கூறுகிறேன்…. முடிந்தால் கேளுங்கள் – 1

தி இந்து,  மன்னா டே

‘பத்திரிகை’ என்கிற பெயரே ஒரு காலத்தில் இதழ்கள் ‘பத்தி’ எழுத்துகளை அதிகம் தாங்கி வரும் என்கிற கணிப்பால்தான் ஏற்பட்டதோ என்னவோ. ‘பத்தி’ எழுதுவதுதான் அனைத்திலும் சுலபமானது. தன்னைப் ‘பத்தி’யே எழுதிக் கொண்டு போகலாம். வாசகரும் அந்தப் பக்கங்களை முற்றிலுமோ, அல்லது குறைந்த பட்சம் பல பத்திகளையோ, படிக்காமலே தாண்டிச் செல்லலாம். ஜெயகாந்தனும், சுஜாதாவும் எழுதிய பத்தி எழுத்து வேறுவகையானது. அவை வாசகரைப் படிக்க வைத்தன. கற்கவும் வைத்தன. ஜெயகாந்தன் தன்னைப் பற்றியே எழுதிய மாதிரி தோன்றினாலும், அதைப் படிக்கையில் அது ‘நம்மை’ப் பற்றி என்பது தெரியும். சுஜாதா பல புதிய விஷயங்களையும், பழைய விஷயங்களையும் பற்றி சுவாரஸ்யமாக எழுதினார். அவர்கள் எழுதியவை இலக்கிய அந்தஸ்து பெற்றவை.

நான் வார்த்தை இதழில் ‘பத்தி’ எழுதத் துவங்குகையில் முதல் கட்டுரையில் ‘இந்து’ பத்திரிகை பற்றி எழுதியிருந்தேன்.  பின் தொடர்ந்து அவ்விதழில் கடைசிப் பதிப்பு வரை எழுதினேன். அந்த ‘ராசி’க்காக இந்தத் தொடரிலும் முதல் கட்டுரையான இதில் ‘இந்து’ பத்திரிகை பற்றி எழுதுகிறேன். உங்களுக்கோ சொல்வனத்துக்கோ ராசி இருந்தால் வேறு மாதிரி நடந்து மகிழ்வூட்டவும் வாய்ப்பு இருக்கிறது. நான் ராசி, ஜோசியம் பார்ப்பவனில்லை என்பதையும் இவ்விடத்தில் சொல்லிவிடுகிறேன்.

கடந்த இரு மாதங்களாக சிங்கப்பூரில் இருந்ததால் இன்னமும் ‘தி இந்து’ தமிழ் தினசரியைப் பார்க்கவில்லை. ஆனால் முக நூலில் ஒரு கட்டுரையின் சுட்டியை நண்பரொருவர் அனுப்பியபோது அதை வெளியிட்டுள்ள இவ்விதழை இணையத்தில் பார்த்தேன்.

The-Hindu-tamil

அது என்ன ‘தி இந்து’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்? தமிழர்களின் பிரக்ஞையில் ஆழப் பதிந்துள்ள பத்திரிகைப் பெயர் என்பதால் இருக்கும். நமக்கு ஆங்கிலப் பெயர் கொண்ட தமிழ்ப் பத்திரிகைகள் அந்நியமல்ல. ‘ஜூனியர்’ விகடன், குமுதம் ‘ரிபோர்ட்டர்’ ‘ஹெல்த்’, ‘டைம் பாஸ்’ என்று நிறைய ஏற்கனவே உண்டு. ஆனால் ஆங்கில ஆர்டிகிள்களான a, an, the யில் ஒன்று தமிழ்ப் பத்திரிகைப் பெயராக உருவெடுத்திருப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். அந்த ‘இந்து’ என்பது தமிழ் உட்பட எல்லா மொழிகளிலும் ‘இந்து’தான்.

