கவிதைகள்

மூப்போ மரணமோ

Old_Age_Senior_Citizensஅன்று
பசும் புல்லின்
மழலை மென் சொல்லையும் தேடிக்
கேட்டு
மகிழ்ந்த என் செவிகள்
இன்று
என்னுள் ஆழ்ந்துள்ள
மௌன நிசப்தத்தின்
தனிமையில் தவிக்கும்!
அன்று
ஒரு சிறு துளியில்
ஏழ் நிறம் எழிலுறக் காட்டும்
இந்திர தனுசைக் கண்டு
இன்ப இறும்பூதுற்ற என் கண்கள்
இன்று
விண்ணிலே வளைந்து நிற்கும்
வண்ண வில்லைக் காணும் திறனற்றுக்
கை தடவி நிற்கும்!
அன்று
உலகத் துயர்களின் எதிரொலியாய்த்
துடித்திருந்த என் இதயம்
இன்று
இறுகிக் கல்லாகிக் கிடக்கும்!
இதுவோ மூப்பு?
இதுவே மரணம் !
***

ஒரு மஞ்சள் இலை உதிர்கிறது

yellow_Leaf_Fall_Colors_Tree_Deciduous_Autumn_Focus
உதிர்கிறது
ஒரு மஞ்சள் இலை
மெல்லப் பரவுகிறது
சரம ராகத்தின் உரசல்

–ஹரி ஸ்ரீநிவாசன்
 

oOo

பிச்சை

சாலைகளின் ’சிக்னல்’ சந்திப்பில்begging-hands
சற்றும் பொறுமையின்றி பேருந்து நிற்கும்.

இடுப்பில்
சிரிக்கும் குழந்தை சுமையில்லை.

உடுப்பில் அழுக்கேறி
பசியில் வருத்தும் இல்லாமையின் சுமையில்
பிச்சை கேட்பாள் தாயொருத்தி .

சில்லரையைச்
சாவதானமாய்த்
தேடிக் கொண்டிருக்கையில்
’சிக்னல்’ வழிவிட்டது தான் தாமதம்
சட்டெனப் பேருந்து விரையும்.

’அவளுக்கான காசு’
இப்போது
என்னிடம்.

அது எனக்கு
அவள் போட்ட பிச்சையாயிருக்கும்.

oOo

Baby-Ocean-300x225(1) திருத்தம்

’தண்ணி,
தண்ணி’

சுட்டும் குழந்தையின்
சின்ன விரல் முன் ஒரு சொட்டாய்ச் சுருங்கும்
கடல்.

’கடல்
கடல்’

திருத்துவார்
அப்பா.

சட்டெனக்
கடல் தெறிக்கும் அப்பாவின் மேல்.

மேனி மேல்
நீர்த் திவலைகளைத் துடைப்பார் அப்பா.

‘தண்ணி
தண்ணி’
குதிக்கும்
குழந்தை அலைகள் தட்டுவது போல்
கைதட்டி.

oOo

Boy_Moon_Catch_Full_Sunny_Rays_Colors

நிலா வெளிச்சத்தைச் சேகரித்து

முழு நிலா
வரையாது வாரி வழங்கிக் கொண்டிருக்கும்
வெளிச்சத்தை.

வெளிச்சம்
வீட்டு மொட்டை மாடியில் வழியும்.

திண்ணை
வழிந்ததைச் சேகரிக்கும்.

ஒற்றைத் தென்னை
இரவெல்லாம்
தனிமை தீரச் சேகரிக்கும்.

சிறிது
வெளியே பறந்தொரு பறவை
வைக்கோலாய்க் கொத்திக் கொண்டு போய்
கூட்டில்
அடை வைத்துக் கொள்ளும்

சருகுகள்
மறுபடியும் உயிர் பெறச் சேகரிக்கும்.

நானும்
கைகளில் சேகரிக்கப் பார்ப்பேன்

விரல்களிடை
வழிந்து விடும்.

கண்களில்
சேகரிக்கப் பார்ப்பேன்.

கண்கள் மூடினால்
காணாமல் போய் விடும்.

முடிவாய் மனத்தில்
சேகரித்து வைத்துக் கொள்வேன்.

அடுத்த
முழுநிலா வரும் வரை
மெழுகுவர்த்தியாய் ஏற்றி வைத்துக் கொள்வேன்
அதை.

-கு.அழகர்சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.