ஆதாரமற்ற பொருளாதாரம் – பகுதி 3

மே 2ம் தேதி ஒரு டாலரின் நாணய மாற்று விகிதம் 53.6 ரூபாயாக இருந்தது. ஆகஸ்ட் 29ம் தேதி அதுவே 68.1 ரூபாயாக ஆனது.

INR_USD_Chart_Last year

மூன்று மாதத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு ஏறத்தாழ 27% சரிந்தது. இதன் காரணம் என்ன?

இந்திய நாணயம் சரிந்ததும் அரசும் மத்திய ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே பாடிப்பாடிப் புளித்துப் போன அதே பழைய பல்லவியைப் பாடினர். நாம் அளவுக்கதிகமாய் எரிபொருள்களை உபயோகிக்கிறோம், தங்கம் முதலான அத்தியாவசியமில்லாத உலோகங்களை வீட்டில் சேர்க்கிறோம் என நாட்டு மக்களைக் குற்றம் சாட்டி பெட்ரோல்/ டீசல் விலைகளையும் தங்கம் இறக்குமதி செய்யச் சுங்க வரிகளையும் உயர்த்தின. இவை சரியான காரணங்களா?

உலகிலுள்ள அனேக நாடுகளைப் போல இந்தியாவும் தான் உற்பத்தி செய்யும் வர்த்தகப் பொருள்களாகிய ஆடை, தாது கனிவளங்கள், மருந்து, மோட்டார் வாகனங்கள்-அதன் உபரிகள், மென்பொருள், விவசாயம் ஆகிய ஏற்றுமதிப் பொருள்களை விடக் கச்சா எண்ணை, எலக்ட்ரானிக் சாதனங்கள், தங்கம், எஃகு, நிலக்கரி என அதிகமாக இறக்குமதி செய்கிறது. ஆகவே, சீனா போல் வர்த்தகத்தில்  வரவு மிகுதியான நிலையாக (Trade Surplus) இருக்கும் நாடாக இல்லாத இந்தியா, ஒரு வர்த்தகத்தில் வரவுப் பற்றாக்குறையுள்ள (Trade Deficit) நாடாகத் திகழ்கிறது. இதனால் அரசு போடும் பட்ஜெட்டில் துண்டு விழுவது இயல்பு. இந்த நிதிப் பற்றாக்குறையைத்தான் ஒரு நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (Currnet Account Defecit) என்கிறார்கள். ஒரு நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை தன் உற்பத்தியோடு ஒப்பிடுகையில் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அந்த நாட்டின் பொருளாதாரம் அடிப்படையில் பலஹீனமானது எனக் கொள்ளலாம்.

ஆனால் மே மாதத்தில் நாள் ஒன்றுக்கு பத்து கி மீ வாகனம் ஓட்டியவர்கள் ஆகஸ்டில் இருபது கி மீ ஓட்ட ஆரம்பித்துவிட்டர்களா? இல்லை, எல்லா நாளும் அக்ஷய திரிதியையோ சுப முகூர்த்த நாட்களோ வந்தது போல மூன்றே மாதத்தில் நாட்டில் அளவுக்கதிகமான தங்கம் கொள்முதல்தான் நடந்ததா?

அன்றாட நாட்டு நடப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லாமல் மூன்றே மாதத்தில் இந்திய நாணயம் ஒரேடியாகச் சரிந்தது துரதிருஷ்டம் அல்ல. உலகமயமாக்கலும், இந்திய அரசு சரியான நேரத்தில் தன் நாணயத்திற்குச் செய்யாத முதலுதவியும் இதற்குக் காரணங்கள்.

