[சென்ற இதழில் வெளி வந்த முதல் பகுதி ]
மேலே சொன்ன உதாரணங்கள், அன்றாட வாழ்க்கையில் நேரம் பற்றிய குழப்பங்கள். சில தருணங்களில் நேரம் ஏராளமானதாகப் படுகிறது; மற்றவற்றில் மிகக் குறைவாகப் படுகிறது. சில சமயம், நேரம் வேகமாகப் போவது போலத் தோன்றுகிறது; மற்ற சமயத்தில், மிக மெதுவாக நகருவதாகப் படுகிறது. நேரத்தைப் பற்றிய அனுபவங்களை முதலில் எழுதிவிட்டு, அதை சுருக்கமாக விளக்குகையில் விழுந்த சொற்களைக் கவனியுங்கள்:
- தருணம் (நேரம் சார்ந்த சொல்)
- சமயம் (நேரம் சார்ந்த சொல்)
- வேகம் (நேரத்தோடு சம்பந்தப்பட்ட சொல்) – நேரமில்லையேல் வேகமில்லை
- மெதுவாக (நேரத்தோடு சம்பந்தப்பட்ட சொல்)
- போவது (நேரத்தோடு சம்பந்தப்பட்ட சொல்)
நம்மையும் அறியாமலே நேரம் என்பது நம் மொழி, கலாச்சாரம், மற்றும் பழக்கங்களுடன் கலந்த ஒன்று. சில சார்புத் தன்மைகளை விஞ்ஞானத்தால் இன்று புரிந்து கொள்கிறோம். இதைப் பற்றி விவரமாகப் பிறகு பார்க்கலாம்.
அதற்கு முன், ஒரு நாளைய அனுபவத்தை மேலும் அலசுவோம்.
நேரம் துல்லியமாகப் பட்ட அனுபவங்கள்
- காலை அலரம் அடித்த பொழுது
- காலை வேலைகள் செய்த பொழுது
- ரயிலில் புத்தகத்தில் 10 பக்கம் படிக்கத் தேவையான 15 நிமிடம்
- ரயிலில் மின்னஞ்சல் படிக்கத் தேவையான நேரம்
- அலுவலக பஸ் தாமத நேரம்
- அலுவலகம் சென்றடைந்த நேரம்
- கூரியர் அலுவலகம் சென்ற நேரம்
- வீடு சென்றடைந்த நேரம்
- அடுத்த நாள் அலுவலகம் செல்ல இருக்கும் 6 மணி நேரம்
அதாவது, ஒரு நிமிடம் முதல் 6 மணி நேரம் வரை…
நேரம் குறைவாகப் பட்ட அனுபவங்கள்
- இளையராஜா இசை கேட்ட மணித்துளிகள்
- மோட்ஸார்ட்டின் சிம்ஃபொனி கேட்கக் கிடைத்த 30 நிமிடங்கள்
- ஏழு நொடிகளை, நிரலில் குறைக்கக் கிடைத்த சில நாட்கள்
அதாவது, ஏழு நொடி முதல் சில நாட்கள் வரை…
நேரம் அதிகமாகப் பட்ட அனுபவங்கள்
- சிக்னலில் காத்திருந்த 30 நொடிகள்
- 7 நிமிடம் தாமதமாக வந்த புறநகர் ரயில்
- 47 நொடிகள் தாமதமான மின்தூக்கி
- காஃபி எந்திரம் காஃபி செய்யும் 2 நிமிட நேரம்
- நண்பரைச் சந்தித்த பின், நகர்ந்த 5 முதல் 7 வருடம்
- அலாஸ்கா பயணக் கனவு 4 வருடம் தள்ளிப் போனது
அதாவது, 30 நொடிகள் முதல் 7 வருடம் வரை…
நேரம் தாறுமாறாகப் பட்ட அனுபவங்கள்
- கணினி நிரலின் இயக்க நேரத்தை (program execution time) 5 நொடிகள் குறைக்க, 4 வாரங்கள்
- கணினி நிரலின் இயக்க நேரத்தைக் குறைக்கும் ஐடியா 14 மணி நேரத்திற்குள்
- கணினி நிரலின் இயக்க நேரத்தை 7 நொடிகள் குறைக்க, 300 ஆண்டு பழைய இசை ஒரு முப்பது நிமிடத்திற்கு உதவலாம் என்ற எண்ணம்
அதாவது, 5 நொடிகள் முதல் 300 ஆண்டுகள் வரை…
