துளை வழியினூடே

டோரிஸ் லெஸ்ஸிங்  1922-2013
டோரிஸ் லெஸ்ஸிங்
1922-2013

இம்மாதம் 17-ம் தேதியன்று (17-11-2013) ஆங்கில எழுத்தாளர் டோரிஸ் லெஸ்ஸிங் தனது 94வது வயதில் இறந்தார். பெர்ஸியாவில் (இன்றைய இரான்) 1922-ல் பிறந்த டோரிஸின் இளமைப் பருவம் ஜிம்பாப்வேயில் கழிந்தது. அவரது தாயார் இவருக்குப் போட்ட கட்டுப்பாடுகள் இவருக்குச் சிறுவயதிலேயே சமுதாயக் கட்டடுப்பாடுகளுக்கிடையில் தனிமனித (பெண்கள்) விடுதலை பற்றிய சிந்தனைகள் வளரக் காரணமாய் இருந்தன. 14 வயதிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டாலும், இங்கிலாந்திலிருந்து வந்த புத்த்கங்களை நிறையப் படித்துத் தன் எழுத்தார்வத்தையும் இலக்கிய அறிவையும் வளர்த்துக் கொண்டார். இரண்டு திருமணங்களுக்குப் பிறகு, தன் மூன்றாம் குழந்தையை மட்டும் அழைத்துக் கொண்டு இங்கிலாந்துக்குத் திரும்பி, எழுத ஆரம்பித்தார். இதற்காக இவர் பலமுறை விமரிசிக்கப் பட்டிருந்தும் அதை அவர் பொருட்படுத்தவில்லை. தாய்மை, குழந்தை வளர்ப்பு போன்ற கடமைகள் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றி இவரது பல கதைகளில் பேசியிருக்கிறார். இவரது கதைகள் பெரும்பாலும் இவருடைய வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பிறந்தவை. ஆப்பிரிக்காவில் இவர் இருந்த நாட்களில் பார்த்த இன வேறுபாடுகள், அவற்றிடையே இருந்த மோதல்கள், அநீதிகள் இவற்றைப் பற்றித் தொடராய் பல கதைகள் எழுதியுள்ளார். அதே போல் பெண்களின் தனிமனித விழைவுகள் உரிமைகள் போன்றவை இவரது எழுத்தில் அடிக்கடி காணப்படும் கருக்கள்.. மனித உள உணர்வுகளை மிகத் தெளிவாய்ச் சித்தரிப்பது இவரது எழுத்தின் சிறப்பு. தன்னை ஓர் எல்லைக்குள் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் சிறுகதைகள், நெடுங்கதைகள், நாவல்கள், வாழ்க்கை நிகழ்ச்சிக் கோவைகள், நாடகங்கள், ஆபரா (opera), நாடகக்கதைகள், அறிவியல் புதினங்கள் எனப் பலவகைகளில் எழுதி வந்தார்.

பலமுறை பரிந்துரைக்கப்பட்டபின், 2007ல் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டது.. விருது பற்றிய செய்தியுடன் பல பத்திரிக்கையாளர்கள் இவர் வீட்டு வாயிலில் காத்திருக்கையில், ஒரு பரபரப்பும் இன்றித் தான் வெளியே போய் வர உபயோகித்த காருக்குப் பணம் கொடுப்பதில் அதிக மும்முரமாயிருந்தது இணையத்தில் பரவலாய்ப் பகிரப்பட்ட விஷயம்.

“நான் ஏன் எழுதவேண்டும் என எனக்குத் தெரியாது.. அது நான் செய்யவேண்டிய ஒன்று.  சில காலம் எழுதவில்லையென்றால், நான் சிடுசிடுப்பானவளாக மாறிவிடுகிறேன். எழுதுவதை நிறுத்த வேண்டிவந்தால், நான் என் கதைகளை உரக்கச் சொல்லிக் கொண்டு தெருக்களில் அலைய ஆரம்பித்து விடுவேன்.” என்று இவர் சொல்வார்.

Through the Tunnel எனத் தலைப்பிட்ட இக்கதை தந்தையை இழந்த ஒரு பதினொரு வயது பாலகனுக்கும் அவன் தாய்க்கும் இடையேயான பந்தம், அதன் எல்லைகளின் மெல்லிய இழைக்கோடுகள், அப்பாலகன் தன்னைப் பெரியவனாய்க் காட்டிக்கொள்ள முனையும் போராட்டம் , இதன்மூலம் அவன் தனது வாழ்வின் அடுத்த பருவத்துக்குள் நுழைதல், போன்றவற்றை யதார்த்தமாய் எந்தவித அதீத உணர்ச்சி வெளிப்பாடுகளும் இன்றிச் சித்தரிக்கிறது. இனி கதைக்குள்:

துளை வழியினூடே

விடுமுறையின் முதல் நாள் காலை கரையோரம் போன ஆங்கிலச் சிறுவன் பாதை திரும்பும் ஓரிடத்தில் நின்று கட்டுக்கடங்காமலும், பாறைகள் நிறைந்ததாயும் இருந்த விரிகுடாவை குனிந்து பார்த்தபின், முந்தைய பல வருடங்களாய் அவன் நன்கு அறிந்த நெரிசலான கடற்கரையைப் பார்த்தான். அவன் தாய் அவனுக்கு முன்னால் பளிச்சென்ற கோடுகள் போட்ட ஒரு பையை ஒரு கையில் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தாள். முன்னும் பின்னும் நெகிழ்வாய் ஆடிக்கொண்டிருந்த அவளது இன்னொரு கை சூரியவெளிச்சத்தில் மிக வெண்மையாய் இருந்தது. ஆடைகளால் மூடப்படாத அந்த வெண்மையான கையைக் கவனித்த சிறுவன் பின் ஒரு சுளித்த கண்களுடன் விரிகுடாவைப் பார்த்துப் பின் திரும்பவும் தன் தாயை நோக்கி பார்வையைத் திருப்பினான்.

அவன் தன்னுடன் இல்லை என்பதை உணர்ந்து அவள் சுழன்று திரும்பினாள். “ஓ, இதோ இருக்கிறாயா ஜெர்ரி!” என்றாள். முதலில் பொறுமையற்றவள் போலத் தோன்றி, பிறகு புன்னகைத்தாள். “ஏன் கண்ணா, என்னுடன் வரப் பிடிக்கவில்லையா? உனக்குப் பிடித்தது….” அவனுடைய விருப்பங்களைத் தான் கவனிக்காமல் இருந்துவிட்டோமோ என்ற கடமையுணர்ச்சியில் தோன்றிய கவலைகளில் அவள் முகம் சுளித்தது. அந்தக் கவலைதோய்ந்த, மன்னிப்புக் கோரும் புன்னகை அவனுக்கு மிகப் பரிச்சயமானது. அவனது குற்ற உணர்வு அவனை அவள் பின்னே ஓட வைத்தது. இருந்தும், அவன் ஓடும்போது, திரும்பி கட்டுப்பாடற்ற விரிகுடாவை.பார்த்தான். பாதுகாப்பான கரையோரத்தில் விளையாடிக்கொண்டிருந்த அந்தக் காலைப்பொழுது முழுவதிலும் அவன் அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான்.

