ஒவ்வொரு முறை வெளிநாட்டுப் பயணத்துக்கு மூட்டை முடிச்சு கட்டும்போதும் முதன்முதலாய் 1986 ல் அமெரிக்காவுக்குப் புறப்பட்ட நினைவுகள் வரும். அதற்கு முன்பு ஒரே ஒருதரமே, அதுவும் பெங்களூரிலிருந்து சென்னைக்கு, விமானத்தில் போன அனுபவம் மட்டும் உண்டு. பெங்களூரிலிருந்து பாம்பே பின் அங்கிருந்து பேன் ஆம் (Pan Am) விமானத்தில் அமெரிக்கா. நடுவில் ஒரு இரவு ஃப்ராங்ஃபர்ட்டில் தங்கி பின் அங்கிருந்து நியூயார்க் என்று பலநாட்கள் பயணம். இந்திய அரசாங்கம் தாராளமாய் அனுமதிக்கும் 500 டாலர்களை இறுக்கக் கையில் பிடித்துக் கொண்டு பாம்பே (அன்றைய பெயர்) சர்வதேச விமான நிலையத்தில் காப்பி 5 டாலர்கள் என்று பார்த்து மலைத்து விமானத்தில்தான் உணவு தருவார்களே எனப் பட்டினியாய் உட்கார்ந்திருந்தால், அவர்கள் கொடுத்த தட்டில் இருந்தவை ஒன்றும் தெரிந்த விஷயமாய் இருக்கவில்லை. என்னுடைய ட்ராவல் ஏஜண்ட் வெஜிடேரியன் சாப்பாடு என்று குறிப்பு போட மறந்து போய் விட்டார். ஆறடி உயரத்துக்கு இருந்த ஜெர்மன் விமானப் பணிப்பெண்ணிடம் சொன்னபோது ‘ஸாரி, தட் இஸ் ஆல் வீ ஹேவ்” என்று சொல்ல எனக்கு அழுகையே வந்துவிட்டது. தட்டிலிருந்த இலைகளையும் தயிரையும் கொஞ்சம் ரொட்டியோடு தின்று மீண்டும் பட்டினி. இப்படி ஆரம்பித்தது என் முதல் வெளிநாட்டுப் பயணம்.
பின் அலுவல் விஷயமாய் பறக்க நேர்கையில், எதை மறந்தாலும் எந்த மாதிரி உணவு தேவை என்று சொல்ல மறப்பதில்லை. எமிரேட்ஸ் விமானங்களில் இந்திய உணவு மிக நன்றாய் இருக்கும். ஆனால் இந்தப்பயணத்தின் இரண்டாவது கட்டத்தில் லுஃப்தான்ஸா விமானத்தில் ஏஷியன் வெஜிடேரியன் மீலில் வந்த வஸ்துக்களை சாப்பிடுகையில் பேசாமல் அசைவ உணவையே வாங்கி சாப்பிட்டுவிடலாமா என யோசிக்க வைத்தது.
பயணக்குறிப்பு என்று ஆரம்பித்து இதுவரை சாப்பாட்டைத் தவிர எதுவுமே பேசவில்லை. என்னைப் பொறுத்தவரையில் சரியான உணவு இருப்பது விடுமுறையை அனுபவிக்க மிக முக்கியமான ஒன்று…
அந்த முதல் பயணத்தின்போது நியூ யார்க், வாஷிங்டன், நயாகரா, க்ராண்ட் கேன்யன், டிஸ்னிலாண்ட், ஸாந்தா பார்பரா, லாஸ் ஏஞ்சலஸ், லாஸ் வேகஸ் என்று சுற்றியபோதும், சைவ உணவு சரியாய் கிடைக்காமல், பெரும்பாலும் பர்கரில் இருந்த மாமிசத்தை எடுத்துப் போட்டுவிட்டு கோல்ஸ்லா என்ற ஸாலடுடன் தின்று ஊர் சுற்றியதில், பார்த்த இடங்களெல்லாம் எல்லாம் மனதில் சோகையாய்தான் பதிந்தன.
இப்போது பயணிப்பவர்கள் அதிருஷ்டசாலிகள். அநேகமாய் எங்கு போனாலும் எல்லா வகை சாப்பாடும் கிடைத்துவிடுகிறது. ஃபிரான்ஸில் சரவண பவன் இருக்கிறது! உலகமயமாக்கலுக்குப் பின் நம் நாக்கும் பலவகை உணவுகளை சுவைத்து சோயாவுக்கும் டோஃபுவுக்கும் பழகியிருக்கிறது.
