தன்மானத் தேடல் – ரேமண்ட் சான்ட்லரின் ஃபிலிப் மார்லோ

அமெரிக்க துப்பறியும் கதைகள் சிலவற்றை வாசிக்கும்போதும், வீரியத்துக்குக் குறைவில்லாத பேராண்மையாளர்களைக் ஹீரோக்களாகக் கொண்ட ஹாலிவுட் படங்களைப் பார்க்கும்போதும் (ஹாலிவுட் ஆக்ஷன் பட ஹீரோக்களின் வீரியத்துக்குப் பஞ்சமில்லை), இவற்றில் பலவும் ரேமண்ட் சான்ட்லரின் காலத்துக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கின்றன என்ற உண்மை முகத்தில் அறைகிறது (உண்மைகள் எப்போதும் முகத்தில்தான் அறைகின்றன).

இந்த ஹீரோக்களின் கூர்மையான நகைச்சுவை, ஒரு கைச்சொடுக்கலில் ஒன்லைனரை எடுத்துவிடும் திறமை, தாடையில் விழும் குத்துக்களை நேர்கொண்ட கண்ணினனாய் ஏற்றுக் கொள்ளும உறுதி, வஞ்சியரின் சூதுக்கு பலியாகாத திண்மை – இவையும் இன்னும பலவும் இன்று நம் சிந்தைக்கு விருந்து படைக்கின்றன என்றால் அதற்கு நாம் டேஷியல் ஹாம்மெட், ரேமண்ட் சான்ட்லர் முதலானவர்கள் உருவாக்கிய ஃபிலிப் மார்லோ போன்ற துப்பறியும் நிபுணர்களுக்குதான் நன்றி கூற வேண்டும். பல்ப் ஃபிக்ஷனின் பொற்காலம் நவீன யுகத்தின் துப்பறியும் நிபுணர்களுக்கான வகைமாதிரியை விட்டுச் சென்றிருக்கிறது – அதன் வழித்தோன்றல்கள் இன்று அச்சிலும் திரையிலும் நம்மை ஆக்கிரமிக்கிறார்கள்.

ரேமண்ட் சான்ட்லரின் புத்தகங்களில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் என்று பேசும்போது அவரது நடையை முக்கியமானதாகக் சொல்கிறார்கள். சான்ட்லரின் மொழியில் ஒரு இறுக்கம் உண்டு. மைக் டைசனின் நாக் அவுட் பஞ்ச்கள் போல அவரது ஒன்லைனர்கள் சரியான நேரத்தில் சரியான இடத்தில் எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல் வந்து விழுகின்றன. சான்ட்லரின் உரையாடல்கள் முரட்டுத்தனமானவை, ஆனால் கூர்மையான நகைச்சுவை கொண்டவை. அவர் படைத்த பாத்திரங்கள் வித்தியாசமானவர்கள். கதைகளின் பிளாட் என்று பார்த்தால்தான் குழப்பமாக இருக்கும் – தனது கதைகளில் உள்ள ஓட்டைகளை சான்ட்லராலேயே சரிக்கட்ட முடியவில்லை (“The Big Sleep” என்ற நாவலில் டிரைவரைக் கொன்றது யார் என்று கேட்டபோது, கொலைக் குற்றவாளி தன் தடயத்தை விட்டுச் செல்லவில்லை என்று சொன்னாராம் சான்ட்லர், அல்லது அந்த மாதிரி வேறு என்னவோ)

