இணைய உரையாடல் – பெற்றோர்- குழந்தைகள் உறவு

ஜேம்ஸ்:

ஆருஷி தல்வார் கொலைவழக்கில் அவளது பெற்றோர்களையே கொலைக்குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சியாயில்லை? பெற்றோர்களுக்கும் – குழந்தைகளுக்கும் இடையான உறவில் இத்தனை சிக்கல்களா?

அகி:

பல குடும்பங்களில் பெற்றோர்-பிள்ளைகள் இடையே உரையாடல்களே இருப்பதில்லை. பெற்றோரிடம் இவை இவற்றைப் பற்றி, அல்லது இந்த இந்த விதத்தில்தான் பேச முடியும் என்றிருக்கிறது. அதனால், குழந்தைகளால் தம் தேவைகளையோ பிரச்சனைகளையோ வெளிப்படுத்த முடிவதில்லை. அத்தகைய உரையாடல்களுக்கு பெற்றோருக்கு பொறுமை இருப்பதில்லை, இல்லை நேரமிருப்பதில்லை. நேரத்திற்கு பதில் பொருட்களைக் கொடுக்கிறார்கள்.

பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் குழந்தை உளவியலைப் பற்றி எத்தனையோ கற்பிக்கப்படுகிறது. ஆனால், நடைமுறையில் வீட்டிலும் பள்ளியிலும் குழந்தைகள்தாம் மற்றவர்களது உளவியலைப் புரிந்துகொண்டு நடந்துகொள்ள பழகிக்கொள்கிறார்கள்.

தேவந்தி:ஒரு விதத்தில் இன்றைய குழந்தைகளுக்கு குழந்தைப்பருவம் என்பது மிகக் குறைந்த வருடங்கள்தான் இருக்கிறதோ? எங்கள் அடுக்ககத்தில் வசிக்கும் ஒரு ருமேனியப் பெண் சொல்வாள். அவள் பெற்றோர் இருவரும் வெகுதூரத்தில் வேலைக்குச் செல்லவேண்டி இருந்ததால், அவள் கழுத்தில் உள்ள செயினில் அவர்களது வீட்டுச் சாவி ஒன்று உண்டாம்.  ஏழெட்டு வயதுச் சிறூமியாய் இருப்பதிலிருந்தே பள்ளியிலிருந்து வேனில் வந்திறங்கி தானே கதவைத் திறந்துகொண்டுபோய்., தானே எடுத்துப் போட்டு சாப்பிட்டு விட்டு, ஹோம்வொர்க் செய்துவிட்டு பெற்றொர் வரும் வரையில் காத்திருப்பாளாம். இன்றைய இந்தியாவில் பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில் வேலைக்காரர்கள் இருந்தாலும் குழந்தைகளுக்கு பெற்றோருடன் பகிரும் நேரம் மிகச் சொற்பமாகவே கிடைக்கிறது.

071019085951-large

ஜேம்ஸ்:

இன்று பல குழந்தைகளுக்கு விளையாட இடமும் இல்லை. நேரமும் இல்லை. அதற்குப் பதிலாய்தான் கணனியில் நேரத்தை செலவிடுகிறார்கள். இது பொது அறிவை வளர்க்க உதவினாலும் பல அபாயங்களுக்கு அவர்களை வெளிக் காட்டிவிடுகிறது. அப்புறம் குழந்தைகளுக்காக அமர்த்தியிருக்கும் வேலைக்காரரகளாலேயே பல அபாயங்கள்.

அகி:

இன்னொரு பக்கம், பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கான எல்லா முடிவுகளையும் தாமே எடுத்துவிடுகிறார்கள். சென்ற வார இறுதியில், என் தோழியைச் சந்தித்ததிலிருந்து மனதில் ஓடிக்கொண்டிருப்பது..

“நந்தவனத்திலொரு ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந்தானொரு தோண்டி
அதைக் கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”

