ஸச்சின் எனும் ஆச்சரியம்

உங்கள் கண்களை  மூடிக் கொள்ளுங்கள்.

பின், அங்கு சுழன்று கொண்டிருக்கும் மங்கலான எண்ணங்கள், பிம்பங்கள், தொடர்சித்திரங்கள் இவற்றிலிருந்து  உங்கள் நினைவாற்றலின் முழு முனைப்புடன் ஸச்சின் ஒரு டெஸ்ட் மாச்சில் பங்குபெற்ற   ஒரு தினத்தின் ஞாபகங்களைத் தேர்வு செய்யுங்கள். அது மெல்போர்னில் ஆடிய ஒரு பந்தயமாய் இருக்கலாம். அல்லது போர்ட் ஆஃப்  ஸ்பெயினில்.  ஹராரே அல்லது சென்னையின் ஒரு புழுக்கமான காலையாக இருக்கலாம். இவை எதுவுமேயன்றி ஹெடிங்க்லி மைதானத்தை முறியடிக்க மேகங்கள்  அச்சுறுத்திய மாலைப்பொழுதாகவும் இருக்கலாம்.

எந்த டெஸ்ட், எந்தக் களம் என்று உறுதிப்படுத்திக் கொண்டதும், அந்த ஆட்டத்தில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்த அந்தத் தருணத்தை நினைவில் கொண்டுவாருங்கள்.. ஓப்பனரும், அணிவரிசையின் மூன்றாவது ஆட்டக்காரரும் புதுப் பந்துடன் போராடிக்கொண்டு, சிலவற்றை  ஆஃப் சைடுக்கு வெளியே விட்டு, பந்தை அடிக்க சந்துகளைத்  தேடிக்கொண்டு, தடுத்தும்,  தவிர்த்தும் விளையாடி , ஸ்கோரை மெதுவாக நகர்த்திக் கொண்டிருக்கும் அந்தக் கணங்கள்.

உங்கள் மனதில் ஓடும் நிழல்படத்தில்  இந்தத் தருணத்துக்கு நீங்கள் வந்ததும், எண்ணங்களைக் குவித்து நினைவைக் கூர்மைப்படுத்துங்கள் . தொலைக்காட்சிக் காமிரா மெதுவே இந்திய அணியின் டிரெஸ்ஸிங்  ரூமுக்கு நகர்ந்து அங்கு ஹெல்மெட் அணிந்த 4வது ஆட்டக்காரர் மட்டையை அல்லாட்டிக்கொண்டு, வாயைக் கோணிக்கொண்டு அவரது விழிகளை  அங்கும் இங்கும் ஓட்டி தன் முகமூடியின் தடுப்புகளினூடே ஆட்டத்தைக்  கவனிப்பதை சில வினாடிகளுக்குக் காட்டியதை நினைவுகூருங்கள்.

அந்தக்  காட்சியை உறையச்செய்து அந்த பிம்பத்தை அப்படியே நினைவில் நிறுத்துங்கள்.

அந்த சின்னஞ்சிறு இடைவெளியில், ஆட்டத்தை நேரடியாய்  வர்ணனை செய்துகொண்டிருந்தவர்  தம்  எண்ண ஓட்டத்தை நிறுத்தி டெண்டுல்கரின் அப்போதைய ஃபார்ம் பற்றியோ, அல்லது அவருடைய சமீபத்திய உடற்காயத்தைப் பற்றியோ, அணிக்கு அவருடைய முக்கியத்துவத்தைப் பற்றியோ,  அல்லது எதிர் அணியின் மேல் அவருடைய தாக்கத்தைப் பற்றியோ, அந்த மைதானத்தில் அவருடைய முந்தைய ஆட்ட விபரங்கள் பற்றியோ, பேட்டிங் அணிவரிசையில் அவருடைய இடத்தின் நுட்பம் பற்றியோ அல்லது உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர்களின் அணிவகுப்பில் அவரது இடம் பற்றியோ பேசுவதில் கவனம் செலுத்தியது நினைவுக்கு வருகிறதா? காமிரா கைப்பற்றிய அந்த டெண்டூல்கரின் பிம்பம்  மைதானத்தின் பிரும்மாண்டத்திரையில் காட்டப்பட்டு, பரவசத்தில் பார்வையாளர்கள் செவிப்பறைகள் அதிருவது போல் எழுப்பியக் கூச்சல் காதில் கேட்கிறதா?

