லூயீஸ் எர்ட்ரிக் – கதை அறிமுகம்

என் பிறப்பின் ஆண்டுகள் கதைக்கான குறிப்புகள்

லூயி எர்ட்ரிச்
லூயி எர்ட்ரிச்

இது மிக நன்றாக எழுதப்பட்ட கதை. ஒரு கதையை எப்படிச் சொல்லவேண்டும் என்பதற்கான உதாரணமும் பயிற்சியும். ஆக்டேவியா பட்லர் கதை மாதிரி. http://solvanam.com/?p=27874

முதல் வரியிலேயே கதை ஆரம்பமாகி விடுகிறது. ‘என் சகோதரன்’ ‘அவன் தாய்’ என்று எழுதும்போது. இதற்கு நுட்பமான, ஸ்திரமான கலைத் திறன் வேண்டும். அது உண்மையின் மீது கட்டமைக்கப்பட வேண்டும். இதை நேரடியாகக் கூட சொல்லியிருக்கலாம். ஆனால் வலியோ, மகிழ்வோ வாழ்வில் நாம் வர்ணிக்கும் அமைப்பில் வருவதில்லை. அவை நேரிடும்போது புதிதாக நம் அனைத்தையும் ஆக்ரமித்து நிகழ்கிறது. இதைக் கொண்டுவருவதுதான் ஒரு கதாசிரியரின் தரத்தைக் காட்டுகிறது. பெண்குழந்தை, ஊனமானது, வாழப்போவதில்லை என்பது ஒதுக்கி வைக்கப்படுகிறது. இதற்கு நேர்மாறான ஆண், ஊனமற்றது, வாழக் கூடியது தேர்வு செய்யப் படுகிறது.

கழித்துக் கட்டப்பட வேண்டிய உயிரிடம் தருவதற்கு இருக்கிறது. வாழ்வுக்கு உகந்ததென்று தேர்ந்து வளர்க்கப்பட்டதிடம் அதை வாங்குவதற்குக் கூட திராணி இல்லை.

வெள்ளைத் தோல் குடும்பத்தில் இது நடக்கிறது. கழித்துக் கட்டப்பட வேண்டியது என்று கருதப்படும் பழங்குடி குடும்பத்தால் இந்தக் குழந்தை எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது ஒரு முறை கூட தான் அருவருப்பாய் இருக்கிறோம் என்று உணர்ந்ததில்லை. அந்த உலகமும் குறைகள் அற்றதில்லை. ஆனால் அக்குறைகள் சாதாரண மனித ஜீவன்களுடையவை. இந்த உலகை நரகமாக்கியுள்ள சுயநலம் (இப்போது மகனுக்கு கிட்னி கொடுக்க செய்ய ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் நிராதரவாய் விடப்பட்ட பெண்ணை அணுகும் தாய்) தனக்கு வாய்க்காததை விலக்கி வைக்கத் தயங்காத மனிதர்களுடைய்வை போல் குரூரம் நிரம்பியவை அல்ல. அதன் மறுபக்கம் அந்த சகோதரன். அவன் என்னவாக ஆகியுள்ளான்?

மனித மனம், அதன் பொருளற்ற புத்திசாலித்தனங்கள், பொதுக் கருத்து, ஆனால் நிகழ்வுண்மை, எல்லாம் இருந்தும் இணைந்து பிறந்தவன் உடனிருப்பதாய் உணர்வது, உடல் ஊனம், சக மனிதர்களின் அன்பால் அது இல்லாமல் போவது, பூரண உடல் நலம், அது சக மனிதர்களின் உடனிருப்பு இருந்தும் சிதிலமாவது, எக்கத்தின் அடியற்ற கொள்கலன், அதை நிரப்ப ஒரு வாய்ப்பு கிட்டியும் தன்னை ஈந்தாவது அதை நிரப்ப முடிவெடுக்கும் மனம், உடன் பிறந்து வளர்ந்தவர்கள் (நீ வெள்ளையாய் இருக்கிறாய் என்று வெறுக்கும் சிறுமி பின் பாறையைப் போல் நின்று ஆதரவு தருவது) அன்பு கொடுத்தவர் மறைந்தும் பொழிவது, சுயநலம் எங்கும் ரத்தம் உறிஞ்சுவது (தேர்ந்த குழந்தை, விட்டுத் தள்ளிய குழந்தை இரண்டிடமும்) தர்க்கம், தன் செயலை நியாயப் படுத்துவது இன்னும் மேலோட்டமாக மேட்டுக் குடிக்கும், பழங்குடிக்கும் இடையே நாகரிகத்தால், நிறத்தால் விளைந்துள்ள அடிப்படை வேறுபாடுகள் என பல விஷயங்கள் இக்கதையில் உள்ளன.