அடுத்தநாள் காலை, நீச்சலுக்கும் சூரியவெளிச்சத்தில் உடலை கிடத்துவதற்குமான வழக்கமான நேரத்தில் அவன் தாய் அவனிடம் சொன்னாள்: “ எப்போதும் போகும் கடலோரம் உனக்கு அலுக்கிறதா? உனக்கு வேறு எங்காவது போக விருப்பமா?”

‘இல்லையில்லை” என வேகமாய்ச் சொன்னான், புன்னகையுடன், தவறாமல் தோன்றும் குற்ற உணர்வுடனும், ஒருவகையான பரிவுடனும்.  இருந்தும் அவளுடன் பாதையில் நடந்துபோகையில் அவன் உளறிவிட்டான்  “அதோ அங்கிருக்கும் பாறைகளைப் போய்ப் பார்க்க  ஆசையாயிருக்கிறது.”

அவள் அவன் சொன்னதைக் கவனமாய் யோசித்தாள். அது கொஞ்சம் கரடுமுரடாய் தோன்றிய இடம், அங்கு வேறெவரும் இல்லை, இருந்தும் அவள் சொன்னாள், “கண்டிப்பாகப் போ ஜெர்ரி. உனக்குப் போதும் எனும்போது, பெரிய கடற்கரைக்கு வா. இல்லை உனக்கு வில்லாவுக்குப் போகவேண்டும் என்றிருந்தால் நேரே அங்கே போய்விடு,” என்றாள், முந்தைய தினத்தின் சூரிய வெப்பத்தால்  சற்றே சிவந்திருந்த வெறுமையான கரம் முன்னும் பின்னும் ஆட அவள் நடந்து போனாள். அவள் தனியாய் போவதைத் தாங்கமுடியாமல் அவன் அவள் பின்னே ஓட நினைத்து, பின் ஓடவில்லை. அவள் யோசித்துக்கொண்டிருந்தாள், “நிச்சயம் நானில்லாமலேயே பாதுகாப்பாய் இருக்குமளவு அவனுக்கு வயதாகிவிட்டது. நான் அவனை அதிக நெருக்கமாய் வைத்திருக்கிறேனோ. என்னுடன் இருக்க வேண்டும் என்பதை ஒரு கட்டாயமாய் அவன் நினைக்கக் கூடாது. நான் கவனமாய் இருக்க வேண்டும்.” அவன் அவளுடைய ஒரே குழந்தை, பதினோரு வயது.. அவள் கணவனை இழந்தவள். அதிக உரிமையுடனும் இருக்கக்கூடாது அதே சமயம் ஈடுபாட்டுக் குறைவுடனும் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள். அவள் கவலையுடன் தன் கடற்கரைப் பகுதிக்குச் சென்றாள்.

தாய் அவளுடைய கடற்கரையை அடைந்ததைப் பார்த்தபின் ஜெர்ரி வளைகுடாவை நோக்கிய செங்குத்தான பாதையில் இறங்கினான். பழுப்புச் சிவப்பான பாறைகளிடையே உயரத்தில் அவன் இருந்த இடத்திலிருந்து விரிகுடா அசையும் நீலப்பச்சையில் வெள்ளை விளிம்புகளுடன் குடைந்தெடுக்கப்பட்ட ஒரு சிறு பகுதியாய்த் தெரிந்தது. அவன் கீழே போகப்போக, அது கடலைத்தொட்டுக்கொண்டிருக்கும் நிலத்தின் முனைகளிலும், கரடுமுரடான கூர்மையான பாறைகளின் இடைவெளிகளிலும் படர்ந்திருந்ததைப் பார்த்தான். சுருள்களுடன் அலைபாயும் மேற்பரப்பு கருநீலமாயும், அடர்ந்த நீலமாகவும் தெரிந்தது. கடைசிச் சில கஜங்களை அவன் சறுக்கிக் கொண்டும்,, உரசிக்கொண்டும் ஓடியபோது வெள்ளையாய் நுரைத்திருந்த விளிம்பையும், வெண் மணலின் மீது ஆழம் குறைவாய் பிரகாசமாய்த் தெரிந்த நீரின் அசைவையும் பார்த்தான் அதற்கப்பால் கனமான, அழுத்தமான நீலம்.

அவன் நேரே நீரை நோக்கி ஓடி நீந்த ஆரம்பித்தான். அவன் நீச்சலில் தேர்ந்தவன். மினுமினுக்கும் மணலின் மேல் வேகமாய் ஓடி, சாயமிழந்த ராட்சதர்கள் போன்ற பாறைகள் பொதிந்திருந்த நடுப்பகுதியைத் தாண்டி, நிஜமான கடலில் இருந்தான். வெதுவெதுப்பான கடலில், அதன் ஆழத்திலிருந்து அவ்வப்போது கிரமமின்றி வந்த குளிர்ச்சியான நீரோட்டங்கள் அவனது அங்கங்களை அதிர்ச்சியடையச் செய்தன.

அத்தனை தூரத்தில் இருந்தபோது அவனால் அச்சிறிய வளைகுடாவை மட்டுமல்லாது, அதற்கும் அகண்ட கடற்கரைக்கும் இடையேயான பகுதியில் நீட்டிக் கொண்டிருந்த நிலத்தின் முனைக்கப்பாலும் பார்க்க முடிந்தது. நீரின் நொய்ம்மையான மேற்பரப்பில் மிதந்துகொண்டே அவன் தன் தாயைத் தேடினான். ஓர் ஆரஞ்சுப் பழத் தோலின் விள்ளல் போல் தெரிந்த குடையின் கீழ் ஒரு மஞ்சள் புள்ளியாய் தூரத்தில் அவள் அங்கே தெரிந்தாள். அவள் அங்கிருக்கிறாள் என்ற நிம்மதியுடன் அவன் கரைக்கு நீந்தி வந்தான், அதே நேரத்தில் அவனுள் ஒரு தனிமை.

