கூறுகிறேன்…. முடிந்தால் கேளுங்கள் – 2

நூல் நிலையங்களும், வாசக சாலைகளும்.

2010ல் சிங்கப்பூர் சென்றிருந்த இரண்டு மாதங்களில் நான் அடிக்கடி சென்ற இடம் சிங்கப்பூரின் தேசிய நூல் நிலையம். வீட்டிலிருந்து ஒன்றேகால் மணி நேரம் பயணித்துப் போகவேண்டி இருந்தும், வீட்டு வேலைகள், ஊர் சுற்றிப் பார்த்தல், பிற இடங்களுக்குச் செல்லுதல் இவற்றுக்கிடையே பத்து முறைகளுக்கு மேல் போனேன். அது அப்படி ஈர்த்தது. புத்தகப் பிரியர்கள் பல பத்தாண்டுகளையோ, வாழ்நாளையோ கூட அங்கே கழிக்கலாம். பகல் முழுவதும் நூல் நிலையத்திலேயே இருந்து படிக்கலாம்.

பல அடுக்குகளைக் கொண்ட பிரம்மாண்டக் கட்டிடம். மிக அழகான முழுவதும் குளிர்பதனம் செய்யப்பட்ட உட்புறம். “ வா ! வந்து என் நிழலில் உட்கார்” என்று கி.ரா.விடம் சொல்கிற மரங்களைப் போல “உட்கார்ந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் படி” என்கிற சௌகர்யமான ஏராளமான இருக்கைகள். எண்ணற்ற நூல்கள். ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் மொழி நூல்கள் கவனமாக வகைப்படுத்தப்பட்டு, தெளிவான வரிசையில், சுலபமாகக் கண்டுபிடிக்கக் கூடிய விதத்தில் எண்கள் தரப்பட்டு, திறந்த அலமாரிகளில் வைக்கப்பட்டிருக்கும். பல நூல்களை வீட்டிற்கு எடுத்து வந்தும் படிக்க முடிந்தது. டிவிடிக்கள், சிடிரோம்கள், கணினி வசதி, இதர பிரதியெடுக்கிற, ப்ரின்ட் செய்துகொள்கிற எல்லா வசதிகளும் உண்டு.

the-national-library-singapore

2013ல் சிங்கப்பூர் சென்று இருந்த இரண்டு மாதங்களில் ஒருமுறைகூட அங்கு போக முடியவில்லை. ஆனால் வீட்டிலிருந்து 10 நிமிட நடையில் ஒரு ரீஜனல் நூல் நிலையம் இருந்தது. ஒரு பகுதியின் நூலகம்தானே என்று பார்த்தால் நான்கு மாடிக் கட்டிடம். மற்றபடி வசதிகள் எல்லாம் தேசிய நூலகம் போன்றே. நூல்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது.

Art (‘கலை’) என்கிற தலைப்பின் கீழ் மட்டும் பல அலமாரிகளில் நூல்கள். அமெரிக்கன் லைப்ரரியின் அன்பளிப்பாக பல அலமாரிகளில் அமெரிக்க எழுத்தாளர்களின் நூல்கள். ஃபிக்ஷன்னுக்காக ஒரு பெரிய கூடம் நிறைய நூல்கள். சத்யஜித் ராயின் கதைகள், இந்துயிஸம் பற்றிய நூல்கள் கூட கிடைத்தன. காலை 9 மணிக்குத் திறக்கும் நூலகத்தின் வாசலில் 8 மணிக்கே வரிசையில் 50, 100 இளைஞர்கள் நிற்கிறார்கள். தூங்க வருகிறார்களா, படிக்க வருகிறார்களா, ரொமான்ஸுக்கு வருகிறார்களா என்று தெரியாவிட்டாலும் நூல் நிலையத்தின் வாயிலில் திறப்பதற்கு முன்பே க்யூ என்பது நம்ப முடியாத நற்செய்தி. அந்த நூலகத்துக்குப் பலமுறை சென்றேன்.