மேலே உள்ள ஒவ்வொரு வகையிலும் உள்ள பிரச்னை புரிந்திருக்கலாம். மனித மனம் நேரத்தைச் சரியாக அளக்கும் தன்மையற்றது. இதற்கு பல்வேறு மொழி, பழக்கங்கள் மற்றும் மதம் போன்ற விஷயங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
முதலில், நம் சமூக வழக்கங்களைப் பற்றி யோசிப்போம். ஒருவருடைய வாழ்வில் நல்ல நேரம் வந்தால் எல்லாம் அவருக்குச் சாதகமாகவே நடக்கும் என்று பரவலாக நம்புகிறோம். அதே போல கெட்ட நேரம் வந்தால் அவருக்குப் பாதகமாகவே நடக்கும் என்றும் நம்புகிறோம். ஆனால், இந்த நல்ல/கெட்ட நேரத்தை, இவ்வளவு மணித்துளிகள், நாட்கள், வருடங்கள் என்று துல்லியமாக நமக்குச் சொல்லத் தெரியவில்லை. சுக்ர தசை அல்லது ஏழரை நாட்டான் சனி என்று ஏதேதோ சொல்லிச் சமாளிக்கிறோம். இன்றும், நம்மில் பலரும் சகுனம் பார்க்கிறோம். குறுக்கே பூனை வந்தால், சற்று தாமதமாக (சிலர் தண்ணீர் அருந்திவிட்டு) வேலையைத் தொடர்ந்தால் எல்லாம் சரியாக வரும் என்று நம்புகிறோம். எவ்வளவு நேரம் தாமதித்தால் எல்லாம் சரியாக வரும் என்று துல்லியமாக யாரும் சொல்வதில்லை. மேற்குலகில், தும்மினால், இன்னொரு பிறவி எடுத்து விட்டது போல, ’Bless you’ என்கிறார்கள்.
நம்முடைய தாத்தா காலத்தில் (அதாவது 80/90 ஆண்டுகள் முன்பு), தட்டச்சு எந்திரத்தில், 45 வார்த்தைகள் நிமிடத்திற்கு உருவாக்கியதைச் சாதனையாகக் கருதினோம். இன்று லேசர் அச்சு எந்திரங்கள், 20 பக்கங்களை அதே நிமிடத்தில் உருவாக்குவதைப் பெரிதாக நினைப்பதில்லை. அன்று, தந்தி மூலம் 10 வரிச் செய்தி 1 மணி நேரத்தில் சென்றதை சாதனையாகக் கருதினோம். இன்று, அதே 1 மணி நேரத்தில், ஒரு முழு நீளத் திரைப்படத்தின் விடியோவைத் தரவிறக்கம் செய்து பார்ப்பதை மிகவும் தாமதம் என்று நினைக்கிறோம். 2 நாட்கள் பயணித்த சென்னை – டில்லி பயணத்தை பல நாட்கள் சொல்லி மகிழ்ந்தோம். இன்று கிளம்பி 18 மணி நேரத்திற்குள், இந்தியாவிலிருந்து வட அமெரிக்கா வந்து இறங்க முடிகிறது. நம்முடைய கருப்பு வெள்ளைப் படங்களில் நிதானமாக கிராமச் சூழ்நிலையில் வயலில் உழுது கொண்டு பாட்டுப் பாடுவதை ரசித்தோம். இன்று, ஒரு சினிமா பாடலின் இடையிசையில் (1 நிமிடம் முதல் 1.5 நிமிடம் வரை) ஒரு பாத்திரத்தின் குழந்தை முதல் முதிர்ச்சி வரை காட்டினால் கூட, நமக்கு சரியாகவே படுகிறது. உறவினர், நண்பர்களுக்குக் கடிதம் எழுதுவது மற்றும் படிப்பதற்கு, ஒரு மாதத்தில், ஏறக்குறைய, ஒரு 5 மணி நேரம் நம் தாத்தா காலத்தில் ஒதுக்கினார்கள். இன்று எத்தனை நிமிடங்கள் இதற்காக செலவிடுகிறோம் என்று நமக்குச் சொல்லத் தெரிவதில்லை. நண்பர்களும், உறவினர்களும் சில குறும்செய்திகளிலும், மின்னஞ்சல்களிலும் சிலபல நொடிகளாய் நம்முடைய நேரத்தை நம்மை அறியாமலே எடுத்துக் கொள்கிறார்கள்.
