கடலை உருண்டையும் கஞ்சித் தொட்டியும்

சாதனையாளர்கள் இல்லாத நிலம்தான் ஏது? இந்தியாவும், தமிழகமும் அப்படிச் செம்மல்கள் நிறைந்த நிலம்தான்.

எதைச் சாதனை என்று, எப்படி நாம் புரிந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நாம் இப்படிப் பட்டவர்களை அறிவதும், அவர்களை சமூகப் பிரக்ஞையில் தொடர்ந்து இருத்துவதும் நடக்கும்.

saadhanaiyaalargalதிரளுக்கான ஊடகங்கள் வரலாற்று நிகழ்வுகளைக் கறாராக அலசி ஆயும் திறனோ, ஆழமோ அற்றவை என்பது உலகளவில் நிலவும் பொதுவான கருத்து. வாசகத் திறனை கவனத்திலிருத்தி இயங்க வேண்டியவை அவை, எனவே ஆழமின்மை, குறை திறன் ஆகியன வெளிக்காரணங்களால் அவற்றின் மீது சுமத்தப்படுவது என்று சொல்லப்பட்டாலும், தம் தேர்வுகளினாலேயே இத்தகைய நலிவை அவை அடைகின்றன என்பதையும் நாம் கவனிக்கலாம்.

இருந்தும், இன்றைய நிலையில் இப்படிப் பொது ஜனங்களுக்கான ஊடகங்களே இப்படிப் பலரைப் பற்றிய தகவல்களை மக்கள் முன் வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.பெரும்பாலும் அழிவு, ஆபத்து, விபரீதம், கேவலம் என்னும் ரஸங்களை வெளிப்படுத்தும் விஷயங்களே பரபரப்பைத் தூண்டுகின்றன என்றும், மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன என்றும் நிலவும் முடிவுகள் பத்திரிகை / ஊடகங்களைச் செலுத்துவதால் ஆக்க பூர்வமான விஷயங்கள் தகவல் வெளியில் அத்தனை முக்கியத்துவம் பெறுவதில்லை. அதுவும் ஆடம்பரமான அரங்குகளில் நடவாத, நெடுநாட்கள் நிகழ்ந்து பூரணமாகும் செயல்களைச் சாதனை என்று கூட ஊடகங்கள் கவனிப்பதில்லை.

தொடர்ந்து இழிவையும், நசிவையும், ஆபத்தையுமே படித்து, பார்த்து, கேட்டு வரும் மக்களுக்கு நாளாவட்டத்தில் மனமும், உணர்வுகளும் மரத்துப் போக வாய்ப்பு அதிகம் என்பதோடு, தம் சமூகம், நாகரீகம், அரசு, நாடு ஆகியன குறித்து நம்பிக்கையின்மை, அலட்சியம், இழிவுணர்வு ஆகியன அம்மக்களிடம் நிரம்ப வாய்ப்பு அதிகம். முன்னாள் காலனிய நாடுகளாயிருந்து, இன்னும் அந்த வியாதியின் பீடிப்பிலிருந்து விழிப்புணர்வோடு மீள முயற்சி செய்யாத இந்தியா போன்ற ஒரு நாட்டில் இத்தகைய விட்டேற்றியான மனோபாவம் பரவலாக இருக்கத்தான் செய்யும், அதையே இந்த ஊடகங்கள் மேன்மேலும் உறுதிப்படுத்தி, பெருக்கவும் செய்கின்றன.
ஒரு வேளை நம்மிடையே இருந்து போன பற்பல சாதனையாளர்கள் பற்றித் தொடர்ந்து எழுதினால் நம் நாகரீகமும் தன்னளவிலும், ஒப்பீட்டிலும் மேன்மைகள் கொண்டதே என்ற ஒரு எதார்த்தமான உணர்தல் நம்மிடம் பரவுமோ என்ற நப்பாசை எங்களுக்கு உள்ளது. இதை ஒட்டி இந்திய/ தமிழகச் சாதனையாளர்கள் என்று எங்களுக்குத் தெரிய வருபவர்கள் பற்றித் தொடர்ந்து கட்டுரைகளைப் பிரசுரிக்க இருக்கிறோம்.
சென்ற சில நூறாண்டுகளில் தமிழகத்திலும், இந்தியாவிலும் சாதனைகள் புரிந்து காலனியத்தின் இழிவு நிலையிலும் அந்தக் கட்டுத்தளைகளை மீறித் தாமும் தம் நிலத்து மக்களும் ஓங்கி நிற்க முயற்சி செய்த சிலரைப் பற்றி எழுதி அவர்களின் நினைவு மங்காமல் இருக்கச் செய்யும் முயற்சியாக ஒரு பகுதியை இங்கு துவங்குகிறோம். வருமிதழ்களில் அவ்வப்போது இந்த வகைக் கட்டுரைகள் வெளி வரும்.
பதிப்பாசிரியர் குழு

oOo

பஞ்சம் தீர்த்த வளவனூர் கோவிந்த அய்யர்

தமிழ் நாடெங்கும் பட்டி தொட்டிகளிலும், பெருநகரப் பெட்டிக் கடைகளிலும், சூப்பர் சந்தைகளிலும் தப்பாமல் கிட்டும் தின்பண்டம் கடலை உருண்டை. சர்க்கரை வியாதி, ரத்தக் குழாயில் கொழுப்பு போன்ற தேக ஆரோக்கியப் பிரச்சினைகள் இல்லாதாருக்கு உகந்த, உவப்பானதொரு தின்பண்டம். வயது வித்தியாசமே இல்லாது அனைத்து மக்களும் விரும்பித் தின்னும் ஒரு பண்டம். இதன் மாற்று வடிவங்கள், உருண்டையாக அல்லாது தட்டையாக, வில்லைகளாக இந்தியா பூராவும் கிட்டுகின்றன. பொரி கடலை என்ற வடிவில் கடலை இந்தியா நெடுக உண்ணப்படுகிறது. என்ன காரணத்தாலோ, காந்தியும் கடலையை விரும்பி உண்டார் என்று கர்ண பரம்பரைக் கதை சொல்கிறது. 

இப்படி நம் அனுபவமும், செவிவழிக் காதைகளுமாக, நமக்கு ஒரு மனத்தோற்றத்தை உருவாக்கி இருக்கின்றன, ஏதோ காலம் காலமாக நம்மிடம் கடலையும் அதன் பல பொருட்களும் இருந்ததான ஒரு எண்ணம்தானது. இது மட்டுமல்ல, வேறு என்னென்னவோ உணவுப் பொருட்கள் பற்றியும் இப்படி ஒரு பிரமை நம்மிடையே உண்டு.