அரசு சுட்டிக்காட்டிய காரணங்கள் அனைத்தும் சரியானவையே. அது ஒரு புறமிருக்க, இந்தத் தடாலடிச் சரிவிற்குக் காரணம் அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகள் தம் சொந்த நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தக் கண்டுபிடித்த நூதனப் பொருளாதாரப் பரிசோதனைகளே காரணம். போன பகுதியில் இந்தப் பரிசோதனைகளுக்கு quantitave easing எனப் பெயர் வைத்தார்கள் எனப் பார்த்தோம். இந்தப் பகுதியில் இந்தியா முதலான வளரும் நாடுகளை அவை எப்படிப் பாதிக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

உலக வர்த்தகத்தின் ஏகபோக நாணயமாகத் திகழ்வது அமெரிக்க டாலரே. அதாவது, இந்தியா சவுதி அரேபியாவிடம் இருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்தால் அந்த வர்த்தகம் இந்திய ரூபாயிலோ சவுதி அரேபிய ரியால்லிலோ நடைபெறுவதில்லை. மாறாக இந்தியா அமெரிக்காவிடம் டாலரை வாங்கித்தான் சவுதி அரசுடன் வணிகம் செய்ய முடியும். ஒருவேளை நம்மிடம் வர்த்தகத்தில் (வரவு) நிதி மிகுதியாக இருக்கும் பட்சத்தில், பிற நாடுகளிலிருந்து நாம் இறக்குமதி செய்த பொருள்கள் போக, கை வசம் நம்மிடம் டாலர் மீதம் இருக்கும். ஆனால் வர்த்தகப் பற்றாக்குறை இருக்கும் இந்தியா போன்ற மற்ற உலக நாடுகள் டாலரைத் தொடர்ச்சியாக அமெரிக்காவிடமோ, உலகப் பணச் சந்தையிலோ வாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்நிலையில் எதிர்பாராமலே வெளிநாட்டு முதலீட்டார்கள் இந்தியா நோக்கி படையெடுத்து வந்து போதும் போதும் எனத் திகட்டும் அளவுக்கு நமக்கு டாலரை புகட்டினால், இதைவிட அதிர்ஷ்டம் வேறு என்னவாக இருக்க முடியும்? வளர்ந்த அரசுகளின் பரிசோதனைகளால் இந்தியாவிற்கு இப்படி ஒரு அதிர்ஷ்டக் காற்று அடித்தது.

அது எப்படியென்றால் அமெரிக்க அரசு தன் பத்திரங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக வாசனை மாறாத மொரு மொரு டாலர் நோட்டுக்களை முதலீட்டாளர்களின் கைகளில் திணிக்கிறது. இப்போது திடீரெனத் தம் கையிருப்புப் பணம் தடித்த முதலீட்டாளர்கள், அடுத்து இந்தப் பணத்தை வேறு எங்கே இதை முடக்கலாம் எனக் கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு துழாவ ஆரம்பிப்பார்கள். அப்போது அவர்கள் கண்ணுக்குக் கவர்ச்சியாகத் தெரிவது இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற வளரும் நாட்டின் பொருளாதாரச் சந்தைகளே. இதனால் சற்றே எதிர்பாரா வண்ணம் இந்நாடுகளை நோக்கி திடீரென டாலர் படையெடுத்து வரும். அவற்றை இந்திய ரூபாயாக மாற்றி வெளிநாட்டு முதலீட்டளர்கள் இந்திய நிறுவனத்தின் பங்குகள், நகரத்தில் முக்கிய இடங்களில் கிடைக்கும் நிலங்கள், கட்டங்கள் எனச் சொத்துக்களை வாங்கிக் குமிப்பார்கள். மேலும் மேலும் அன்னிய மக்கள் இந்திய ரூபாயை வாங்குவதால் அதற்குக் கிராக்கி அதிகமாகும். இதனால் இந்திய நாணய மாற்று விகிதம் நாணய சந்தையில் உயர்கிறது. நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைக்கப் புது டாலர்களை எப்படி நாடலாம் எனச் செயலற்று நிற்கும் அரசுக்கு திடீர் நிவாரணம் கிடைக்கிறது. பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 20000 புள்ளிகளை அனாயாசமாக எட்டிப் பிடிக்கிறது. நீங்கள் அடுத்த மாதம் வாங்க எத்தனித்து ஒத்திப் போட்ட வீடு திடீரெனச் சதுர அடிக்கு ஆயிரம் ரூபாய் அதிகரிக்கிறது.

