நியதி
கசங்கிய
காவி நிறத்த
கிட்டத்தட்ட ஒரு ஆளின்
நீளமும் பருமனையும்
உடைய காகிதமொன்று
சாலையில்
காற்றுடன் மெதுவாக திரும்பத்
திரும்ப
புரள்கையில்
காரொன்றுஅதன் மீது
ஓடிச் சென்று
நசுக்கியது
தரையோடு. ஆளைப்
போல் அல்லாது எழுந்து
மீண்டும் புரண்டது
காற்றுடன் திரும்பத்
திரும்ப முன்பு
இருந்ததைப் போல் இருப்பதற்காக.
ஒரு விதமான பாடல்
பாம்பு காத்திருக்கட்டும்
அதன் புதருக்கடியே.
எழுதுவது
வார்த்தைகளாக இருக்கட்டும்.
நிதானித்தும் விரைந்தும்,
தாக்கும் கூர்மையுடன்,
காத்திருப்பிற்கான அமைதியுடன்,
தூக்கமற்று.
-மனிதர்களையும் கற்களையும்
உருவகத்தால் ஒன்றிணைக்க
இயற்று.(கருத்துகளில்அல்ல, பொருட்களில் )
புதிதாய்ப் புனை.
சாக்ஸிபிராஜே எனது மலர்: அது பிளக்கும்
பாறைகளை.
மொழியாக்கம்: நம்பி கிருஷ்ணன்