நீங்கள் சான்ட்லரைப படிப்பது முதலில் அவரது நடைக்காக என்றாலும் அவரது புத்தகங்களைத திரும்பத் திரும்ப வாசிக்கும்போதுதான் சான்ட்லரின் நடைக்கு அப்பால் திருத்தமான ஒரு அற திசைமானி இருப்பதைக் கண்டறிகிறீர்கள். கதை சரியான திசையில் செல்ல இது வழிகாட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். இந்த அற மையமே சான்ட்லரின் புத்தகங்களில் சிறந்தவற்றுக்கு ஒரு இறவாமையைத் தந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். சான்ட்லர் எழுதிய சிறந்த நாவல்களை எடுத்துக் கொள்ளுங்கள்: ‘The Big Sleep’, ‘The Long Goodbye’, ‘Farewell My Lovely’, ‘The High Windows’- தன்மானத் தேடல் என்ற மையச் சரடே இந்தக் கதைகள் அனைத்தையும் கட்டமைக்கிறது என்பதை உங்களால் எளிதாகப் பார்க்க முடியும். இந்த நாவல்களில் ரேமண்ட் சான்ட்லர் தன்னால் முடிந்த அளவு தன் கிளையண்ட்டின் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொடுக்க முயற்சிக்கிறார், இதைச் செய்வது தனக்கு வலிக்கிறது என்றாலும்.

raymond-chandler-book-covers

ஃபிலிப் மார்லோவின் உலகில் ஏழை, பணக்காரன் என்று சகலரும் உண்டு. ஒரு காலத்தில் துப்பாக்கி கடத்திய மருமகன் மேல் இன்று பாசமாக இருக்கும் கோடீஸ்வரனும், யாரையும் லட்சியம் செய்யாத பணக்காரியும், பண முதலைகளையும் கூலிப்படையினரையும் திருமணம் செய்து கொள்ளும் க்ரூப் டான்சர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள்; இங்கு தங்கள் மனைவியரின் கள்ளக் காதல்களை தாதாக்கள் சகித்துக் கொள்கிறார்கள், கொலைகாரர்கள் மறுயோசனையின்றி சுட்டுத் தள்ளுகிறார்கள், கொள்ளைக்காரர்கள் தங்கள் பால்யகால சிநேகிதிகளை மறக்க முடியாமல் தவிக்கிறார்கள். ஏழைகளும் பணக்காரர்களும் நெருங்கிப் பழகும் இந்த உலகில், புனிதர்களுக்கும் பாபிகளுக்கும் இடமிருக்கும் இந்த உலகில், நேசத்துக்குரிய ஒருவருக்காக தன் உயிரைத் தியாகம் செய்வதுபோல் கொலைகளும் சாதாரணமாக நடக்கும் இந்த உலகில், மார்லோ மனிதர்களின் தன்மானத்தை மீட்டுக் கொடுக்கிறான், அதைச் செய்யும்போதே தன் வாழ்வின் அர்த்தத்தையும் கண்டு கொள்கிறான். நல்லது கெட்டது துலங்காத குழப்பமான ஒரு உலகில் சுத்தமாக வாழ முயற்சிப்பவன் பிலிப் மார்லோ. அடிப்படையில் அவனும் தன் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே போராடுகிறான்.

ஃபிலிப் மார்லோ தனக்கு வரும் கேஸ்களில் பலவற்றில் ஒழுங்காக வாழ ஆசைப்படுபவர்களைச் சந்திக்கிறான் – அவர்கள் தங்களுக்குத் தெரிந்த அளவில் நியாயமாக நடந்து கொள்ளவும் முடிந்த அளவு தன்மானத்தோடு வாழவும் ஆசைப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையைப் பார்த்தால் பல பேருக்கு இது எளிய தேர்வாக இருப்பதில்லை. ‘The Big Sleep’ல் இப்படிப்பட்ட ஒருவனை மார்லோ சந்திக்கிறான்: தன்னிடமிருக்கும் தகவலைக் கொடுக்க காசு கேட்கிறான் சில்லறைத் திருட்டுகளைச் செய்யும் அவன். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு தன் காதலியுடன் ஊரைவிட்டுத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருக்கிறான். ஆனால் துரதிருஷ்டவசமாக, கொலைகாரன் ஒருவன் அவனைப் பிடித்து விடுகிறான், அவன் சயனைட் சாப்பிட்டு இறந்து போகிறான். மார்லோ இறந்தவனை ஒரு ஹீரோவாகப் பார்க்கிறான், தன் காதலியைக் காட்டிக் கொடுக்காத ஒழுக்கம் அவனுக்கு இருக்கிறது –

