தாலிபான் பின்புலத்தில் இரண்டு ஆஃப்கன் நாவல்கள்

செப்டம்பர் 11-க்கு முன் மத்திய கிழக்கு நாடுகளின் இலக்கியங்கள் மிகக் குறைவாகவே ஆங்கிலத்தில் மாற்றப்பட்டன. ஆனால் அபுனைவுகள் அதிகமாக எழுதப்பட்டன. முக்கியமானவையாக அகமத் ரஷீதின் ‘தாலிபான்’. பெர்னார்ட் லூயிஸ், எட்வர்ட் சயீத் போன்றோரின் புத்தகங்களும் உண்டு. ஆனால் பொது மக்களிடம் இத்தகைய புத்தகங்களைத் தேடிச்சென்று படிக்கும் பழக்கம் செப்-11-க்குப் பிறகு அதிகரித்தது. ஒரு கட்டுரையின்படி 1997-ல் 793 மத்தியக்கிழக்கு சம்பந்தமான புத்தகங்கள் ஆங்கிலத்தில் வந்தன என்றால் 2004-ல் 1304 புத்தகங்களாக உயர்ந்தன. லியொன் வைஸெல்டியெர் (Leon Wieseltier) கூறியபடி, ’செப். 10 2001 வரை மேற்குலகமக்களுக்கு இஸ்லாம் என்றால் அவ்வளவாகத் தெரியாது. செப்.12 2001 அன்று அதே மக்களுக்கு இஸ்லாம் பற்றி எல்லாம் தெரிந்துவிட்டது’ குறிப்பு: இதை அவர் மேற்கத்தியமக்களில் புரிதல் திறமையைக் கிண்டலாக சொன்னார்.)

மேற்சொன்ன வகையில் பல மத்தியகிழக்கு இலக்கியங்கள் வழியே மக்கள் இஸ்லாமியக் கலாசாரங்களைப் புரிந்து கொள்ள முயன்றதில் பல கதாசிரியர்கள் தோன்றினார்கள். அவர்களில் நிறைய கவனம் பெற்று வருகிறவர்களில் இருவர், காலெத் ஹொசைனி (The Kite Runner) மற்றும் யஸ்மினா கத்ரா (The swallows of Kabul) ஆவர்.

Khaled_Hossaini_Book_Author_Afghanistan_Asiaகாலெத்-தின் முதல் புத்தகமே மேற்குலகில் பேசப்பட்டதுடன், மிகச் சமீப காலம் வரை பல்லாண்டுகளாகத் தொடர்ந்து ஏராளமான பிரதிகள் விற்கும் ஒரு புத்தகமாக இருக்கிறது. யஸ்மினாவின் உண்மைப் பெயர் முகமத் மூஸெஹூல். மொராக்கோ எழுத்தாளர்.

காலெத் 1979-ல் அமெரிக்காவிற்கு வந்துவிட்டாலும், ஆஃப்கானிஸ்தானியத் தொடர்பை விட்டுவிடாமல் அதைத் தன் முதல் நாவலில் ஆவணப்படுத்த முயன்றிருக்கிறார். யஸ்மினா இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வைத்து 5 நாவல்கள் எழுதியிருக்கிறார். இனி இப்புத்தகங்களைப் பற்றிப் பார்ப்போம்.

The Kite Runner

books_Afghanisthan_Taliban_Read_Library_Khaled_hosseini_kite_runner>ஹசனின் முதல் வார்த்தை ‘அமீர்’. தாயின் முகமறியாத ஹசனுக்கு அவன் எஜமான் மகன் அமீர் சகலமும். அமீருக்காக ஆயிரம் முறை வேண்டுமானாலும் உயிரைக் கொடுக்கத்தயார். இப்படிப்பட்ட ஒரு நண்பன் மற்றும் சேவகனுக்கு மிகத் தேவையான தருணத்தில் அவனை அமீர் கைவிடுகிறான். அதன் பிராயச்சித்தம் ஹசனின் மகன் வடிவத்தில் அவன்முன் எழும்போது மீண்டும் கைவிட்டானா அல்லது தன்னை மீட்டெடுத்தானா என்பது கதை.