பல நாட்களுக்கு முன்பே ‘ஹிந்து’ குழுமத்திலிருந்து ஒரு தமிழ் தினசரி வரப்போகிறது என்கிற செய்தி இருந்தது. ’காமதேனு’ என்கிற பெயரைக் கூடச் சொன்னார்கள். அதுவும் தமிழருக்குப் பழகிய சொல்தான். ஆனாலும் வாசகரின் மனதில் நன்கு பதிந்த பெயர்தான் வேண்டும் என்று ‘தி இந்து’ என்று பெயர் வைத்து கீழே ‘தமிழால் இணைவோம்’ என்று எழுதி விட்டார்கள். வழக்கம்போல் என்னிடம் ஆலோசனை கேட்கவில்லை. கேட்டிருந்தால் இதைவிடப் பரிச்சயமான, பொதுமக்களிடையே புழக்கத்திலிருக்கும் பெயரைச் சொல்லியிருப்பேன். ‘ ஹிண்டுப் பேப்பர்.’

sujatha1

இப்போது அந்தச் சுட்டியில் இருந்த கட்டுரை பற்றி.. தற்கால ஆய்வுகள் எப்படி நம்பிக்கைகள் மற்றும் உணர்ச்சிகள் பாற்பட்டு இருக்கின்றன, உண்மைத்தேடல் அதில் இல்லை என்பது பற்றிய கட்டுரை. ‘அட இவ்வளவு தெளிவாக தைரியமாகக் கூட தமிழில் கட்டுரை எழுதியிருக்கிறார்களே யார்’ என்று பார்த்தேன். பார்த்ததும் ‘அதானே’ என்று சொல்லிக் கொண்டேன். ‘ஜெயமோகன்.’ ஜெயமோகன் எழுதிய இன்னொரு கட்டுரையையும் இணைய தளத்தில் ‘தி இந்து’வில் படித்தேன். அதில் வணிக, கேளிக்கை எழுத்து தீவிர இலக்கியத்துக்கு இட்டுச் செல்லும் என்பது பற்றி எழுதியிருந்தார். அதைப் பற்றி பிறகு. அதில் ஒரு விஷயம் சட்டென்று கண்ணில் பட்டது. சுஜாதா, பாலகுமாரன், வாசந்தி, இந்துமதி, சிவசங்கரி அனைவரையும் ஒரே குழுவாகச் சொல்லியிருந்தார்.

சுஜாதா முழுக்க முழுக்க ஒரு புதுமைப்பித்தனோ, சுந்தர ராமசாமியோ இல்லை. ஆனால் அவர் மேற்சொன்ன குழுவில் உள்ள இதர எழுத்தாளர்கள் வகையிலும் இல்லை. அவர் ஒருவிதமான ‘திரிசங்கு.’ அதுவும் புதுமைப்பித்தன் குழுவின் அருகாகச் செல்பவர். திரிசங்கு கூட இல்லை, திரிசங்கு சொர்க்கத்தை நிர்மாணித்த விஸ்வாமித்திரர். அவரது சில நல்ல சிறுகதைகள் மிகச் சிறந்த தமிழ் சிறுகதைளின் தொகுப்பில் இடம்பெறத் தக்கவை. இலக்கிய வசிஷ்டர்கள் சுஜாதாவும் ஒரு ப்ரும்ம ரிஷி என்று மனசுக்குள்ளாவது ஏற்றுக் கொள்ளுமாறு இருப்பவை. மேலும் ‘விஷ்ணுபுரம்’ எழுதியதும் அதை ஜெயமோகன் சுஜாதாவுக்கு அனுப்பினார் என்று ஒரு சேதி உண்டு. யார் சொன்னது (ஒருவேளை ஜெயமோகனேவா) என்பது நினைவில் இல்லை. அது தவறான செய்தி என்றால் போகட்டும். உண்மையாய் இருக்கும் என்றல் ஒன்றை கூடவே நிச்சயமாய்ச் சொல்லலாம்.

ஜெயமோகன் நிச்சயம் விஷ்ணுபுரத்தின் கையெழுத்துப் பிரதியை பாக்கி நால்வரில் ஒருவருக்கும் அனுப்பியிருக்க மாட்டார்.