உதாரணமாக, காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் எனப்படும் காபேஜ், காலிஃப்ளவர் என்பன பெயரிலேயே இங்கிலீஷ் ஒலிகளைக் கொண்டிருப்பதால் நமக்கு அவை அன்னிய நிலத்துப் பொருட்கள் என்பது உடனே தெரிகிறது. ஆனால் எப்போது அவை நம் நாட்டில் நுழைந்தன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திராது. உத்தேசமாக வெள்ளையரோடு வந்திருக்கலாம் என்று நாம் நினைக்கக் கூடும். அத்தனை காலம் முன்பு அவை வந்தவை அல்ல. அதே போல துவரம்பருப்பு, புளி, மிளகாய், சௌசௌ என்றழைக்கப்படும் பங்களூர் கத்திரிக்காய் , தக்காளிபோன்ற பல உணவு வகைகள் எல்லாம் கூட வேற்று நிலங்களிலிருந்து நம் நாட்டில் நுழைந்தவைதாம். அவை வந்த வரலாறும், அக்காலம் பற்றிய நினைவுமே நம்மிடையே மிகவுமே மங்கிப் போயாயிற்று. ’நம்’ என்று இங்கு சொல்லப்படுவது அனேகமாக நகர வாசிகளைத்தான். கிராமப் புறங்களில் இன்னும் எவை நம் மண்ணின் நெடுநாட் பொருட்கள், பாரம்பரியம் கொண்டவை என்ற பட்டறிவு பரவலாக இருக்க வாய்ப்பு அதிகம்.

கடலை எனப்படும் வஸ்து நெடுங்காலமாக நம்மிடம் பயிராகிப் பயன்பட்டதான பிரமை நம்மில் பலரிடம் இருக்கலாம். கொஞ்சம் தேடிப் பார்த்தால் வலையிலிருந்தே தகவலாகக் கிட்டுவதில் இருந்து உண்மை என்ன என்று விலக்கிக் கொள்ள முடியயலாம்.

வாசகர்களுக்கு அந்தத் தொல்லை கூடத் தேவை இல்லாமல் செய்ய உத்தேசித்து இது குறித்து திரு. எம். ஆர். ராஜகோபாலன், சுமார் 15 ஆண்டுகள் முன்பு ’மஞ்சரி’ பத்திரிகையின் தீபாவளி மலரில் பிரசுரித்த ஒரு கட்டுரையை அவருடைய அனுமதி பெற்று, இங்கு மீள் பிரசுரம் செய்கிறோம். இக்கட்டுரை ஒரு கட்டுரைத் தொகுப்பில், புத்தக வடிவிலும் வெளி வந்திருக்கிறது. [1]

மூலக் கட்டுரை யைப் படிப்பு வசதி கருதிச் சிறிது சுருக்கியும், மாற்றியும் கொடுத்திருக்கிறோம். மூலக் கட்டுரையும் முன்பு தன் வசமிருந்த ஒரு ஆங்கிலக் கட்டுரையைத் தழுவி எழுதியது என்று தற்போது காந்திக்ராம் இன்ஸ்டிட்யூட்டின் நிர்வாக அறங்காவலராக இருக்கும் எம். ஆர். ராஜகோபாலன், சென்ற வாரம் ஒரு தொலைபேசி உரையாடலில் என்னிடம் தெரிவித்தார். 

மைத்ரேயன்

 oOo

வேர்க்கடலை அல்லது நிலக்கடலை என்றழைக்கப்படும் ஒரு தாவரம், தென் அமெரிக்காவிலுள்ள பிராஸீல் நாட்டிலிருந்து ஆஃப்ரிக்க ஆசிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தாவர வரலாற்றியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இது 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்தது. ஆனாலும் இந்தியா முழுவதிலும் இது தீவிரமாகச் சாகுபடி செய்யப்பட்டது 20ஆவது நூற்றாண்டில்தான்.[2]
உலகில் வேர்க்கடலை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். ஆண்டொன்றுக்கு சுமார் 70 லட்சம் டன் வேர்க்கடலை நம் நாட்டில் விளைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விளைக்கப்படுகிறது. ஆனால் பெருமளவில் எண்ணெய் ஆட்டும் இயந்திரங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதிலும் குறிப்பாகத் தென் ஆற்காடு மாவட்டம்தான் இதன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தமிழ் நாட்டிலேயே பெரிய வேர்க்கடலைச் சந்தை விழுப்புரம்தான். தமிழ்நாடு வேர்க்கடலை உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பதற்கும், தமிழ்நாடும், குறிப்பாகத் தென் ஆற்காடும் கடலை எண்ணெய் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கவும் ஒரு தமிழர் காரணமாக இருந்திருக்கிறார் என்ற தகவல் உங்களுக்கு வியப்பைக் கொடுக்கலாம்.