ஹசன் பள்ளிக்கு செல்லவில்லையென்றாலும் street smart-ஆக இருக்கிறான். அமீரை யாராவது சண்டையில் அடிக்க வந்தால் தான் குறுக்கே சென்று விரட்டுகிறான். அமீரிடம்அவ்வப்போது ஷாநாமா கேட்கிறான். அவன் உலகம் அமீர்..

அமீர் வசதியான வீட்டுப் பிள்ளை என்பதாலும் சிறுவயதிலிருந்தே கவிதை, புத்தகம் என்று மூழ்குவதால் படித்த கோழையாக வளர்கிறான். அவனின் பஷ்டு தந்தையே ‘தன்மனைவியின் வயிற்றிலிருந்து இவன் வருவதைப் பார்த்திராவிட்டால் என் மகன் என்று நம்ப மாட்டேன்’ என்று அலுத்துக் கொள்ளும் அளவிற்கு. அவர் ஹசனின் மீது காட்டும் விசேடஅன்பைத் தான் பெறவேண்டும் என்ற அமீரின் ஆசைக்கு ஹசன் விலை கொடுக்கிறான். ஹசன் ஹசாரா என்ற ஷியா பிரிவைச் சேர்ந்தவனாதலால் இருவரின் எதிரியான ஆஸீஃப் இவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறான். அமீரின் கோழைத்தனம் ஆஸீஃபை எதிர்க்க இயலாமல், அதற்குப் பதிலாக ஹசனை ஊரை விட்டு விரட்டுகிறது. அமீர் அகதியாக அமெரிக்காவில் வளரும் போதும் அவ்வப்போது ஹசனுக்குத் தான் செய்த துரோகம் வதைக்கிறது.

நாவலாசிரியனாக ஆனபிறகு நண்பரின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் செல்லும் அமீரை ஹசனின் மகன் ஷொராஃபைக் காப்பாற்றும் பொறுப்பு வருகிறது. இம்முறையும் அவனின்கோழைத்தனம் வெளிப்பட்டாலும் தாலிபானிய ஆஃப்கானிஸ்தானத்திற்கு செல்கிறான். ஷொராஃப் என்ன ஆனான் என்பது மீதிக் கதை.

வளர்ந்த காலத்தைப் பின் நோக்கிப் பார்க்காத எழுத்தாளர்கள் மிகவும் குறைவு. கதைகள் அந்தச் சூழலைக் கொண்டே உருவாகின்றன. அசோகமித்திரன், சுஜாதா, தி.ஜா,கி.ராஜநாராயணன், வண்ணநிலவன் என்று தமிழில் காணலாம். எழுதும்போதே தன்னை அறியாமல் ஒரு நெகிழ்வு வந்துவிடும். மறுபடியும் அதே வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும்பேராசை தெரியும்.

காலெத்தின் நாவலும் அதையே முயற்சிக்கிறது. மன்னர் ஆட்சிகாலத்தை ஒரு நீண்ட பெருமூச்சுடன் வாழ்கிறது. பட்டம் விடும் கலையைத் துடிப்புடன் விவரிக்கிறது. போட்டியில் இறுதிப் பட்டத்தை அறுப்பதோடு முடிவடைவதில்லை. அதைக் கைப்பற்றினால்தான் இறுதி வெற்றி.

அமீர், தந்தையின் அன்புக்காக ஹசனின் வாழ்க்கையைப் பட்டம் போல் அறுத்தாலும், ஹசன் கீழே விழவில்லை. காற்றில் அலைந்து அமீரின் கண்களில் அவ்வப்போது தென்பட்டுக் கொண்டிருக்கிறான். அவனின் மகன் வழியே அமீர் ஹசனின் வாழ்க்கைப் பட்டத்தை பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கிறான்.