எனக்கு அவளை பள்ளிக் காலத்திலிருந்து தெரியும். அவள் விரும்பிய துறையில் அவளைப் படிக்க வைத்திருந்தால், அவளைச் சுயமாக முடிவெடுக்க ஊக்குவித்திருந்தால் இப்போது எங்கேயோ இருந்திருப்பாள். அவள் வாழ்க்கையைப் பற்றிய எல்லாவற்றையுமே அவள் பெற்றோர் தீர்மானித்துவிட்டார்கள்! தெலுங்கில் ‘பொம்மரிலு’ என்று ஒரு சினிமா வந்தது. கொஞ்சம்கூட மிகையில்லாமல், அப்படித்தான் அவளையும் வளர்த்துவிட்டார்கள். தவமாகவிருந்து பெற்ற பிள்ளை, சிறு வயதில் அவள் கீழே ஓடி விளையாடினால் பாதம் அழுக்காகிவிடும் என்று சுமந்துகொண்டே இருந்ததாக அவள் அம்மா ஒருமுறை சொல்லியிருக்கிறார். நிச்சயம் செய்திருப்பார். அவளது படிப்பிலிருந்து திருமணம் வரை, அவளுக்காக அவரே எல்லாம் யோசித்து முடிவெடுத்துவிட்டார். கடன்பட்டார் நெஞ்சம் போல பிள்ளைகளைக் கலங்கடிப்பதுதான் பெற்றோரின் நிரந்தர நிழல் கொடை என்னும் பிரம்மாஸ்த்திரம்.

குழந்தை வளர்ப்பு என்றால், குழந்தைப் பருவம் வரை மட்டும்தானா என்றால், இல்லை. நம் சமூகத்தில் 21 வயது வரை குழந்தைகளைப் போலத்தானே பார்க்கிறார்கள். பல குடும்பங்களில் திருமணமாகும் வரை கூடக் குழந்தைகளைப் போலத்தான் நடத்துகிறார்கள். அமெரிக்காவிலுமே சில மாகாணங்களிலும் minor வயது வரம்பு 21 என்று கேள்விப்பட்டேன். இது உலகம் பூரா உள்ள நடைமுறையா என்று கேட்கத் தோன்றுகிறது.

பூதம்:

நியு யார்க்கில் 21 வயது ஆனால்தான் சிகரெட் பிடிக்கும் உரிமை தருகிறார்கள். பதினெட்டிலேயே புகை பழக்கம் ஆரம்பிக்க வேண்டாம் என்பதால், இந்த நடைமுறை கூடிய சீக்கிரமே சட்டமாகிறது.

அந்த வயதில் இளைஞர்கள் புகை பிடிப்பதை வளர்ச்சிக்கான அடையாளமாகப் பார்க்கிறார்கள். தானும் பெரிய மனிதர்தான் என்பதைச் சொல்லிக் கொள்ள “ஏ” படம் பார்ப்பது போல் இதையும் பழக்கிக் கொள்கிறார்கள்.

மது அருந்த பெரும்பாலான மாநிலங்களில் 21 வயது வரம்பு ஏற்கனவே அமலில் உண்டு. அது போல் புகைக்கு 21 ஆக்கிய முதல் மாநிலம் நியு யார்க். அப்பொழுதே கிடைக்கச் செய்யாமல் சட்டம் போட்டு நெறிப்படுத்தலாமா? அல்லது சுதந்திரமாக விட்டுவிடலாமா?

பேராசிரியர் கேசவன்:

எப்போது கூட்டை விட்டு வெளியே பறக்க ஊக்குவிப்பது/ தள்ளுவது போன்ற விஷயங்கள் அத்தனை சுளுவானதல்ல. ஒவ்வொரு நபரும் ஒரு விதமாக இருப்பார்கள் என்பதும் இதில் அடங்கும். கோழையாக இருக்கும் நபரை வெளித்தள்ளுவதா வேண்டாமா என்று முடிவெடுப்பது மிகக் கடினம். ஒரு புறம் நாம் இப்படி இரக்கமில்லாமல் செய்யலாமா என்று நம் மனோதர்மம் நம்மைத் தடுக்கும். இன்னொரு புறம் இப்படியே விட்டால் மேன்மேலும் உள்ளொடுங்கி ஒளியில்லாது போய்விடுவார் இந்த இளைஞர் என்ற பயம் நம்மைக் கடுமையோ, அல்லது உறுதியான நடவடிக்கையோ எடுத்து வெளியனுப்பச் சொல்லும்.

கோழைக்கு இப்படி என்றால், மிகத் துடிப்பான ஓர் இளைஞர் குறித்து எதிரான எண்ணங்கள் எழும்.

இத்தனை துடிப்பில் தடம் மாறி ஏதும் செய்து ஆபத்தில் சிக்குவாரோ, அல்லது, உலகமறியாமல் எதையாவது செய்து பெரும் துன்பத்தில் தானும் ஆழ்ந்து, குடும்பத்தையும் ஆழ்த்துவாரோ என்ற பயம் ஒரு புறம், இன்னொரு புறம், guided rails வழியே செயலுக்கு அனுப்பினால் நல்லதாக இருக்குமோ என்ற ஜாக்கிரதை உணர்வு தடுக்கும்.