peanut_harvests

தென் ஆற்காடு மாவட்டத்தில் (இன்றைய விழுப்புரம்) சென்னையிலிருந்து திருச்சி-திண்டுக்கல் நோக்கி வரும் கிராண்ட் ட்ரங்க் ரோடிலிருந்து மூன்று மைல் தூரத்தில் அமைந்துள்ளது வளவனூர் எனும் சிறிய கிராமம். அது 1871 ஆம் ஆண்டு. அக்கிராமத்தை நோக்கி, அம்மாவட்டத்தின் எல்லா ஊர்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான பார வண்டிகள் (மாட்டு வண்டிகள்தான்) வேர்க்கடலை மூட்டைகளுடன் பயணித்துக் கொண்டிருந்தன. கிராமம் முழுவதும் வேர்க்கடலைப் பருப்பிலிருந்து எண்ணெய் ஆட்டும் செக்குகளின் ஒலி கேட்டது. எண்ணற்ற தச்சர்கள் எண்ணெய்ச் செக்குகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர். வண்டி வண்டியாக வந்திறங்கும் வேர்க்கடலையை எண்ணெய் ஆட்ட அவை தேவையாயிருந்தன. அவர்கள் எண்ணெய் சேமிக்கவென்று பீப்பாய்களையும் தயாரித்தனர்.
இந்த எண்ணெய் உற்பத்தியின் காரணமாகப் பாண்டிச்சேரிக்கும், வளவனூருக்குமிடையே தொடர்பு அதிகரிக்கிறது, வளவனூரில் வளம் கொழிக்கத் தொடங்குகிறது.
கோவிந்த அய்யர் என்ற ஒரு இளைஞர் கடலை எண்ணெயில் ஆர்வம் காட்டத் துவங்கிய மூன்றாண்டுகளுக்குள்தான் இம்மாறுதல்கள். 18 வயதே ஆன இளைஞர் கோவிந்த அய்யருக்கு, கல்கத்தாவைச் சேர்ந்த சுலைமான் சாவாஜி என்ற வியாபாரியின் தொடர்பு கிட்டியது. அன்று பர்மா நாட்டினர் கடலை எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தி வந்தனர். பர்மாவுக்கு ஏற்றுமதி செய்ய உதவியாகச் சில பீப்பாய்கள் கடலை எண்ணெயைத் தனக்கு அனுப்புமாறு சாலாஜி, கோவிந்த அய்யரிடம் கேட்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் தமிழ் நாட்டிலோ கடலை எண்ணெயை விளக்கெரிக்கத்தான் பயன்படுத்தினர். அதைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்பதை கோவிந்த அய்யர் அப்போதுதான் தெரிந்து கொண்டார்.
பல கிராமங்களில் தேடி அலைந்தபின் அவரால் நான்கு பீப்பாய் கடலை எண்ணெயைத்தான் வாங்கி அனுப்ப முடிந்தது. சாலாஜி அவரிடம் மறுபடி நூறு பீப்பாய்கள் எண்ணெய் வேண்டி, முன் பணம் கொடுத்தபோது அந்த இளைஞர் மலைத்துப் போனார். நூற்றுக்கணக்கான கிராமங்களில் அலைந்து, வேர்க்கடலைப் பருப்பைச் சேகரித்தார். மரச்செக்குகளில் அவற்றை ஆட்டிப் பீப்பாய்களில் எண்ணெயை நிரப்பினார்.
மரப்பீப்பாய்களைத் தயாரிக்கும் வல்லுநர்கள் அப்போது கொச்சியில்தான் இருந்தனர். கோவிந்த அய்யர் கொச்சிக்கு நேரில் சென்று, அவ்வல்லுநர்களை வளவனூருக்கு அழைத்து வந்து மரப் பீப்பாய்களைத் தயாரித்தார். வெவ்வேறு கிராமங்களுக்குச் சென்றபோதெல்லாம் அங்குள்ள விவசாயிகளை வேர்க்கடலையைப் பயிரிடும்படி ஊக்குவித்தார். வளவனூர் கிராமம் வளம் கொழிக்கும் கிராமமாக மாற இதுவே காரணமாயிற்று.
யாரிந்த கோவிந்த அய்யர் என்று பார்ப்போம்.
இவரின் கதையும், தென்னிந்தியக் கடலைச் சாகுபடியும் தொடர்புள்ளவை. கடின உழைப்பு, நிலையான தைரியம், அசைக்க முடியாத தன்னம்பிக்கை, இன்னல் நிறைந்த சூழலில் சகிப்புத் தன்மை, நேர்மை, நன்னெறி, தன்னலமற்ற சேவை, மனித நேயம் என்ற பல நற்குணங்கள் கொண்டவராக இருந்த கோவிந்த அய்யர், நற்குணங்கள் தொழில்/ வியாபாரம் ஆகியனவற்றில் வெற்றிக்கு இடையூறு விளைக்காதவை என்று நிரூபித்தவர். இன்றோ அத்தகைய நற்குணங்கள் வியாபாரம், தொழில் ஆகியனவற்றில் உதவாதவை என்ற கருத்து பரவலாக நிலவுகிறது.
தென் ஆற்காடு மாவட்டத்தில் வசித்த சின்னக் குப்புசாமி அய்யர் என்றழைக்கப்பட்ட சுப்ரமணிய அய்யருக்கும், லெட்சுமி அம்மாளுக்கும் மூன்றாவது மகனாக கோவிந்த அய்யர் 1851 ஆம் ஆண்டு பிறந்தார். பாண்டிச்சேரிக்கருகே உள்ள சின்னபாபு சமுத்திரத்தில், ஒரு சுங்கச் சாவடியில், மாதம் எட்டு ரூபாய் ஊதியத்தில் சாதாரண ஊழியராக சுப்ரமணிய அய்யர் பணியாற்றி வந்தார். அவரிடம் ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. பங்காளியான உறவினர் ஒருவர் வீட்டில் வசித்து வந்தார். குறைவான நிதி வசதிகளைக் கொண்டு, மனைவி, நான்கு மகன்கள், ஒரு மகள் அடங்கிய குடும்பத்தைப் பராமரிக்க வேண்டி இருந்தது. கோவிந்த அய்யரின் அண்ணனான வெங்கடராமனின் படிப்பு அரைகுறையாக நின்று போய், அவர் மாதம் நான்கு ரூபாய் சம்பளத்துக்கு பாண்டிச்சேரியில் ஒரு வியாபாரியிடம் வேலைக்குச் சென்றார். 1860 ஆம் ஆண்டில் குடும்பம் பாண்டிச்சேரிக்கு நகர்ந்தது. கோவிந்தன் முதலில் விழுப்புரத்திலும், பிறகு பாண்டிச்சேரியிலும் படித்தார். முக்கியமான கல்வி அறிவை அவர் தன் குடும்பத்திலேயே பெற்றார் எனலாம்.
துன்பங்களும், வறுமையும் நிறைந்த சூழலில்தான் கோவிந்தனின் இரக்க சுபாவம், தியாக மனப்பாங்கு, எதிர்ப்புகளிடையே பொறுமை போன்ற குணங்கள் வளர்ந்திருக்க வேண்டும். எல்லாரும் உணவருந்தியபின் தான் உணவருந்தும் வழக்கம் அப்போது ஏற்பட்டது. உடன் பிறந்தார் உணவருந்துவதற்காகத் தான் பட்டினி கிடந்தது பல நாட்களில் நடந்ததாகத் தெரிகிறது. இந்த அனுபவங்களாலோ என்னவோ, பின்னாளில் தமிழ் நாட்டில் பஞ்சம் தலைவீரித்தாடிய ஆண்டுகளில் லட்சக்கணக்கானோருக்குப் பசிப்பிணியாற்ற உணவளித்து அன்னதாதாவாக விளங்கி இருக்கிறார்.
மூத்த மகன் வெங்கடராம அய்யர் பாண்டியை விட்டுச் சென்னைக்குப் போனார். அங்கு கொத்தவால் சாவடியில் ஒரு மண்டியில் பத்து ரூபாய் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்த்தார். கோவிந்த அய்யரும், மற்ற இரண்டு சகோதரர்களும் சுற்று வட்டாரக் கிராமங்களிலிருந்து பருப்பு வகைகள், அரிசி, புளி போன்ற விளைபொருட்களை வாங்கிச் சென்னைக்குக் கொண்டு சென்று கொத்தவால் சாவடியில் வியாபாரம் செய்து வந்தனர். அப்போது அவருக்கு சாலாஜியுடன் தொடர்பு ஏற்பட்டு வேர்க்கடலையின் மீது ஆர்வம் தோன்றியது.
1850 முதல் 1870 வரை அன்றைய சென்னை மாகாணத்தில், தென் ஆற்காடு மாவட்டத்தில் வேர்க்கடலை குறைந்த அளவிலேயே பயிரிடப்பட்டது. இந்த வேர்க்கடலையைப் பாண்டிச்சேரியில் ஆட்சி அமைத்திருந்த ஃப்ரெஞ்சுக்காரர்கள் வாங்கி ஃப்ரான்ஸுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர் என்று அப்போதைய மதராஸ் கெஸெடியர் பிரசுரத்திலிருந்து தெரிகிறது. மரத்தாலான நாட்டுச் செக்குகள் மூலம் சிறு அளவில் கடலை ஆட்டப்பட்டுத் தயாரித்த எண்ணெய் கிராமங்களில் விளக்கு ஏற்றப் பயன்பட்டது.
சாலாஜியுடன் கோவிந்த அய்யர் கொண்ட வர்த்தக உறவை ஆண்டவனின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். வேர்க்கடலை சம்பந்தப்பட்ட தொழில் பெரிதும் வளர இந்தத் தொடர்பே காரணம். ஆரம்பத்தில் கடலை எண்ணெயைச் சேகரிக்கத் தான் பட்ட துன்பங்களிலிருந்து கோவிந்தன் நிறைய விவர ஞானம் பெற்றுத் தேர்ச்சி அடைந்தார். மன உறுதியும், ஊக்கமும் பெற்ற கோவிந்தன், பல அமைப்புகளை ஒருங்கிணைத்து நிர்வகிக்க வல்லவரானதும் இந்த முயற்சிகளாலேயே எனலாம்.

