பாட்டாளிகளின் அரண்மனை – ஆந்தனி மார்ரா – பகுதி 2

தமிழாக்கம்: மைத்ரேயன்
முந்தையப் பகுதி: பாட்டாளிகளின் அரண்மனை – ஆந்தனி மார்ரா

புற்றுநோய் என் அம்மாவைக் கொல்லுமுன் அவர் பில்லா சூபர்மார்கெட்டில் காசாளராக வேலை செய்து வந்தார். அவர் வீட்டை விட்டுப் போய் பதினைந்து நிமிடங்கள் கழித்து என் அப்பா தன் வேலையைத் துவங்குவார். அவருடைய மொபைல் ஃபோன் அவருடைய இடது காலணியை விடப் பெரியதாக இருந்தது, அவர் தனக்கு வரும் ஃபோன்கால்களை போர்முனையில் இருப்பவனைப் போலத்தான் கையாண்டார், கட்டளைகளைப் பின்பற்றினார், தனக்கு மேலிடத்தாரை ‘சார்’ என்று அழைத்தார். ரப்பர் கையுறைகளை அணிந்து கொண்டு, பெயிண்ட அடிப்பவர்களைப்  போல முகத்தை மூடிக் கொண்டு, சமையலறை மேஜையில் ஹெரொயினைக் கூறு பிரித்தார். என்னை அதைப் பார்க்க அனுமதித்தார், எட்டு வயதிருக்கையிலேயே எனக்குத் தெரிந்திருந்தது, இது அவருக்கும் எனக்கும் மட்டும் தெரிய வேண்டிய ஒன்று என்று.

“இது உனக்குக் கெடுதலான ஒன்று,” என்றார் அவர், “ இதை ஒரு போதும் சாப்பிடமாட்டேனென்று நீ எனக்கு சத்தியம் பண்ணு.”

நான் தலையாட்டினேன். அந்த வாக்குறுதியை நான் காப்பாற்றினேன். கச்சா ஹெரொயினை ஒரு க்ரைண்டரில் போட்டுப் பொடியாக்கினார், பின் ஒரு மாவுச் சல்லடையில் அதோடு குழந்தைக்கான பால்பவுடர் மாவு, க்வினைன், கஃபீன் ஆகியவற்றோடு சேர்த்துப் பொடியாக்கினார்.  அவர் சிறு  அளவைக் கரண்டிகளால் அந்தப் பொடியை சிறு துண்டுக் காகிதங்களில் போட்டு மடித்தபோது, நான் கேட்டேன்,”நீங்க என்ன தயார் செய்றீங்க?”

“பிழைப்புக்கு வழி தேடறேன்,” என்றார்.

கோடை காலத்தில் நான் பள்ளிக் கூடத்திலிருந்து விடுபட்ட போது, என் அம்மா வேலைக்குப் போயிருக்கையில், அந்தப் பொடியைக் கொண்டு கொடுக்கும் வேலையைச் செய்ய என்னை அனுமதித்தார். இரவுக் கேளிக்கை விடுதிகளின் மேலாளர்களுக்கும், உயர் நிலை விலைமாதுகளுக்கும் சில கிராம்கள்; அவருடைய வாடிக்கையாளர்களில் இவர்கள்தான்  நேர்மையாக உழைத்துப் பிழைத்தவர்கள். நான் வெளியே போகுமுன் அவர் வரிசையாகப் பல கட்டளைகளை இடுவார்.

“பொடியைக் கொடுக்குமுன் நீ பணத்தை எண்ண வேண்டும்.”

“போலிஸ்காரர்களை முகம் கொடுத்துப் பார்க்கக் கூடாது.”

“நீ மீறுகிற சட்டத்தைத் தவிர பாக்கி எல்லா சட்டங்களையும் மதிக்க வேண்டும்.”

“நீ தாமதித்து நின்று யாரோடும் பேசக் கூடாது.”

“வளர்ந்த ஆள் போல நீ நடந்து கொண்டால், அப்படியே நடத்தப்படுவாய்.”

நான் தலையாட்டி விட்டு, அவர் கொடுத்த ஆணைகளின் வழியே நடந்தேன். மெட்ரோ டோக்கன்களை வாங்கினேன், நுழைவாயில் தடையைத் தாண்டிக் குதிக்கவில்லை, ஒவ்வொரு குறுக்குப் பாதையிலும், சிக்னல் வரும் வரை காத்திருந்து நடந்து கடந்தேன். கதவுகளில் உள்ள கண்காணிப்புத் துளையை விட நான் மிகவுமே குள்ளம் என்பதால், பல முறை கதவைத் தட்டிய பிறகே பலரும் கதவைத் திறந்தார்கள்.  விலைமாதர்கள் எனக்கு சிறப்பான சன்மானம் கொடுத்தார்கள், சில நேரம் வீடுகளுக்குள் அழைத்து எனக்கு கேக் எல்லாம் கொடுத்தார்கள். நான் வளர்ந்து இளைஞனான போது இவற்றின் நினைவு எனக்குக் கசப்பைத் தந்தது. புனித பீடர்ஸ்பர்கில் இருந்த பல பேரழகியர்களின் ஹோட்டெல் அறைகளுக்குள் நான் அனுமதிக்கப்பட்டிருந்தேன், ஆனால் தேநீர் கேக்குகளால்தான் நான் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்.

Heroin (r) south east asian (L) south west asian

சமையலறை மேஜையில் ஹெரொயின், ஜன்னல் முகப்பில் பனித்துகள்; பாதித் தாவலில் இருந்த ஓநாயின் உரு அவருடைய முன்னங்கை நெடுகப் பச்சை குத்தப்பட்டிருந்தது, அறுவை சிகிச்சை மருத்துவ முகமூடி வாயை மூடியிருந்தது, உறை அணிந்த கைகள் பொடியைச் சலித்தன, நுட்பமானதொரு இயக்கம் அது: இவைதான் என் அப்பா. அவர் ஒரு முதலீட்டாளர், புது ரஷ்யாவுக்காகத் தயாரான மனிதர். அவர் ஒருபோதும் சீருடை ஒன்றை அணிந்து, தூரப்பிரதேசமொன்றில் போரில் தன் கால்களை இழந்திருக்க மாட்டார்.

