நேர்காணல் – சங்கீதா ஸ்ரீராமுடன்

Sangeetha

`பசுமைப் புரட்சியின் கதை` நூல் எழுதிய சங்கீதா ஸ்ரீராம், இன்று தமிழகத்தில் இயங்கி வரும் கவனிக்கத்தக்க களப்பணியாளர்களில் ஒருவர். சில மாதங்களுக்கு முன்னர் இவரை ஒரு நிகழ்வில் நேரில் சந்தித்து உரையாடியது முதல் இவருடைய ஆங்கில வலைப்பூவைத் தொடர்ந்து வருகிறேன். குழந்தை வளர்ப்பு சார்ந்து சில நுணுக்கமான மனப் போக்குகளைப் பதிவு செய்து வருகிறார். அடையாறில் நண்பர்களுடன் இணைந்து இயற்கை வேளாண்மை விளைப் பொருட்களுக்கான அங்காடி ஒன்றையும் நடத்தி வருகிறார். திருப்பூரின் ’அறம்’ அறக்கட்டளை நிகழ்வில் அவர் மாற்றுக் கல்வி குறித்து ஆற்றிய உரை வேறு பல தொடர் சிந்தனைகளை எழுப்பின. கல்வி, சூழலியல் சார்ந்து ஒலிக்கும் மாற்றுக் குரல்களைக் கவனப்படுத்த வேண்டியது காலத்தின் அவசியம். சில கேள்விகளைத் தயாரித்து அவருக்கு அனுப்பினேன், ஆனால் நேரில் உரையாடுவது போல் அமையாது எனத் தோன்றியதால் சென்னை வரும்போது அவரைச் சந்திக்கச் சென்றேன்.

இயற்கை வேளாண்மை பற்றிச் சொற்ப கேள்வி ஞானம் மட்டுமே எனக்கு உண்டு. ஃபுக்குவோக்கா வாசித்தும் நம்மாழ்வார் அவர்களுடன் உரையாடியும் நானொரு மன சித்திரத்தை உருவாக்கிக் கொண்டேன். கல்வி முறைகளைப் பற்றிப் பொதுவாகச் சொல்லப்படும் குற்றசாட்டுகளில் எனக்கும் ஏற்புண்டு என்றாலும், இன்றைய இந்திய கல்வி முறையைக் குறை சொல்வது மோஸ்தராகிப் போன இக்காலத்தில், மெட்ரிக் பள்ளி தாளாளர் கூட மேடை ஏறினால் கல்வி திட்டத்தை வசைபாடும் வேடிக்கை நிகழ்வுகளைக் கண்டு களித்து வருகிறோம். ஆகவே மாற்றுக் கல்வி குறித்தான சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளவே கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. திருவான்மியூரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் அவரைச் சந்திக்கச் சென்றேன். சங்கீதா அவரது களப்பணியாள நண்பர் நவீன் ஆகியவர்களுடன் சம்பிரதாய நல விசாரிப்புகளுக்குப் பிறகு மெல்ல உரையாடல் தொடங்கியது.

நவீன் அடிப்படையில் வேலூரைச் சேர்ந்த ஒரு மெக்கானிக்கல் பொறியாளர். பதிமூன்று வருடங்களுக்கு முன்னர், தன் அகத்தேடலின் விழைவாகப் பணியைத் துறந்து தீவிரமான தேடலில் இறங்கினார். காந்தியின் மீது அபாரமான நம்பிக்கை கொண்டவர். உரையாடல் இயல்பாகச் செல்ல வேண்டும் எனும் காரணத்தினால், நான் குறிப்புகள் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. உரையாடல் மூன்று மணிநேரங்களுக்கு மேல் நீடித்ததால் ஒலிப்பதிவு செய்வதும் வசதிப்படவில்லை. ஆகவே வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பிரதி செய்யவில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நினைவில் எஞ்சுவதைக் கொண்டு மீளுருவாக்கம் செய்ய முயல்கிறேன்.

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் உங்கள் அறிவியக்கத்தைப் பற்றிக் கொஞ்சம் அறிமுகம் செய்யுங்கள்…

சங்கீதா- நான் சென்னையை மையமாகக் கொண்டியங்கும் சில குழுக்களில் பங்காற்றி வருகிறேன். இயற்கை வேளாண்மை, தற்சார்பு வாழ்க்கை சார்ந்த எனது ஆர்வம் காரணமாகச் சில அமைப்புகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். இரண்டாவதாக எனது ஆன்மத் தேடலின் பகுதியாக ஆன்மீக வாழ்வு சார்ந்த, ஹீலிங் சார்ந்து சில குழுக்களில் ஈடுபாடு உண்டு. அடுத்ததாக வீட்டுக் கல்வி சார்ந்த ஆர்வமும் உண்டு. வீட்டுத் தோட்டம் மற்றொரு ஆர்வம். எங்களில் சிலருக்கு இப்படி முழுமையான வாழ்க்கை வாழ வேண்டும் எனும் பெரும் ஆர்வம் உண்டு. இப்படி வெவ்வேறு குழுக்களாக இயங்குபவர்களை ஒருங்கிணைக்கும் பணியை எங்கள் சிறிய நண்பர் குழு முன்னெடுக்கிறது. பரஸ்பர அறிவுத்தளப் பரிமாற்றம் வழியாக எங்களை நாங்கள் விரிவு செய்துகொள்கிறோம்.

நல்லது, நீங்கள் வழக்கமான பள்ளிக் கல்விமுறையில் கல்வி கற்றவர் தான், முதன்முதலில் இந்தக் கல்வி முறையின் போதாமையை எப்போது உணர தொடங்கினீர்கள்?

சங்கீதா – தொடக்கத்திலிருந்தே எனக்குக் கல்வித் திட்டம் குறித்துச் சில அசௌகரியங்கள் இருந்ததை உணர முடிகிறது. நான் பத்தாம் வகுப்பில் பள்ளியளவில் இரண்டாமிடம் பெற்றிருந்தாலும் கூட என்னால் எனக்கு அவசியமற்றவையை மனப்பாடம் செய்ய இயலாது என முடிவெடுத்தேன், ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பைப் பதினோராம் வகுப்பில் தேர்வு செய்தேன். பின்னர் நுண்கலை பயின்றேன். அதன் பின்னர் நேரடியாகக் களப்பணி ஆற்ற வேண்டும் என முடிவெடுத்தேன். கல்வித்திட்டம் பற்றிய எனது விமர்சனத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் என்னால் தொகுத்து ஒரு வடிவமாக முன்வைக்க முடிந்தது.

கல்விமுறையின் மீதான விமர்சனம் என்பதை எல்லாம் இப்போது விளக்கிக்கொள்ள முடிகிறது.. ஆனால் அப்போது நடந்த சில நிகழ்வுகள் இன்னும் எனக்குப் பசுமையாக நினைவில் நிற்கின்றன.. அவை என்னை அமைதியிழக்கச் செய்தன…சிறுமியாக இருந்தபோதே இந்தக் கல்விமுறையின் அழுத்தங்களை ஓரளவிற்கு உணர்ந்தேன் என்று சொல்ல வேண்டும்.

அந்த நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ள இயலுமா?

சங்கீதா – நான் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது என்னுடைய பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்துகொண்டிருந்த ஒரு மாணவனை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவனைத் தினமும் காண்பேன். ஓரளவிற்கு எங்களுக்குள் நல்ல நட்பும் இருந்தது. திடிரென்று சில நாட்களுக்கு அவன் பள்ளிக்கு வரவில்லை. ஏன் எதற்கு எனத் தெரியவில்லை. கொஞ்ச நாட்களுக்குப் பின்னர் அவனுடைய பெற்றோர்களுடன் தலைமையாசிரியரைக் காண வந்தான். துல்லியமான காரணம் நினைவில்லை என்றாலும், தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தக் காரணத்தினால் ஒருநாள் அவன் கிணற்றில் குதித்துவிட்டான். பின்னர் அவனைக் காப்பாற்றி இப்போது அழைத்து வந்தார்கள். தலைமை ஆசிரியர் அவர் பங்குக்கு அவனைக் கடுமையாக வைதார். என்னால் இதை என் வீட்டில் கூடப் பகிர்ந்துகொள்ள இயலவில்லை. அந்நிகழ்வு என்னை அமைதியிழக்க செய்தது. ஒரு நான்காம் வகுப்பு மாணவனுக்குக் கிணற்றில் குதிக்கும் அளவிற்கு என்ன மாதிரியான மன அழுத்தம் இருக்க முடியும் ?

