காலை 6:30 மணி வாக்கில் பஸ் பாண்டிச்சேரி வந்தடைந்தது. பஸ் ஸ்டாண்டினுள் நுழைந்து கோரிமேடு போகும் டவுன் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். மெல்ல ஊர்ந்து சென்று சாலையோரத்திலிருந்த ஒரு கோயில் முன் நின்றது பஸ். முதல் சவாரி, ஆகவே கண்டக்டர், டிரைவர் சீட்டின் முன்னே ஒரு கற்பூரத்தை வைத்து (பிளாஸ்டிக் உறையை பிரிக்காமலேயே) கொளுத்தி, அதில் ஊதுவத்தியை பற்ற வைத்தார். பிளாஸ்டிக் எரியும் நாற்றம் தான் அதிகம் வந்தது. கோயிலுக்குச் சென்று உண்டியலில் காசை போட்டு விட்டு வந்ததும் வண்டி கிளம்பியது. அக்கோயிலில் முன்னே வேப்பமரமும், அரச மரமும் இணைந்து வளர்ந்திருந்தன.
பாண்டியிலிருந்து கோரிமேடும் சுமார் 5 கி.மீ. கோரிமேடு செல்ல 4 ரூபாய் 50 பைசா டிக்கெட். பத்து ரூபாய் கொடுத்ததும் மீதி 5 ரூபாய் கொடுத்தார், 50 பைசா கொடுக்கவில்லை. டவுன் பஸ் ஆதலால் வண்டி தேர் போல மெதுவாக ஊர்ந்து சென்றது. யாராவது கை காட்டினால் உடனே நிறுத்தப்பட்டது. காலை நேரமாதலால் அப்படி ஒன்றும் கூட்டமில்லை. முத்தையால் பேட்டை, லாஸ் பேட்டை என வீதி வீதியாக வலம் வந்து கடைசியில் கோரிமேடு வந்தடைந்தது. ஜிப்மருக்கு (JIPMER) எதிரில் வண்டி நின்றது. வரும் வழியில், பஸ்ஸில் சினிமாப் பாட்டை ரசித்துக்கொண்டே சாலையோரத்தை வேடிக்கை பார்த்து வந்தேன். உடனடியாக என் கண்ணில் பட்டது வழியெங்கிலும் இருந்த மரங்களே. சாலையோரத்திலும், சாலையின் நடுவில் உள்ள திட்டிலும் வித விதமான மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டிருந்தன. சன்னலோர இருக்கையில் அமர்ந்து எத்தனை வகையான மரங்கள் இருக்கின்றன என்பதை பட்டியலிட ஆரம்பித்தேன்.
பூவரசு, மரமல்லிகை, மயில்கொன்றை, நுணா (மஞ்சணத்தி), மகிழ மரம், இலவம்பஞ்சு மரம், நெட்டிலிங்கம், வாதாமரம் (நாட்டு வாதாம்), இயல்வாகை, பனை, தென்னை, ஏழிலைப்பாலை, வேப்பமரம், அரசமரம், யூகலிப்டஸ், ஆஸ்திரேலிய அக்கேசியா, தூங்குமூஞ்சி மரம், ஆலமரம், வாதமடக்கி, என அந்த 5 கீ.மீ தூரத்தில் இத்தனை வகை மரங்கள். ஜிப்மருக்கு அருகில் சாலையின் இருபுறமும் ஒரு ஆலமரம் வளர்ந்து ஒரு நுழைவாயிலைப்போல அழகாகக் காட்சி தந்தது. ஜிப்மருக்கு முன்னே உள்ள ஒரு வட்ட வடிவப் பாத்தியில் கொன்றை மரம் வைக்கப்பட்டிருந்தது. இப்போது சுமார் 2 அடி உயரம் இருந்தது. வளர்ந்து பெரிதானவுடன் பூப்பூக்கத் தொடங்கினால் கோடைகாலத்தில் அவ்வழியே போவோர் அழகிய மஞ்சள் கொன்றைப் பூக்களைக் காணலாம்.