என் அம்மாவுக்குத் தெரிந்திருந்தது, ஆனால் அவர் தனக்குத் தெரியாதது போல நடித்தார். அவருக்கும் எனக்கும் என் அப்பாவின் பிழையான நடத்தை தெரியாதிருந்த வரை, அதனால் எங்களுக்கு நல்லது நடந்தால், எல்லாம் சரியாகத்தான் நடப்பதாகப் பாவனை. அந்த அடுக்ககத்திலேயே முதலாக இருபது அங்குல வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி எங்கள் வீட்டுக்குத்தான் வந்தது. பில்லா சூபர்மார்க்கெட்டில் இருந்த காசாளர்களில் என் அம்மா ஒருத்தரிடம்தான் ஃபர் மேலங்கி இருந்தது. நான் என் அப்பாவுக்குக் கையாளாக இருந்தேன் என்று என் அம்மாவுக்குத் தெரிந்த அன்று, இதெல்லாம் ஒரு நாள் முடிவுக்கு வந்தது.

ஒரு உஷ்ணமான ஆகஸ்டுப் பிற்பகலில் நான் முன்வாயிலைத் தாண்டி உள்ளே வந்தபோது, ‘இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்?” என்று அம்மா என்னைக் கேட்டார். அன்று வேலையிலிருந்து சீக்கிரம் வீடு திரும்பியிருந்தார். “என்ன செய்து கொண்டிருந்தாய்?”

“பிழைப்புக்கு வழி செய்து கொண்டிருந்தேன்,” என்றேன். என் கன்னத்தில் ஒரு அறை விட்டார், பின் என் நோகும் கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடியபோது என்னைக் கட்டியணைத்துக் கொண்டார்.

“நான் இரண்டு குற்றவாளிகளோடு வாழ மாட்டேன்,” என்றார்.

அடுத்தநாள் என் அப்பா எங்கள் அடுக்ககத்தின் வாயிலில் கைதானார்.

கோடை முழுதும் என் நண்பர்களைத் தவிர்த்தேன். அவர்களுடைய ஃபோன் கூப்பிடல்களுக்குப் பதிலளிக்கவில்லை, அவர்கள் அடிக்கடி புழங்கும் பூங்காக்கள், மதுக்கடைகளை எல்லாம் கவனமாகத் தவிர்த்தேன். அவர்களை ஜூலை நடுவில், கோஸ்டினி ட்வோர் மெட்ரோ ப்ளாட்ஃபாரத்தில், ஒரே ஒருதடவை பார்த்தேன், ஒரே ஒருதடவை பார்த்தேன். வாலெரிதான் என்னை முதலில் பார்த்தான். அவனுடைய கொட்டைப் பகுதியைச் சொறிந்து கொண்டிருந்தான், நான் பேன்கள் தெற்கு நோக்கிப் பயணம் செய்து விட்டனவோ என்று யோசித்தேன்.

‘2பாக், எங்கே போயிருந்தே?” என்று கேட்டான். இவான் அவன் பின்னே நின்றிருந்தான், கையில் பிடித்திருந்த சிகரெட்டை உற்று நோக்கிக் கொண்டிருந்தான், ஏதோ அப்படி உற்றுக் கவனித்து அதை பற்றிக் கொள்ளச் செய்ய முடியும் என்பது போல.

நான் கீழே கிரில்லைப் பார்த்தபடி சொன்னேன்,’ வேலை செய்தேன், அவ்வளவுதான்.”

“நீ அலெக்ஸாண்டரைப் பத்திக் கேள்விப்பட்டியா? அவன் ரெண்டு வாரம் முன்னே ஒரு சாராயக் கடையைக் கொள்ளை அடித்தான்,” இவான் சொன்னான். “அவனை கொஞ்ச தூரம் தள்ளிப் பிடித்து விட்டார்கள். அடிச்ச பணத்தைச் செலவழிக்கக் கூட அவனுக்கு நேரமிருக்கல்லை.”

“அவன் என்ன கிரெஸ்டியில் இருக்கிறானா?” நான் கேட்டேன்.

வாலெரி தலையாட்டி ஆமோதித்தான்.”நாங்கள் அவனைப் போய்ப் பார்த்தோம். அது அத்தனை மோசமில்லை என்கிறான். தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. மின்சாரம் இலவசம். என்னென்னவோ தொடர்புகளெல்லாம் கிட்டுகிறதாம். நாங்கள் இந்த வார இறுதியில் அவனோடு போய்ச் சேரப் போகிறோம்.”

“என்ன குற்றத்துக்கு?”

“நாங்க ஒரு போலிஸ் காரைத் திருடப் போகிறோம்,” கையிலிருந்த சிகரெட்டை மறந்து இவான் சொன்னான். “நீயும் சேருவியா?”

நான் இல்லையெனத் தலையசைத்தேன். “நான் இன்னும் கொஞ்ச வாரங்கள் பொறுத்திருக்கப் போறேன். ஆனா நான் உங்களோட உள்ளே வந்து சேர்ந்துப்பேன்.”

‘சத்தியமாச் சொல்றியா?” இவான் கேட்டான்.

“ஆமா, சந்தேகமே இல்லெ.”

“உன்னோட கழுத்துதான்,” ப்ளாட்ஃபாரத்தை விட்டு வெளியே போகுமுன் வாலெரி சொன்னான். “ஜெயில்லெ, உன் தலை அதோடயே நிறைய நாள் ஒட்டிகிட்டு இருக்கும்.”

Three_Men

வெள்ளைப் பளிங்குக் கற்கள் பதித்த பாதசாரிகளுக்கான சுரங்கப் பாதைக்குள் அவர்கள் நடந்து நெவ்ஸ்கி ப்ரொஸ்பெக்ட் ரயில் நிலையம் நோக்கிச் சென்று மறையும் வரை கிரில் ஏதும் பேசவில்லை. ஒற்றை பிக் பேனாக்களையும், ஹோட்டெல் குளியலறைப் பொருட்களையும் கூவி விற்பவர்களை நாங்கள் ரயில் வரும்வரை பார்த்துக் கொண்டிருந்தோம்.

“நீ அதெச் செய்யத்தான் போறியா?” கிரில் கேட்டார். சிறிது கூட இகழ்ச்சி இல்லை அவர் குரலில், குறை சொல்வதை நெருங்கும் எந்தச் சுவடும் இல்லை.

“ எனக்குத் தெரியாது.” என்றேன்.