ஆனால் வளர்ந்த நாட்டு அரசுகளின் பரிசோதனை பலன் அளித்து, அவற்றின் பொருளாதாரம் மறுபடி மீண்டு எழும்போதோ அல்லது அளவுக்கதிகமாய் வெறுமனே பணத்தை அச்சடித்துப் பத்திரங்களை வாங்கிக் கொண்டே இருக்க முடியாது என அந்த அரசுகள் உணரும்போதோ, அவை பத்திரங்களைத் திருப்பி வாங்குவதைக் குறைத்துக் கொள்கின்றன. ஆனால் அப்படிச் செய்தால் அந்தப் பத்திரங்களை வாங்கிக் கொள்ள யாரும் இல்லாமல் அவற்றின் கிராக்கி குறையும். அதனால் பத்திரங்களின் விலை குறையும். அவ்வாறு குறைந்தால் அது அரசுகள் தங்கள் வீட்டிற்குத் தாமே தீ வைத்தது போல் ஆகிவிடும். ஏனெனில் இதுவரை செய்த பரிசோதனைகளின் காரணமாகத் தற்சமயம் அரசுப் பத்திரங்களைப் பெருமளவு வைத்திருப்பது அதே அரசு. இந்நிலையில் பத்திர மதிப்பு குறைந்தால் தான் வைத்திருக்கும் சொத்தின் மதிப்பை தானே குறைத்துக் கொள்வது போல் ஆகிவிடும். இதனால இந்தப் பத்திர வாங்கலைத் தடாலடியாகக் குறைக்காமல் படிப்படியாகக் குறைத்து வந்து அதே சமயம் பொருளாதாரம் மீண்டு வரும் தைரியத்தில் புதுக் கடன் பத்திரங்களை முதலீட்டாளர்கள் மறுபடி வாங்க வரும் சூழலை உருவாக்க வேண்டும். அப்போது பத்திர மதிப்பும் குறையாமல், பொருளாதாரமும் வளர்ந்து அரசுக்கு அது நெருக்கடி நிலையிலிருந்து சீராக வெளிவரத் துணை புரியும். இப்படி அது படிப்படியாகத் தன் பத்திரத்தை வாங்குவதை நிறுத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்குத்தான் அமெரிக்க அரசு மறுபடி ஒரு கவர்ச்சியான பெயர் கொடுத்தது. அதைத்தான் இப்போது ஆங்கிலத்தில் Tapering அதாவது சுருக்குதல் என்கிறார்கள்.

Tapering1

அமெரிக்கா படிப்படியாகச் சுருக்குவதைச் செய்ய ஆரம்பித்தால் குறுகிய காலத்தில் ஓரளவு பத்திர மதிப்புக் குறைவு, பத்திர வட்டி விகிதம் ஏற்றம் ஆகிய விளைவுகள் ஏற்படும். முதலீட்டாளர்கள், இந்தியா வரை போக வேண்டிய அவசியமில்லாமல் தன் தெருவின் முக்குக் கடையிலேயே மறுபடி நல்ல வட்டி கிடைப்பதால் வெளியே முடங்கியிருக்கும் தம் நிதிகளை நகர்த்தி, சொந்த ஊரிலேயே மறுபடி முதலீடு செய்ய முனைவார்கள். இதுதான் ஆகஸ்ட் மாதக் கடைசியில் நடந்தது. அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுநர், தான் சுருக்கத்தை நாடப் போவதாக உத்தேசம் எனச் சொன்னால் அது போதுமானது. மறுநாள் இந்தியா மட்டுமல்லாது ஏனைய பிற வளரும் நாட்டு சந்தைகளிலிரிந்து டாலர் முதலீடு மறுபடி அமெரிக்கா நோக்கி பறக்கும். அதாவது இந்தியா முதலான வளரும் நாடுகள் கொண்டாடிய திடீர் தீபாவளி, அந்நிய முதலீட்டாளர்கள் பணத்தை முடக்க வேறு இடம் கிடைக்காமல் இரண்டாம் பட்சமாக நம்மைத் தேடி வந்த தற்காலிக பம்பர் பரிசு என அவர்கள் காலம் கடந்து உணரும் தருணம் இது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பணம் இந்தியப் பங்குச் சந்தையின் புள்ளிகளை எப்படி நேரடியாகப் பாதிக்கிறது என்பதை இந்தப் படத்தில் பார்க்கலாம்.