இவை அனைத்தும் நன்மை கருதி மட்டுமே எடுக்கப்படும் முடிவுகள். இவற்றில் பெற்றோரின் ஆணவம், அவர்களின் மன உளைச்சல்கள் ஏதும் இடையிடவில்லை என்று வைத்துக் கொண்டால் கூட இத்தனை சிக்கல்கள் உண்டு.

பெருவாரியான பெற்றோர் அத்தனை தெளிவாக யோசித்து முடிவெடுப்பவர் இல்லை, ஆனாலும் ஓரளவு பெருவாரிப் பெற்றோர் ஏதோ நல்ல முடிவு எடுப்பதால்தான் இந்திய சமுதாயம் அமெரிக்கச் சமுதாயத்தளவு தலைமுறைகளிடையே பெரும் பள்ளமின்றி இயங்குவதாகத் தெரிகிறது.

தேவந்தி:

இது மாறிவருகிறது. பெற்றோர்- குழந்தைகளிடையே மன அழுத்ததிற்கு இன்னொரு பெரிய காரணம் அவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட முடிவுகளை குழந்தைகளின் ஆர்வம், ஆற்றல் இவற்றிச் சார்ந்து எடுக்காமல் பெற்றோர் தம் கனவுகளை அவர்கள் மேல் திணிப்பதும்தான்., போர்ட் தேர்வுகளுக்கு முன்பு, பரிட்சை முடிவுகள் வெளியாகும்போதும்தான் எத்தனை தற்கொலைகள்!

பேராசிரியர் கேசவன்:

பல விஷயங்களைக் கற்பதில் சிறுவர் சிறுமியரை ஆழ்த்தி வளர்ப்பது நல்லதா, அல்லது அவர்கள் ஆர்வம் காட்டுவது எதுவோ அதில் மட்டும் ஆழ்ந்து போக விடுவது நல்லதா என்பது ஒரு கேள்வி. Tiger mom vs. American mom என்று இதைக் கோணலாக (இன மைய எதிரும் புதிருமான பார்வைகள் இந்த வாதத்தில் இயங்குகின்றன என்பதை மாற்று முத்திரைகளால் மறைத்து) பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சீனப் பெற்றோர் அமெரிக்காவிலும் தம் சமுதாயத்தின் மரபுவழிப் பழக்கமான முறைகளில்தான் வளர்க்கிறார்கள். சூழல் வேறு விதமாக இருப்பதால், ஒரு புறம் போட்டி போடும் சமுதாயத்துக்கான வழி முறைகளில் சீன வளர்ப்பு உதவுகிற போது, இன்னொரு புறம் தனி நபர் சுதந்திரம் நிறைய கொடுக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்க வழியோடு இந்தச் சீன வளர்ப்பு முறை பொருந்தாமல் அந்த இளைஞர்களைப் பல வித உளநிலைச் சிக்கல்களில் ஆழ்த்துகிறது.

tiger_moms

தேவந்தி:

இந்தியப் பெற்றொரும் தம் குழந்தைகளின் படிப்புக்கே மிக முக்கியத்துவம் தருகிறார்கள் போலிருக்கிறதே? கடந்த வருடங்களில் ஸ்பெல்லிங் பீ போன்ற போட்டிகளில் இந்திய வம்சாவளிக் குழந்தைகள்தாம் வென்றிருக்கிறார்கள் இல்லையா? படிப்பில் முன்னிலையில் இருக்குமளவு விளையாட்டு போன்றவற்றில் குடியேறிகளின் குழந்தைகள் அத்தனை முன்னிலையில் இருப்பதில்லையே?

பேராசிரியர் கேசவன்:

பொதுவாக அமெரிக்காவிலும், பல யூரோப்பிய நாடுகளிலும், குடியேறிகள் பெருவாரி பள்ளி/ கல்லூரித் துறைகளில் மேலிடங்களில் இருக்கிறார்கள். ஆனால் பதவிகள், வேலை வாய்ப்புகள், அமைப்புத் தலைமை, ஊடகத் தலைமை எல்லாமும், அனேக விளையாட்டுத்துறை உயர்நிலைகளும் ‘அமெரிக்கரிடம்’தான் அல்லது வெள்ளையரிடம்தான் இருக்கின்றன.