இந்த ரீஜனல் லைப்ரரியைப் போலவே மேலும் இரண்டு உள்ளன. தவிர பதினெட்டு கிளை நூலககங்கள். இவற்றில் ‘எஸ்ப்ளனேட்’ கிளையில் முழுக்க முழுக்க சினிமா, நாடகம் போன்ற  பர்ஃபார்மிங் கலைகளுக்காக. டிவிடிக்கள் மற்றும் புத்தகங்கள். ஆந்த்ராய் தார்க்கொவ்ஸ்கியின் ‘ஸ்டாக்கர்’ படம் பற்றி ‘ஜியாஃப் டயர்’ (இவரது பேட்டியை இங்கே காணலாம்) எழுதிய ஜோனா (zona) புத்தகம் பற்றி சொல்வனம் ரவிசங்கர் எழுதியதிலிருந்தே நான் அந்தப் புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அந்நூல் சிங்கப்பூர் நூல் நிலயங்களில் இருப்பது ‘காடலாக்’ கில் தெரிந்தது. அது எஸ்ப்ளனேட் கிளையில் இருப்பதாகவும் தற்போது வேறொரு கிளையிலிருந்து அங்கு திரும்பப் போய்க் கொண்டிருப்பதாகவும் (in transit) தகவல் இருந்தது.

நான் இரண்டு நாட்கள் கழித்து எஸ்ப்ளனேட் கிளைக்குப் போனேன். அங்கிருந்த அலமாரிகளில் அது இல்லை. நூல்கள் எண்களின் வரிசையில் மிகச் சரியாக வைக்கப் பட்டிருக்கும் என்பதால் ஐந்து நிமிடங்களில் அது இல்லை என்பது தெரிந்து விட்டது. நூல் நிலையத்தில் இருந்த கணினியில் மீண்டும் ‘கேடலாக்’கை சரி பார்த்த போது பழைய செய்தியே வந்தது. ‘இது என்னடா ஊருக்குள்ளேயே இருக்கும் வேறொரு கிளையிலிருந்து இங்கு வர இரண்டு நாட்களுக்கு மேலா ஆகும்’ என்று நினைத்தேன். நான் ஐந்து நிமிடங்களாகத் தேடுவதைப் பார்த்த நூலக உதவியாளர்களில் ஒரு பெண்மணி என்னிடம் வந்து “ஏதாவது உதவி வேண்டுமா?” என்று கேட்டார். நான் நூலின் பெயரையும், ஆசிரியர் பெயரையும் சொன்னதும் அவரும் கேடலாக்கில் தேடினார். இன்னொரு நூலகத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது என்றார்.  நான் மூன்று நாட்களாக இதே தகவல்தான் வந்துகொண்டிருக்கிறது என்றேன். லைப்ரரியனைக் கேளுங்கள் என்று ஆலோசனை சொல்லி அவர் இருக்கும் இடத்தைக் காட்டினார். என்னிடம் நூல்களை எடுப்பதற்கான அட்டை இல்லாததால் நான் கேட்கவில்லை.

ஒரு வாரம் கழித்து வீட்டில் கணினியில் ‘கேடலாக்’ கைப் பர்த்தபோது மீண்டும் அதே தகவல்தான் இருந்தது. அதை அப்படியே காப்பி செய்து 10 நாட்களாக இப்படியே வருகிறது என்று ஒரு மின்னஞ்சலாக தேசிய நூலகத்துக்கு அனுப்பினேன். மதியம் ஒரு பதில்  வந்துவிட்டது: “ இரண்டு நூலகங்களிலும் இது பற்றி சொல்லியிருக்கிறோம். விரைவில் தகவல் சொல்கிறோம்.”என்று. அன்று மாலையே மின்னொரு மடல் : “நூல் எஸ்ப்ளனேட் கிளைக்கு வந்து விட்டது. உங்களுக்காக ஒரு நாள் வைத்திருக்கிறோம். மறுநாள் அலமாரிக்குப் போய்விடும்” என்றிருந்தது.

