கத்தியின்றி ரத்தமின்றி பிரசவத்திற்காக: கண்டுபிடிப்பு
ஆர்ஜெண்டினாவின் யோர்கே ஓடான் குழந்தைப் பிறப்பு மருத்துவ சிகிச்சையில் புது கண்டுபிடிப்பை அறிமுகம் செய்திருக்கிறார். இது வரை சாதாரண முறையில் பிரசவமும் சிஸேரியனும் மட்டுமே புழங்கிய ஒரு துறையில் இந்த சாதனம் புத்துயிர் தருகிறது. காலி பாட்டிலுக்குள் கார்க் மாட்டிக் கொண்டுவிடுகிறது. பாட்டிலை உடைக்காமல் கார்க் எடுக்கப்பட வேண்டும். எப்படி சாத்தியம்? பாட்டிலுக்குள் காலி பிளாஸ்டிக் பையைப் போடுங்கள். பிளாஸ்டிக் பையின் வாயில் ஊதி பையைப் பெரிதாக்குங்கள். பாட்டிலின் எல்லா இடத்தையும் பை அடைத்துக் கொள்ள, கார்க்கோ வாயிலுக்கு வந்துவிடும். அதை சுலபமாக எடுத்துவிடலாம்.இதே முறையை பிரசவத்திற்கும் செயல்பட இந்த சாதனத்தை உருவாக்கி இருக்கிறார்.
oOo
காப்பானே கள்வன்: திருட்டு
அரிஸ்டாட்டிலும் டேகார்த்தும் கலிலீயோவும் மாக்கியவெல்லியும் திருடு போய்விட்டார்கள். அவர்கள் எழுதிய புத்தகங்களின் மூலப் பிரதிகள் காணாமல் போய்விட்டன. ஒவ்வொரு புத்தகமும் சராசரியாக பத்து பதினைந்து மில்லியனுக்கு ஏலம் போகும். நேப்பிள்ஸ் நூலகத்தின் காப்பாளரும் ஆயிரக்கணக்கான அரிய நூல்கள் எப்படி கால்முளைத்துச் சென்றன என அறியேன் என்று கைவிரித்து விட்டார். இப்பொழுது அவரே குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். இவருடன் பதின்மூன்று பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஒரு பாதிரியார்.
oOo
உடல்நலப் பிரச்சினையா / குற்றவாளிக் கூண்டா? – போதை எதிர்ப்பு இயக்கம்
ஒரு வாசகரின் குறிப்பு மேற்படி செய்திக்குக் கீழே உள்ளது. அவர் இந்த கடும் தடைகளின் அபத்தத் தன்மையைக் குறிக்கிறார். மாநகரங்களின் தெருவில் ஒரு கிராம் போதைப்பொருளோடு பிடிபடும் ஒரு கருப்பிளைஞன் 20 வருடங்கள் சிறையில் அடைக்கப்படுகிறான். ஆனால் பல நூறு டன்களை ‘கடத்தி’ குற்றக் கும்பல்கள் பெறும் பிலியன்களை வாங்கிச் சலவை செய்ய உதவும் வங்கிகள் ஒரு தண்டனையும் பெறாமல் தப்புகின்றன. இதென்ன சட்டம், என்ன நீதி என்கிறார்.
http://www.theguardian.com/politics/2013/nov/30/un-drugs-policy-split-leaked-paper
oOo
”அமெரிக்கா ஏழைகளைக் கண்டு அருவருக்கிறது”: நோம் சாம்ஸ்கி
பண மோசடி செய்த பெர்னீ மேடாஃப் கணக்கு வைத்திருந்த ஜே.பி மார்கன் சேஸ் வங்கியிடம் அபராதம் மட்டுமே விதிக்க முடியும். கொடுங்கோலர்களும் கள்ளக்கடத்தல்காரர்களும் கணக்கு வைத்திருக்கும் நிதி நிறுவனங்களை விசாரிப்பதில் சுணக்கமும் வீட்டுக் கடனில் வட்டியை ஒரு மாதம் தவறவிட்டவர்களுக்கு முடுக்கி விடப்படும் சட்டமும் ஒழுங்கும் செய்யும் ஓரவஞ்சனையை வெளிப்படுத்துபவர்களை அமெரிக்கப் பெரு ஊடகங்கள் ஒதுக்கிவிடும். இந்த மாதிரி சாமனியர்களின் பிரச்சினைகளைத் தொடர்ந்து பேசி பொதுவெளியில் கொணர்வதில் சாம்ஸ்கி முக்கியமானவர். சாமானியரான 99 சதவிகிதத்தினருக்கும் பெரும் பணமுதலைகளான ஒரு சதவிகிதத்தினருக்கும் இடையேயான போராட்டமாக “ஆக்குப்பை வால் ஸ்ட்ரீட்” எழுச்சி நடந்ததன் தொடர்ச்சியாக நோம் சாம்ஸ்கி புதிய புத்தகத்தை எழுதியுள்ளார். அந்தப் புத்தக, குறித்த அவரது பேட்டி:
http://www.salon.com/2013/12/01/noam_chomsky_america_hates_its_poor_partner/
oOo
சாத்தப்பட்ட கதவுகளுக்கு உள்ளே: புகைப்படங்கள்
சவுதி அரேபியாவில் புகைப்படம் எடுப்பது கிட்டத்தட்ட கொலைக்குற்றம். அங்கே சென்று படம் எடுப்பது எப்படி என்று பாடம் நடத்தச் செல்கிறார் ஒலிவியா. அதுவும் பெண்களுக்கு. இவர் வகுப்பின் மாணவி சொந்த அத்தை மகளைப் புகைப்படம் பிடித்ததற்காக வகுப்பை விட்டே நிறுத்தப்பட்டார். இன்னொரு மாணவி கைது செய்யப்பட்டார். பாடம் படித்த எல்லோருமே சட்டதிட்டங்களுக்கும் கணவர்களுக்கும் ஆண்களுக்கும் பயந்து தங்களை படம் எடுக்க அனுமதிக்கவில்லை. போனால் போகிறது என்று சம்மதம் கொடுத்தவர்களின் முகம் காட்ட முடியாத நிழற்படங்களின் தொகுப்பு:
oOo
கொடுக்கல், வாங்கல்: நெதர்லாந்து
யூரோப்பிய பொருளாதாரச் சிக்கல் பரவுகிறது. ஓரளவு நிலைமை சீர் திருந்தி பல பொருளாதாரங்கள் மேலெழும்பியதாக ஒரு பிம்பம் இருக்கிறது. அது ஒன்றும் சரியான சித்திரிப்பில்லை. ஒவ்வொன்றாக முந்தைய காலனிய மேலாட்சி நாடுகளின் பொருளாதாரங்கள் அடித்தளம் தகர்ந்து சரியத் துவங்கி இருக்கின்றன. எத்தனை காலம் ஆஃப்ரிக்க ஆசிய நாடுகளைச் சுரண்டியே காலம் தள்ள முடியும்?
இப்போது பணச்சந்தையில் நெதர்லாந்து போன்ற நாடுகளின் மதிப்பு கீழிறக்கப்பட்டு விட்டது.
ஒப்பீட்டில் ஆஃப்ரிக்க நாடுகள் மெல்ல மெல்ல மேலெழுகின்றன. அவை மட்டும் தம்முள் போரிடுவதை நிறுத்த முடிந்து, செமிதிய மதங்களால் வன்முறைக்கு ஆளாகாமல் இருந்தால் எத்தனையோ சீக்கிரம் மேலெழ முடியலாம்?
உள்ளூர் விவசாயிகளைத் துரத்தும் பணமுதலீடு: நில அபகரிப்பு
கம்போடியாவில் குடியானவர்களின் நிலை பதட்டமும், வீழ்ச்சியுமாக ஆகிக் கொண்டிருக்கிறதாம். அதோடு நிற்காமல், அவர்கள் தம் விளை நிலங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இழந்து கொண்டிருக்கிறார்கள்.
அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி அதனருகில் வீடற்றவர் தூங்கி: இத்தாலி
நெதர்லாந்து சரிகிறது என்று செய்தி பார்த்தோம். இத்தலி வெகு காலமாகவே யூரோப்பியப் பொருளாதாரத்தில் நோயாளியாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் இத்தலியின் சரிவு இன்னும் அதிகமாகி வருகிறது. இந்தச் செய்தியில் இத்தலியின் ஒரு உருப்படியான மையமான மிலானும் இப்போது வீழ்ச்சியைச் சந்திக்கிறது என்று சொல்கிறார்கள்.
தொழிலாளர் செலவைக் குறைக்கும் ஐரோப்பிய ஒன்றியம்: யூனியன் கிளர்ச்சிகள்
சீனாவில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் கம்மியான விலைக்கு நிறைவான உழைப்பைத் தருவோர் பெருகிவரும் உலகமயமான காலகட்டத்தில் புதன்கிழமைதோறும் விடுமுறை விட்டுக்கொள்ளும் பிரென்ச்சு கலாச்சாரம் இன்றும் சரிப்படுமா? நிரந்தர வேலை, ஓய்வெடுத்த பிறகும் மாதந்தோறும் ஓய்வூதியம் என்று 10 மணி முதல் ஐந்து வரை உழைத்த காலம் மலையேறி விட்டதா? மதிய உணவிற்குப் பிறகு கொஞ்சம் தூக்கம், தினந்தோறும் விருந்து என்று வாழ்ந்த கிரேக்க வாழ்வுமுறையை மாற்றிக் கொள்ளும் நேரம் துவங்கி விட்டதா?