புரிந்ததாக, கிரில் தலையை அசைத்தார். வரும் ரயிலைக் காட்டும் விதமாக மென் காற்று என் தலைமுடியூடே பிய்த்துக் கொண்டு போயிற்று. வனஸ்பதி போட்டுப் படிய வைக்கப்பட்ட கிரில்லின் முடியில் எந்த அசைவும் இல்லை.

வாரங்கள் கடந்தன, நாட்கள் வேறுபாடேதுமின்றி ஒரேபோலிருந்தன. ஒரு பழுப்பு மடிப்புக் காகிதத்தில் அரை கிராம் ஹெரோயினை என் அப்பா கண்டு பிடித்த இரவிலிருந்து இது வரை நான் ஹெரோயினைத் தொடவில்லை.  ஒவ்வொரு நாளும் நான் காலை நான்கு மணிக்கு விழித்தெழுந்தேன், கிரில்லுக்கு ஆடைகளணிய உதவினேன். மீடியம் சைஸ் மார்ல்பரோக்களை நாங்கள் காலை உணவாக வைத்துக் கொண்டோம், நண்பகல் வரை ரயில்களில் வேலை செய்தோம். தெருக்கடைகளில் மதிய உணவை வாங்கி உண்டோம், கிரில் எனக்கு மெட்ரோ ரயில் அமைப்பு பற்றிய வரலாற்றைப் போதித்தார்.

“உலகின் கூட்டமான மெட்ரோக்களில்  இது பதின்மூன்றாவது.” பன்றிக்கறியைச் சிறு சிறு வாய்களாகக் கடித்து உண்டபடி கிரில் சொன்னார். அது ஒரு புனித நாள், பீட்டருக்கும், பௌலுக்கும் விருந்து வைக்கும் நாள், நகரம் உஷ்ணமான வானிலையாலும், கோடைக்கால கலக்கல் மதுபானங்களாலும் கிறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. “ஆனால் பீட்டர்ஸ்பர்கோ உலகின் பெரிய நகரங்களில் நாற்பத்தி ஐந்தாவதுதான். இதிலிருந்து உனக்கு என்ன தெரிந்தது?”

நான் தோள்களைக் குலுக்கினேன். மறுபடி பள்ளிக்கூடத்துக்குப் போனது போல இருந்தது அது. “நாம் கார்களை வைத்துக் கொள்ள முடியாத அளவு ஏழைங்கன்னு.”

நான் சொன்னது கேட்காதது மாதிரி கிரில் தொடர்ந்தார், “நம்ம கிட்டே இருக்கிற மெட்ரோ ரயில் அமைப்பைப் பத்தி நாம் பெருமைப்படலாம்னு அது காட்றது. நியுயார்க்கும், லண்டனும், அங்கேருக்கிற மெட்ரோவில எல்லாம் க்ரிஸ்டல் சாண்டலியர்களும், பளிங்குத் தரைகளும், பித்தளைச் சிலைகளும் இருக்குமுன்னு நெனைக்கிறியா என்ன?”

“ஆமா, அப்படித்தானே இருக்கும்?”

“அங்கே அதெல்லாம் இல்லே,” பிடிவாதமாகச் சொன்னார். “ சுவர்க்கிறுக்கல்களும், உடைஞ்சு விழுகிற சுவர்களும், கண்காணிப்புக்கு பெரும் விளக்குகளும்தான் அங்கெல்லாம் இருக்கு. அங்கே அழகு இல்லை. பாட்டாளிகளின் அரண்மனையைப் பத்திக் கேட்டிருக்கியா?”

Trains_Railways_Station

“புது சீஸனுக்கு, அதைப் பத்தி விளம்பரப்படங்களைப் பார்த்திருக்கிறேன்.” நான் சொன்னேன். ஒருவழியாகக் கிரில் எனக்கு ஈடுபாடு இருக்கிற ஒரு விஷயத்தைப் பத்திப் பேசத் துவங்கி இருந்தார். “ ஃபோனடாங்கா மேல்கரையில் இருக்கிற பழைய அரண்மனைகளில் ஒன்றில் பத்துப் புதுத் தம்பதிகள். யார் முதல்லே ஏமாத்தி கள்ள உறவு கொள்றாங்களோ அவங்களுக்குப் பாரிஸுக்குப் போக ஒரு வாய்ப்பு கிட்டும், அதுதானே?”

”நான் டிவி ஷோ வைப் பத்திப் பேசல்லை.மெட்ரோவைப் பத்திப் பேசறேன்.” அவர் ஆழமாக மூச்சு விட்டார். தன்னுடைய ஸாஸேஜைச் சுத்தமாக மறந்து போய் விட்டார். “பாட்டாளிகளின் அரண்மனை, அப்படித்தான் லெனினும், ஸ்டாலினும், க்ருஷ்சாவும் அதை அழைத்தார்கள். ட்ஸாருக்கோ, ராஜகுமாரர்களுக்கோ இல்லை அந்த அரண்மனை, ஆனால் உனக்கும் எனக்குமானது.”

அவர் முகம் சிவந்திருந்தது. தரையடியில்தான் அவர் மிகவும் சௌகரியமாக உணர்ந்தாரென்பதை நான் கவனித்திருந்தேன். “நாம மறுபடியும் கீழே போகலாமே,” நான் யோசனை சொல்லி, அவரை புஷ்கின்ஸ்கயா நிலையத்தின் வாயிலை நோக்கித் தள்ளிப் போனேன்.

“ஏப்ரல் இருபதாம் தேதி நீ வேலை செய்யக் கூடாது,” நான் அவரை சோதனைக் கதவுகளுக்கு மேலாகத் தூக்கி அப்புறம் வைக்கையில் அவர் எனக்குப் புத்தி சொன்னார், ”மொட்டைத்தலைக் கும்பல்கள் ஹிட்லரின் பிறந்தநாளன்று ரொம்பவே மோசமாக நடந்து கொள்கிறார்கள்.”

நான் அத ஏற்றுத் தலையசைத்தேன், ஆனால் இந்த புத்திமதி எனக்கு எப்படிப் பொருந்தும் என்று எனக்குப் புரியவில்லை.