சீனர்களின் வளர்ப்பு முறையால் சீன இளைஞர்கள் அமெரிக்கக் கல்வி நிலையங்களில் அத்தனை உயர் நிலையில் உள்ளனரா, அல்லது அவர்கள் கூட்டாகப் படித்து ஒருவருக்கொருவர் உதவிக் கல்வி அமைப்பைத் தாண்டுவதால் உயர்நிலையா, அல்லது மரபணுப்படி சீனர்கள் அதிபுத்திசாலிகளா என்பன போன்ற பல கேள்விகள் அங்கு அடிக்கடி பொதுத்தளங்களில் சர்ச்சைக்குரியவையான கருத்துகளாகத் தெரிய வருகின்றன.

ஒரு வேளை சீன இளைஞர்கள் கல்வித் துறையைத் தவிர (இசை, சில கலைகளைத் தவிர) வேறெதிலும் நாட்டம் இல்லாத வாழ்க்கை நடத்த நிர்பந்திக்கப்படுவதால் அவர்கள் உண்மையில் குறைப்பட்ட வாழ்வே நடத்துகிறாரா? மாறாக அமெரிக்க வெள்ளையர்கள் நிறைய விளையாட்டு, தேகப் பயிற்சி, படகோட்டம், பனிச்சறுக்கல் என்று சாகசங்களிலும் இறங்குவதால் மேன்மேலும் பூரணமான இளமைக் கால வாழ்க்கையைப் பெறுகிறார்களா என்பதும் யோசிக்கவேண்டிய விஷயங்கள்.

குடியேறிகள் என்கையில், ஆசியக் குடியேறிகளுக்கும், யூரோப்பியக் குடியேறிகளுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. யூரோப்பியரிலேயே கூட கிழக்கு யூரோப்பியரின் பாரம்பரிய வளர்ப்புக்கும், மேற்கு யூரோப்பியர்களின் பாரம்பரிய வளர்ப்பு முறைகளுக்கும் வேறுபாடு உண்டு. முன்னதான வகையினர் குடும்ப வலைப் பின்னலால் ஆசியர்களைப் போல, குழந்தைகளை, இளைஞர்களைக் குடும்பத்தோடு மேலும் இறுகப் பிணைக்கிற வகையினர். மேற்கு யூரோப்பியர்கள் ஓரளவு விட்டுப் பிடித்துச் சுதந்திரத்தை நிறையவும், சீக்கிரமேயும் கொடுக்கிற வகையினர். சுதந்திரம் என்பதில் பாலுறவுக்கான சுதந்திரமும் உண்டு என்பதையும் சொல்ல வேண்டி இருக்கிறது.

file_421210அமெரிக்காவில் ஹிஸ்பானியர்கள் எனப்படும் லத்தீன் அமெரிக்க/ மத்திய அமெரிக்கக் குடியேறிகளின் நிலை யூரோப்பியர் போலவும் இல்லாமல், ஆசியர் போலவும் இல்லாமல் அமைகிறது. யூரோப்பியரும், ஆசியரும் பொதுவாகக் கல்வித் துறைப் பங்கெடுப்பை அதிகமாக வற்புறுத்துவார்கள். யூரோப்பியர் உடல் சார்ந்த இயக்கங்களையும் கூடவே வலியுறுத்துவார்கள்- விளையாட்டு,தேகப்பயிற்சி, சாகசம் ஆகியன இதிலடங்கும். ஹிஸ்பானியர்கள் பொதுவாகக் கல்வித் துறைச் சாதனைகளை அத்தனை முன்னிறுத்தும் நிலையில் இல்லை. அதற்குப் பொருளாதார நிலையும், அமெரிக்காவில் குடியேறுமுன் அவர்களின் கல்வி நிலைகள் எப்படி இருந்தன என்பதும் காரணிகளானாலும், அவர்களில் கணிசமானவர் சட்ட பூர்வமான வழிகளில் குடியேறாமல் உள் நுழைந்திருப்பதால், உயர்கல்வி நிலையங்களில் சேர்ந்து பட்டங்கள் வாங்கும் வழி அவர்களுக்கு அடைக்கப்படுவது நடக்கிறது. குடியுரிமைச் சான்றுகள் இல்லாது உயர்கல்வி நிலையங்களில் சேர்ந்து படிப்பது கொஞ்சம் கடினமான விஷயம்.

இந்தக் காரணிகளின் கூட்டு மொத்த விளைவு, ஹிஸ்பானியர்கள் நடுவே உடலியக்கம் சார்ந்த வழக்கங்கள் அதிகம் மையம் கொண்ட வளர்ப்பு முறை பிரதானமாகிறது.