“Well you fooled him, Harry,” I said out loud, in a voice that sounded queer to me. “You lied to him and you drank your cyanide like a gentleman. You died like a poisoned rat,Harry, but you are no rat to me.” (The Big Sleep)

‘The Long Goodbye’ என்ற நாவலில் மார்லோ, எல்லாரும் கைவிட்டுவிட்ட ஒருவனின் விவகாரங்களில் சிக்கிக் கொள்கிறான். மனிதனொருவனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதை அளிக்கப்படாமல் அவன் அவமானப்படுத்தப்படுவதை மார்லோவால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. தன்னால் இயன்ற அளவு உதவி செய்யப் பார்க்கிறான் மார்லோ –

“I’m supposed to be tough but there was something about the guy that got me. I didn’t know what it was. The white hair and the scarred face and the clear voice and the politeness. Maybe that was enough. There was no reason why I should ever see him again. He was just a lost dog, like the girl said.” (The Long Goodbye)

‘தொலைந்துபோன நாய்’ மாதிரி இருப்பதுதான் மார்லோ அவனை மீண்டும் சந்திக்கக் காரணம்.

“The Big Sleep’ நாவலில் உடம்பு சரியில்லாமலிருக்கும் ஜெனரல் அடிப்படையில் நல்ல மனிதர்தான் என்பதை மார்லோ புரிந்து கொள்கிறான். ஜெனரல் தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள ஆசைப்படுகிறார், ஆனால் அவரது இரு பெண்களும்தான் அப்பாவுக்கு அடங்காமல் திரிகிறார்கள். தன் கடமைகளைத் தாண்டி மார்லோ ஜெனரலுக்கு வேண்டியதைச் செய்து தருகிறான். எப்படியோ அவர் அவனது கிளையண்ட் என்ற உறவைத் தாண்டி நெருக்கமானவராக மாறி விடுகிறார். எப்பாடுபட்டாவது அவரை மார்லோ காப்ப்பாற்றியாக வேண்டும் என்பதல் மார்லோ உறுதியாக இருக்கிறான். அவரைச் சூழும் ஆபத்துகள் வெளியுலகில் இல்லை, அவரது சொந்த ரத்தமே அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டது.

“I do all this for twenty five bucks a day – and maybe just a little to protect what little pride a broken and sick old man has left in his blood, in the thought that his blood is not poison, and that although his two little girls are a trifle wild, as many nice girls are these days, they are not perverts or killers.” (The Big Sleep)

சமநிலையற்ற மார்லோவின் உலகில் ஆண்களைவிட பெண்கள்தான் தன்மானத்துடன் வாழப் போராடுகிறார்கள், அவர்களுக்கே அதையடைவது கடினமாகவும் இருக்கிறது. அனைத்து வகை பெண்களும் அவனது உலகில் இருக்கின்றனர் : கூலிப்படையினரின் தோழிகள், பணத்துக்காக திருமணம் செய்து கொள்ளும் க்ரூப் டான்ஸர்கள், போதைப் பழக்கத்துக்கு அடிமையான இளம் பெண்கள், சூதாட்டத்தை நிறுத்த முடியாதவர்கள் என்றும் இன்னும் பலரும் இந்த உலகின் குடிமக்கள். சான்ட்லரின் பார்வை இவர்கள் குறித்த வழமையான வகைமாதிரிகளைக் கடந்து செல்கிறது, புறப்பார்வைக்கு ரசக்குறைவான இந்த உலகினுள் ஊடுருவிச் சென்று, இந்தப் பெண்களில் பலருக்கும் இயல்பான தன்மானத்தையும் மனவலிமையையும் சான்ட்லர் வெளிப்படுத்துகிறார். High Window என்ற நாவலில், தாதா ஒருவனின் பாதுகாப்பில் அடைக்கலம் புகுந்த தன் க்ளையண்ட்டின் மனைவியை மார்லோ சந்திக்கும்போது இந்த உரையாடல் நிகழ்கிறது –