போன மாதம் ஸியாட்டிலில் மகன் வீட்டுக்குப் போகும் ஆயத்தமாய் சாம்பார்பொடி, இட்டிலி மிளகாய் பொடி , இதர பொடிகள், விநாயக சதுர்த்தி வருகிறதே என்று அரிசி மாவு என்று ஒரு பெட்டி நிறைய நிரப்பிக்கொண்டு போனால் அங்கே ரெட்மண்டில் ஒரு மினி இந்தியாவும் , அவர்களுக்காக இந்தியக் கடைகளும் என்று எல்லாம் கிடைக்கிறது. இன்று இந்தியாவின் விலைவாசியை ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கு டாலர் விலையிலேயே எல்லாம் மலிவு போல தோன்றுகிறது. தரமும் குறைவில்லை.
எல்லைக்காப்பாளர் (இம்மிக்ரேஷன் அலுவலர்) நல்ல மூடில் இருந்தார்.
‘என்ன விஷயமாய் வந்தீர்கள்?’ என்றார்.
‘மகன் வீட்டுக்கு” என்றேன்.
‘எத்தனை நாள் தங்குவீர்கள்?’
‘அடுத்த 24 புறப்படுகிறேன்.”
‘அட. அவ்வளவு குறைந்த நாட்களா? அதற்கு மேல் இருந்தால் அவர்கள் துரத்தி விடுவார்களோ?’
“அதுவும் சரிதான்.. அவர்கள் துரத்துவதற்கு முன் நாமே கிளம்புவது கௌரவம் இல்லையா?’
சிரித்துக்கொண்டே என் கைவிரல் , முகம் எல்லாவற்றையும் போட்டோ எடுத்தார்.
“இத்தனை போட்டோ எடுக்கிறீர்களே. எனக்கும் ஒரு காப்பி அனுப்புவீர்களா?”
‘இல்லை. இவை எனக்காக” என்று மறுபடியும் சிரித்து ஊருக்குள் அனுப்பினார். அமெரிக்க அலுவலகங்கள், கடைகளில் இது ஒரு நல்ல விஷயம். முகம் மலர சிரிக்கிறார்கள். அநாவசியமாய் கடுகடு என்று இருப்பதில்லை.
கஸ்டம்ஸ் சோதனைக்கு முன் பெட்டிகளை எடுத்துக் கொடுத்துவிட்டு விமான நிலைய சப்வே ரயிலில் பிரயாணித்து ஸியாட்டிலுக்குப் போனோம். அந்தத் தானியங்கி ரயிலில் ஆங்கிலம் தவிர இன்னொரு மொழியில் அறிவிப்புகள். ஸ்பானிஷோ என்று பார்த்தால் கொரியமொழி. கொரியர்கள் ஸியாட்டிலை வாங்கிவிட்டார்களோ. போகிற போக்கில் எது வேண்டுமானாலும் நடக்கும். அறிவிப்பு மென்பொருளுடன் சேர்த்து தம் மொழி அறிவிப்பையும் கொரியர்கள் இலவச இணைப்பாகக் கொடுத்துவிட்டார்கள் போல இருக்கிறது.
அழைத்துப் போக வந்திருந்த மகன் காரை விமானநிலையத்துக்கு வெளியே எடுத்தவுடன் பளிச்சென்று கண்ணில் அடித்த சூரிய வெளிச்சத்தைப் பார்த்து ‘இன்று நல்ல வெதர்’ என்றான் பெங்களூரில் வருடத்துக்கு 250 நாட்கள் இப்படித்தானே இருக்கும். இதை என்ன பெரிதாய் சொல்கிறாய் என்றேன். ‘இந்த வாரம் முழுக்க இன்றுதான் இத்தனை வெளிச்சம். சம்மர் முடிந்ததும் 7 மாதங்களுக்கு பளிச்சென்று சூரியனைப் பார்ப்பதே அரிது’ என்றான். ஆடம்ன், விண்டர், ஸ்ப்ரிங், மூன்று பருவங்களிலும் மழை பெய்யுமாம். சம்மரிலும் அவ்வப்போது பெய்யுமாம். நம்மூரில் வெய்யில் போல அங்கு மழை – அவ்வளவுதான்! சூரியனைப் பார்த்தாலே மக்கள் குஷியாகிவிடுகிறார்கள். ஸியாட்டில் இருக்கும் வாஷிங்டன் மாநிலத்தில் இவ்வளவு மழை பெய்வதினால் ஒலிம்பிக், ஹோ போன்ற மழைக்காடுகள் இங்கு உண்டு. பிரும்மாண்ட ஊசியிலை மரங்கள், இன்னும் பலவிதமான பழமையான, பசுமையான மரங்கள்.