இந்தியாவிலும் வளர்ப்பு முறை குறித்த சர்ச்சை நடக்கவே செய்கிறது. ஆனால் இங்கு அத்தனை தேர்வுகள் பெற்றோருக்கும், சிறார்/ இளைஞருக்கும் இல்லை என்பதால் இங்கு சர்ச்சை வேறுவிதமாக அமைகிறது. பள்ளிகள் கூடதிகமாக வீட்டுப்பாடம் என்றோ படிக்க வேண்டியவற்றை அமைக்கும் விதத்திலோ பளுவான கல்வி முறையாகவும், சிந்திக்க வழியோ, தேவையோ இல்லாதவையாகவும் உள்ளனவா என்பது ஒரு சர்ச்சைக்கான கேள்வியாக இங்கு அடிக்கடி எழுகிறது. அதே போல பாலுறவுக்கான தேர்வுகள் மீதும் நிறைய சர்ச்சை எழுகிறது. தவிர மரபு சார் பழக்க வழக்கங்களை ஒட்டியோ எதிராகவோ நடப்பது என்பது குறித்த சர்ச்சைகளும் இங்கு நடக்கின்றன.

ஜேம்ஸ்:

இன்றைய இந்தியக் கல்வித் திட்டத்தில் இன்னொரு பிரச்சினை வேலைவாய்ப்பு சார்ந்தது. வளரும் பொருளாதாரத்தில் வேலை வாய்ப்புக்கான துறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. வேலைவாய்ப்பு(சம்பாதிக்க வாய்ப்பு)  அதிகமாயிருக்கும் துறைகளுக்கே போட்டி அதிகம் உள்ளது. இந்தப் போட்டியில் ஜெயிக்கவென ஓடிக்கொண்டிருக்கும் பெற்றொருக்கும் குழந்தைகளுக்கும், அவரவருக்கு அந்தத் துறையில் ஈடுபாடு உள்ளதா இல்லையா என்பதெல்லாம் புரிவதற்குள் காலம் கடந்துவிடுகிறது.. எங்கள் உறவினர் வீட்டுப்பெண் எப்போதும் வகுப்பில் முதலிடம். எஞ்சினியரிங் படிப்பு முடித்து ஐ டி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்துக்குப் பின்புதான் அது எதுவுமே தனக்குப் பிடிக்கவில்லை என்று உணர்ந்தாள். என்ன செய்வது. யோசிக்கவே நேரமில்லாமல் ஓடி நின்றபோது காலம் கடந்துபோச்சு. பள்ளிப்பருவத்திலேயே பெற்றொர் அவளுக்குப் பிடித்தது என்ன என உணர உதவியிருக்கலாம் அல்லது கல்வித் திட்டமாவது சுயமாய் யோசிக்கக் கற்றுத் தந்திருக்கலாம்.

Photo courtesy : timesofindia
Photo courtesy : timesofindia

அகி:என்னதான் பெற்றோர் சொல்லிக் கொடுக்கப் பார்த்தாலும் இன்றையக் குழந்தைகள் peer pressure க்குதான் மதிப்புக் கொடுக்கின்றனர் பதின்ம வயதில் கூட்டாளிகளின் தாக்கத்தை எதிர்ப்பது மிகக் கடினம். இன்றைய இணைய யுகத்தில் இத்தகைய அழுத்தம் அக்கம் பக்கத்திலிருந்து மட்டுமன்றி அமெரிக்கா போன்ற தூர தேசங்களிலிருந்தும் தாக்குகின்றன..  இன்றைக்குக் குழந்தையாக இருப்பது மிகக் கஷ்டமான ஒரு விஷயம்.

தேவந்தி:

பெற்றோராய் இருப்பதும்தான். எத்தனைதான் யோசித்து யோசித்து குழந்தைகளை வளர்க்கப் பார்த்தாலும் கடைசியில் பலருக்கும் மிஞ்சுவது சரியாய்தான் செய்தோமா என்ற ஒரு சந்தேகம்தான்.

விதூஷகன்:

“Your children are not your children.twitter-512
They are the sons and daughters of Life’s longing for itself.
They come through you but not from you,
And though they are with you yet they belong not to you.”

-khalil Gibran

அசரீரி: இதுவோ ஒரு அமெரிக்கக் குடியேறியின் கவிதை. கிருஸ்தவ அரபியராக இருந்த கிப்ரான், பாஸ்டனில் வளர்ந்தார். பிறகு மேற்கில் வசிக்கையில் கவிஞராகத் தெரிய வந்தவர். பல பண்பாட்டியத்துக்கு ஒரு நற்சான்று என்று இவரைச் சொல்லலாமோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.