எடுத்துக்கொண்ட களம் கனமானது. கதாசிரியர் அதை எப்படிக் கையாண்டிருக்கிறார்? ஆரம்ப முதல் ஒன்று நிச்சயம். சரியான அமெரிக்க எடிட்டரிடம் இந்தப் புத்தகம் சென்றிருக்கிறது. பிசிறில்லாத, கச்சிதமான, கல்லூரி மாணவர்கள் முதற்கொண்டு, நடுவயதினர், முதியவர் வரையான படிப்பவர்களைக் கவரும் நடை. சம்பவங்கள் உற்சாகப்படுத்தும் வகையான, அதே சமயம் மேற்கத்திய இஸ்லாமியப்(அல்லது தாலிபானிய) புரிதலை சற்றும் கலைக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளன. படிப்பவரை ரொம்பக்கஷ்டப்படுத்தாத ஒற்றைப் பரிமாணப் பாத்திர வார்ப்புகள்.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஹசன்: உயிரெடுத்ததே அமீருக்கு சேவை செய்ய எனும் அண்ணாமலை பாத்திரம். அமீர் தன்னை அடிக்கச் சொன்னாலும் தானே தன்னை அடித்துக்கொள்கிறான். ஆனால்இவனின் வெகுளித்தனம் ரசிக்கத்தக்கதாக வெளிப்படும் இடங்களும் கதையில் இருக்கின்றன. உதாரணமாக அமீர் ஆங்கில வார்த்தைக்குத் தப்பான அர்த்தம் கொடுப்பதைஅப்படியே நம்புவது.

ஆசீஃப்: அறிமுகமாகும்போதே ஹிட்லர் விரும்பியாக, நலிந்தோரை வதைத்து தன் வலிமையை நாட்டுபவனாகத் தெரிய வருகிறான். ஒரே காரணம் அவன் தாயார் ஜெர்மனியைச்சேர்ந்தவள். இது போதாதா, நாஸி கொள்கையை வலியுறுத்த?

சுரையா: அவ்வப்போது சுடர்த் தெறிப்பாக, பிரகாசமாகத் தெரிந்தாலும் சரியான வடிவம் பெறவில்லை.

அமீரின் தந்தை: கதையில் நல்ல உருவாக்கம் என்றால் இவர்தான். ஒருவிதமான முரட்டுத் தோற்றத்தில் அதே சமயம் மென்மையானவராக, அசல் கனவானாகவடிவமைக்கப்பட்டிருக்கிறார். அமீரின் துரோகம் அவருக்குத் தெரியாமல் போகும் அதே சமயம் தன் துரோகத்தையும் அமீருக்குத் தெரியாமல் புதைத்து வைக்கிறார்.

ரஹீம் கான்: அமீரின் தந்தையின் நண்பர். அமீரின் வாழ்க்கையில் முக்கியமான இடங்களில் எப்படியோ குறுக்கிட்டு விடுகிறார்.

கதை எழுதும்போதே படமாக்குவது என்று முடிவு செய்தார்களா என்று தெரியவில்லை. அமீர், ஹசன் நட்புப் படலங்கள் பழைய ரஜினி, சரத்பாபு காட்சிகளை நினைவூட்டும் அபாயம் உண்டு. உதா: அமீர் தன்னை ஹசன் அடிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த ஹசன் தன்னையே மாதுளம் பழத்தால் அடித்துக்கொள்வது (விளையாடறிங்களா?).