என்னால் 15 நாட்கள் அங்கு போக முடியவில்லை. பின் போனபோது ‘கேடலாக்’கில் அந்த நூலின் பெயரே இல்லை. அலமாரியிலும் அந்நூல் இல்லை. அது இருந்ததற்கான சுவடே இல்லாமல் காணாமல் போய்விட்டது. இம்முறை என் மாப்பிள்ளையின் லைப்ரரி அட்டையை எடுத்துச் சென்றிருந்தேன். அதனால் தைரியமாக லைப்ரரியனிடம் சென்று இந்நூலின் பெயரைச் சொல்லி அது கிடைக்குமா என்று கேட்டேன். அவர் சம்பந்தமே இல்லாமல் என் பெயரைக் கேட்டார். அவர் ஒரு மலாய் பெண்மணி. ‘ஸ்ரீநிவாசன்’ என்கிற பெயரை அவர் இதற்கு முன் வாழ்நாளில் கேட்டிருப்பாரா என்பது சந்தேகமே.  இருந்தாலும் நான் என் பெயரைச் சொன்னதும், இருக்கையிலிருந்து எழுந்து தன் பின்னால் இருந்த மூடிய அலமாரியைத் திறந்து அதிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தார். அதன் மேல் என் பெயர் எழுதிய ஒரு ஸ்டிக்கர் இருந்தது. அதை எடுத்துவிட்டு நூலை என்னிடம் கொடுத்துவிட்டு புன்னகைத்தார்.  15 நாட்களாக அந்தப் புத்தகத்தை எனக்குக் கொடுப்பதற்காக அவர்கள் காத்திருந்திருக்கிறார்கள். நான் அசந்து போய் விட்டேன். ‘ஸ்டாக்கர்’ படம் பார்த்தவர்களுக்கு, இச்சம்பவம் மேலும் பல உணர்வுகளைத் தூண்டும். அவரிடம் நன்றி சொல்லிவிட்டு நூலை வீட்டுக்கு எடுத்து வந்தேன்.

1960களில் என் பள்ளியின் அருகில் இருந்த காற்றோட்டமான திருவல்லிக்கேணிக் கிளை நூலகத்தில் நான் நிறையlibrary நூல்களைப் படித்திருக்கிறேன். 1970களில் ஆயிரம் விளக்குப் பகுதியில் ஆனந்த் தியேட்டருக்கு அருகிலிருந்த மாவட்ட மத்திய நுலகத்திலிருந்துதான் பல ருஷ்ய, ஜெர்மானிய, பிரஞ்சு செவ்விலக்கியங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படித்திருக்கிறேன். 1980 களில் சேலம் கிளை நூலகத்தில் கூட எனக்கு நல்ல பல நூல்கள் கிடைத்தன. 90களில் வேலூரிலும், பின் 2000த்தில் கோவையிலும் கூட ஏதோ சில நல்ல தமிழ் நூல்களாவது கிட்டின. 90களில் திருச்சி நூலகம் குப்பையாக இருந்தது. இப்போது புதுப்பித்திருக்கிறார்கள். புதுக் கட்டிடம். I A S படிப்பவர்களுக்கு என்றெல்லாம் தனியான கூடங்கள் உள்ளன. ஆங்கிலப் பகுதிக்குச் செல்ல முடியாதபடிக்கு தடுப்பு போட்டு பூட்டி வைத்திருந்தது. ஆனால் இலக்கிய உலகில் நான் படித்த எனக்குப் புதிய புதிய கதவுகளையும், சன்னல்களையும் திறந்து கொண்டே போன, கிடைத்தற்கரிய அனுபவங்களை சாத்தியமாக்கிய நூல்களை மேற்சொன்ன நூலகங்கள் எவற்றிலும் சமீப வருடங்களில் காணவே காணோம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஒரு நூலகம் உள்ளதென்று மிக்க ஆவலுடன் ஓலைச் சுவடிகளெல்லாம் இருக்குமோவென்று சென்ற வருடம் அதற்குப் போனேன். அங்கு ஒரு நூல் கூட இல்லை. வெற்றிடம்தான் இருந்தது. திருச்சியில் இன்னொரு நூலகத்தில் ஆங்கில நூல்களை அலமாரிகளில் ஒரு பூட்டிய அறையில் வைத்திருக்கிறார்கள். அவற்றிலிருந்து நூலைக் கொடுக்கக் கேட்ட போது ‘எடுத்துக் கொள்ளுங்கள் சார் ஆனால் நான் இருக்கும்போது வந்து திருப்பிக் கொடுங்கள். பெரிய லைப்ரரியன் இதையெல்லாம் படிக்கக் கொடுத்தால் கோபித்துக் கொள்வார்” என்கிறார் உதவியாளர். அங்கும் முத்தும் ரத்தினமும் இல்லை. ஏதோ ஓரிரண்டு நல்ல நூல்கள் இருந்தன.