வளைகுடாவின், ஒரு சிறுமுனையின் விளிம்பில்,கடலில் நீட்டிக்கொண்டிருக்கும் நிலமுனைப்பகுதியின் அப்புறத்தில், பாறைகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. அவற்றின் மேல் சில பையன்கள் தங்கள் ஆடைகளைக் களைந்து கொண்டிருந்தார்கள். அப்பாறைகள் வரை அவர்கள் நிர்வாணமாய் ஓடிவந்தார்கள். ஆங்கிலச் சிறுவன் அவர்களை நோக்கி நீந்தினான் ஆனால் அவர்களிடமிருந்து கல்லெறியும் தூரத்தை வைத்துக்கொண்டு நீந்தினான். அவர்கள் அக்கரையைச் சேர்ந்தவர்கள், அவர்கள் அனைவரின் சருமமும் சீரான ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இருந்தது, அவர்கள் அவனுக்குப் புரியாத மொழியில் பேசினர். அவர்களுடன் இருக்கவேண்டும், அவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்ற ஆசை அவனை முழுவதுமாய் நிறைத்தது. இன்னும் சற்று சமீபமாய் நீந்தினான்;அவர்கள் அவன் பக்கம் திரும்பி  விழிப்பான, கருமையான கண்களைச் சுருக்கி அவனைக் கவனித்தனர். பிறகு ஒருவன் புன்னகையுடன் கையசைத்தான். அவனுக்கு அது போதுமாயிருந்தது. ஒரே நிமிடத்தில் அவன் நீந்தி அவர்களுடன் பாறைகளின் மேல் இருந்தான் அசட்டு நம்பிக்கையும், கெஞ்சலும் சேர்ந்த புன்னகையுடன்.  அவர்கள் ஆரவாரமான வாழ்த்துக்களுடன் அவனை வரவேற்றனர்; அவன் இன்னும் தனது புரிதலற்ற, பதற்றமான புன்னகையுடன் இருப்பதைப் பார்த்து அவன் தனது கடற்கரையிலிருந்து விலகி வந்த அன்னியநாட்டவன் என்று புரிந்துகொண்டு அவனைப் புறக்கணிக்கத் தலைப்பட்டனர். ஆனால் அவனோ அவர்களுடன் இருப்பதில் மகிழ்ச்சி அடைந்தான்.

throguh the tunnel1

ஓர் உயரமான இடத்திலிருந்து கரடுமுரடான, கூர்மையான பாறைகளுக்கு இடையில் இருந்த ஒரு கடல் கிணற்றில் அவர்கள் மீண்டும் மீண்டும் குதித்தவண்னம் இருந்தனர். தாவிக் குதித்து மேலே வந்ததும் அவர்கள் சுற்றிலும் நீந்தி, தங்களை மேலுக்கெழுப்பி, மீண்டும் குதிக்கத் தம் முறைக்காகக் காத்திருந்தனர். அவர்கள் பெரிய பையன்கள், ஜெர்ரியின் பார்வையில் வளர்ந்த ஆண்கள். அவன் தண்ணீரில் குதிப்பதை அவர்கள் கவனித்தார்கள்.; பின்பு அவன் சுற்றி நீந்தி வந்து தன்னிடத்தில் நிற்க வந்தபோது அவனுக்கு வழி விட்டனர். அதை அவர்களின் தன்னை ஏற்றுக்கொண்டதாய் நினைத்துக் கொண்டு அவன் மீண்டும் நிரில் குதித்தான்., கவனமாய், தன்னைப் பற்றிய பெருமையுடன்.

உடனே அவர்கள் அனைவரிலும் பெரிய பையன் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, தண்ணிருக்குள் சீறிப்பாய்ந்து, வெளியே வரவேயில்லை. மற்றவர்கள் அதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.; வழுவழுத்த பழுப்புத் தலையின் தோற்றத்துக்காகக் காத்திருந்த ஜெர்ரி, எச்சரிக்கைக் குரல் எழுப்பினான்.; மற்றவர்கள் அவனை வெறுமே திரும்பிப் பர்த்துவிட்டுப் பின் நீரை நோக்கிப் பார்வையைச் செலுத்தினர். வெகுநேரத்துக்குப் பின், மிகக் கருத்த ஒரு பாறைக்குப் பின்னாலிருந்து நுரையீரலிலிருந்து காற்றை எச்சில் தெறிக்கும் பெருமூச்சாய் விட்டுக்கொண்டு ஒரு வெற்றிக் களிப்புடன் அவன் வந்தான். உடனே மற்றவர்களும் தாவிக் குதித்தனர்.. கலகலவென்று பேசிக்கொண்டிருந்த பையன்களால் ஒருகணத்துக்கு நிறைந்திருந்த அந்தக் காலையின் அடுத்தக் கணத்தில், காற்றிலும் நீரின் பரப்பிலும் ஒரு வெறுமை. ஆனால் அந்தக் கனத்த நீலத்தினூடே, கருமையான வடிவங்கள் நகர்வதும், அளைவதும் தெரிந்தது.

ஜெர்ரி தண்ணிருக்குள் குதித்து நீரினடியில் நீந்திக்கொண்டிருந்த கூட்டத்தை வேகமாய்த் தாண்டியபின், ஒரு கரிய பாறைச் சுவர் அவன் முன்னே வியாபித்திருந்ததைப் பார்த்து, அதைத் தொட்டு உடனே முங்கி மேல்பரப்பிற்கு அவன் வந்தபோது அச்சுவருக்கு அப்பால் பார்க்குமளவு குறைந்த தடுப்பாக அது இருந்ததைப் பார்த்தான். அவனுக்குக் கீழே நீரில் யாரும் தெரியவில்லை, நீந்திக்கொண்டிருந்தவர்களின் மங்கலான வடிவங்கள் மறைந்து விட்டிருந்தன.. சற்று நேரத்துக்குப் பின் குறுக்கே தடுத்திருந்த பாறையின் அந்தப் பக்கமிருந்து ஒவ்வொருவராய் அந்தப் பையன்கள் மெலெழும்பி வந்த போது அவர்கள் பாறையிலிருந்த ஏதோவொரு இடுக்கு அல்லது ஓட்டையின் வழியே நீந்திப்போயிருப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டான். அவன் மீண்டும் நீரில் மூழ்கினான். கண்களில் எரிச்சலூட்டிய உப்புத்தண்ணீர் வழியே பெரும் பாறையைத் தவிர எதையும் காண முடியவில்லை. அவன் மேலே வந்தபோது அந்தப் பையன்கள் அனைவரும் மீண்டும் தம் சாகசத்தைச் செய்யத் தயாராய் அவர்கள் குதிக்க உபயோகிக்கும் பாறையின் மேல் நின்றிருந்தனர். இப்போது தோல்வியைப் பற்றிய பரிதவிப்பில் “என்னைப் பாருங்கள்! பாருங்கள்!” என்று ஆங்கிலத்தில் உரக்கக் கத்தி, பின் ஒரு முட்டாள்தனமான நாயைப் போல நீரை தெளிப்பதும் உதைப்பதுமாய் இருந்தான்.

