ஆற்று வழி
அமராவதி பாயும் அழகியதோர் சிற்றூராம்
சிற்றூரின் ஆற்றுவழி சிந்தனைக்கு ஊற்றுவழி.
அடைத்திருக்கும் வேலியுள்ளே தழைத்திருக்கும்
வெற்றிலையோ
மடைதிறக்க அருவியென வயல் நிறைந்து நீர் நிற்கும்
நீரோடு சேர்த்து சிறு மீன் வந்து துள்ளிவிழும்
துள்ளிவிழும் மீன் பிடிக்க தூரத்தே நாரை வரும்.
வெண்கழுத்துப் பொன் கருடன் வானத்தில் வட்டமிடும்.
சங்கெனவே வெண்கொக்கு தவமிருக்கும் நீர்த் தடத்தில்
முள்முருங்கையின் கிளையில் மாணிக்கம் பூத்திருக்கும்
கள்ளக் கரும் காகம் கண்சாய்த்துத் தேன் குடிக்கும்
கிள்ளை அருகில் வரக் காகம் அதைத் துரத்தும்
முள்ளுக் கிடைத்தாழை மஞ்சள்குளித்திருக்கும்
படர்ந்த செடியினிலே பச்சரிசி போல் அரும்பு
அடர்ந்த இலைகளிலே அழகழகாய்ச் செம்புள்ளி
மூக்குத்தி போன்ற மலர் மலர்ந்து மணம்வீசும்
தூக்கத்திலே கனவாய்த் தோற்றம் அளித்திருக்கும்
தங்கரளிப் பூ சிதறி தரைமுழுதும் பாய் விரிக்கும்
செங்கரும்பு பூத்திருக்கும் சாமரம்போல் ஆடிநிற்கும்
தென்னை பிளந்தளிக்கும் தந்தத்தின் பூச்சரங்கள்
அன்னையின் அன்பெனவே அமுதூட்டும் செவ்விளநீர்
பாறையிடை நாணல் பச்சைக்கொடி காட்டும்
கூரை கவிந்ததெனக் கார்முகில்கள் கூடிவரும்
ஆடிப்பெருக்கெடுத்து அழகு நதி பாய்ந்து வரும்
ஓடிவரும்செங்குழம்பில் உருண்டு வரும் பெருமரங்கள்
ஆடிப்பெருக்கினிலே ஆற்றுவழிக் காட்சியிலே
மோடிக்குப் பாம்பெனவே மனம் நிறைந்து தனை
மறக்கும்.
(1971)
oOo
கிராமம்
சந்துகள்; சிறிய வீடு
செந்நிற சீமைஓடு
பொந்துகள் புதர்கள் மண்டி
பூமியில் குப்பைகூளம்
வந்திடும் கோழி,சேவல் -தன்
மக்களின் கூட்டத்தோடு.
கொந்திடும் புழுதி தன்னை
கொத்திடும் புழுக்கள்தன்னை
பன்றிகள் எங்கும் சுற்றும்
பாதையில் முட்கள் குத்தும்
கன்றிடும் பாதம் சின்னக்
கற்களின் இடறலாலே
சென்றிடும் ஊர் சனங்கள்
தோட்டத்தில் வேலைசெய்ய
நின்றிடும் கிராமம் அந்தோ
நிசப்தத்தின் பிடியில் சிக்கி
போரிடப் பொழுது உண்டு
பிடித்து நாம் தள்ளினாலும்
யாருக்குத் திறனுண்டென்று
அது நகராது நிற்கும்
பேருக்கு எஞ்சியுள்ளோர்
பேசிட வந்தால் அந்தப்
போருக்கு முடிவுமில்லை
அப்புலம்பலில் பொருளுமில்லை
சினைக்கெனப் பசுவின் சப்தத்
தொடர் ஒரு சுருதி கூட்டும்
பனைக்கரப் பசும் விரல்கள்
வாழ்வெனும் யாழை மீட்டும்
தினைக்கதிர் தலையசைக்கும்
சாரியாய்த் தென்னை நிற்கும்
எனக்கொரு பொழுதுபோக்காய்
இவை சிலநாள் இருக்கும்.
(1971)
oOo
முதுமை
இது என்ன கொடுமை
இதயத்தில் வெறுமை
எதிலும் ஒட்டாத ஓர்
ஏமாற்றம் பகைமை
மதியாத உலகத்தில்
வாழ்ந்திடும் சிறுமை
மனம்விட்டுப் பேச ஓர்
துணை இல்லா முதுமை
பக்கத்தில், தியானத்தில்
துலைத்திடும் நேரம்
சொற்பத்தில் மனமது
கலைத்திடும் கோரம்
ஏக்கத்தில் இதயத்தில்
வலிவந்து சேரும்
இருப்பது எதற்கென்று
சலிப்பாக மாறும்.
(2008)
oOo
இளம் வெயில்
(வாஜ் பேயின் கவிதைத் தொகுப்பிலிருந்து)
இளம் வெயில் காலையிலே
இலைகளிலே பனித்துளிகள்;
பார்த்திருக்கும்போதே அப்
பனித்துளிகள் தான் மறைதல்.
வரும் பரிதியின் ஒளியால்
வனமெங்கும் பொன் மெருகு;
பொன் மெருகை வணங்கிடவா?
பனித்துளியைத் தேடிடவா?
தினகரனைப்போல அந்தப்
பனித்துளியும் உண்மையதே
சடுதி மறையும் துளிபோல்
மனித உயிரும் மறையும்;
என்றாலும், நான் நிதமும்
இந்த உலகின் எழில்கள்
நன்றாக அனுபவிப்பேன்
நாசமுறும் நாள் வரையில்.
கணத்தில் மறை பனித்துளியும்
கதிரவன்போல் நிஜமெனினும்
பருவகாலம் இல்லையேல்
பனித்துளிகள் வருதலில்லை.
(தமிழாக்கம்-பூரணி)