ப்ளாட்ஃபார்மில் பலவிதங்களில் உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களை நாங்கள் கடந்தோம். முன்னாள் போர் வீரர்களை விட சாதாரணர்கள் அதிக மோசமாக இருந்தார்கள். ஒரு ஒன்பது அடி நெட்டையன், மரக் கூடை ஒன்றில் உடலில் எலும்புகளே இல்லாத சிறுவன் ஒருவன் ஊற்றப்பட்டுக் கிடந்தான், கடல் சங்கு போல முகம் கொண்ட ஒரு பெண். நகர மக்களில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடமிருந்து தானம் பெறவெனப் புனித நாட்களில் அவர்கள் பெரும்திரளாக நகருக்கு வந்தனர். தங்களுடைய நோய்களின் பயங்கரங்களை விவரித்த தட்டிகளைச் சிலர் கையில் பிடித்திருந்தனர். கிரில் தன் சக்கர நாற்காலியிலிருந்து கிழிறங்கி, தரையில் தவழ்ந்து, ஒவ்வொருவரையும் பெயரைச் சொல்லி அழைத்தபடியே, அவர்களைக் கடந்தார், இந்த விசித்திரப் பிறவிகளுக்கும், விபரீதங்களுக்கும் சமூக வாழ்வு என்று ஏதும் உண்டா என்று நான் யோசித்தேன். வார இறுதி நாட்களுக்கு என்று ஏதும் திட்டமிட்டு, முகமறியா நபர்களோடு உறவுச் சாத்தியங்களைத் தேடிப் போனார்களா என்று வியந்தேன். ஒருவரோடொருவர் வம்பு பேசுவதோ, வெறுத்து ஒதுக்குவதோ, அன்பு செலுத்துவதோ அவர்களுக்கு முடிந்ததா?

ப்ளாட்ஃபாரத்தின் விளிம்பருகே நாங்கள் காத்துக் கொண்டிருக்கையில், அவர் தன் கால்களை இழந்தது எப்படி என்று ஏன் விளக்குவதில்லை என்றும், பிறரிடம் தானம் வாங்கும்போது அவர் ஏன் நன்றியுணர்வே இல்லாதது போல மௌனமாகவும் எதிர்ப்புணர்வோடும் காணப்படுகிறார்  என்றும் நான் கிரில்லிடம் கேட்டேன்,

அவர் பதில் பேசுமுன் ஒரு கணம் யோசித்தார். வந்து கொண்டிருந்த ரயிலின் இரைச்சலில் அவர் சொன்னது கிட்டத்தட்ட தொலைந்து போனது. “மற்றவர்களின் இரக்கத்தை வைத்து ஒருவர் வாழ முடியும்,” அவர் சொன்னார், “ஆனால், உனக்கு ஒரு கோடை வீடு (டாச்சா) வேண்டுமென்றால் நீ அவர்களைப் பெருமித உணர்வு கொண்டவர்களாகவும் ஆக்க வேண்டும்.”

“எப்படித்தான் அது ஆச்சு?’ நான் கேட்டேன். கோடைக்காலம் முழுதும் என் மனதில் அந்தக் கேள்வி கனத்துக் கொண்டிருந்தது, நான் ராணுவத்தில் சேர இன்னும் ஆறு நாட்கள்தான் பாக்கி இருந்தன.

“அதைப் பற்றிப் பேச எனக்குப் பிடிப்பதில்லை,” அவர் சொன்னார். கிட்டே நெருங்கிய ரயிலின் முன் வரும் காற்று தண்டவாளங்களின் மேலாகப் பிய்த்துக் கொண்டு போயிற்று. அது பெரும் ஆசுவாசத்தைக் கொடுத்தது. ரயில் நிலையத்தை அடையும்போது, கிரீல் கூடியிருந்த பிச்சைக்காரர்களை நோக்கி திரும்பிக் கொண்டார். அவர்களுக்கு ஒரு சல்யூட் அடிப்பாரென்று நான் நினைத்தேன், ஆனால் அவர் சிரிப்பை மட்டும் சிந்தினார், ரயிலில் ஏறினார்.

அன்று மாலை என் ராணுவ உடுப்பு சமையலறை மேஜை மீது இருந்தது. சாம்பல் நீல நிறத்தில், கிரில்லின் உடுப்பு போலவே சொரசொரப்பான கம்பளி உடை. கால் சராயைப் பிரித்து, இடுப்பருகே வைத்துப் பார்த்தேன். கால்கள் என் குதிகாலுக்குக் கீழே நீண்டன, தரையில் படுத்தன.

“இதை எல்லாம் ட்ரை க்ளீனரிடம் நாளை எடுத்துப் போகிறேன்,” கதவருகே நின்ற என் அப்பா சொன்னார். பூனை அவர் சில அடிகள் தள்ளிப் பின்னாலேயே வந்தது. ”காலடியை மடித்துத் தைத்தால் நீ பிரமாதமாய்த் தெரிவாய்.’

“எனக்குப் போவதற்குச் சிறிதும் விருப்பமில்லை,” நான் பூனையிடம் சொன்னேன். அது தலையைச் சாய்த்தது, பின்னர் அறையை விட்டுப் போகையில் தன் வாலை ஒரு சொடுக்குச் சொடுக்கியது. இதயமே இல்லாத மிருகம், ஒரு துளிக்கூட பரிவே காட்டவில்லை.

என் அப்பாவின் கண்களை நோக்கினேன். “நம்மால் முடியுமென்றால், நாம் எல்லாரும் கர்ப்பப்பையிலேயே தங்கி இருப்போம்,” என்றார் அவர். என்னை நோக்கி நடந்து வந்தார், என் தோள் மீது கையை வைத்தார். அவர் கை விரல்கள் நடுவிலிருந்த பாதி பிடித்து முடித்த சிகரெட் என் கண்களில் நீரை வரவழைத்தது. ஒரு சோடா தகரடப்பியில் சிகரெட்டைப் போட்டார், என் கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரைத் தன் கட்டை விரல்களால் துடைத்தார்.

‘உன்னைப் பாரேன்.”என்றார், கீழே குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டார். “என்னோட செர்யோஷா. எனக்குப் பெருமை தேடித்தரப் போகிறாய்.”

