சங்கீத் சாம்ராட் மன்னா டே

இந்தியாவின் பாடகர்களில் முதன்மையானவராக தான்ஸேன் என்பவரை சரித்திரம் பதிவு செய்துள்ளது. அவரை மொகலாய சாம்ராஜ்யத்தின் அக்பர் சபையில் ஆஸ்தான பாடகராக திரைப்படங்கள் சித்தரிக்கின்றன. இதை மெய்யெனக் கருதி இசைச் சக்கரவர்த்தி தான்ஸேனின் குரல் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்தால் நான் கேட்பது மன்னா டேயின் குரலைத்தான்.

சங்கீத ஸாம்ராட் தான்ஸேன் படத்தில் ‘சப்தஸ்வரன் தீன் கிரம” என்ற பாட்டைக் கேட்டால் நான் சொல்வதை முழுமையாக உணரலாம்.(1962- இசை எஸ் என் த்ரிபாதி எழுதியவர்: சுவாமி ஹரிதாஸ்)

ரஃபி, முகேஷ், கிஷோர்குமார் போன்ற சமகால பின்னணிப் பாடகர்களை விட மூத்தவர். 94 வயதுகள் நிறை வாழ்வு வாழ்ந்தவர். ஓரளவுக்கு ஒழுக்கமான வாழ்க்கை நெறிமுறைகளைக் கடைப்பிடித்திருப்பார் என நினைக்கிறேன். கடைசிவரை அவர் ரெகார்ட் செய்த பாடல்களில்கூட அவர் குரலில் தொய்வு வெளிப்பட்டதில்லை.

கால்பந்து வீரராகவேண்டும் என்ற குறிக்கோள் மாறி அவரைப் பாடகராக்கியது தாய்மாமனின் இசைத்தாக்கம்தான். பள்ளி இசைவிழாவின் 12 பிரிவு போட்டிகளில் 9 பிரிவுகளில் மன்னா டே முன்னணியில் வென்றது ஒரு திருப்புமுனை. அவரது குடும்பம் எடுத்துக்கொண்ட அக்கறையும் அவரது இசை உலக நுழைவிற்கு பெரிதும் உதவியிருக்கும்.

இசைதான் வாழ்க்கை என முடிவு செய்தபின் ‘பாம்பே சலோ’. 1942ல் 23 வயதில் சி.ராமசந்த்ரா, எஸ்.டி. பர்மன் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றினார். ராமராஜ்யா என்ற புராணப்படத்தில் தாடி வைத்த வயோதிகருக்காக தன் முதல் பாட்டைப் பாடினார். 1950ல் , 31 வயதில் ‘ஊப்பர் ககன் விஷால்’ என்ற பாட்டை ‘மாஷால்” படத்தில் பாடித் தன் திறமையை மக்களுக்கு அடையாளம் காட்டினார்.

அந்த காலத்தில் முன்னணியில் இருந்த முப்பெரும் நடிகர்களின் இசைக்குரல்கள்:

திலீப்குமார் – ரஃபி, தலத் மெஹ்மூத்

ராஜ்கபூர் – முகேஷ்

தேவ் ஆனந்த் – கிஷோர், ரஃபி, ஹேமந்த் குமார்.

தொடர்ந்து ஷம்மி கபூர், ஜாய் முகர்ஜி, பிஸ்வஜித், ஷம்மி கபூர்,ராஜேந்த்ர குமார், தர்மேந்த்ரா, ஜிதேந்த்ரா, சஞ்சீவ்குமார், சஞ்சய், ஃபிரோஸ்கான், முதலான அழகான ஆண்முகங்களை வாயசைக்க வைத்தது முஹம்மத் ரஃபிதான்.(இவர்கள் பலருக்கு மன்னா டே ஒரு பாட்டாவது பாடியிருக்கிறார்)

இந்தக் காலகட்டத்தில் முன்னணி இசையமைப்பாளர்கள் சங்கர்- ஜெய்கிஷன் ‘பஸந்த் பஹாரி’ல் வரும் சங்கீதப் போட்டியில் ‘பீம்சேன் ஜோஷியை வெல்லும் குரலாக’ மன்னா டேயைத் தேர்ந்தெடுத்தனர். ரஃபியும் இந்தத் தேர்வை முழுமனதுடன் பின்மொழிந்தார்.

ஈசனின் பாட்டைக்கேட்டு ஹேமநாத பாகவதர் ஊரைவிட்டு ஓடியது நாம் அறிந்த ‘திருவிளையாடல்’. பீம்சேன் ஜோஷியோடு பாடி வெல்பவராக  சினிமாவுக்காகக் காட்டுவதைக்கூட மன்னா டேயால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஊரைவிட்டு ஓட முயற்சித்தவரைத் தடுத்து, பதிவு செய்யப்பட்ட பாடல் ‘கேடகி குலாப் ஜூஹி’ (பஸந்த் பஹார் ராகம்).