Groundnut_Oil_Extraction_Process_Cows_Old_1800s_Chekku_Peanut_Paste_Machine

விவசாயிகளை வேர்க்கடலை பயிரிடச் சொல்லி ஊக்குவிப்பதும், எண்ணெய் ஆட்டப் பல செக்குகளை நிறுவியதும், எண்ணெயைச் சேமிக்கவும் பல இடங்களுக்கு அனுப்பவும் தேவையான பீப்பாய்களை உற்பத்தி செய்வதும், அதற்குத் தேவையான தேர்ந்த தச்சர்களை கேரளத்திலிருந்து இறக்குமதி செய்து குடியேற்றியதும் என்று பல வகை முயற்சிகளை ஒருங்கிணைக்க அன்றைய துர்லபமான போக்குவரவு வசதிகளை வைத்து நோக்கினால், அசாத்தியமான முயற்சியும் ஊக்கமும் தேவைப்பட்டிருக்கும் என்றே தோன்றுகிறது. வேர்க்கடலையைக் கொள்முதல் செய்து சேமிக்கக் கிடங்குகளையும் நிறுவி இருக்கிறார். அதே கிடங்குகளில் எண்ணெயும், எண்ணெய் ஆட்டுவதில் ஒரு உப விளைபொருளான பிண்ணாக்கும் சேமித்து வைக்கப்பட்டன. வளவனூர் வேர்க்கடலை சம்பந்தப்பட்ட பல தொழிலாளர்களுக்கு ஒரு முக்கியமான மையமாக உருவெடுத்தது.
அவர் விரும்பி இருந்தால் கடலை எண்ணெய், மேலும் வேர்க்கடலை வியாபாரத்தில் ஒரு ஏகபோக அதிபராக ஆகிப் பெரும் பணக்காரராக மாறி இருக்க முடியும். ஆனால் தொழிலால், வர்த்தகத்தால் பிறரைச் சுரண்டிப் பெருவளம் சேர்க்கும் மனப்பாங்கு அவரிடம் இல்லை. கடலையைக் கொள்முதல் செய்வதானாலும், எண்ணெயை ஆட்டி விற்பதானாலும், அவர் சிறு அளவுத் தொகையைத்தான் தன் ஊதியமாக (கமிஷன்) எடுத்துக் கொண்டார் என்று தெரிகிறது. லாபத்தின் பெரும் பங்கை அந்த மொத்த வியாபாரத்தில் பங்கெடுத்த வியாபாரிகளும், தொழிலாளர்களும், விவசாயிகளும் பெற்றனர்.
1875 ஆம் ஆண்டுக்குள் கோவிந்த அய்யரின் நிர்வாகத் திறன் பெயர் பெற்ற ஒன்றாகி இருந்தது. பாண்டிச்சேரி, மேலும் சென்னையைச் சேர்ந்த வியாபாரிகள் அவருக்கு மரியாதை கொடுத்தனர். இரண்டு ஃப்ரெஞ்சு நிறுவனங்களுக்கு அவர் மிக வேண்டியவரானார். அந்நிறுவனங்கள்- ஃபெர்னான் – பாயில் எட்ஃபில்ஸ், மவுண்ட் ஃப்ரன் எட் சை. ஃபெர்னான் – பாயிலுடன் அவருக்கிருந்த நட்பு வேர்க்கடலை உற்பத்தியில் பெரும் மாற்றத்தைக் கொணரக் காரணமாகியது. பாயில், ஆஃப்ரிக்காவில் மடகாஸ்கர், மொஸாம்பீக் பகுதிகளில் பயிரிடப்படும் வேர்க்கடலை ரகத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தார். அந்த ரக வேர்க்கடலைச் செடி, தரையில் படர்ந்து வளர்ந்து நிறைய வேர்க்கடலைக் கொட்டையை விளைக்கக் கூடியது. பாயில், மொஸாம்பீக்கிலிருந்து 300 மூட்டைகள் வேர்க்கடலையைத் தருவித்து கோவிந்த அய்யரிடம் தென் ஆற்காட்டுப் பகுதியில் பயிரிடக் கொடுத்தார். 1877 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் (தாது வருஷப் பஞ்சம்) தொடக்க காலத்தில்தான் இக்கடலை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு உடனடியாக வெற்றி கிட்டியது. மூன்றே ஆண்டுகளுக்குள் இந்தக் கடலை ரகம் தென் ஆற்காடு மாவட்டத்தில் முற்றிலுமாக நிலைபெற்றுவிட்டது.

famine_1

இதற்கு முன்பாகப் பயிரிடப்பட்ட வேர்க்கடலை ரகம், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாட்டின் பயணிகளால் 400 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப் பட்டதாகும். இதற்குக் கொத்து ரகம் என்று பெயர். ஒரு ஏக்கருக்கு 100 முதல் 200 கிலோ வரை விளையக் கூடியது. மொஸாம்பீக் ரகம் ஒரு ஏக்கருக்கு ஒரு டன் (ஆயிரம் கிலோ) வரை விளைச்சல் கொடுத்தது. அதோடு இது ஒரு பாசனப் பயிர். ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலமும், பாசனக் கிணறு வசதியும் கொண்ட விவசாயி ஒரு/ இரு டன் கடலை உற்பத்தி செய்து 100/200 ரூபாய் சம்பாதிக்க முடியும். இது அன்று பெரும் தொகை ஆகும். (நூறு ரூபாய் என்பது பத்துப் பவுன்கள் அன்றைய விலையில்; அதாவது இன்றைய விலையில் சுமார்  3 லட்சம் ரூபாய்கள்).

நிறைய விவசாயிகள் தம் கடன் தொல்லையிலிருந்து விடுதலை பெற இந்தக் கடலை உதவியது. கடன்காரர்களுக்கு விவசாயிகள் எழுதிக் கொடுத்த கடன் பத்திரத்தை (அன்று புரோ நோட்டு என்றழைக்கப்பட்டது) கடன் தீர்க்கப்பட்டதால் கிழித்தெறிய இக்கடலை உதவியதால், இதற்கு நோட்டுக் கிழிச்சான் கொட்டை என்ற செல்லப்பெயர் சூட்டப்பட்டதாம். வட ஆற்காடு, மதுரை, செங்கல்பட்டு, சென்னை மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து விவசாயிகள் இக்கடலையின் விதைகளை வாங்குவதற்காக வளவனூருக்குப் படையெடுத்தார்கள். இப்படியே வேர்க்கடலை உற்பத்தியில் திடீர் முன்னேற்றம் நாடெங்கும் ஏற்பட்டது.