பகீர் என்று இருக்கிறது. இத்தகைய நிகழ்வுகளை நாம் ஒருபோதும் மறப்பதில்லை.

சங்கீதா– ஆம், எனக்கும் அப்படித்தான் இருந்தது. மற்றொரு நிகழ்வும் நினைவுக்கு வருகிறது, ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் போது எனது வகுப்புத் தோழி ஒருத்திக்குத் தமிழில் கவிதைகள் எழுத நன்றாக வரும். பெரும் ஆர்வமும் கூட அவளுக்கிருந்தது.   அப்போது எனக்கு அவள் எழுதிய கவிதைகளை வாசிக்கப் பிடித்திருந்தது. இன்று அவள் எங்கிருக்கிறாள், என்ன ஆனாள் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் அவள் கவிதைகள் எழுதி ஒவ்வொரு முறை ஆசிரியரிடம் பிடிபட்டபோதும், அது ஏதோ பெருங்குற்றமாகக் கருதப்பட்டது. அதற்காகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டாள்.  இவை எல்லாம் ஏன் என எனக்குப் புரியவே இல்லை..

நீங்கள் சொன்ன பிறகு எனக்கும் சில கதைகளை நினைவு கூற முடிகிறது. முக்கியமாக எங்களுடைய நெருங்கிய நண்பன் ஒருவன் நாங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது தூக்கிட்டு இறந்து போனான். அவனும் கூட ஒருவகையில் இந்தக் கல்விமுறைக்குப் பலியானவன் தான்.. ..இடை நிறுத்தத்திற்கு மன்னித்துகொள்ளவும்..யோசித்துப்பார்த்தால் ஒவ்வொருவரும் இப்படிச் சில கதைகளை நினைவுகூர இயலும்..உங்கள் கல்வி அனுபவங்களில் நீங்கள் இத்தகைய நெருக்கடிகளைச் சந்தித்ததுண்டா?

சங்கீதா – நான் பத்தாம் வகுப்பு வரை என் வகுப்பில் முதல் ஐந்து மதிப்பெண்களுக்குள் எடுப்பதே வழக்கம். பொதுத் தேர்விலும் நான் எனது பள்ளியளவில் இரண்டாமிடம் பிடித்தேன். ஆனால், பிறரைத் திருப்திப் படுத்தவும், என்னை நிறுவிக் கொள்ளவும் மட்டுமே நான் படித்தேனோ என்று தோன்றுகிறது. ஏன் இதை எல்லாம் படிக்கிறேன் என என்னையே நான் கேட்டுக்கொண்டதுண்டு.. செவ்வியல் இசையில் நல்ல தேர்ச்சி இருந்ததால், பிடிக்காத வகுப்புகளில் இருந்து நழுவி பாடல் பயிற்சி அது இது என்று இசை ஆசிரியரின் அறைக்குச் சென்றுவிடுவேன்..மேலும் என்றாவது எனக்குப் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் எனத் தோன்றும்போது தலைவலி, வயிற்றுவலி என்றெல்லாம் நடிக்கத் தேவையில்லை..வீட்டில் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்..சரி என்று விட்டுவிடுவார்கள்..

ஆச்சரியம் தான்..உங்கள் வீட்டில் நல்ல ஒத்துழைப்பு போல…

சங்கீதா– பெண்கள் அவ்வளவாக படிக்கத் தேவையில்லை. ரொம்பவும் படித்துவிட்டால் பிறகு இந்த சமுதாய அமைப்பு குலைந்து விடும் என்று நம்பிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என் குடும்பத்தினர். அதனால், என்மேல் பெரிய எதிர் பார்ப்பெல்லாம் கிடையாது. ஏதோ ஒர் அடிப்படையான பட்டப் படிப்பை முடித்துவிட்டால் திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று எண்ணியிருக்கக் கூடும். வீட்டைத்தாண்டி இசை வகுப்புக்குச் செல்வேன்.. அதற்கு மேல் வெளியில் கூட அவ்வளவாக எங்கும் சென்றது கிடையாது..

அந்த சூழலில் இருந்து இன்று நீங்கள் வெகுவாக விலகிப் பயணித்து இருக்கிறீர்கள்.. ஒருவகையில் அது இயல்பானதும் கூட..

சங்கீதா– ஆம், பதினோராம் வகுப்பிற்கும் பனிரெண்டாம் வகுப்பிற்கும் தையற்கலை பாடமாக உள்ள பள்ளியைத் தேடிப் பிடித்து நானே விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்பினேன்.. நல்ல மதிப்பெண்கள் எடுத்த காரணத்தினால் எனது ஆசிரியர்களும் பள்ளி முதல்வரும் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தினர். வேறு எந்த பிரிவுமே கிடைக்காதவர்கள் வேறு வழியின்றி எடுத்து படிக்கும் பிரிவாகவே தையற்கலை கருதப்பட்டது. எனது நிகழ் வாழ்விற்கு தொடர்பில்லாத, எனக்கு எவ்வித சுவாரசியத்தையும் அளிக்காத பாடங்களை படிப்பதில் காலம் கழிப்பதில்லை என உறுதியாக இருந்தேன். என் விருப்பப்படியே நாள் முழுக்க ஆடை வடிவமைத்து, துணி வெட்டி, தைப்பதில் இரண்டு வருடங்கள் கழிந்தன.

இன்றும் தையல் பழகுவதுண்டா?

சங்கீதா– அவ்வப்போது செய்வதுண்டு, முன்பு செய்த அளவுக்கு இல்லைதான், நீண்ட காலம் ஆகிவிட்டது..கொஞ்சம் பழகினால் பழைய வேகம் கைகூட கூடும்,

உங்கள் மாற்றுக் கல்வி பற்றி, நாம் கற்ற கல்வியில் உள்ள கற்பிதங்களை பற்றி, பொய்களைப் பற்றி எழுதி இருந்தீர்கள், அப்படித் தவறென்று நீங்கள் உணர்ந்து, பின்னர் மாற்றிக்கொண்ட சில கற்பிதங்களை நினைவு கூர இயலுமா? அல்லது பள்ளிக்காலத்தில் உங்கள் மீது திணிக்கப்பட்ட பொய்கள்.போலியான நம்பிக்கைகளைப் பற்றிச் சொல்ல இயலுமா?..

சங்கீதா- தாராளமாக. சிலவற்றைச் சொல்லலாம்..

மேற்கத்திய அறிவியலும் தொழில்நுட்பமும் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிடும்.
இந்தியா மிகுந்த பிற்போக்கான தேசம், இங்கு பிற்போக்கான பழக்கங்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன, ராஜா ராம் மோகன் ராய் வந்த பிறகே எல்லாம் மாறியது.
ஆங்கிலமும், கணக்கும், அறிவியலும் எனது தாய்மொழியை காட்டிலும், கலையைக் காட்டிலும் மேலானது, முக்கியமானது.

நான் எந்த பொறுப்பையும் ஏற்றுகொள்ள லாயக்கற்றவள். எப்போதுமே எவரேனும் என்னை ஐயத்துடன் மேற்பார்வை செய்துகொண்டே இருந்தாக வேண்டும். எனக்கிருக்கும் கேள்விகள் எவ்விதத்திலும் முக்கியமே அல்ல. எனது பாடப்புத்தகங்களில் இருக்கும் கேள்விகளே எல்லாவகையிலும் முக்கியம்.

வெற்றிகரமான கல்வி என்பது வெற்றிகரமான வாழக்கையை உறுதி செய்யும்.

தொல்வியற்றவர்கள் சென்று வாழும் இடத்தைத் தான் கிராமம் என அழைப்போம். வெற்றி பெற்றவர்கள் நகரத்தில் வாழ்கிறவர்கள்.

சிறுகுடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். நம் தேசத்து சிக்கல்களுக்கு, சுற்றுசூழல் மாசிற்கு, வளங்களின் தட்டுப்பாட்டிற்கு மிக முக்கியமான காரணம் மக்கள் தொகை பெருக்கம்.

இப்படி சில முன்முடிவுகள், கற்பிதங்கள் இருந்தன. இதை உடைத்து வெளிவர முடிந்தது.

கல்லூரி எல்லாம் எங்கு ?