நம்முடைய தாத்தா காலத்தில், தபாலில் விண்ணப்பித்து, கம்பெனிகளின் பங்குகளை வாங்கி, சில வருடங்கள் ஈவுத்தொகை வாங்கி (dividend) , கடைசியில், பெரிய செலவு வரும் பொழுது பங்குகளை விற்றார்கள். காலை வாங்கிய பங்குகளை அடுத்த 2 மணி நேரத்திற்குள் விற்பது இன்று சாதாரணமாகப் படுகிறது. போர் பற்றிய செய்திகளை ஒரு வாரம் கழித்து, நம் தாத்தா காலத்தில் செய்தித்தாள்களில் படித்தார்கள். இன்று பாக்தாத் தாக்குதல், தொலைக்காட்சியில், தாக்குதல் நடக்கும் போதே, காட்டப்படுகிறது. அன்று டெஸ்ட் போட்டிகளை, கிரிக்கெட் விளையாட்டில் பொறுமையாக 5 நாட்கள் மைதானத்தில் அமர்ந்து பார்த்தார்கள். இன்று, ஒரு நாள் விளையாட்டுகளே இழுவையாக நம்மில் பலருக்குப் படுகிறது. 60 வருடங்களுக்கு முன் வந்த விளம்பரப் படங்கள் சில நிமிடங்கள் ஓடின. இன்று 30 நொடி விளம்பரம் என்பது பெரிய விஷயம். நம் தாத்தா காலத்தில் வேலை என்பது நாளுக்கு 7 முதல் 8 மணி நேரம் வரைதான். ஆனால் அது மட்டும் ஏனோ சுருங்கவில்லை- இன்று பகல், இரவு என்று பார்க்காமல் 12 முதல் 16 மணி நேர அலுவலக வேலை என்பது சாதாரணம்.
அன்று உடலால் உழைப்பது கூடுதலாக இருந்தால், இன்று அறிவால் உழைப்பது கூடுதல். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி, நேரம் என்ற விஷயத்தின் தாக்கத்தை மேலும் மழுங்கடிக்க வைக்கிறது. நம்மில் பலர், ஒரே நேரத்தில், பல செயல்களைச் செய்ய முடியும், செய்கிறோம் என்று நம்புகிறோம். இது, ஒரு சர்ச்சைக்குரிய விஷயம். பல ஆராய்ச்சிகள் ஒரே முடிவுக்குத்தான் வந்துள்ளன: நாம் பல வேலைகளை எடுத்துக் கொள்கிறோம். ஒன்றை முடிப்பதற்குள், பாதியில் விட்டு விட்டு, இன்னொன்றை எடுத்துக் கொள்கிறோம். இதையும் பாதியில் விட்டு விட்டு, மேலும் மூன்றாவது வேலையை அடுத்து எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறோம். ஒவ்வொரு வேலைக்கும் தேவையான நேரத்தை விட அதிகமாக எடுத்துக் கொள்கிறோம். மேலும், தரமும் அடிபடுகிறது.
