பாட்டாளிகளின் அரண்மனை – ஆந்தனி மார்ரா

தமிழாக்கம்: மைத்ரேயன்
[நாரேடிவ் மாகஸீனிலிருந்து]
கண் பார்வை உள்ள நீங்களெல்லாம் எப்போதுமே பொறுமையற்றவர்கள்.
-டான்யெல் ஆலர்கோன்

‘ஸெர்கே ஃப்யோடொரவிச், இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கா?’ என் அப்பா கேட்டார். எனக்கு அன்றைக்குத்தான் லெனின்க்ராட் ராணுவ மாவட்டத் தலைமையகத்திலிருந்து ராணுவத்தில் கட்டாயப் பணிக்குச் சேரச் சொல்லிக் கடிதம் வந்திருந்தது. அவர் அறை வாயிலில் நின்றார், சில கிராம்கள் ஹெரோயின் துகள் இருந்த ஒரு காகித மடிப்பைக் கையில் வைத்திருந்து நீட்டிக் கேட்டார். என் படுக்கையறைத் தரையில் நான் குறுகிச் சரிந்திருந்தேன், என் தோளெலும்புகள் சுவற்றிலிருந்து உரிந்திருந்த பெயிண்ட் துகள்களைப் பிய்த்துக் கொண்டிருந்தன.

“மிச்சம் ஏதாவது இருக்கா?” அவர் மறுபடியும் கேட்டார். அவர் கஷ்டப்பட்டு மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். உரக்கக் கத்தியதால் பாதி, மீதம் அவர் முப்பது வருடங்களாக தினம் மூன்று பெட்டி சிகரெட்களைப் பிடித்ததால் இருக்கும். நான் இன்னும் கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கவில்லை. இன்னும் இருக்கும் என்றுதான் எதிர்பார்த்தேன், ஆனால் எனக்கு அத்தனை நம்பிக்கை இல்லை. என் துணியலமாரியின் இழுப்பறைகளைத் திறந்து போட்டிருந்தார். என் துணிகளெல்லாம் ஒரு குவியலாகத் தரையில் கிடந்தன. படுக்கை மெத்தைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருந்தார், படுக்கை விரிப்புத் துணிகளைக் கட்டில் கம்பங்களில் தொங்க விட்டிருந்தார், என் இசைக் கலப்பு ஒலிநாடாப் பெட்டிகளைத் தன் காலடியில் நொறுக்கியிருந்தார், அறை மூலை மோட்டு வளைவில் சிலந்தி வலைகளை அப்படியே தொங்கிக் கொண்டிருக்க விட்டிருந்தார். எனக்கு ஒன்பது வயதிருந்த போது அவர் சிறைக்குப் போயிருந்தார், நான்கு வருடங்கள் முன்புதான் திரும்பினார்.

“இன்னும் மிச்சம் ஏதும் இருக்கா?” என்னுடைய மௌனத்தால் தோற்கடிக்கப்பட்டு, அவர் குரல் மென்மையாகி இருந்தது. ஒரு ஆடும் நாற்காலியில் அமர்ந்திருந்தவர், முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டிருந்தார். காற்றுப் போன பலூனைப் போல, அவர் முகப் பகுதிகள் சிறிதாகி தொங்கின.

“எதோட மிச்சமிருக்காங்கிறீங்க?” நான் கேட்டேன்.

“இன்னும் இதோடது.” அவர் காகித மடிப்பைப் பிரித்தார்.

“அது பழுப்புச் சர்க்கரை. டீக்குப் போட.”

“குதிரை விட்டை. டீயில சர்க்கரை போட உனக்கு ஸ்பூன்தான் வேணும். இஞ்செக்‌ஷன் போடற ஊசி இல்லை.”

என்னால் அவருடைய வாதத்தை மறுக்க முடியவில்லை, அதனால் நான் மிச்சம் எல்லாவற்றையும் மறுத்தேன். என் மறுப்புகளையெல்லாம் அவர் புறம் தள்ளி விட்டார்.

“உனக்கு வைரஸ் இருக்கா?” கேள்வியில் ஒரு அவசரத் தொனியோடு கேட்டார்.

“இல்லை.” முழு நம்பிக்கையோடு பதில் சொன்னேன். மூன்றே நண்பர்களோடுதான் நான் ஊசியைப் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

எழுந்து, ஆடி அசைந்தபடி வாயிலை நோக்கிப் போனார், அவருடைய பெரிய தொந்தி அவருக்கு முன்னே போயிற்று. “செர்யோஷா,” திரும்பிப் பார்க்காமல் சொன்னார், ” ராணுவம் உன்னை எடுத்துக்கிற வரைக்கும், நீ வேலை செஞ்சுதான் ஒவ்வொரு நாளையும் கழிக்கப் போறெ.”

அடுத்த நாள் காலையில், என் அப்பாவின் பின்னே சென்று, ஒரு அடுக்ககத்தின் மேல்தளத்தை அடைந்தேன். அடுக்ககம் 82 இன் உலோகக் கதவு பூராவும் ஒரு வெட்டுப்பிளவு ஓடியது. “அசிங்கம்,” என்று முனகிய என் அப்பா கதவைத் தட்டினார். “உலோகத்தை மிச்சம் செய்யணும்னு, பழைய தகரத்திலிருந்து புதுக் கதவுகளைச் செய்யுறாங்க, இதால திருட்டுப் பசங்க கிட்டெ தகரடப்பாவைத் திறக்கற தகடு இருந்தாப் போதும் இந்தக் கதவைப் பேர்த்துகிட்டு உள்ளே போயிடறாங்க.” அடுத்தது என்ன சொல்லப் போகிறாரென்று எனக்குத் தெரிந்திருந்தது. ஒரு பெருமூச்சைப் போல, இக்கால ரஷ்யாவின் அவலம் குறித்த என் அப்பாவின் எல்லாப் புலம்பல்களும் அதில்தான் முடியும். “பிரெஷ்னேவ் இல்லையேன்னு இருக்கு எனக்கு.”

wheel_Chair_Disabled_house_War_Wound_Empty_Desolate_Home_Poor

இரண்டு கதவுகள் திறந்தன, வெளிக்கதவு பழைய தகரங்களைத் திருப்பிப் பயன்படுத்திச் செய்தது, உள்கதவு மரத்தாலானது, அப்புறம் நான் கால்கள் இல்லாத அந்த மனிதனைப் பார்த்தேன். வயது முப்பதுகளின் நடுவில் இருக்கும். சுத்தமான சவரம் செய்திருந்தார். அவருடைய தலைமுடியில் கோளுருண்டைத் தாங்கியைப் போல நிறைய எண்ணெய் தடவப்பட்டிருந்தது. மலிவான உக்ரைன் புகையிலையும், தாவர வனஸ்பதியும் கலந்த வாடை அவரிடம் வீசியது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். இரண்டு தோல் துண்டுகள் ரப்பர் சக்கரங்களின் நடுவில் இழுத்துக் கட்டப்பட்டிருந்தன, மின்னும் உலோகம், என்னென்னவோ விசைகளும், மாற்றி அமைக்க வசதிகளும் இருந்தன. அந்தக் கட்டிடத்தில் இருப்பதிலேயே மிக முன்னேறிய வாகனம் அவரிடம்தான் இருந்தது என்று தோன்றியது.

