ரெட் படப்பெட்டி – எண்ணியல் படக்கருவி

ரெட் கேமிரா மீது ஆர்வம் வர இரண்டு பேர்கள் காரணம். முதலாமவர் ”கல்யாண சமையல் சாதம்” எடுத்த அருண் வைத்யநாதன். “அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை ரெட் காமிரா படப்பெட்டி கொண்டு எடுத்தார். அது வரை தமிழ் சினிமாவில் கையடக்கமாக ஒளிப்பதிவு செய்வது வழக்கமில்லை. ஆனால், அதன் பிறகு ரெட் கேமிராவை அக்குளில் சொருகிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக சினிமாவும் கைப்பழக்கம்… செந்தமிழும் டப்பிங் பழக்கம் என வழக்கமாக்க அ.அ. கால்கோள் போட்டது.

இரண்டாமவர் ”ஓக்லி” குளிராடியைக் கண்டுபிடித்த ஜிம் ஜனார்ட். எலான் மஸ்க் போல் ஸ்டீவ் ஜாப்ஸ் போல் தனக்கென தொண்டர் கூட்டமும் ரசிகர் பட்டாளமும் கொண்டவர். அறுபதுகளைக் கடந்துவிட்டாலும் துடிப்பான தோற்றம் அதை மறைக்கும். அவர் சுற்றுலா செல்வதற்காக மட்டும் சில பல தீவுகளின் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அவர் பயணிப்பதற்காக மட்டும் நான்கு விமானங்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்திருக்கிறார். எழுபதுகளில் பைக்களுக்கு கைப்பிடி விற்கத் துவங்கினார். அப்பொழுது துவங்கிய வடிவமைக்கும் சிரத்தை குளிர் கண்ணாடிகளுக்கும் கைப்பைகளுக்கும் காலணிகளுக்கும் தாவித் தாவி ”ஒக்லி” வளர்ந்தது. தமிழ் சினிமாவில் ஸ்டைலுக்கு ரஜினி என்றால், மேற்கத்திய ஒயிலின் அடையாளமாக ஓக்லி ஆனது.

அவர் சினிமா கேமிரா தயாரிக்கப் போனார். அதுதான் ”ரெட்”.

handheld_dragon_digital_cinema_hollywood_red-cameras

ஐந்தாண்டுகளுக்கு முன்பு ரெட் டிஜிட்டல் சினிமா கேமரா வெளியானபோது சினிமாவுலகைப் புரட்டிப் போட்டது. அதுவரை ஒத்திசை (analog)யில் மட்டுமே சாத்தியமான துல்லியத்தை எண்ணியலுக்கு (digital) கொண்டு வந்த தருணம் அது. என் வீட்டில் இருக்கும் உயர்தர எச்.டி.டி.வி.யில் இடமிருந்து வலமாக 1,920 கோடுகள் போகின்றன. மேலிருந்து கீழாக 1,080 கோடுகள் ஓடுகின்றன. அவற்றைக் கொண்டுதான் நயன்தாராவின் இமைகள் சிணுங்கும்போது வலக்கண் மேல்புருவம் ஒழுங்காக அமையாததும் சச்சின் டெண்டுல்கரின் இடது தாடை அசைவதும் துல்லியமாக அறியமுடிகிறது.

இந்த ரெட் ஒன் (Red One) படப்பெட்டியில் பக்கவாட்டில் 4,096 கோடுகளில் விஷயங்களை சேகரிக்கலாம். செங்குத்தாக 2,304 கோடுகள் மூலம் வெகு கச்சிதமாக விஷயங்களைப் போட்டுவைக்கலாம். அதுவரை இவ்வளவு துல்லியம் ஒத்திசை கொண்டு பதிவு செய்யும் பூதாகரமானப் பெட்டிகளில் மட்டுமே சாத்தியமாக இருந்தது. முப்பத்தைந்து எம்.எம். எனப்படும் படங்கள் எல்லாம் இந்த 4கே நுணுக்கத்தில்தான் சேமித்து வந்தன.

