ரஷியா ரஷியர்களுக்கே
ஆந்தனி மார்ரா-வின் பாட்டாளிகளின் அரண்மனை கதையின் மையப் பாத்திரத்தின் பெயர் செர்கே. அந்தக் கதை ரஷ்யாவின் சமீபத்திய உருமாற்ற நிலையை சுட்டுகிறது. அந்த உருமாற்றம் துவங்கி 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டன. ஆயினும் பழைய ரஷ்ய மனோபாவம் அப்படி ஒன்றும் போய் விடவில்லை. ஒரு பெரும் நிலப்பரப்பில் யூரோப்பியரே போன்ற தாமே ஆளப் பிறந்தவர்கள் மற்றெல்லாம் கைகட்டிப் பின் செல்பவர் என்ற மனோபாவம். இது பஞ்சாபியருக்கு உண்டு. இந்தி மாநிலங்களின் மேல் மட்ட மனிதரிடம் உண்டு. வங்காளிகளிடம் முன்பு, இங்கிலீஷ் ஆட்சியும், வங்க தேசப் பிரிவினைப் போரும் அவர்களைப் பிளந்தெறியும் வரையிலும் இருந்தது. கொஞ்சம் வங்கப் பாபுக்களிடம் இன்னும் தென்னிந்தியர்கள் முட்டாள்கள் என்ற கருத்து நிலவுகிறது. ஆளப் பிறந்தவர் வங்காளிகள் என்ற எண்ணம் அங்கும் வேரூன்றி இருக்கிறது.
ஏன் தெலுங்கரிடம், தமிழரிடம், மலையாளிகளிடம் இல்லையா, மராட்டியரிடம் இல்லையா என்று கேட்காதீர்கள். உண்டு.
ரஷ்யரின் வகை ஏக அதிபத்திய விழைவுக்குச் சில தனி குணங்கள் உண்டு. அவை என்ன என்று ஒரு ரஷ்யர் பட்டியலிடுகிறார் இங்கே.
oOo
அடிமைப் பெண்
பிரமிடுகளைத் தெரியும். கொத்தடிமைகளால் கட்டப்பட்டது. தாஜ் மகாலைத் தெரியும். அதுவும் ஏழைகளால் ராஜாவிற்கு எழுப்பப்பட்டது. பிரமிடுகளைக் கட்டி ஐயாயிரம் வருடங்கள் ஆகிவிட்டது. தாஜ் மஹாலைக் கட்டி நானூறு ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால், முப்பது ஆண்டுகளுக்கு முன்பான கம்யூனிஸ ரோமானியாவில் அப்படியொரு மாட மாளிகையைக் கட்டித் தந்தவர் அன்ஸா பெட்ரெஸூ (Anca Petrescu). பத்து இலட்சம் ரொமானியர்களைக் கொண்டு எழுநூறு கட்டிடக் கலை வல்லுநர்களை வேலைக்கமர்த்தி செய்து முடிக்கப்பட்ட அரண்மனை. பூகம்பம் நடந்த இடத்தில், நகரின் மையப் பகுதியை அழித்துவிட்டு, ரோமானிய கம்யூனிஸத் தலைவருக்காக இந்த மாதிரி குடிலை எழுப்பலாம் என்று ஐடியா தந்து வடிவமைத்தவர் இந்த மாத ஆரம்பத்தில் இறந்து விட்டார்.
http://www.telegraph.co.uk/news/obituaries/10421302/Anca-Petrescu.html
oOo
தாயத்து
ஃப்ரான்ஸீனுக்கு ஒரு மஹா கணபதி கிடைத்திருக்கிறார். இன்று நேற்றல்ல… நாற்பது வருடங்களாக கூட வருகிறார். கல்யாணமான பிறகும் அவரின் மேஜையை அலங்கரித்திருக்கிறார். கல்லூரி கல்லூரியாக வேலை மாறினாலும் சுவரில் அருள்பாலிக்கிறார். மேற்கத்திய உலகில் நம்பிக்கைகள் ரொம்ப அதிகம். சொந்த அணி ஜெயிக்க வேண்டுமானால் ஜட்டி கூட மாற்றாமல் அலுவலுக்கு வருபவர்கள் அதிகம். அவர்களுக்காக பிள்ளையாரின் பெருமையை எடுத்துரைக்கிறார்.
http://www.vqronline.org/articles/2013/fall/talisman-prose/
oOo
சமூக வலையில் முடங்கிக் கிடக்கும் பதினாறு வயதினிலே
அமேசான்.காம் தளத்திலே பொருள்கள் வாங்குவாதால் கடைகளில் கூட்டம் கம்மியாவது நாம் அறிந்த விஷயம். ஆனால், ஸ்னாப்சாட்டிலும் இன்ஸ்டாகிராமிலும் குடியிருப்பதால் ஷாப்பிங் செல்வதே குறைந்து வருகிறது. சனி, ஞாயிறானால்… நண்பர்களோடு அங்காடிகளுக்கு படையெடுப்பது இளைய தலைமுறையினரின் விருப்பம். எதுவும் வாங்காவிட்டாலும், கையில் நயா பைசா இல்லாவிட்டாலும், ஒவ்வொரு கடையாக நுழைந்து, ஆடைகளை அணிந்து பார்த்து, காலணிகளைப் போட்டுப் பார்த்து, அழகு பார்த்து ரசிப்பது சென்ற தலைமுறையின் வழக்கம். இன்றைய பதின்ம வயதினர் வீட்டிலேயே உட்கார்ந்து உலகத்தை மேய்வதால் என்ன நடக்கிறது என்பதை அலசும் கட்டுரை:
oOo
இந்தியாவின் தலை சிறந்த விருதான பாரத ரத்னா எந்தவொரு துறையிலும் சிறப்பாகப் பங்களிப்பவருக்குக் கொடுத்து கௌரவிக்கப்படுவது. இவ்விருதைப் பெறுபவர்கள் இதை அவர்களது அரசியல் சார்புக்காகவோ, கருத்தியல் சார்புகளுக்காகவோ பெறுவதில்லை. பல சமயங்களில் இதைப் பெற்றவர்களால் விருதுக்கே கௌரவம் கூடியுள்ளது . இதற்கு ஒரு சிறப்பான உதாரணம் லதா மங்கேஷ்கர் . தன் சுய முயற்சியாலும், தன இனிமையான குரலாலும், அதீத உழைப்பாலும் இசைத்துறையில் அவர் அடைந்த உச்சத்தை கௌரவிக்கும் முறையில் இந்த விருதை வழங்கி அரசாங்கம் அவரை கௌரவித்தது. ஒரு சுதந்திர நாட்டில் எந்த பிரஜைக்கும் உரிய உரிமையுடன் அவர் சமீபத்தில் வெளியிட்ட சில தனிப்பட்ட கருத்துகளுக்காக , அவருடைய பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டுமென மும்பாய் காங்கிரஸ் தலைவர் ஜனார்தன் சந்துர்கர் அறிவித்துள்ளது இன்னாட்டின் அரசியல் கட்சிகளுக்கே உரிய மடமையை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் படிக்க:
