தல மரங்கள் எனும் concept எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மரங்களை அதுவும் நம் மண்ணுக்குச் சொந்தமான மரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் காரணிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை ஆமோதித்து அரவணைத்துக் கொள்வது இயற்கைப் பாதுகாவலர்களின் கடமை என்பது எனது எண்ணம். சாலையோரத்தில் வைக்கப்பட்டிருக்கும் மரங்களை நமது நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டிச் சாய்க்காமலிருக்க, ஒரு வழி, அம்மரங்களின் அடித்தண்டில் மஞ்சளையும், குங்குமத்தையும் பூசி வைத்து அம்மரத்தை சாமியாக்கிவிடுவது. இதில் எந்த தவறும் இல்லை.
சரி அது போகட்டும், தல மரங்களுக்கு வருவோம். தேவாரத்திருத்தலங்கள்
எனும் நூலை வாங்கிப் புரட்டிய போது தேவாரத்தில் பாடப்பட்ட கோயில்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. அதில் கருந்திட்டைக்குடி எனும் பெயரைக் கண்டதும் என் கண்கள் அகல விரிந்தன. நான் பிறந்த இடமாயிற்றே அது. தஞ்சாவூரிலிருந்து திருவையாறு போகும் வழியில் இருக்கும் கரந்தை என்றழைக்கப்படும் (வழக்கில் கரந்தட்டான்குடி) கருந்திட்டைக்குடியில் உள்ள செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவன் நான். வீட்டிலிருந்து ராஜாராம் மடத்தெருவில் இருந்த ஈவ்லின் இங்லிஷ் ஸ்கூலுக்குப் (Evelyn ஏnglish School) போக தினமும் வசிட்டேசுவரர் கோயில் (கருணாசுவாமி கோயில்) காம்பவுண்டைச் சுற்றியுள்ள சந்தின் வழியாக ஸ்கூலை அடைவது வழக்கம். ஆலயம் திறந்திருந்தால் அதன் ஒரு வாயிலில் நுழைந்து சன்னிதி தெரு வழியாகவும் போய் விடலாம். தேவாரத்திருத்தலங்களில் ஒன்றான இந்த கருநாசுவாமி ஆலயத்தின் தலமரம் வன்னி மரம் என்பதை அறிந்தேன். அக்கோயில் வழியாகப் போகும் போது சந்நிதியின் உள்ளேயிருந்த வில்வமரத்தைப் பார்த்ததுண்டு. ஆனால் வன்னி மரத்தைப் பார்த்த ஞாபகம் இல்லை. ஆகவே வன்னி மரத்தைக் காணவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அண்மையில் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன்..
மு. வரதராசனார் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலில், தேவாரத்தில் திருவையாற்றின் அழகை வர்ணித்துப் பாடியதை விளக்கியிருந்ததைப் படித்ததில் இருந்து திருவையாறு போய் வரவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். சிறுவனாக இருந்த காலத்தில், திருவையாற்றுக் காவிரிக்கரைப் படித்துரையில் ஆடி அமாவாசை அன்று, என் அப்பா அவரது அப்பாவிற்கு திதி கொடுக்கச் சென்ற போது, நானும் கூடச் சென்றது நினைவின் மூலையில் (மங்கலாக) இன்னும் இருக்கிறது. சரி ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்துவிடலாம் என திருச்சியிலிருந்து ஒரு நாள் காலை புறப்பட்டு கல்லணை வழியாக திருவையாறு பயணமானோம். கல்லணைக்கு பலமுறை சென்றிருந்தாலும் அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாக திருவையாறு சென்றதில்லை. அந்த ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என, திருவெறும்பூரிலிருந்து வேங்கூர் வந்தடைந்து காவிரிக் கரையோரமாக இருந்த சாலையில் பயணமானோம். அது ஆடி மாதம் (1st August 2013). காற்று ஆளைத் தள்ளுமளவிற்கு அடித்துக்கொண்டிருந்தது. இந்த ஆண்டு பருவ மழை பொய்க்காத காரணத்தால் முக்கொம்பிலிருந்து தண்ணீரை திறந்து விட்டிருந்தார்கள். ஆடிப்பெருக்கிற்கு இன்னும் இரண்டே நாட்கள் தான் இருந்தன. ஆற்றில் தண்ணீர் ஓடுவதைப் பார்க்க நிம்மதியாக இருந்தது. கல்லணையில் பறவைகளைப் பார்க்க சிறிது நேரம் செலவிடலாம் என லத்தின் மேலிருந்து பார்த்த போது சிறிய நீர்க்காகக் (Little cormorant) கூட்டமொன்று மிக மும்முரமாக நீந்திக்கொண்டும், நீரில் மூழ்கி மீன் பிடித்துக்கொண்டும் இருப்பதைக் காணமுடிந்தது. நாமக்கோழிக் (Common coot) கூட்டமும் நீர் தேங்கியிருந்த மதகுப் பகுதிகளின் அருகில் நீந்திக்கொண்டிருந்தன. இவ்வளவு நாட்களாக தேங்கிக்கிடந்த நீரில் வளர்ந்திருந்த ஆகாயத்தாமரைகள் நீரின் வேகம் தாளாமல் சுழன்று சுழன்று ஆற்றோட்டத்தில் கலந்து பயணித்தன. எனினும் எனது கவனத்தை ஈர்த்தது Pied Kingfisher எனும் கருப்புவெள்ளை மீன்கொத்திகளே!
