ஏற்கெனவே எப்போதும்

”சையது சரியில்ல டாக்டர்..” சுபத்ரா கோஷ் சொன்னதில் வியந்தேன். .“லாப்ல அசிங்கமான பாட்டாப் பாடறான் டாக்டர். பெண்கள் இருக்கோம்ன்னு தெரிஞ்சா இன்னும் வேணும்னே சத்தமாப் பாடறான். இன்னிக்கு ரொம்ப மீறிப்போச்சு சார்.”

” அப்புறமா நான் சையத் கிட்ட பேசறேன்.” என்றேன். “இல்ல சார், எங்க முன்னால கண்டிச்சுச் சொல்லுங்க.” அவளது குரலில் இருந்த தீவிரத்தில், ப்யூனை அழைத்து சையதை கையோடு கூட்டி வரச்சொன்னேன். ஒல்லியாக கறுத்து அடையாளம் கரைந்து போன பீஹார் மாநிலத்தவன் போல இருக்கும் சையது எங்கள் விலங்கியல் துறையில் லாப் அசிஸ்டெண்ட் போல. இதில் ’போல’ என்பதைக் கவனிக்க வேண்டும். அவனுக்கு அரசு சம்பளமில்லை. காண்ட்ராக்ட் ஊழியனுமில்லை. சையதுக்கு யார் சம்பளம் கொடுக்கிறார்களென்பது என் கவலையில்லை.

”ஆமா” ஒத்துக்கொண்டான் சையது. “ சார். இதெல்லாம் ஒரு ஜோக்குக்காக பழைய இந்தி சினிமாப் பாட்டுகளின் வரிகளை மாற்றி நானே அமைக்கும் பரோடி பாடல்கள். அஞ்சு வருஷமா ஆராய்ச்சி மாணவர்கள் கேட்டுச் சிரித்த பாட்டுதான் இதெல்லாம். என்னமோ இவங்கதான்..”நான் சற்றே குரலையுயர்த்தினேன். “சையத். எல்லை மீறியிருக்கிறாய். இது கடைசி எச்சரிக்கை. இனிமேல் ஒரு புகார் வந்தால், வேலையிலேர்ந்து எடுத்துருவேன். “

சையது விறைத்தான் “ சார், நான் வேலைக்கு சேர்ந்து ஏழு வருசமாச்சு. ஒருத்தர் கூட இத மோசம்னு சொல்லல. நீங்க என்னை விரோதமாப் பாக்கறீங்க. யூனியன்ல பேசிக்கறேன். எனக்கும் ரூல்ஸ் தெரியும்.” விருட்டென வெளியேறினான்.

எனக்கு உள்ளூற ஒரு உதைப்பு. எதாச்சும் பண்ணிவிடுவானோ? இன்னும் ஒன்றரை வருடம் துறையின் தலைமைப் பதவி எனக்கு இருக்கிறதே? யூனியன் அது இது என்று வந்தால்?…அப்போதுதான் நினைவுக்கு வந்தார் சுபோத் பானர்ஜி.

வட்டமுகத்தில், சிறிய கண்களுடன் லேசாக சப்பை மூக்குடனிருக்கும் மங்கோலாய்ட் மரபு வங்காள வம்சாவளிக்காரர் சுபோத். நிக்கோட்டின் அடர்ந்த தடித்த கருத்த உதடுகள், எப்பவும் அடைத்தே இருக்கும் மூக்கினால் தெளிவற்று வரும் சொற்கள், சிறிய தங்க ப்ரேமில் கண்ணாடி , சற்றே மஞ்சள் நிறத்தோல் என ஒரு டிபிகலான பெங்காலி. எங்களது ஆராய்ச்சி நிறுவனம் அரசு சார்ந்தது என்றாலும் நாங்கள் செய்யும் ப்ராஜெக்ட்கள், நிறுவனங்கள் தரும் உதவித் தொகை, ஆலோசகத் தொகை எனக்கிடைக்கும் நிதியில் செல்வச்செழிப்பாக நடக்கிறது. சுபோத் , மொழியியல் துறையில் , பேச்சுத் தொடர்புகள் குறித்த சைக்கோ லிங்விஸ்ட்டிக் (psycholinguistic) ஆராய்ச்சியில் இருப்பவர். தொழிலாளர்களின் கலாச்சாரம், பின்புலம், சூழ்நிலை முதலியவற்றைக் கணக்கிலெடுத்து, கண்காணிப்பாளர்கள் முதல் ஜெனரல் மேனேஜர் வரை ஆளுமைத் திறம் வேண்டுவோருக்கு, எவரிடம் எப்படிப் பேசவேண்டும் என்பதில் பயிற்சியும், ஆலோசனையும் கொடுக்கும் விற்பன்னர்.

