அறியாமையின் விலை

”நளினி அம்பாடி சிகிச்சைகள் பலனளிக்காமல் அக்டோபர் 28 2013, அன்று போஸ்டனில் இறந்தார்” என ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. சமூக உளவியல் துறையில் உலகெங்குமுள்ளவர்களை அதிர்ச்சியும் சோகமும் அடைய வைத்த செய்தி இது.

இதற்கும் மேல் அதிர்ச்சியும் கோபமும் நமக்கு வரவேண்டும். அவர் இறந்ததற்குக் காரணம் சிகிச்சையில் குறைவோ, புற்றுநோயின் தீவிரமோ இல்லை. இந்தியர்களான நமது பாமரத்தனம். நமது அறிவின்மை, உலக அளவில் ப்ரசித்தி பெற்ற இந்திய வம்சாவளியரான உளவியல் நிபுணரைக் கொன்றிருக்கிறது. யார் இந்த நளினி அம்பாடி? ஏன் அவர் இறந்ததற்கு நாம் குற்ற உணர்வு கொள்ளவேண்டும்?

naliny-ambady_Professor_Scholar

நளினி அம்பாடி, கேரள மாநிலத்தவரானாலும் படித்தது கல்கத்தாவிலும், டெல்லியிலும். பின்னர் அமெரிக்கா சென்று மேற்படிப்பு படித்து, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நெடுநாள் பணியாற்றினார். பின்னர் அங்கிருந்து ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திற்கு 2011ல் பெயர்ந்தார். அந்தப் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையினைத் தலைமை தாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். சமூக உளவியலில் அவரது பங்கு மகத்தானது.

அப்படி என்னதான் பெரிதாகச் செய்து விட்டார்? ‘சொற்களின்றி, வெறும் ஒலிகளின் அடிப்படையாக, ஓடும் உணர்வுகள் மூலம் மனித மூளை விவரத்தை வெகு விரைவாக – இரு நொடிகள் அளவில் புரிந்து கொண்டு விடுகிறது’ என்பது அவரது கோட்பாடு. அதனை பல உரையாடல்களின் சிறு சிறு துண்டுகள் மூலம் நிரூபித்தார். இரு மனிதர்களின் உரையாடல் நாடாவில் பதிவு செய்யப்படுகிறது. அதில் வரும் சொற்களின் அதிர்வுகளை ஒரு அதிர்வு வடிகட்டி (Frequency filter) மூலம் பிரித்து எடுத்துவிடுகிறார் நளினி. எஞ்சி இருப்பது வெறும் ஒலிகள் மாத்திரம் – சில அடிக்குரலில், சில உச்சஸ்தாயியில்.. .என உணர்வுகளுக்கு ஏற்ப மாறி வருகிற ஒலிகள். கேட்டால் ஒன்றுமே புரியாது. இப்படி ஒரு மனிதரின் இரு உரையாடல்களை அவர் பதிவு செய்கிறார். பின்னர் உரையாடலில் நீளத்தை வெகுவாகக் குறைத்து 20 வினாடிகள் மட்டுமே இந்த ஒலிகள் வருமாறு பதிவுசெய்கிறார். ஆக ஒரு மனிதருக்கு இரு பதிவுகள். 40 நொடிகள், அபத்த ஒலிகள்.

இந்த ஒலிக் குழப்பத்தை, அந்த மனிதரை முன்பு அறிந்திராத, உரையாடலின் பின்புலம் அறியாத வேற்று மனிதர்களைக் கேட்க வைத்து, அதிலிருந்து பேசுபவரின் சில குணங்களை வரையறுக்குமாறு பணித்தார். பேசுபவர், அவர் குணங்கள், பேசப்படும் மொழி, அதன் சூழல் இவை எவற்றையுமே அறியாத அம்மனிதர்கள் கணித்த அந்த விவரங்கள், அவற்றை அறிந்தவர்கள் கணித்ததை மிகவும் ஒத்திருந்தது. உரையாடலை மீண்டும் சுருக்கி 10 வினாடிகளின் நாடாவைக் கேட்கவைத்தார். அந்த சிறு நேர அளவிலும், ஒலிக்குழப்பத்திலிருந்து மக்கள் கணித்தது, அறிந்தவர்கள் கணித்ததை ஒத்திருந்தது. 1992ல் ராபர்ட் ரோசந்த்தாலுடன் சேர்ந்து அவர் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் இதுபோன்ற பரிசோதனை முடிவுகள் வெளியானது.

