுங்கிக் கொண்டிருந்தது. கவனிப்பாரற்று கிடந்த அவருடைய முற்றத்தில் உடைந்த செடிகளை காற்று சாட்டையடித்து சுழற்றிக் கொண்டிருந்தது. முற்றத்தின் அலங்கோலத்தை பனியால் மூடி மறைக்க இயலவில்லை.

ஜன்னல் வழியே தெரிந்த வெளிச்சம் கத கதப்பை அளித்தது. ஒவ்வொரு மூச்சிலும் நீராவியுடன் கதவை நோக்கி விரைந்தேன். குதிரை ஆப்பிளை உண்ணும் சத்ததுடன் காலடியில் பனி நொறுங்கியது. பழைய கதவு கிரீச்சிடும் சத்ததுடன் திறந்தது. தாத்தாவின் நூறாண்டு வயதுடைய உடல் நிழலுருவாக அவ்வறையை முழுதும் வியாபித்திருந்த ஒற்றை விளக்கின் வெளிச்சத்திற்கு முன் நின்று கொண்டிருந்தது. பாடம் செய்யப்பட்ட கரடியை அங்கு பார்த்துள்ளேன். அது பார்ப்பதற்கு அவரைப் போலவே இருக்கும். சிறிய, உருண்ட கைகள் மற்றும் வளைந்த கால்கள். கொழுப்பற்ற தசைப்பிடிப்புள்ள கச்சிதமான உடலமைப்பு. ஆற்றல் மிக்க, இயல்பான திடமான மார்பு.

Story_Tellers_Native_american_Red_Indian_Tribes_Thanksgiving

நீலத் துகள்கள் போன்ற கண்களை சுருக்கிக் கொண்டு இருட்டில் இருப்பது யார் என நோக்கினார். “ஹலோ. நான் தேடிக் கொண்டிருந்தது உன்னைத்தான்”. காபியின் மணம் திறந்த கதவின் வழியே பொங்கி வந்தது. காபி. வெதுப்பு!

தாத்தா பின்னால் நகர்ந்து கொண்டதும் அவருடைய மாளிகைக்குள்ளே நுழைந்தேன். குளிர் போக்க ஜூனிபர் மரக் கட்டைகளை எரித்துக் கொண்டிருந்தார்., வெயில் காலத்தில் பதப்படுத்தப் பட்ட ஜூனிபரிலிருந்து தெளிந்த சுகந்தம் வீசும். தீர்க்கமான கைகுலுக்கலுக்கு பின் ஆவி பறக்கும் காபி கோப்பைகளுடன் நெருங்கி உட்கார்ந்து கொண்டோம். தாத்தா என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். உட்கார்ந்திருப்பது நான் தான் என முழுவதுமாக அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்று எனக்கு தோன்றியது. சூடான காபி மிகவும் நன்றாக இருந்தது. ஆடம்பரமான, வாசனை கொண்ட கொலம்பிய காபி அல்ல ஆனாலும் அது மிகவும் நன்றாகவே இருந்தது.

எங்களைச் சுற்றி தாத்தாவின் பல வருட சேகரிப்புகள் இருந்தன. அவ்விடம் ஒரு அருங்காட்சியகம் போல காட்சியளித்தது. எல்லா சாதனங்களும் மிக நைவுற்று, பழமையானதாக இருந்தன. அங்கிருந்த குப்பையில் ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றை கொண்டுள்ளதைப் போல தோன்றியது. சிலவற்றின் வரலாறு பூமியின் பிறப்பை நினைவுபடுத்துவது போல் உள்ளது – உதாரணமாக, கண்ணாடி மலையிலிருந்து எடுத்து வரப்பட்ட எரிமலை கரும்பளிங்கு பாறைகள் நிரம்பிய அந்த நெளிந்த வாளி!

1920களில் வேலையாளாக இருக்கையில் அவரை நிர்பந்தப்படுத்தி வாங்க வைத்த ரேடியோ. அதன் விலை $124. அதை விற்ற வியாபாரியிடம் அவர் ஏமாந்து விட்டார் என்றே நினைக்கிறேன். மேலும், 1948இல் தான் மின்சார வாரியம் அவர் வீட்டிற்கு மின்னிணைப்பை கொடுத்தார்கள் என்பதை அறிந்த போது அச்சம்பவத்தின் மர்மம் இன்னும் பெரிதாகிவிட்டது. அதற்குள் ரேடியோவைக் குறித்து மறந்து போயிருந்தார், பின்னர் 1958இல் தான் அதை முதன் முதலாக உயிர்ப்பித்திருக்கிறார். அது சரியாக வேலை செய்தது. இங்கு பழமையின் வாடை வீசிக் கொண்டிருக்கும் – வருடங்கள் கழிந்த பின் காய்ந்து, இறுகிப் போன எலியில் செத்த உடலைப் போல – பழைய செய்தித்தாள்களின் மணம் போல.