ஆனால், 35எம்எம் பதிவாக்கத் தேவைப்படும் படச்சுருள்கள், ரெட் கருவிக்குத் தேவையில்லை. அதன் அளவு விலையும் இல்லை.

ஒளிப்பதிவை நேரடியாக படமாகப் பிடித்து வன்தட்டில் சேமித்து விடலாம். ரெட் வருவதற்கு முன்பு இருந்தப் படக்கருவிகள் எல்லாமே ஃபிலிம் சாப்பிடுபவை. படச்சுருளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும். புதியதாக இருக்க வேண்டும். அதிகம் வாங்கி மீந்து போனால் யாருக்கும் பயனில்லாது கெட்டுப் போய்விடும். கம்மியாக வாங்கி கால்ஷீட் இருக்கும்போது சுருள் தீர்ந்துபோனாலும் தர்மசங்கடம். படத்தொகுப்பிலும் நல்ல வேலை வைக்கும்.

நாம் வைத்திருக்கும் கேம்கார்டர்கள் போல், செல்பேசி கேமிராக்கள் போல் வசதியான வடிவம். உடனடியாகப் பார்க்கலாம். பிடிக்காவிட்டால், அப்படியே நீக்கிவிட்டு, புதியதாக படம் பிடிக்கலாம். என்ன… நம்முடைய விழியக் கருவிகள் எல்லாம் நிறையவே கம்மி நுணுக்கத்தில் படம் பிடிக்கும். ரெட் ஒன் கொஞ்சம் அதிக கவனத்துடன் சிரத்தையாக ஒவ்வொரு மைக்ரோ விஷயத்தையும் உள்ளடக்கி சேமிக்கும்.

சாதாரணமாகப் படக்கருவிகளைக் கையாள ரத கஜ துராதிபதிகள் தேவை. ஒளிப்பதிவு இயக்குநர் கோணங்களை கவனிப்பார். அவருக்கு உதவியாக கேமிராவை இயக்க இருவர் இருப்பார்கள். கூடவே டிராலி தள்ள நாலைந்து பேர் வேண்டும். இவ்வளவு பெரிய படை எல்லாம் ரெட் கருவிக்கு தேவையில்லை. ஒருவர் போதுமானது. அஷ்டே!

நான்காண்டுகளுக்கு முந்தைய அன்றைய விலையில் கிட்டத்தட்ட இருபதாயிரம் டாலர். ஆனால் அளவில் வாமனனாகவும், வீரியத்தில் விஸ்வரூபமாகவும், செலவில் குசேலனாகவும், சௌகரியங்களில் கர்ணனாகவும் இருந்ததால் அது பெரிய வரவேற்பை பெற்று அனேகரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அந்த அனேகர் யார்… யார்?

2006ஆம் ஆண்டு வாக்கில் ஒரு அலுமினிய டப்பாவைக் கொணர்ந்திருந்தார் ஜிம் ஜனார்ட். அதன் கூடவே, அந்தப் பெட்டி என்ன என்ன மாயாஜாலம் எல்லாம் செய்யும் என்னும் விவரங்களையும் வெள்ளைத்தாளில் அச்சிட்டு விநியோகித்தார். பொரைப் பொட்டலம் போல் காணப்பட்டதை தரிசனம் மட்டுமே செய்துவிட்டு ஆயிரம் டாலர் முன்பணம் செலுத்திச் சென்றார்கள். ஒன்றல்ல… இரண்டல்ல… ஜனார்ட் தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு சாத்தியப்படுத்துவார் என ஆயிரக்கணக்கானோர் பெரு நம்பிக்கை வைத்தனர்.

