ஆதாரமற்ற பொருளாதாரம் – பகுதி 2

செப்டம்பர் 15, 2008 அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளுள் ஒன்றான “லீ மான் பிரதர்ஸ்” திவாலானது. அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் ஒரே நாளில் வேலை இழந்து தம் உடைமைகளை அட்டைப் பெட்டியில் அள்ளிப் போட்டு இடத்தை காலி செய்ததை பொருளாதார மந்தத்தின் விஸ்வரூபமாக தொலைகாட்சி பெட்டிகளில் பார்க்க முடிந்தது.

1930களில் அமெரிக்காவை பிடித்த Great Depression, 1940களில் ஐரோப்பாவை சூழ்ந்த இரண்டாம் உலகப்போர் போன்ற பெரும் அசம்பாவிதங்களுக்கு பிறகு அதே அளவு நெருக்கடியை இப்போதுதான் இந்நாடுகள் சந்திப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மந்தம் ஏன் வந்தது என்பதை சென்ற பகுதியில் பார்த்தோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மீண்டும் பொருளாதார வளர்ச்சி தென்படாத சூழலில் இன்றுவரை இந்த நெருக்கடி தொடர்கிறது. இதை சரி செய்ய உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள் கையாண்ட முறைகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பின் வரும் விளைவுகளை பற்றி சிந்திக்காமல் வெறும் வசதி மட்டுமே கருதி ஒரு பெரிய விஞ்ஞான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துவிடல், மக்களுக்கு அந்த வசதி இன்றியமையாததாகும்போது அதன் மோசமான பக்கவிளைவுகள் அறியப்பட்டு, அந்த வசதியை கைவிட முடியாமல், பக்கவிளைவை வேறொரு விஞ்ஞான தொழில்நுட்பம் மூலம் சமன் செய்ய முயலுதல் – இதுவே மானிடத்தின் கடந்த நூற்றாண்டின் மனப்பான்மை எனலாம். போக்குவரத்து வசதி கருதி மோட்டார் வாகனங்கள் மற்றும் விமானங்கள் கண்டுபிடிப்பு. அதன் பக்கவிளைவாய் உலக வெப்பமயமாதல். அணுசக்தி மூலம் மின்சாரம் அதன் பக்கவிளைவாய் செர்னோபில், ஃபுகுஷிமா போன்ற விபத்துக்களால் அந்த பகுதிகளில் நிரந்தர சுற்றுப்புற சூழல் மாசு, வணிகமயமாக்கப்பட்ட நுகர்வு அதன் பக்கவிளைவாய் மீட்ட முடியா அளவிற்கு அழியும் உயிரின, தாவர, இயற்கை வளங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம்.

இதில் ஒவ்வொரு முறையும் நாச பக்கவிளைவுகளுக்குத் தீர்வாக “வந்தபின் காப்போம்” என்கிற மன நிலையில் கொயோட்டா உடன்பாடு, புதிய அணு ஆலைகளை கட்டுபடுத்த ஆணையங்கள், அழியும் வளங்களை மீட்க வாரியங்கள் என உலக நாடுகள் இயங்கி வருகின்றனவே தவிர (ஒன்றிரண்டு பொதுநல அமைப்புக்கள் தவிர) இந்த விளைவுகளை ஏற்படுத்தும் மூல காரணத்தை தடுக்கவோ, எதிர்கால நலன் கருதி தற்காலிகமாக இன்று மக்கள் அனுபவித்து வரும் வசதிகளின் மீது கை வைக்கவோ எந்த அரசுக்கும் தைரியம் வருவதில்லை. இந்த வரிசையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி, அது ஏற்பட காரணம், அதை அரசுகள் இப்போது அணுகும் முறை இவற்றையும் சேர்க்கலாம்.