“இவன் என் மகன், செர்கே ஃபெடெரோவிச், ஆனா நீங்க வேணும்னா அவனை செர்யோஷான்னு கூப்பிடலாம்,” என் அப்பா சொன்னார். பிறகு அந்தக் காலில்லாத மனிதரை நோக்கிச் சைகை செய்தார். “இவர்தான் கிரில் இவானோவிச்.”

“ஜூனியர் சார்ஜெண்ட் கிரில் இவானோவிச்,” காலில்லாதவர் திருத்தினார். நான் நீட்டிய கையை அவர் ஏற்கவில்லை. ஒரு கணம் அவமானமாக உணர்ந்தேன், அப்புறம் அதைப் பொருட்படுத்தாமல் இருந்தேன். கால்களில்லாத ஒரு மனிதன், தன்னிடம் எஞ்சிய உறுப்புகளை யாரிடம் கொடுப்பது என்பதில் கவனமாகத்தானே இருக்க வேண்டும்.
என் அப்பா கிரில்லோடு பேசச் சமையலறைக்குப் போனார். நான் அந்த அடுக்ககத்தை நோட்டம் விட்டேன்.

சுவரின் அடிக்கட்டைகளருகே நெடுகவும், நீர் நிரம்பிய பெரிய கண்ணாடி ஜாடிகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் ஒவ்வொன்றின் அடியிலும் ஒரு அங்குலத்துக்கு துரு மேகங்களாய் மிதந்தது. எங்களுக்குத் தெரியாதது ஏதோ இந்த காலற்ற மனிதனுக்குத் தெரிந்திருந்ததா? கோடைக்காலத்து நீர்த்தட்டுப்பாடு துவங்க இன்னும் ஒரு மாதமாவது இருந்தது. எனக்குத் தாகமாக இருந்ததால், ஒரு கையை உள்ளே விட்டு ஒரு வாய் குடிக்கலாம் போல இருந்தது. ஆனால் காலில்லாத மனிதனின் குளியலறையில் இருக்கும் எதையும் குடிப்பது அத்தனை புத்தியுள்ள செயலில்லை என்றும் தோன்றியது.

எல்லாரும் புழங்கும் அறையில் ஒரு புத்தக அலமாரி நின்றது.Russia_Fyodor._Dostoevski__Brothers_Karmazov_Bratya_Karamazovy.Books பழசாகி மஞ்சளாகிப் போன செஞ்சேனையின் களக் கையேடுகளும், அரசாங்கத் தணிக்கைக்குள்ளான பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவல்களும் அதில் நிறைந்திருந்தன, மேற்கிலிருந்து வரும் சுற்றுப் பயணிகளுக்கு விற்பதற்காக பனிக்கால அரண்மனையில் வைத்திருக்கும் கச்சடாவைப் போல இருந்தன அவை. அரசுத் தணிக்கைக்குள்ளான காரமஸோவ் சகோதரர்கள் புத்தகப் பிரதியொன்றை எடுத்தேன். நூற்று முப்பது பக்கங்கள் நீளமாக இருந்தது, லெனின், குரூஷ்சாவ் ஆகியோரின் பாராட்டுக் குறிப்புகள் இருந்தன. இருபது வருடம் முன்னதாகப் பிறந்திருந்தேனானால் இந்த ஒல்லியான புத்தகத்தைப் படிக்கச் சொல்லி எனக்கு விதிக்கப்பட்டிருக்கும், நானும் அதைப் படித்து முடித்திருப்பேன். அதைப் படித்து முடித்திருந்தால், கூட்டமைப்பான மாநிலங்களின் இலக்கியப் பரீட்சையில் நான் தேறி இருப்பேன். ஆனால் நான் 1989 இல் பிறந்திருந்தேன், எனக்கு சிறிதும் வெட்டப்படாத, குறுக்கப்படாத கடும் சோதனையான காரமஸோவ்கள் பற்றிய முழு புத்தகமும் படிக்க விதிக்கப்பட்டிருந்தது. அந்த நாவலின் தொள்ளாயிரம் பக்கங்களில் முதல் இருநூறு பக்கங்களைத்தான் நான் படித்திருந்தேன், நான் அந்தப் பரீட்சையில் தேறவில்லை, புனித பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம் என்னை ஏற்கவில்லை. ராணுவம் ஏற்க விரும்பியது.

காஃபி மேஜையில் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது, கருப்பு உலோகம் மெருகேற்றப்பட்டு கதகதப்பாக ஜ்வலித்தது. அதை எடுத்தேன், என் கட்டைவிரலை அதன் பிடிமீது தேய்த்தேன். செசென்யாவில் இதே நேரம், என் வயதொத்த முஸ்லிம் ஆணொருவன் இதே போல முதல் தடவையாக ஒரு துப்பாக்கியை ஏந்தியிருக்கின்றானோ என்று யோசித்தேன்.

“அதைக் கீழே வை.”

வாயில் வழியே கிரில் சக்கரங்களை உருட்டியபடி வந்தார், என் அப்பா பின்னே வந்தார்.

“மீதி இருக்கிற உங்க கால்களை யாராவது திருடிக்கிட்டுப் போய்டுவாங்கன்னு கவலைப்படறீங்களா?” நான் கேட்டேன், அவருடைய கால்களின் மீதத் துண்டுகளை நோக்கித் தலையசைத்தபடி. கிரில் சிரிக்கவில்லை, நான் துப்பாக்கியை மேஜை மீது வைத்தேன்.

“உனக்கு இப்ப வேலை கிடைச்சிருக்கு.” அப்பா சொன்னார்.

“யார் கிட்ட?”

“கிரில் இவானோவிச் கிட்ட.”

“ஜுனியர் சார்ஜெண்ட் கிரில் இவானோவிச்,” காலில்லாத மனிதர் திருத்தினார்.

“ஆமாம், நீ இனிமே ஜூனியர் சார்ஜெண்ட் கிட்டெ வேலை செய்வே.”

“விளையாடறீங்களா,” நான் சொன்னேன். என் அப்பா ஒருபோதும் விளையாடுவதில்லை.

“நாளைக்குக் காலைலருந்து,” அவர் சொன்னார், ஏதோ திருப்தியாகத் தெரிந்தார். “நீ விடிகாலைல வெளில வர முதல் பறவை போல இருக்கப் போறெ”

நான் முதல் புழு போல உணர்ந்தேன். என்னுள்ளே ஒரு சின்னப் பகுதி, ஹெரோயினைத் தொட்டுப் பார்க்காம இருந்திருக்கலாம் என்று சொன்னது. என்னோட மீதி பாகமெல்லாம், போதையோட உச்சத்துக்கு உடனே போகணும்னு பறந்தது.