பாலத்தின் கீழிருந்த மதகுச் சுவற்றின் மேலே அமர்ந்து அவற்றின் கீழே ஓடிக்கொண்டிக்கும் நீரினை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. மீனைக் கண்டவுடன் அமர்ந்த இடத்திலிருந்து உயர எழும்பி இறக்கைகளை படபடவென அடித்து ஒரே இடத்தில் பறந்து, திடீரென நீரில் அம்புபோல் பாய்ந்தன. முழ்கி வெளியே வரும் போது அலகில் மீனிருக்கும். அவை பறக்கும் அழகை நாள் பூராகவும் ரசித்துக்கொண்டே இருக்கலாம். ஓரளவிற்கு மனம் நிறையும் அளவிற்கு படமெடுத்து விட்டு அந்த இடத்திலிருந்து மனமில்லாமல் அகன்றேன்.
கோவிலடி, திருச்சென்னம்பூண்டி முதலிய ஊர்களைக் கடந்து சென்றது பாதை. இரு புறமும் வயதான மிகப் பெரிய மரங்கள் அடர்ந்த அகலப்படுத்தாத சாலை.மகாராஜபுரம் எனும் ஊரினைக் கடந்து சென்ற போது அவ்வூரிலுள்ள கால்நடை மருத்துவமனையின் வாசலில் ஒரு பெரிய, நெடுதுயர்ந்த வெள்ளை மருத மரத்தைக் (Terminalia arjuna) கண்டேன். ஊர்களின் வழியே போன போது, திண்ணை வைத்த ஓட்டு வீடு, வீட்டின் முன் பூவரச மரங்கள், அதன் கீழ் கயிற்றுக் கட்டில், மரச்சக்கரம் கொண்ட இரட்டை மாட்டு வண்டி என கிராமத்தின் அழகு குலையாமல் இருப்பதைக் காண முடிந்தது. பிளாஸ்டிக் குப்பைகளும் அவ்வளவாகத் கண்ணில் தட்டுப்படவில்லை. ஆயினும் எனது மகிழ்ச்சியெல்லாம் திருக்காட்டுப்பள்ளியின் அருகாமையை அடையும் வரையில் தான்.
சாலையோரமாக எங்களுடனேயே பயணித்துக் கொண்டிருந்த கொள்ளிடத்தில் வரிசையாக நின்று கொண்டிருந்த லாரிகளின் எண்ணிக்கை தான் என்னை முதலில் கலக்கமடையச் செய்தது. அதைத் தாண்டி வந்தவுடன் கூத்தூர் பகுதியில், மும்முரமாகி இருந்தது சாலையை அகலப்படுத்தும் பணி. மிகப் பெரிய, வயதான பல தூங்குமூஞ்சி மரங்களும், புளிய மரங்களும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. எங்களது வண்டிக்கு முன்னே சென்ற மணல் லாரியிலிருந்து நீர் சொட்டிக்கொண்டே வந்தது. மணல் லாரிகளின் சீரான போக்குவரத்திற்கு சாலையை அகலப்படுத்தித் தானே ஆக வேண்டும். மரங்கள் முக்கியமா?
மணல் முக்கியமா? நமக்குத் தெரியாதா எதுவென்று? ஆச்சனூரை தாண்டியபோது சாலையோரத்தில் இருந்த பள்ளிக்கூடத்தை ஒட்டி ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதன் நிழலில் சில மாணவர்கள் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தனர். கொடுத்து வைத்தவர்கள். தில்லைஸ்தானத்தைத் தாண்டி திருவையாறு போகும் வழியில் ஆற்று நீரோட்டத்தின் மேல் பல உழவாரக்குருவிகள் (Palm swift) கூட்டங்கூட்டமாக பறந்து கொண்டிருந்தன.