என்றென்றும் நீடித்திற்கும் நிலவின் அடியில் இருந்த பழைய வீட்டில் உள்ள வயோதிகன் “பாறை”யிலிருந்து நெடுங்காலங்களுக்கு முன் தான் தப்பி வந்த கதையை கூற ஆரம்பித்தான். தன்னை ஒருங்கூட்டிக் கொண்டு வலி மிகுந்த கடந்த காலத்தை நினைவுபடுத்திக் கொண்டான். அந்த மௌனம் நீளமானதாக இருந்தது, அவர் உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கிறார் என நினைத்தேன். பிறகு, சிறு துடிப்புடன் கூடிய குரலில், நான் தெரிந்து கொள்ள வேண்டிய அக்கதையை கூற ஆரம்பித்தார்:

“ஆஸ்கட்ராஸ் தீவு. பல காலங்களுக்கு முன் பிட் நதி கடசிச் சென்றும் கலக்கும் அவ்விடத்தில் தான் நான் பிறந்தேன். ஆல்கட்ராஸ், வெள்ளை மனிதன் இட்ட பெயர். நம்முடைய மக்களுக்கும், அவர்களின் தொன்மங்களிலும் அதை ஆலிஸ்டி டி-டானின்-மிஜி [வானவில் பாறை] வைரத் தீவு என்றே அறிந்துள்ளோம். நம் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் அருமருந்தை அத்தீவினில் போய் தேடுமாறு இரட்டை எலி சகோதரர்களுக்கு பழங்காலத்தில் சொல்லப்பட்டது என நமது கதைகள் கூறுகின்றன. இட்-ஆ-ஜூமா [பிட் நதி]வின் இறுதி வரை சென்று அவர்கள் தேட வேண்டியிருந்தது. அதைக் கண்டடைந்து, எடுத்து வந்தார்கள். ஆனால் இப்போது அது தொலைந்து போய் விட்டது. அந்த ‘வைரம்’ எல்லா இடங்களில் வாழும் நம் மக்கள் அனைவருக்கும் நன்மை அளிக்கும் என சொல்லப்பட்டது.

உப்பு நீர் நிலையின் அருகில் உள்ள தீவில் ஒரு “வைரம்” இருப்பதாக எங்களுக்கு எப்போதும் சொல்லப்பட்டது. ஒரு சிந்தனை அல்லது உண்மையே அந்த “வைரம்” என்றும் கூறப்பட்டது. அது ஆபரணம் அல்ல. அது ஜொலித்து பிரகாசித்துக்கும் ஆனாலும் அது நகை அல்ல. அதை விட மேலானது. ஒவ்வொரு அசைவிலும் அதனுள் இருந்து பல நிறமுடைய ஒளி கதிர்கள் வெளிவரும். அதன் காரணமாக நாங்கள் அதை வானவில் பாறை [ஆலிஸ்டி டி-டானின்-மிஜி] என்றழைத்தோம்.” பழமையின் கைகளை அலையென அசைத்து, என்றுமிருக்கும் ஞானத்தால் நிறைந்திருக்கும் வார்த்தைகளைக் கொண்டு தாத்தா முன்பொரு காலத்தின் கதையை சொல்லிக் கொண்டிருந்தார்.