இப்போது ஆட்டத்தில் இரண்டாவது விக்கெட் விழுந்த அந்த கணத்துக்கு மெதுவாய் நகருங்கள். இந்தியா தடுமாற்றமான நிலையில் இருந்திருக்கலாம் அல்லது நிலைமை சீராகியிருக்கலாம். அதையெல்லாம் இப்போது மறந்து விடுங்கள். ஏனெனில் பெவிலியன் படிகளிலிருந்து அவர் இறங்கி வரும் அந்த நடை – அதை நீங்கள் தவறவிடக் கூடாது.

S2

இதோ வருகிறார் , மட்டையை அக்குளில் இடுக்கிக் கொண்டு, கையுறைகளை அணியத் தயாராய். பார்வையாளர் கூட்டம் அவரை எதிர்கொள்வதைப் பாருங்கள்-பித்துப்பிடித்த ரசிகர்கள் உலோகத் தடுப்புக் கதவுகளை உலுக்குவதை, இங்கிலாந்தின் MCC கிரிக்கெட்டின் கிளப் உறுப்பினர்களுக்கான   (egg and bacon) டை  கட்டிய எண்பது வயதுக்காரர்கள் பயபக்தியுடன் எழுந்து நிற்பதை , பிள்ளைகளை தலைக்குமேல் உயர்த்திக் காட்டும் தந்தைகளை, கிறீச்சிடும் பெண்களை, ராஸ்தாஃபாரிய தாடி வைத்த  சுருங்கிய வயதான மனிதர்கள் அவரது ஒவ்வொரு அசைவையும் கவனிப்பதை, நாட்டின்  அதிபர்கள் கைதட்டி வரவேற்பதை. கிரிக்கெட்டின் பிரபலங்கள் ஒரு விருந்தை எதிர்நோக்கி இருப்பதைக் காண்பீர்கள். அந்தக் கணத்தின் பாவத்தை ஒரு கவியைத் தவிர யாரால் கைப்பற்ற இயலும்? சி. பி. சுரேந்திரன் எழுதுகிறார்: “ஒவ்வொரு  முறை டெண்டூல்கர் க்ரீஸை நோக்கி  நடந்த போதும், ஒரு தேசமே தன் எல்லாக் கிழிசல்களுடன் அவருடன்  அந்தப் போர்க்களத்துக்கு அணிவகுத்துச்  சென்றது.”

S3

வரம்புக்கயிற்றிலிருந்து மத்தியப்பகுதியை நோக்கிய நடையை உன்னித்து கவனியுங்கள், வானத்தில் அப்பாவைப் பார்க்கும் நோட்டம், சுழலும் கைகள், நேரே பந்தையடிப்பது போன்ற  ஒரு பாசாங்கு அசைவு, நின்ற இடத்திலேயே வேகமான  ஓட்டத்தில்  காலசைவுகள், புடைத்த தோள்கள். கையுறைகளை சீர்செய்துகொண்டு பின் தன் சக ஆட்டக்காரரிடம் சில வார்த்தைகள் பேசுவதைக் கவனியுங்கள். தலையை இப்படியும் அப்படியும் வெட்டித் திருப்பி தலைக்கவசம் சரியாய் பொருந்தியிருக்கிறதா என்று சரிபார்ப்பதை ஆராயுங்கள். மறைந்த டோனி க்ரெய்க்  தொலைக்காட்சியிலோ வானொலியிலோ  கிளர்ச்சியுடன் படபடத்திருப்பார். அதையும் மறந்துவிடாதீர்கள்.