மதிய வேளையில் திருவையாறு வந்தடைந்தோம். ஆலயம் சாத்தியிருந்ததால் வெளிப் பிராகாரத்தைச் சுற்றி வந்தோம். மாடப்புறாக்களும், மைனாக்களும் மதில் சுவற்றில் உள்ள ஓட்டைகளில் கூடு கட்டியிருந்தன. மதில் சுவற்றின் மேலுள்ள நந்திக்கும், கோயில் கோபுரத்திலுள்ள சிற்பங்களுக்கும் பல வண்ணங்களில் பெயின்ட் அடித்திருந்தனர். பார்க்க சகிக்கவில்லை. பழமை வாய்ந்த, அழகிய சிற்பங்கள் கொண்ட கோயில் கோபுரங்களைச் சுத்தப்படுத்தி வைத்தால் மட்டும் போதாதா? பெயின்ட் அடித்து அதன் அழகை, தூய்மையை சீர்குலைக்க வேண்டுமா? aesthetic sense நமக்கெல்லாம் இவ்வளவு தானா? நொந்து கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்று தியாகராஜர் நினைவிடத்திற்குச் சென்றோம். அதன் முன்னே ஒரு பெரிய அழகான அரசமரமும், வேப்பமரமும் இணைந்து உயர்ந்தோங்கி வளர்ந்திருந்தது. மதிய உணவை ஆண்டவர் அல்வா கடையில் சாப்பிட்டுவிட்டு அங்கேயே திருவையாறுக்கு பெயர்போன அசோகாவையும் வாங்கிக்கொண்டு கரந்தையை நோக்கி வன்னியைக் காண பயணமானோம்.
கருநாசுவாமி கோயிலுக்குள் நுழைந்த போது மாலை 4 மணி. கோயிலைச் சுற்றி வந்தபோது பழைய நினைவுகளும் கூடவே வந்தன. உள் பிரகாரத்தில் இருந்தது அந்த பழைய வன்னி மரம். மரத்தைப் பார்த்து, தொட்டு, படமெடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். வன்னி மரத்தைப் பற்றி கார்த்தி பெரியப்பாவிடம் கேட்ட போது, தஞ்சாவூரில் வடக்கு வாசலில் உள்ள காசி பிள்ளையார் கோயிலிலும் (தற்போது கண்ணாடி பிள்ளையார் கோயில் என்றும் அறியப்படுகிறது) பார்த்திருப்பதாகச் சொன்னார், அதோடு எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய வன்னி வீதி எனும் கட்டுரைக்கான உரலியையும் அனுப்பினார் (அக்கட்டுரையை இங்கே காண்க). மகாபாரதத்திற்கும் வன்னி மரத்திற்கும் உள்ள தொடர்பை அறிய அக்கட்டுரையைப் படிக்கவும். காசி பிள்ளையார் கோயிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோயிலின் பின் பகுதியில் மூலைக்கு ஒன்றாக இரண்டு வன்னி மரங்கள் (கிளைகள் வெட்டப்பட்டு) இருந்தன. ஏனோ தெரியவில்லை அக்கோயிலைச் சுற்றிலும் இருந்த மரங்கள் பலவற்றிலும் கிளைகள் வெட்டப்பட்டிருந்தன. கருநாசாமி கோயிலில் இருந்த மரத்தை விட உருவில் பெரிய மரங்கள் அவை.
இந்த வன்னி மரங்களைக் கண்டவுடன் தான் இம்மரங்களை ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் உள்ள புதர்க்காடுகளில் பார்த்தது ஞாபகம் வந்தது. அங்கே இவை உயரமாக வளர்வதில்லை. எனது இடுப்பு உயரம்தான் இருக்கும், வெகு அரிதாகவே இரண்டு ஆள் உயரத்திற்கு வளர்ந்திருக்கும்..இங்குள்ள மண்ணும், தட்பவெப்ப சூழலும், ஆடு மேய்ப்பவர்கள் அடிக்கடி வெட்டி விடுவதும் காரணமாக இருக்கலாம். இம்மரத்தை இம்மாநில மக்கள் வணங்குகிறார்கள். தெலுங்கில் ஜம்மிச் செட்டு என்றழைக்கப்படுகிறது.
குறிப்பாக தசரா சமயங்களில் இம்மர இலைகளைப் பறித்து வந்து அதை பெரியவர்கள் கையில் கொடுத்து, அவர்களை தமது தலையில் (அட்சதையைப்போல) தூவி ஆசீர்வதிக்கச் சொல்வார்கள். நீங்கள் ஆந்திர மாநிலத்தில் வசித்திருந்தால், அல்லது தெலுங்குப் படம் பார்ப்பவராக இருந்தால் வன்னி மரத்தை (அதாவது ஜம்மிச் செட்டு)அறிந்திருப்பீர்கள். ஓய்! (Oye!) என்று ஒரு தெலுங்கு படம். சித்தார்த்தும், ஷாம்லியும் (அஞ்சலி படத்தில் குழந்தையாக நடித்த அதே ஷாம்லிதான்) நடித்தது. அப்படத்தில் ஒரு காட்சியில் சித்தார்த் ஷாம்லியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் ஜம்மி செட்டு வேண்டும் என்று கேட்பார். அக்காட்சியை (படம் ஆரம்பித்து நிமிடங்களுக்குப் பிறகு) காணலாம்.
