‘வாழ்வியல் ரகசியங்கள்“- 2006 ஆம் ஆண்டு நான் வெளியிட்ட நூலின் தலைப்பு இது. இப்புத்தகத்தைப் படித்து உள்ளர்த்தம் அறிவோர்க்கு விளக்கம் தேவையில்லை. அப்படிப் புரிந்து கொள்ளாதவர்கள் ரகசியங்களை அறிய மாட்டார்கள். ”நோயில்லாமல் வாழ வழி தேட ஒவ்வொரு விவசாயியும் இயற்கை விவசாயம் செய்து நஞ்சில்லா உணவை உண்ணும் நுகர்வோர்களுக்கும் உதவ வேண்டும்.” பல ரகசியங்களில் இதுவும் ஒன்று -பஞ்ச பூத சக்திகள்.
இப்புத்தகத்தில் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் செய்யும் நூற்றுக் கணக்கான விவசாயிகளின் முகவரிகளும், குறிப்பும் உண்டு. இப்படி இயற்கை விவசாயம் செய்வோர், வாழ்வியல் ரகசியங்களை அறிந்தவர்கள் என்ற குறிப்பையும் அறிதல் நலம்.
இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு ஆங்கில ஆதார நூல்களில் என்னை மிகவும் கவர்ந்த குறிப்பு நூல், க்ளோட் ஆல்வரெஸ் தொகுத்துள்ள “இயற்கை விவசாய ஆதார நூல்.” [Organic Farming Source Book. புதிய பதிப்பில், தலைப்பு Organic Farming Reader என்று மாற்றப்பட்டுள்ளது. ] இவர் உலகளாவிய தொடர்பு உள்ளவர். முதல் முறையாக இவர்தான் புக்கோக்காவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சியை” ஆங்கிலத்தில் இந்தியப் பதிப்பாக வெளியிட்டார். ஆல்பர்ட் ஹாவர்டின் வேளாண்மை உயிலையும் ஆங்கிலத்தில் வெளியிட்டார். இந்த இரண்டு மட்டுமல்ல, வேறு பல முக்கிய இயற்கை விவசாய வல்லுநர், சூழல் போராளிகளின் நூல்களையும் வெளியிட்டுள்ளார். க்ளோட் ஆல்வரெஸின் இயற்கை விவசாய ஆதார நூலில், மேற்கூறியவர்கள் பலருடைய சாதனைகள் பற்றிய குறிப்புகளுடன், இந்தியாவில் இயற்கை விவசாயம் செய்யும் முன்னோடிகள் பற்றிய விவரங்களும் உண்டு. க்ளோட் ஆல்வரெஸைப் பின்பற்றித் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் செய்யும் முன்னோடிகள் பற்றிய சுருக்க விவரங்களுடன், முகவரி, தொலைபேசி எண், ஒளிப்படங்களுடன் நான் ஒரு நூல் வெளியிட எண்ணி விவரங்களைத் தொகுத்து வந்தேன்.
சிறுகச் சிறுக 1996 க்குப் பின் அம்பாத்துறையில் குடியேறிய காலத்திலிருந்தே நான் இயற்கை விவசாய முன்னோடிகள் பற்றிய கள ஆய்வை மேற்கொண்டிருந்தேன். 1996 இலிருந்து 2006 வரை சுமார் 300 முகவரிகளைச் சேகரிக்க முடிந்தது.