வானம் மேகங்களற்று இருந்தது அடுத்த நாள் காலையில். செர்னிஷெவ்ஸ்காயாவை நோக்கி அவரைத் தள்ளிக் கொண்டு போகையில் கிரில்லின் சரித்திரப் பாடங்களை நான் சட்டை செய்யாமல் போனேன். அவருடைய தாத்தா ரயிலில் நடத்துனராகப் பணியாற்றியதோ, ஜுகோவுக்குக் கீழே யுத்தத்தில் அவர் வீரராகப் பணியாற்றியதோ, பெர்லின் நகரை அடைந்ததோ, ஜெர்மன் ரைக்‌ஷ்டாகில் (மக்கள் மன்றத்தில்) ஒரு கழிப்பறையில் மலம் கழித்ததோ,  அதெல்லாம் எனக்குச் சிறிதும் பொருட்டாகத் தெரியவில்லை. இன்னும் ஐந்து நாட்களில் கால்புறம் மடித்துத் தைக்கப்பட்ட கால்சராயணிந்து நான் பணியில் சேர வேண்டும்.

முதல் ஆறு மணி நேரத்துக்கு நான் மௌனமாக இருந்தேன். கிரில் ரயில் பெட்டிகளில் நெடுகத் தவழ்ந்து போனார், நான் சக்கர நாற்காலியை அவர் பின்னே தள்ளிக் கொண்டு போனேன். கூடையில் ரூபிள்கள் விழுந்தன, ஒவ்வொரு நிறுத்தத்திலும் அவர் அவற்றைச் சேகரித்துக் கொண்டார்.

ப்ளாட்ஸ்சாட் லெனினாவை அடைந்த போது நான் அவரிடம் சொன்னேன், ‘நாம சாப்பிடப் போகலாம்.”

“பதினொன்றரை மணிதானே ஆகிறது?” என்றார் கிரில்.

“எனக்கு ஒரு சிகரெட் வேணும்.”

கிரில் பெருமூச்சு விட்டார், சக்கர நாற்காலியில் ஏறிக் கொண்டார். நான் எஸ்கலேடரை நோக்கி அவரைத் தள்ளினென், அவர் கீழிறங்கிக் கொண்டார், படியைத் தன் முதுகு நோக்க அமர்ந்து கொண்டார், அன்று காலை சம்பாதனையை எண்ணிக் கொண்டார், மொத்தத் தொகை குறித்து அவருக்கு மகிழ்ச்சிதான் என்பதாகத் தெரிந்தது.

“உன்னுடைய பணத்தை எப்போதும் உன் கால்சராய் பைகளில் வைத்துக் கொள்ள வேண்டும்,” என்றார் அவர். “ பெரும்பாலான திருடர்கள் உன் துண்டமான கால்களைப் பார்த்து அருவருப்பு கொள்வதால், அவற்றுக்குக் கிட்டே போக மாட்டார்கள்.”

“நீங்க விடாம ‘உன்’னோடன்னே சொல்றீங்களே,” என்று சன்னமாகச் சொன்னேன்.  அது எனக்கு நிதானமாகப் புரிந்திருந்தது.

disabled_Senior_Citizen_Alms-beggar

முகத்தைச் சுருக்கியபடி பதில் சொன்னார், “நான் உன்கிட்டேதான் பேசறேன். உன்னை வேறென்னன்னு கூப்பிடறது?”

“நீங்க எனக்கு வழி சொல்லித் தரீங்க, எனக்குப் பயிற்சி தருகிறீங்கன்னு தோணுது. “நீ இதைத்தான் செய்யணும், நல்ல பிச்சைக்காரனா இருக்க இதெல்லாம் செய்யணும்,’  அப்படி.“

“நான் பொதுப்படையாத்தான் பேசிக்கிட்டிருந்தேன்,” அவர் ஆரம்பித்தார், ஆனால் நான் ஏற்கனவே கேட்பதை நிறுத்தி விட்டிருந்தேன். கால்களில்லாமல் எப்படி வாழ்வதென்று அவர் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நான் அவருடைய கையாள், நானோ மிகவும் பீதியடைந்திருந்தேன்.

சுற்றி நின்றவர்களின் முகங்கள் எனக்கு நினைவில்லை. யார் என்ன கத்தினார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை, நான் மடிக்கப்பட்டிருந்த அந்தச் சக்கர நாற்காலியை எஸ்கலேட்டரில் கீழே விழும்படி விட்டு விட்டிருந்தேன். சிகரெட் விற்கும் சிறு கடைகளின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த அன்றைய தினசரிகளின் தலைப்புச்  செய்திகள் எனக்கு நினைவிருக்கின்றன: மேற்கு யூரோப்பில் பொருளாதாரச் சிக்கல் மோசமடைகிறது, சாகாலின் வ்ளாடிவாஸ்டாக் குழாய்த் தொடரின் கட்டுமானப் பணி துவங்கியது, செசென் எல்லையில் மூன்று படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.  அவரைக் குத்தியதும் , குத்திக் குத்தி என் முட்டிகள் சிதைந்த ராஸ்ப் பெர்ரி போல ஆகி இருந்ததும், அவருடைய பிசுக்கான முடியைப் பற்றிக் கொண்டு அவரது முகத்தை எஸ்கலேட்டரின் படியில் திரும்பத் திரும்ப மோதியதும் எனக்கு நினைவிருந்தது.

கிரில் துவண்டு போனார், அவரது கால் சராயின் முன்பைகளை நான் துழாவினேன், அதிலிருந்து நோட்டுகளையும், சில்லறைகளையும் எடுத்துக் கொண்டு மாடிப்படியேறி ஓடி விட்டேன். அரைத் தெரு தாண்டியதும், திரும்பிப் பார்க்கையில் எஸ்கலேட்டர் கிரில்லை வெளியே கொண்டு வந்து தெரு வாசலில் தள்ளியது தெரிந்தது. பிரயாணிகள் அவரது உடலைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தனர். நான் அந்தப் பணத்தை ஹெரோயினுக்குச் செலவிட்டேன், நகருக்கு வெளியில் ஒரு புற நகர்ப் பகுதியில் இருந்த போதைக் கூடத்தில் அமர்ந்திருந்தேன்,  ஒரு தடவை உச்சிக்குப் போக ஒரு ஊசிக்கு இரண்டு ரூபிள் என்று கட்டணம் கொடுத்தபடி இருந்தேன்.