அரசாங்கங்கள் இந்த ஆராய்ச்சியை ஏற்றுக் கொள்ளத் தொடங்கி, இதை நிவர்த்தி செய்யும் விதமாகச் சட்டத்திலும் மாற்றங்கள் செய்துள்ளமை மிகவும் நல்ல விஷயம். உதாரணத்திற்கு, வட அமெரிக்க நெடுஞ்சாலைகளில், புதிதாக Text Stop என்று 30 மைல்களுக்கு ஒரு முறை வைத்துள்ளார்கள். வண்டியை நிறுத்திவிட்டு, சிலபல குறுஞ்செய்திகளை (SMS) அனுப்பிவிட்டு, பயணத்தை தொடரலாம். இவ்வகை நிறுத்துமிடம் வருவதற்கு, ஒரு 5 மைல்களுக்கு முன், ‘இன்னும் 5 மைல்களில் Text Stop வருகிறது. வீணாகக் குறுஞ்செய்தி அனுப்பி அபராதம் கட்டத் தேவையில்லை”, என்று மிரட்டியும் பார்க்கிறார்கள். சாலையில் காரை மட்டுமே ஓட்டுவதற்கான ஏற்பாடு இது. 120 கி.மீ. வேகத்தில் 5 மைல்கள் என்பது 4 நிமிடப் பயணம். இதற்குள், பல்வேறு வேலைகளில் கவனம் சென்றால், உயிருக்கே ஆபத்தாகலாம். இசைத் துறையையும் இது விட்டு வைக்க வில்லை. இன்றைய இசையமைப்பாளர்கள், பல தொழில்நுட்ப வசதி இருந்தும், இசையை உருவாக்க, அதிக நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு காரணம் ஏகப்பட்ட வேலைகளை ஒரே நேரம் செய்ய முயல்வதில் வரும் சிக்கல்களைச் சமாளிக்கும் (complexity management) திறமைகள் நம்மிடம் இல்லாததே.
மத நம்பிக்கையுள்ளவர்கள், ராகுகாலம், யமகண்டம் என்று சில குறிப்பிட்ட நேரங்களைத் தவிர்கிறார்கள். அமாவாசை, பெளர்ணமி போன்ற சந்திரன் சம்மந்தப்பட்ட நேர அளவுகளும், நம்மில் பலருக்கு முக்கியம். இஸ்லாமியர்களும் தங்கள் தொழுகை நேரம் மற்றும் ரமதான் வழிபாடு போன்றவற்றைப் பல்லாண்டுகளாக சந்திரனின் சுழற்சியைச் சார்ந்து கணக்கிடுகிறார்கள்.
இவ்வாறு, நம்மில் பலரும் நேரத்திற்காக ஏங்கும் அதே நேரத்தில், நேரம் ஏன் மெதுவாக நகருகிறது என்றும் குறைபடுகிறோம். பல சமூக, மத விஷயங்கள் நம்முடைய நேர அளவிடல்களை பாதிக்கின்றன. நம்முடைய மனநிலை, நம்பிக்கைகள், தவறான புரிதல்கள் மற்றும் பல பாதிப்புகள் நேரம் என்ற விஷயத்தைத் தற்சார்புடையதாக ஆக்குகின்றன. மனித வாழ்வில், சூரியன், சந்திரன், விண்மீன்கள், (இவற்றில் ஏதோ ஒன்றைச் சார்ந்த) மதங்கள் மற்றும் சரித்திரம் என்ற பாதிப்புகள் இந்த நேரக் குழப்பத்திற்குக் காரணம்.
விஞ்ஞானத்தில் இது போன்ற குழப்பத்திற்கு இடமில்லை.முன்பு எப்படி நேரத்தை அளக்க முயன்றோம், இன்று எப்படித் துல்லியமாக அளக்கிறோம், ஏன் இப்படித் துல்லியம் தேவையாகிறது, இதனால் உள்ள மற்ற பயன்கள் என்ன என்று விஞ்ஞான பூர்வமாக நேர அறிவியலை, அடுத்தபடியாக ஆராய்வோம்.
(தொடரும்)