காந்திகிராம அறக்கட்டளை நடத்திவந்த லட்சுமி சேவா சங்க சித்த ஆயுர்வேத மருந்தக ஊர்தியையும் பயன்படுத்தினேன். இயற்கை விவசாயக் கருத்தரங்குகள் நிகழும்போது என்னை உரையாற்ற அழைப்பார்கள். டீசல் செலவுக்கு மட்டும் பணம் பெற்று, லட்சுமி சேவா சங்க ஊர்திக்கு வழங்குவது உண்டு. மேற்படி கருத்தரங்குகளில் சித்த-ஆயுர்வேத மருந்துகளுடன் எனது புத்தகங்களின் விற்பனைக்கும் ஸ்டால் வழங்குவார்கள். மருந்தகத்திற்கும் விளம்பரம் கிட்டும். எனக்கும் பயனாயிற்று. அந்த முறையிலும் இயற்கை விவசாயிகளின் தொடர்பு கிட்டியது. அதிக பட்ச முகவரிகளை எனது தனிப்பட்ட பயணங்களில் பெற்றிருந்தேன். ஒரு கால கட்டத்தில் காந்தி கிராம அறக்கட்டளை- காந்தி கிராமப் பல்கலைக் கழகத்துடன் நல்ல தொடர்பும், நெருங்கிய உறவும் இருந்தது. வேளாண்மைத் துறைத் தலைவர் திரு. டி. ரங்கநாதன், வேளாண்மை அறிவியல் மையம் (K.V.K) தலைவர் திரு எஸ்.கே. கோபால் நன்கு பழக்கமாயினர். இப்படிப்பட்ட நிறுவனங்கள் நடத்தும் கருத்தரங்கிலும் பங்கேற்று இயற்கை விவசாயம் தொடர்பான கருத்துகளைப் பரப்பி வந்தேன்.
”வாழ்வியல் ரகசியங்கள்” என்ற இந்த நூலை “இயற்கை வேளாண்மைக் களஞ்சியம்” அல்லது “இயற்கை விவசாயத்தில் வாழ்வியல் நுட்பங்கள்” நூலின் இரண்டாவது பாகமாகவும் மனதில் கொண்டு கற்றால் மிகப் பயனுடையதாக இருக்கும். 2006 இல் இந்த நூல் வெளி வந்து, ஏழு ஆண்டுகள் சென்று விட்டதால், சில முன்னோடிகளின் தொலைபேசி எண்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.
காவேரிராஜபுரம் ஜான் தன்ராஜ் போன்றவர்கள் வயோதிகம் காரணமாக மேற்பார்வை செய்ய முடியாமல் நிலத்தைக் குத்தகைக்கு விட்டிருக்கலாம். திருமதி சுமித்ரா போன்றவர்கள் நிலத்தை விற்றுவிட்டு வேறு ஊரில் நிலம் வாங்கி விவசாயம் செய்யலாம். நிலையான இடமில்லா நாடோடி அன்பு சுந்தரானந்தா சட்டையில்லா சாமியப்பன். இப்படிப்பட்ட ஒரு சில மாற்றங்கள் இருப்பினும் 100க்கு 97 சதவீதம் முகவரிகள் மாறவில்லை.
இந்த நூலை வெளியிடும்போதே அச்சாகும் செலவுகளுக்காக, அச்சிட்டோர்களுக்குரிய (காந்திகிராமம் பிரஸ், மற்றும் மகேஷ் பிரிண்டோ க்ராஃபிக்ஸ், சிவகாசி) பணத்தை வழங்க முடிவு செய்து முன்கூட்டியே ரூ 50,000 வரை முன் வெளியீட்டு அடிப்படையில் திரட்ட முடிவு செய்தேன். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து இயற்கை விவசாயிகளையும் தொடர்பு கொண்டு 300 அஞ்சல் அட்டைகளை எழுதிப் புத்தகங்களுக்கு ஆர்டர் பிடித்தேன். நெருங்கிய நண்பர்களிடமிருந்து 100 அல்லது 50 அல்லது 25 பிரதிகள் வாங்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தினேன். பின்னர் ஸ்பைஸஸ் போர்டுடன் தொடர்பு கொண்டு ரூ 10,000த்துக்கு விளம்பரம் பெற்றேன். முக்கியமான முன்னோடிகளிடமிருந்து அவர்கள் கைப்பட அவரவர் அனுபவங்களை எழுதி அனுப்புமாறு வேண்டினேன். சிலர் மட்டுமே அனுப்பினர். அவற்றையும் தொகுத்து இந்த நூலில் வெளியிட்டேன். நூல் வெளியாகும் முதல் நாள் வரை ரூ.32,000 வசூலாயிற்று. நூல் வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்து அழைப்பிதழ் அச்சிட்டு முன்னோடிகளுக்கு மட்டுமல்லாமல் நண்பர்களுக்கும் அனுப்பினேன்.