சமூக உளவியல் வரலாற்றில் ஒரு புரட்சியாக இது கருதப்பட்டது. பரபரக்க வைத்த இந்த கோட்பாடும், அதன் பரிசோதனைகளும் சமூக உளவியலாரின் சிந்தனையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது. அது வரை செய்திகளை ஆராய்ந்து அறிதல் என்பது சமூக வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாக உளவியல் கருதிவந்தது. ஒரு நிகழ்வு நடக்குமுன் நம்முள் தோன்றும் இனம்புரியாத உணர்வினை, அதன்மூலம் நாம் எடுக்கும் முடிவுகளை ஆராயாமல் எடுத்த முடிவுகள் என வரையறுத்த உளவியல், தருக்கம் (லாஜிக்) இல்லாது எடுக்கும் முடிவுகள் பிறழ்ந்ததாகவே இருக்கும் என்றே வாதிட்டு வந்தது. நளினியின் இந்த சோதனை அதனை உடைத்து நொடியளவில் கணிப்பு என்னும் பதத்தை முன்வைத்து, அக்கணிப்பு பிழையாக இருக்கவேண்டுமென்பதில்லை என்பதை நிரூபித்தது.

Blink_Books_Malcolm_Gladwellவிளைவு? நரம்பியல், மூளையில் சிந்திக்கவும், செயலாற்றவும், உணர்வுகளை ஆளுமைப்படுத்தவும் செய்யும் பகுதிகள், உளவியல் துறைகளின் பிரிவுகள் என பல துறைகளிலும் புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. Blink என்னும் புத்தகத்தின் மூலம் thin slicing, snap judgement போன்றவற்றை பிரபலமாக்கிய மால்கம் க்ளாட்வெல் Malcolm Gladwell நளினி அம்பாடியின் சோதனைகளை தனது புத்தகத்தில் சுட்டிக்காட்டியதோடு நில்லாமல், அதன் முக்கியத்துவத்தையும் புகழ்ந்துள்ளார். Blink படித்தவர்கள் நளினியைத் தெரியாதிருக்க வாய்ப்பில்லை.

2003-ல் அவருக்கு ஏற்பட்ட ரத்தப் புற்றுநோய், சரிசெய்தபின், மீண்டும் 2010ல் மறுவீழ்வாகத் தோன்றியது. இம்முறை எலும்பு மஜ்ஜையை தானமாகப் பெற்றாலே வழியுண்டு என்ற நிலை. எலும்பு மஜ்ஜை போன்றவை இரத்த தானம் போன்று எளிதானது என்றாலும், ஒரு முறை செய்துவிட்டுச் சென்று விடும் காரியமல்ல. மீண்டும் சில முறைகள் வரவேண்டியிருக்கும். தானம் கொடுப்பவரின் ரத்தத்தை ஒரு இயந்திரத்தில் தொடர்ச்சியாக எடுத்து, அதிலிருந்து தேவையான திசுக்களை வடிகட்டி, ரத்தத்தை மீண்டும் தானம் கொடுப்பவரின் உடலுக்குள் செலுத்திவிடும் முறை, மிகவும் பாதுகாப்பானதுதான் என்றாலும், அடிக்கடி வரவேண்டியிருப்பதாலும், சற்றே வலி கூடுதலாக இருப்பதாலும் தானமளிப்பவர்கள் தயங்குவார்கள். இது இயற்கை. இதையும் தாண்டி தானமளிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இருக்கிறார்கள். இருந்தும் நளினிக்கு மஜ்ஜை கிட்டவில்லை. ஏன்?