இது மேலும் சிறந்திருப்பது இக்கதை வழக்கமான யதார்த்த பண்ணியில் சொல்லப்படாமல் அதை விட நுட்பமான யதர்த்த பாணியில் சொல்லப்பட்டிருப்பது.

எப்படியெல்லாம் கதை எழுதுகிறார்கள். இவரும், ஆக்டேவிய பட்லரும் பெண்கள். கலை மனதிற்குப் பால் இல்லை. அது உண்மையை மணந்தது.

‘சோஃபீ’ஸ் சாய்ஸ்’ என்று ஒரு படம். போர்ப்படம் (War film). அதில் எதிரி ராணுவத்திடம் தன் இரண்டு குழந்தைகளில் ஒன்றைத் தந்துவிடவேண்டிய நிர்பந்தத்தில் சோஃபி பெண்ணைக் (சிறுமி) கொடுப்பாள். பையனை (பாலகன்) வைத்துக் கொள்வாள். இரண்டையும் இழப்பது பற்றி சினிமா சொல்லும். மிகச் சிறந்த போர் மற்றும் போர் எதிர்ப்புப் படம். மெரில் ஸ்ட்ரீப் தாயாக (இந்தக் கதையில் வரும் தாய் போல் அல்லாது) துயரத்தின் ஆழத்தைக் கொண்டுவந்திருப்பார். படமே அருமையான படம்.

மனிதர்களின் தேர்வு எவ்வளவு அர்த்தமற்றது என்று டால்ஸ்டாயின் “மனிதர் வாழ்வது எதனால்’ என்கிற கதையும் சுட்டும்.

oOo

இறுதியில் அப்பெண் சகோதரனாக இருந்தும் முழு அன்னியனாகவே இருக்க விரும்பும் ஒருவனிடமிருந்து பின்னே பின்னே விலகிப் போகிறாள். அந்த அறையை விட்டு, அதன் அன்பற்ற, இரக்கமற்ற, வெறுப்பு வெளியை விட்டு விலகிப் போக முயலும் அவள் இன்னமும் அந்த வெள்ளையோ வெள்ளை அறையில் சிக்கி இருப்பதாகவே உணர்கிறாள். அந்த வெள்ளை அறை அவளுடைய அடையாளமும்தான். இதைத்தான் அவளுடைய தத்துச் சகோதரியும், அவள்பால் மிக்க அக்கறையும் கொண்ட ஷெரில் அறியாத பருவத்தில் அந்த அடையாளத்தில் விரலை வைத்து விடுகிறாள்- கண்ணாடி ஜாடி உடைந்தததற்கு லிண்டா மீது ஏன் பழி சுமத்தினாள் என்று லிண்டா கேட்கும்போது ’நீ வெள்ளைக்காரி’ என்பது அவளுடைய காரணம், அப்போது கருத்துகளும் உணர்ச்சிகளும் பரிமாணம் கூடி பரிணாமமடையும் பருவத்தில் இருந்த குரோதம், வளர்ந்ததும் அன்பாக, பரிவாக, அக்கறையாக மாறி விடுகிறதை லிண்டா பதிவு செய்கிறாள்.

லிண்டாவை இறுதியில் அச்சுறுத்துவது அந்த வெள்ளை அறை, வெள்ளையரின் தன்மய வாழ்க்கை. அவள் தேடிக் கொண்டிருந்தது அந்த வெள்ளை சகோதரன்தான், ஆனால் இந்த வெள்ளையன் இல்லை. இவன் இருக்கும் வெளியும் இல்லை. ஸெட்ரிக்கின் பழுப்புப் பிரதேசமே உடலால் குறைபட்ட, மனதால் நிறைவடைந்த இவளுக்குப் பொருந்தும்.

oOo

அமெரிக்கப் பழங்குடியினர் என்று. அவர்களை அவர்களின் நிலப்பரப்புகளில் இருந்து துரத்தி ஒவ்வொரு திசையாக இருப்பிடமே இல்லாமல் ஆக்கி ஒழித்துக் கட்டவிருந்தார்கள். இறுதியில் ஏதோ ஒரு இடத்தில் அமெரிக்க வெள்ளையரின் இனவெறியைத் தாண்டி ஒரு சிறு வெளிச்சம் அவர்கள் மனதில்/ கருத்தில்/ சட்டத்தில் நுழைந்தது. அதை ஒட்டி அவர்களுக்கு யாரும் வாழ விரும்பாத, வாழ முடியாத கிட்டத் தட்ட பாலைவனங்களும், கட்டாந்தரையுமான நிலங்களில் ஒரு பகுதியை அவர்களுக்குரிய நிலங்களாக அறிவித்து அங்கே அனுப்பி வைத்தனர். அவை ரிசர்வேஷன் பகுதிகள் எனப்படுகின்றன.