ராணுவப் பணியிலிருந்து விடுவிப்பை, பல்கலைக் கழகத்துக்குப் போகிறவர்களுக்கோ, ஜெயிலுக்குப் போனவர்களுக்கோ மட்டுமே கொடுப்பார்கள். என் நண்பர்களில் சிலருக்கு வேண்டும் அளவு மதிப்பெண்கள் இருந்தாலும், பல்கலைக்கு நுழைவதற்குக் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணத்தைக் கொடுக்க அவர்களிடம் வசதி இல்லை, வேறென்ன செய்வது, அதனால் நாங்களெல்லாம் ஜெயிலுக்குப் போகத் திட்டமிட்டிருந்தொம் அதற்கு உயர்கல்வி என்று நாங்கள் பெயரிட்டோம். உயர்நிலைப் பள்ளியின் கடைசி வசந்த காலத்தில், வகுப்புகளுக்குப் போகாமல் டாவ்ரைட் தோட்டத்தில் பியர் குடித்தோம். சாம்பல் நிறப் பனிக் குவியலில் இருந்த இடைவெளிகளில் உலர்ந்த புல் தெரியும். சிறு வட்டமாகக் கூடி நின்றோம். மலிவான சிகரெட்டுகளைப் பிடித்தோம், அவை வேகமாக எரிந்து போயின, ஏதோ உலர்ந்த இலைகளைக் கொளுத்தின மாதிரி கடுப்பாக இருந்தன.

Russian_Military_War_Chechnya_Army_Youth_USSR

“ஒரு பயிற்சி சார்ஜெண்ட் என்ன செய்ய வேண்டுமென்று என்னிடம் சொல்வதை நான் ஒரு போதும் ஏற்க முடியாது,” வாலெரி சொன்னான். தலையிலிருந்து வெள்ளையான துகள்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தான். அவை ஒட்டடையா, பொடுதா என்று எனக்குச் சொல்ல முடியவில்லை.

“போன வருஷம் செசென்யாவைச் சேருமுன்பே இருநூறு பேர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள், டெடொவ்ஷ்சினா இருக்கே, அது ஜோக் இல்லே.”

“டெடோவ்ஷ்சினாவை விடு. ரெண்டு வருஷம் உன் உள்ளங்கையோடத்தான் படுத்துக்கணும், அதுதான் கொடுமை.”

“அதுனாலத்தான் நான் ஜெயில்ல இருக்கறது எவ்வளவோ சுலபம்ங்கிறேன். உள்ளே தெரிஞ்ச ஆளுங்க இருந்தா பொண்ணுங்களைக் கூட வரவழைக்கலாம்.”

“அந்தப் பெரிய புஸ்ஸி ஏன் இன்னும் பியர்களைக் கொண்டு வரல்லே?” எங்கள் பெயர்கள் அலெக்ஸாண்டர் கார்லமொவ், வாலெரி லெபெடெவ், இவான் வ்ளாடிம், அப்புறம் செர்கே ட்ரெடியாக், ஆனால் நாங்கள் கூப்பிட்டுக் கொள்கிற பெயர்களென்னவோ, டோனி சொப்ரானோ, ஸில்வியா டாண்டெ, பெரிய புஸ்ஸி பான்பென்ஸியெரோ, க்ரிஸ்தோஃபர் மொல்டிஸாண்டி, மேலும் ஏபாக். எச் பி ஓ, மேலும் ஏஅண்ட் ஈ தொலைக்காட்சி சானல்களிலிருந்து திருடிய குற்றப் படங்களைப் பார்த்தோம், ராப் இசையைக் கேட்டோம், வெறும் விதையும் குச்சியுமா இருந்த கஞ்சாவைப் புகைத்தோம். எங்கள் பெற்றோர்கள் பீட்டில்ஸிடமிருந்து இங்கிலீஷ் கற்றுக் கொண்டார்கள், நாங்கள் பிக்கீ இடமிருந்து கற்றோம்.

இன்னொரு சாயங்காலம், இன்னொரு பூங்கா, இதே பேச்சு மறுபடி எழுந்தது.

“இந்தப் போர் முடியற வரை மேல்படிப்புக்குப் போறதுதான் உருப்படியான தந்திரம்.”

“அட, அதை எப்பிடிச் செய்யறதாம்?”

“சுலபம்.” நான் சொன்னேன். “இந்தப் போர் எத்தனை வருஷம் நடக்குமுன்னு ஒரு கணக்குப் பண்ணனும், நாம எத்தனை வருஷம் ஜெயிலுக்குப் போகணும்னு தெரிஞ்சுக்கனும், அப்புறம் அந்த தண்டனைக்குப் பொருத்தமான குற்றம் எதுன்னு கண்டு பிடிக்கணும்.”

எங்களில் யாரும் ரஷ்ய நாகரீகம் என்ற பாடத்து வகுப்பில் தேறவில்லை, ஆனால் எங்கள் எதிர்காலத்தை வரலாற்றில் முன்னேற்றம் ஏற்படும் என்ற கருத்தோடு பிணைத்தோம். ஊகப் பந்தயங்கள் கட்டினோம், செசென்யாவில் போர் ஒரு வருடத்திலோ, இரண்டு வருடங்களிலோ முடிந்து விடும் என்று. ஒஸேஷியன் மீதோ, ஒரு ஆர்மீனியன் மீதோ, யூதன் மீதோ தாக்குதல் நடத்தினால் ஒரு வருடம். மூன்று கிராம்களுக்கு மேல் போதைப் பொருள் வைத்திருந்தால் இரண்டு வருடங்கள். ரஷ்யப் பாரம்பரியம் உள்ளவரைத் தாக்கினால் ஐந்து வருடங்கள். நாங்கள் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களாக விரும்பினோம், ஆனால் எங்கள் அப்பாக்கள் எல்லாம் தோற்றுப் போனவர்களாகத்தான் இருந்தனர். அவர்கள் உரிமம் இல்லாது வாடகைக் கார்களை ஓட்டினர், பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் ஊற்றினர், தரைகளைத் துடைத்தனர். கடந்த காலத்தின் எச்ச சொச்சங்களாக இருந்தனர், ஆனால் பணத்தைப் பிடுங்கிக் கொள்வதன் மூலம் எப்படிப் பணம் பண்ணுவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. எங்களுக்கு மேல்படிப்பு தேவைப்பட்டது.

எங்கள் எல்லாருக்கும் ஒரே நாளில் ராணுவத்தில் சேரச்சொல்லிக் கடிதங்கள் வந்தன, நாங்கள் பூங்காவுக்கு அவற்றைக் கொண்டு வந்தோம். பழுப்பு மணிலா உறை. எல்லா அரசாங்கக் கடிதங்களுக்குமுரிய அதே வடிவம், அளவுகள். அதை நான் திறக்குமுன்பே அதில் ராணுவப் பணிக்குக் கட்டாயப்படுத்தும் அறிவிப்பு இருக்குமென்று எனக்குத் தெரியும். என் அப்பா சிறையிலிருந்து எனக்கு எழுதிய கடிதங்களை விட்டு விட்டுப் பார்த்தால், அந்நாள் வரை எனக்கு வந்த முதல் கடிதமே அதுதான்.