இருந்தாலும் குவெண்டின் டாரெண்டினோவும் மெமண்டோ எடுத்த கிறிஸ்டோபர் நோலனும் இன்னும் ஒத்திசை வசமே வாசம் செய்கிறார்கள். அவர்களுக்கு ரெட் ஒண்ணும் பிடிக்கவில்லை. தற்போதைய வரவான ரெட் டிராகனும் கவரவில்லை. மேலும் துள்ளலான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” போன்ற படங்களுக்கு ரெட் சரிப்படாது என்கிறார்கள். ”நடுநிசி நாய்கள்” போல் நகர்ப்புற களங்களுக்கும் ”யுத்தம் செய்” போல் சோகரசம் ததும்பும் ஆழ்மனப் படங்களுக்கும் ரெட் படக்கருவி பொருத்தம்.

நம்பிக்கை வைத்தோர்களில் “லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்” எடுத்த பீட்டர் ஜாக்சன் அடக்கம். “சே குவேரா” குறித்து திரைப்படங்கள் உருவாக்கிய ஸ்டீவன் சாடர்பெர்க் உண்டு. இப்பொழுது சூர்யாவை வைத்து “ரவுடி” எடுக்கும் லிங்குசாமியும் ஆட்டத்தில் சேர்த்தி. சமீபத்தில் வெளியான “தி கிரேட் காட்ஸ்பி” கூட முழுக்க முழுக்க ரெட் கருவியால் மட்டுமே படம் பிடிக்கப்பட்டது.

surya-lingusamy-Red_dragon_santosh_Sivan

குளிராடிகளைத் தயாரித்துக் கொண்டிருந்தவருக்கு எப்படி படப்பிடிப்பில் ஆர்வம் வந்தது?

தன்னுடைய ஒக்லி கண்ணாடி நிறுவனத்தை “ரே பான்” நிறுவனத்திடம் இரண்டு பில்லியன் டாலர்களுக்கு விற்றுவிட்டார். அதில் இருந்து ஏழே முக்கால் மில்லியன் டாலரை “ரெட்” கருவிக்காக முதலீடு செய்கிறார். அரசியல்வாதிகளுக்கு கட்சி விட்டு கட்சி தாவுவது கை வந்த கலை என்றால், வணிகர்களுக்கு அரையணா கொடுத்து அரை பில்லியன் செய்வது கை வந்த கலை. புத்திக்கும் புதுமைக்கும் ஏதாவது தொடர்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும். “முடியாது!” என்று எல்லோரும் சொல்வதை சாதித்துக் காட்டவேண்டும்.

அது தவிர ஜிம் ஜனார்ட் ஒரு சரியான படக்கருவி பைத்தியம். கைவசம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படக் கருவிகள் வைத்திருக்கிறார். எல்லாவற்றிலும் படம் எடுத்துப் பார்த்திருக்கிறார். ஒவ்வொன்றின் சிறப்பையும் அந்தந்தக் கருவிகளின் கஷ்டங்களையும் நேரடியாக அனுபவித்துப் பார்த்திருக்கிறார்.

சோனி காமிராவில் எடுத்த படத்தை ஆப்பிள் மெகிண்டாஷில் போட்டுப் பார்க்க முடியாமல் தவித்திருக்கிறார். ஆர்ரிஃப்ளெக்ஸில் க்ளிக்கிய புகைப்படங்களை எளிதாக தரவிறக்க முடியாமல் திண்டாடியிருக்கிறார். நீங்களும், நானும் அன்றாடம் படும் கஷ்டங்கள்தான். ஆனால், பிரச்சினை இருக்கும் இடம் மகாலஷ்மியின் வாசஸ்தலம் என்பதை வர்த்தர்கள் அறிவார்கள்.

Jim_jannard_Oakley_Camera_Red_one_4K_Inventors_Enrepreneurs

இவ்வளவு எளிமையாக இருந்தால் இந்த நுட்பத்தை ஏன் பிற நிறுவனங்கள் முன்பே கண்டுபிடித்து காப்புரிமை பெறவில்லை?