க்ரெஸ்டி சிறைச்சாலை முன்பு அரசரின் மதுபானக் கிடங்காக இருந்தது, அங்கு சேமிக்கப்பட்டிருத மது மொத்த அரச குலத்தினருக்கும் நீண்ட ஆர்க்டிக் குளிர்காலத்தை முழு போதையில் கழிக்கப் போதுமானதாக இருந்தது. கொத்தடிமைகள் விடுவிக்கப்பட்டபின், நில உடைமையாளர்களிடமிருந்து புதிதாக விடுதலை பெற்ற ஆண்களையும் பெண்களையும் சிறைச்சாலையில் அடைக்கும் பொறுப்பை புது அரசு ஏற்றபின், க்ரெஸ்டி ஒரு தண்டனைக் கூடமாக மாற்றப்பட்டது. அதற்கான மறு புதுப்பித்தலையும் கைதிகளே செய்தனர். என்று என் ரஷ்ய நாகரீக வகுப்பின் ஆசிரியர் சொல்லி இருந்தார், இதுதான் யூரோப்பிலேயே மிகப் பெரிய சிறைச்சாலையாக அன்றும், இன்றும் இருந்தது. புரட்சிக்குப் பிறகு இந்தச் சிறைச்சாலையில் அரசியலில் மாற்றுக் கருத்து கொண்டவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். சோவியத் ஆட்சி வீழ்ந்தபின்  பெரும்பாலும் போதைப் பொருள் சட்டத்தை மீறியவர்களே  இங்கு அடைக்கப்பட்டிருந்தனர். துவக்கத்தில் 1150 கைதிகளையே கொள்ளுமிடமாகத் திட்டமிடப்பட்ட சிறைச்சாலையில், கோம்ஸொமோலா தெருக் கதவுகள் வழியே என் அப்பா உள்ளே அனுப்பப்படுகையில் 12,500 கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர்.

என் அப்பாவை க்ரெஸ்டியில் ஒரு தடவை போய்ப் பார்த்தேன். என் நண்பர்களிடம் அதைப் பற்றிச் சொல்கையில் கைச்சரக்கு சேர்த்துக் கதை கட்டினேன். ’குட்ஃபெல்லாஸ்’ திரைப்படத்தில் இருந்ததைப் போல, என் அப்பாதான் அந்த மொத்த இடத்துக்கும் பெரிய தாதா போல அதைப் பெருக்கி அளந்தேன். ஆனால் அந்த நீண்ட நடைகளில் சிறிதும் தக்காளிச் சாறுடைய வாசனையோ, பூண்டு வாசனையோ இருக்கவில்லை. அம்மோனியாவும், க்ளோரினும் வியர்வை நாற்றமும்தான் இருந்தன.

நான் அங்கே போனபோது, காவலாளிகள் என்னை சிறையறைக்குள் அனுப்பினர். ஒரு சிறுவன் சிறையில் நுழைவது என்பது என்னென்னவோ விதிகளையும், சட்டங்களையும் மீறும் செயல், ஆனால் யாரும் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

“இது அவனுக்குக் கிலியைக் கிளப்பும்,” காத்திருக்கும் அறையில் ஒரு காவலன் சொன்னான்/. அவனுடைய மூக்கு பார்க்க, மிகவும் கனிந்து போன ஸ்டார்பெர்ரியைப் போல இருந்தது.

“அப்படித்தான் செய்ய வேண்டும்,” என்றான் இன்னொரு காவலன். “சிறையறையில் சில நிமிடங்கள் இப்போது இருப்பது இந்தக் குட்டிச் சாத்தானைப் பின்னாடி காப்பாற்றும்.”

முதல் காவலன் பின்னாலேயே ஒரு நீண்ட நடைபாதை வழியே சிறையறைகள் இருந்த கட்டிடத்துக்குப் போனேன். லினோலியம் தரை மீது கடக் தடக்கென்று சப்தித்த அவனுடைய காலடிகள் அவன் ஏதோ தட்டி ஆடும் நடனக்காரரின் காலணிகளை அணிந்திருப்பது போன்ற பிரமையை எழுப்பின. கம்பிகளின் பின்னிருந்து சரைக்கப்பட்ட தலையும், இளைத்த கரங்களும் கொண்ட கைதிகள் வெளியே வெறித்துப் பார்த்தனர். என் அம்மா ஒரு தடவை கூட அப்பாவை வந்து பார்க்கவில்லை. ஒரு வேளை அவரது சிறைத் தண்டனை ஒரு .களையெடுப்பால்’ நேர்ந்திருந்தால், ஒரு அகமதோவா கவிதைக்குத் தகுதியுடையதாக அவரது சிறைத்தண்டனையும், துன்பங்களும் இருந்திருந்தால் அம்மா வந்து பார்த்திருக்கக் கூடும்.

“கைதி நான்கு-ஏழு-ஆறு-மூன்று-இரண்டு-எட்டு-ஒன்பது-ஏழு-ஏழு.” அந்தக் கட்டிடத்தில் கடைசி அறைக்கு முந்தைய அறையை எட்டியபோது காவலன் கூவி அழைத்தான். “உனக்கு ஒரு பார்வையாளர் வந்திருக்கிறார்.”

இன்னும் பத்தொன்பது நபர்களோடு என் அப்பா பகிர்ந்து கொண்ட சிறையறை தனிமைச் சிறைக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறை. அவர் தலை சரைக்கப்பட்டிருந்தது, குழிகளில் கண்கள் வீங்கி இருந்தன.

“உன்னிடம் சிகரெட் ஏதும் இருக்கா?” கம்பிகளருகே வருகையில் அவர் என்னைக் கேட்டார். நான் மறுத்துத் தலையசைத்தேன். எனக்கு ஒன்பது வயது அப்போது.