சங்கீதா– தையற்கலை பயின்றதால், வெகு சில கல்லூரிகளில் உள்ள வெகு சில பாடப் பிரிவுகள் படிக்க மட்டுமே நான் தகுதியுடையவள் ஆனேன். ராணி மேரி கல்லூரியில் இசை பயிலவும், ஸ்டெல்லா மேரி கல்லூரியில் நுண்கலை பயிலவும் விண்ணப்பித்திருந்தேன். இரண்டு கல்லூரிகளிலும் இடம் கிடைத்தது என்றாலும், கர்நாடக சங்கீதம் நன்கு அறிந்த எங்கள் குடும்ப நண்பர் கல்லூரியில் சேர்ந்து கர்நாடக சங்கீதம் பயில்வதை ஊக்குவிக்கவில்லை. கல்லூரிகளில் கர்நாடக இசை கற்றுகொடுக்கப்படும் விதத்தின் மீது அவருக்கு சில விமர்சனங்கள் இருந்தன. ஆகவே நான் நுண்கலை பயின்றேன்

செயல்பாட்டாளர் வாழ்க்கைக்கு எப்படி அறிமுகம் ஆனீர்கள்? கல்லூரி வாழ்க்கையிலா?

சங்கீதா- எங்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பெடுத்த ஆசிரியை வழியாக மெல்ல செயல்பாட்டாளர் வாழ்க்கைக்கு அறிமுகம் ஆனேன். கல்லூரி வளாகத்தில் சிறிய கொக்ககோலா நிரப்பும் இயந்திரம் கொண்டு வரும் முயற்சி ஒன்று நடைபெற்றது.. தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டோம். அந்த ஆசிரியர் ஓர் அபாரமான ஆளுமை. அவரிடம் கற்றவர்கள் அனைவரிடமும் அவருடைய பாதிப்பு இருந்திருக்கும் என்றே எண்ணுகிறேன். இந்தியக் கலைகள் பற்றி வகுப்பு எடுத்தார். அவருடைய வகுப்புக்கள் எப்போதும் படைப்பூக்கத்துடனும், புதுமையுடனும் இருக்கும். முதன்முதலாகப் பசுமைப் புரட்சி நம் தேசத்திற்கு ஏற்படுத்திய அழிவைப் பற்றி அவர் வழியாகவே நான் அறிந்தேன். அதற்கு முன்னர் அந்தச் சொல்லைக் கூட கேள்விப்பட்டிருக்கவில்லை. கல்லூரியில் கூட பெரும்பாலும் நாட்டுநலப் பணியில் தான் மிக அதிகமாக ஈடுபட்டேன். இந்தியாவின் மிக முக்கியமான சூழலியல் சிக்கல்களைப் பற்றிப் பேசும் ‘living on the edge’ எனும் தொலைக்காட்சித் தொடரை வாரம் தவறாமல் பார்த்து வந்தேன், ஒவ்வொரு வாரத்தின் பேசு பொருள் சார்ந்து பல குறிப்புகளை முனைப்புடன் சேகரித்தேன்.

உங்கள் வலைதளத்தில் பலவிதமான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக எழுதி இருந்தீர்கள். அதாவது எளிய தான தருமங்களில் இருந்து முனைப்புடன் பெருமுதலாளிகளை எதிர்ப்பது வரை..

சங்கீதா- ஆம் பிறகு நான் தொண்ணுறுகளின் இறுதியில் அப்போது சென்னையில் பிரபலமாக இயங்கி வந்த எக்ஸ்னோராவில் இணைந்தேன்..சில காலம் அங்குப் பணி புரிந்தேன்..

அங்கு என்ன மாதிரியான பணியில் ஈடுபட்டு வந்தீர்கள்?

சங்கீதா– அங்குப் பெரும்பாலும் மரம் நடச் சொல்வது, பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மட்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரித்தல், பெருநகரத்து நீர்வழிகளைச் சுத்திகரிக்கக் கோரிப் போராடுவது போன்ற மத்தியவர்க்கச் செய்ல்பாட்டாளரிய நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டு வந்தேன். ஆனால் அது ஒரு நல்ல அனுபவம். நிறைய நட்புகள் கிடைத்தன. இங்குத் தான் சூழியல் சார்ந்த பாலபாடங்களைக் கற்றேன். சென்னை அடையாறு creek ஐ காக்க வேண்டி மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன், ‘வளர்ச்சியை’ப் பற்றிய புரிதல் அங்குதான் எனக்குக் கிட்டியது. இதைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன்.

அதன் பின்னர் அமெரிக்காவின் சியாட்டிலில் ஒரு ஆறு மாதப் பயிற்சி முகாம் நடைபெற்றது. சூழலியல் சார்ந்த சர்வதேச இளைஞர்கள் பங்குகொண்ட விழிப்புணர்வு முகாம் அது. அந்த ஆறு மாதங்கள் மிக முக்கியமானவை. சர்வதேச அரசியல் பற்றிய புரிதல்கள் ஓரளவிற்கு அந்தக் காலகட்டத்தில் தான் எனக்குக் கிடைத்தன. அதன் பின்னர் இந்தியாவைப் புனர் நிர்மாணம் செய்ய உழைத்து வரும் ஒரு அரசு சாரா நிறுவனத்தில் இணைத்துக் கொண்டேன்.. இந்தியக் கிராமங்களில் முழுவதும் களப்பணியில் ஈடுபட்டு வரும் அமைப்பு அது..

உங்களுடைய எழுத்துக்களைக் கொஞ்சம் வாசித்ததுன்டு, அவை எளிமையானவை அதே சமயம் வலிமையானவையும் கூட, உங்கள் ஆரம்பக் கால aggressive activism அனுபவங்கள் எத்தகையவை..? ஏன் அந்தத் தீவிரத்திலிருந்து விலக நேர்ந்தது? மாற்றத்தை உருவாக்குவதைக் காட்டிலும், தன்னைக் கருவியாக்கிக் கொள்ளல் சரியான அணுகுமுறை என நீங்கள் உணர்ந்தது எப்போது? இது மிக முக்கியமான திறப்பு என எனக்குத் தோன்றியது..

சங்கீதா- நான் சிலகாலம் தீவிரச் செயல்பாட்டாளராகச் செயலாற்றியது உண்டு. 1999 ஆம் ஆண்டுப் பிரசித்தி பெற்ற உலக வர்த்தக மையப் போராட்டத்தை முன்னிட்டுச் சியாட்டிலில் நடைபெற்ற பல தொடர் கருத்தரங்கங்கள் வழியாக உலகமயமாக்களின் மோசமான விளைவுகளைப் பற்றி அறிந்து கொண்டேன். கோபமாகவும் ஆற்றாமையாகவும் இருந்தது. நர்மதைப் போராட்டம் பற்றிக் கேள்வி பட்டேன், அது தான் ஜல சத்தியாக்ரகத்தின் முதலாண்டு. தபால் அட்டைப் போராட்டத்தில் ஈடுபட்டேன். அதற்குப் பின்னர் நதிகள் இணைப்பு, மரபணு மாற்றப்பட்ட உணவு எனச் சிலவற்றிற்கு எதிரான போராட்டங்களிலும் பங்கெடுத்து இருக்கிறேன். இத்தகைய போராட்டங்களில் பங்குகொள்வது முக்கியம்தான் என்றாலும், இதற்குப் பின்புலம் என்னை இயக்கும் மானுட அகம்பாவம் எத்தகையது எனும் கேள்வி எழுந்தது. மேலும், என்னுடைய இயல்பில் போராட்ட குணம் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டேன். என்னால் என்னுடைய பார்வைகளை வலுவாகவும் தெளிவாகவும் வைக்க முடியும் என்றாலும் விவாதங்களில், சண்டை– சச்சரவுகளில் ஈடுபடுவதில் எனக்கு ஆர்வமில்லை. அதிலும் எதிர் தரப்பை ஏதோ அழிக்கப்பட வேண்டிய அசுரனாகச் சித்தரித்து மட்டையடியாக அடக்க முயலும் விவாதச் சூழலில் என்னால் இயங்க முடியவில்லை. வன்முறை, பேராசை, கோபம் என இவை யாவும் பாதுகாப்பற்ற, அச்சமிகுந்த, புண்பட்ட ஆன்மாக்களின் வெளிப்பாடு என உணர்ந்துகொண்டேன். மனிதர்களை ஆழத்தில் பிணைந்திருக்கும் ஆற்றலை உணர்ந்தேன். புண்பட்ட ஆன்மாக்களுக்குக் கருணை அளிக்க வேண்டும், அவர்களுடைய காயங்களை ஆற்ற வேண்டும், பழிக்கு பழி வாங்குவதிலும் அவமானப்படுத்துவதிலும் எந்தப் பொருளுமில்லை. கருணையும் கூட உறுதியுடனும் நம்பிக்கையுடனும் அளிக்கப்பட வேண்டும், சில நேரங்களில் முகத்தில் அறைந்தாற்போல் கூட அந்தக் கருணையை அளிக்க வேண்டியதாய் இருக்கலாம். ஆனால் எதுவுமே எதிர்தரப்புப் புண்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து அதை ஆற்ற வேண்டும் எனும் இதயபூர்வமான பெருங்கருணையுடன் அணுகப்பட வேண்டும். செயல்பாட்டாளர்கள் தங்கள் எதிர்த்தரப்பினருடன் இத்தகைய புரிதலுடன் விவாதிக்கும் சூழல் இங்கு இல்லை என்பதால் என்னால் அந்த வெளியில் இயங்க முடியவில்லை.