“She looked at me lazily. “Mister, don’t think I didn’t pay for that mistake.” She lit another cigarette. “But a girl has to live. And it isn’t always as easy as it looks. And so a girl can make a mistake, marry the wrong guy and the wrong family, looking for something that isn’t there. Security, or whatever.”

“But not needing any love to do it,” I said.

“I don’t want to be too cynical, Marlowe. But you’d be surprised how many girls marry to find a home, especially girls whose arm muscles are all tired out fighting off the kind of optimists that come into these gin and glitter joints” (The High Window)

‘Farewell My Lovely’ என்ற நாவலின் பிரதான பெண் பாத்திரம் இரண்டு பேரைக் கொலை செய்திருக்கிறாள். மேலும் அவள் தன்னைக் காதலித்தவனைக் காட்டிக் கொடுத்து அவனை ஜெயிலுக்கு அனுப்பியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அவளிடம்கூட மார்லோ ஒரு நல்ல குணத்தைப் பார்க்கிறான் – தான் செய்த பாபங்களுக்குப் பிராயச்சித்தமாக, தன்னை நிஜமாகவே காதலித்த அந்த ஒருவனைக் காப்பாற்ற அவள் தன்னாலியன்ற அளவு முயற்சி செய்வதை உணர்கிறான் அவன்.

“I am not saying she was a saint or even a halfway nice girl. Not ever. She wouldn’t kill herself until she was cornered. But what she did and the way she did it, kept her from coming back here for trial. Think that over. And who would be the trial hurt most? Who would be the least able to bear it? And win, lose or draw, who would pay the biggest price for the show? An old man who loved not wisely, but too well”

Randall said sharply, “That’s just sentimental.”

“Sure. It sounded like that when I said it. Probably all a mistake anyway.” (Farewell My Lovely)

சான்ட்லரின் நாவல்களில் பெண்கள் அடையும் உருமாற்றதைப் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையே எழுதலாம்.பல கதைகளில் அவர் தனக்கேயுரிய முறையில் பெண்களை அறிமுகப்படுத்துகிறார், அந்த அறிமுகம் ஏறத்தாழ அவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கிறது. பின்னர் கதைப்போக்கில் அவர்கள் மெல்ல மெல்ல தங்களுக்கென்றே ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள் – இந்தப் பெண்கள் நாம் முதலில் பார்த்தபோது நினைத்ததற்கு மாறானவர்களாக இருப்பதை விரைவிலேயே புரிந்து கொள்கிறோம்.

“She approached me with enough sex appeal to stampede a businessmen’s lunch and titled her head to finger a stray, but not very stray, tendril of softly glowing hair. Her smile was tentative but could be persuaded to be nice” (The Big Sleep)

“I wouldn’t say the face was lovely and unspoiled, I’m not that good at faces. But it was pretty. People have been nice to that face, or nice enough for their circle. Yet it was a very ordinary face and its prettiness was strictly assembly line. You could see a dozen faces like it on a city block in the noon hour” (Farewell My Lovely)

ஒரு தாதாவைத் திருமணம் செய்து கொண்ட பெண் இவள் – கதையின் துவக்கத்தில் மார்லோவின் பார்வை இப்படி இருக்கிறது:

“From thirty feet away she looked like a lot of class. From ten feet away she looked like something made up to be seen from thirty feet away. Her mouth was too wide, her eyes were too blue, her makeup was too vivid, the thin arch of her eyebrows was almost fantastic in its curve and spread, and the mascara was so thick on her eyelashes that they looked like miniature iron railings. She wore white duck slacks, blue and white open toed sandals over bare feet and crimson lake toenails, a white silk blouse and a necklace of green stones that were not square cut emeralds. Her hair was as artificial as a night club lobby.” (The High Window)

நாவலின் முடிவில் அவள் தன் கணவனை வெறுக்கிறாள், அவனை நிராகரிக்கும் அளவுக்கு வலுவான ஆளுமை கொண்டவளாக இருக்கிறாள் என்று நாம் அறிகிறோம்:

“You work out with the johns,” he snapped. “Call it a lover’s quarrel. Call it anything you like.”