1967க்குப் பின் தமிழ் மீது உணர்ச்சி பொங்கும் பற்றைப் பறை சாற்றிக் கொண்டிருக்கும் அரசுகள்தான் நடக்கின்றன. ஆனால் இலக்கிய, கலை, அறிவு சீவி உலகில் ஏதோ ஒன்று பரவி விட்டது. அதை திராவிட கழக அரசியல் இயக்கத்தவர்கள் ‘விழிப்புணர்வு’ என்றும் முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் போன்ற தேசியவாதிகள் விஷக் கிருமி என்றும் கூறுவர். அதன் பிடியில், அரசு இயந்திரத்தின் ராட்சத உதவியோடான திட்டமிட்ட பரப்பலில், இருள் நீங்கி விட்டது என்றும் விழிப்புணர்வு இப்போதுதான் வந்துகொண்டிருக்கிறது என்றும் வலு மிக்க ஒரு சாரரின் அழுத்தமான கூற்றுக்கிடையே ஒளி அழிந்து விட்டது என்றும் உலக இலக்கியங்களையும், கலைகளையும் பழந்தமிழ், பக்தி மற்றும் நவீன தீவிர தமிழ் இலக்கியங்களையும் தெரிந்து கொள்ளவே முடியாதபடிக்கு அரசியல் வாதிகள் மற்றும் ஒற்றை சார்பு அறிஞர்களின் நூல்களால் நூலகங்கள் நிரம்பி விட்டனவே என்றும் ஒரு சின்னஞ்சிறிய கூட்டத்தினரின் மெல்லிய குரல் கேட்கும்.

இந்த சந்தர்ப்பத்தில் தீவிர இலக்கியத்தை கேளிக்கை இலக்கியம் மூலம் முன்பு அணுக முடிந்தது; இப்போது பின்னதற்கு பத்ரிகைகளில் இடம் இல்லை என்பதால் முன்னதற்கு வாசகர்கள் இல்லை என்று ஜெயமோகன் ‘தி இந்துவில்’ சொன்னதைப் பற்றிப் பார்ப்போம்.

Notable_Tamil_Writers_80_Year_2000_Authors_Creative_Fiction_columnists_Published_Read_Books_India_South_Asia_Famous

தனிப்பட்ட முறையில் என் அனுபவத்தில் நான் அவர் சொன்ன கல்கி, ஆர்வி முதலிய யாரையும் படித்ததே இல்லை. நா.பா. தவிர அகிலன் பக்கம் எல்லாம் போனதே இல்லை. நா.பா. வும் மு.வ.வும் மிகப் பெரிய பெயர்களாக உலவுகையில், அவர்களது எழுத்து மனதைக் கவரவில்லை. இது நடந்த அதே சமயத்தில் என் பள்ளி ஆசிரியர் ‘ஜெயகாந்தன் படி’ என்று சிபாரிசு செய்ததும், ஜெயகாந்தன் ஆனந்த விகடன் மூலம் பரவலாகக் கிடைத்ததும் அவர் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக அவர் சொன்ன பாரதியையும், புதுமைப் பித்தனையும் தேடி அடைந்ததும் நடந்தன. பின்னர் ஜானகிராமனையும், கு. அழகிரிசாமியையும், அசோக மித்திரனையும்,  இன்னும் ஏராளமான மகானுபாவர்களையும் கண்டடைந்தேன். என் நண்பர்கள் அனுபவமும் அவ்வாறே.