இத்தகைய செயல்பாட்டாளர் வாழ்வில், எனது ஆற்றல் எல்லாம் வடிந்து சோர்வுற்று இருந்தேன். நான் என்னைப் படைத்தவளிடம் சரணடைந்தேன், அவளுடைய ஆற்றலை எனக்குள் நிரப்பிக்கொள்ள வேண்டினேன். ஒரு சில வார்த்தைகளில் அந்த ஆன்மீக பயணத்தை விளக்கிவிட முடியாது

முனைவர் பட்டம் பயில கூட முயன்று பாதியில் திரும்பி வந்தீர்கள் அல்லவா..

சங்கீதா- அமெரிக்காவில் வளர்ச்சித் திட்டம் பற்றிய ஒரு படிப்பில் சேர்ந்தேன். எனது வகுப்பில் இருபத்தைந்து வெவ்வேறு தேசங்களில் இருந்து மாணவர்கள் வந்திருந்தார்கள். மொத்தம் இரண்டு வருடங்கள்.. எனக்கு அப்போது உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை போன்ற பெரும் அமைப்புகளில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றொரு கனவு இருந்தது. சூழலியல் பொருளியலாளாராக உலகத்தையே தலைகீழாக மாற்ற வேண்டும் என்று எண்ணிய காலமுண்டு. நான் பத்தாம் வகுப்பு வரையில்தான் கணிதம் கற்றிருந்தேன், ஆகவே புள்ளியியல், கால்குலஸ், மைக்ரோ பொருளியல், மாக்ரோ பொருளியல் என எல்லாவற்றையும் பற்றிக் கற்றுக்கொண்டேன். சில பேராசிரியர்களின் துணையுடன் ஒருவருடம் கடுமையாக உழைத்தேன். அப்பொழுது தான் எனது மேற்படிப்பை முடித்துவிட்டு அங்குப் பொருளியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள இயலும். தென்னமெரிக்கப் பழங்குடி பற்றிய ஆய்வில் ஒரு பேராசிரியருடன் இணைந்து பணியாற்றினேன். காலை ஆறு மணிக்கே எழுந்து ஏதேதோ எண்ணிக்கைகள், கிராப்கள், அட்டவணைகள் என முட்டி மோதிகொண்டிருப்பேன், இவை எதுவும் என்னைக் கொஞ்சம் கூடத் திருப்திப்படுத்தவில்லை.

பொருளாதார வரலாறு பற்றிய ஒரு வகுப்பின் போது ஒரு பேராசிரியரிடம் நான் கேட்டேன் ‘எப்படிக் காந்தி குறித்து நீங்கள் எதையுமே சொல்லாமல் இந்த வகுப்பைக் கடந்து செல்ல முடிந்தது? அவர் நம் பொருளியல் வாழ்வை நிர்வகிப்பது குறித்துப் பலவற்றைச் சொல்லியிருக்கிறார் அல்லவா?’

அதற்கு அவர், அவை எதுவும் முக்கியமல்ல, மேலும் அது நமது ஆய்வின் கீழ் வராது என்றார். உலகவங்கி, ஐ.நா போன்ற அமைப்புகளில் பணியாற்றத் தேவையான பொருளாதார வார்த்தை ஜாலங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். திட்ட முன்வரைவு தயாரிப்பது, அறிக்கை சம்ர்ப்பிப்பது என இந்தப் பெரு நிறுவனங்களில் பணியாற்ற நாங்கள் தயார் செய்யப்பட்டோம். எனக்கு இவை எதுவும் திருப்தி அளிக்கவில்லை, ஏன் என்றும் விளங்கிக் கொள்ள முடியவில்லை, ஆனால் அங்குத் தொடர்ந்தேன் முதல் ஆண்டின் முடிவில் எங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் திறந்தன. ஒன்று கள ஆய்வு செய்தல், பெரும்பாலான என் வகுப்பு மாணவர்கள் அதையே தேர்ந்தெடுத்தனர். மற்றொன்று ஆழ்ந்த ஆய்வு, நான் மட்டுமே அதைத் தேர்ந்தெடுத்தேன். அதற்கு அனுமதி பெறுவது ஒன்றும் அத்தனை சுலபமல்ல. பொருளியலில் நான் ஆய்வு மேற்கொள்ள எனது துறைத் தலைவரை ஒப்புக்கொள்ள வைப்பது எனக்கு மிகக் கடினமாக இருந்தது. ஒரு மாதம் முனைந்து செயல்முறைகள் எல்லாம் எழுதி நேர்காணலில் எல்லாம் தேர்வாகி, பல்கலைகழக நிதிக்குழு எனது ஆய்விற்கு நிதி அளிக்க ஒப்புக்கொண்டது. ஆனால் அதன் பின்னர்த் தொடர்ச்சியான மூன்று இரவுகள் உறக்கமின்றித் தவித்தேன். எனக்குள்ளிருந்து ஒலித்த குரல் எனது செல்திசை குறித்து எச்சரித்தது. இவைகளில் இருந்து விடுவித்துக்கொண்டு வரத் தூண்டியது. மகிழ்சியற்று இருப்பதை உணர்ந்தேன். நான் இந்தியாவின் கிராமப்புறங்களிலும் பழங்குடிப் பகுதிகளிலும் பயணம் செய்து எனது கேள்விகளைப் பின் தொடர்வதாகக் கனவு கண்டேன். அதற்கான விடைகளை, மெதுவாக நானே கண்டடைய வேண்டும் எத்தனை காலமானாலும் சரி. அந்த மூன்று இரவுகளுக்குப் பின்னர் நான் மீண்டும் பேராசிரியரை சென்று சந்தித்து அந்த ஆய்வு முன்மாதிரியை ரத்துச் செய்யக் கோரினேன், இந்தியாவில் ஆறுமாத காலம் பயணம் செய்வதற்கு ஏதுவான ஒரு புதிய வரைவை அவர்களுக்குச் சமர்ப்பித்தேன். இத்தனை சிரமங்களுக்குப் பின்னர் நான் என் முடிவை மாற்றிகொண்டது அவர்களுக்குப் பெரும் வியப்பாக இருந்தது. நண்பர்களிடமிருந்து எனது ஆறுமாத இந்திய பயணத்திற்குத் தேவையான நிதியுதவியைப் பெற்றேன், இந்தியாவிற்குப் புறப்பட்டு வந்தேன்.

அந்த மூன்று நான்கு நாட்கள் தூக்கமின்றி அலைக்கழிந்து கொண்டிருந்தேன்..அதைத்தான் என் அந்தராத்மாவின் குரல் எனச் சொல்ல வேண்டும்..

நீங்கள் இந்தியா முழுக்கச் சுற்றியது அப்போது தானா?

சங்கீதா- ஆம், ஆறு மாதங்கள்  பெரிதாக எந்த திட்டமிடலும் இன்றி இந்தியா முழுவதும் சுற்றினேன்..

இந்தியாவை புரிந்துகொள்ளாமல் எதையும் செய்ய முடியாது எனும் உந்துதல் காரணமாக என்று எடுத்துக்கொள்ளலாமா..