“Perhaps,” she said, “when he was drunk he looked a little like you. Perhaps that was the motive.”

“You’ll go through with it, all right. You won’t have any choice. You will get off easily enough. Christ, I know that. With your looks. But you’ll go through with it angel. Your fingerprints are on that gun.”

She got to her feet slowly, still with the hand to her jaw.
Then she smiled. “I knew he was dead,” she said. “That is my key in the door. I’m quite willing to go downtown and say I shot him. But don’t lay your smooth white paw on me again – if you want my story. Yes, I am quite willing to go to the cops. I’ll feel a lot safer with them than I feel with you.” (The Big Sleep)

raymond-chandler-Philip_Marlowe

உண்மை எது பொய் எது என்ற தெளிவில்லாத மார்லோவின் உலகில் போலீஸ்காரர்கள் வராமல் இருக்க முடியாது. சான்ட்லரின் போலிஸ்காரர்கள் லட்சியவாதிகள் அல்ல, முழுக்க முழுக்க ஊழலானவர்கள் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட, யதார்த்தத்தை ஒட்டிய பாத்திரங்களைக் கொண்டு சான்ட்லர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட சமநிலையை அடைகிறார். சான்ட்லரின் கதைகளில் மார்லோ அத்தனை வகை போலீஸ்காரர்களையும் சந்திக்கிறான். சிலர் வன்முறையால்தான் குற்றங்களை ஒடுக்க முடியும் என்றால் அப்படியே ஆகட்டும் என்று நினைப்பவர்கள், சிலர் மிகவும் கடுமையான காவல்துறைப் பணியைத் தங்களால் இயன்ற அளவு நன்றாகச் செய்ய முயற்சி செய்பவர்கள்.

“The homicide skipper that year was Captain Gregarious, a type of copper that is getting rarer but no longer extinct, the kind that solves crimes with the bright light, the soft sap, the kick to the kidneys, the knee to the groin, the fist to the solar plexus, the night stick to the base of the spine” (The Long Goodbye)

“I thought of cops, tough cops that could be greased and yet were not by any means all bad, like Hemingway. Fat prosperous cops with Chamber of Commerce voices, like Chief Wax. Slim, smart and deadly cops like Randall, who for all their smartness and deadliness were not free to do a clean job in a clean way. I thought of old goats like Nulty, who had given up trying.” (Farewell My Lovely)

மார்லோவைப் போலவே காவல்துறையில் இருப்பவர்களில் பலரும் மரியாதைக்குரியவர்கள், தன்மானத்தை இழக்காதவர்கள், குற்றவாளியைக் கண்டுபிடிக்க முழுமுயற்சி செய்பவர்கள். மார்லோ போலீஸ்காரர்களுக்கு அடிபணிபவனல்ல, தேவைப்பட்டால் அவர்களை எதிர்த்தும் நிற்பவன். ஆனால் அதே சமயம் போலிஸ்காரர்கள் இல்லாமல் எந்த ஒரு சமுதாயமும் ஒழுங்காகச் செயல்பட முடியாது என்று நம்புகிறவன் – எப்படியும் யாரோ ஒருத்தன் அந்த வேலையைச் செய்தாக வேண்டும்.