அவர்கள் குனிந்து அவனைக் கடுமையாய் பார்த்தபடி முகத்தைச் சுளித்தனர். அந்தச் சுளிப்பு அவனுக்குத் தெரிந்த ஒன்று.. தோல்வியான கணங்களில், தன் தாயின் கவனத்தைப் பெற அவன் கோமாளித்தனமாய் நடக்கும்போது, இதே போன்ற சங்கடமான பார்வையிடலைத்தான் அவள் அவனுக்கு வெகுமதியாய் தருவாள். அவனைச் சுட்ட அவமானத்துடன், அழிக்க முடியாத ஒரு முகத் தழும்பு போன்ற இளிப்புடன், பாறை மேலிருந்த பழுப்பு நிறமுடைய அந்தப் பெரிய பையன்களைப் பார்த்து “போன் ஜூர்! மெர்ஸி! ஓ ரெவ்வா! மொஸ்யர், மொஸ்யர்!” எனக் கத்திக்கொண்டே தன் காதுகளைச் சுற்றி விரல்களை வளைத்து அவற்றை மேலும் கீழும் அசைத்தான்.

வாய்க்குள் விரைந்த நீரால் மூச்சுத் திணறி, தண்ணீரில் மூழ்கி, பின் மேலெழும்பினான். அதுவரையில் அந்தப் பையன்களால் கனத்திருந்த பாறை அவர்களது கனம் நீங்கியதும் தண்ணிரிலிருந்து எழும்புவதுபோல் இருந்தது. இப்போது அவர்கள் அவனைத் தாண்டிப் பறந்து, நீரில் விழுந்து கொண்டிருந்தனர்: அவனைச் சுற்றிய வெளி கீழே விழும் உடம்புகளால் நிரம்பியிருந்தது. அதன்பின் வெப்பமான சூரியவெளிச்சத்தில் அந்தப் பாறை மட்டும் வெறுமையாய் இருந்தது. ஒன்று, இரண்டு, மூன்று என அவன் எண்ண ஆரம்பித்தான்… ஐம்பதில் அவனுக்குக் கிலி பிடித்தது. பாறையின் நீர்குகைகளுக்குள் அவனுக்குக் கீழே அவர்கள் மூழ்கிக் கொண்டிருக்க வேண்டும்! நூறில், அவனைச் சுற்றியிருந்த அந்தக் காலியான மலைப்பகுதியை வெறித்துப்[ பார்த்தபடி உதவி கேட்டுக் கத்த வேண்டுமா என யோசித்தான். இன்னும் வேகமாய் எண்ண ஆரம்பித்தான், அவர்களை அவசரப்படுத்த, அவர்களை மேல்பரப்புக்கு வேகமாய்க் கொண்டுவர, அவர்களை மூழ்கடிக்க, எது வேண்டுமானாலும், இந்தக் காலையின் நீல வெறுமையில் எண்ணிக்கொண்டே இருக்கும் பயங்கரத்தைத் தவிர ஏதேனும் நடக்க அவன் அவசரமாய் எண்ணிக்கொண்டு போனான். அதற்குப் பின் நூற்றி அறுபதில், பாறையைத் தாண்டியிருந்த நீர் முழுவதும் பழுப்புத் திமிங்கிலங்களைப் போலக் காற்றை ஊதிக்கொண்டிருந்த பையன்களால் நிரம்பியிருந்தது. அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் அவர்கள் கரைக்குத் திரும்பி நீந்தினர் அவன் அவர்கள் குதிக்க உபயோகித்த பாறையின் மீது ஏறி உட்கார்ந்தான், அவன் தொடைகளுக்குக் கீழ் அதன் உஷ்ணமான முரட்டுத்தனத்தை உணர்ந்தபடி. அந்தப் பையன்கள் தங்கள் ஆடைகளைச் சேகரித்துக் கொண்டு கடலினுள் நீட்டிக்கொண்டிருந்த இன்னொரு நிலமுனைப்பகுதிக்கு ஓடினர். அவர்கள் அவனிடமிருந்து விலகிப் போவதற்காகச் சென்று கொண்டிருந்தனர்.. முஷ்டிகளைக் கண்களில் பதித்தபடி அவன் வெளிப்படையாய் அழுதான். அவனைப் பார்க்க அங்கு யாரும் இல்லை, அதனால் அழுது தீர்த்தான்.

வெகுநேரம் ஆகிவிட்டதுபோல அவனுக்குத் தோன்றியது. தன் தாயைப் பார்க்க முடிந்த இடத்துக்கு நீந்திப் போனான். ஆம், அவள் அங்கேயேதான் இருந்தாள், ஆரஞ்சு வண்ணக் குடையின் கீழ் ஒரு மஞ்சள் புள்ளியாய்.. மீண்டும் அந்தப் பெரிய பாறைக்கு நீந்திப் போய், அதன் மேலேறி, கூரிய பற்களுடன் கோபமாய் இருந்த பாறைகளிடையே இருந்த நீலக் குளத்தினுள் குதித்தான்.. பாறையின் சுவரை மீண்டும் தொடும் வரை அவன் கீழே போனான். நீரின் உப்பால் கண் வலித்ததில் அவனால் எதையும் பார்க்க முடியவில்லை. நீரின் மேல்பரப்புக்கு வந்து, கரைக்கு நீந்தி வில்லாவுக்குத் திரும்பிப் போய் தன் தாய்க்காகக் காத்திருந்தான். சற்று நேரத்தில் அவள் தன் கோடு போட்டப் பையை முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டு, தன் சிவந்த ஆடையற்ற கரம் பக்கத்தில் தொங்க மெதுவாய் நடந்து வந்தாள். “எனக்கு நீச்சல் கண்ணாடி வேண்டும்” என்று பிடிவாதமும் கெஞ்சலுமாய் பதைபதைப்புடன் சொன்னான்.

அவள் பொறுமையும், கேள்வியுமாய்  நிறைந்த பார்வையுடன் சர்வசாதாரணமாய் “ கண்டிப்பாய் கண்ணா” என்று சொன்னாள்.

இல்லை இப்போ, இப்போ, இப்போதே! அவனுக்கு அது இந்த க்ஷணமே தேவை, வேறெப்போதும் இல்லை. அவள் அவனுடன் கடைக்கு வரும் வரை அவன் அவளைப் பிடுங்கித் தொணதொணத்தான்.  அதை வாங்கிய உடனே, ஏதோ அவள் அதை தனக்கு என்று சொல்லிவிடுவாள் என்பதுபோல அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்டு, அந்த செங்குத்தான பாதையில் விரிகுடாவை நோக்கி ஓடினான்.