முதல் நாள் இரவு தங்க விரும்புவோருக்கு காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழக விடுதியில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 10 மணி அளவில் வெளியீட்டு விழா தொடங்கி, மதிய உணவுக்குப் பின் வழிகாட்டும் விவசாயிகளின் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்தேன். மேடையில் துணைவேந்தர் கருணாகரன் தலைமை வகிக்க, முன் பதிவு திட்டத்தில் பணம் வழங்கிய யாவருக்கும் பிரதிகளை காந்தி கிராம அறங்காவலர், டாக்டர் கௌசல்யா தேவி கைப்பட வழங்கி இயற்கை விவசாய முன்னோடிகளைக் கௌரவித்தேன். விழாவைச் சிறப்பாக நடத்தி முடிக்கப் பலவகையில் (கே.வி.கே) முனைவர் எஸ்.கே. கோபால் உதவினார். மேடை அமைப்பு, உணவு, சிற்றுண்டி ஏற்பாடுகள் செய்தார். லட்சுமி சேவா சங்க நிர்வாகி நண்பர் வெள்ளைப்பழம் மேடைத் தூணாக செயல்பட்டு நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தார்.
விழா இனிதே முடிந்தது. செலவுகள் ரூ.10,000. விழாவில் நூல் விற்பனை சுமார் ரூ.8000 ஆயிற்று. எனினும் 2000 பிரதிகள் அச்சிட்டு, ஒரு பிரதி ரூ.75 என்று நிர்ணயித்திருந்தேன். அச்சு-வெளியீட்டுச் செலவு ரூ. 44,000 விழாவின் மறுநாள் வழங்கப்பட்டது. நிகர நஷ்டம் ரூ.14,000. என்றாலும் தமிழ் நாட்டின் இயற்கை விவசாயிகள் யாவரையும் ஒரு அணியில் திரட்டிய ஒரு முயற்சிக்கு வெற்றிதானே!
வேற்றுமைகள் இருந்தால்தான் ஒற்றுமைக்கு வழி காண முடியும். 2002 இல் என்னுடைய இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் வெளி வந்த வேளையில் இயற்கை விவசாய முன்னோடிகளிடையே பிளவு ஏற்பட்டது. இயற்கை ஞானி நம்மாழ்வார் தர்மபுரி மாவட்டத்தில் ஓசூர் அருகில் இயற்கை விவசாயப் பல்கலைக் கழகம் ஒன்றை நிறுவ முனைந்தார். இதனால் சில படித்த இளைஞர்கள் வேறு வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்காமல் நம்மாழ்வாருடன் செயல்பட்டு வந்தனர். எதிர்பார்த்தபடி அப்படி ஒரு பல்கலைக்கழகம் உருவாகாததால் சற்று மனம் நொந்து அவரிடமிருந்து விலகி சத்தியமங்கலம் எஸ்.ஆர். சுந்தரராமனுடன் ஒருங்கிணைந்து அவரைத் தலைவராக்கித் ‘தமிழ்நாட்டு உழவர் தொழில் நுட்பக் கழகம்’ என்று ஒரு அமைப்பை அந்த இளைஞர்கள் உருவாக்கினர்.
”தமிழின வாழ்வியல் இயக்கம்” என்பது நம்மாழ்வார் இயக்கம். சத்தியமங்கலம் சுந்தரராம அய்யரின் சாதனைகளுக்கும், உழைப்புக்கும் போதிய ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்காமல் நம்மாழ்வார் அரச்சனூர் செல்வத்தையும், மாணிக்கம்பட்டி கோபால கிருஷ்ணனையும் முன்னுக்கு நிறுத்தியதில் சுந்தராமனுக்கு உள்ளூர வருத்தம் உண்டு. மேற்படி நபர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பை நம்மாழ்வார் பெற்றுத் தந்தார்.