அதே போல் சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி, சிவசங்கரி, வாசந்தி என்று கேளிக்கை எழுத்தாளர்களாக ஜெயமோகன் வகைப் படுத்தியிருந்தவர்களில் சுஜாதா ஒருவரை மட்டுமே ஆரம்பத்திலிருந்து அவர் இறுதியாக எழுதியவை வரை அவ்வப்போது படிக்க முடிந்தது. வாசந்தி சில மிக நல்ல சிறுகதைகளை எழுதியுள்ளார். பாக்கி மூவரும் பிரபலமான எழுத்தாளர்கள்தான். ஆனால் என்னால் அவர்களைப் படிக்க முடிந்ததில்லை.

ஆக ஜனரஞ்சக பத்ரிகைகளில் வரும் கேளிக்கை எழுத்துகள் தீவிர இலக்கியத்துக்கு இட்டுச் செல்லும் என்பது என்னளவில் சரியில்லை. மேலும் வாசகர்கள் இந்த நடுவாந்திர எழுத்துகளில் மயங்கி அதிலேயே சிக்கி நின்றுவிடுவதும் பெரும்பான்மையாக நடப்பதுதான்.

எது என்னைத் தீவிர இலக்கியத்திடம் இட்டுச் சென்றது? உயர் சங்கீதம் கேட்க தனியான செவி வேண்டும். இது வெறும் யாந்த்ரீகமான பயிற்சியால் மட்டும் வருவதில்லை. எனக்கு எல்லா ராகமும் சிந்து பைரவியாகத் தெரிகிறது என்றால் என் செவிமனம் அவ்வளவுதான் என்று பொருள். ஓவியத்துக்கு தனிக் கண்கள் வேண்டும். அதே போல் ஓர் உயர் எழுத்தை எழுத்தாளன் எழுத அவனுக்கு எத்தகைய உளம் வேண்டுமோ அதற்கு சற்றும் குறையாத தீவிரமும், வளமும் உள்ள உளம் வாசகனுக்கும் வேண்டும். அது இருந்தால் சென்னையோ, நாகர்கோவிலோ, கம்மவான் பேட்டையோ, ஆரணியோ, டில்லியோ, சிங்கப்பூரோ எங்கிருந்தும் வாசகன் தான் தேடுவதைக் கண்டடைவான். வாசகன் தயாரானதும், அவன் எங்கிருந்தாலும் எழுத்தாளன் தென்படுவான்.

வாசகனைப் போலவே தீவிர இலக்கியத்துக்கு முதல் தேவை நூல்கள். உலக இலக்கியம் தமிழிலோ, அல்லது குறைந்த பட்சம் ஆங்கிலத்திலோ பரவலாகக் கிடைக்கவேண்டும். சிதம்பரத்தில் வாழ்ந்து வந்த மௌனி சொல்லித்தான் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த பிரமிளுக்கு போனஸ் ஐரஸின் போர்ஹே அறிமுகம் ஆகிறார். பிரமிள் சொல்லித்தான் எங்களுக்கு ‘நபகோவ்’ அறிமுகம் ஆனார்.

ஆக பத்ரிகைகளில் கேளிக்கை எழுத்து வருவதும் வராததும் ஓரளவே தீவிர இலக்கிய தேடலுக்கு வழி வகுக்கும். கல்கியோடும், பாலகுமாரனோடும் திருப்தியடைந்து அதிலேயே நின்று விடுகிற வாசகர்களும் அதிகம். அவர்களுக்கு அது பிடிக்கிறது. போதுமானதாய் இருக்கிறது. நிறைவு தருகிறது. அது போதும். அதில் ‘தீர்ப்பு’ சொல்ல பிறர் யார்? உலகில் எல்லாவற்றுக்கும் இடம் உண்டு; தீமை பயக்காதவரை குற்றம் சொல்ல என்ன இருக்கிறது? ஆபாசங்களையும், பிரிவினைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும், துவேஷத்தையும் வளர்க்கிற, பரப்புகிற எழுத்துகளே முதலில் எதிர்க்கப்பட வேண்டியவை.