ஜெர்ரி அந்த பெரிய தடுப்புப் பாறையை நோக்கி நீந்தி, தன் கண்ணாடியை சரிசெய்துகொண்டு குதித்தான். தண்ணிரில் மோதியதும் கண்ணாடியின் பிடிப்பு தளர்ந்தது. நீரின் மேல்பரப்பிலிருந்து பாறையின் அடிப்பாகத்துக்கு நீந்திச் செல்லவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டான். கண்ணாடியை இறுக்கமாய்ப் பொருத்தி சரிசெய்துகொண்டு, நுரையீரலில் காற்றை நிரப்பிக்கொண்டு, நீரின் மேற்பரப்பில் குப்புறப் படுத்து மிதந்தான். இப்போது அவனால் பார்க்க முடிந்தது.  அவனுக்கு வித்தியாசமான கண்கள், மீன்களுடையதைப்போல, கிடைத்தைப் போலிருந்தது. அந்தக் கண்கள் வெளிச்சமான நீரில் தெளிவாய், நுண்மையாய், அசைந்துகொண்டிருக்கும் அனைத்தையும் அவனுக்குக் காட்டின…

ttt2

அவனுக்குக் கீழே, ஆறு ஏழு அடிகளுக்கு அடியில் அலைகளினால் கெட்டிப்படுத்தப்பட்ட சுத்தமான, பளிச்சிடும் வெண்மணல் இருந்தது.. மரத்தாலோ ஸ்லேட்டினாலோ ஆன நீண்ட உருண்டையான துண்டுகளைப்போல் காணப்பட்ட இரண்டு சாம்பல் நிற வடிவங்கள் அங்கு அலைந்து கொண்டிருந்தன. அவை மீன்கள்.  ஒன்றின் மூக்கை  நோக்கி இன்னொன்று போய், அசைவற்று நின்று, பின் முன்னால் பாய்ந்து, நகர்ந்து போய் சுற்றித் திரும்பி வருவதைக் கண்டான். அது ஒரு நீர் நடனம் போலிருந்தது. அவனுக்கு  சில அங்குலங்களுக்கு மேல் நீரினூடே அலங்காரத் தகடுகள் வீழ்ந்துகொண்டிருப்பதைப் போல் பளபளவென்றிருந்தது. அவன் கைநகத்தளவே இருந்த நூற்றுக்கணக்கான மீன்கள் நீரில் திரிந்துகொண்டிருந்தன. ஒரே கணத்தில் அவற்றில் பலவற்றின் சின்னஞ்சிறு தொடுகையை அவன் அங்கங்கள் முழுதும் உணர்ந்தான். வெள்ளிக் குமிழ்களிடையே நீந்துவதைப் போல இருந்தது.. அந்த பெரிய பையன்கள் நீந்திப்போன பாறை வெண்மணலிலிருந்து கருப்பாய் ஆங்காங்கே பச்சை கடற்புல்களாலான பச்சைக் குடுமிகளுடன் மேல்நோக்கி சாய்ந்து நின்றிருந்தது.. அதில் ஓர் இடுக்கையும் அவனால் காண முடியவில்லை. அவன் அதன் அடிபாகத்தை நோக்கி நீந்தினான்.

அடிக்கடி மேலெழும்பி, நெஞ்சுக்கூட்டை காற்றால் நிரப்பிக்  கொண்டு மீண்டும் கீழே போனான். மீண்டும் மீண்டும் அந்தப் பாறையின் மேல்புறத்தை தடவி, ஏறக்குறைய அணைத்து, எப்படியாவது அதனுள் நுழையும் வாசலைக் கண்டுபிடித்துவிடவேண்டும் என்று யத்தனித்தான். அதன்பின் ஒருதரம் அவன் அந்தக் கறுப்புச் சுவற்றைப் பற்றிக் கொண்டிருக்கையில், அவனது முட்டி மேலே வந்து அவன் காலை முன்னே தள்ளியபோது அங்கு ஒரு தடையும் இருக்கவில்லை. அவன் அந்த ஓட்டையைக் கண்டுபிடித்திருந்தான்.

அப்பரப்பை அடைந்து, தடுப்புப்பாறையைச் சுற்றிலும் சிதறிக்கிடந்த கற்களின் மேலேறி ஒரு பெரிய கல்லை அடைந்தான். அதைக் கையில் எடுத்துக்கொண்டு பாறையின் பக்கமாய்த் தன்னை கீழே இறக்கினான்.. நங்கூரம் போல அந்தக் கல்லை கெட்டியாய் பிடித்துக்கொண்டு, பக்கவாட்டில் கிடந்து தன் கால் உள்ளே போன இடத்திலிருந்த அடுக்கு போன்ற இடத்திற்குக் கீழே பார்த்தான். இப்போது அவனால் துளைவழி போன்ற ஓட்டையைப் பார்க்க முடிந்தது. அது சீரற்ற, இருட்டான ஓர் இடைவெளி; ஆனால் அவனால் அதை வெகு ஆழமாய் பார்க்க முடியவில்லை. அவன் தனது நங்கூரத்தைக் கைவிட்டு, அந்த ஓடைகளின் விளிம்புகளைப் பற்றித் தொங்கி,  தன்னை உள்ளே தள்ள முயற்சித்தான்.

அவன் தலையை உள்ளே புகுத்தினான், தோள்கள் சிக்கிக் கொண்டன, அவற்றைப் பக்கவாட்டில் நகர்த்தி, இடுப்பளவுக்கு உள்ளே போய் விட்டதை உணர்ந்தான்.முன்னே எதையும் அவனால் பார்க்க முடியவில்லை. மிருதுவாய் பிசுபிசுப்பாக எதுவோ அவன் வாயைத் தொட்டது; சாம்பல் வண்ணத்தில் தெரிந்த பாறைக்கெதிரே கருமையான இலைகள் போல எதுவோ தெரிந்தது. அவனுள்ளே திகில் நிரம்பியது. ஆக்டோபஸ்களையும் , உடலில் ஒட்டிக்கொள்ளும் களைகளையும் பற்றி நினைத்தான். தன்னைப் பின்புறம் தள்ளிக்கொண்டு பின்வாங்குகையில் ஆபத்தில்லாத கடல்வாழ் செடியின் கொடி ஒன்று அந்தத் துளை வழியின் வாயிலில் அசைந்துகொண்டிருப்பதைப் பார்த்தான். ஆனால் அவனுக்கு இப்போதைக்குப் போதும் என்றிருந்தது. அவன் சூரியவெளிச்சத்தை அடைந்து, கரைக்கு நீந்தி, குதிக்க உபயோகித்த பாறையின் மேல் கிடந்தான். கீழே இருந்த நீலக் கிணறு போன்ற தண்ணீரை குனிந்து பார்த்தான். அந்த குகையோ, ஓட்டையோ, துளை வழியோ, அதற்குள் போய் அடுத்த பக்கமாய் வெளியே வரவேண்டும் என்பதை அறிந்துகொண்டான்.

முதலில் மூச்சைக் கட்டுப்படுத்தவேண்டும் என நினத்துக் கொண்டான். திரும்பவும் இன்னொரு கல்லைக் கையில் பிடித்துக் கொண்டு நீரில் அமிழ்ந்தான். ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணினான். நிதானமாய் எண்ணினான். அவனது நெஞ்சுக்கூட்டில் ரத்தஓட்டத்தை அவனால் கேட்கமுடிந்தது. ஐம்பத்தொன்று, ஐம்பத்திரண்டு.. அவன் நெஞ்சு வலித்தது. பாறையிலிருந்து கைப்பிடியை விட்டு, மேலே காற்றுக்குள் போனான். சூரியன் கீழே இறங்கியிருப்பதைப் பார்த்தான். வில்லாவுக்கு வேகமாய் திரும்பிப் போனபோது அவனுடைய தாய் மாலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் “சந்தோஷமாய் இருந்ததா?” என்று மட்டும் கேட்டாள். அவன் “ஆமாம்” என்றான்.