வன்னி மரத்தின் அறிவியல் பெயர் Prosopis cineraria. இம்மரம் அவரை குடும்பத்தைச் சேர்ந்தது (Family: Fabaceae). மேற்கு, கிழக்கு ஆசியாவின் வறண்ட நிலப் பகுதிகளில் வளரும். இது ராஜஸ்தானின் மாநில மரமாகும். அங்கே இதை கேஜ்ரி (Khejri) என்றழைக்கின்றனர். இம்மரக்கிளைகளில் முட்கள் காணப்படும். இம்மரம் கோதாவரி ஆற்றின் கிழக்குப் பகுதியிலுள்ள வறண்ட பாறைகள் கொண்ட நிலப்பகுதிகளில் வளர்கின்றன. இவை அடர்ந்த காடுகளில் வெகு அரிதாகவே தென்படுகின்றன. கோவையில் உள்ள காட்டுயிர் ஆராய்ச்சி நிறுவனமான SACON ஐ சேர்ந்த காட்டுயிர் அறிஞர்களான குணசேகரனும், முனைவர் பாலசுப்ரமணியனும், தமிழகத்தில் உள்ள 1165 கோயில்களுக்குச் சென்று அங்குள்ள தலமரங்களின் வகைகளையும் அவற்றின் மருத்துவ குணங்களையும் பட்டியலிட்டனர்.
சுமார் ஐந்து ஆண்டுகள் (2002-2006) நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் அவர்கள் சென்று பார்த்த 1165 கோயில்களில் 846 சிவத்தலங்கள், 246 வைணவத் தலங்கள், 23 அம்மன் கோயில்கள், 48 முருகன் கோயில்கள், 2 இவற்றில் சேராத தெய்வங்களைக் கொண்ட கோயில்கள். இவர்கள் பார்த்த இந்த கோயில்களில் தலமரங்கள் இருந்தது 820 கோயில்களில். இவர்களது ஆராய்ச்சியின் மூலம் 112 வகையான தாவரங்கள் (41 குடும்பத்தைச் சேர்ந்தவை) தலமரங்களாக இருப்பதை அறிந்தனர்.
இவற்றில் மரவகைகள் 83, புதர்செடிகள் 17, கொடியினங்கள் 7, புற்கள் 3 வகை, சிறு செடிகள் 2 வகை (தொட்டாச்சிணுங்கியும், துளசியும் – எந்த ஊர் கோயில்கள் எனத் தெரியவில்லை). இந்த கணக்கெடுப்பின் வாயிலாக வில்வ மரம்தான் அதிக கோயில்களில் தலமரமாக இருப்பதும் (324 கோயில்களில்) அதனைத் தொடர்வது வன்னி மரம் (63 கோயில்களில்) தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சி கட்டுரையை இந்த உரலியிலிருந்து பெறலாம். இந்த கட்டுரையில் வேதாரண்யத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலில் இருக்கும் அடித்தண்டு சுமார் 800 செமீ சுற்றளவு உள்ள ஒரு மிகப் பழைய வன்னிமரத்தின் புகைப்படம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆக வன்னி மரத்தைப் பார்க்கச் செல்லும் பயணம் இன்னும் முடிந்தபாடில்லை.
குறிப்பெடுக்க உதவிய நூல்கள், கட்டுரைகள்:
- Gamble, J. S. (1995). Flora of the Presidency of Madras. Vol.1. Bishen Singh Mahendra Pal Singh.Dehra Dun, India.
- Gunasekaran, M & Balasubramanian, P. (2012) Ethnomedicinal uses of Sthalavrikshas (temple trees) in Tamil Nadu, southern India. Ethnobotany Research & Applications 10:253-268. Downloaded from www.ethnobotanyjournal.org/vol10/i1547-3465-10-253.pdf
- ஜெயசெந்தில்நாதன் (2009). தேவார வைப்புத் தலங்கள்-தல விளக்க வழிகாட்டி. வர்த்தமானன் பதிப்பகம். சென்னை.
இணைப்புகள் சுட்டிகள் வேலை செய்யவில்லை .தயவுசெய்து சரி செய்யவும் .