மகன் இருக்கும் அடுக்ககத்தில் கராஜ் கதவைத் திறந்து கார் உள்ளே போனதும் கராஜ் கதவு முழுதாய் மூடிக்கொள்ளும் வரை காரை நிறுத்திக் காத்திருந்தான். ஏன் ரிப்பேரா என்றதற்கு, இல்லை, இந்த ஊரில் வீடற்றவர்கள் கராஜ்களில் புகுந்து ஒண்டிக்கொள்வார்கள். அதைத் தவிர்க்கத்தான் என்றான். கொடிது கொடிது இளமையில் வறுமை என்றாளே, அதைவிடக் கொடுமை இல்லையா இத்தனை பணம் படைத்த நாட்டில் இப்படி வீடில்லாதவராய் இருப்பது. “பாவம் குளிரோ என்னவோ கராஜில் தூங்கினால் என்ன?” என்றேன். “இல்லை இவர்களில் பலரும் போதை மருந்து, குடி போன்ற பழக்கம் உள்ளவர்கள். அதற்காக எதுவும் செய்வார்கள். அதற்குத்தான் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்’ என்றான். பிள்ளையைப் பற்றிக் கவலைப்பட எனக்கு இன்னொரு விஷயம் கிடைத்தது.
அங்கிருந்த நாட்களில் பல இடங்களிலும் இது போன்றவர்களை அடிக்கடி பார்த்தேன். கடைவாசலில் நாயுடன் உட்கார்ந்து கொண்டு “பசியோடிருக்கிறேன்” (I am Hungry) அல்லது “பஸ் டிக்கெட்டுக்குப் பணம் வேண்டும்” என்பது போன்ற அட்டைகளுடன். சிலர் வீதிகளில் பாட்டுப் பாடிப் பணம் சம்பாதிப்பார்கள். சிலர் இளவயதினர், பார்க்கவும் ஆரோக்கியமாய் இருந்தார்கள். “இவர்கள் எப்படி இப்படி?” என்றேன். “இவர்களில் பலரும் வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள். இதை ஒரு உப கலாச்சாரமாய் – தம் எதிர்ப்பை தெரிவிக்கும் ஒரு வழியாய் உபயோகிக்கிறார்கள்” என்றான். சில வேலைகளுக்குக் கிடைக்கும் சம்பளத்தைவிட வேலையற்றவர்களுக்குக் கிடைக்கும் உதவிப்பணம் அதிகம். அதனாலும் இப்படி இருக்கலாம் என்றான். இதில் ஆசிய நாட்டவர் யாரும் இருக்கவில்லை . “ஆசிய நாட்டவரா, அவர்கள் பள்ளியிலோ, கல்லூரியிலோ அடுத்த பரிட்சைக்குத் தயார் செய்து கொண்டிருப்பார்கள்” என்றான். ஆறுதலாய் இருந்தது.