பிட் நதியின் எம் மக்களின் மேல் நடத்தப்பட்ட ஒரு சூறையாடலின் போது கர்ப்பிணியாக இருந்த அவருடைய தாயை கைது செய்து, மற்ற இந்தியர்களுடன் சேர்த்து, பனிக்காலத்தில் அல்கட் ராஸை நோக்கி வற்புறுத்தி நடத்தி செல்லப்பட்டனர். அந்த காலகட்டத்தில் ராணுவம் காலிஃபோர்னியாவை “துப்புரவு”படுத்திக் கொண்டிருந்தது. எங்களில் பலர் கோவெலோவில் இருந்த வட்ட பள்ளத்தாக்கு ஒதுக்கீட்டு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்; மற்றவர்கள் கிழக்கில் குவாபா, ஓக்லஹோமாவிற்கு பனிக்காலத்தில் கால்நடைகளை ஏற்றிச் செல்லும் திறந்த வெளி ரயில் பெட்டிகளில் கிழக்கு நோக்கி கொண்டு செல்லப்பட்டனர். மற்றும் சிலர், யுரேகா விற்கு அருகில் சமுத்திரத்திற்கு நடுவே கொண்டு செல்லப்பட்டு குளிர்ந்த நீரில் எறியப்பட்டனர்.

சங்கிலியால் பிணைந்து குவாபாவிற்கு கொண்டு செல்லப்பட்டவரியின் சந்ததியினர் இன்னும் அங்கே இருக்கிறார்கள். குளிர்கால சமுத்திரத்தில் வீசி எறியப்பட்டவர்களில் சிலர் திரும்பி கரைக்கு வந்து பிட் நதி தேசத்தில் வாழ்கின்றனர். சிறை வாழ்க்கையையும், “மின்னல் குச்சிகளால்” சுடப்பட்டும் அபாயத்தையும், ஆளைக் கொல்லும் பனிக்கால இரவுகளை கொண்ட ஆல்கட்ராஸையும் எதிர்த்தவர்கள் சிலரும் கூட இறுதியில் பிட் நதி தேசத்தில் வந்து சேர்ந்தனர்.

San_Francisco_1849_Joshua_Prince_Diamond_Island_darryl_babe_wilson_alcatraz

தாத்தா சொன்னார், “இவற்றை நினைவில் வைத்துக் கொள்ள இயலாத அளவிற்கு நான் சிறு குழந்தையாக இருந்தேன் ஆனால் என் பாட்டி எல்லாவற்றையும் ஞாபகத்தில் வைத்திருந்தாள். காவலாளிகள் பாறையைச் சுற்றி தினமும் நீந்துவதற்கு எங்களை அனுமதித்தனர். என் தாய் தினமும் நீந்தினாள். ஒவ்வொரு நாளும் நம் மக்கள் நீந்தினார்கள். நாங்கள் வெறுமனே நீந்தவில்லை, நாங்கள் உடல் வலிமையைக் கூட்டிக் கொண்டிருந்தோம். நீரின் சுழற்சியை கற்றுக் கொண்டிருந்தோம். நாங்கள் வீடு போக வேண்டியிருந்தது.

“அதற்கான நேரம் வந்த போது நாங்கள் தயராக இருந்தோம். இரவின் இருளில் அவ்விடத்தை விட்டு கிளம்பினோம். நான் சிறு குழந்தையாக, அல்கட்ராஸில் இருந்து நிலம் வரை என் தாய் நீந்தி செல்கையில் அவள் முதுகில் சவாரி செய்தேன் என்று பாட்டி கூறினாள். என் அம்மாவை மிக இறுக்கமாக கட்டிபிடித்துக் கொண்டதில் அவளுடைய கழுத்திலிருந்த மாலை அறுந்து விழுந்தது என பாட்டி நினைவு கூர்ந்தாள். அது நீரில் அங்கேயே இன்னும் கிடக்கிறது…ஏதோவொரு இடத்தில்.” உருண்ட விரல்களை தெற்கு நோக்கி நீட்டி “அந்த” இடத்தை தாத்த சுட்டி காட்டினார்.

உணர்ச்சிகளால் நடுங்கியபடி அவர் தயங்கினார். “அன்று நான் பயந்தேனா என்று நினைவில்லை”, வெள்ளை முட்களைப் போன்ற மழிக்கப்படாத, சுருக்கங்கள் கொண்ட மோவாயை விரல்களால் தடவிக் கொண்டே கூறினார். “நான் நிச்சயமாக பயந்திருப்பேன்.”

அந்த வயோதிக, புகை படிந்த கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் வெடிப்புகள் கொண்ட முகத்தின் வழியே வடியும் போதும், வாக்கியங்களுக்கு இடையே ஏற்படும் நீண்ட மௌனங்களின் போதும், நான் பல சமயம் நடுங்கிப் போனேன். அவர் தன்னுள் இருந்த நினைவுகளை மென்மையாக கூறிக் கொண்டிருந்தார்.