அங்கே அமெரிக்க வெள்ளையர் நிலங்களை வாங்க முடியாது, இருக்கவும் அப்பிரதேச மக்களின் அனுமதி பெற வேண்டும். அவை கிட்டத் தட்ட தாமே தம்மை ஆளும் பகுதிகள் போல. ஆனால் overall administrative and sovereign powers எனப்படுவன அமெரிக்க மைய அரசின் பால் உள்ளன. இருந்தும் இவை அமெரிக்க இந்தியர் என்று தவறாக அழைக்கப்படும். அமெரிக்கப் பழங்குடியினரின் சுதந்திர நிலப்பகுதிகள் என்றே புரிந்து கொள்ளப்படுவன.

இந்தக் கதையின் நாயகி அப்படி ஒரு பழங்குடிப் பெண் அல்ல. அவள் வெள்ளையர் இனக் குழந்தையாகத்தான் பிறக்கிறாள். ஆனால் பிறப்புக் குறையால் இறப்பாள் என்று நினைத்த மருத்துவர் அதைச் சொல்லவும், பெற்றோர்கள் இக்குழந்தையை எடுத்துச் செல்ல மறுத்து ஏற்கனவே பிறந்த ஆண் குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விடுகின்றனர். மருத்துவமனை திக்குமுக்காடும் சமயத்தில் அங்கு கடை நிலை ஊழியராகப் பணியாற்றும் ஒரு பழங்குடிப் பெண், இக்குழந்தைக்குக் கருணை நிமித்தம் தன் முலைப்பாலைக் கொடுக்கிறாள். தன் வீட்டுக்கே எடுத்துப் போகிறாள். பின் முறையாக அக்குழந்தையை தத்தெடுத்துக் கொள்கிறாள். இத்தியாதி. ஆனால் குழந்தை வளர்ந்து சிறுமி ஆகும்போதே அவளுக்குத் தெரிகிறது தான் இப்படி என்று- சொல்லித்தான் வளர்க்கிறார்கள். பழுப்புத் தோல் மக்கள் நடுவே வெண்சிவப்புத் தோலும், நீலக் கண்ணுமாக ஒரு குழந்தை வளர்ந்தால் தெரியாமல் எப்படி இருக்கும்?

இறுதியில் அவள் தன் சிறுநீரகத்தைக் கொடுக்க விரும்பினாலும், வெள்ளை சகோதரனின் சுய வெறுப்பும், இவளுடைய குரூபத்தின் மீது அவனுக்கு வரும் அருவருப்பும் இவளை விலக்குகின்றன. ஆனால் அந்தச் சிறு வெள்ளை அறை அவளைச் சூழ்வது, இவளுடைய மனதில் இருக்கும் ஒரு வெற்றிடம். பிறப்பிலிருந்து தன்னோடு இரட்டையாகப் பிறந்த ஒருவனின் இல்லாமை. அதை நிரப்ப முடியும் என்று எண்ணி இவனைப் பார்க்க வருகிறாள், ஆனால் அவனுக்கு அதை நிரப்ப முடிவதில்லை, விருப்பமும் இல்லை.

தன் குரூபத்தை, குறையை மீறி வாழ்வில் பிடிவாதத்தோடு இவள் தக்கி நிற்கிறாள். இவளுடைய குறைக்குக் காரணமாகக் கருவில் இடத்தை ஆக்கிரமித்து வளர்ந்த அவன், மாறாக வாழ்வின் மீது பிடிப்பின்றி, இயலாமையோடும், நம்பிக்கை இன்றியும் வாழ்ந்து தற்கொலைக்கு முயலும் நபராக இருக்கிறான்.

இவளுடைய ஏழை, ஆனால் பாசமுள்ள தத்துப் பெற்றோரும் கூட வளர்ந்த தத்துச் சகோதர சகோதரியரும் இவளுக்கு நங்கூரம் ஆகிறார்கள். பிறந்த குழந்தையை ஏற்க மனமில்லாத அளவு கருக்கான காரியபுத்தி உள்ள பெற்றோரால் அவனுக்கு ஆதாரமாகவும் இருக்க முடியவில்லை, நம்பிக்கையையும் கொடுக்க முடியவில்லை.