அன்புள்ள செர்கே ஃபெடரோவிச், இந்தக் கடிதம் உமக்குத் தெரிவிப்பது…

கடிதத்தை என் நண்பர்களின் கடிதங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். எங்கள் பெயர்களைத் தவிர அக்கடிதங்கள் ஒரேபோல இருந்தன. நாங்கள் எல்லாரும், ஆகஸ்டு மாதம் கடைசி வெள்ளிக் கிழமை அன்று, லெனின்க்ராட் ஓப்லாஸ்ட்டின் (மாநிலத்தின்) ராணுவ மாவட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். நாங்கள் எல்லாரும் செசென்யாவில் செத்துப் போனால், எங்கள் குடும்பங்கள் இதே போல அச்சாக ஒரேபோல இருக்கும் கடிதங்களை பழுப்பு நிற மணிலா உறைகளில் பெறுவார்களா என்று நான் யோசித்தேன்.

“நான் ஒரு மதுக் கடையைக் கொள்ளை அடிக்கப் போகிறேன்.” அலெக்ஸாண்டர் அறிவித்தான், ஒரு சிகரெட்டை மூன்றே இழுப்பில் சாகடித்தான். “மூன்று வருடங்கள், அது போதும் என்று நினைக்கிறேன்.”

“ரொம்ப அதிகம், ஸில்வியோ.” இவான் சொன்னான். “அங்கே இருக்கிற புது அதிபர் அந்த வேலைக்கு எடுக்கப்படுமுன், ஒரு செக்ஸ்-டேப் ஒன்றில் பங்கெடுத்திருக்கிறாராம். அவரைப் பத்திப் பெரிசாப் பேசப்படுறவர். நான் ஆறுமாசம்தான் உள்ளே போகப் போகிறேன். ஒரு சுற்றுலாப் பயணியிடம் திருடுவேன்.”

“நான்கு வருடங்கள்,” தன் தலையில் இருந்து பொறுக்கியபடியே வாலெரி சொன்னான். அந்த வெள்ளைத் தூள்கள் அவன் தலையிலிருந்தனவே, அவை பொடுதும் இல்லை, துணியிலிருக்கும் பஞ்சும் இல்லை, பேன்கள். “நான் ஒரு காரைத் திருடப் போகிறேன்.”

“அதுக்கு உனக்கு ஒரு வருடம்தான் கிடைக்கும்,” இவான் மறுப்பு சொன்னான்.

“ஒரு லாடாவையோ, வோல்காவையோ திருடினால் ஒரு வருடம். ஆனால் பிஎம்டபிள்யுவையோ, மெர்ஸீடிஸையோ திருடினால்? அது நாலு வருஷம், ஈஸியா.”

அவர்கள் என்னைப் பார்த்தார்கள். “எத்தனை வருடமுன்னு நான் இன்னும் யோசிச்சு வைக்கல்லை,” நான் சொன்னேன். “கவலைப்படாதீங்க, நானும் உள்ளேதான் . முழுசா உள்ளே வந்துடுவேன்.”

Prison_Jail_Arrest_Theft_Cell

நாங்கள் முட்டிகளை இடித்துக் கொண்டோம், பிறகு லெனினா சதுக்கத்துக்குப் போய் அறுநூறு ரூபிள் விலைக்கு ஒரு ஹெரொயின் பொட்டலத்தை வாங்கப் போனோம். நேவா ஆறில் தண்ணீர் மின்னியது, எண்ணெய்ப் படலத்து வானவிற்கள் தண்ணீர் அலைஎழுச்சிகளில் வளைவாக மின்னின. ரப்பர் ட்யூப் படகுகளில் சுற்றுலாப் பயணிகள் கரைக்கு வந்த வண்ணம் இருந்தனர், ஊ ஆ என்று குரலெழுப்பினர், கரைகளில் இருந்த புரட்சிக்கு முந்தைய காலத்துக் கட்டிடங்கள் ஏதோ அபூர்வப் பறவைகள் என்பது போல எல்லாரும் தங்கள் காமிராக்களால் படமெடுத்துத் தள்ளினர். அப்படியொருஅவசரம் ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த இளஞ்சிவப்பு, ஊதா நிறங்களிலிருந்த பவுடர் பஃப் போன்ற கட்டிடங்கள் எங்கேயும் பறந்து போய்விடப் போவதில்லை. ஆர்ஸெனல்நயாவுக்குள் திரும்பி, அங்கிருந்து கோமோஸோமோலாவில் திரும்பினோம். தூரத்தில் தெரிந்த க்ரெஸ்டி சிறைச்சாலை பார்ப்பதற்கு அரண்மனை போல இருந்தது. பெரும் சிவப்புச் செங்கற்சுவர்கள், கூம்புகளும், வெங்காய வடிவில் கும்மட்டங்களும். இலக்கிய வகுப்பில் ஒரு தடவை நாங்கள் சிறையைப் பற்றிய ஆன்னா அகமதோவாவின் கவிதை ஒன்றைப் படித்திருந்தோம். அந்தக் கவிதையின் தோற்றுவாய் பற்றி எங்கள் ஆசிரியர் எங்களுக்குச் சொல்லி இருந்தார். அக்மதோவாவின் மகன் பதினேழு மாதங்களுக்குச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான், நூற்றுக் கணக்கான பெண்களோடு அவர் அந்த பெரும் செங்கற்சுவர்களுக்கு வெளியே காத்திருந்தாராம், என்ன குற்றச்சாட்டு, தீர்ப்பு என்ன, தண்டனை என்ன என்று அறியத்தான். “இதை வருணிப்பீர்களா?” என்று நீலமாகி விட்ட உதடுகளோடிருந்த ஒரு பெண் அவரிடம் ரகசியமாகக் கேட்கவும், அவர் “ஆம், என்னால் முடியும்.” என்று பதிலளித்தாராம்.

இப்போதும், அந்த வாயிற்கதவுகளுக்கு வெளியே ஒரு வரிசையில் பெண்கள் காத்திருந்தனர், இன்னும் வழக்கு விசாரணைக்கு வராத கைதிகளின் மனைவிகளும், அம்மாக்களும். நாங்கள் அவர்களைப் பார்த்துக் கேலியாகக் கூவினோம், விஸிலடித்தோம், எங்களோடு சேர்ந்து ஒரு பார்ட்டிக்கு வருவார்களா என்று கேட்டோம். எழுபது வருடங்கள் முன்பு இவர்கள் நிலை எத்தனை சோகமானது என்று நினைத்திருப்போம். இந்த நூற்றாண்டிலோ, இவர்கள் தனியாக இருக்கிறார்கள், கிடைப்பார்கள் என்று நினைத்தோம். எங்களை அவர்கள் சிறிதும் சட்டை செய்யவில்லை, நாங்கள் லெனினா சதுக்கத்தை நோக்கி நடந்தோம்.