பணம் என்னும் கருவியை கண்டுபிடித்த வங்கிகள் அது தரும் வசதிகளுக்கு அனைவரையும் பழக்கப்படுத்தின. அது நம் அன்றாட வாழ்வில் அகற்ற முடியாத இடத்தை பிடித்ததும், பேராசையால் அளவிற்கதிகமாக வாடிக்கையாளர்களுக்கு கடன் அளித்தல், மோசமான விலைபொருள் எனத்தெரிந்தும் அதை நம்பத்தகுந்த பொருளாக பிறருக்கு நாணயமில்லாமல் விற்கும் தந்திர வியாபார வழிமுறைகள் என சில வங்கிகளின் கைங்கர்யத்தில் ஆரம்பித்த இந்த சிக்கல், முதலில் நுகர்வோரை கடித்து, வியாபாரிகளை கடித்து கடைசியில் (கடனுக்கு அடகாய் பெற்ற வீடு/ நிறுவன பங்குகள் போன்ற முதலீட்டுகளின் மதிப்பு காசு பெறாமல் மலிந்து) வங்கிகளையே திரும்பி வந்து கடித்தது.

Paper_Flight_Air_USA_America_APR_Interest_money-plane

வங்கிகள் முடங்கினால் நாடும் முடங்கும் என்கிற அவல நிலையை தவிர்க்க அரசாங்கம் தன் கஜானாவை திறந்து வங்கிகள் மறுபடியும் இயங்க எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு கடனுதவி செய்தன.  இருந்தும் பொருளாதார சந்தையில் பரஸ்பர நம்பிக்கை இல்லாத காரணத்தால் யாரும் யாருக்கும் கடன் கொடுக்க முன் வரவில்லை. புது கடன் வாங்க இயலாமல் புது வீடுகள் வாங்கப் படவில்லை, தொழில் நிறுவனங்கள் வியாபாரத்தை விஸ்தரிக்க முடியவில்லை. கடனால் வளர்ச்சி அடையும் விசித்திர வளத்தை புது சட்டங்கள்/ உத்திகள் மூலம் தடுப்பதற்கோ அல்லது படிப்படியாக சரிசெய்வதற்கு பதிலாய் “வந்த பின் காக்கும்” உலக நாடுகளின் சிறந்த பொருளாதார வல்லுநர்கள் அதீதமாய் சிந்தித்து, விஷத்தை விஷத்தால் முறிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தார்கள்.

மறுபடியும் சுலபமாக கடன் கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பொருளாதார பல் சக்கரம் பழையபடி இயங்கும் என்பதே அந்த கொள்கை. ஆனால் இம்முறை வங்கிகள் சூடு கண்ட பூனையாக சுதாரிப்புடன் இருப்பதால் வட்டி வீதம் மிகவும் குறைவானாலொழிய மீண்டும் கடன் வாங்கும் சூழலை ஏற்படுத்துவது குதிரைக் கொம்பான விஷயம். மீண்டும் வங்கிகளிடையே, நிறுவனங்களுக்கிடையே, மக்களுக்கிடையே பணம் புழங்க, அனைவரையும் மேலும் கடன் வாங்க வைக்க, பொருளாதார சந்தையில் வட்டி வீதத்தை குறைத்து மலிவு விலையில் மூலதனத்தை கிடைக்கப் பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும். இதை செயல்படுத்த உலக நாடுகளும், அதன் மத்திய ரிசர்வ் வங்கிகளும் இதுவரை எவரும் செய்யாத புது பொருளாதார பரிசோதனைகளை தொடங்கின.

இந்தப் பரிசோதனையை புரிந்து கொள்ள நமக்கு முதலில் அறிமுகமாக வேண்டிய ஆட்ட நாயகன் தான் பாண்ட் ! (ஜேம்ஸ் அல்ல) அரசு பாண்ட். அரசு பத்திரம் அல்லது Government Bonds எனலாம். இதை ஒரு வங்கியின் வைப்பு நிதியுடன் ஒப்பிடலாம். அதாவது நீங்கள் வங்கியில் ரூ. 10000 செலுத்தி வைப்பு நிதி திட்டம் ஒன்று தொடங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதற்க்கு சாட்சியாக வங்கி உங்களுக்கு ஒரு பத்திரமும் வருடத்திற்கு (உதாரணமாக) 10 சதவிகிதம் வட்டியும், அதாவது வருடத்திற்கு ரூ. 1000மும் அளிக்கிறது.