இப்படிச் சலிப்பூட்டும் பழைய உத்திகள், சம்பவங்கள் உள்ள இடங்கள் பல. இத்தனைக்கும் ஆசிரியர் இந்தப் பழைய பாணிகள் பற்றி ஓர் இடத்தில் பகடி செய்கிறார். அதைப்போல’தற்செயல்’ நிகழ்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை. அமீர் தாலிபானிய காபூலில் ஷொராஃபைத் தேடும்போது தெருவில் வசிக்கும் முதியவரை சந்திக்கிறான். என்ன ஆச்சரியம்!…அவர் அவன் பார்க்காத தாயாருடன் வேலை பார்த்தவர்! ஆனால் படிப்பவனை சிரிக்க விடாமல் தடுப்பது அமீர் தன தாயாரைப் பற்றி அவரிடமிருந்து அறியத் துடிக்கும் பரபரப்பு. தங்கத்துக்கு ஜலிக்கும் சல்லடையில் ஆங்காங்கே மண், கல் நடுவே ஜொலிக்கும் துகளாக ஆசிரியர் பளிச்சிடும் இடங்கள் ஓரளவு பரவலாக இருப்பதால் பொறுத்துக் கொள்ளலாம். இன்னொரு தற்செயல் ஆசீஃப் மீண்டும் தோன்றும் இடம். காலெத்-ன் கதை ஹசனை ஆப்கானிஸ்தானாக உருவகப்படுத்த முயன்றிருக்கிறது. ஆனால் கதை பின்னிய விதம் மதிய நேர தொலைக்காட்சித் தொடராக மாறிவிட்டது.

The Swallows of Kabul

Yasmina_Khadra_Swallows_Of_Kabul_Books_Library_Read_Afghanகாலெத்திற்கு எதிர் உருப் போல உள்ளவர் யஸ்மினா. கதை தாலிபானிய காபுலில் நிகழ்கிறது. மொத்தமே நான்கு பாத்திரங்கள். ஆதிக் தாலிபான் அரசில் சிறைக் காப்பாளன். முஸாரத், அவனின் இறந்து கொண்டிருக்கும் நோயாளி மனைவி, மோஷென் மற்றும் அவன் மனைவி ஜுனைரா. ஆதிக் 80-களில் ரஷ்யப் படைகளை எதிர்த்த ஜிகாதி. மோஷென் அவனுக்கு நேர் எதிராக படித்தவன், மென்மையானவன், மனைவியை உயிராய் காதலிப்பவன்.

கதை ஆரம்பத்தில் ஒரு பெண் குற்றவாளி கல்லடிபட்டு கொல்லப்படுவதற்குக் கொண்டுவரப்படுகிறாள். மைதானத்தில் மக்கள் கல்லால் அவளை அடிக்கும்போது மோஷேன் ஓர் உந்துதலில் அவர்களோடு சேர்ந்து கல்லெறிகிறான். எல்லாம் முடிந்ததும் தான் செய்தது புரிய மனைவியிடம் புலம்புகிறான். ஜுனைரா அதிர்ந்து போகிறாள். சில நாட்கள்பேசாமல் இருவரும் தன்னையே வருத்திக் கொள்கிறார்கள். சிறிது மனம் தெளிந்து சந்தைக்குப் போகும் இடத்தில் மோஷேனின் கோழைத்தனம் அவன் மனைவியை வெறுக்கவைக்க அது அவர்கள் இருவரின் வன்முறையில் வெடித்து மோஷென் உயிரிழக்கிறான்.

ஜுனைராவுக்கு தாலிபான் மரண தண்டனை விதிக்க அவள் ஆதிக்-ன் சிறைச்சாலையில் அடைபடுகிறாள். ஆதிக் அவளைத் தற்செயலாகப் பார்த்து அவளின் அழகில் மனதைப் பறிக்கொடுக்கிறான். என்ன ஆனது என்பது மீதிக் கதை.

தாலிபானின் மூச்சுத் திணற வைக்கும் வாழ்க்கையை மிகத் திறமையாக எழுத்தில் (அதுவும் சுருக்கமாக) ஆரம்பத்திலேயே கொண்டு வந்துவிடுகிறார்:

“…amid the hush of stony places and the silence of graves, in this land of dry earth and arid hearts, that our story is born, like the water lily that blooms in a stagnant swamp.”- என்ற அறிமுகத்துடன்.

ஆதிக்கின் தர்மசங்கடமான இல்லறம், அதை நண்பன் உதறச் சொல்லும்போது அவனின் பலவீனமான மறுப்பு, ஜூனைராவைப் பார்த்ததும் அவனின் மாற்றம், அதைத் தன் நோயாளிமனைவியிடம் பகிர்ந்து கொள்வது என்று தரையில் கால் பாவும் கதாபாத்திரமாக வருகிறான்.