ஜோஷியின் வித்வத்திற்கு மன்னா டே ஈடு கொடுத்து தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி பாடலை வெற்றிபெற செய்திருப்பார். படத்தின் கதாநாயகன் பரத்பூஷன். படத்தின் 95% பாடல்களை மன்னா டே திறம்படப் பாடியிருந்தார். இவர் ஒரே படத்தில் பல ஹிட் பாடல்களைப் பாடியது பஸந்த் பஹாரில்தானா? இல்லை, இல்லை. “சோரி, சோரி” படத்தில் ராஜ்கபூரின் எல்லாப் பாடல்களையும் பாடியவர் மன்னா டே. லதாவுடன் (நர்கீஸ்) மூன்று டூயட் பாடல்கள் (‘ஏ ராத் பீகீ  பீகீ’ ‘ ஆ ஜா ஸனம்’ ‘ஜஹான் மேன் ஜாதி ஹூன்”

‘ஸ்ரீ 420’ல் ராஜ்கபூர் (நர்கீஸ்) க்காக பாடிய ‘ப்யார் ஹுவா” பாடலும், காட்சியும், டூயட்டுகளின், அதுவும் மழையில் நனைந்து பாடும் பாடல்காட்சிகளின் பெருமைப்படத்தக்க முதன்மை. மழையின் குளிர்ச்சியிலும் காதல் சுடும்.

இந்திய சினிமா 100 ஆண்டுகளைக் கொண்டாடி முடிந்த இந்த சமயத்தில், இந்தியப் படங்களில், மிகச் சிறந்த இரண்டு பாடல்காட்சிகளின் மேன்மையைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். முகலே ஆஜம் படத்தில் அக்பர் சபையில் தான்சேன் பாடும் பின்னணியில் எடுக்கப்பட்ட அழகான காதல்காட்சி. பாடலை 20,000 ரூபாய் சன்மானம் பெற்றுப் பாடியவர் படேகுலாம் அலிகான். இசை நௌஷாத். காதலர்கள் சலீம்-அனார்கலி (திலீப்குமார்- மதுபாலா). இதப் பாடலைப் படமாக்கும்போது நிஜ வாழ்க்கையில் அவர்களிடையே பேச்சு வார்த்தை கிடையாது. டைரெக்டர் ஆஸிஃப் இயக்கி எடுக்கப்பட்ட இந்தக் காட்சி, இதற்கு முன்போ இனியோ சினிமாவில் நடக்க முடியாத ஒரு அதிசயம். பாடல் களம் : மொஹல் கார்டன். பாடல் : “பிரேமு ஜோஹன்” (ராகம் : ஸோனா) கலரை விட கருப்பு வெள்ளையில் காட்சி தீர்க்கமாக இருக்கும். பூத்துக் குலுங்கும் தோட்டத்தில் காதல் தகிக்கும்.

மிக மிக அருகில் முதல் இடத்தைத் தவறவிடும் காட்சி “ஆவாரா” ராஜுவின் மனக் குழப்பத்தைத் துல்லியமாக நிழலாட விட்ட “தேரெ பினா ஆக் ஹை சாந்த்னி”. லதா மற்றும் குழுவினர். கருத்துருவாக்கம், படமாக்கிய விதம் இரண்டும் இசை, சினிமாக்கலை இரண்டிலும் உந்நத வடிவம் பெற்றிருக்கும்.

ராஜ்கபூரும் அவரது குழுவினரும் இக்காட்சியின் பிரம்மாண்ட தன்மை கருதி  அவரது குரலாக மன்னா டேயைத் தேர்ந்தெடுத்தது மன்னாடெயின் மீது அவர்கள் வைத்திருந்த மதிப்பின் வெளிப்பாடு.

இதே போல ராஜ்கபூரின் ஸ்வான் சாங் ‘ஏ பாய் ! ஜர தேக்கு சலோ” ஒரு ஜோக்கரின் சித்தாந்தம். பாடலின் இரண்டாவது பகுதியில் தாயை இழந்த தவிப்புக்கு மன்னா டே குரலாலேயே அற்புதமாக நடித்திருப்பார்.