இரவு முழுவதும் பையன் பாறையில் நிரம்பி இருந்த நீரைப் பற்றிக் கனவு கண்டான். காலையுணவு உண்டதுமே விரிகுடாவுக்குச் சென்றான்.

அன்றிரவு அவனுடைய மூக்கிலிருந்து அதிகமாய் ரத்தம் கசிந்தது. தன் மூச்சைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பழகுவதற்காக பல மணி நேரங்களுக்கு நீரின் அடியில் இருந்திருந்தான். இப்போது அவனுக்குத் தளர்வாகவும், தலைசுற்றுவது போலவும் இருந்தது. அவன் தாய் சொன்னாள்: ‘உன் இடத்தில் நான் இருந்தால், இவ்வளவு அதீதமாய் காரியங்களைச் செய்யமாட்டேன்.”

அன்றும் அதற்கடுத்த நாளும் எதோ தன் வாழ்க்கை முழுவதுமே , அதில் என்னவெல்லாம் நடக்கக் கூடுமோ அவை அனைத்துமே அதைத்தான் நம்பி இருக்கிறது என்பதைப் போலத் தன் நுரையீரலை பயிற்சி செய்தான். அன்றிரவும் அவன் மூக்கில் ரத்தம் வழிந்தது. அவன் தாய் மறுநாள் அவன் தன்னுடன் வருவது மேல் என வற்புறுத்தினாள். அவனுடைய கவனமான பயிற்சியில் ஒரு நாளை வீண் செய்வது போல் இருந்தாலும் அவன் தாயுடன் அன்று போனான். அந்தக் கடற்கரை இப்போது சிறு பிள்ளைகளுக்கானதாகவும், அவன் தாய் சூரிய வெளிச்சத்தில் பத்திரமாய் இருக்கக்கூடிய ஒன்றாகவும் அவனுக்குத் தொன்றியது. ஆனால் அது அவனுக்கான கடற்கரை அல்ல.

அடுத்த நாள் தன்னுடைய கடற்கரைக்குப் போக அவன் அனுமதி கேட்கவில்லை. அவனுடைய தாய் அவ்விஷயத்தில் எது சரி, சரியில்லை என்பது போன்ற சிக்கலான விஷயங்களை யோசிப்பதற்கு முன்பே அவன் போய்விட்டான். ஒரு நாள் ஓய்வு அவனுடைய மூச்சுப் பிடிக்கும் எண்ணிக்கையை பத்து எண்களுக்கு உயர்த்தியிருந்ததை அவன் கண்டறிந்தான். அவன் நூற்றியறுபது எண்ணும்போது அந்த பெரிய பையன்கள் குகையைக் கடந்திருந்தனர். பயத்தில் அவன் வேகமாய் எண்ணியிருந்தான். இப்போதுகூட அவன் முயற்சித்தால் அந்தத் துளைவழியைக் கடக்க முடியுமோ என்னவோ ஆனால் அவன் அதை இப்போது முயற்சிக்கப் போவதில்லை. சிறுபிள்ளைத்தனம் சற்றும் இல்லாத ஒரு விநோதமான, பிடிவாதம், கட்டுப்பாடான ஒரு பொறுமையின்மை அவனைக் காக்க வைத்தது. இடைப்பட்ட வேளையில், நீரினடியே வெள்ளை மணலில் மேலிருந்து அவன் கீழே கொண்டு வந்திருந்த கற்களுக்கிடையே படுத்து, அக்குகையின் வாயிலை ஆராய்ந்தபடி இருந்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலிருந்த அதன் மூலை முடுக்கெல்லாம் அவனுக்குத் தெரிந்திருந்தது. அவன் தோள்களைச் சுற்றி அதன் கூர்மையை அவனால் ஏற்கனவே உணரமுடிந்தது.போல் இருந்தது.

வில்லாவில் அவன் தாய் அருகே இல்லாதபோது அவன் கடிகாரத்தருகே உட்கார்ந்து மூச்சை எத்தனை நேரம் பிடிக்க முடியும் என்று பரிசோதித்தான். சிரமமில்லாமல் இரண்டு நிமிடங்களுக்கு முச்சைப் பிடிக்க முடியும் என்பதை முதலில் நம்பமுடியவில்லை, பின் பெருமையாயிருந்தது. கடிகாரத்தால் உறுதிப்படுத்தப்பட்ட ‘இரண்டு நிமிடங்கள்’ என்ற வார்த்தைகள் அவனுக்கு மிகவும் தேவையாயிருந்த அந்த சாகசத்தை அருகே அழைத்து வந்தன.
ஒரு நாள் காலையில் இன்னும் நான்கு நாட்களில் அவர்கள் வீடு திரும்பவேண்டும் என்று அவன் தாய் பேச்சுவாக்கில் சொன்னாள். அவர்கள் கிளம்பும் நாளைக்கு முதல் நாள் அதைச் செய்ய முடிவு செய்தான். அது தன்னைக் கொன்றாலும் சரி, அதைச் செய்வேன் என்று தனக்குள் பிடிவாதமாய் சொல்லிக் கொண்டான். ஆனால் அவர்கள் கிளம்பவேண்டியதற்கு இரண்டு நாட்களுக்கு முந்தைய தினம், அவன் தன் மூச்சுக்கட்டுப்பாட்டை பதினைந்து எண்கள் உயர்த்தி வெற்றி பெற்ற தினத்தன்று அவனுடைய மூக்கில் ரத்தம் மிக மோசமாய் வழிந்ததில் அவனுக்குத் தலை சுற்றி அந்தப் பாறையின் மேல் ஒரு மெலிந்த கடல் செடியைப் போல , தன் ரத்தம் பாறையின் மேல் விழுந்து கடலில் மெதுவாய் சொட்டுவதைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான். அவனுக்குப் பயமாயிருந்தது. துளை வழிக்குள் அவனுக்குத் தலை சுற்றினால்? அதனுள்ளே சிக்கிக் கொண்டு அவன் செத்துப் போய்விட்டால்? ஒருக்கால்… சூரியனின் வெப்பத்தில் அவன் தலை சுழன்றது, அவன் ஏறக்குறைய தன் திட்டத்தைக் கைவிட்டுவிட்டான். வீடு திரும்பிப் படுத்துவிடலாம் என்று நினைத்தான். அடுத்தக் கோடையில், அவனுள் இன்னொரு வருட வளர்ச்சிக்குப் பின், அந்த ஓட்டைக்குள் போக முயற்சிக்கலாம் என்று தீர்மானித்தான்.