நம்மாழ்வார் அவர்கள் முதலில் சுந்தர ராமனின் விருந்தாளியாக இருந்த பின்னர் ஈரோடு செல்வத்தின் விருந்தாளியானார். பிளவுப் பிரச்சினை பெரிதானதும் திருச்சியில் 2003 இல் ஒரு பெரிய மகாநாடு கூட்டப்பட்டது. எனக்கும் அழைப்பு வந்தது. கோவாவிலிருந்து க்ளொட் ஆல்வரெஸ் வந்து இரண்டு இயக்கங்களையும் சமாதானப்படுத்தி ஒன்றாக்க முயன்றார். நானும் முதல் முறையாக க்ளோட் ஆல்வரெஸைச் சந்தித்தேன். இயற்கை விவசாய எழுச்சிக்கு அவர் நம்மாழ்வார் மூலம் நிதி வழங்கியவர். நம்மாழ்வாருக்கு பண ஆசை கிடையாது. குடும்பக் கூட்டிலிருந்து வெளியேறியவர். உலக சஞ்சாரி. திருக்காட்டுப் பள்ளியை அடுத்த இளங்காட்டில் அவருக்கு சொத்து சுகம் இருந்தது. பசுமைப் புரட்சியால் வேளாண்மைக்குத் தீங்கு விளையும் என்று அரசு வேலையை உதறி விட்டு சேவை மனப்பான்மையுடன் நம்மாழ்வார் பசுமைப் புரட்சி தமிழ் நாட்டில் வேர் ஊன்றும் காலகட்டத்திலேயே இயற்கை வேளாண்மைப் பிரச்சாரத்தில் இறங்கிய முதல் முன்னோடி. இவரோடு இணைந்து பணியாற்றிய சிலருக்கு ஆதாயம் கிட்டியிருக்கலாம். எனினும் ஈரோடில் திரு. செல்வத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நம்மாழ்வார், இந்தப் பிளவு காரணமாகத் திருச்சிக்கு வந்தார்.
மா. ரேவதியிடம் பொறுப்புகளை வழங்கியபோது என்னுடைய வேளாண்மைக் களஞ்சியத்திற்கு அணிந்துரையும் வழங்கினார். எனது நூலுக்கு நம்மாழ்வார் அணிந்துரை பெற்றதை சுந்தரராமன் விரும்பவில்லை! ஏனெனில் நான் அப்போது சுந்தர ராமன் நடத்திய இயக்கத்தில் பங்கேற்று உரையாற்றி வந்தேன். நான் நம்மாழ்வரோடு இணைந்து விட்டதாக சுந்தர ராமன் அணியினர் கருதினர். நம்மாழ்வார் அணியிலிருந்தவர்களுக்கும் என்னைப் பிடிக்கவில்லை. ஏனெனில் எனது பிரச்சார உத்தி ஏறத்தாழ நம்மாழ்வார் பாணியிலிருந்தது. என்னை வான்கோழி என்று புகழ்ந்தனர்! அணி என்பது நம்மாழ்வாரையும் சுந்தர ராமனையும் சுற்றியிருந்த வெகு சிலரே. இயற்கை விவசாயத்தில் அணி சாராதவர்களே அதிகம்.