amygdala_Brain_Window_Empty_Waves_Psychology_Open_Dissipate

அவரிடம் சையது விஷயத்தைச் சொன்னேன். ”நாளைக்கு வீட்டுக்கு வாங்க. விவரமாப் பேசலாம்“ என்றார். மறுநாள் இரவு, அவர் வீட்டுக்குப் போனேன். வெற்று மார்பைச் சொறிந்தபடியே, ”அவன் இரு காரணங்களால் இப்படிப் பேசியிருக்கான். ஒன்று ஆதி உணர்வு – அச்சம். எங்கே நீங்க அவனை வேலையிலேர்ந்து எடுத்துருவீங்களோன்னு ஒரு பயம். ரெண்டாவது. முந்தி இருந்தவங்க ஊக்குவிச்ச ஒரு செயலை இப்ப இருக்கறவங்க ஏன் நிராகரிக்கறாங்க ன்னு அவனுக்குப் புரியலை. ஒரு திணறல், ஆயாசம், கோபம். அதான்.” என்றார்.

”புரியலை”

“என்னோட ஆராய்ச்சி இதுலதான் இப்ப ஓடிக்கிட்டிருக்கு. சையது ஒரு உன்னத உதாரணம்.ஆதியில நமக்கு தோணற உணர்ச்சி என்னன்னு நினைக்கிறீங்க?”

“அன்பு, அரவணைப்பு, தாயின் கருவறையில் பாதுகாப்பு?”

“அதான் இல்ல. ஆதி உணர்வு அச்சம். எங்க நாம தாக்கப்பட்டுறுவமோன்னு ஒரு பயம். இதுதான் உலகத்தில் எந்த உயிருக்கும். மனிதன் சமூக விலங்கு. அவனும் முதலில் வெளிச் சமூகத்தை அச்சத்துடனே பார்க்கிறான். பின்னர் எப்படியாவது அதில் சேர்ந்து தனது தனித்தளத்தைக் கைவிட்டுக் கரைந்து விடப்பார்க்கிறான். கரைவதில் அவனுக்கு அபாயம் குறைவு. “

“சையதுவுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு?”

“சையது பற்றி நீங்கள் அறியவில்லை. அவன் பங்களாதேஷி. இல்லீகல் இமிக்ரண்ட். பிடிபட்டால் சிறைப்படுத்தப்படுவான், நாடு கடத்தப்படுவான். அவனுக்கு இந்த சமூகத்தில் அங்கமாவதில், தனது அடையளம் கரைவதில் அதீத அக்கறை உண்டு. சமூக அங்கீகாரத்தை அவன் தனது கெட்டவார்த்தைப் பாடல்களால் இங்கு பெற்றான். மக்கள் சிரித்தனர், ரசித்தனர், அதில் தனது இருத்தலை, அங்கீகாரத்தைக் கண்டு, உந்துதல் கொண்டான். அதில் எதிர்ப்பு வருவதில் அவனது இருத்தல் அசைக்கப்படுவதாக அவன் பயப்படுகிறான். அதன் வெளிப்பாடு எதிர்ப்பு, கோபம். அயலாரின் அங்கீகாரம்தான் விடை என்பது முன்கூட்டியே அவனுள் தோன்றிவிட்டது.”