“நான் ஒண்ணும் பயப்படல்லை” நான் சொன்னேன், வாலெரியும், இவானும்,அலெக்ஸாண்டரும் ஒத்துப் பாடினார்கள், அவர்களும் பயப்படவில்லை என்று. அவர்கள் க்ரெஸ்டியையா, செசென்யாவையா எதைப் பற்றிச் சொன்னார்கள் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. லெனினின் சிலையிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி, என் நண்பர்களிடமிருந்து கசங்கிய நோட்டுகளை வாங்கிக் கொண்டு, அங்கிருந்த கூட்டுச் சமூக வீட்டுத் தொகுப்பில் மூன்றாவது மாடியிலிருந்த ஒரு அடுக்ககத்திலிருந்து ஹெரொயினைப் பெற்று வரப் போனேன்.

ப்ராவ்தாவிலோ, நொவயா கெஜட்டிலோ வரிவிளம்பரங்களில் காணப்படும் வேலைகளில் எதையும் போல இருக்கவில்லை அந்த வேலை. அந்த விளம்பரங்கள், வியாபாரத்தில் பட்டம் வாங்கியவரும், பல மொழிகளைப் பேசுவோருமான ஆண்களையும், மேற்கு யூரோப்பில் நாட்டியக்காரிகளாக வேலை செய்ய அழகான பெண்களையும்தான் கேட்டன. ஜகடா அல்லது டெகடென்ஸ் இரவு விடுதிகளில் வாயில் கட்டுப்பாட்டைத் தாண்டி உள்ளே அனுப்புமளவு என்னிடம் ஒரு கவர்ச்சியும் இல்லை, எந்த அந்தஸ்தும் இல்லை, சிறிதும் பளபளப்பும் இல்லை. முதல் நாள், படுக்கையை விட்டு என் புட்டத்தை இழுத்துக் கொண்டு எழும்பி, காலை நான்கு மணிக்கு கிரில்லுக்கு உடுப்புகளை அணிந்து கொள்ள உதவப் போனேன். அவருடைய ராணுவச் சீருடையின் சட்டையும், பாண்டும் ஒரே வகையான சொரசொரப்பான கம்பளித் துணியாலேயே ஆக்கப்பட்டிருந்தன என்பது போலத் தெரிந்தது.

“நாசமாப் போக! சாதாரணமா எப்பிடித்தான் நீங்க உடுப்பை எல்லாம் போட்டுப்பீங்க?” நான் கேட்டேன்.

க்ரில் தோள்களைக் குலுக்கினார், ” நானே போட்டுக்க முடியும். என்ன, நிறைய நேரமாகும்.”

“ஆனா என்ன? சூரிய உதயத்துக்கு அங்கே இருக்கணும்னு உங்களுக்கு ஏதும் ஒப்பந்தம் இருக்கா என்ன?”

அவர் ஒரு புன்சிரிப்பு செய்தார், அவருடைய பற்கள் சமையல் எண்ணெய் நிறத்திலிருந்தன. “நகரத்தோடதான்.”

அவருடைய கால்சராய் தொடை வரை குறைக்கப்பட்டு, ஓரங்கள் மடித்துத் தைக்கப்பட்டிருந்தன, அவருடைய எலும்பு முண்டுகளாலான இடுப்பு வரை கால்சராயை நான் உயர்த்திய பின்னர், கிரில் அந்த திவானில் இருந்த ஒட்டும் நாடாச் (Duck Tape) சுருளைச் சுட்டிக் காட்டினார். “கால் முண்டங்களை நீ அந்த டேப்பால் சுற்றி மூட வேண்டும்.”

“…த்தா, அதெல்லாம் முடியாது.”

“எப்டீன்னு நீ கத்துக்கணும்.”

“உங்களுக்குக் காலுங்கதான் இல்லெ. ரெண்டு கையுமா போயிடுச்சு? நீங்களே நாடாவைச் சுத்திக்குங்க.”

அவர் மறுபடி ஒட்டு நாடாவைச் சுட்டி கையைக் காட்டினார், நான் அதைக் கையிலெடுத்தேன். என் அப்பாவை மறுபடியும் ஏமாற்றமடையச் செய்ய நான் விரும்பவில்லை. இரண்டு நிமிடங்களில் கால் முண்டங்கள் நாடாவால் சுற்றி மூடப்பட்டு விட்டன. கிரில் தலைமுடியில் வனஸ்பதியைத் தடவி வழுக்கலாக்கிக் கொண்டார், அதை ஒரு டஜன் தடவை, அது திருப்திகரமாக அமையும் வரை வாரிக் கொண்டார். கால்வின் க்ளைன் வாசனைத் திரவியத்தின் ஒரு போலித் தயாரிப்பை மேலே ஒரு தடவை விசிறலாய்ப் பூசினார். அது ரம் மதுவுக்கு வாசனை சேர்த்தமாதிரி இருந்தது. கிரிலைச் சக்கர நாற்காலியில் தூக்கி உட்கார வைத்தேன், வெளியிலிருந்த பெரிய அறைக்கு நாற்காலியைத் தள்ளிப் போனேன்.

படிக்கட்டுகளை அடைந்ததும் அவர் சொன்னார், “நானே கீழே இறங்கிடுவேன்.” பக்கத்துக் கைப்பிடிக் கம்பியைக் கையால் பிடித்துக் கொண்டு ஒட்டுப் பலகை (Plywood) ஒன்றைப் பயன்படுத்திப் படிக்கட்டுகளில் சறுக்கி இறங்கினார், கைகள் தோல் கையுறைகளால் பாதுகாக்கப்பட்டிருந்தன. தரைத் தளத்தைச் சென்றடையப் பத்து நிமிடங்களாயின.

“கொஞ்சம் பொறு,” என்றார். அடுக்ககத்தின் முன் கதவுகள் எங்கள் பின்னே அடித்துச் சாத்திக் கொண்டன. “கொஞ்சம் மூச்சு வாங்கிக்கறேன்.”

“நீங்க இருக்கறது ஒரு சக்கர நாற்காலில. மூச்சு விடறது ஒண்ணைத்தானே நீங்க செய்ய முடியும்?”