சங்கீதா- இந்தியாவை அறிந்து கொள்ளவும் தான் பயணம் செய்தேன், ஆனால் அது மட்டுமே என்னுடைய நோக்கமல்ல, நான் பார்த்தது இந்திய நிலப்பரப்பின் சிறு சிறு துண்டுகளைத்தான். பயணம் இந்தியாவைப் பற்றிய புரிதலை எனக்கு அளித்தது என்பதைக் காட்டிலும் என்னைப் பற்றிய புரிதலை எனக்கு அதிகமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும்.. பயணம் அதன் போக்கில் பல அற்புதமான விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தது.

சரிதான், எங்கெலாம் சென்றீர்கள்? உங்கள் அனுபவம் எத்தகையது? எனக்கும் பெரும் பயணங்கள் செல்ல வேண்டும் எனும் உந்துதல் எப்போதும் உண்டு..ஆனால் என்னால் அப்படி கிளம்பிச் செல்ல முடிவதில்லை..

சங்கீதா- மத்தியப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், சதிஸ்கார், குஜராத். பழங்குடி மக்களின் வாழ்வைக் கவனித்தேன்.. அவர்கள் தங்கள் வாழ்வையும் வசிப்பிடத்தையும் விட்டு விலகிச் செல்வதாகத் தோன்றியது..அங்கு கூட நவீனத்துவம் கிளைபரப்பி, அவர்களைத் தன்பால் ஈர்த்துக்கொண்டது..ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது எனும் உணர்வு ஏற்பட்டது..தமிழகத்திலும் பல பகுதிகளில் சுற்றினேன்..இங்கு சென்னையின் புறநகர்ப் பகுதியில் ஒரு பஞ்சாயத்திற்குத் தலைவராகத் தேர்வான நண்பருடன் தமிழகத்தின் பல பகுதிகளுக்குச் சென்றேன்..அவருக்கு அதிகாரப் பரவலாக்கம், பஞ்சாயத் ராஜ் போன்ற துறைகளில் ஆர்வமுண்டு. பிறகு வேறு சில பிரச்சனைகளின் காரணமாக அவரிடமிருந்து விலகி வந்தேன். முனைவர் ஆய்வைத் துவக்கினேன். அந்த கல்விச் சூழலும் வழிமுறையும் என்னை அதிருப்தியில் ஆழ்த்தின, அதனால் அதைப் பாதியில் நிறுத்திவிட்டு மீண்டும் இந்தியா திரும்பினேன்..அங்கு தான் எனது கணவர் ராஜீவையும் சந்தித்தேன்..

மீண்டும் பயணங்களை பற்றி, அந்தப் பயணங்களின் போது நீங்கள் கண்ட பாரதத்தைப் பற்றி சொல்லுங்கள்? அந்த பயணம் வழியாக நீங்கள் ஏதேனும் கண்டடைந்தீர்களா? எவ்வகையில் அது உங்கள் வாழ்க்கை பார்வையை மாற்றியது?

சங்கீதா – எனது பயணங்களின் ஊடாக ஒருவிஷயத்தை நான் கண்டுகொண்டேன். வாழ்க்கையை எளிமையாகவும், செறிவாகவும் வாழ்ந்திட முடியும். நான் கிராமப்புற மற்றும் பழங்குடி இந்திய நிலப் பகுதிகளில் பயணம் செய்திருக்கிறேன். அங்கு நகரங்களில் மக்களுக்கு கிட்டாத சில சலுகைகளும் மகிழ்ச்சிகளும் நிரம்பி இருப்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. உதாரணமாக நிதானமாக அமர்ந்து ஈர்குச்சிகளை சேர்த்து கட்டி விளக்கமாறு உருவாக்குவது ஓர் அற்புதமான கலை, அல்லது வெறுமே அடுத்து என்ன செய்ய வேண்டும் கவலையில்லாமல் மரத்தடியில் அமர்ந்து சூரியன் அஸ்தமனமாவதைப் பார்க்க முடியும், நான் கிராமத்து வாழ்க்கையை அதீதமாக ரொமாண்டிசைஸ் செய்யவில்லை, அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து எனக்குப் புரிதல் உண்டு, ஆனால் வாழ்க்கையின் எத்தனையோ அடிப்படை மகிழ்ச்சிகள் மீது எனக்கொரு ஏக்கம் பிறந்தது! கிராமத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துகிறேன், எல்லாவற்றையும் மாற்றப் போகிறோம் என்று புறப்படும் என்.ஜி.ஒக்களின் அகம்பாவத்தையும் அதீத தன்னம்பிக்கையையும் உணர்ந்துகொண்டேன். அவர்களுக்கு உதவி தேவையில்லை என்று நான் கூறவில்லை, உண்மையில் அவர்களுக்கு காலனியக் கறை படிந்த கல்விமான்களின் எந்த உதவியும் தேவையில்லை.

அவர்களின் வாழ்க்கைப் பார்வையை, அவர்களுடைய புத்திசாலித்தனத்தைப் பேணி வரும் அமைப்புகளை, நம்பிக்கைகளை அங்கீகரித்து ஏற்றுப் புரிந்துகொண்டு, பள்ளிப் படிப்பைத் தாண்டி வாழ்க்கையை அவர்களிடம் கற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்ட எளிய சகாக்கள் தான் இன்று அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். நான் அமெரிக்காவில் சர்வதேச வளர்ச்சி குறித்த கல்வி கற்றேன், ஐ.நா போன்ற அமைப்புகளில் இணைந்து மூன்றாம் உலக நாடுகளின் செயல்பாடுகளில் தலையிடுவதற்கு மனிதர்களைப் பயிற்றுவிக்கும் கல்வி அது. குறிப்பிட்ட வகை மாதிரியாக சிந்திக்கப் பழகிய பின்னர் ஓராண்டிற்குப் பிறகு நான் கற்றவைகளில் இருந்து வெளிவர முடிவு செய்தேன்.

இயற்கை வேளாண்மையில் ஆர்வம் வந்தது எப்படி?

சங்கீதா- 2001 ஆம் ஆண்டுப் பயணங்களின் ஊடாக, எளிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அபார லாபம் ஈட்டும் பல இயற்கை வேளாண் பண்ணைகளைக் கண்டுகொண்டேன். ஈரோட்டில் ஒரு விவசாயிகள் கூடுகையில் அதேயாண்டு நம்மாழ்வார் அய்யா அவர்களையும் சந்தித்தேன். அவர்கள் பஞ்சகவ்யத்தின் மகத்துவத்தைப் பற்றிப் பேசுவதற்குக் கூடியிருந்தனர். அவர்கள் தங்களுடன் கொண்டு வந்திருந்த செழிப்பான பயிர்களின் புகைப்படங்களைக் கண்டு நான் வியந்தேன். பஞ்சகவ்யம் பெரும் புரட்சியை உண்டு செய்துகொண்டிருந்தது அப்பொழுது. எனக்கு மண்ணில் இறங்கி பணி செய்ய வேண்டும் என எனக்குள் ஒரு தீவிரமான அழைப்பு எழுந்தது, மண்ணைப் பற்றி அறிந்துகொள்ள முனைந்தேன், இயற்கை வேளாண்மை சார்ந்து ஃபுக்குவோக்கா, பில் மாலிசன் போன்ற பலர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சிலகாலம் வாசித்து அறிய முனைந்தேன். மாநிலமெங்கும் உள்ள இயற்கை வேளாண பண்ணைகளில் சென்று தன்னார்வலராகச் சிலகாலம் பணியாற்றி இருக்கிறேன். சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகபட்டினம் பகுதி நிலங்களை எளிய மரபான வழிமுறைகளைக் கொண்டு நம்மாழ்வார் அய்யா மறு சீரமைக்க முனைந்த போது நானும் அவருடைய பணிக்குத் துணையாக ஆவணப்படுத்துதலில் ஈடுபட்டிருந்தேன்.

இந்தப் பின்புலத்தில் மற்றுமொரு கேள்வி..’பசுமைப் புரட்சியின் கதை’ எழுத வந்தது எப்படி?