பாண்டிசேரிக்குக் கடைசியாக நான் வந்தது 2012ம் ஆண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில். தானே புயல் தாக்கியிருந்த சமயம். அடித்த புயல் காற்றில் சாலையெங்கும் பல மரங்கள் கீழே விழுந்து கிடந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தும், ஊரெங்கும் குப்பையாகவும் இருந்தது. அப்போது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள ஹாஸ்டலில் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். அங்கு மின்வெட்டு இரவில் நரி ஊளையிட்டதைக் கேட்டது மறக்க முடியாத ஒரு நிகழ்வு. இதை நரிகளைப்பற்றிய ஒரு கட்டுரையில் பதிவு செய்திருந்தேன். அதைப் படித்துவிட்டு “தமிழ்நாட்டுப் பறவைகள்” நூலை எழுதிய முனைவர் க. ரத்னம், எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் புதுச்சேரியில் அடித்த புயலைப் பற்றி பாரதியார் எழுதிய கட்டுரையை, தானே புயல் தாக்கிய சமயத்தில் எந்தப் பத்திரிக்கையும் நினைவு கூறவில்லை என குறிப்பிட்டிருந்தார். மகாகவி பாரதியார் கட்டுரைகள் நூலை புரட்டியபோது 1916ம் ஆண்டு நவம்பர் மாதம் சுதேசமித்திரன் இதழில் எழுதிய “புதுச்சேரியில் புயற் காற்று” எனும் தலைப்பில் அப்போது வீசிய புயல்காற்றினைப் பற்றி விவரித்திருந்தார். அதில் ஓரிடத்தில் தெருவெங்கும் மரங்கள் ஒடிந்து கிடந்ததையும், தென்னையும், பூவரசும் அதில் அதிகம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தானே புயல் வீசி ஒன்றரை ஆண்டுகள் கழிந்து இங்கு நண்பரின் திருமணத்திற்காக வந்திருந்தேன். அப்படியே கோரிமேட்டில் வசிக்கும் சித்தப்பாவின் வீட்டிற்கும் சென்று வந்தேன். அவரது வீட்டைச்சுற்றி பலா (அதில் காகம் கூடு கட்டியிருந்தது), மா, அரளி, தென்னை எனப் பல மரங்கள் இருந்தாலும் என் கவனத்தை ஈர்த்தது பவழ மல்லிகை. தஞ்சாவூரில் ஐ.கே.எஸ் பள்ளிக்கூடத்தில் 8ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது நடராஜ் வாத்தியாரிடம் கணக்கு டியூஷன் (இலவசமாகத்தான்) போகும் போது அவர் வீட்டின் வாசலில் இந்த மரத்தைக் கண்டதுண்டு. அப்போதெல்லாம் அந்த வாசனை எனக்கு அறவே பிடிக்காது. ஆனால் இப்போது அப்படியெல்லாம் தோன்றுவதில்லை.
பவழ மல்லியை ஒரு பெரிய புதர்த் தாவரம் என்று சொல்லலாம். இரவில் பூக்கும், காலையில் மரத்தினடியில் பார்த்தால் அழகிய சிவப்பு நிற காம்புகளைக் கொண்ட வெள்ளைப் பூக்கள் கொட்டிக் கிடக்கும். பாரிஜாதம் என சமஸ்கிருதத்தில் அறியப்படுகிறது. இதன் அறிவியல் (இலத்தீன்) பெயர் Nyctanthes arbor-tristis. அதாவது Nyctanthes என்றால் இரவு மலர், arbor-tristis என்றால் சோகமான மரம். ஏன் இப்படி பெயரிட்டார்கள் எனத் தெரியவில்லை. இதன் ஆங்கிலப் பொதுப் பெயர் Night flowering Jasmine. இதன் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் காய் ஆரம்பத்தில் பச்சையாகவும் பின் அடர் பழுப்பாகவும் இருக்கும். இது ஒரு இயல் தாவரம் (அதாவது இந்தியப் பகுதிகளில் இயற்கையாகவே வளர்வது). மேற்கு வங்கத்தின் மாநில மலர் இது. தென் கிழக்காசிய நாடுகளிலும் தென்படுகிறது. இலையுதிர் காடுகளில் வளரும்.