கிரில் தன் தலையை அசைத்து மறுத்தார், ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டார். ஏதோ சலிப்பானவர் போலத் தெரிந்தார். “நீங்க இருக்கீங்களே, காலு ரெண்டும் இருக்கற ஆசாமிங்க,” என்றவர் மேலும் சொன்னார், ” எப்பவும் ஓடறத்துலெயே குறியா இருக்கீங்க.”

amputee_Disabled_Veteran_war_army_Military_Leg

கிரிலைப் பார்த்து நானும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டேன். வெண்மையான இரவுகள் (பனி பொழியும் இரவுகள் என்று பொருள்- மொழிபெயர்ப்பாளர் குறிப்பு) எப்போதும் சாம்பல் காலைகளில்தான் முடிந்தன. மேகங்கள் சும்மா வானில் உட்கார்ந்திருந்தன, அந்த சோம்பேறிக் குண்டு நாய்ப்பயல்கள். நீஃப்வா ஆற்றின் எதிர்க்கரையில், நகரத்திலிருந்த அனைத்து சாம்ராஜ்ய வெற்றித் தூண்களையும் விட உயரமாக புகைக் கூண்டுகள் நின்றன. தெருவின் எதிர் சாரியில், வெறி நாய்களின் கூட்டமொன்று வீடற்ற ஆளொருவனை அந்தக் காலி மனையூடே துரத்தின. என் பள்ளிப் பாட நூல்கள் சொல்லின, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரைக் கட்டும் பணியில் ஆயிரம் கொத்தடிமைகள் போல உயிரிழந்தனர் என்று. எங்கள் ஆசிரியரோ அது நூறாயிரம் பேராகவே இருக்கும் என்றார். முதல் நாய் அந்த வீடற்றவனை புட்டத்தில் கடித்தது. இந்த நகரம் ஆயிரம் பேரின் உயிருக்குக் கூட லாயக்கற்றது என்று நான் நினைத்தேன்.

“உடனே கிளம்பிப் போயிக்கிட்டே இருக்கணும்னு சொன்னீங்கன்னு நெனெச்சேன்,” நான் சொன்னேன்.

“காலை உணவுங்கறது ஒரு நாளிலே ரொம்ப முக்கியமான சாப்பாடு,” பதில் சொல்கையில் கிரில் தன் சிகரெட்டைப் பார்த்தார். “அதை ருசிச்சு அனுபவிக்கத் தேவையான நேரத்தை நாம எடுத்துக்கறது ரொம்ப அவசியம்.”

ஸ்மொல்னி கான்வெண்டின் நீலமும் வெள்ளையுமான கூம்புகள் எங்கள் பின்னே சிறிதாகிப் போயின, நான் கிரிலை ஷாபாலெமயா உலிட்ஸாவில் தள்ளிக் கொண்டு போனேன். செர்னிஷெவ்ஸ்கொகோ ப்ரொஸ்பெக்ட்டில் இடது பக்கம் திரும்பினோம். சூதாட்டக் கூடங்கள் நியொன் ஒளியை பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரண்மனைகள் மீது வீசின. துருப்பிடித்த சிகரெட் டின்களால் ஆன கிராதிகள் ஊடாக நெருப்புகள் எழுந்தன. ஸூஷி ரெஸ்டாரண்டுகளின், ஐரிஷ் மதுவிடுதிகளின் இருண்ட ஜன்னல்கள், காஃபிக் கடைகள் திறக்கு முன்னர் திறக்கும் மதுபானக் கடைகள், சாயம் தோய்ந்த கண்ணாடிகளோடு ஒரு மெர்ஸீடிஸ் பென்ஸ், தன் இடுப்புத் துப்பாக்கியைப் புருவம் நெறித்து உற்று நோக்கும் ஒரு காரோட்டி, லைசன்ஸ் தகட்டைப் படிக்க முடியாத அளவு கரியழுக்குப் படிந்த லாடா கார்கள். போக்குவரத்தில் இடைவெளி கிட்டுவதற்காக நாங்கள் காத்திருந்தோம். கோடைக்காலத்தில் புனித பீடர்ஸ்பர்க் நகரத்தார் உறங்குவதில்லை.

நாங்கள் செர்னிஷெவ்ஸ்காயா மெட்ரோ நிலையத்தை அடைந்தபோது, “நீ என்னைக் கதவுக்கு மேல் தூக்கிக் கொண்டு போக வேண்டும்.” என்றார் கிரில். இரண்டு டோகன்களை அந்தச் சுழலும் கதவுகளின் உண்டியில் போட்டு விட்டு, கிரில்லை அக்குளில் கை கொடுத்துத் தூக்கினேன். அரை உடம்புதான், இருந்தாலும் ஆள் கனம்.

செய்தித்தாள் விற்பவர்கள் தலைப்புச் செய்திகளைக் கூவினார்கள், நான் சக்கர நாற்காலியைப் பிரித்து மடித்துக் கொண்டிருந்தபோது. சோச்சி 2014 ஒலிம்பிக்ஸுக்குத் தயாராகிறது. க்ரெஸ்டி சிறைச்சாலை விடுதியோடு கேளிக்கை மையமாகப் போகிறது. க்ரோஸ்னியில் தற்கொலைக் குண்டு வெடிப்பில் இருவர் சாவு, இருபத்தி ஆறு பேர் காயமடைந்தனர்.

“சராசரியாக, எஸ்கலேடரில் இறங்கிப் ப்ளாட்ஃபாரத்தை அடைய மூன்றரை நிமிடங்களாகும்,” கிரில் எனக்கு விளக்கினார், நாங்கள் எஸ்கலேட்டர் மூலம் இறங்கிக் கொண்டிருந்தோம். அவர் உட்கார்ந்திருந்தார், நான் நின்றேன். “மெட்ரோவை ஏன் இத்தனை ஆழத்தில் கட்டினாங்கன்னு உனக்குத் தெரியுமா? அணுகுண்டுத் தாக்குதல் நடந்தா இந்தச் சுரங்கங்களைப் புகலிடமாப் பயன்படுத்தலாம்னுட்டுதான்.”

“அணுகுண்டு வெடிப்பால் தாக்கப்படற ஜனங்க, வெறுமனெ கால்களை மட்டும் இழப்பார்களா?” நான் கேட்டேன்.

” எனக்குத் தெரியல்லை.” கிரில் தன் துண்டான கால்களைப் பார்த்தார். “நான் அணுகுண்டு ஏதாலும் தாக்கப்படல்லியே.”

நாங்கள் ப்ளாட்ஃபாரத்தை அடைந்தவுடன் அவர் கைகளில் தோல் உறைகளை மாட்டிக் கொண்டார். கைகளை முஷ்டியாக்கிக் கொண்டு அவற்றின் மீது ஊன்றியபடி பளிங்குக் கல்களாலான தரை மீது தவழ்ந்து போனார்.

“பார்க்க எப்படி இருக்கேன்?” அவர் கேட்டார்.

“குள்ளமா.”

disabled_escalator_amputee_leg_veteran

வேகமாய் அடித்த சூடான காற்று ரயில் வருவதை அறிவித்ததும், கிரில் நான் என்னென்ன செய்ய வேண்டுமென்று கட்டளைகள் இட்டார். அந்த நாடகத்தில் எதுவும் புதிதில்லை. மெட்ரோ ரயிலில் மூன்று நிறுத்தங்கள் போனாலே செச்சென் போரில் முடவரான ஒரு முன்னாள் போர்வீரரை நாம் பார்க்கத் தவற மாட்டோம். அவர்கள் நாட்டுப் பாடல்கள் பாடுவார்கள், ஃபிடில்களை வாசிப்பார்கள். மரப் பலகைகள் மீது அமர்ந்து புஷ்கினின் கவிதைகளை ஒப்பிப்பார்கள். சிலர், உணர்ச்சியில்லாத அவர்களின் கால் கைகளை மாவுருண்டையை வளைப்பது போலப் பலவிதமாக வளைத்தபடி கழைக்கூத்தாட்டங்களை நடத்துவார்கள். சிலர் குடித்தபடி, செசென்யா போரில் நடந்தவை என்று குழறிய குரலில் அத்தனை துயரமான சம்பவங்களைப் பற்றிச் சொல்வார்கள், அவற்றின் அதீதத்திலேயே அவர்கள் சொல்வதில் ஏதும் உண்மை இராது என்று நமக்குத் தெரியும்.