எங்களுடைய கோப்பைகள் காலியாகி வெகு நேரமாகி விட்டது; எரிந்து கொண்டிருந்த நெருப்பையும் கவனிக்க வேண்டியிருந்தது. வட்டமான, தழும்புகளுடன், பிரகாசமான நிலவு உறைந்த பனிக்கால இரவில் தொங்கிக் கொண்டிருந்த இப்பொழுதில், தாத்தா இறுதியாக தன்னுடைய எண்ணவோட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினார். வார்ப்பிரும்பில் செய்யப்பட்ட கண அடுப்பு உறுமிக்கொண்டு, சத்தமிட்டது. அதன் மேல்பாகத்தை திறந்து புதியதொரு மரக் கட்டையை போட்டு மூடினேன். தீப்பொறிகள் மேலெழுந்து பின் இருளில் மறைந்தன. மறுபடியும் மௌனம்.

அவர் தொடர்ந்தார், “அந்த தீவில் அசலான வைரங்கள் எதுவும் இல்லை. அப்படித் தான் நான் நினைக்கிறேன். வைரங்கள் என்று சொல்லப்படுபவை ஒரு விதமான புரிதல்கள், நல்ல சிந்தனைகள், அதைப் போன்ற ஏதோ ஒன்று என்றே நினைக்கிறேன்..” தன்னுடைய வெள்ளை நிற, பரட்டைத் தலையை அசைத்து மலைகள் கூட நினைவில் வைத்திருக்காத தொலை தூர ஞாபகங்களை நோக்கிப் பார்த்தார். நீண்ட நேரம் நினைவுகளை மீட்டிக் கொண்டு, சிந்தனைகளை தொகுத்துக் கொண்டார். நான் “இவற்றை காகிதத்தில் எழுதுவேன்” என்று அவருக்கு தெரியும்.

oOo

Mount_Shastha_Native_Americans_Red_Indians_Indigenous_People_Rights

அடர்த்தியான இரவு. வடக்கில் நரியின் ஊளை சத்தம் கேட்டது. மேற்க்கு திசையில் தூரத்திலிருந்து கிழட்டு நரி ஒன்று நட்சத்திரங்கள் அடர்ந்த வானின் அடியில், உறைந்த பனியின் சுதந்திரத்தை கொண்ட இருப்பாகிய, இருண்ட காட்டை நோக்கி ஊளையிட்டு அழைத்தது.

“முதன்முதலாக “வைரத்தின்” கதையை கேட்ட போது, அது நாங்கள் தப்பித்த கதையைக் கூறுவதாகத் தான் நினைத்திருந்தேன். ஆனால் பல முறை அதை கேட்ட பின் நான் அப்படி நினைக்கவில்லை. அங்கு இரட்டை எலி சகோதரர்கள் ஒரு உண்மையை தேடிக் கண்டுபிடித்து நம் மக்களுக்கு உதவும் பொருட்டு கொண்டுவருவதற்காக பணிக்கப்பட்டார்கள் என்றே நினைக்கிறேன். இப்போது அவ்வுண்மை எங்குள்ளது என்று எனக்கு தெரியாது. அது எங்கே இருக்கும்? அது ஆக்ஷோ-யெட் [சாஷ்தா மலை]யின் ஆழங்களில் தான் புதைந்திருக்க வேண்டும். நம் மக்களிடம் இருந்து அது ஒளிந்து கொண்டுள்ளது. நம்மை அதற்கு பிடிக்கவில்லை. அது நம்மை மறுத்து விட்டது.”