அப்படித் தீர்மானித்த போதே அல்லது தீர்மானித்து விட்டதாய் அவன் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, அவன் அந்தப்  பாறையில் எழுந்து உட்கார்ந்து கீழே இருக்கும் நீரைப் பார்த்தான்; இப்போதே, இந்தக் கணமே, அவனுடைய மூக்கிலிருந்து ரத்தம் வழிவது அப்போதுதான் நின்றிருந்த போதே, அவன் தலை இன்னும் வலியுடன் துடித்துக்கொண்டிருந்தபோதே, இதோ இந்தக் கணத்திலேயே அவன் அதை முயற்சிக்கவேண்டும், இல்லையெனில் அவன் எப்போதுமே அதை முயற்சிக்கப் போவதில்லை என்பது அவனுக்குத் தெரிந்தது.. அவன் பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தான், அவனால் போக முடியவில்லை; கடலடியில் இருந்த நீண்ட துளை வழியை நினைத்து அவன் பீதியால் நடுங்கினான். திறந்த சூரியவெளிச்சத்திலும் கூட, அந்தத் தடுப்புப் பாறை மிக அகண்டதாய், கனமானதாய்த் தெரிந்தது, அவன் போகவேண்டிய இடத்தில் மிகக் கனமான பாறை அழுத்திக்கொண்டிருந்தது. அவன் அங்கு இறந்துபோனால், ஒருவேளை அடுத்தவருடம் அந்தப் பையன்கள் அதனுள் நுழைந்து அது அடைந்து கிடைப்பதைப் பார்க்ககும் வரையில் அங்கேயே கிடப்பான். அவன் கண்ணாடியை அணிந்தான்., அதை இறுக்கி, காற்றுப்புகாமல் இருக்கிறதா என்று பார்த்துச் சரிசெய்தான். அவன் கைகள் நடுங்கின. பின் அவனால் தூக்க முடிந்த பெரிய கல்லை அந்தப் பாறையின் பக்கமாய் எடுத்துப் போய் பாதி உடம்பு அவனைச் சுற்றிவளைத்த குளிர்ந்த நீரிலும் பாதி உடம்பு சூரியனின் வெப்பத்திலும் இருக்கும்வரை வழுக்கிப் போனான்.. வெறுமையாயிருந்த ஆகாயத்தை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தான், தன் நுரையீரலைக் காற்றால் ஒருமுறை, இருமுறை நிரப்பிக் கொண்டு பின் வேகமாய் அந்தக் கல்லுடன் நீரின் அடிப்பாகத்துக்கு முங்கினான்..கல்லை விடுவித்துவிட்டு எண்ண ஆரம்பித்தான். ஓட்டையின் விளிம்புகளைக் கையில் பிடித்துக்கொண்டு தோள்களைப் பக்கவாட்டில் நெளிக்க வேண்டும் என்று நினைவுபடுத்தியவறே நெளித்து, பாதங்களால் தன்னை உதைத்துக் கொண்டு அதனுள்ளே தன்னை நுழைத்தான்.

விரைவில் அவன் முழுவதுமாய் உள்ளே இருந்தான்.. மஞ்சளும் சாம்பல் நிறமும் கலந்த நிறமான நீரால் நிறைந்து, கற்பாறையால் சூழ்ந்த ஓர் ஓட்டையினுள் அவன்  இருந்தான்..நீர் அவனை உச்சிப்பகுதியை நோக்கி மேல்நோக்கித் தள்ளிக் கொண்டிருந்தது. உச்சிப்பகுதியின் கூர்மை அவன் முதுகில் வலி ஏற்படுத்தியது. கைகளால் தன்னை முன்னே தள்ளினான் – வேகமாய், வேகமாய்  -கால்களை நெம்புகோலாய் உபயோகித்தான். அவன் தலை எதிலோ இடித்தது, வலியின் உச்சத்தில் அவனுக்குத் தலை சுற்றியது. ஐம்பது, ஐம்பத்தொன்று, ஐம்பத்திரண்டு… வெளிச்சம் இல்லாமல் இருந்தான், பாறையின் கனத்துடன் நீர் அவனை அழுத்துவது போலிருந்தது. எழுபத்தி ஒன்று, எழுபத்திரண்டு…அவன் நுரையீரலில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. அவன் ஒரு காற்றடைத்த பலூன் போல உணர்ந்தான், அவனது நுரையீரல் இலேசாய், சுலபமாய் வேலை செய்தது ஆனால் அவனது தலை துடித்தது.

அடிக்கடி அவன் கூர்மையான உச்சிப் பகுதிக்கெதிரே அழுத்தப்பட்டான், அது கூர்மையுடன் பிசுபிசுப்பாகவும் இருந்தது. மீண்டும் அவன் ஆக்டோபஸ்களை நினைத்தான், இந்தக் குகையில் அவனைச் சிக்கிப் பிடிக்கும் செடிகள் இருக்குமோ என்று நினைத்தான். பதற்றமாய் நடுக்கத்துடன் உதை ஒன்றை தனக்குக் கொடுத்து முன்னே போய், தலையைக் குனிந்து நீந்தினான். அவனுடைய கையும் காலும் தடையின்றி திறந்த நீரில் இருப்பதுபோல நகர்ந்தன. ஓட்டை அகலமாகியிருக்கவேண்டும். தான் வேகமாய் நீந்திக்கொண்டிருக்கவேண்டுமென்று நினைத்தான், குகை குறுகினால் தலையில் முட்டிக் கொள்வோம் என்று பயந்தான்.

நூறு, நூற்றி ஒன்று.. நீர் வெளிறியது. வெற்றியுணர்வு அவனுள் நிறைந்தது. அவனது நுரையீரல்கள் வலிக்க ஆரம்பித்தன. இன்னும் சில வீச்சுகள்தான், அவன் வெளியே வந்துவிடுவான். அவன் வெறித்தனமாய் எண்ணினான். நூற்றுப்பதினைந்து , பின் வெகுநேரத்துக்குப் பின், மீண்டும் நூற்றுப்பதினைந்து.  நீர் அவனைச் சுற்றிலும் ஆபரணப் பச்சையில் இருந்தது. பின்னர், தலைக்கு மேல் பாறை முழுதும் ஓடிக்கொண்டிருந்த ஒரு விரிசலைப் பார்த்தான். அதன் வழியே வீழ்ந்த சூரிய ஒளியில் குகையின் சுத்தமான, இருண்ட பாறையும், ஒருகிளிஞ்சலும் தெரிந்தன, முன்னால் இருள்.