“I never saw any of them again – except the cops. No way has yet been invented to say goodbye to them.” (The Long Goodbye)

மார்லோவின் அறவுணர்ச்சிதான் அவனை வேலை செய்ய வைக்கிறது, புனவுலகில் பிரபலமாக இருந்த பல துப்பறியும் நிபுணர்கள் காணாமல் போய்விட்டாலும் மார்லோ இன்னமும் உயிருடன் இருக்கிறான் என்றால் அதற்கு இதுவும் ஒரு காரணம்.சாமர்த்தியமாகப் பேசுகிறான் என்பதைவிட அவனது நல்ல குணம்தான் மார்லோ யார் என்பதைச் சரியாக வரையறுக்கிறது.

 
“Now you offer me fifteen grand. With fifteen grand I could own a home and a new car and four suits of clothes. What are you offering it to me for? Can I go on being a son of a bitch, or do I have to become a gentleman, like that lush that passed out in his car the other night?” (The Big Sleep)
 
“What do you expect from life – full coverage against all possible risks?”
 
“I am forty two years old. I’m spoiled by independence. You are spoiled a little – not too much – by money” (The Long Goodbye)
 
உண்மையைக் கண்டுபிடிக்க அறமற்ற செயல்களைச் செய்ய வேண்டுமென்றால் அதற்கும் தயாரானவனாக இருக்கிறான் மார்லோ. தவிர்க்க முடியாமல்தான் இதைச் செய்தேன் என்று சொல்லிக் கொண்டு இப்படிப்பட்ட தன் சாதனைகளைக் கொண்டாடாமல், தன்னையும் தன் வழிமுறைகளையும் கடுமையாக விமரிசித்துக் கொள்கிறான் அவன்.
 
“A lovely old woman. I liked being with her. I liked getting her drunk for my own sordid purposes. I was a swell guy. I enjoyed being me. You find almost anything under your hand in my business, but I was beginning to be a little sick at my stomach.” (Farewell My Lovely)
 
இதோ மார்லோ, தன் கிளையண்ட்டை முத்தமிட்டுக் கொண்டிருக்கிறான் – பயந்த சுபாவம் கொண்ட அவளது கணவன் அப்போது பார்த்து அறைக்குள் நுழைகிறான் –
 
“The door opened and Mr.Grayle stepped quietly into the room. I was holding her and didn’t have a chance to let go. I lifted my face and looked at him. I felt as cold as Finnegan’s feet, the day they buried him.” (Farewell My Lovely)
 
இந்த நிறப்பிரிகையைக் கொண்டுதான் மார்லோ தான் வாழும் உலகை கவனிக்கிறான்.
 
“Jules Amthor, Psychic Consultant. Consultations by Appointment Only. Give him enough time and pay him enough money and he’ll  cure everything from a jaded husband to a grasshopper plague. He would be an expert in frustrated love affairs, woman who slept alone and didn’t like it, wandering boys and girls who didn’t write home, sell the property now or hold it for another year, will this part hurt me in public or make me seem more versatile. Men would sneak in on him too, big strong guys that roared like lions around their offices and were all cold mush under their vests. But mostly it would be women, fat women who panted and thin women who burned, old women that dreamed and young women who thought they might have Elecktra complexes, women of all sizes, shapes and ages, but one thing in common – money” (Farewell My Lovely)
 
“The stores along Hollywood Boulevard were already beginning to fill up with overpriced Christmas junk, and the daily papers were beginning to scream how terrible it would be if you didn’t get your Christmas shopping done early. It would be terrible anyway: it always is.” (The Long Goodbye)
 