சங்கீதா- 2002-2003 ஆகிய காலகட்டங்களில் நதிகளை இணைப்பது பற்றி ஆளாளுக்குத் தமிழகத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள்..அது எத்தனை அபத்தமான வாதம் என்பதையும், அதனால் விளையும் தீமைகளைப் பற்றியும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று உரையாற்றி வந்தேன். அப்போது தான் ஒருவர் உங்கள் கருத்துக்களைத் தொகுத்து கட்டுரையாக்க முடியுமா என என்னிடம் கேட்டார். அது 2004 ல் காலச்சுவடில் வந்தது..ஆணித்தரமான தரவுகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை எழுதப்பட்ட காலத்தில் அக்கட்டுரைக்குப் பரவலான எதிர்வினை வந்தது..அதில் வந்த எதிர்வினையின் ஒரு பகுதியாகப் பசுமைப் புரட்சியை விதந்தோதி சில கருத்துக்கள் எழுதப்பட்டிருந்தன. ஆசிரியர் குழுவிலிருந்து அதற்குப் பதில் எழுத முடியமா எனக் கேட்டார்கள்..அதற்குப் பதில் எழுத ஒரு கட்டுரை போதாது என்பதால் விரிவான தொடரை எழுதத் தொடங்கினேன். என் உள்ளுணர்வு பசுமைப் புரட்சியின் தீமைகளை எனக்கு உணர்த்தினாலும்..காத்திரமான தரவுகளைக் கொண்டு அதை நிறுவ கொஞ்சம் உழைக்க வேண்டியிருந்தது. இன்றுவரை என் தரவுகளை மறுத்து எந்த எதிர்வினையும் வரவில்லை..

நான் உங்கள் புத்தகத்தை இன்னும் வாசிக்கவில்லை..ஆனால் அதை வாசித்த நண்பர் கிரி வெகுவாக சிலாகித்தார்..அண்மையில் ஃபேஸ்புக்கில் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் பசுமைப் புரட்சி ஆக்க பூர்வமாகப் பங்களிப்பு ஆற்றியது பற்றி ஒரு கட்டுரை எழுதுவதாகச் சொல்லியிருக்கிறார்..அதில் உங்கள் புத்தகத்தை முன்வைத்து சில விவாதங்கள் எழுந்தன…

சங்கீதா- ஆம், பார்த்தேன், ஜடாயு எனக்கும் அனுப்பியிருந்தார்…

பாரம்பரிய இயற்கை வேளாண்மை தோல்வி அடைந்ததன் சான்று தான் நாம் ரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளை நோக்கி நகர்ந்தது. மேலும் பஞ்சத்தால் அழியாமல் ஏழை எளிய மக்களைக் காத்தது எனும் வாதத்தை அவர் முன்வைக்கிறார்..இதற்கு உங்கள் பதில் என்ன..

சங்கீதா- அவருடைய கட்டுரை வரட்டும், இக்கேள்விகளுக்கான விடையாகத்தான் எனது பசுமைப் புரட்சியின் கதை நூல் உருவாகியுள்ளது..ஆகவே அதில் விரிவாகத் தரவுகளுடன் இதற்கான விடை இருக்கிறது. அதை வாசித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆங்காங்கு சிதறிக் கிடக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து ஒரே நூலாக..ஒட்டுமொத்தப் பார்வையைக் கொடுக்க முயற்சித்திருக்கிறேன்..

நல்லது, வாசித்துவிட்டு விரிவாக உங்களிடம் விவாதிக்கிறேன், உங்கள் ரெஸ்டோர் பற்றி நண்பர்கள் பலர் சொல்லக் கேட்டுள்ளேன்.கொஞ்சம் விரிவாக அதைப் பற்றியும் விளக்க முடியுமா? ஏனெனில் அதுவும் இயற்கை வேளாண்மை சார்ந்து ஒரு நல்ல அமைப்பாகவே தென்படுகிறது. நான் சில காலத்திற்கு முன்னர் நம்மாழ்வார் ஐயாவைச் சந்தித்த போது சென்னையில் இயற்கை வேளாண் விளை பொருட்களுக்கு உள்ள சந்தையைப் பற்றிப் பெருமையாகச் சொன்னார்.

சங்கீதா- எங்களது ரெஸ்டோர் அமைப்பு துவங்கி ஐந்தாண்டுகள் ஆயின. ஜெ.சி.குமரப்பாவினால் உந்தப்பட்டுத் தொடங்கப்பட்டது. ஆரோக்கியமான தற்சார்புடைய சமூகத்தில் நுகர்வோரும் உற்பத்தியாளரும் பிரிக்கமுடியாத ஒற்றைப் பெரும் அமைப்பு என அவர் கருதினார். நுகர்வோர் என்றில்லை உற்பத்தியாளர்களே ஒருவரையொருவர் அறிந்துகொள்வதில்லை என்பதே இன்றைய சூழல். இவர்கள் இருவருக்குமே வணிகர்கள் மீது எப்போதும் ஓர் ஐயமுண்டு. நாம் எப்போதுமே எவரோ நம்மை ஏமாற்றகூடும் என்று நம்பிக்கொண்டே இருக்கிறோம். நேர்மையான, நம்மீது அக்கறைகொண்ட, நம்பகமான உற்பத்தியாளரையோ வணிகரையோ நாம் எதிர்கொள்ளும்போது உண்மையில் நாம் ஆச்சரியப்படுகிறோம். இப்படித் துண்டுபட்ட சமூகத்தில் நாம் எப்படிப் பொறுப்புள்ள உற்பத்தியை, நுகர்வை அல்லது வணிகத்தை எதிர்பார்க்க முடியும்? இந்த மூவருக்குமான இடைவெளியை நிரப்புவதற்காக உருவாக்கப்பட்டதே ரெஸ்டோர். மேலும் சிறுவிவசாயிகளுக்கு ஏற்ற சந்தையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என விரும்பினோம், திருப்தியான அளவிற்கு நாங்கள் எண்ணியதைச் சாதித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் பெரும்பாலும் தரச்சான்று அளிக்கப்பட்ட விளைப் பொருட்களை விற்பதில்லை, எங்களுக்கு மனிதர்கள் மீது நம்பிக்கையுண்டு. ஏதோ ஒரு பெருநிறுவனம் அளிக்கப் போகும் சான்றுகளைக் காட்டிலும் அது மேலானது. மேலும் நகர்ப்புற மத்திய வர்க்க உயர் மத்திய வர்க்கத்தினருக்கு அரசியல் விழிப்பை ஏற்படுத்த உணவு ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்று எண்ணினோம், ஆனால் அப்படி ஒன்றும் பெரிதாக நடந்துவிடவில்லை.

நீங்கள் குழந்தை வளர்ப்பு பற்றி எழுதியவற்றை நான் வாசித்திருக்கிறேன், குறிப்பாக அமைதியான குளத்தில் கல் எறியாதீர்கள் போன்ற பதிவுகள் சிறப்பாக இருந்தது..உங்கள் குழந்தையிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டவை, அல்லது பொதுவாகக் குழந்தைகளிடமிருந்து நீங்கள் கற்றவை என்ன என்பதைப் பற்றிப் பகிர இயலுமா?

சங்கீதா- குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் உண்டு. அந்த நொடியில் வாழ்வது, படைப்பூக்கம், எளிமையான சிந்தனை, எல்லாவற்றைப் பற்றிய அடிப்படை வினாக்களை எழுப்பிய வண்ணம் இருத்தல், மன்னிப்பு, செய்நேர்த்திக்கான வேட்கை, வெள்ளந்தித்தனம் எனப் பலவற்றைச் சொல்லலாம். இவையெல்லாம் நம்பகத்தன்மை அற்ற பெரியவர்களுடன் சேர்ந்து வளரும் போது கெட்டுவிடுகிறது

உங்கள் மகளை நீங்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை இல்லையா?

சங்கீதா- ஆமாம், அவளுக்கு இப்போது நான்கரை வயது ஆகிறது…

இப்படிப் பள்ளிக்கே அனுப்பாமல் தொடர முடியும் என்று எண்ணுகிறீர்களா? பள்ளியிலிருந்து அவள் கற்றுகொள்வதற்கு எதுவுமே இல்லையா? சக குழந்தைகளுடன் உரையாடுவதும், கற்பதும் தடைப்படுமே..ஒருக்கால் சில வருடங்களுக்குப் பிறகு அவள் வளர்ந்து ஏன் எனக்குப் பள்ளி அனுபவத்தை இல்லாமல் ஆக்கினீர்கள் எனக் கேட்டால் என்ன சொல்ல முடியும்..