இந்த மரத்தின் பல பாகங்களுக்கு மருத்துவ குணங்களுண்டு.[1] இந்த மரத்தைப் பற்றிய பல புராணக் கதைகளும் உள்ளன. எனினும் அதையெல்லாம் நான் இங்கே விளக்கப் போவதில்லை. ஆனால் இம்மரத்தைப்பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை அண்மையில் அறிந்து கொண்டேன். திரிபுரா மாநிலத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் அங்குள்ள கிராம மக்கள் பவழமல்லி மரம் பூக்கும் விதத்தை வைத்தே மழை வருவதை முன்கூட்டியே கணிக்கிறார்கள் என்பது தான் அது.
வேப்ப மரம் பூப்பதை வைத்து அது சித்திரை மாதமென்றும், அது கோடை காலமென்றும் சொல்கிறோம். அதே போல திரிபுராவில் உள்ள கிராம மக்கள் குறிப்பாக விவசாயம் செய்பவர்கள் ஒரு பருவத்தில் அதிக மழை வருமா, ஓரளவிற்கு மழை வருமா, அல்லது பருவ மழை பொய்த்துவிடுமா என்பதை பவழ மல்லி பூக்கும் விதத்தை வைத்தே சொல்லிவிடுகின்றனர். இதை உறுதி செய்ய ஆராய்ச்சியாளர்கள் 2002லிருந்து 2007 வரை 270 பழவ மல்லி மரங்களின் பூக்கும் விதத்தை அவதானித்து அதை ஆவணப்படுத்தினர். அதே கால கட்டத்தில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் (Indian Meteorological Department) வெளியிடும் வானிலை அறிக்கையையும் சேகரித்தனர். பின்பு பல கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள வயதான பெரியவர்களிடம் அவர்கள் ஊரிலுள்ள பவழ மல்லி மரங்கள் பூக்கும் விதத்தை வைத்து அதிக மழை வருமா, அல்லது குறைவாக மழை பொழியுமா என கேட்டறிந்து அதையும் பதிவு செய்தனர்.
இந்த ஆராய்ச்சியின் தரவுகள் ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. திரிபுராவில் பவழ மல்லி ஆண்டு தோறும் பூக்கும். எனினும் ஒரு கொத்தில் அதிக பூக்களும், அதன் மொட்டுகள் பெரிதாகவும், இலைகள் மிகவும் சொரசொரப்பாகவும் இருந்தால் கன மழை பெய்யும் எனவும், ஜூன் மாதத்தில் பூத்து இலைகள் சற்று வழவழப்பாகவும் (தூவிகள் அற்றும்), பூவின் காம்பு ஆழ்ந்த ஆரஞ்சு நிறத்திலும் இருந்தால் மிதமான மழை பொழியும் என்பதையும் (சுமார் 80% துல்லியத்தில்) அங்குள்ள மக்கள் கணித்தனர். இவர்களது கணிப்பையும் அதாவது மரபு அறிவையும், வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இரண்டும் ஏறக்குறைய ஒன்றாகவே இருந்தது தெரிய வந்தது.
Indian Journal of Traditional Knowledge எனும் ஆய்விதழில் இந்த கட்டுரை வெளிவந்துள்ளது.
காலங்காலமாக ஒரு சமூகத்தில் இருந்து வரும் மரபு அறிவை (Traditional Knowledge) ஆவணப்படுத்தும் அவசியத்தை இதன்மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
குறிப்பெடுக்க உதவிய நூல்கள், கட்டுரைகள்
- ப. ஜெகநாதன். (2012). நம் முகத்தில் நரி முழித்தால்…புதிய தலைமுறை, 20 செப்டம்பர், பக்கங்கள் 34-35.
- மகாகவி பாரதியார் கட்டுரைகள். (2002). தொகுப்பாசியர்கள் – ஜெயகாந்தன் & சிற்பி பாலசுப்பிரமணியம். சாகித்திய அகாதெமி, புதுதில்லி.
- Krishen, P (2006). Trees of Delhi-A field guide. Dorling Kindersley (India) Pvt. Ltd.
- Gledhill, D. (2008). The names of plants. Cambridge University Press. New York.
- Acharya, S. (2011). Prediction of rainfall variation through flowering phenology of night-flowering jasmine (Nyctanthes arbour-tristis L.; Verbenaceae) in Tripura. Indian Journal of Traditional Knowledge. Vol. 10 (1). Pp 96-101.
- [1] http://www.tjdb.org/123456789/
14383/1/IJTK%2011(3)%20427- 435.pdf
Please correct…கூரவில்லை…It is a glaring mistake.