அதேபோல அரசுகள் முதலீட்டாளர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு பதிலுக்கு தரும் ஆவணத்தின் பெயர்தான் அரசு பத்திரம். அந்த பத்திரத்தை யார் வைத்திருக்கிறார்களோ அவருக்கு அரசு ஒரு குறிப்பிட்ட சதவிகதம் வட்டி செலுத்தும். வைப்புநிதி திட்டங்கள் எப்படி முதலுக்கு உத்திரவாதத்துடன் வரும் சிறந்த நிதித் திட்டங்களாக கருதப் படுகின்றனவோ, அரசு பத்திரங்களும் அவ்வாறே அதி பாதுகாப்பான முதலீட்டு கருவியாக கருதப்படுகிறன.

ஆனால் இரண்டிற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. நீங்கள் வங்கியில் வைப்பு நிதி கணக்கு வைத்தால் அந்த பத்திரத்தை பந்தோபஸ்தாக பீரோவில் வைத்து பூட்டி விடுகிறீர்கள். ஆனால் அரசுக்கு கடன் கொடுக்கும் முதலீட்டாளர்கள் அப்படி செய்வதில்லை. மாறாக இந்த பத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு அதை ஒரு நிதிக் கருவியாக கருதி கூவி கூவி பிற முதலீட்டாளர்களுக்கு அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கிறார்கள். “நிறையாக ரூ. 10000த்திற்கு வரையறுக்கப்பட்டு அதற்க்கு 10 வீதம் வட்டி என முடிவான ஒரு பத்திரத்தை பிறருக்கு விற்று எப்படி லாபம் பார்க்க முடியும்?” என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். இது முற்றிலும் சாத்தியமே.

உதாரணமாக இன்று 10 சதவிகிதம் வட்டி செலுத்தும் அரசுக்கு அவசர பணத் தேவைகள் குறைந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். எனவே நாளையிலிருந்து தான் வாங்கப் போகும் புதுக்கடனுக்கு 8 வீதம் மட்டுமே வட்டி குடுப்பேன் என சாவதானமாக தன் கொள்கையை மாற்றுவதாக வைத்துக் கொள்வோம். கட்டுக் கட்டாக பணம் உள்ள ஒரு கைப்பையை கக்கத்தில் சொருகிக்கொண்டு, அந்த பணத்திற்கு குறைந்த ஆபத்தையும் சிறந்த லாபத்தையும் தேடும் ஒரு முதலீட்டாளனாக நீங்கள் உங்களை உருவகப் படுத்திக்கொள்ளுங்கள்.

ஒரு உதாரணமாக நீங்கள் ரூ 11000 முதலீடு செய்ய விரும்புவதாக வைத்துக் கொள்வோம். இந்தப் பணத்தை நீங்கள் அரசுக்கு கடனாக கொடுத்தால் வருடம் ரூ. 880 வட்டியாக கிடைக்கும். (11000 * 8% = 880). ஆனால் அதற்க்கு பதிலாக ஏற்கனவே 10% வட்டி கொடுக்கும் ரூ 10000 பெறுமான பத்திரத்தை நீங்கள் வாங்கி அதிக வட்டி பெற ஆசைப்படுகிறீர்கள் எனக் கொள்வோம். ஆனால் அந்த அசல் பத்திரத்தை வைத்திருப்பவர் உங்களுக்கு ஏன் விற்கப் போகிறார்? ஆகவே 10000 பெறுமான அவரின் பத்திரத்தை நீங்கள் 11000 கொடுத்து வாங்கத் தயாராக இருப்பதாக பேரம் பேசுகிறீர்கள். அவர் சம்மதித்தால் அரசு பத்திரம் உங்கள் கைக்கு வரும். இப்போது அரசு உங்களுக்கு ரூ. 1000 வட்டியாக செலுத்தும். இருந்தும் உங்கள் முதலான ரூ 11000த்திற்கு இது 9.1% லாபம் அளிக்கிறது. அதாவது அரசு தன் வட்டியை 10லிருந்து 8 வீதமாக குறைந்தால் 10000 பெறுமான பழைய பத்திரம் 11000 ஆகிறது. அதாவது உங்கள் முதலை அரசுக்கு புதுக் கடனாக கொடுப்பதை விட பழைய கடனை விலைக்கு வாங்கினால் ரூ.120 அதிக லாபம் கிடைக்கிறது. முதலில் ரூ. 10000 மட்டுமே கடன் கொடுத்த முதலீட்டாளரும் அதை ரூ.11000த்திற்கு விற்று ரூ.1000 லாபம் பார்க்கிறார். அனைவருக்கும் ஆதாயமாக முடிவதால் இப்படித்தான் ஒரு கடன் இன்னொருவருக்கு கை மாறுகிறது.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளும் கோட்பாடு என்னவென்றால் வட்டி வீதத்திற்கும் அரசு பத்திரங்களுக்கும் ஒரு தலைகீழ் தொடர்பு உள்ளது. அதாவது வட்டி வீதம் குறைந்தால் அரசு பத்திரம் விலை ஏறும். அல்லது வட்டி வீதம் ஏறினால் அரசு பத்திர விலை குறையும்.