மலைகளை ஒத்த பழமையுடைய இந்த கதை என்னை யோசிக்க வைத்தது. அல்கட்ராஸிலிருந்து தப்பிப்பது என்பது நம்ப முடியாத கதை போலுள்ளது. அல்கட்ராஸ் தீவைச் சுற்றி கடும் குளிரில் உள்ள கடலும், ஆற்று நீர் கடலோடு சேரும் இடங்களில் பெரும் நீர் சுழற்சிகளும் உள்ளது, அவற்றினூடே அங்கிருந்து தப்பிப்பது இயலாத காரியம் என்றே அமெரிக்கர்களின் பிரச்சாரம் வழியே நான் சிந்திக்க பழகியுள்ளேன். என் தாத்தாவின் கதையை கேட்கும் வரை அப்படித் தான் நம்பினேன் – அவர் வேறொரு “காலத்தை”க் குறித்து பேசுவதை கேட்கும் வரை, அவர் வேறொரு “இயற்கை ஆற்றலை”க் குறித்து பேசுவதை கேட்க்கும் வரை. அவர் இயற்கையின் ஆதாரத்திலிருக்கும் ஆன்மீகவுணர்ச்சியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். அவருடைய உலகில் நான் வெறும் வேற்று நாட்டு குழந்தை மட்டுமே. என் குலத்தின் பெரியவர்களிடம் பேசுகையில் நான் நில்லடு-வி (வெள்ளை மனிதன்)ஆக உணர்கிறேன். பிறப்பால் சுதந்திரமானவர்களாக, காட்டில் சுற்றியவர்களாக இருந்த அவ்வயோதிகர்களை அறியும் போது, நான் அசலான உரிமையுடைவர்களின் முன் பேசும் பழக்கப்படுத்தப்பட்ட உயிரினமாக என்னை உணர்கிறேன்.

அவருக்குரிய அமைதியான தொனியில், தாத்தா தொடர்ந்தார். “நாங்கள் பல இரவுகள் அலைந்து திரிந்தோம். பகல் பொழுதுகளில் ஒளிந்து கொண்டோம். மூன்று இரவுகள் தெற்கு திசை நோக்கி சென்று பிறகு வடக்கு நோக்கி திரும்ப வேண்டும் என எங்களுக்கு சொல்லப்பட்டது. [என் மக்கள் சான் ப்ரான்ஸிஸ்கோவில் கரையேறி, இப்போது இருக்கும் சான் ஹோஸே வழியாக யாருமறியாமல் நுழைந்து, உணவின்றி இரவுகளில் பயணம் செய்து, இறுதியில் வடக்கு நோக்கி திரும்பினர்]. அவர்கள் [அமெரிக்க ராணுவம்] எங்களை தேடிக் கொண்டிருந்தார்கள். எங்கள் எல்லோரையும் தேடிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் கவனமாக இருக்க வேண்டியிருந்தது, தவறுகள் செய்யாமல் கவனத்துடன் இருக்க வேண்டியிருந்தது. பிறகு வட திசை நோக்கி இரு இரவுகள் பயணம் செய்தோம்.

“பெரிய ஆறு ஒன்றை வந்தடைந்தோம். எங்களால் அதை கடக்க முடியவில்லை. மிக வேகமாக பாய்ந்து கொண்டிருந்தது. என் தாய் நீரிற்கு எதிரோட்டமாக வெகு தூரம் நடந்து சென்று உள்ளே குதித்தாள். எல்லோரும் அவளை தொடர்ந்தனர். ஆறு எங்களை அடித்து மறு கரையில் சேர்த்தது [இன்றைய பெனிஸியா நீரிணைப்பு இடமாக இருக்கலாம்]. இரண்டு நாட்கள் ஆற்றில் கிடைத்த செத்த மீன்களைத் தின்று இளைப்பாறினோம். எங்களால் தீ மூட்ட இயலவில்லை ஏனென்றால் அவர்கள் புகையை அடையாளம் கொண்டு எங்களை பிடித்து விடுவார்கள், அதனால் பச்சை மீன்களை உண்ண வேண்டி வந்தது. இரவில் மறுமடியும் பயணமானோம். இந்த முறையும் இரு இரவுகள் பயணம் செய்தோம்.

“அந்த பெரும் பள்ளத்தாக்கில் மலைகளிலான சிறு தீவொன்று இருந்தது [ஸட்டர் பியூட்ஸ்]. அவ்விடத்தை அடைந்தவுடன் வயதில் இளையவன் ஒருவன் அதன் சிகரத்தில் ஏறினான். அவன் தைரியசாலி. நாங்கள் அனைவரும் தைரியசாலிகளே. அது வெயில் அடிக்கும் நேரம். அவன் பெருங்குரலில் சப்தமிடும் வரை காத்திருப்பதே எங்கள் திட்டம். அதற்காக நீண்ட நேரம் காத்திருந்தோம். பிறகு அவன் குரலைக் கேட்டோம்: “ஆக்ஷோ-யெட்! ஆக்ஷோ-யெட்! டோ-ஹோ-ஜா-டோகி! டோ-ஹோ-ஜா-டோகி டான்ஜான்” [சாஷ்தா மலை! சாஷ்தா மலை! வடக்கு திசையில்!]. எங்களுடைய இதயம் மகிழ்ச்சியடைந்தது. எங்களுடைய வீட்டிற்கு அருகில் இருக்கிறோம். அம்மா என்னை இறுக கட்டிக் கொண்டாள். நாங்கள் அழுதோம். நாங்கள் அழுதோம் என எனக்குத் தெரியும். நான் அங்கிருந்தேன், என் அம்மாவும், பாட்டியும் கூட அங்கிருந்தார்கள்.”