அவன் தன் ஆற்றலின் இறுதியில் இருந்தான். அந்த விரிசலின் வழியே வெளிச்சத்துக்குப் பதிலாய் காற்று வந்து, அதில் தன் வாயைப் பொருத்தி உறிஞ்ச முடியுமா என்பதுபோல் அந்த விரிசலைப் பார்த்தான்.. அவன் தலையினுள் நூற்றுப்பதினைந்து என்று அவன் சொல்வது கேட்டது- ஆனால் அதை அவன் வெகு நேரத்துக்கு முன் சொல்லியிருந்தான். முன்னே இருந்த இருளுக்குள் அவன் போய்த்தான் ஆக வேண்டும், இல்லையெனில் அவன் மூழ்கிப் போவான். அவன் தலை வீங்கிக்கொண்டிருந்தது, நுரையீரல்கள் விரிசல் காண ஆரம்பித்திருந்தன. அவன் தலையில் நுற்றுப்பதினைந்து, நூற்றுப்பதினைந்து என்று இடித்துக் கொண்டிருந்தது, அவன் இருளில் பலவீனமாய்க் கற்களைப். பற்றிக் கொண்டு, சற்று நேரமே கிடைத்த வெளிச்சமான நீரைப் பின்னே விட்டுவிட்டுத்  தன்னை முன்னுக்கு இழுத்துப் போனான். தான் இறப்பதுபோல உணர்ந்தான். அவன் பிரக்ஞையுடன் இல்லை. அவ்வப்போது சுயநினவை இழந்த நிலையில் அந்த இருளில் அவன் தடுமாறி முன்னே போனான். மிகப்பெரிதாய், வளர்ந்துகொண்டே போன வலி ஒன்று அவன் தலையை நிரப்பியது, அதன் பின்  இருளில் பச்சை நிறத்தின் வெடிப்புடன்  ஒரு விரிசல். முன்னே அளைந்து கொண்டிருந்த கைகளில் எதுவும் தென்படவில்லை, பின்னே உதைத்த கால்கள் அவனைத் திறந்த கடலுக்குள் உந்தித் தள்ளின.

அவன் மெதுவாய் மேல்பரப்புக்கு நகர்ந்து வந்தான், அவனது முகம் காற்றை நோக்கி மேலே திரும்பியது. ஒரு மீனைப் போல மூச்சுத் திணறிக்கொண்டிருந்தான்.. தான் இப்போது நீரில் அமிழ்ந்து மூழ்கிவிடுவோம் என நினைத்தான்; பாறையை அடைய இருந்த சில அடிகளை அவனால் நீந்த முடியவில்லை . அதன் பின் அதைப் பிடித்துக் கொண்டு அதன் மேல் ஏறிக் கொண்டிருந்தான். குப்புறப்படுத்து நெடுமூச்சு வாங்கினான். சிவந்த ரத்தநாளங்களுடன், உறைந்த இருளைத் தவிர அவனால் எதையும் காண முடியவில்லை. தன் கண்கள் வெடித்திருக்க வேண்டுமென அவன் நினைத்தான், அவை ரத்தத்தால் நிரம்பியிருந்தன. அவன் தன் கண்ணாடியை கழற்றியபோது ரத்தத் துளிகள் கடலை நோக்கிச் சென்றன. அவன் மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது, அது கண்ணாடியை நிரப்பியிருந்தது.

சில்லென்று உப்பு கரிக்கும் கடலிலிருந்து கைகளால் நீரை அள்ளி முகத்தில் தெளித்துக் கொண்டான். அவன் வாயில் கரித்தது ரத்தமா, இல்லை உப்புநீரா என்று அவனுக்குத் தெரியவில்லை. சற்று நேரத்துக்குப் பின் அவனுடைய இதயம் அமைதியானது, கண்கள் தெளிவாகின. அவன் எழுந்து உட்கார்ந்தான். அரை மைலுக்கப்பால் உள்ளூர் பையன்கள் நீரில் தாவிக் குதித்து விளையாடுவதைக் காண முடிந்தது. அவர்கள் அவனுக்கு வேண்டாம். வீட்டுக்குத் திரும்பிப் போய் படுத்துக் கொள்வதைத்தவிர எதுவும் அவனுக்குத் தேவையாய் இருக்கவில்லை.

இன்னும் சற்று நேரத்தில் ஜெர்ரி கரைக்கு நீந்தி, வில்லாவுக்குப் போகும் பாதையில் மெதுவே ஏறி நடந்தான். படுக்கையில் விழுந்து தூங்கிப்போனான். வெளியே இருந்த பாதையில் காலடி சப்தம் கேட்ட போது விழித்தான். அவன் தாய் திரும்பியிருந்தாள். அவள் ரத்தக்கறைகளுடன் அல்லது கண்ணீர்கறைகளுடன் தன்னைப் பார்த்துவிடக் கூடாதே என்று அவன் ஒப்பனையறைக்கு விரைந்தான். அவள் புன்னகையுடன், கண்கள் பிரகாசிக்க, உள்ளே நுழைதபோது அவன் ஒப்பனையறையிலிருந்து வெளியே வந்து அவளை சந்தித்தான்.

‘காலை எப்படிப் போயிற்று,  நன்றாய் போனதா?” எனக் கையை அவனுடைய மிதமான பழுப்புத் தோள்களில் வைத்தபடி கேட்டாள்.

“ஆமாம்” என்றான்

“ வெளிறி இருக்கிறாய்” என்றவள் உட்னே உஷாராகி கவலையுடன் “உன் தலையை எங்கே இடித்துக் கொண்டாய்?” என்றாள்.

“ஓ, சும்மாதான் இடித்துவிட்டது” என்றான்.

அவனை நன்றாகப் பார்த்தாள். அவன் சோர்வாயிருந்தான், அவன் கண்கள் கண்ணாடிபோல் இருந்தன. அவளுக்குக் கவலையாய் இருந்தது. பின் தனக்குள் சொல்லிக் கொண்டாள், “ ஓ, ரொம்ப அலட்டிக்கொள்ளாதே! ஒன்றும் ஆகாது. அவன் மீன் போல நீந்தக் கூடியவன்.”

மதிய உணவு சாப்பிட ஒன்றாய் உட்கார்ந்தார்கள்.

‘மம்மி” என்றன் அவன், “என்னால் நீருக்கடியில் குறைந்த பட்சம் இரண்டு நிமிடம், மூன்று நிமிடம் இருக்க முடியும்” அது அவனிடமிருந்து பீறிட்டுக் கொண்டு வந்தது.

“முடியுமா கண்ணா?” என்றாள் அவள், “ஆனால் நீ அதை மிகவும் அதிகமாய் செய்யக் கூடாது. இன்றைக்கு நீ திரும்ப நீந்தவேண்டாமென்று நினைக்கிறேன்.”

அவள் அவனுடைய பிடிவாததுடன் மோதத் தயாராய் இருந்தாள், அவனோ உடனே சரி என்று விட்டான். விரிகுடாவுக்குப் போவது இனிமேல் அவ்வளவு முக்கியமானதாக இல்லை.

 தமிழாக்கம்- உஷா வை

இச்சிறுகதையின் ஆங்கில மூலத்தை இங்கே படிக்கலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.