1877 ஆம் ஆண்டில்தான் தாது வருஷத்துப் பஞ்சம் தென் இந்தியா முழுதும் தலைவிரித்தாடியது. ஆயிரக்கணக்கான மக்கள் உணவின்றி உயிர் விட்டனர். இப்பஞ்சத்திற்கெதிராக நிவாரண முயற்சிகள் பெரும் அளவில் வளவனூரில் துவங்கின. பஞ்சத்தின் பேரழிவைக் கண்டு அஞ்சாத கோவிந்த அய்யர், நிறைய உணவு வழங்கும் மையங்களை நிறுவினார். ஒவ்வொரு மையத்திலும் பசியுடன் வந்தவர்களுக்குச் சிறிது கஞ்சியும், வெல்லப்பாகு வைத்துப் பிடித்த கடலை உருண்டையும் வழங்கப்பட்டது.

famine_3

கடலை உருண்டை கோவிந்த அய்யரின் அரிய கண்டு பிடிப்பு. எண்ணெய் ஆட்டி விளக்கெரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வேர்க்கடலையை, உணவுப் பொருளாக மாற்றிய பெருமை அவரைச் சாரும்.
உணவுத் துறை நிபுணர்கள், கடலை உருண்டையை ‘புரோட்டின் பாம்’ அதாவது புரதச் சத்து நிறைந்த வெடிகுண்டு என்று வருணிக்கிறார்கள். வேர்க்கடலை உருண்டை, கொழுப்பு, புரதம் மற்றும் சர்க்கரைச் சத்து இரும்புச் சத்துகள், ஏ வைட்டமின்கள் அடங்கிய ஒரு உன்னத சமச் சீர் உணவு (பாலன்ஸ்ட் டயட்) ஆகும்.
கோவிந்த அய்யரின் கஞ்சி வழங்கும் மையங்கள் பற்றிய செய்தி பக்கத்து மாவட்டங்களான வட ஆற்காடு, மேலும் செங்கல்பட்டிற்கும் பரவியது. தவிர வெகுதூரத்தில் இருந்தும் பட்டினியால் வாடிய மக்கள் இம்மையங்களைத் தேடி வந்தார்கள். பஞ்சத்தின் கோர தாண்டவம் மாதக் கணக்கில் நீண்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வளவனூரை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர்.

1

கோவிந்த அய்யருக்கு இது பெரும் சவாலாகி விட்டது. சவாலைச் சமாளித்ததில் அவரது ஒப்பற்ற நிர்வாகத் திறமை முழு அளவில் வெளிப்பட்டது. பாண்டிச்சேரி மற்றும் தென் ஆற்காட்டில் வசித்த ஒவ்வொரு வியாபாரியிடமும் அவர்கள் இந்தியரானாலும் சரி, ஐரோப்பியர்களானாலும் சரி, உணவு தானியங்களை நன்கொடை கேட்டு அவர் வேண்டுகோள் விடுத்தார். அவர்களும் நன்கொடை வழங்கினார்கள். அதேபோல ஒவ்வொரு நிலச்சுவான்தாரரையும் அணுகி உணவு தானியங்கள் நன்கொடையாகப் பெற்றார்.
பஞ்சத்தின் கொடுமை அதிகரித்துப் போகவும், எல்லாப் பணக்காரர்களிடமும் அவர்களிடமிருந்த தானியங்களை ஓரிடத்தில் ஒன்று சேர்த்து வைக்க வேண்டுகோள் விடுத்தார். அவர்களது ஒப்புதலுடன் இந்தத் தானியங்களை உணவுப் பங்கீடு முறையில் (ரேஷன்) எல்லாருக்கும் வழங்க ஏற்பாடு செய்தார். தனது சொந்தச் செலவில் தஞ்சை மாவட்டத்திலிருந்து பெரும் அளவில் அரிசி வாங்கி வந்து அதையும் ரேஷன் முறையில் வினியோகம் செய்தார். இவ்வழியில் ஆயிரக்கணக்கானோரைப் பட்டினிச் சாவிலிருந்து அவர் காப்பாற்றினார். ஏற்றுமதி செய்ய வைத்திருந்த சில ஆயிரம் மூட்டைகள் வேர்க்கடலையை அவர் பஞ்ச நிவாரணத்திற்கு வழங்கி இருந்தார்.
பாண்டிச்சேரிவாசிகளான ஃப்ரெஞ்சுக்காரர்கள் அவரது நிவாரணப் பணியால் கவரப்பட்டு 15,000 மூட்டைகள் கடலைப் பிண்ணாக்கை அவரிடம் ஒப்படைத்தார். இது மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பஞ்சகால உணவாகப் பயன்பட்டது.

[நிறைய இனிப்பு வகைகள் கடலைப் பிண்ணாக்கிலிருந்துதான் தயாரிக்கப் படுகின்றன. ]