இந்த நாவல்கள் அனைத்திலும் ஃபிலிப் மார்லோ பெரும் போராட்டங்கள் எதுவும் நிகழ்த்துவதில்லை. அவன் பெரிய பெரிய ஆட்களுடன் சண்டை போடுகிறான்தான், ஆனால் அவன் சின்னச் சின்ன வெற்றிகளுக்காகவே போராடுகிறான். இன்று நாம் பார்க்கும் பேராண்மை கொண்ட ஹீரோக்களைப் போல் அவன் ஒற்றை ஆளாக சூதாட்டப் பேரரசுகளையும் நாசகார நிறுவனங்களையும் தவிடுபொடியாக்குவதில்லை. மார்லோவின் உலகில் உள்ள சூதாட்டக் கிளப்புகள் தொடர்ந்து செயல்படுகின்றன, அரசியல்வாதிகள் தாதாக்களின் தோளில் கைபோட்டுக் கொண்டு உலவுகின்றனர், கூலிப்படைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறது. சமுதாயத்தைத் திருத்துவது மார்லோவின் நோக்கமல்ல. சமுதாயத்தைக் குறித்து அவனுக்கு அதைவிட ஆழமான புரிதல் இருக்கிறது. ஒரு சமூகம் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய எல்லைகளை அவன் அறிந்திருக்கிறான், ஒரு தாதாவை அழித்துவிட்டால் மட்டும் சமூகக் கட்டமைப்பின் தவிர்க்க முடியாத வெளிப்பாடாகிய ஊழல் அவனோடு மறைந்து விடாது என்பதை மார்லோ அறிந்திருக்கிறான்.
 
ஆக, மார்லோவின் நோக்கங்கள்தான் என்ன? அவன் தன்மானத்துடன் வாழ முற்படுகிறான். அவனது கிளையண்ட்டுகள் சுயமரியாதையுடன் வாழ வழி செய்து கொடுக்கிறான். தனி மனிதனுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நியாயத்தைப் பெற்றுத் தருவதும், வாழ்க்கையில் எந்த ஒரு மனிதனுக்கும் அவனுக்குரிய மரியாதையை உறுதி செய்து தருவதும்தான் மார்லோவுக்கு முக்கியமாக இருக்கிறது. ஊழல் மலிந்த ஒரு சமூக அமைப்பில் தனி மனித தன்மானத்தை நோக்கிய தொடர்ந்த தேடல்தான் சான்ட்லரின் நாவல்களை சாதாரண துப்பறியும் நாவல்களின் எல்லைகளுக்கு அப்பால் கொண்டு செல்கிறது. சான்ட்லருக்கு எந்த மர்மத்தின் விடையும் முக்கியமாக இல்லை. எல்லாமே தனக்கு எதிராக இருக்கும் நிலையில் மனிதனால் தன் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா, அது எப்படி சாத்தியமாகிறது என்ற கேள்விகளுக்கான விடையை அறிவதுதான் அவருக்கு முக்கியமாக இருக்கிறது.
 
சான்ட்லரின் பாத்திரங்கள் குறைபட்டவை. இந்த நாவல்களின் நாயகன் மார்லோவும் அப்பழுக்கற்றவன் அல்ல. ஆனால், குறைபட்ட மனிதர்களாக இருந்தாலும் இவர்கள் நிஜ மனிதர்கள். நம்மைப் போன்ற ஒரு சாதாரண  மனிதன், சூழ்நிலை அவனுக்கு எதிராக இருக்கும்போதும், தன்னைக் காப்பாற்றிக் கொண்டு தப்பிச் செல்லாமல், எது சரியோ அதைச் செய்து தன் ஆளுமையின் மையத்தில் துலங்கும் உறுதிப்பாட்டைக் கண்டடைகிறான் என்ற ஒரு அற்புதமான சமநிலையைத் தொடுவதுதான் சான்ட்லரின் தனித்தன்மை. அவரது பாத்திரங்களின் இந்த அசாதாரணமான சமநிலையும், அறத்தின் வலுவான வண்ணங்களில் தனது நாவல்கள் அனைத்தையும் சான்ட்லர் புனைந்திருப்பதும்தான் பிலிப் மார்லோ பல்ப் பிக்ச்னின் பக்கங்களிலிருந்து வெளியேறி இலக்கிய உலகில் நுழைவதை உறுதி செய்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.