சங்கீதா- முதலில் ஒரு விஷயம், இதை நாங்கள் அவளுக்காக எடுத்த முடிவாக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம், இதற்கு முன்னர் அவளை மூன்று முறை பள்ளியில் கொண்டு சென்றுவிட்டு வந்தோம். அவளை நிர்பந்தப்படுத்தும் சூழலில் அவளால் இருக்க முடியவில்லை..ஆகவே இது அவளுடைய முடிவும் தான். அவளுக்குப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் எனும் விருப்பம் ஏற்பட்டால், நிச்சயம் அவளை நாங்கள் பள்ளிக்கு அனுப்புவோம்..இத்தகைய சுதந்திரத்தையும், சுய சிந்தனையையும் அனுபவித்து வளரும் குழந்தை பள்ளியில் நாள் முழுக்க ஆசிரியர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவே..

நாங்கள் அவள் ஒரு முழு ஆளுமையாக வளர என்னென்ன வாய்ப்புகள் உண்டோ அவைகளைத் திறந்த மனதுடன் அணுகவே முற்படுவோம். ஒருவேளை இஷா அப்படியொரு பள்ளியை தேர்ந்தெடுத்தால் எனக்கு அது ஒரு பெரிய வியப்பாகவே இருக்கும். ஒருகால் அப்படி எதாவது ஒரு துறையில் அவள் கல்வி கற்க வேண்டும் என ஆர்வம் கொண்டிருந்தால் திறந்தவெளிப் பள்ளி வழியாக நேரடியாகப் பன்னிரெண்டாம் வகுப்புப் பரீட்சை எழுதுவதற்கு நாங்கள் எங்களால் ஆன உதவியைச் செய்வோம். அதன் பின்னர் அவள் விரும்பிய கல்லூரியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவளுக்குச் சான்றிதழ் வேண்டும் என்றால் மட்டுமே, மற்றபடி எந்தக் கல்வி கூடம் வழங்கும் சான்றிதழ்களும் எங்களுக்கு ஒரு பொருட்டேயல்ல

எனக்கு என் பள்ளி வாழ்க்கை பற்றிய எந்த வருத்தமும் இருந்ததில்லை..ஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது, உண்மையில் பல யோசனைகள் எழவே செய்கின்றன..

சங்கீதா– நாம் சிறுவயதிலிருந்து மீண்டும் மீண்டும் இது தான் சரியான வழி எனச் சில பாதைகளில் நடக்கச் சொல்லி அறிவுறுத்தப் படுகிறோம், அதற்கே பழக்கப்படுத்தப் படுகிறோம். இவை நம்மை அறியாமலே எங்கோ ஆழத்தில் தடங்களை உருவாக்குகின்றன.அவையே நாளடைவில் நாம் நம்மை முழுமையாக வெளிப்படுத்த இயலாத தடைக்கற்களாக மாறிவிடுகின்றன…நமக்குள் பாயும் பிரபஞ்ச சக்தியை அவைகள் வழிமறிக்கின்றன..நம் வளர்ச்சியைத் தடை செய்கின்றன. என் குழந்தை வளர்வதை நான் கவனித்து வருகிறேன்..அது எனக்கும் ஓர் ஆன்ம சாதனை தான். உள்ளுக்குள் நானறியாமல் சேர்ந்து கிடக்கும் இந்தத் தடைக்கற்களை அடையாளம் கண்டு, பெயர்த்து எறிகிறேன். அந்தப் புண்கள் ஆறக் கொஞ்ச காலமாகும்..மேலும் இஷா அவளாகவே பலரைச் சந்திக்கிறாள்..இப்போது நாம் உரையாடுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறாள்..அவளுக்குப் பிடித்தால் நட்புடன் பழகுவாள்..அவள் சில விஷயங்களைக் கேட்பாள்..அது எங்கள் எல்லைக்குட்பட்டு இருந்தால் அந்த அனுபவத்தை அவளுக்கு அளிக்க நாங்கள் தவறுவதில்லை. அப்படி எல்லைக்கு அப்பாற்பட்டது என்றால், அவளுக்குப் பொறுமையாக விளக்குவோம்..

சென்னையில் இப்படிப் பள்ளி படிப்பைத் துறந்த, வீட்டுக் கல்வியில் புழங்கும் குழந்தைகள் நிறைய இருக்கிறார்களா? இங்கு உங்களுக்குள் இயங்கும் சமூகத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்..

சங்கீதா- இப்போது சற்று முன் வந்த அந்த இரு குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லாதவர்கள்தான்..(நான் அங்கு சென்றிருந்த போது கலிஃபோர்னியா பகுதியிலிருந்து வாழ்ந்து சென்னைப் புறநகரில் இயற்கை வேளாண்மை புரிந்துவரும் ஒரு தம்பதியினரின் இருகுழந்தைகளை அங்கு சந்தித்தேன், உணவைப் பகிர்ந்துகொள்ள அங்கு வந்திருந்தார்கள்) இந்த மாதிரி சில குடும்பங்கள் இங்கு இருக்கின்றன. ஹீலிங், இயற்கை வேளாண்மை, களப்பணி, சூழலியல்  எனப் பல்வேறு தளங்களில் இயங்கும் நண்பர்களை ஒருங்கிணைப்பதே என் பணி..

நல்லது ..இன்னும் பலரைச் சந்திக்கலாம் போலிருக்கிறது..

பண்டைய இந்தியக் கல்வி முறை இன்று இல்லாதது மரபான கல்வித் தொடர்ச்சியைக் குலைத்து விட்டது, ஆயுர்வேதம் போன்ற மரபான அறிவியலுக்கு குரு சீட பரம்பரை உகந்தது என நம்பப்படுகிறது..பொதுவாகப் பண்டைய இந்தியாவின் கல்வி முறை பற்றி உங்களுடைய பார்வை என்ன?

சங்கீதா– பண்டைய இந்திய கல்வி முறையைப் பற்றி எனக்குப் பெரிய அளவில் புரிதல் இல்லை. இப்பொழுது தான் வாசித்துத் தொகுத்துகொள்ள முயன்று கொண்டிருக்கிறேன், விரைவில் விரிவாக எழுத வேண்டும். ஆனாலும் இரண்டு விஷயங்களை நான் கவனித்திருக்கிறேன். ஒன்று- பண்டைய இந்தியாவில் கலை மற்றும் அறிவியல் சார்ந்து செறிவான உரையாடல் இருந்ததைப் புரிந்துகொள்கிறேன். இதற்குப் பின்புலமாக நிச்சயம் செறிவான கல்விமுறையும் இருந்திருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களைக் கேள்விகேட்டு, இருவரும் இணைந்து அறிவை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இவையெல்லாம் எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதைக் குறித்து இன்னும் எனது அறிவை ஆழமாக்கிகொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, குரு – சிஷ்ய கல்விமுறைக்கு நம்பகம் வாய்ந்த ஆசிரியர்கள் தேவை, லௌகீக அறிவும் ஆன்மீக அறிவும் ஒருங்கே இருக்க வேண்டும், தங்கள் துறை சார்ந்து ஆழ்ந்த அனுபவ அறிவும் வேண்டும். அதேபோல் வெளிப்படையாகத் தங்கள் போதாமைகளைப் பறைசாற்றி மேலும் கற்க முனைப்புக் கொண்டிருக்க வேண்டும். தன் போராட்டங்களைப் பற்றிய புரிதல் வேண்டும். மாணவர்களை அதன் வழியாக அழைத்துச் செல்லும் உறுதி வேண்டும். இத்தகைய ஒரு மனிதரை குருவாக அடைவது இன்று சாத்தியமா எனத் தெரியவில்லை.

உதாரணமாக இசையை எடுத்துக் கொள்ளலாம், ஆன்மாவின் வெளிப்பாடு என அதைப் பற்றிச் சொல்கிறோம். பொதுவாகவே கலையின் அங்கீகாரம் அல்ல, அதை உருவாக்குதலே பெரும் ஆனந்தம். உண்மையான கலை என்பது கலைஞன் தன்னைக் கரைத்துகொள்ளும் போது நிகழ்வது எனில், அது ஒருவகையான பக்தியாகிறது. இன்று அப்படி எத்தனை இசைக் கலைஞர்களைக்  குரு எனக் கருத இயலும் எனத் தெரியவில்லை? பெரும்பாலும் இசையைத் தொழில்நுட்பமாகப் பயின்று அதை மெருகு ஏற்றுவதில் அவர்கள் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது. அதன் உண்மையான நோக்கத்தை விடுத்து, பணம், பொருள், புகழ், போட்டி என இவற்றின் பின்னால் கவனம் போகும் போது உண்மையான குரு எப்படி உருவாக முடியும்?