சுமார் ஓராண்டு நீடித்த இந்தப் பஞ்ச காலம் முழுதும் கோவிந்த அய்யர் சிறிதளவு உணவே உட்கொண்டு, சுயக்கட்டுப்பாட்டிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். பஞ்சகாலம் முடியும் வரை ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டுமென்று அவர் விடுத்த வேண்டுகோளைக் கிராம மக்கள் கட்டளையாக ஏற்று அவ்வண்ணமே நடந்தனர்.
இந்த ஒப்பற்ற சேவையை மதித்துப் பாராட்டுவதற்காக அரசு அவருக்களித்த பட்டங்களை அவர் ஏற்க மறுத்தார். அவரைப் பொறுத்தவரை சக மனிதர் மீது அவர் கொண்டிருந்த சேசத்தின் வெளிப்பாடுதான் அச் செயல்கள், அவ்வளவே.
பெண்ணாறு ஆற்றையும், வளவனூர் ஏரியையும் இணைக்கும் ஒரு வாய்க்காலை வெட்டும் திட்டத்தில் கோவிந்த அய்யர் ஆற்றிய பணி அவரது மிகப்பெரும் சேவை என்று சொல்லலாம். 1877 ஆம் ஆண்டின் பஞ்சத்தை அடுத்து, வளவனூர் ஏரி வறண்டு கிடந்தது. தென் ஆற்காடு மாவட்ட கலெக்டரிடமும், மாநில அரசிடமும் கோவிந்த அய்யர் இதைப் பற்றி ஒரு கோரிக்கை முன்வைத்தார். அந்த ஏரிக்குச் சரியான கரைகள் இல்லை. அந்த ஏரிக்குக் கரை அமைப்பதற்கான குத்தகையில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்ட போதும், சொந்தப் பணத்தைச் செலவு செய்து அவர் அவ்வேலையை முடித்தார். வாய்க்காலை ஒட்டி வசித்த மக்களை ஏரிகளை அமைத்துப் பராமரிக்கும்படி ஊக்குவித்தார். அன்று பெண்ணாற்றின் குறுக்கே அணை ஏதுமில்லை. வாய்க்காலில் நீர் பாய்வதென்றால், பெண்ணாற்றில் வெள்ளம் வர வேண்டும். வெள்ளமில்லாதபோது வாய்க்காலில் நீர் பாய்வதற்காக, பெண்ணாற்றின் குறுக்கே மண்ணாலான அணை ஒன்று அமைக்கப் பட்டது. கோவிந்த அய்யரின் வேண்டுகோளுக்கிணங்க கிராமத்து மக்கள் இப்படி ஓர் அணையை அமைத்தார்கள். ஏரிகள் இதனால் தண்ணீரால் நிரம்பின.
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீர்ப்பாசனத்துக்குரிய நிலங்களாக மாறின. நெல், கரும்பு, மேலும் வேர்க்கடலை அங்கு பயிரிடப்பட்டன. கோவிந்த அய்யர் அத்தோடு நிற்கவில்லை. அக்கிராமங்களில் வசித்த மக்களைக் கிணறுகள் தோண்டும்படி ஆர்வமூட்டி, உதவியும் செய்தார். ஏரிகளில் நீர் நிரம்பியபோது கிணறுகளில் நீர் சுரந்தது. சிறிய விவசாயிகளுக்கு இது பெரும் உதவியாக இருந்தது. ஆற்றில் தண்ணீர் குறைந்த காலங்களிலும் இந்தக் கிணறுகள்தாம் கிராம மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தன.
1880 ஆம் ஆண்டில் கோவிந்த அய்யரின் பெயர் அந்த மாவட்டத்தில் எல்லா மக்களுக்கும் தெரிந்திருந்தது. அவர் தன் வியாபாரத் திறமைக்காக மட்டும் புகழ் பெறவில்லை, அவரது சமூக சேவையும் அவருக்குப் புகழைக் கொண்டு வந்தது. நற்குணங்களான மனிதாபிமானம், சமூக சேவை ஆகியன வாழ்நாள் பூராவும் அவரிடம் இருந்தன. பஞ்ச காலத்தில் மட்டுமல்லாது, பஞ்சம் நீங்கிய பின்பும், பசித்த மக்களுக்கு அவர் வீட்டில் உணவு காத்திருந்தது.
தன் இளமைப்பருவத்தில் அவர் அனுபவித்த பசியும், ஏழ்மையும் கொடுத்த படிப்பினையாலோ என்னவோ, அவரிடம் செல்வமும் புகழும் குவிந்த பின்னும் அவர் மனிதரின் பசியாற்றலைத் தன் கடமையாகக் கொண்டிருந்தார். யாராக இருப்பினும், ஜாதி பேதம் பாராது வளவனூருக்கு வந்தவருக்குப் பசி தீர்க்க உணவு கிட்டுவது நிச்சயம்.
அந்தணர்களுக்கு அவரது வீட்டில் உணவளிக்கப்பட்டது. ஏனையோருக்கு, வியாபாரிகள், அவர்களது வேலையாட்கள், வேலையின்மை காரணமாக உணவில்லாது வாடியவர்கள் யாரானாலும், கோவிந்த அய்யரின் பெயரைச் சொல்லி உள்ளூர் சத்திரத்தில் உணவு பெற முடிந்தது. அவருடைய கணக்கர்கள் உணவு தேவைப்பட்டவர்களுக்கு ஒரு இலச்சினை (டோக்கன்) தருவார்கள். அதைக் காட்டினால் சத்திரத்தில் சாப்பாடு கிட்டும். வடநாட்டிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் யாத்திரீகர்கள் இச்சத்திரத்தில் தங்கினார்கள். அவர்களுக்கும் உணவு குறைவின்றி இங்கு கிட்டியது.
பொதுநலப் பணிகளை முன்னின்று நடத்தியவர் கோவிந்த அய்யர். அவரது உதவியோடு பல கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு, பூஜைகளோடு திகழ்ந்தன. ஏழை மாணவர்கள் பள்ளிக் கட்டணத்தைக் கட்ட அவர் உதவி செய்தார். வளவனூரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வசித்த மக்கள் அவரைத் தேடி வந்து தம் சச்சரவுகளைத் தீர்க்க வழி தேடினார்கள். அவர் வழங்கிய நியாயம் முற்றிலும் சரியாக இருக்கும் என்று ஜனங்கள் நம்பினர். சுடுசொற்களைத் தவிர்த்த அவர், தன் மென்சொற்களால் மக்களை வழி நடத்தினார். பல நேரம் தாமே உணவு பரிமாறுவதையும் செய்தார்.
வேர்க்கடலையைப் பயிரிடுவதில் தோன்றிய பெருமாறுதல்கள் அவரது தொடர்ந்த வியாபார வெற்றியால் மேன்மேலும் வளர்ச்சி பெற்றன. சாலைகள், ரயில் மார்க்கங்கள் வழியே எல்லா மாவட்டங்களிலிருந்தும் அவர் வேர்க்கடலையைக் கொள்முதல் செய்தார். 1875 ஆம் ஆண்டு வரை சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரே ஒரு ரயில்பாதை மட்டுமே இருந்தது. 1875 இல் துவங்கி, 1890 ஆம் ஆண்டுக்குள், விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரிக்கும், காட்பாடிக்கும் ரயில் பாதைகள் போடப்பட்டன. கடலை எண்ணெயைப் பாண்டிச்சேரி துறைமுகத்திற்கு எடுத்துச் செல்வதற்காகவே இந்த ரயில் பாதைகள் போடப்பட்டன. வியாபாரம் பெருகவே, கோவிந்த அய்யர் வளவனூரில் மட்டும் 1000 எண்ணெய்ச் செக்குகளை நிர்மாணித்தார். பிறகு கடலூர், விழுப்புரம், விருத்தாசலம், பண்ருட்டி, திண்டிவனம், திருவண்ணாமலை ஆகிய நகரங்களிலும் செக்குகள் திறக்கப்பட்டன. வருடத்தில் ஆறு மாதம் வளவனூருக்குத் தினமும் ஆயிரம் மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
கடலையை வாங்குவதிலிருந்து, விநியோகித்து, எண்ணெய் மற்றும் பிண்ணாக்குகளைச் சேகரித்துப் பாண்டிச்சேரிக்கு அனுப்புதல் வரை அனைத்துச் செயல்களையும் அவரே ஒருங்கிணைத்துச் செய்தார்.
பிரம்மாண்டமான இந்த வியாபாரத்தில் அவர் ஒரு சிறு தொகையையே தன் ஊதியமாக (கமிஷனாக) பெற்று வந்தார். ஏற்றுமதி வியாபாரத்தில் அவர் நேரடியாகப் பங்கெடுக்கவில்லை. அது சூதாட்டம் போன்றது என்றும், அவரை நம்பி இருந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் எண்ணியதாகத் தெரிகிறது.
அப்போது ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லை. வெள்ளியாலும், செப்பாலும் செய்த நாணயங்களே புழக்கத்திலிருந்தன. இக்காசுகள் கெட்டியான நூலால் பின்னப்பட்ட ஆயிரக்கணக்கான பைகளில் வைக்க்ப்பட்டன. அவற்றை எண்ணுவதற்கு மிகவும் நேரம் பிடிக்கும் என்பதால் அவை எடை போடப்பட்டு 100 ரூபாய் கொள்ளும் பைகளில் அடைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கில் பணம் புரண்ட ஒரு இடத்தில், ரூபாய் குறைந்த புகார்கள் எழவில்லை. கோவிந்த அய்யரின் நெர்மை அவரிடம் மட்டுமல்லாது, அவரைச் சார்ந்தவர்களையும் தொற்றிக் கொண்டது. அவரின் சூழலில் நம்பகத்தன்மை பரவிய காரணத்தால், வியாபாரிகள் அவரை முழுதும் நம்பினர். அவர் ஒரு காகிதத்தில் குறிப்பு எழுதிக் கொடுத்தால், பாண்டிச்சேரியில் இருந்த நண்பர்களிடமிருந்து பல பத்தாயிரம் ரூபாய்கள் புரட்டி விட முடியும் நிலை இருந்தது.
இத்தனைக்கும் கோவிந்த அய்யர் எளிமையான தோற்றமும், பழக்கவழக்கங்களுமே கொண்டிருந்தார். முழங்கால் வரை தொங்கும் நான்கு முழ வேட்டி, தோளில் ஒரு துண்டு. செருப்பும் அணியாதவர். வங்கி நிர்வாகிகளையோ, வெளி நாட்டவரையோ பார்க்கச் செல்லும் சமயங்களில் மேலங்கியும், செருப்பும் அணிவார். கிராமத்துத் தெருக்கள், கடைத்தெருக்களில் அவர் சென்றால் மனிதர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். வியாபாரத்துக்குப் பாண்டிச்சேரி செல்கையில், வியாபாரிகள் நின்ற வண்ணமே அவரோடு பேசினர். அமரச் சொல்லி அவர் கேட்டுக் கொண்ட போதும் அவர்கள் உட்கார மறுத்தனர்.
அரச குடும்பங்கள் அவரைக் கவனித்தன. திருவாங்கூர் மஹாராஜா 1882 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரிக்கு விஜயம் செய்தபோது, கோவிந்த அய்யர் அவருக்கு வரவேற்பு அளித்திருந்தார். திருவாங்கூர் அரச குடும்பாத்தைச் சேர்ந்த பிரபல ஓவியராக அறியப்பட்டிருந்த ராஜா ரவிவர்மா அப்போது உடனிருந்தார். அவர் தன் மூன்று ஓவியங்களை, லட்சுமி, சரஸ்வதி, விஸ்வாமித்திரர்-மேனகை ஆகியவற்றை, கோவிந்த அய்யருக்குப் பரிசாக அனுப்பினார். அவை வளவனூரில் உள்ள கோவிந்த அய்யரின் குடும்பத்தினரிடம் இப்போதும் உள்ளனவாம். காசி சென்று திரும்பிய மஹாராஜா கோவிந்த அய்யருடன் ஒரு வாரம் தங்கினார். பிற்பாடு கோவிந்த அய்யர் திருவாங்கூர் சென்றபோது அவருக்கு வரவேற்பும், மிக்க மரியாதையும், பீதாம்பரமும் கொடுக்கப்பட்டன.