நமது செல்களின் வெளிப்புறத்தில் ஹ்யூமன் லூக்கோசைட் ஆண்ட்டிஜென் HLA எனப்படும் காப்புஅணுக்கூட்டங்கள் இருக்கின்றன. இந்த ஹெச்.எல்.ஏ திசுக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை வாய்ந்தவை. ஒரு பாதி அணுக்கள் தாய் வழியிலும், மற்றொரு பாதி தந்தை வழியிலுமாக நம்மில் அமைகின்றன. நமது உடல், அந்நிய திசுக்களை, உறுப்புகளை வெளியே இருந்து தன்னைத் தாக்க வரும் எதிரியாகவே பார்க்கும். எனவே, பல சமயங்களில் வெளியிலிருந்து ஒட்டவைக்கப்படும் உறுப்புகள், செலுத்தப்படும் உயிரினத் திசுக்கள் நம் உடலால் நிராகரிக்கப்பட்டு,அழிக்கப்பட்டுவிடும். ஆகவே, இந்த எதிர் உயிரணுக்ளை (குறைந்தபட்சம் அவற்றில் 10 வகை) தானம் கொடுப்பவரும், பெறுபவரும் ஒத்துவருமாறு பெற்றிருந்தால்தான் உடலில் மாற்று உறுப்பு மற்றும் திசுக்களை உடல் ஏற்றுக்கொள்ளும். இவை மரபு ரீதியாக அமைவதால், நாம் பிறந்த இனக்குழுக்களிலிருந்த மனிதர்களில், தானமளிப்பவர் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.. நளினிக்கு அமெரிக்காவிலோ ஐரோப்ப்பாவிலோ தானமளிப்பவர் கிடைக்கவில்லை. இந்தியாவில் இது வரை மஜ்ஜை தானமளிப்பவர்களின் நாடளாவிய பதிவேடு ஒன்று (MDRI- Marrow Donor Registry of India) 2009-ல் உருவாக்கப்பட்டாலும், மிகச் சிறிய அளவிலேயே அதில் விவரங்கள் சேர்ந்துள்ளன. எனவே ஒவ்வொரு முறையும் நாம் தானமளிப்பவரைத் தேடி அலையவேண்டும். இந்தியாவில் பல வகையான இனக்குழுக்கள், அவற்றின் கலப்பு என்பதால் அத்தனை எளிதாகக் கிடைத்துவிடாது. நளினிக்காகப் பெரும் பொருட்செலவில் இந்தியா முழுவதும் Nalini Needs You என்று மஜ்ஜை தானமளிப்பவரைத் தேடும் முயற்சி 2010ல் தொடங்கியது. கிடைத்த நபர்களை ஸ்க்ரீன் செய்வது(நோய்கள் இல்லாதிருக்க) முதல் கட்டம். அதன்பின் மஜ்ஜையில் ஹெச்.எல்.ஏ யின் முதல் 6 வகையாவது ஒத்து வரவேண்டும். இவ்வாறு ஒத்து வந்தவர்கள் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் தேர்ந்தெடுத்த சிலரிடமிருந்து மீதம் 4 அணுக்களைப் பரிசோதித்துப் பார்த்தனர். அதிலும் ஒத்து வந்த சிலரை மஜ்ஜை தானமளிக்க ஏற்றனர்.

இங்குதான் சோகம் தொடங்குகிறது. இப்படியெல்லாம் தானமளிப்பவர்களைத் தேர்ந்தெடுத்தும், தானமளிப்பதாக ஒப்புக்கொண்ட பலர் இடையே நழுவிவிட்டனர், சிலர் மறுத்து விட்டனர். இதற்கு முக்கிய காரணம், மஜ்ஜை தானமளிப்பு குறித்தான விழிப்புணர்வு இல்லாததுதான். எத்தனையோ மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியும், நம்பிக்கை ஊட்டியும், தானமளிக்க வந்தவர்கள் தயங்கி வெளியேறினர். ஒவ்வொரு முறையும் மஜ்ஜைக்கான சோதனைகள் நடத்த 20000 ரூபாய்கள் செலவாயின. அனைத்தும் நளினியின் குடும்பத்தினரின், நண்பர்களின் தலையில். மீதம் 4 அணுக்களின் சோதனைக்கு அமெரிக்காவுக்கோ ஐரோப்பாவிற்கோ மஜ்ஜை திசுக்களை அனுப்பிவைக்க வேண்டியிருந்தது.