நான்கு வருடங்கள் கழித்து அவர் விடுவிக்கப்பட்டார், தண்டனையில் மூன்றிலொரு பங்குதான் அவர் சிறையில் கழித்திருந்தார். அவருடைய முதல் விடுப்புக்கான விசாரணை தினம் வருவதற்குச் சில தினங்கள் முன்புதான் என் அம்மா இறந்திருந்தாள். அரசுடைய சிறுவர் நல விடுதிகளும், அனாதை இல்லங்களும் சிறைச்சாலைகளை விடவும் மிகவும் கூட்டம் பெருத்து நெரிசலாகி இருந்தன.  அதை எல்லாம் கணக்கில் கொண்டது விசாரணை மன்றம். விடுதலைக்குப் பிறகு அவர் ராணுவ வீரராக இல்லை, சாதாரணராக மாறினார். ஒரு தற்காலிக டாக்ஸி ஓட்டுநராக இருந்தார், ஒவ்வொரு மஞ்சள் விளக்கிலும் காரை நிறுத்தி ஓட்டினார். எனக்காகத்தான் அப்படி மாறினார் என்ரு நான் நினைக்க விரும்பினாலும், அவர் தன் நலனுக்காகத்தான் மாறி இருந்தார். சட்டத்திற்குப் பணிந்த வாழ்வின் நிராசைகளை விட, கிரெஸ்டி சிறைச்சாலைக்கே அவர் கூடுதலாகப் பயந்தார். அவருடைய மனதிலிருந்து ஊக்கத்தையும், அவரது திமிரையும் எது உறிஞ்சி விட்டது என்று எனக்குத் தெரியாது, ஆனால் அந்தச் சிறைச்சாலையில் எனக்குத் தெரியாத ஏதோ நடந்திருக்க வேண்டும். அவர் சிறையிலிருந்து விடுதலை பெற்றுத் திரும்பிய சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் என்னை விடப் பெரிய சிறுவர்கள் சிலர் உதை பின்னி எடுத்து விட்டார்கள். நான் வீட்டுக்கு வரும்போது என் கன்னங்கள் வீங்கி இருந்தன, என் நெற்றியில் பெரிய கிழிசல். என் கண்ணடிக் குழியில் கருப்பு காலணிப் பாலிஷ் பூசியமாதிரி கரிய மினுமினுப்பு. அவர் ஜன்னல் முகப்பைத் திறந்தார், மூன்று பனிக்கட்டிகளைக் கொண்டு வந்தார், அவற்றைத் தன் மாமிசம் வெட்டும் கத்தியின் கட்டையால் உடைத்தார். கடைக்குப் போகப் பயன்படும் ஒரு ப்ளாஸ்டிக் பையில் அவற்றை இட்டார், பையை என் முகத்திற்கெதிராக அழுத்திப் பிடித்தார். என் முன் நெற்றியில் சிறு கண்ணாடித் துகள்கள் துளைத்திருந்தன, அவற்றை அவர் குளியலறைக் கிடுக்கி ஒன்றால் பொறுக்கி வெளியே எடுத்த போது நான் அலறினேன், அழுதேன். “நீ பயமே இல்லாதவனாக இருக்க வேண்டும்,”  என்று சொன்னவர், எனக்கு வாட்காவைக் குடிக்கக் கொடுத்து விட்டு மறுபடி சிறு கிடுக்கியால் குத்திய கண்ணாடித் துகள்களைத் தேடித் துழாவினார். ”பயத்தோடு நடக்கும் ஒரு மனிதன் தரையில் நெளியும் பிராணிதான். இந்த உலகில் அவனுக்குக் கிட்டும் எல்லாத் துன்பங்களுக்கும் உரித்தானவனே அவன்.”

“நான் அவற்றுக்கு உரியவனாக இருக்க மாட்டேன்,” என்றேன் நான், அப்பால் என் முகம் கண்ணீராலும், மூக்குச் சளியாலும் வழுவழுப்பாக இருந்ததென்றாலும், என் அப்பா என்னைப் பெருமிதம் பொங்கப் பார்த்தார்.

நான் இரண்டு இரவுகளை அழித்தேன், கிரில்லின் அத்தனை பணத்தையும் தொலைத்தேன். ஒரு தலைவலியும், வாந்தி வருமுணர்வும், நிலத்தில் சிக்கிக் கொண்டாலும் கடலலையால் அவதிப்படுபவன் போன்ற உணர்வும். தரையில் கட்டை ஆணிகளால் பொருத்தப்பட்ட திவான். இரண்டு தளங்களுக்குக் கீழிருந்து ரேடியோவிலிருந்து உயர்ந்தெழும் ஒரு பெரிய பாடகியின் இனிய கீதம். போதையுச்சியின் படபடப்பும், கீழிறங்குவதின் நடுக்கமும். ஒரு பியர் பாட்டிலில் என் பிம்பத்தைப் பிடித்தேன், என் கண் பாவைகள் தீட்டப்பட்ட ஊசிப் புள்ளிகளாகவிருந்தன. அறை மேலே திரையிடப்படாத விளக்கால் ஒளியூட்டப்பட்டிருந்தது. படிக்கட்டில் இருந்த அவசரத் தேவைப் பலகையிலிருந்து மின்சாரம் திருடப்பட்டிருந்தது. கைத்தாங்கல்களோடு ஒரு மனிதன் தோன்றினான். அவனுடைய இடது கையும், காலும்,  பலூன் மிருகத்தின் காற்றடித்து உப்பிய அவயவங்களைப் போல, வீங்கியும்  பயனற்றதாயும் இருந்தன. அவன் ஒரு கொகெய்ன் பையைத் தன் பையிலிருந்து உருவி எடுத்தான், ஒரு சமையலறைத் தகட்டில் அதைப் பரப்பினான், அத்துடன் ஹெரொயின் துகளை ஒரு தொலைபேசி கார்டால் கலந்தான். வெள்ளைப் ப்ளாஸ்டிக் லைட்டர் ஒன்றால் அவற்றைச் சூடுபடுத்திப் பதப்படுத்தினான். ஒரு ஸ்பூனிலிருந்து ஊசி அதை உறிஞ்சியது, எனக்கு ஒரு வலியும் தெரியவில்லை. அப்புறம் அவன் என் தமனி ரத்தக் குழாய்களை ஒரு மாஜிக் மார்க்கரால் குறித்தான், நான் புதியவன் என்று தனக்குத் தெரியும், ஏனெனில் என் ரத்தக் குழாய்கள் தோலுக்கு அருகில் இருந்தன என்று சொல்லியபடி, என் முக்கியக் குழாய்கள் எங்கே ஓடின என்று எனக்குப் போதித்தான். ஆமோதித்துத் தலையசைத்த நான் கிறங்கிப் போனேன். அடுத்த நாள் காலையில் ஒரு பெண் வந்தாள், ஐம்பது ரூபிளுக்கு ஒரு கழிப்பறைக் காகிதச் சுருளைக் கொடுப்பதாகச் சொன்னாள். எனக்கு அது தேவை இல்லை என்று சொன்னபோது, அவள் சொன்னாள்,’ ஒரு நாளில்லை ஒருநாள் அது உனக்குத் தேவைப்படும். சாவைத் தவிர அதொன்றுதான் வாழ்வில் நிச்சயமானது.” நான் கேட்டதிலேயே அதுதான் மிகவும் ஆழ்ந்த கருத்துள்ள அறிக்கையாக எனக்குத் தெரிந்தது, அதனால் நான் பனிரெண்டு சுருள்களை வாங்கினேன், மறுபடி ஊசியால் போதை மருந்தை ஏற்றிக் கொண்டேன். ஊசி அந்த மனிதன் என் புறங்கையில் வரைந்த நீல நட்சத்திரத்தைத் துளைத்திருந்தது. என் விரல்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதெப்படி அத்தனை இருந்தன அவை. அறை மேல் கூரையிலிருந்து பெயிண்ட் துகள்கள் உதிர்ந்த வண்ணமிருந்தன. எல்லாமே இடிந்து விழுவதற்காக நான் காத்திருந்தேன். ஒரு முடவரை, நாட்டின் பெருமைச் சின்னத்தை, அடித்துப் போட்டதற்காக எத்தனை வருடங்கள் எனக்குத் தண்டனையாகக் கிட்டும்? இருபது? இருபத்தி ஐந்து? அதை விடக் குறைந்த குற்றங்களுக்குப் பலருக்குக் கூடுதலான வருடங்கள் தண்டனை கிடைத்திருந்தது. நாடகமான விசாரணைகள் ஸ்டாலினோடு செத்துப் போய் விட்டன. நான் ஆறு தடவை வாந்தி எடுத்தேன். என் தசைகளெல்லாம் வலித்தன. என் தலையை அமைதிப்படுத்த முயன்று கொண்டிருந்தேன். எழவெடுத்தது மௌனமாக மறுத்தது. போரில் காயமடைந்த ஒரு நாயகனை அவமதிப்பதை விட மோசமான குற்றம் ஏதுமில்லை.