காந்திகிராமத்தில் நான் கூட்டிய மாநாட்டுக்கு நம்மாழ்வார், சுந்தர ராமன் நீங்கலாக பெரும்பாலான இயற்கை விவசாயிகள்

பங்கேற்று மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தார்கள். இந்தப் பின்னணியை உள்வாங்கிக் கொண்டிருந்த முனைவர் ஸ்ரீ கண்ணன் தம்பி இந்த நூலுக்கு வழங்கியுள்ள அணிந்துரையில் இவ்வாறு கூறியுள்ளார்: “திரு ஆர். எஸ். நாராயணனின் இந்த முயற்சி இன்று இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கும் சிந்தனையாளர்களுக்கும் ஒரு பொதுவான அணியை உருவாக்கி உள்ளது. மிகவும் சரியான பாதையில் மிகச் சிறப்பாக பாதம் பதித்து விட்டது. இன்று இயற்கை வழி விவசாயத்தை ஊக்குவித்து நடத்திச் செல்பவரும், இதைப் பற்றிப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதுபவருமான திரு.நாராயணனின் வாழ்வியல் பணி உணர்வுகள் மிகவும் ஆழ்ந்து தடம் பதிப்பவை. ‘வாழ்வியல் ரகசியங்கள்’ வழி காட்டும் இயற்கை விவசாயப் பண்ணைகள் 300+ இந்த நூலின் தலைப்பின்படி நான் அறிந்த வரையில் இந்த நூல் மாற்றுக் கருத்துகளும் சிந்தனைகளும் கொண்ட இயற்கை விவசாய அணிகளை ஒருமுகப்படுத்தியுள்ளது. நாம் வாழும் இந்த உலகத்தில் நல்ல கருத்துகளைக் கூறும் தலைவர்களுக்கும் அணிகளுக்கும் பஞ்சமே இல்லை. ஒப்பற்ற ஒரே லட்சியத்தை நோக்கி, இணையாத இரு கோடுகளாக இயக்கங்கள் செல்வதைக் கவனிக்க முடிகிறது. ஒன்றாக இயங்கத் தயக்கம் காட்டுவதும் புரிகிறது. ஒருங்கிணைந்து செயலாற்றி ஒரு வலைப்பின்னலை உருவாக்கி சாதனை செய்வது அவசியம். இயற்கை விவசாயத்தில் மாறுபட்ட சிந்தனையுள்ளவர்களை ஒருங்கிணைத்துச் செல்ல இந்த நூல் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நூல் காலத்தால் அழியாத ஒரு கருத்துப் பெட்டகமாகவும் விளங்குகிறது. இயற்கை விவசாயத்திற்குப் பாடுபட்டு வரும் முன்னோடிகளுக்கும் ஒப்புதலை இந்த நூல் வழங்குவதும் ஒரு சிறப்பு. “
“ ஸ்பைசஸ் இந்தியா’ மாத இதழ் ஆசிரியரும், மைய அரசு அலுவலருமான ஸ்ரீகண்டன் நம்பி காந்திகிராமம் -கிராமியப் பல்கலைக் கழக மாணவர். தமிழில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். தமிழறியாத மேலிட-அதிகாரிகள் கவனத்திற்காக ஆங்கிலத்தில் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார். இவருடைய ஸ்பைசஸ் இந்தியாவில் விருட்சாயுர்வேதம், காஷ்யப கிருஷி சூக்தம் என்ற எனது தமிழாக்கம் தொடராக வெளியிடப்பட்டன. ஸ்ரீகண்டன் தம்பிக்கு இயற்கை விவசாயத்தில் தணியாத ஆர்வம் உண்டு. சத்தியமங்களம் எஸ். ஆர். சுந்தரராமனுடைய இயக்கத்திற்கும் நிதி வழங்கியவர். சுந்தர ராமன் இயற்கை வழி மஞ்சள் சாகுபடியில் வல்லவர். மஞ்சள் முக்கியமான ஸ்பைஸ் ஆயிற்றே! எஸ். ஆர். எஸ் அவர்களின் இயற்கை விவசாயத் தொழில் நுட்பக் கட்டுரைகள் தொடர்ந்து ”ஸ்பைசஸ் இந்தியா” இதழில் வெளி வந்துள்ளன.
எனது ‘வாழ்வியல் ரகசியங்கள்’ நூலின் உள்ளடக்கம் எல்லாம் அதிக பட்சம் முன்னோடிகளின் கருத்துகளுக்கே முதலிடம் என்றாலும் முகமனாக முதல் இருபது பக்கங்களில் முன்னோடிகள் பலரின் உழவியல் நுட்பங்களைத்தொகுத்து வழங்கப்பட்ட பின்னர், சாதனையாளர்களை மண்டலவாரியாக பகுத்து நோக்கப்பட்டுள்ளது. தொண்டை மண்டலம் (வட தமிழ்நாடு), பெரிய நிலப்பரப்பு என்பதால் 105 முன்னோடிகள அடையாளமாயுள்ளனர். சோழ மண்டலத்தில் 62 முன்னோடிகளும், பாண்டிய மண்டலத்தில் 63 முன்னோடிகளும், கொங்குநாட்டில் 73 முன்னோடிகளும் தவிர பிற மாநிலங்களில் 6 முன்னோடிகள் பற்றிய குறிப்புகள் உண்டு.