மேலும் ஆனந்த விகடனும், குமுதமும், கல்கியும் அப்போதே ஜெயகாந்தனையும் ஜானகிராமனையும் (ஆ.வி.) இன்ன பிற தீவிர எழுத்துகளையும் அவ்வப்போது பிரசுரம் செய்தன. அதில் ருசி கண்ட வாசகர்கள் அவ்வாசிரியர்கள் எழுதும் பிற பத்ரிகைகளை அதாவது சிற்றேடுகளை வாங்கிப் படிக்க ஆரம்பித்தனர். தீவிர இலக்கியத்தின் வாசகர்கள் அதை எந்தச் சூழலிலும் அடையாமல் விட மாட்டர்கள்.

இப்பொழுதும் பிரபல பத்ரிகைகள் நாஞ்சில் நாடன், ஜெயமோகன் எஸ். ராமகிருஷ்ணன், சுகா முதலியோரின் எழுத்துகளை அவ்வப்போது பிரசுரிக்கின்றன. ஆனால் வாசகர்களால் இந்த வேகமான சூழலில் இரண்டு நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்த முடியவில்லை என்கிற காரணம் காட்டி ஒரு நிமிட அரை நிமிடக் கதைகளையே அதிகம் போடுகிறார்கள்.

இவ்வளவு மக்கட்தொகை பெருகியிருக்கிறது. படித்தவர்கள் சதவீதமும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. ஒரு இலக்கிய நூல் ஆயிரம் பிரதிகள் கூட விற்பதில்லை என்கிறார்களே அது ஏன்?

நிச்சயம் தீவிர இலக்கியம், தூய, மூட நம்பிக்கைகள் அற்ற, ஆன்மீகம், துவேஷமும் பொய்யும் அற்ற நல்லரசியல், உயர் கலை போன்றவை கூட்டம் சர்ந்தவை அல்ல. அதே போல் ஓடாத படமெல்லாம் கலைப்படம் அல்ல என்பதைப் போல் மக்களாதரவு இல்லை என்பதாலேயே ஒரு நூல் தீவிர இலக்கியம் ஆகி விடாது.

Chennai_Book_Fair_Exhibition_Read_Madras_Visit_Tour

புத்தகக் கண்காட்சிகளில் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் சொல்கிறார்கள். சமையல், ஜோசியம், சுய முன்னேற்றம் மற்றும் படிப்பு சம்பந்தமான புத்தகங்கள் அதிகம் விற்கின்றன. கதைப் புத்தகங்கள் என்றால் தீவிர இலக்கிய நூல்கள் அதில் இடம் பெறுவதில்லை. ஏன்?

ஒரு காரணம் : நம்மிடம் உலக இலக்கியங்களையும், செழுமை மிகுந்த பண்டை மற்றும் நவீனத் தமிழ் இலக்கியங்களையும் படிக்கத் தரும் நூல் நிலயங்கள் இல்லை. உலக சினிமா டிவிடிக்கள் சல்லிசாக பரவலாகக் கிடைப்பதால் பெரிய மாற்றம் தமிழ் சினிமாவில் உடனடியாக நடக்கவில்லை என்றாலும் இன்னும் சில வருடங்களில் அது வருவதற்கான வாய்ப்பாவது உள்ளது. இது தள்ளிப் போவதற்கும் ஒரு காரணம் சினிமாவுக்கு அனுசரணையாக தீவிர உலக இலக்கியம் பரவலாக சல்லிசாகக் கிடைக்காததுதான் என்று நினைக்கிறேன். உலக இசை, நாடகம், ஓவியம் முதலிய கலைகளும் பல சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களால் மக்களிடம் இருந்து விலக்கி வைக்கப்பட்டு  இருப்பதும் ஒரு காரணம். மேலும் இப்படியெல்லாம் உலகில் உண்டு என்பதை தமிழர்கள் தெரிந்து கொள்ளக் கூட வாய்ப்பு இன்றி இருக்கிறது. இதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களான அறிஞர்கள் எனப்படுவோர், துணை வேந்தர்கள், அதிகாரிகள் மத்தியில் கூட பெரும் அறியாமை நிலவி வருவதும் ஒரு காரணம்.