ரெட் கேமிராவின் ஒவ்வொரு அங்கமும் இமாலயப் பிரச்சினைகளை எதிர்கொண்டது. ஏற்கனவே இருக்கும் பல்வேறு கணினிகளோடு பேச வேண்டும். பல்லாண்டு காலமாகப் புழக்கத்தில் இருக்கும் கோப்புகளாக மாற்ற முடிய வேண்டும். இதுவெல்லாம் மென்கலன். கொஞ்சம் தம் கட்டினால் செய்துவிடலாம்.

ஒளிப்படம் எடுக்கும்போது துல்லியத்தை விட வெளிச்சத்திற்கேற்ப வளைந்து கொடுக்கும் லாவகம் அத்தியாவசியம். ஒத்திசையில் படம் எடுப்பது போல் துல்லியம் கிட்டலாம். ஆனால், ஒத்திசைப் படங்களில் அலம்பி விட்டது போல் கதிர்களைக் கொணரலாம். கண்கூசவைக்கும் விளக்குகளையும் இருட்டின் கிரணங்களையும் உணரவைக்கலாம். எண்ணியலுக்கு இதே அளவு வீரியத்தை உணரிகளில் (sensor) கொணர்வதற்கு மூன்றாண்டுகள் பிடித்தன.

ஒத்திசைப் படங்கள் ஒரு வினாடிக்கு இருபத்தி நான்கு புகைப்படங்களை எடுத்துத் தள்ளும். படச்சுருள் இந்த வேகத்தை எளிதாக சமாளிக்கும். எண்ணியலில் இந்த வேகத்தில் படம் எடுத்துக் கொண்டே இருந்தால் மென்பொருள் படுத்துவிடும். ஒரு ஒளிப்படத்தில் எத்தனை நுணுக்கங்கள் உள்ளனவோ அத்தனை துல்லியமாகப் பதியப்படவேண்டும். இந்த சிரமத்தைப் போக்க குறுகிய வில்லை (லென்ஸ்)களை பயன்படுத்துவார்கள். ஆனால், குவியாடியின் சுற்றளவுக் குறைய குறைய ஒளிப் பற்றாக்குறை பல்லிளிக்கும். அனைத்து வண்ணங்களின் ரசங்களும் மக்கிப் போய் பதிவாகும். முகப்பில் ஒருவரை பிரதானமாகவும் பின்னே போவோர் வருவோரை துர்லபமாகவும் ஒளிப்பதிவது சிலாக்கியமாக வராது.

மென்பொருள் ஈடு கொடுத்தாலும், சேமிக்கும் வன்தட்டு மக்கர் செய்யும். மென்பொருளும் வன்பொருளும் கர்மசிரத்தையாக சுழன்றாலும், கணினி முட்டுக்கட்டைப் போடும்.

ரெட் வரும் வரை பத்து படங்களை ஒரு வினாடியில் அடக்கும் கருவிகள்தான் புழக்கத்தில் இருந்தன. அந்தக் கருவிகளும் சாதாரண படப்பெட்டியை விட பத்து மடங்கு விலைக்கு விற்கப்பட்டன. இயற்பியலாளர்களையும் கணித ஆராய்ச்சியாளர்களையும் ஒருங்கிணைத்து வேலை வாங்கி முதல் முதலாக அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்க வைக்கும் துல்லியத்துடன் ரெட் ஒன் மூலம் ஆச்சரியப்படுத்தியது ஜனார்டின் சாதனை.

Great_Gatsby_Wizard_of_oz_Red_Movies_Dragon_one_Camera_Resolution_Precision_Hi_fi

இப்பொழுது ரெட் கேமிராவிற்கு நிறைய போட்டியாளர்கள் பெருகிவிட்டார்கள். பழம் தின்று கொட்டை போட்ட நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்கள் பங்கிற்கு எண்ணியல் படக்கருவிகளை அறிமுகம் செய்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான “லைஃப் அஃப் பை”யும் ஜேம்ஸ் பாண்ட் வந்த ”ஸ்கைஃபால்”ம் கூட போட்டியாளரின் ஒளிப்படக்கருவியில் உருவானவை.

மூவாயிரம் டாலருக்கு கருவியைத் தருவோம் என்று சொல்லப்பட்ட ரெட் ஸ்கார்லெட், இன்று பத்தாயிரம் டாலருக்கு விற்கப்படுகிறது. அரசியல்வாதி போல் வாக்குறுதிகளை நிறைய அள்ளிவீசுகிறார் ஜனார்ட். நிஜத்தில் அவற்றை நிறைவேற்ற முடிவதில்லை.

இவற்றை எப்படி ஜனார்ட் எதிர்கொள்கிறார்?

முதல் அஸ்திரமாக படப்பிடிப்பு வளாகத்தைக் கையகப் படுத்தி இருக்கிறார். அவருடைய படமனையில் திரைப்படம் எடுப்போருக்கு இலவசமாக ரெட் கருவியைக் கற்றுத் தருகிறார்கள். ரெட் டிராகனின் நுட்பங்களை சொல்லித் தந்து உறுதுணையாக வழிநடத்துகிறார்கள். ரெட் பயன்படுத்தினால் படத்தள வாடகையும் சல்லிசாக தள்ளுபடி செய்கிறார்கள்.

இரண்டாவது அஸ்திரமாக இணையத்தின் சந்து பொந்துகளில் கூட கொள்கைப் பரப்பு செயலாளராக ஜனார்ட் சொற்பொழிவாற்றுகிறார். அப்படி சொன்னதில் இருந்து:

“எனக்கு கானன் சி300 புரியவில்லை. எந்த நம்பிக்கையில் அவர்கள் இதை சந்தைக்கு கொணர்ந்திருக்கிறார்கள்?!”

”உங்களால் இந்தக் கேமிராவில் ஒளிப்படம் எடுக்க முடியுமா? நிச்சயமாக… அது உங்களுக்கு அசமஞ்சம் பட்டம் தருமா? சர்வ நிச்சயமாக!”

”சொன்ன நேரத்திற்கு வந்து சேர்வதை விட… உங்களின் விழைவுகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதை விட… பிழைகளே இல்லாத நுட்பத்தை உருவாக்குவதை விட… யாருமே நம்பவியலாத எவருமே நினைத்துப் பார்க்காத சாதனையை உருவாக்குகிறோம். அந்த உச்சத்தை அடைவதில் சில தாமதங்களை மன்னியுங்கள்!”

Red_comparison_Charts_35_MM_HD_TV_Cameras_Digital_Technology_Infographics

அமெரிக்காவில் பிரம்மாஸ்திரம் என்பது எதிராளி மீது வழக்குத் தொடுப்பது. அதையும் கையில் எடுத்து போட்டியாளர்கள் மீது திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்தது ரெட். ஆப்பிள் கூட சாம்சங் மீது காப்புரிமையைக் கையாண்டதாக சொல்லி 290 மில்லியன் டாலரைப் பெற்றுக் கொண்டது. அது போல் பிற நாட்டு நிறுவனமாக இருந்தால் அமெரிக்க நிறுவனத்திற்கு சாதகமாகத் தீர்ப்பும் வரலாம்.

எட்டாண்டுகளாக முக்கிய பொறுப்பு வகித்த ஜிம் ஜனார்ட் தற்போது பின்னணியில் செயல்போடப் போவதாக அறிவித்திருக்கிறார். இனி அரட்டையகங்களில் வந்து வாய்ச்சவடால் விடாமல், புலி வருது என்று அறிவிப்புகளில் மட்டும் பாயாமல், ஜிகினாக்களில் மட்டும் மின்னாமல், நுட்பத்திலும், ரெட் மூலம் உருவாகும் திரைப்படங்களின் கண்கவர் தோற்றத்திலும் மட்டுமே தென்படுவேன் என்பதாகப் புரிந்து கொண்டேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.