FII_Sensex_Relationship

மே மாதம் வெளிநாட்டுப் பல்கலைகழகங்களில் மேல் படிப்பு படிக்க இடம் கிடைத்துப் படிப்புக் கட்டணத்தைத் தயார் செய்த மாணவர்களும் அவரின் பெற்றோர்களும் கண் சிமிட்டுவதர்க்குள் ஆகஸ்டில் 27% அதிகமாகப் பணம் தயார் செய்ய வேண்டி இருந்தது. அதே சமயம் மே மாதம் ரூபாயை செலுத்தி டாலர் வாங்கிய முதலீட்டாளர்கள் அதே அளவு லாபம் பார்த்தார்கள். எந்த அளவிற்கு உலக மயமாக்கல் நம் வாழ்வை வசதிப் படுத்தியிருக்கிறதோ, அதே சமயம் இது போன்ற நாசகரமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இப்பேற்பட்ட விசித்திர உலக மயமாக்கலில் சுக்கிர திசை அடிக்கும் போது அதைத் தன் அரசின் வீரப் பிரதாபம் காரணமாக நாடு சுபிட்சமாக இருப்பதாகக் கொட்டி முழக்கும் அரசியல்வாதிகள், எதிர்மாறான நஷ்டம் ஏற்பட்டு, சனி தசை ஆரம்பம் ஆனதும் அதற்கு உலகப் பொருளாதார நடப்புகள் காரணமேயன்றி தம் அரசு பொறுப்பாகாது என்றும் குடிமக்களாகிய நீங்கள்தான் எரிபொருள் கொள்முதலைக் குறைத்து, தங்கம் வாங்குவதை நிறுத்திச் சிக்கனமாக வாழவேண்டும் என உபதேசம் செய்வதும் நடக்கிறது. இது ஓர் அவல நிலை. இந்த அவல நிலை ஏற்படாமல் நாட்டுப் பொருளாதாரத்திற்கு அரண் கட்டிப் பாதுகாக்க வேண்டும் என்று உணராத அரசியல்வாதிகளால் ஆளப்படுவது நமக்கேற்பட்டிருக்கும் அவதி.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இருக்கும் யாரும், எந்தக் காலத்திலும் சிக்கன வாழ்வை கடைபிடிக்க அறிவுறுத்தப் படவேண்டும். இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ரூபாய்க்கு கிராக்கி அதிகமாகச் சமயத்தில் முடிந்த அளவிற்கு டாலரை கொள்முதல் செய்து கருவூலத்தைப் பெருக்கி, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள நம் அரசுகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதேபோல நம் நாட்டின் பல, பலவீனங்களை ஆராய்ந்து பலமான துறைகளில் வர்த்தகம் தழைத்தோங்கப் புது வணிகக் கொள்கைகளை அமல் படுத்தினால் நிலையான முதலீடும் நம்மைத் தேடி வரும். நேரத்தை வீணடிக்காமல் இப்படிச் சூதனமான பல கொள்கைகளை நாம் மேற்கொண்டால், இவை போன்ற உலகப் பொருளாதார நிகழ்வுகளின்போது நாம் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். இல்லையென்றால் வளர்ந்த நாடுகள் தம் நலன் கருதிக் கடைபிடிக்கும் பொருளாதார விதிமுறைகளால் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மீண்டும் மீண்டும் அவதிப் படும் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

0 Replies to “ஆதாரமற்ற பொருளாதாரம் – பகுதி 3”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.