ஓட்டபாதையை ஆங்காங்கே தட்டி, அடித்து அவர்  மதிப்பிட்டுக்கொண்டிருக்கையில்  பத்திரிக்கையாளர் பகுதியில்   புகைப்பிடிக்க வெளியே போனவர்கள் அவசரமாய் திரும்பி வந்து தம் இடங்களில் அமர்ந்து தம் பைனாகுலர்கள் மூலம் பார்ப்பதையும், தம் விஸ்டன் புத்தகங்களை அவசரமாய்  புரட்டுவதையும், இணையத்தில் ESPNCricinfo  தளத்திற்குள் நுழைந்து ஆட்டத்தின் முந்தைய சாதனைகளில் எவை அன்று தாண்டப்படும் என கணிப்பதை நோக்கி உங்கள் கண்களை திருப்புங்கள்.

பவுண்டரி கயிற்றுக்கு அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படக்காரர்கள்  பக்கம் திரும்புங்கள். அவர்கள் காமிராக்களில்  டெண்டுல்கரின் உருவைப்பெரிதாக்கி,  தாம் எடுக்கும் பல நூறு புகைப்படங்களில் ஒன்றாவது ஒரு ஜாக்பாட்டாய் அமையாதா என்ற  எதிர்பார்ப்புடன் அடுத்தடுத்து படங்களை க்ளிக் செய்வதை கவனியுங்கள். அவர்கள்  எப்படிப்பட்ட அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும். பாட்ரிக்  ஏகர் போன்ற ஒரு அனுபவசாலியான புகைப்படக்காரர்கூட, 300 டெஸ்ட் மாச்சுகளுக்கும் மேல் புகைப்படங்களில் பிடித்தபின்பும், ‘எவ்வளவு சிறந்த பாட்ஸ்மன்!’ என்று மக்கள் வியக்கும்படி டெண்டுல்கரை ஒரு படம் எடுப்பது மிகக் கடினம்.’ எனச்  சொல்கிறார் என்றால் பாருங்களேன்.

இப்போது அவர் விளையாட்டுக்கான தயார்நிலைக்கு வருவதை கவனியுங்கள்-தரையை உதைத்து,  எதிரணி தயார்படுத்தியிருக்கும் களத்தை நுட்பமாய் ஆராய்ந்து, பந்தை நேராய் அடிப்பது போல காற்றை அடித்துப் பார்த்து, ஸைட்ஸ்க்ரீன்கள்  இருக்கும் இடங்களை அளவிட்டு, யாரையும் நோக்கி அல்லாமல் பொதுவாய் தலையை ஆட்டி, குத்துக்காலிட்டு உட்கார்ந்து , குதித்து, தன் கால்களுக்கிடையே அணிந்துள்ள கவசத்தை சரிப்படுத்திகொண்டு, மட்டையை தரையில் ஒருமுறை தட்டி, பிறகு இரண்டு முறை தட்டி பின் தயாராய் காத்திருப்பதைப் பாருங்கள்… அவருடைய தலை எத்தனை அசைவற்று இருக்கிறது என்பதை கவனியுங்கள்.

இந்தியா டுடே இதழில் ஒரு பேட்டியில் அவர் சொன்னது: “ஒரு மைதானத்தில் எல்லாத்திசைகளிலிருந்தும் வரும் ஓசைகளை நீங்கள் கேட்க முடியும்.  ஆனால் பந்தை எதிர்நோக்கும்போது அவற்றைத் தடுத்துவிட வேண்டும்…. பந்து வீச்சாளர் உங்களை நோக்கி ஓடி வருகையில், கவனம் உச்சமாய்  ஒருமித்திருக்கவேண்டும்.’

விழிப்புடன் இருங்கள். பந்திலிருந்து கண்களை  எடுக்காதீர்கள்.  22 கஜங்களை பலத்துடன் தாண்டி அவரது வாசலுக்கு அது வருவதைப் பாருங்கள். பிறகு என்ன ஆயிற்று?