*********

‘தூ சங்கீத் கா சாகர் ஹே’ – மன்னா டே

‘உலகம் படைக்கப் பட்டதே ஒவ்வொரு மனிதரும் அவரவர் கலைப் பொருளைச் செய்து பார்ப்பதற்குத்தான்’ என்று ஆந்த்ரேய் தர்க்கோவ்ஸ்கி சொல்வது ஓர் எல்லை. அவ்வுலகின் ஒரு துளி அம்சமான சினிமா, கலையா? பொழுது போக்கா? வியாபாரமா? என்பதற்கு தமிழ், இந்திய, உலக அளவில் பெரும்பான்மை பதில் என்ன என்பது நமக்குத் தெரியும்.

இந்த வியாபரத்தில் பொது மக்களிடம் உடனடியாக விலை போக முக்கிய கச்சாப் பொருளாக திரை இசை இருக்கிறது.

இந்த கலை என்கிற விஷயம் கட்டாந்தரையின் இடுக்குகளில் முளைக்கும் புல் போன்று அயராது எங்கெங்கோ தோன்றிக் கொண்டே இருக்கும். குடிசை வாசல் கோலமாய், துலக்கி வைத்த பாத்திரமாய், சரியாக சமைத்த சாப்பாடாய், கட்டிய வேட்டியாய், கையசைவாய், நடையாய், நடத்தையாய், வார்த்தையாய் அதிலே வாக்காய் திடீர் திடீரென்று முளைத்து, திறந்த மனங்களைக் கொள்ளை கொண்டுவிடும். அப்படித்தான் ‘கலையாவது, மண்ணாங் கட்டியாவது’ என்ற தெளிந்த வெற்றிப் பார்வையில் ‘காசு, பணம், துட்டு, மணி, மணி’ என்று படத்தை எடுத்தோமா, காசைப் பார்த்தோமா என்று அனைவரும் முயல்கையில் திரை இசையிலும் களைகளுக்கிடையில் இந்தக் கலை சில சமயம் துளிர்த்து ஒளிரும். உலகில் எந்த சினிமாக் கலை ரசிகர்கள் மத்தியிலும் துணிந்து காட்டலாம் என்கிற மாதிரி முழுப் படங்களை எடுக்கும் பழக்கம் இல்லாத இந்திய / தமிழ்த் திரையுலகுகளிலும் திரை இசையில் இது அவ்வப்போது நிகழ்ந்து விடுகிறது.

இசை அமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், வாத்யக்காரர்கள் மற்றும் படத்தின் டைரெக்டரின் ரசனையின் மூலம் இது சாத்தியமாகிறது. மூன்று அல்லது ஐந்து நிமிடங்களுக்குள்ளாக, பிரபஞ்சத்தைக் காட்டும் பனித்துளியாய், நாதபிரம்மத்தை இப்பாடல்கள் நம் முன் கட்டிப் போட்டுக் காட்டிவிடுகின்றன. மிகவும் உயர்ந்த இசை நிகழ்வைக் கேட்ட திருப்தியைத் தருகின்றன. மீண்டும் மீண்டும் கேட்க வைக்கின்றன. இந்த அற்புதம் நிகழ்த்தியவர்களில் மன்னா டே (1 May 1919 − 24 October 2013) முக்கியமானவர்.

முகமது ரஃபி (24 December 1924 – 31 July 1980), முகேஷ் (22 July 1923 – 27 August 1976), கிஷோர்குமார் (4 August 1929 – 13 October 1987) ஆகிய மிகப் பெரிய பின்னணிப் பாடகர்களுக்கு மத்தியில் இவரும் இருந்தார். இந்த நால்வர் மற்றும் தலத் முஹம்மதுக்கும் (February 24, 1924 – May 9, 1998) வயதால் மூத்தவரான இவருக்கு முன் திரையுலகில் பிரவேசித்தவர் முகேஷ் மட்டும்தான். ரஃபி என்கிற புயல் திலீப் குமார், ஷம்மி கபூர் முதலிய சூப்பர் ஹீரோக்களுக்குப் பாடும் குரலாகையில் ராஜ் கபூருக்கு முகேஷும், தேவானந்துக்கு கிஷோரும் என்று பொருந்திப் போய் விட்டது.