பல பனிக்காலங்கள் தாத்தா இந்த பூமியில் வசித்துள்ளார். அவருக்குளே புதையுண்டு போன ஞானம் என் தலைமுறைக்கு கிடைக்காமல் தொலைந்து போய்விட்டது. தன்னியக்கமாக, சுய அடையாளம் உடைய மக்களாக உருவாக வேண்டுமென்றால் இத்தலைமுறைக்கு அந்த புராதனமான ஞானம் அவசியம் வேண்டியுள்ளது. இனிவரும் தலைமுறை கலாச்சாரத்திலும், மரபிலும் அதிக ஆர்வமுடையவர்களாகவும் – வெள்ளை மனிதனுக்கும், “இந்தியர்களுக்கும்” இடையில் சம நிலையற்று இருப்பதில் ஆர்வமற்றவர்களாகவும் இருந்தால் – அவர்கள் இந்த ஞானத்தை தேடிக் கண்டடைவார்கள்.

பனிக் காலம் நெருங்குகிறது, 1989. ஆக்ஷோ-யெட் இன் மேல் உள்ள பனி ஆழமாக உள்ளது. பளீரென ஜொலிக்கும் அதன் வெள்ளை நிறம் தாத்தாவின் முடியை மஞ்சள் நிறமாக காட்டுகிறது – என்னால் இப்போது அவருடைய வெள்ளி நிற தலை மயிறை நினைவுகூற முடிகிறது. அந்த அழகிய மலை. 140 வருடங்களுக்கு முன் தங்களுடைய மொத்த இனத்தையும் பூண்டோடு அழித்து சென்ற துயர வரலாற்றை மறந்து, முகத்தில் வெயில் விழ, வேட்டையாடப்பட்ட அந்த போர்வீரன் கீழே பயத்தோடு காத்திருந்த தன் மக்களை நோக்கி உரக்க கூவிய : “ஆக்ஷோ-யெட்! ஆக்ஷோ-யெட்! டோ-ஹோ-ஜா-டோகி! டோ-ஹோ-ஜா-டோகி டான்ஜான்”.

இனி வரும் சந்ததியினர் இந்த மலைகளுக்கு நடுவே உள்ள ஆலிஸ்டி டி-டானின்-மிஜி யைக் கண்டெடுக்கலாம். அந்த தலைமுறை உலக சமூகத்திற்கு பல உண்மைகளை சொல்லலாம். பிட் நதியின் மூத்த தலைவர், “சார்லி பக்” அடிக்கடி கூறுவார்: “உண்மை. உண்மை மட்டுமே நமக்கு விடுதலை அளிக்கும்.” என் தாத்தாவுடன் சேர்ந்து நானும் நம்புகிறேன்: அந்த “உண்மை”யைத் தான் இரட்டை எலி சகோதரர்கள் நெடுங்காலத்திற்கு முன் வைரத் தீவிலிருந்து எங்களுடைய நிலங்களுக்கு கொண்டு வந்தார்கள். புரிந்து கொள்ளப்பட வேண்டிய, போற்றப்பட வேண்டிய, ஒத்துக் கொள்ளப்பட வேண்டிய உண்மை. அதன் மதிப்பு அறிந்து, சலிக்காமல் தேடி எடுக்கப்பட வேண்டிய உண்மை.

தாத்தாவின் கடிதம் இன்னும் கோப்புகளில் உள்ளது. என்னால் அதை வாசிக்க முடியவில்லை. வாசிக்க முடிந்தாலும் அதன் செய்தி, நிலவு கேட்டுக் கொண்டிருக்கையில், உறைந்த ஆட்வம் வழியே காற்று ரகசியம் கூறும் அச்சமயத்தில் கூறிய இந்த கதையை போல தான் இருக்கும் என நம்புகிறேன்.

Darryl_Babe_Wilson_Authors_Native_Americans_Indians_Tribes_Alcatraz_Island_San_Francisco

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.