ஆனால் இன்றைய சூழலில், இப்படிக் காலனியத் தாக்கத்தில் தங்கள் மூளைகள், மனங்கள் பயிற்றுவிக்கப்பட்டதை உணர்ந்து அதிலிருந்து வெளியேற விரும்பும் சிறுபான்மை சமூகம்ச் இணைந்து அதற்கு எதிராகச் செயல்பட முனையலாம். அவரவர் அளவில் தொடர்ந்து உரையாடி, கேள்விகளை எழுப்பி, தேடலைத் தொடரலாம், இத்தகைய வாழ்விடத்தை உருவாக்க முனையலாம். இதயம், உடல், மனம் என எல்லாவகையிலும் நாம் கற்க முயலலாம். இத்தகைய வாழ்விடங்கள் சிந்தனைகளின் பன்மையை, வேற்றுமைகளைக் கொண்டாடும் இடமாக இருக்கும்.

***

பனிரெண்டரை மணிக்கு தொடங்கிய பேச்சு அப்படி இப்படி இரண்டேகால் வரை சென்றது.

அனைவருக்குமே பசி இருந்ததால் உணவு உட்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. திணை, சாமை, வாழைத்தண்டு மோர் கூட்டு, வெண்டைக்காய் கறி, பருப்பு, பிரண்டைத் துவையல் என எனக்குப் பரிச்சயமில்லாத உணவுகளை அன்று மதியம் அவர்களுடன் இணைந்து உண்டென் நாக்கு பழகியிராத ருசி. ஆனால் கெடுதல் இல்லாத உணவு. வடகிழக்கிலிருந்து வந்திருந்த மிளகாய் ஊறுகாய் ஒரு துளி நாக்கில் பட்டதுமே எரிந்தது. சாப்பிடும் போதும் உரையாடல் தொடர்ந்துகொண்டே இருந்தது.

நவீன், காந்தியைப் பற்றிய அவரது புரிதல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

மகரந்த் பரஞ்சபே பற்றி விவாதம் திரும்பியது. வாழ்க்கை முன்வைக்கும் கேள்வியை வைராக்கியத்துடன் பின்தொடர்ந்து செல்லும் நவீன் போன்றவர்கள் அரிதானவர்கள் என எண்ணிக்கொண்டேன். சங்கீதாவின் குழந்தை ஈஷாவிற்கு உடல்நலம் சரியில்லாததால் சுணங்கிக் கிடந்தாள். பிறகொரு முறை அவளுடன் உரையாட வேண்டும் என எண்ணிக்கொண்டேன். 

காந்தியை வாசித்ததுண்டா? அவருடைய பங்களிப்பு என்ன என்று எண்ணுகிறீர்கள்?

காந்தி மீது எனக்குப் பெரும் மதிப்பு உண்டு, என்னுடைய நூலகத்தில் அவர் தொடர்பான நாற்பது ஐம்பது நூல்கள் உள்ளன, அவ்வபோது எடுத்து வாசித்துக் குறிப்புகள் எடுப்பது வாடிக்கை. அந்த மனிதர் அபாரமான ஆன்ம சக்தியுடன், துணிவுடன், உறுதியுடன் வாழ்ந்தார் என்பதை நன்கறிவேன். அவருடைய எளிமையும், தன் வாழ்வையே திறந்த பரிசோதனைக் களமாகக் கருதிய அவருடைய மனப்பாங்கும் என்னைப் பெரிதும் ஈர்க்கின்றன. மேலும் அவர் எதைச் சொன்னாரோ அதுவாகவே இருக்க முயன்றார். ‘ இந்த உலகம் அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்யும், எவருடைய பேராசையையும் அல்ல’ ‘எளிமையாக வாழ், அப்பொழுது தான் பிறர் வாழவே இயலும்’ ‘நீ விரும்பும் மாற்றம் உன்னிலிருந்து தொடங்கட்டும்’ போன்ற அவருடைய எளிய ஆழ்ந்த வரிகள் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

நான் முனைவர் ஆய்விலிருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்து எனது பேராசிரியருக்குப் போட்ட மடலில் வறுமை மற்றும் சமூகச் சிக்கல்களை வெறும் கோட்பாடுகளாக அறிய விரும்பவில்லை, நேரடியாக வாழ்க்கையில் அதன் தாக்கத்தை உணர வேண்டும் எனக் கூறினேன், காந்தி அப்படித்தான் எதிர்கொண்டார்.

உங்கள் மீது தாக்கம் செலுத்திய ஆளுமைகளைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்..

என்னைப் பாதித்த ஆளுமைகள் என மிக நீண்ட பட்டியலை அளிக்க முடியும், அவர்கள் எல்லோரையும் பற்றிப் பேசுவது இப்பொழுது சாத்தியமல்ல. ..என்னுடைய நூலின் பிற்சேர்க்கையில் முக்கியமான சிலருக்கு நன்றி கூறியிருக்கிறேன்.

நீங்கள் ஏக்தா பரிஷத்தில் பங்கு வகுக்கிறீர்கள் என அறிகிறேன், அதைப் பற்றிக் கொஞ்சம் அறிமுகப் படுத்த இயலுமா?

ஏக்தா பரிஷத் பற்றிய பரிச்சயம் எனக்குச் சிலகாலமாகவே உண்டு எனினும். ராஜாஜி மற்றும் வேறு சில முக்கியச் செயல்பாட்டாளர்களை நான் இப்பொழுதுதான் அடிக்கடி சந்தித்து வருகிறேன். அகிம்சையின் அடிப்படையிலான சமூகத்தை உருவாக்க வேண்டும் எனும் கனவு மட்டுமல்ல, அதன் தலைவர் ராஜாஜியிடம் நேரடி மற்றும் மறைமுக வன்முறை பற்றி இருக்கும் புரிதல் எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பழங்குடியினருக்கும், தலித் மக்களுக்கும் உள்ள நிலவுரிமை தொடர்பாகச் சிலகாலம் போராடிய பின்னர் இப்பொழுது கிராமச் சீரமைப்பு – குறிப்பாகப் பொருளாதார, கல்வி, பண்பாட்டு, சமூக- அரசியல் தளங்களில் செயலாற்ற தொடங்கியிருக்கிறது இந்த அமைப்பு. நான் இந்த இயக்கத்திற்கு எவ்வகையில் ஆக்கப்பூர்வமாகப் பங்களிப்பாற்ற இயலும் என இன்னும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்

***

ஒருமாதிரி எங்கள் கலந்துரையாடல் நிறைவடைந்தது. இரவு ஊர் திரும்பும் போது அன்றைய விவாதத்தை நினைவுகூர்ந்து அசைபோட்டுக்கொண்டே வந்தேன். நிறைவான அனுபவம் என்றாலும் என்னுள் ஏதேதோ கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. அவை என்னை அமைதி இழக்கச் செய்தன. ஒருவகையில் விடைகளைக் காட்டிலும் வினாக்களே முக்கியம். அவையே நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. வாழ்க்கையைப் பற்றிய தெளிவைக் காட்டிலும் வாழ்க்கை முறை பற்றிய குழப்பங்கள் அதிகரித்தது போலிருந்தது.

ஆனால் ஒன்று தெளிவாகப் புரிந்தது, இந்தக் கேள்விகளுக்கான விடை பிறர் கூறக் கிடைப்பதில்லை, அப்படிச் சொல்லப்படும் விடைகள் மூளையில் மற்றுமொரு தகவலாகத் தேங்கி நின்றுவிடும். அதற்கான விடைகளை நாம் கண்டடைய வேண்டும். அத்திசையில் மற்றுமொரு பயணம் காத்திருக்கிறது. தடியை வைத்துக்கொண்டு பொக்கை வாய் கிழவர் கைநீட்டி எச்சரிக்கும் குரல் மீண்டும் மீண்டும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

0 Replies to “நேர்காணல் – சங்கீதா ஸ்ரீராமுடன்”

  1. sir,
    vanakkam, life full of challenges every human being struggled to lead their life strive and thrive, but i am not accept that sangeetha mam has not send her child nisha to school ”see all the green memories of our tamil people arouse only in school days compare to college days because college days are came in our life to feel certain maturity. but school life,,, such an unforgettable moments, you can visualize by balumahendra’s azhiyatha kolangal is examble nisha lost her last chance i think ,
    but i am appreciating her dareness upon the society that she is not ready to send school if nisha doesn’t likes to continue anyway nisha got nice mother
    i want to write more due to time shortage thanks

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.