சுபோத் எழுந்தார். ஒரு துண்டு பேப்பரை என் முன் நீட்டினார். “இதை வாசியுங்கள்” ஆங்கிலத்தில் ப்ரிண்ட் செய்யப்பட்டிருந்த குட்டியூண்டு பத்தி அது.

“She was thillred by the touch. Asif many flwoers have blosommed in her veins, she logned for the that to continue. “I want More, more’ she pleaded. When it was all over , she walkd out with tremling legs, weekned by the ecxstasic expeirience”

“அவள் அந்தத் தொடுதலில் சிலிர்த்தாள். ஆயிரம் மலர்கள் அவள் நாடிகளில் பூப்பதுபோன்ற உணர்வு குமிழிக்க, அந்த உணர்வு தொடந்து கொண்டேயிருக்கவேண்டுமென்று பேராவல் கொண்டாள். இன்னும், இன்னும், ப்ளீஸ்” அவள் மனதுள் உரக்க இறைஞ்ச இரைஞ்ச, எல்லாம் முடிந்து அவள் நடுங்கும் கால்களில் நடந்தபோது , அந்த உன்னத உணர்வு அவளை பலவீனப்படுத்தியிருந்தது”

”இது என்னவென்று நினக்கிறீர்கள்?” என்றார் சுபோத் என் முன்னே குனிந்தவாறே. “ எதோ ஒரு காமக் காட்சியின் விவரணை. ஒரு பெண்ணின் அனுபவம்..” என்றேன்.

சுபோத் புன்னகைத்தார். மீண்டும் ஒரு முறை புகை இழுத்து விட்டு, “ இது ஒரு பெண்ணின் உணர்ச்சிகள். கரெக்ட். ஆனால் காமக் காட்சியில்லை. அவள் ஒரு யோக நிலையில் இருக்கையில், ஒரு மயிலிறகு அவளைத் தீண்டுகிறது. அதன் வர்ணனைதான் இது.. ஆங்கில சொற்றொடர்களில் எத்தனை பிழைகள் பாருங்கள் இதில்? இருந்தும் நம்மால் ஒரு அர்த்தத்தைக் கற்பித்துக்கொள்ள முடிகிறது. சொல்லை அறிந்துகொள்ள எழுத்துக்கள் சரியாக இருக்கவேண்டிய அவசியமில்லை என 1976ல் கிரஹாம் என்பவர் ஆய்வில் குறித்தது, இப்போது கேம்ப்ரிட்ஜ் பல ஆய்வுகளில் உறுதியாயிருக்கிறது. நாம் எழுத்துக்களைப் படிப்பதில்லை. சொற்களையே கிரகிக்கிறோம்.. நமது புதிய அறிதல், முன்பு அறிந்த்திலிருந்தே நிகழ்கிறது என்பதை இப்போது நீங்கள் சொன்னது தெரிவுபடுத்துகிறது.. ஏற்கெனவே நடந்த ஒரு நிகழ்வு, நம்மை எப்பொழுதும் இப்படித்தான் நிகழும் என நம்ப வைத்துவிடுகிறது. சையது தனது மூன்றாம்தர பாடல்களுக்கு ஏற்கெனவே கிடைத்த அங்கீகாரம், எப்பொழுதும் கிடைக்கும் என எதிர்பார்த்து, மாற்று வினைகள் சமனில்லாது போகவே குழம்புகிறான். அச்சம் கொள்கிறான். ” சிகரெட் சாம்பலை சோபாவின் விளிம்பில் தட்டிவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