அங்கே நிலவும் வேலைவாய்ப்பின்மையைப் பார்த்தால் அப்படித்தான் எண்ணவைக்கிறார்கள்:
http://www.salon.com/2013/12/
oOo
அரசியலை நடத்திக் கொடுக்கும் அதிகாரத் தரகர்கள்: ஒப்பந்தக்காரர்
ஒரு புறம் உலகச் சந்தையில் யூரோப்பியப் பொருட்களுக்கு வாடிக்கையாளர் குறைந்து வருகிறார்கள். யூரோப்பிய நாடுகளில் பலவும் தொழில் நுட்பத்தில் பின் தங்கியுள்ளன என்பதும் கவனிக்கப்பட வேண்டும். தவிர குறையும் ஜனத்தொகை, இளைஞர்களின் உழைப்புக்கு அஞ்சும் மனோபாவம், தகுதிக்கு மீறிய நுகர்வு கொண்ட மத்திய வர்க்கத்தினர், கொள்ளை அடித்துச் சுரண்டும் மேல்மட்டத்தினர் என்று பற்பல கிடுக்கிப் பிடிகளில் யூரோப் சிக்கிக் கொண்டுள்ளது. இடையில் அமெரிக்காவில் மக்களைச் சுரண்டிய அதே வழிமுறை, பெருநிறுவனங்களின் இடையீட்டில் அரசு தன் தொழிலாளர் நலன்களை ஒழிப்பது என்ற வழிமுறையும் இங்கு பெருகி வருகிறது. அமெரிக்கா ஓட்டாண்டியானதற்கு அதன் 20 ஆண்டுப் போர் மட்டுமே காரணமல்ல, உழைக்கும் மக்களின் நலனை அமெரிக்க பெருமுதலியம் தொடர்ந்து அழிக்க முனைந்து, அரசின் சாதாரண நலத் திட்டங்களைக் கூட ஒடுக்க முயல்வதே காரணம். சந்தையில் நுகர்வது நாட்டின் ஒரு சதவீதத்தினரான பெருமுதலீட்டினரா, இல்லை மக்கள் திரளா? அந்த மக்கள் திரளின் வாங்கும் சக்தியைத் தொடர்ந்து அழித்தால் சந்தையில் பொருட்கள் எப்படி விற்கும்? இந்த அடிப்படைக் கணக்கு கூடத் தெரியாத மூடர்கள் பெரு நிறுவனங்களை மேலிருந்து நடத்துகிறார்கள். அந்த வகைப் பொருளாதாரம் எப்படி உருப்படும்?
அதே பாதையில் யூரோப்பியப் பெரு நிறுவனங்கள் இப்போது நடக்கத் துவங்கியுள்ளன. இது தொழிலாளர் உலகுக்கு ஏற்படுத்தும் நாசம் சொல்லிலடங்காதது.
oOo
நானூறாயிரம் பழைமையான புதைப்படிமங்கள்: வெளிப்பாடு
oOo
உதவலாமா? உள்ளே வரலாமா? – தடுமாற்றம்
செமிதிய மதங்களை ஆவி சேர்த்துத் தழுவும் இந்திய முற்போக்குகளுக்கு வரலாறு என்பது என்றுமே புரிந்ததில்லை. தம் விருப்பத்துக்கு வரலாற்றை வளைத்து எழுதி அதுதான் உண்மையில் நடந்தது என்று தம்மைத் தாமே தேற்றிக் கொண்டு பிரமையில் ஆழ்வது வழக்கமான இந்திய முற்போக்குகளுக்கு வரலாறு தொடர்ந்து புதுப் புதுப் பாடங்களை, அதாவது பழைய பாடங்களையே புதுப் புது இடங்களில், களங்களில் போதிக்கிறது. கற்க மனமோ அறிவோ திறனோ இருந்தால்தானே இவர்கள் கற்கப் போகிறார்கள். இவற்றில் எதுவாவது இருந்தால் செமிதிய மதங்களின் ரத்த வெறியை என்றோ புரிந்து கொண்டு அவற்றிற்கு பாதுகை தாங்கிகளாக, வாயிற்காவலனாக இருப்பதை பெரும் அவமானம் என்று புரிந்து கொண்டு விலகி இருப்பார்கள். ஆயிரம் ஆண்டு காலனியாதிக்கத்தை பெரும் நற்சம்பவம் என்று கொண்டாடும் அடிமை புத்தி உள்ள இந்திய முற்போக்குகள் அப்படி எல்லாம் அறிவுத் தெளிவு பெறுவார்கள் என்று நம்ப இடமில்லை. ஆனால் இந்த புதுக்களமாவது எங்காவது உறைக்கிறதா, சொரணை வருமா என்று பார்க்கலாம் என்றுதான் இதைக் கொணர வேண்டி இருக்கிறது.
ஆஃப்ரிக்காவில் இன்னொரு ரத்தக் களரியான நிலம்- குருதிப் புனலை இங்கு ஓட விடுவது யார்? வேறு யார்? அதே செமிதிய மதங்கள்தாம். உலக ஏகாதிபத்திய வெறியில் உலக நாடுகளெங்கும் தொடர்ந்து கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மோதிக் கொண்டு பல லட்சம் மக்களின் வாழ்க்கையில் காரிருளைப் பரப்பிய அதே செமிதிய மதங்கள்தாம் இங்கும் கொலைக்களனாக ஒரு நாட்டை ஆக்கி இருக்கின்றன. செய்தியை இங்கே படிக்கலாம்.