அநேகமாய் இவர்கள் அனைவரிடமும் ஒரு நாய் இருந்தது. ஸியாட்டில் முழுவதுமே நிறைய நாய்கள் அழகழகாய். பார்க்குகளில் அவற்றுக்கான இடங்களில் அவற்றை அவிழ்த்து விட்டு அவை விளையாடுவதைப் பார்க்கவே நான் பார்க்குக்குப் போவேன். சில பூங்காக்களில் சிறு இடங்களை வாடகைக்கு எடுத்து அங்கே பொதுமக்கள் தமக்குப் பிடித்தவற்றை விளைவிக்க இடம் தருகிறார்கள். வாடகைக்கு எடுத்துக் கொள்பவர்கள் அவற்றைப் பராமரிக்கவேண்டும். சிலர் பூச்செடிகள் போடுவார்கள், சிலர் காய்கறிகள். சியாட்டில் நகரத்துக்குப் பக்கத்திலுள்ள மெர்ஸர் ஐலந்த் என்ற சிறு தீவு ஊரில் எல்லா மரங்களின் மேலும் அவற்றின் பெயர் எழுதியிருக்கும். நம் சுற்றுப்புறத்தைப் பற்றி அறிய , நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க நல்ல ஒரு வழி. இதே போல் மிருகக்காட்சி சாலைகளிலும் பொதுமக்கள் ஆர்வலர்களாய் போய் வேலை செய்யலாம். அங்கு வருபவர்களுக்கு அங்குள்ள மிருகங்கள் பறவைகள் பற்றி சொல்வது, அவற்றுக்கு உணவு அளிப்பது போன்ற பலவேலைகளில் இப்படி பொதுமக்கள் ஈடுபடுகிறர்கள். அதனால் அவர்களுக்கு தம் ஊரைப் பற்றிய அக்கறையும், கவலையும் இருக்கிறது. எனக்குப் பறவைகளைக் காட்டிய பெண்மணிக்கு 60 வயதிருக்கும். அவரைப் பார்த்த உற்சாகத்தில் கால் வலிக்கிறது என்று சொல்லாமல் முழு மிருகக்காட்சி சாலையையும் சுற்றிப் பார்த்தேன்.புதிதாய் போட்ட ஜிராஃப் குட்டியும் 9 மாதமான கரடி மற்றும் புலிக்குட்டிகளையும் பார்த்து குழந்தைககளுக்கு ஒரே உற்சாகம். எனக்குப் பிடித்தது தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு என்னை அலட்சியமாய் திரும்பிப் பார்த்த ஒராங்குடாங் தான். கொரில்லா ஒன்று பார்வையாளர் ஜன்னலருகே உட்கார்ந்து வருவோர் போவோரை கவனித்துக் கொண்டிருந்தது. அதை ஒரு பெண் தன் வீட்டில் செல்லமாய் வளர்த்துவந்தாராம். பிறகு அரசாங்கம் அது சட்டத்திற்கு புறம்பானது என்று சொல்லி காட்சிசாலைக்கு அனுப்பப்பட்டதாம்.அதனால் அதற்கு மக்கள் மேல் இததனை ஆர்வம்.
வயதான காலத்தில் தம்மைத்தாமே கவனிக்கும் பொறுப்பு இருப்பதாலோ என்னவோ, பலரும் தம் ஆரோக்கியத்தில் மிகக் கவனமாய் இருக்கிறர்கள். காலையில் ப்யூஜெட் சவுண்ட் கரையோரம் உள்ள ஸ்கல்ப்சர் பார்க்குக்குப் போனால் 50, 60 வயதினர் பலரும் தம் நாய்களுடன் சுறுசுறுப்பாய் ஓடிக்கொண்டும் நடந்துகொண்டும் இருப்பதைப் பார்க்கலாம். சவுண்ட் என்பது இரு பெரும் நீர்பகுதிகளுக்கு இடையேயான குறுகலான நீர்ப்பகுதி. ஸியாட்டிலை ஒட்டிய இத்தகைய ஒரு ஸவுண்ட்தான் ப்யூஜெட் சவுண்ட். இது பஸிபிக் மகாசமுத்திரத்தையும், ஸலிஷ் கடலையும் இணைக்கும் ஸவுண்ட்.
இதில் ஒரு சின்னக் கப்பலில் (லைனெர்) டிக்கெட் வாங்கிப் போய் ஸியாட்டில் கடலோரப்பகுதியைப் பார்க்கலாம். இந்தக் கடலோரப்பகுதியை ஒட்டிய பைக் ப்லேஸ் மார்க்கெட்டுக்குப் போனால் பலவகை மீன்களைப் பார்க்கலாம், வாங்கலாம். சில மீன்கள் ஒரு அறை அளவு நீளம் இருக்கும். காய்கறிகள், பூக்கள், மற்றும் பலவகைப்பட்ட சீஸ்களும் இந்த மார்க்கெட்டில் பிரபலம். இதன் பக்கத்தில்தான் முதல் தெருவுக்கும் பைக் தெருவுக்கும் இடைப்பட்ட குறுக்கு மூலையில் ஸியாட்டிலில் 1971ல் முதன்முதலாய் ஆரம்பிக்கப்பட்ட ஸ்டார்பக்ஸ் காப்பிக்கடை இருக்கிறது. ஆரம்பிக்கப்பட்டபோது இருந்தது போன்ற தோற்றமே பாதுகாக்கப்பட்டுவருகிறது.