பாண்டிய மண்டலத்தில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவின் பணி சிறப்பிடம் பெற்றுள்ளது. கொங்கு மண்டலம் பற்றிப் பேசும்போது பலரும் மறந்துவிட்ட ஒரு விஞ்ஞான மேதை சர். டி. எஸ். வெங்கடராமன் நினைவு கூரப்பட்டுள்ளார். 1912 இல் இவர் கோவை கரும்பு இனப்பெருக்க ஆய்வு மையத்தில் பணி புரிந்து ஆலைக் கரும்பைக் கண்டு பிடித்தவர். நாணலுடன், மூங்கில், செங்கரும்பை ஒட்டுக் கட்டி கண்டுபிடித்த கோ.205 கோ. 285ரகங்கள் உலகமெங்கும் பரவின. ஆறாவது ஜார்ஜ் மன்னரால் ‘கரும்பு மந்திரவாதி’ (Wizard of Sugarcane) என்று புகழப்பட்டவர். இவருடைய படத்துடன் துண்டுச் செய்தி உண்டு. சோழ மண்டலத்தில் சூரியநாராயணபுரத்தில் மறைந்த பொறியியல் மேதை ஹெச். வேங்கடகிருஷ்ண ஐயர் பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
தமிழ் நாட்டில் முதல் இயற்கை அங்காடியைச் சென்னையில் உருவாக்கியவர்களான P.B.முகுந்தன், P.B. முரளி- பற்றிய குறிப்புகள் உண்டு. இவர்கள் இருவரும் பிரிட்டிஷ் ஆட்சியின்போது புகழ் பெற்ற டைகர் வரதாச்சாரியின் பேரப் பிள்ளைகள்!
தமிழ் நாட்டில் இயற்கை விவசாயத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ள புளியங்குடி அந்தோணிசாமி இந்த நூலில் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி விரிவாகத் தனியே கவனிக்க உள்ளோம். புளியங்குடியில் எல்லாருக்கும் குரு. அண்ணாச்சி என்ற புகழுடைய கோமதிநாயகம், தான் தொடங்கிய விவசாய சேவா சங்கம் மூலம் இயற்கை விவசாயத்தைப் பரப்பியவர். இப்போது இவரும் இயற்கை வழி நஞ்சில்லா உணவு அங்காடியை நடத்தி வருகிறார். இவர் மிகவும் முதியவராகி விட்டதால், தன் புதல்வர்களை இயற்கை வழி விவசாயத்திற்கு அர்ப்பணித்து விட்டார். இவரைப் பற்றிய குறிப்பும் உண்டு. இப்படிப் பல நோக்கு சிந்தனையாளர்கள், வழி காட்டும் இயற்கை விவசாய முன்னோடிகளின் குறிப்புகள் அடங்கிய இந்த நூலை வெளியிட்ட நிறைவு எனக்கு உண்டு. எனது நீண்ட நாள் கனவு க்ளோட் ஆல்வரெஸைப் பின்பற்றி அதுபோல் ஒன்றைத் தமிழில் வெளியிடுவதுதான். இனி வழிகாட்டும் முன்னோடிகளில் சிறப்பான சாதனையாளர்களைப் பற்றி அடுத்த இதழில் கவனிக்கலாம்
———————————–
குறிப்பு: கிளோட் ஆல்வரெஸ் வெளியிட்டுள்ள இயற்கை விவசாயம் தொகுப்பின் ஆங்கில நூல்களைப் பெற இணைய தளம் : http://goafoundation.org/ . மின்னஞ்சல் முகவரி: oib@sancharnet.in | otherindiabookstore@gmail.com
(தொடரும்)
Dear sir,
Is the book still available?
S.Selvaraj