”நான் மனிதனின் உளவியலை அறிதலுடன் தொடர்பு படுத்துகிறேன்… அறிதலுக்கு மொழி தேவையில்லை. குகையில் வாழ்ந்தபோதே மனிதன் பலவற்றை அறிந்தான் அறிதல் ,ஐந்து பொறிகள் கொண்டு உணர்வதை ஒருங்கிணைக்கிறது.. தருக்கம் இன்றி, சிந்திப்பது இன்றி, , உணர்வுபூர்வமாக மட்டுமே ஒருங்கிணைத்தால், விபரீதத்தை வளர்க்கும். இதுதான் எனது கோட்பாடு. மனித மனம் நிகழ்வுகளோடு தான் ஏற்கெனவே அறிந்தவற்றை, பொருத்தி எப்பொழுதுமே இது இப்படித்தானா? எனச் சரி பார்க்கிறது. அந்த முயற்சியில் மூளையில் என்ன செயலாற்றம் தோன்றுகிறதோ அதை உடல் செய்ய , மூளை தூண்டுகிறது. இதில் மூளையின் சிலபகுதிகள் குறிப்பாக அதிக அளவில் வேலைசெய்கின்றன. “

Moolai_Single_Eye_View_Point_Brain_Tie_Man_Coat_Suit_Professor_Research_immigrant

நான் சையதை விட்டுவிட்டு சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருந்தேன்.

“ அதில் ஒன்று அமைக்டலா. இது மூளையின் இருபகுதிகளுக்கும் நடுவே கீழே இருக்கிறது. அச்சம், கோபம், விறுவிறுப்பு போன்ற உணர்ச்சிகளின் கிடங்கு அது. மூளையின் இயக்கம் அதன்கட்டுப்பாட்டிற்குள் மட்டுமே இருக்கும்வரை , சிந்தனை என்பது தருக்கத்தின் வாயிலாக நிகழாது, உணர்ச்சிகள் வழி நடக்கும் வரை மனிதன் உணர்வு பூர்வமாக, விலங்குகளின் முடிவையே எடுப்பான். “ தாக்கு, இல்லை தாவி ஓடு” இதைத்தான் சையது செய்தான். மிரட்ட முயற்சித்து, அபாயம் பலமடங்கு என்று அறிந்ததும் ஓடியிருக்கிறான். இந்த ’ஏற்கெனவே – எப்பொழுதும்’ என்ற பிணைவுக் கோட்பாட்டைத் தத்துவார்த்தமாகப் பலர் சொல்லியிருக்கிறார்கள். நான் அறிவியல் பூர்வமாக நிருபிக்க முயல்கிறேன்.“

“சரி, இப்போ நான் என்ன செய்யணும்., அதச் சொல்லுங்க” என்றேன்.

“உங்க முன்னாள் ஹெட், டாக்டர் தாமஸ் ஆப்ரஹாம் ரொம்பக் குறைந்த சம்பளத்தில் கிடைக்கிறான் என்று , சையதைப் பற்றி ஆராயமலே டெம்பர்ரியாக அவரது ப்ராஜெக்ட்டில் சேர்த்துவிட்டார்.. ரிசீப்ட்டில் கையெழுத்து வாங்கிக்கொண்டு சம்பளம் கொடுப்பார். ஆராய்ச்சி மையத்திற்கும் அதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவனால் யூனியனுக்குப் போகமுடியாது. கவலையை விடுங்கள்”

“அது போதாதே? அவனை நான் எப்படி டிப்பார்ட்மெண்ட்டிலிருந்து வெளியே எடுக்க முடியும்? தாமஸ்ஸுக்கும் எனக்கும் ஆகாது.”