பொருளாதாரச் சந்தை என்றவுடன் நம்மில் பலருக்கு நினைவில் வருவது பங்குச் சந்தை மட்டுமே. ஆனால் அதைவிட சந்தைகளில் பெரும் சலசலப்பை ஏற்படுத்துவது பத்திர சந்தையே. சென்ற வருடம் பங்குச்சந்தையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக புழங்கும் பணம் 122 பில்லியன் அமெரிக்க டாலர். ஆனால் பத்திரச் சந்தையில் நாள் ஒன்றுக்கு 822 பில்லியன் டாலர், அதாவது பங்குச் சந்தையை விட கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகமான பணம் புழங்கப்பட்டது. அமெரிக்க பங்குச்சந்தையின் மொத்த மதிப்பு 40 ட்ரில்லியன் டாலர் என்றால் பத்திரச் சந்தையின் மதிப்பு 82 ட்ரில்லியன். தேசிய உற்பத்திக்கு எதிராக ஒப்பீட்டுப் பார்த்தாலும் பங்குச் சந்தையை விட பத்திரச் சந்தை இரு மடங்கு பெரியது. ஆக மதிப்பீடளவில் பார்த்தால் மலை விழுங்கி மகாதேவனாக இருப்பது பத்திரச் சந்தையே. இருந்தும் இது குறித்த தகவல்கள் தினசரி செய்திகளில் பொது மக்களுடன் பகிரப்படுவதில்லை.

US_America_Bonds_Lending_Markets_Stocks_Capitalization_GDP_Charts_Graphs_Excel_Spreadsheet_Analysis_Years_Comparison

இப்போது நாம் வளர்ந்த நாடுகளின் பொருளாதார மந்த வைத்தியத்திற்கு வருவோம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் கடன் வாங்கியே காலந் தள்ளுவதை ஏற்கனவே படித்துவிட்டோம். கேட்க கேட்க இந்நாடுகளுக்கு முதலீட்டாளர்கள் கடன் கொடுப்பதின் காரணம், இந்நாடுகளை அவர்கள் ஒரு பாதுகாப்பு பெட்டகமாக பார்ப்பதால், இந்நாட்டு பொருளாதாரம் ஸ்திரமானதாகவே இருக்கும் என்கிற நம்பிக்கையில்தான். பொருளாதார மந்தம் வந்துவிட்டால் வளர்ச்சி இருக்காது. பின் இந்நாடுகள் தான் வாங்கிய கடனை திருப்பித்தர முடியாத நிலை ஏற்படும். இதனால் இந்நாட்டுக்கு கடன் கொடுக்க யாரும் முன்வரமாட்டார்கள். இதனால் இந்த அரசு பத்திரங்கள் களை இழக்கும். அவற்றின் விலை குறையும். இதனால் சந்தையில் வட்டி வீதம் ஏறும் (முந்தைய பத்தியை மறுபடி வாசிக்க).