ரயில் ஒரு சிறு ஆறாகப் பயணிகளை வெளிவிட்டது. கிரில் கால்களின் பின்னலூடே உள்ளே நுழைந்தார், நானும் பின் தொடர்ந்தேன். இளைஞர்கள் பெண்களுக்கும், முதியவர்களுக்கும் தங்கள் இருக்கைகளை அளிப்பதில் காட்டிய மரியாதையின் அளவை, வெளியே மேல் தளத்தில் ஒரு போதும் நாம் பார்க்க முடிந்திராது. கதவுகள் மூடின, சக்கரங்கள் தண்டவாளத்தில் ரீங்கரித்தன, கிரில் துவங்கினார். அவர் தேசீய கீதத்தைப் பாடவில்லை, பையிலிருந்து ஒரு ஹார்மோனிகாவை எடுத்து இசைக்கவில்லை, ஏதோ பயங்கரக் கதையைச் சொல்லவில்லை. மூடிய முட்டிகளைக் கொண்டு தவழ்ந்தபடி கூட்டத்தூடே முன்னேறினார், கூட்டம் அவருக்குப் பிளந்து வழி விட்டது. அவர் தலை ஒவ்வொருவர் பார்வையையும் சந்திக்க உயர்ந்தது. அவர் கட்டளைப்படி, நான் சக்கர நாற்காலியை அவருக்குப் பின்னால் தள்ளிக் கொண்டு போனேன், அதிலிருந்த கூடையில் ரூபிள் காசுகள் விழுவதைக் கவனித்தபடி இருந்தேன்.

“அவருக்குக் கொஞ்சம் ரூபிள்கள் கொடு, மாஷா,” முக்கோணத் துணியைத் தலையில் கட்டியிருந்த ஒரு மூதாட்டி தன் தோழியிடம் கிசு கிசுத்தார். ” அந்த ஆள் பாவம், குடிக்கக் கூட இல்லை, தெளிவா இருக்கிறான்.”

“நீங்க ஒரு ஹீரோ,” இஸ்திரி போட்ட கால்சராய் அணிந்த ஒரு நடுவயதுக்காரர் சொன்னார். “உங்க வீட்டை இழப்பதை விடக் கால்களை இழப்பது தேவலைதானே.”

அந்த ரயில் பெட்டியின் முழுத் தூரமும், கிரில் ஏதுமே பேசவில்லை. அவர் பிச்சை கேட்கவில்லை, காலை நேரப் பயணிகள் கொடுத்த நன்கொடைகளுக்கு ஏதும் மறுவினை தெரிவிக்கவில்லை. அவர்களுடைய கால்கள் மேலாகத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தார்.

இரண்டு நிமிடப் பயணத்தில் வந்து விட்ட வொஸ்ஸ்டானியா சதுக்க ரயில்நிலையத்தை அடைந்தோம், அதற்குள் நூற்றி நாற்பது ரூபிள்கள் சேர்ந்திருந்தன. கூடையிலிருந்த நாணயங்களையும், கசங்கிய நோட்டுகளையும் பார்த்தேன். என் அப்பா ஒரு மணி நேரத்தில் சம்பாதித்ததை விட அது கூடுதலான தொகை.

எல்லாவற்றையும் பைக்குள் போட்டுக் கொண்டபடி கிரில் என்னிடம் ரகசியக் குரலில் சொன்னார், ” நீ பணம் பண்றேன்னு அவங்க நினைக்கக் கூடாது.” வோஸ்ஸ்டானியா சதுக்க ரயில் நிலையத்தில் நாங்கள் அடுத்த பெட்டிக்குப் போனோம்.

சிவப்பு, பச்சைப் லைன்களில் ஓடிய ரயில்களில் நண்பகல் வரை நாங்கள் பயணம் செய்தோம். எட்டு மணிக்கு தொள்ளாயிரம் ரூபிள்கள் ஆயிற்று. பதினோரு மணிக்கு ஆயிரத்து எழுநூறு ரூபிள்கள். என் சக பிரஜைகளுக்கு இத்தனை தாராள மனது இருந்ததை நான் இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை. பால்டிஸ்கயாவில் வெளியேறி மேல்தளத்துக்கு வந்தோம், நண்பகல் உணவுக்குத் தெருக் கடை ஒன்றில் சாஸேஜும், க்வாஸ் பியரும் வாங்கிச் சாப்பிட்டோம். கோடைக் காலம் ஒன்றுதான் புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் சகிக்கக் கூடிய பருவ காலம். நீண்ட பகல் நேரங்கள், குட்டைப் பாவாடைகள். கடந்து போன பெண்களின் வெயிலில் பழுப்பான நீண்ட கால்களைப் பார்த்து நான் விஸில் கூட அடிக்கவில்லை. கிரிலை ஆபத்துக்குத் துணையாக நம்ப முடியாதே.

“அடுத்த பத்து வருடங்களில் நாற்பத்தி ஓரு ஸ்டேஷன்கள் கட்டத் திட்டமிடப்பட்டிருக்கிறது,” அவர் சாஸேஜைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்து உண்டபடி என்னிடம் சொன்னார், கவனமாக மென்றார், விழுங்கிய பிறகுதான் பேசினார், ஏதோ சாப்பிடுவது கூட ஒரு காலிழந்த மனிதனுக்குப் பெரும் துன்பமான செயல் என்பது போல இருந்தது அவர் செய்தது. “அப்படின்னா என்னன்னு உனக்குத் தெரியுமா?”

“மூணே மூணுதான் கட்டுவாங்க.”

“அப்படின்னா இன்னும் நிறைய பேர் மெட்ரோ ரயில்களிலெ பயணம் செய்வாங்க. நிறைய பயணிகள், நிறைய பணம்.”

“இப்பவே நீங்க நிறையக் காசு பார்க்கிறீங்க. பிச்சைக்காரங்க யார் கிட்டே பிச்சை வாங்கறாங்களோ அவுங்களை விடக் கூடச் சம்பாதிக்கக் கூடாது.”

“நாங்க கூடுதலாக் கடுமையா உழைக்கறோமே.” கிரில் தெருவைக் கடக்கவிருந்த பச்சை சிக்னல் விளக்கு மாறுமுன் தெருவைக் கடக்க விரைந்த பாதசாரிகளைப் பார்த்து ஒரு புன்னகையை வீசினார். “பாவ்லோவ்ஸ்க்குக்கு வெளியே ஒரு கோடை வீட்டுக்காகப் பணம் சேமிக்கிறேன். சக்கர நாற்காலியால் அதைச் சேர முடியும். சமையலறைத் தொட்டியில் பாத்திரங்களை என்னால் கழுவ முடியும்.”