மன்னாடே பாடிய 90% பாடலகள் எனக்குப் பிடித்தவை என்றாலும் மிகவும் மேன்மையனவைகளாகக் கருதும் சில பாடல்கள்:

“பூச்சோனோ கைய்ஸே மைய்னே” –  படம் “மேரி சூரத் தேரி ஆங்கேன்” ஆஹீர் பைரவ் ராக  சோகம். தெய்வ மகனின் இந்தி அசல். இதில் அப்பா மகன் தம்பி வேறு வேறு நடிகர்கள்.  தெய்வமகன் அசோக்குமார் தன் மனோநிலையை கதாநாயகி ஆஷா பரேக்கிற்கு வெளிப்படுத்தும் பாடல்தான் இது. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஓர் உன்னதம். மொழி தெரியாதவர்களுக்கும் பாடல் செவிகளில் நுழைந்து நெஞ்சை நெகிழ்வித்து கண்களீல் நீர்மல்க வைக்கும். கர்ணனில் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ இந்தப் பாட்டைத் தழுவியது.

’து ப்யார் கா சாகர் ஹை’  – ( ராகம் : பைரவ், படம் : சீமா, இசை அமைப்பு : சங்கர்-ஜெய்கிஷன்) பால்ராஜ் சஹானிக்காகப் பாடியது தவறு செய்த பிறகு அனாதை இல்லத்தை விட்டு வெளியேற முயற்சிக்கும் நூதனை தோல்வி அடையச் செய்யும் கருணை வெள்ளம்.

‘ஏ மேரா ஜோரா ஜபீன்’ ( பீலு,  வக்த்,  ரவி.) மீண்டும் பால்ராஜ் சஹானிக்காக, இம்முறை ஒரு காதல் பாட்டு. அடுத்த ஐந்து நிமிடங்களில் வரப்போகும் பூகம்பம், தன் வாழ்க்கையின் எல்லா சுகங்களையும் சூறையாடப் போகிறது என்பதை அறியாமல் குதூகலிக்கும் ஒரு கனவானின் காதல் பாட்டு. மனைவி அச்சலா சச்தேவ் தாளம் வாசித்துக் கொண்டே காதலை வெளிப்படுத்துவார். தம்பதிகளின் நான்கு கண்கள் அங்கு கூடியுள்ள 200 கண்களுக்கு மத்தியில் லஜ்ஜையுடன் காதலை பகிர்ந்து கொள்ளும், அதுவும் மூன்று பிள்ளைகளைப் பெற்ற பின். ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ படத்தில் இந்தப் பாடலை அம்ரீஷ் பூரி பாடுவது போல அழகாகப் பயன்படுத்தியிருப்பார்கள்.

‘சுர் ந சஜே க்யா காவூன் மேன்” ( பீலு, பஸந்த பஹார், சங்கர்-ஜெய்கிஷன்) இசையை ஏழ்மைக்காக அடகு வைத்த பாடகனின் சோகம். பரத்பூஷணுக்காகப் பாடியிருப்பார் இந்த பத்மபூஷண். இந்தப் பாடலின் அருமை வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது. மூலக்கதை  கன்னடத்தில் இருந்தது.  கன்னடத்தில்  ‘ஹம்ஸ கீதே’ திரைப்படம் இதே கருவுடன் வந்தது.

“ஆவோ கஹான் ஸே கன்ஷ்யாம்’ (ராகம் : கமாஜ்,  புட்டா மில்கயா, ஆர்.டி.பர்மன்) ஒரு கொலையை செய்து விட்டு அடுத்த ஷாட்டில் மாணவி அர்ச்சனாவிற்கு சங்கீதப் பாடம் நடத்தும் ஓம்பிரகாஷ் பாடும் அதிரடிப் பாடல்.

பாஸூ பட்டாச்சார்யா இயக்கிய அனுபவ், ஆவிஷ்கார் படங்களில் மச்ன்னாடே பாடிய “ஃபிர் கஹி கொயி ஃபூல்கிலா” (சஞ்சீவ் குமார், தனுஜா), “ஹஸ்நகி சாஹமே கித்னா முஜே” (ராஜேஷ் கன்னா, ஷர்மிளா டாகூர்) மண வாழ்க்கையில் முறிவு ஏற்படும் அளவுக்குக் கசப்பை வளர்த்துக் கொண்ட தம்பதிகள் தங்கள் வாழ்க்கையின் இனிமையான தருணங்களை நினைவுகூர்ந்து திருமணத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் ஈடுபட வைக்கும் பாடல்கள். படங்களின் நிதானமான, தீர்க்கமான போக்குக்கு வளம் சேர்க்கும் மன்னாடேயின் குரல்.

“சத்கயா பாபி பிச்சுவா’  நாடோடிப் பாடல் (மதுமதி- சலீல் சௌத்ரி) மன்னா டேயின் கருத்து இதுதான். “இது லதாவின் பாட்டு. நான் பாடும் சிறு பகுதியைப் பாடியவுடன், வைத்தியரின் சிகிச்சையால் குணமாகிய வைஜயந்திமாலா உடனே நடனமாடி ஓடிவர வேண்டும். அதற்கு இசையமைப்பாளர் கொடுத்த முழு சுதந்திரத்தையும் எடுத்துக்கொண்டு லதா எழுப்பிய இசை ஒலி என்னை அசர வைத்தது. பாடலை நிறுத்திவிட்டு லதாவின் பாடலையே கேட்டு காலம் கழிக்கலாம் என்று தோன்றியது.”