S6

1999ல் ஷோயப் அக்தரின் வஜ்ராயுதத்தைப் போல அது உங்கள் இதயத்தை நொறுக்கியதா? இல்லை அவர் அதை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே  போகவிட்டு உங்களை அமைதிகொள்ள  ஆணையிட்டாரா? அல்லது ஸ்குயர் லெக்குக்குப் பின்னே தட்டி விட்டு ‘டூ டூ டூ’  எனக் கீச்சிட்டுக்கொண்டே முதல் ரன்னை படு வேகமாய் எடுத்து “அதிகமாய் சக்கரை சாப்பிட்டதால் வந்த   பரபரப்போ?” என யோசிக்க வைத்ததா? இல்லை, அவர் நிமிர்ந்து நின்று பந்தை வீசியவரைத் தாண்டி அதை ஆடம்பரமாய்  வலுவாய் அடித்த பின் நீங்கள் பிரமித்துப் போய்  “உஸ். அப்பாடா” எனச் சொல்லிக்கொண்டே கண்களை திரையிலிருந்து அகற்றினீர்களா?

அவர் எதிரணியின் சிறந்த திட்டங்களை சிதறடித்து, ஃ பீல்டர்களைப்பிரித்து, பூசினாற்போல அடித்து,  பலமாய் குத்தி தன் இன்னிங்ஸை கட்டுமானம் செய்வதை கவனமாய் படியுங்கள். அப்படியே  சுற்றிலும் நடப்பதையும் பாருங்கள். மிட்விக்கெட் விளிம்பைக்  கண்காணிக்கும் பந்து பொறுக்கும் பையன்கள் , ஆட்டத்தில் தமக்கும் கொஞ்சம் பங்கு வேண்டுமென்ற  ஆர்வத்துடன்  பந்து கயிற்றைத் தாண்டியதும், அவசரமாய் ஓடிப்போய் அதை சேகரிப்பதைப் பாருங்கள். பார்வையாளர் பகுதியில் டெண்டூல்கரின் மிகப் பெரிய ரசிகரான சுதீர் கௌதம்,காவி, வெள்ளை, பச்சை வண்ணங்களைப்  பூசிக்கொண்டு  இந்திய மூவர்ணக் கோடியை  அசைத்துக்கொண்டிருப்பதை கவனியுங்கள். சைட்ஸ்க்ரீனுக்கு  மேல் அமர்ந்திருப்பவர்களில்   தம் அசைவுகள் கவனத்தை சிதறடித்துவிடுமோ என்று ஒரே கவலையாய் இருப்பவர்கள்  யார் எனக் கண்டுபிடியுங்கள்.

இன்னும் சிலரையும் நினைத்துப் பார்க்க வேண்டும்-பல நூறு வர்த்தக நிர்வாகிகள், வர்த்தக சிறு மேலாளர்கள், விளம்பர உலகின் பிரபலங்கள். அவர் பேட் செய்வதை கவனித்துக்கொண்டு, அவர் பெரியதொரு ஸ்கோர் எடுக்க வேண்டும் என்ற விழைவுடன், தம் நல்வாழ்வுக்கு அவசியமான  ஒரு லாபகரமான கம்பெனியின் பங்கு விலை போல அவரை அணுகுவதைப் பார்க்கலாம். இன்னும் உலகம் முழுவதுமான சில புக்கிகள், ஸ்கோரின் ஒவ்வொரு பந்தையும் உன்னிப்பாய் கவனித்தபடி காத்திருப்பார்கள். அவர்களின் வேலை டெண்டூல்கர் அவுட் ஆன பின்புதான் தொடங்கும்

இப்போது கூட்டத்தில் ஒரு நெடுமூச்சு கேட்கிறதா?  சந்தடியில்லாமல் சல்லிசாய் அவுட் ஆக்கப்பட்டாரா? ஸ்டம்ப் தாக்கப்பட்டபோது குந்தி உட்கார்ந்தாரா? அல்லது சந்தேகமான ஒரு LBWவா? பந்துவீசியது, மாண்டி பனேசார் போல் பரவசமான ஒரு புது வரவா? அல்லது ஜிம்பாப்வேயின் உஜேஷ் ரன்சோடை போல அவ்வளவாய் தெரியாத ஒரு ஆட்டக்காரர் கொண்டாடிய முதலும், கடைசியுமான டெஸ்ட் விக்கெட்டா? அம்பயர் யார்? ஸ்கோரர்களும் புள்ளிவிபர நிபுணர்களும் பரபரப்பாய் வேலை செய்வதைக் கவனியுங்கள்.