க்ரெஸ்டியில் இருபது அல்லது இருபத்தி ஐந்து வருடங்கள். அதன் முடிவிலும் நாங்கள் செசென்யாவில் போரிட்டுக் கொண்டிருப்போமா, அதற்கப்புறமும் நான் போர்முனையில் பணியாற்ற வேண்டியிருக்குமா என்று யோசித்தேன்.

நான் வீடு திரும்பியபோது, போலிஸ் கார்களை எதிர்பார்த்தேன். ஆனால் விளக்குக் கம்பத்தில் பூட்டப்பட்டு, துருப்பிடித்திருந்த சில சைக்கிள்கள், அதுவும் அவற்றின் முக்கியமான பாகங்கள் உருவப்பட்டவை, அவைதான் இருந்தன. எதுவும் மாறி இருக்கவில்லை. அதே தூசி அதே படிகளில் இருந்தது, நான் எட்டாவது மாடிக்கு ஏறிப் போனேன். மன்னிப்பு கேட்பதற்காக இல்லை, நான் இன்னும் என் அப்பாவைச் சந்திக்கத் தயாராக இல்லை. கிரில்லின் கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. அவர் தன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார், கன்னங்களில் ஒரு ஐஸ்பையைப் பிடித்தபடி. கைத்துப்பாக்கி அவரருகே இருந்த மேஜையில் இருந்தது. அவர் முகத்திலிருந்த காயங்கள் அவரது கால் துண்டங்களிலிருந்து நம் மொத்த கவனத்தையும் அகற்றியிருந்தன. அவர் தன் தொலைபேசியை எடுக்க முயலவில்லை, உதவிக்கு யாரையும் அழைக்கவில்லை. துப்பாக்கியை மட்டும் எட்டி எடுத்தார், ஒட்டுநாடா சுற்றப்பட்ட தன் தொடைகள் நடுவே வைத்துக் கொண்டார்.

அவரைப் போன்றவர்கள்பால் நான் கொள்ளும் அதே முகபாவத்தோடு என்னை நோக்கினார்.

“கீழே இறங்கிப் போ,” என்றார் அவர், முன்னெப்போதும் இல்லாத அளவு கட்டுப்பாட்டோடு அவர் குரல் இருந்தது.

“நான் ஜெயிலுக்குப் போகிறேனா? நீங்கள் போலிஸைக் கூப்பிட்டிருக்கிறீர்களா?“

அந்தக் கேள்வியால் அவர் அவமதிக்கப்பட்டது போலத் தெரிந்தார், எளிய பதில் ஒன்றைத் தந்தார், “நான் ஒரு ஜூனியர் சார்ஜெண்ட்.டாக்கும்”

அவர் முகம் நிழலுக்கு உள்ளும் வெளியும் நகர்ந்தது. அவர் புன்சிரிப்பு சிரித்தார், அவருடைய மீதமிருக்கும் பற்கள், பந்தால் அடிக்கப்படக் காத்திருக்கும் மீதக் குழவிகள் போல. அவருக்கு என்னிடம் பயமே இல்லை, அதனால் அவரை நான் வெறுத்தேன்.

“கீழே இறங்கிப் போ, செர்யோஷா. நீ ஜெயிலுக்குப் போகப் போவதில்லை.”

ஆனால் நான் இன்னொரு எட்டு முன்னால் எடுத்து வைத்தேன். என் கைகளை உயர்த்தினேன். ஒரு அடி இன்னொன்றாயிற்று, மூன்றாவதாயிற்று. ஒரு க்ளிக்கில் பாதுகாப்புக் கொக்கி விடுவிக்கப்பட்டது, இன்னொன்ரு அடிக்கும் சுத்தியலை விடுவித்தது. துப்பாக்கி அவருடைய கால்துண்டங்களிடையே வீற்றிருந்தது. என் முழங்கால் அதிடமிருந்து மூன்றடி தூரமே தள்ளி இருந்தபோது அவருக்கு நான் என்ன கேட்கிறேன் என்பது புரிந்தது, அவர் ஆமோதிப்பில் தலையசைத்தார், நானும் அவருக்கு நன்றி சொல்ல விரும்பினேன், ஆனால் அந்த துப்பாக்கி வெடிப்பு என் மூச்சை விழுங்கியிருந்தது. என் கீழே இருந்த தரை எங்கோ வீழ்ந்து விட்டிருந்தது, நான் அலறினேன். எத்தனை நேரம் நான் அப்படியே கிடந்தேன் என்று எனக்குத் தெரியாது, கிரில் என்னைத் தூக்கியபோது நான் வலியை உணரத் துவங்கினேன்.

(முற்றும்)
ஆங்கில மூலம்: ஆந்தனி மார்ரா
தமிழாக்கம்: மைத்ரேயன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.