‘ஜிந்தகி ( ‘ஆனந்த்’- சலீல் சௌத்ரி) ஆனந்த் ராஜேஷ் கன்னா ஜுஹூ கடற்கரையில் பாடும் வாழ்க்கையின் வர்ணஜாலம். சிரஞ்சீவித்தன்மை பாடுபவருக்கும், பாட்டை உருவாக்கியவர்களுக்கும் இல்லாமல் போனாலும் பாட்டுக்கு உண்டு.

‘சலத் முஸாஃபிர்’  (தீஸ்ரி கசம். சங்கர்-ஜெய்கிஷன்.), ‘சுனிதி ஜவானு மேரி’ (பஹாரோன்கா சப்னா – ஆர்.டி.பர்மன்),  நாச்சாவூன் ஹீராமோதி’  (பாபி  லக்ஷ்மிகாந்த் பியாரிலால்) மன்னாடே பங்குபெற்ற பல சிறந்த நாடோடிப் பாடல்களில் முதன்மையானவை.

மேற்கத்திய பாணியில் அமைந்த ‘முடு முடுகே ந தேக் முடு முடுகே’ ஸ்ரீ 420 – ஆஷா போன்ஸ்லே- மன்னா டே பாடிய பாடல் திரை இசையில் புதிய பாணி. அதன் சாயலில் அமைந்த தமிழ் பாடல்கள் பல (கண்போன போக்கிலே, இதுவேறுலகம், கொடுத்து பார் உண்மை அன்பை)

படோஸனில் இடம் பெற்ர ‘ஏக் சதுர நார்’ ஒரு சங்கீத ரகளை. 6 நாட்கள் ஒத்திகைக்குப் பின் பதிவு செய்யப்பட்ட பாடல். ஒரு பேட்டியில் ‘கிஷோர் குமார் படத்தில் வெற்றி பெற்றாலும் அந்தப் பாடலின் முழு வெற்றி தன்னுடையதுதான்’ என மன்னா டே பெருமைபட்டுக்கொண்டார்.

காபூலிவாலா – ‘ஏ மேரே ப்யார் வடன்’ பால்ராஜ் சாஹ்னி, ஜஞ்சீர் – யாரி ஹை இம்மானு மேரா பாடல்கள் மத நல்லிணக்கத்தையும், நட்பையும், நாட்டுப்பற்றையும் பறைசாற்றுபவை.

கோன் ஆயா மேரெ மன் கே த்வாரே , தேக் கே பினா ரோயா மதன் மோகன் இசையில் பாடிய முத்து.

பர்ஸாத் கி ராத் என்ற இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து 1960-ல் வெளிவந்த படத்தின் இசையமைப்பாளர் ரோஷன் பாடல்கள்- சாஹிர். பரத்பூஷண் – மதுபாலா ஜோடி. அதில் வரும் ஒரு கவாலிப் பாடல் mother of all qawalis  என்ற மகத்துவம் பெற்றது. ‘நா தோ காரவான் கி தலாஷ் ஹை’ தொடர்ந்து ‘ஹே இஷ்க் இஷ்க்’ என்று காதலின் பெருமையை உயர்த்தும் பாடலைப் பாடியவர்கள் ரஃபி, மன்னா டே, ஆஷா போன்ஸ்லே, பாடிஷ் (batish – qawali specialist) சுதா மல்ஹோத்ரா குழுவினர். கண்டிப்பாக பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

மன்னா டேயின் குரல் பனிப்பாறையாக உறையும், கங்கையாகப் பெருக்கெடுக்கும், நிலவாகிக் குளிர்விக்கும், கருணையாக ஊற்றெடுக்கும், காதலாகக் கொஞ்சும், கம்பீரமாக கர்ஜிக்கும். இவரது குரல்வீச்சை வேறெந்த திரைப்பாடகர்களும் நெருங்கியதில்லை.

வங்காளத்தில் பிறந்து, மஹாராஷ்ட்ரத்தில் இசைப்பணியாற்றி, கேரளப் பெண்ணை மணந்து தன் இறுதி வருடங்களைக் கர்நாடகத்தில் வாழ்ந்த தாதா சாஹேப் பால்கே , மன்னா (தான்சேன்) டே பன்மொழி வித்தகர். ஹிந்தி தவிர பெங்காலி, அஸ்ஸாமி, குஜராத்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் பாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் சீர்காழி, சிதம்பரம், திருச்சி இருப்பதால் தமிழுக்கு இவர் தேவைப்படவில்லை போலும்.