“சரவணன், இத எங்கிட்ட விடுங்க” அவர் எழுந்து கொள்ள நான் விடைபெற்றேன். எதிர்வீட்டு ஆர்கானிக் கெமிஸ்ட்ரி சீனியர் ப்ரொபஸர் “ அந்த சுபோத்கிட்ட பழக்கம் வச்சுக்காத. ஒரு மாதிரியான ஆளு” என்றார். தலையாட்டினேன். தலையில் அடிபட்டு பக்க வாதத்தில் கிடக்கும் சுபோதின் நண்பன் விஸ்வாஸ் பாணிக்ரஹியின் வீட்டுக்கு அவர் அடிக்கடி செல்வதும் அவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் பேச்சு அடிபடுவது நான் கேட்டதுதான்.
இருநாட்களுக்குப் பின் சையது லாப்பில் வரவில்லை. தாமஸ் அவன் செல்போனுக்கு அடித்துப் பார்த்து அது ’ஸ்விட்ச் ஆஃப் ஆகிக்கிடக்கிறது’ என்றார். பின் வேறொரு லோக்கல் பையனை யூனியன் லீடர் சிபாரிசில் சேர்த்துக்கொண்டார்.

“என்ன செஞ்சீங்க? “ என்றேன் கலவரமாக, போனில் சுபோதிடம்.

“ஏற்கெனவே வெளியூர்க்காரன் நம்ம வேலையெல்லாம் எடுக்கறான்’னு ஒரு அச்சம், லோக்கல் ஆளுங்ககிட்ட இருக்கு. முந்தி அப்படி வந்த குடியேறிகள் இவங்களை வேலை வாங்கற அனுபவம் எப்போதும் தொடர்ந்துடுமோ? என்கிற அச்சமும் இருக்கு.. ரெண்டும் சேர்ந்து ,கொந்தளிச்சிகிட்டிருக்கிற ஒரு அரசியல் கட்சி அலுவலகத்துல சொன்னேன்…சையது காலி..நிஜம் ஒன்ணுதான். ஏற்கெனெவே, எப்போதும். நாலு மாசத்துல தீஸிஸ் தாக்கல் பண்ணிடுவேன் சரவணன்.”.

ஒரு வருட ஆராய்ச்சிக்கால அனுமதி லண்ட் யூனிவர்சிடியிலிருந்து வந்துவிட, நான் ஸ்வீடன் சென்றுவிட்டேன். மூன்று மாதங்கள் கழித்து ஒரு மின்னஞ்சலில் ’சுபோத் இறந்துவிட்டார் பாணிக்ரஹி வீட்டில் ஒரு நாள் சுபோத் போயிருக்கும்போது யாரோ தலையில் அடித்துக் கொன்றுவிட்டார்கள். போலீஸ் ,சையதாக இருக்கும் என சந்தேகிக்கிறது.. பாணிக்ரஹி வீட்டினர் ஒரிஸா போய்விட்டனர்” என என் மாணவன் எழுதியிருந்தான். ஆராய்ச்சிக்காலம் இருவருடமாக நீட்டித்துத் திரும்பியபின் , பாணிக்ரஹியின் கோபால்பூர் முகவரி தேடிப்பிடித்து அங்கே போனேன். விஸ்வாஸ் உள்ளே கட்டிலில் படுத்திருக்க, அவன் மனைவி வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தாள். வெயில் கொளுத்திக்கொண்டிருக்க அனல் காற்று வறண்டு வீசியது.

“சுபோத் ஒரு தடவ கூட தவறா நடக்க முயற்சி செய்யவே இல்லை, பாய் சாப். இவரோட சீனியருங்கதான் மோசம். ஒருத்தன் ஒருதடவ என் பையன் முன்னாலேயே… சுபோத் வந்த அன்னிக்கு இவருக்கு வாயில ரத்தமா வந்துச்சு. நான் மயக்கமா விழப்போனப்போ சுபோத் தாங்கிப் பிடிச்சு அடுத்த ரூம்ல படுக்க வைச்சுருக்காரு. அதப் பாத்து எம் பையன் . இந்த ஆளும் அம்மாவை என்னமோ பண்ணறான்னு பயந்து போயி, அடிச்சிட்டான்.” அதன் பின் அவள் பேசியது எனக்குக் கேட்கவில்லை.

சூடாய் அடித்த முதுவேனில் காற்றில் சுபோத் வெற்றிச்சிரிப்பு கலந்திருந்ததாகப் பட்டது.