தானமளிக்கக் கூடிய ஆட்கள் இருந்தும், பெறும் வகையில் நளினி இருந்தும், நமது அறியாமையாலும், தானமளிப்பவர்கள் விவரங்கள் கொண்ட ஒரு நாடளாவிய பதிவேடு சரிவர இல்லாமையாலும், நளினி ஒரு வருடம் புற்றோடு மிகுந்த வலியுடன் போராடி , அக்டோபர் 28ம்தேதி, 2013ல் இறந்து போனார். ரத்த தானம் போல எளிதான மஜ்ஜை தானத்திற்கு சரியான விழிப்புணர்வு இல்லாததால் ஒரு திறமையான உளவியலாரை உலகம் இழக்க நேர்ந்தது. இந்த குற்றம் இந்தியர்களின் மேல்தான் சுமையாக இறங்கும்.

Na1

இதுபோன்று மேலும் நடக்காதிருக்க, மருத்துவர்கள் மஜ்ஜை தானம் குறித்து மக்களிடம் பேசவேண்டும், தன்னார்வலக் குழுவினர்கள் மஜ்ஜை தானத்திற்கு முன்வருவோர்களை ஸ்க்ரீன் செய்து, விவரங்களை MDRI பட்டியலில் சேர்க்க உதவலாம். இதற்கு ஒன்றும் பெரிதாகச் செலவு இல்லை. நமது வாயின் உட்புறம், காது குடையும் பஞ்சுக் குச்சி கொண்டு செல்களை வழித்தெடுத்து அதனை ஆராய்வார்கள். அவ்வளவுதான். முதல் படி நிலை பெருமளவில் செய்து, தானமளிப்போர் விவரப் பட்டியல் தயாரித்து விடலாம். இந்தியாவில் மஜ்ஜை தானமளிப்பவர் பதிவேடு இல்லை என்ற நிலை மாற ஒரு வருடம் போதும். MDRI முகநூலிலும் இருக்கிறது. இணையத்தில் இருக்கும் நண்பர்கள் இதனைப் பரவச்செய்யலாம். நாமும் தானமளிப்பவராக பதிவு செய்யலாம்.

இதுவே நாம் நளினிக்குச் செய்யும் கைம்மாறு. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

bone_marrow_Donation

ஆதாரங்கள்:

0 Replies to “அறியாமையின் விலை”

  1. ஒவ்வொரு முறையும் மஜ்ஜைக்கான சோதனைகள் நடத்த 20000 ரூபாய்கள் செலவாயின. அனைத்தும் நளினியின் குடும்பத்தினரின், நண்பர்களின் தலையில். – Your tone is not nice, though frustrating.

  2. வேல் முருகன், அதை எழுத வேண்டிய நிர்ப்பந்தம்… ஒவ்வொரு சோதனைக்குமுன்னர் தெளிவாக கொடையாளியாக வருபவருக்கு, மஜ்ஜை தானம் பற்றி விளக்கியபின்னரே, சோதனைகள் நடத்தப்படுகின்றன. கொடையாளிகளுக்கு சிந்திக்க, முடிவெடுக்கத் தகுந்த அவகாசமும் தரப்படுகிறது. அதையும் தாண்டி கொடைகொடுக்க முன்வருவோரிடம் செய்யப்படும் சோதனைகளின் செலவு முழுதும் நளினி குடும்பத்தினரும், நண்பர்களும் ஏற்றனர். எத்தனை நபர்கள் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டனர் – தெரியாது. ஆனால், தயங்குபவர்கள் முன்னரே விலகியிருந்தால்..1. இன்னொருவரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். 2. பொருள் விரயம் ஆகியிருக்காது. பொருள்செலவோடு மற்றொன்றை நாம் கவனிக்கவேண்டும். நளினியிடம் நேரம் அதிகமில்லை. If the tone was not good, it was just out of my frustration. Thanks for your honest feedback.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.