சினிமா உலக மறுமலர்ச்சிக்கு உலக சினிமா பரவலாகக் கிடைப்பது வழி செய்யலாம்.  அத்தகைய வாய்ப்பு இலக்கிய உலகில் நிகழ நூல் நிலையங்கள் சிங்கப்பூர் மாதிரி கூட ஆக வேண்டாம். நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல ஆனாலே கூடப் போதும். உலக இலக்கியங்கள், இதிஹாசங்கள், நாடகங்கள், கட்டுரை நூல்கள் அனைத்தின் மொழிபெயர்ப்புகளும் மற்றும் ஆதியிலிருந்து இன்று வரையான தமிழ் நூல்கள் அனைத்தும் நூல் நிலையங்களில் சாமானிய வாசகனுக்குக் கிட்டுமாறு செய்ய வேண்டும். பிற மொழி இந்திய நூலகளும் இவ்வாறே கிடைக்கும்படி செய்ய வேண்டும். ‘இந்திய நூலக இயக்கத்தின் தந்தை’ ஒரு தமிழர் என்கையில் வழக்கம் போல் கோஷங்களோடு நிறுத்திக் கொள்ளாமல் செயலிலும் ஏதாவது உருப்படியாகச் செய்யவேண்டும்.

மற்ற காரணங்கள் : வில்லியம் ப்ளேக் வேறொரு சந்தர்ப்பத்தில் சொன்னது போல்

“Degrade first the Arts if you would mankind degrade,
Hire idiots to paint with cold light and hot shade,
Give high price for the worst, leave the best in disgrace,
And with labours of ignorance fill every place”

செய்து விட்டோமோ?

நாம் சிகரங்களாக உயர்த்திப் பிரசாரிப்பது எவர்களை என்று பார்த்தால் இது ஒரு காரணமா என்பது தெரியும்.

இன்னொன்று: மிலன் குந்தேரா கலை பற்றிச் சொன்னது போல் ‘ இலக்கியத்துக்கான தேவையும்  அது பற்றிய நுண்புலனுணர்வும் (Sensitivity) அதன் மீதான மையலும் இறந்து கொண்டிருப்பதால்தானோ இலக்கியமும் இறந்து கொண்டிருக்கிறது?

நிலவரம் என்னவென்றால் வாசகர்கள் தம் நல் வாழ்வுக்கு, பொழுதுபோக்குக்கு, நம்பிக்கைக்கு தேர்ந்தெடுத்துள்ள சாலைகள் – வாசக சாலைகள் – வாஸ்து, ஜோசியம், சைவ அசைவ சமையல், உடல் நலம், மூலிகை, ஆன்மிகம், தன்னம்பிக்கை முதலியவை. அதில் தீவிர இலக்கிய வாசிப்பு என்கிற சாலை இல்லை. அந்த குறுகலான சாலை ஒற்றையடிப்பாதையாகி அதிலும் தடுப்பு விழுந்து தூர்ந்து விட்டது. ஒருவேளை  இதற்கு தீவிர இலக்கியம் என்பதே தூர்ந்து விட்டதுதான் காரணமோ?

0 Replies to “கூறுகிறேன்…. முடிந்தால் கேளுங்கள் – 2”

  1. மிக நல்ல பதிவு. யோசித்துப் பார்த்தால் நிலமை வெகு காலமாகவே இப்படித்தான் இருந்து வந்திருக்கின்றது என்பது மட்டுமில்லை இனி வெகு காலம் இப்படித்தான் இருக்கும் என்றும் தோன்றுகிறது. விரும்பிப் படிக்கும் சிலர் செய்யும் சிபாரிசு மற்றும் அறிமுகம் வாயிலாக இலக்கியங்கள் முற்றிலுமழியாமல் இருக்கும். அப்படி இருந்தாலே போதும்
    vasan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.