தலத் முகம்மதும், ஹேமந்த் குமாரும் மங்கிப் போகையில் ராஜ் கபூருக்கும், பால்ரஜ் சஹானிக்கும் பின்னணி பாடிய மன்னா டே அசரீரியாகவும், நகைச்சுவை நடிகர்களின் குரலாகவும் ஆகி விட்டார். ராஜேஷ் கன்னா என்கிற சூப்பர் ஸ்டாரின் வருகை மேதை கிஷோர் குமாரை முன்னணிக்குக் கொண்டு சென்று பிறரைப் பின்னுக்குத் தள்ளிய போதும் மன்னா டே இருந்தார்.

ஒரு சூப்பர் ஸ்டாருக்கு பின்னணிக் குரலாக இருந்தவர்களே முன்னணியில் இருப்பது என்பது தமிழ் நாட்டிலும் நடந்தது. சிவாஜி, எம்ஜியார் ஆகிய இருவருக்கும் டி.எம்.எஸ்., ஏ.எம். ராஜா, பி.பி.எஸ். இருவரும் ஜெமினிக்கு என்றானபடியால் சீர்காழியும் திருச்சி லோகநாதனும் பிறருக்குப் பாடினார்கள். திருச்சி லோகநாதனை தமிழ்நாட்டின் மன்னா டே என்று சொல்லலாம்.

மன்னா டேயின் குரல் கணீரென்று ஒலிக்கும். இந்துஸ்தானி சாஸ்த்ரிய சங்கீதத்தை முறையாகப் பயின்றவர். தினசரி காலையில் சாதகம் (Riyaz) செய்பவர் என்று கவிதா கிருஷ்ணமூர்த்தி தமது அஞ்சலியில் குறிப்பிட்டுள்ளார்.

இசை, இந்தி இரண்டும் சுட்டுப் போட்டாலும் வராத என் போன்ற அதி பாமரர்களுக்கும் ‘தூ ப்யாருக்கா சாகர் ஹே’ என்று மன்னாடே சீமா வில் ஆரம்பிக்கையிலும், செம்மீனில் ‘மது’வுக்குப் பாடுகையில்  ‘மானச மைனி வரூ’என்று ஆரம்பித்து ‘நிலாவிண்டே நாட்டிலே நிஷா கந்தி பூத்ததோ, களிக் கூட்டுக் காரனை மறந்நு போயோ” என்று கேட்கையிலும் கண்ணில் நீர் மல்க வைத்து விடுவார். ‘நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே’ என்கிற சீர்காழியின் அற்புதமான பாடலின் அசல் ‘லாகா சுனிரி மே தாக்’ என்ற ‘தில் ஹி தோ ஹை’ படப் பாடலை பாடியவர் மன்னா டே.

‘பஸந்த் பஹாரி’ல் பீம்சென் ஜோஷியை இவரது பின்னணிக் குரல் ஜெயிப்பதாக அமைத்தற்குப் பரிகாரமாகவோ என்னவோ ‘படோசனி’ல் கிஷோர் குமாரிடம் இவர் ‘ஏக் சதுர நார்’  பாடலில் தோற்பார்.

இந்தியக் கிரிக்கட்டில் ஸ்பின் குவார்டட் என்று சொல்வார்கள். அவர்களில் வெங்கட் ராகவன் மாதிரி மன்னாடே.

2013ல் தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள், ராகவன், பி.பி.ஸ்ரீநிவாஸ், டி.எம். சவுந்திரராஜன், சம்ஷாட் பேகம், டி.கே. ராமமூர்த்தி என்று பல திரை இசை முக்கியஸ்தர்கள் இறந்திருக்கிறார்கள். இப்போது மன்னா டே. இவர் திரை வானிலிருந்து மறைந்து சில காலமாகி விட்டது. பௌதிக உலகிலிருந்து இப்போது விடை பெற்றுள்ளார். இந்தத் தாரகையின் குளுமையான, மனதைக் கவ்வும் ஒளி(லி) இன்னும் பல காலம் பல இசை ரசிகத் தலைமுறைகளை வந்தடைந்து மகிழ்வித்துக் கொண்டே இருக்கும்.

 

0 Replies to “கூறுகிறேன்…. முடிந்தால் கேளுங்கள் – 1”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.