Beggar_Saint_Petersburg_Russia_City_Cold_winter_Fall_USSR_Poor_Alms

அந்த எதிர்பார்ப்பு மீது எனக்கு மதிப்பு எழுந்தது. குற்றங்கள் புரிபவர்கள், அரசியல்வாதிகள், அப்புறம் வியாபாரிகள், இவர்களுக்குத்தான் கோடை வீடுகள் வாங்குவதெல்லாம் சாத்தியம். நடக்க முடிகிற மனிதர்கள், செசென்யாவுக்கு ஒரு தரம் கூடப் போகாத மனிதர்கள், யாருடைய பிள்ளைகள் செசென்யாவுக்கு ஒரு போதும் போக மாட்டார்களோ அவர்களுக்குத்தான் சாத்தியம். மேலும் இங்கேயோ கிரிலும் அதில் சேர்ந்திருக்கிறார்.

“என்ன ஒரு கொள்ளை.”

“அதொரு கலை.”

“கால் கைகளை இழப்பதா?”

அவர் இல்லையெனத் தலை அசைத்தார். “இழப்பை லாபமாக்குவது, அது ஒரு கலை.”

அவர் சொன்ன வார்த்தைகள் அர்த்த புஷ்டி உள்ள கணமாகி இருக்கக் கூடும், அவர் மட்டும் அப்போது குசு விடாமல் இருந்தால். நான் வரலாற்றுப் பாடம் நடந்த வகுப்பில் கற்றவைகளைப் பற்றி நினைத்தபடி, அந்தத் தெருவில் வெகுதூரம் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். திரளான மக்கள் இந்தத் தெருவில் அக்டோபர் புரட்சியின் போது பனிக்கால அரண்மனையை நோக்கிப் பாய்ந்து சென்றிருந்தனர். இந்த நகரின் பெயர் பிறகு பெட்ரோக்ராட் என்று மாறியது, அதற்குப் பிறகு லெனின்க்ராட் ஆயிற்று. அந்தப் போர், முற்றுகை, தொள்ளாயிரம் நாட்கள் நீண்ட பட்டினிக் காலம். அன்று பசி தாளாமல் மக்கள் சுவர்க் காரையில் ரொட்டி செய்து கொண்டிருந்த கட்டிடத்தில்தான், இன்று ஸ்பாரோ, கே எஃப் ஸி போன்ற துரித உணவுக் கடைகள் இருக்கின்றன. ஜனங்கள் புனித பீட்டர்ஸ்பர்க் நகரத்தை கலைகளின் அருங்காட்சியகம் என்று சொல்வது இதனால்தானோ என்னவோ.

அன்று இரவு நான் வீடு திரும்பியபோது என் அப்பா ஒரு ஆரஞ்சு நிற திவானில் மல்லாக்கப் படுத்திருந்தார். தகர டப்பாவிலிருந்து எண்ணெயில் ஊறிய சாளை மீன்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார், இடையிடையே பூனையைத் தன் விரல்களை நக்க விட்டுக் கொண்டிருந்தார்.

:இங்கே வா,” என்றார், பிறகு தன் சிகரெட் லைட்டரின் தீப்பிழம்பால் என் கண் பாவைகளைச் சோதித்தார். “நெறிப்பாக இல்லையே.”

பூனை என் அப்பாவின் புறங்கை மீது தன் வாலைச் சுற்றிக் கொண்டு மரமரத்தபடியே, அவருடைய விரல்களிலிருந்த மீன் எண்ணெயை நக்கியது. அந்தக் கேடுகெட்ட பிராணியை நான் ஒருபோதும் நம்பியதில்லை.

“இன்னிக்கு என்ன கத்துகிட்டே?” அவர் கேட்டார்.

“ஒரு எஸ்கலேட்டரில் இறங்க எத்தனை நேரமாகும்னு.”

“வேறேதாவது?”

“கிரில் உன்னை விட அதிகம் பணம் பண்றாருன்னு.”ஒரு டப்பிங் செய்யப்பட்ட ஹாலிவுட் படம் தொலைக்காட்சிப் பெட்டியில் ஓடிக் கொண்டிருந்தது. க்ளைவ் ஓவன் வ்ளாடிவாஸ்டாக் உச்சரிப்பில் ரஷ்ய மொழியில் பேசினார். அந்தப் பெரும் வெடிச் சத்தங்கள் என்னை முகம் சுளிக்க வைத்தன.

“அதுல எத்தனை நீ சம்பாதிச்சே?”

“ஒண்ணுமில்லே.” நான் ஒத்துக் கொண்டேன்.

“அப்ப உன்னை விட நான் நிறையத்தான் இன்னும் சம்பாதிக்கிறேன்.” சொன்னவர், தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்கத் திரும்பிக் கொண்டார்.

“க்ரெஸ்டியை ஒரு ஹோட்டலாக்கப் போறாங்களாம்.”நான் சொன்னேன், அவருடைய கவனத்தை மறுபடி இங்கே திருப்புவதற்காக.

“மறுபடியுமா? எப்ப?”

நான் தோள்களைக் குலுக்கினேன். “செய்தித்தாள்ல, நகருக்கு வெளீல ஒரு சிறையைக் கட்டி முடிச்ச உடனேன்னு போட்டிருக்கு.”

என் அப்பா புன்சிரிப்பு சிந்தினார். “அதை எத்தனையோ வருஷங்களாச் சொல்லிக்கிட்டிருக்காங்க.”

அன்று இரவு தூக்கம் சுலபத்தில் வரவில்லை. நள்ளிரவுச் சூரியன் தொடுவானில் அமர்ந்திருந்தான், ஒளிக்கற்றைகள் ஜன்னல் திரைத் துண்டுகளூடே அழுத்திக் கொண்டிருந்தன. ஒரு மாதம் முன்புதான் நான் ஹெரொயினைப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தேன், அதுவும் வாரத்தில் ஒரு தடவை, இரண்டு தடவைக்கு மேல் பயன்படுத்தியதே இல்லை. ரப்பர் சிமெண்ட், வோட்கா, பெட்ரோல் ஆவி, இருமல் மருந்து,இப்படி நிஜத்திலிருந்து தப்பிக்க டஜன் வழிகள் இருந்தன. செசென்யாவா, க்ரெஸ்டியா? இரண்டில் எது என்னை மிகவும் அச்சுறுத்தியது என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. கிரில்லின் கம்பளியாலான ராணுவச் சீருடையா அல்லது என் அப்பாவின் பருத்தியாலான சிறைச்சாலைச் சீருடையா? இன்னும் இரண்டு மாதங்களில் அந்த இரண்டில் ஒன்று என்னுடையதாக ஆகி இருக்கும்.

(அடுத்த இதழில் தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.