அதுபோலவே மோஷெனின் பல அடுக்குகளில் அவனின் உணர்ச்சிகள்…கல்லெறிந்துவிட்டு மனைவியிடம் “நான் என்னை இழந்து கொண்டிருக்கிறேன்’ என்று கதறுகிறான். சந்தையில் மனைவி முன் தன் கோழைத்தனத்தை வெளியிட்டு அவள் அதை சுட்டியவுடன், இன்னும் கோழையாக அவளைத் தாக்க முயன்று விழ்ச்சியடையும் பாத்திரமாக வாழ்கிறான்.

குறைந்த இடங்களில் வந்தாலும் முஸாரத் கதையின் முக்கியமான திருப்பத்தில் உண்மையான காதலை வெளிப்படுத்துகிறாள்.

ஜுனைரா பாத்திரம் சரியான வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் தன் கணவன் செய்த செயலால் மன அமைதி இழந்து, பின் தெளிந்தாலும் மோஷெனின் கோழைத்தனத்தை நேரில் கண்டவுடன் அடையும் சீற்றம் படிப்பவரையும் தொற்றிக்கொள்கிறது. சிறையில் ஆதிக்-ன் வேண்டுகோளை ஏற்றாலும் இறுதியில் அவள் எடுக்கும் முடிவு கதையை முழுமை பெற வைக்கிறது.

இவை அனைத்திலும் பின்புலமாக தாலிபான்.

Yasmina_Khadra_Authors_Morocco_Writers_English_Westயஸ்மினா எழுதும் கதைகள் மத அடிப்படைவாதத்தின் விளைவுகளை வன்முறை கலந்து சொல்கின்றன. The Sirens of Baghdad சதாமிற்குப் பின்னான இராக் வன்முறைகளை ஆவணப்படுத்துகிறது. அவரின் மிகச்சிறந்த கதையான The Attack ஒரு கணவன் தன மனைவி எப்படி தற்கொலைப் போராளியானாள் என்பதற்கான விடையைத் தேடும்முயற்சியைச் சொல்கிறது. கதைகள் ஓர் இறுக்கமான முழு அடக்குமுறை ஆளும் சமுதாயத்தின் எதிர் விளைவுகளையும் கதாபாத்திரங்கள் அதற்குக் கொடுக்கும் விலைகளையும் விவரிப்பவை. விறுவிறுப்பாக கதை நிகழ்ச்சிகள் இருந்தாலும் கவனமான படிப்பைக் கோருபவை. ஆனால் இவர் படைப்புகளில் அடிநாதம் என்பதே கிடையாது. ஒரு விதமான ரன்னிங் கமென்ட்ரியாக, தட்டையான விவரணையில் கதை ஓடிக்கொண்டிருக்கும். இது பலவீனம். ஆனால் இவரின் எழுத்துக்களும் மேற்கத்திய புனைவுகளுக்கான சந்தையைக்குறிவைத்து எழுதப்படுகிறது. அதில் மிகத் தீவிரமான எழுத்துக்கள் அவ்வளவாக செல்லாது. ஆனாலும் யஸ்மினாவின் முயற்சியில் காலெத்தின் புனைவுகளை விட அதிகத் தீவிரம் காணலாம்.

இரண்டு புத்தகங்களும் ஒரே பின் புலத்தில் பாத்திரங்களை உலவ விட்டிருக்கின்றன. இரண்டிலும் தாலிபானிய கொடூரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. Kite Runner அந்தக் கொடூரங்களை பட்டம் போல உயரத்திலிருந்து பார்க்கிறது. அதை விட்டு விலகி ஓடத் துடிக்கிறது. The Swallows of Kabul கொடூரங்களைப் பாத்திரங்களின் ஊடே நடமாடவிட்டு அதிலிருந்து மனிதத்தைத் தேட முயல்கிறது. யஸ்மினா கதாசிரியராக வெற்றி பெறுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.