George_Washington_Carver_Inventions
ஜ்யார்ஜ் வாஷிங்டன் கார்வர்

வேர்க்கடலையை ஒரு பணப்பயிராக்க கோவிந்த அய்யர் மேற்கொண்ட நடவடிக்கைகள் நிகழ்ந்த அதே காலத்தில், 1870 முதல் 1905 வரை, அமெரிக்காவில் இதே வேர்க்கடலையைப் பிரபலமாக்க ஒரு மேதை பெரும் முயற்சிகள் மேற்கொண்டிருந்தார். ஜ்யார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்ற, கருப்பினத்தவரான ஒரு அறிவியலாளரே அந்தப் பெரும் முயற்சியைச் செய்து பல சாதனைகள் நிகழ்த்தியவரும். இன்று அமெரிக்க உணவு வகைகளில் தவிர்க்கவொண்ணாத ஒரு அம்சமாகத் திகழும் கடலை வெண்ணெய் எனப்படும் பொருள் (Peanut butter) கார்வரின் கண்டு பிடிப்பு. விவசாய வேதியல் படித்திருந்த கார்வர், தன் முயற்சியால், பெரும் இடர்களிடையே, ஒரு ஆய்வுக் கூடத்தை நிறுவியவர். 1890 இல் பூச்சித் தொல்லையால், பருத்திச் சாகுபடியாளருக்குப் பெரும் நஷ்டம் நாடெங்கும் ஏற்பட்ட வேளையில், கார்வர் வேர்க்கடலையை அறிமுகப்படுத்தினார். அக்கடலைக்குச் சந்தையில் தேவை ஏதும் இல்லாமல் போகவும், கார்வர் பல உப பொருட்களைக் கண்டு பிடித்து வேர்க்கடலையைச் சந்தையில் பிரபலமாக்கினார்.
1915க்குள் எண்ணெய், கடலைப்பால், மை-சாயங்கள், பூட் பாலிஷ், ஷேவிங் க்ரீம், கடலை வெண்ணெய் ஆகியன அவர் கண்டுபிடிப்புகளில் சில. 1921 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பாராளுமன்றக் கமிட்டியின் முன்பு தோன்றி, வேர்க்கடலைக்குத் தீர்வை வழங்கும் விஷயத்தில் பாதுகாப்பு அளிக்கக் கோரினார். மேலும் சாயங்கள், கால்நடைத் தீவனம், க்வினீன் என்னும் மலேரியா மருந்துக்கு (Quinine) மாற்று, மீன்களுக்கு உணவு, முகப் பூச்சுக்கான க்ரீம், பால் பொடி போன்ற பல பொருட்களும் கடலைப் பருப்பின் மூலம் கிட்டுவதை அக்கமிட்டி உறுப்பினருக்கு அவர் காட்டினார். அவை அனைத்தும் கார்வரின் ஆய்வு மையத்தின் விளைபொருட்கள். கமிட்டியின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த கார்வர், இவை அனைத்தும் கடவுளின் சொற்களில் இருந்தே அவருக்குக் கிட்டியதாகச் சொல்கிறார். ‘பார், பூமியில் விதைகளை விளைக்கும் ஒவ்வொரு செடியையும், மரத்தையும் நான் படைத்திருக்கிறேன் – அவை உனக்குப் பயனுள்ளதாக இருக்கும்.’ என்பதே அந்தச் சொற்கள். (விவிலியத்திலிருந்து.)
இன்று அமெரிக்காவில் லட்சக்கணக்கான டன்களில் கடலை உற்பத்தியாகிறது. பெரும் ஊதியத்துக்கு வேலை வாய்ப்புகள் கிட்டியபோது கார்வர் அவற்றை ஏற்கவில்லை. அவர் ஒரு ஆசிரியராக , துறவி வாழ்க்கையை வாழ்ந்து எளிமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். இறுதியில் தன் மொத்த சம்பாத்தியத்தை, சேமிப்பை அவர் தன் ஆய்வு மையத்துக்கே எழுதி வைத்தார்.
கோவிந்த அய்யரின் வாழ்வும் கார்வரின் வாழ்வும் ஒத்த குணங்கள் கொண்டிருப்பதை நாம் எளிதே கவனிக்கலாம். வறுமை, அறியாமை பீடித்த தம் நாட்டில், வளக்குறைவின் இடையே விடாமுயற்சியால் கோவிந்த அய்யர் புதுத் துவக்கத்தை மக்களுக்குச் சாத்தியமாக்கி, அவர்களின் வாழ்வில் மலர்ச்சியைக் கொணர்கிறார். கார்வரோ, கருப்பின மக்களுக்கு மனித உரிமைகளோ, முன்னேற்றத்துக்கான சந்தர்ப்பங்களோ இல்லாத சூழ்நிலையில் இடைவிடாத முயற்சியால் பெரும் சாதனைகளை நிகழ்த்தினார், அம்மக்களுக்குப் பெரும் திறப்புகளை உருவாக்குகிறார். “இயற்கை கடவுளின் பேச்சுகளைச் சுமந்து வரும் எல்லையற்ற ரேடியோ அலைவரிசை போன்றது. சரியான அலைவரிசைக்கு நம் ரேடியோ வாங்கிக் கருவியைத் திருப்பினால் நாம் அச்செய்திகளைக் கேட்கலாம்.” என்று கார்வர் சொல்லுவார்.
கோவிந்த அய்யரின் சாதனைகள் 1905 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக முடிவுக்கு வந்தன. அவரது 54 ஆம் வயதில் சர்க்கரை வியாதியால் ஏற்பட்ட கட்டிகளால் அவர் உயிரிழந்தார். இறக்குமுன் அவர் தயாரித்த உயில்படி, அவர் சொத்தில் பாதி உறவினர்கள், நண்பர்கள், மேலும் பணியாளர்களிடையே பகிரப்பட்டது. இன்னொரு 30 சதவீதம் தர்ம காரியங்களுக்குக் கொடுக்கப்பட்டது. 20 சதவீதமே அவருடைய மகனுக்குக் கிட்டியது. தன் குடும்பத்தைச் சார்ந்த யாராவது ரசாயனம், எண்ணெய் தொழில் நுட்பம் ஆகியனவற்றில் முறையான கல்வி பெற்று, வேர்க்கடலையின் பல விளைபொருட்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட வேண்டும் என்று அவர் விரும்பினார். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், ஷாம்பூ போன்றன ஐரோப்பாவில் தயாரிக்கப்படுவதாக அவர் கேட்டிருந்தார். அவர் இறந்த காலத்தில்தான், ஜல வாயுவைச் (ஹைட்ரஜன்) செலுத்தி, கடலை எண்ணெயைச் சுத்திகரிக்கும் தொழில் நுட்பம் தோன்றியது.
கோவிந்த அய்யரின் பேரப்பிள்ளைகளில் ஒருவர் எண்ணெய் சுத்திகரிப்புத் துறையோடு தொடர்பு கொண்டிருக்கிறார். பிரசித்தி பெற்ற எண்ணெய் சுத்திகரிப்புத் தொழில் வித்தகராக அவர் உள்ளார். இதைக் கோவிந்த அய்யர் முன்கூட்டி அறிய முடிந்திருந்தால் அவருக்கு எத்தனை மகிழ்ச்சி கிட்டியிருக்கும்?