வட்டி ஏறினால், சந்தையில் ஒருவருக்கொருவர் கடன் கொடுக்கல் வாங்கல் தடை படும். பொருளாதாரம் மேலும் மந்தமாகும். இந்த சிக்கலான சுழற்சியை உடைக்க, அரசு பத்திரங்களை மீண்டும் அடுத்தவர் வாங்கும் கவர்ச்சிப் பொருளாக மாற்ற வேண்டும். ஆனால் வாங்குவார் யாரும் இல்லாமல் உலகப் பொருளாதாரம் சக்கரவ்யூகத்தில் சிக்கிக் கொண்டது. இதை சமாளிக்க வளர்ந்த நாடுகள் தம் கடனை தாமே திரும்பி வாங்க முடிவு செய்தன!! தம் கருவூலங்களை முடிக்கிவிட்டு பணத்த அச்சடிக்க செய்து இந்த பணத்தில் தம் மத்திய வங்கிகள் மூலமாக தம் பத்திரத்தை தாமே வாங்கின. இப்படி நடக்கும் கண்கட்டு வித்தையை பிறருக்கு புரியா வண்ணம் சமாளிக்க பொருளாதார வல்லுநர்கள் இந்த செயல்பாடுகளுக்கு அதிநவீன பெயர்களை சூட்டினார்கள்.

இதைத்தான் ஆங்கிலத்தில் Quantitative Easing என்றும் (ஏதோ நோயாளிக்கு குளுக்கோஸை ஏற்றுவது போல) Injecting Money into the market என்றும், கேட்கவே நவீனத்துடன் உறுதி குடுக்கும் புதுமொழிப் பெயர்களை ஊடங்களில் எங்கு நோக்கினாலும் அறிவித்தன. ஜப்பானில் பிரதம மந்திரி ஷின்ஷோ அபே இதே உத்தியை வெற்றிகரமாக கையாண்டு ஓரளவு வெற்றி கண்டார். இதையே ஒரு முன்மாதிரியாக  முன்னிறுத்தி, அதற்க்கு அபெனாமிக்ஸ் (Abenomics) என பெயரும் சூட்டி, இன்று உலகம் முழுதும் நெருக்கடியிலிருந்து தப்பிக்கும் வழியாக பிரபலப் படுத்தப்பட்டு வருகிறது.

Federal_Bonds_Loans_Treasury_Banks_USA_Money_Dollar_QE_quantitative-easing

ஓட்டை காலணாவாக தங்கள் கைவசம் இருந்த பழைய பத்திரங்களை திடீரென வாங்குவதற்கு யாரோ தயாராக இருப்பதால் முதலீட்டாளர்களும் மனமுவந்து அவற்றை போட்டிப்போட்டுக்கொண்டு விற்க முன்வருவர். அதாவது அரசு பத்திரங்களுக்கு செயற்கையாக கிராக்கி உண்டாகும். இதனால் அரசு கடன் பத்திரங்களுக்கு மவுசு கூடி அதன் அதன் விலை ஏறும். இதனால் வட்டி வீதம் குறையும். மீண்டும் எல்லாருக்கும் கடன் வாங்குதல் எளிமையாகும். மறுபடி பொருளாதார பல் சக்கரம் சுழல ஆரம்பித்து பொருளாதார வளர்ச்சி கைகூடும்.

உண்மையில் இது உலக அரசுகள் எந்த ஒரு பாதுகாப்பு அஸ்திவாரமும் இல்லாமல் சகட்டுமேனியாய் தேசிய கருவூலங்கள் மூலம் பணம் அச்சடித்து தான் வாங்கிய கடனை தானே வாங்கிக் கொள்வது. கடந்த ஒரு ஆண்டு காலமாக பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து வருவதைப் பார்த்தால் இந்த உத்தி பலிப்பதைப் போலத்தான் தெரிகிறது. ஆனால் இப்படி புத்திசாலித்தனமாக ஒரு பிரச்சினையை தீர்க்க அரசுகள் எடுக்கும் நடவடிக்கையில் பக்க விளைவுகள் இல்லாமலா போகும்?

உலகமயமாக்கப்பட்ட இன்றைய பொருளாதாரத்தில் அமெரிக்கா தும்மினால் இந்தியாவிற்கு சளி பிடிக்காதா? இதை கடைசி பகுதியான அடுத்த பகுதியில் காண்போம்.