அக்குளில் மட்டையுடன், வருத்தம் தோய்ந்த முகத்துடன் அவர் பெவிலியனுக்குத் திரும்பிப் போனதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். தலையில் கை வைத்து இடிந்து போய்உட்கார்ந்திருக்கும் பார்வையாளரை தவறவிட்டுவிடாதீர்கள். அன்று அங்கு வருவதற்கு அவர் பட்ட பாட்டை நினைத்துப் பாருங்கள். ஒருவேளை டிக்கெட்டுக்காக அங்கும் இங்கும் நாள் முழுவதும் அலைந்திருப்பார். இல்லையேல்,அவர் ஆடிகொண்டிருந்த முழு நேரமும் அந்த நிலையிலேயே உட்கார்ந்திருந்திருப்பார் – சிறுநீர்ப்பையை அடக்கிக் கட்டுப்படுத்திக்கொண்டு, சுட்டெரிக்கும் வெய்யிலைத் தாங்கிக்கொண்டு – டெண்டூல்கரின் இன்னிங்ஸில் தனக்கும் ஒரு பங்கு உண்டு என்ற திடமான நம்பிக்கையுடன்.

கைதட்டல் அடங்குவதைக் கேளுங்கள். பின் சோர்வான முணுமுணுப்புகளுக்கிடையே எடுப்பாய் வெளிப்படும் வெறுமையை உணருங்கள்.

இது டெண்டூல்கரின் ஏதோ ஒரு இன்னிங்ஸின் கதை அல்ல. 24 வருடங்களாய், ஒவ்வொரு முறை அவர் களத்தின் நடுவே வந்த ஒவ்வொரு நடையும், ஒரு சிறிய அளவிலான கணேஷ உத்ஸவம் போல, எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் நிறைந்த ஒரு விசேஷமான தருணம். வைரம்பாய்ந்த ரசிகர்கள்கூட கொஞ்சம் நடுக்கத்தை உணர்ந்தார்கள். பலர் ஆண்டவனை வேண்டிக்கொண்டனர். சிலர் தேங்காய் உடைத்தனர்.

S7

இத்தனை பேருக்கு இத்தனை நெருங்கியவராய் அவர் இருந்ததின் காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் CLR ஜேம்ஸ் என்பவர் beyond the boundary என்கிற தனது புத்தகத்தில் W G க்ரேஸ் எனும் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரரைப் பற்றி எழுதியிருப்பதை சொல்ல வேண்டும்:

W.Gயின் ஆட்ட ஸ்கோர்கள் மகத்துவம் வாய்ந்தவையாயினும், அவற்றை முழுவதும் உணர அவற்றை கிரிகெட் விளையாட்டின் சரித்திரத்துடனும் இங்கிலாந்தின் சமூகவரலாற்றுடனும் இணைத்துப் பார்க்க வேண்டும். இதைச் செய்யாது போனால் அவரை ப்ராட்மனுடன் ஒப்பிடும் பொறியில் எளிதில் சிக்கிக் கொள்வீர்கள்.

“ப்ராட்மன் ரன்களை சதங்களைக் குவித்தார். W.G.க்ரேஸ் ஒரு சமூக அமைப்பைக் கட்டுமானம் செய்தார்.”

இவை இரண்டையுமே ஒற்றை இந்தியர் எப்படிச் செய்தார்? ஆச்சர்யம்தான்.

sachin4

இக்கட்டுரையின் ஆங்கில வடிவம் இங்கே வெளியாகியுள்ளது.

நன்றி: தி இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.