oOo

மேற்படித் தகவல்:
இக்கட்டுரையில் வரும் சில புள்ளி விவரங்கள் கட்டுரை 20 வருடங்களுக்கு முந்தி மஞ்சரியில் வெளியானபோது சரியாக இருந்திருக்கலாம். 2006 ஆம் ஆண்டில் சீனாதான் உலகிலேயே அதிக வேர்க்கடலை விளைச்சல் கொண்ட நாடு. இந்தியா இரண்டாமிடத்தில்தான் உள்ளது. சீனாவும் இந்தியாவுமாக உலகின் வேர்க்கடலை விளைச்சலில் பாதிக்கு மேல் விளைத்தாலும், அவை உலக ஏற்றுமதிச் சந்தையில் 4% தான் அளிக்கின்றன என்று விக்கிபீடியா சொல்கிறது. அவற்றின் விளைச்சல் உள்நாட்டிலேயே பெரிதும் பயன்படுத்தப்பட்டு விடுகிறதால் இப்படி நேர்கிறது. அதிக விளைச்சல் தரும் ரகங்களும் இன்று மாறி விட்டன. கட்டுரையில் வரும் ஆஃப்ரிக்க ரகங்களை விடப் பல முன்னேறிய ரகக் கடலைகள் விளைக்கப்படுகின்றன.
குறிப்புகள்:

[1] திரு. எம். ஆர். ராஜகோபாலன் எழுதிப் பிரசுரித்த ‘தகவல் சுரங்கம்’ என்கிற புத்தகத்தின் முதல் அத்தியாயம் வளவனூர் கோவிந்த அய்யரின் சாதனைகள் பற்றியது. இக்கட்டுரையை மீள் பிரசுரம் செய்ய அனுமதி கொடுத்த திரு. ராஜகோபாலனுக்குச் சொல்வனம் நன்றி தெரிவிக்கிறது.

புத்தக விபரம்:
தகவல் சுரங்கம்’எம் ஆர் ராஜகோபாலன், 2009; தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை. (என் சி பி எச் கடைகளில் கிட்டும்).

ரூ. 45 என்று என்னிடம் உள்ள பக்கங்களில் குறிக்கப்பட்டுள்ளது. இன்று விலை மாறி இருக்கலாம்.

[2] இவ்விவரங்கள் திரு. ஆர். எஸ். நாராயணன் எழுதிய ‘எண்ணை வித்துக்கள் ‘ என்ற புத்தகத்தில் கிட்டுகின்றன.

0 Replies to “கடலை உருண்டையும் கஞ்சித் தொட்டியும்”

 1. என்னுடைய ஊருக்கு இப்படி ஒரு வரலாறு இருப்பதும் இவ்வூரில் இப்படி ஒரு உன்னதாமான மனிதர் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் எனக்கு தெரியப்படுத்திய கட்டுரையாளருக்கு மிகவும் நன்றி.ஒருமுறை பாமக நடத்திய ஒருவார சாலை மறியலின்போது ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் கிட்டதட்ட நான்கு நாட்கள் வளவனூரில் தங்க நேர்ந்தது. அந்த நான்கு நாட்களும் வளவனூர் மக்கள் தெருவுக்கு தெரு உணவு சமைத்து இலவசமாக அவர்களுக்கு வழங்கினர். டீக்கடைகள் விலைகளை ஏற்றாமல் விற்பனை செய்தன. கோவிந்தையர் போன்ற மனிதர் வாழ்ந்த ஊர் என்பதை அவ்வூர் மக்கள் அப்போது நிரூபித்தனர்.
  த.துரைவேல்

 2. ஆற்காடு மாவட்டம் பற்றிய எனது எண்ணம் தவறு என வருந்துகிறேன்.எவ்வளவு உன்னதமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.
  அதேபோல் எனது தாய் நாட்டை பற்றிய பார்வையும் மாறியுள்ளது.நான் தற்போதுதான் சரியான அலைவரிசையை தேர்தெடுதுள்ளேன் என புரிகிறது.
  இந்த கட்டுரைக்கு உழைத்திருக்கும் அனைவருக்கும் நன்றி.
  ஐயப்பன்

 3. நிலக்கடலை அல்லது வேர்க்கடலைக்கு மணிலாக் கொட்டை என்ற பெயரும் உண்டுதானே? மணிலாவில் இருந்து வந்திருக்கலாம் அல்லவா?
  அருமையான கட்டுரை. தொழில் முனைவோரின் முன்னோடி கோவிந்த ஐயர்.
  காந்திஜியின் தர்மகர்த்தா முறையின் பிரத்யட்ச எடுத்துக்காட்டு. மிக நல்ல உபயோகமான கட்டுரை

 4. இந்தக் கட்டுரையின் glorified வார்த்தைகளை நீக்கிவிட்டால் கட்டுரையின் நீளம் பத்தில் ஒரு பங்காகக் குறைந்து விடக்கூடும். நேரில் நின்று பார்த்தது போல் எழுதும் இந்தத் தினத்தந்தி (சதக்..சதக்..)ரகக் கட்டுரைகள்தான் அபுனைவு எழுத்துக்கெல்லாம் சாவு மணி.
  இந்த இரண்டில் ஒன்றுக்கு ஆதாரம் கண்டுபிடிப்பது மிக எளிது, கண்டுபிடித்தால், அது இந்த கட்டுரையின் உண்மைக்கு (Integrity ) உதவலாம்.
  பெண்ணாறு ஆற்றையும், வளவனூர் ஏரியையும் இணைக்கும் ஒரு வாய்க்காலை வெட்டும் திட்டத்தில் கோவிந்த அய்யர் ஆற்றிய பணி
  பாண்டிச்சேரிவாசிகளான ஃப்ரெஞ்சுக்காரர்கள் அவரது நிவாரணப் பணியால் கவரப்பட்டு 15,000 மூட்டைகள் கடலைப் பிண்ணாக்கை அவரிடம் ஒப்படைத்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.