பெங்களூரில் சின்னஞ்சிறு டபரா டம்ப்ளரில் பை டூ காப்பிக்குப் பழகியவர்களுக்கு ஸ்டார்பக்ஸின் மிகக் குறைந்த அளவான டால்(tall) ஒரு அண்டா போல இருக்கும். மணம், சுவையுள்ள காப்பிதான் – பல வகைகளில் கிடைக்கும். டீதான் சகிக்காது. டீவனா போன்ற டீ பொட்டீக் (boutique) கடைகளில் ஊலாங், லாவெண்டெர், ரூயிபோஸ் என்று விதவிதமாய் டீ கிடைக்கும் ஆனால் நமக்குப் பழகிய ‘கடக் சாய்’ கிடைக்காது. ஸியாட்டிலில் யாராவது நல்ல இந்திய டீக்கடை ஆரம்பித்தால் நல்ல பிஸினஸ் நடக்கும். சாய்ஃபிக்ஸ் என்று பெயர் வைக்கலாம்.
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து காலிஃபோர்னியா மாநிலம் வரையில் படர்ந்துள்ள கேஸ்கேட் (Cascade) மலைத்தொடரின் மலைகள் ஸியாட்டிலிலிருந்து தெரியும். இவற்றில் முக்கியமானவை, மவுண்ட் ரெயினியர், மவுண்ட் பேக்கர், மவுண்ட் ஆடம், மவுண்ட் ஹூட் போன்றவை. இவற்றில் சில தூங்கும் எரிமலைகள். இவற்றில் முக்கியமானது மவுண்ட் ரெயினியர். எரிமலை என்றால் கொந்தளிக்கும் லாவாக்குழம்பு என்றுதானே நினைப்போம். இந்த ரெயினியர் மேல் இருப்பவை பனிப்பாறைகள். இது வெடித்தால் சுற்றிலும் பல மைல்களுக்கு பனி போல் குளிர்ச்சியான நீர்தான் வெள்ளமாய் பாயும். 4392 மீட்டர் உயரமான இந்த மலை உலகத்தின் மிக அபாயகரமான எரிமலைகளில் ஒன்றாய் கருதப்படுகிறது. இதன் மேலுள்ள பெரிய பனிப்பாறைகளினால், இது வெடித்தால் வெளிப்படும் லாஹர் இதைசுற்றியுள்ள புலியாயுப் ஆற்றுப்பகுதியை முழுமையாய் ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளது. இது கடைசியாய் வெடித்தது 1894ல். இங்கு பொருத்தப்பட்டிருக்கும் மானிகளால் இது வெடிப்பதற்கு சில நாட்கள் முன்னமேயே இதை கணித்துவிட முடியும் என்பது அங்கிருக்கும் மக்களுக்கு ஆறுதலான விஷயம். நல்ல சூரிய வெளிச்சம் உள்ள நாட்களில் வெள்ளிப்பனித்தலையுடன் ரெயினியர் மலை தெய்வீகமாய் தெரியும். அதிலும் சூரியோதயத்தின்போது பார்க்க முடிந்தால் இன்னும் அழகு.
மெர்ஸர் ஐலந்திலிருந்தும் . ஸீவட் பார்க்கிலிருந்தும் வாஷிங்டன் நதிக்கப்பால் இந்த மலையை பார்ப்பது அழகான அனுபவம். சியாட்டில் நகரிலிருந்து 135 மைல் தூரத்திலுள்ள க்ரிஸ்டல் மலையின் மேல் கேபிள் காரில் பயணித்து கேஸ்கேட் மலைத்தொடரின் பல மலைகளையும் பார்த்தது இன்னொரு அருமையான அனுபவம். கோடையில் இங்கு பலர் வந்து மலையேறுகிறார்கள். ஸம்மர் முடிந்ததும் இந்த மலைச்சரிவுகளில் பனிச்சறுக்குக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கும்.
கேஸ்கேட் மலைத்தொடரின் இன்னொரு இன்னொரு எரிமலை செயிண்ட் ஹெலென்ஸ். அங்குள்ள வருகையாளர் மையத்தில் 1980ல் இந்தமலை பெரிதளவில் வெடித்ததை ஆவணப்படமாய் காட்டுகிறார்கள். அதன் லாவாவில் செய்த கைவினைப் பொருட்களை விற்கிறார்கள். வெடிக்கக்கூடிய சாத்தியமுள்ள எரிமலையைப் பார்ப்பது ஒரு பயம் கலந்த வியப்பாய் இருப்பினும், அது வெடித்து உருவாக்கிய பள்ளத்தை பார்க்கையில் ஒரு வெறுமை தோன்றியது. உலகம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிகிறது என்கிற ஒரு உணர்வு தோன்றியது. வெடிப்பினால் அழிவு இருந்தாலும் அப்போது வெளிவந்த எரிமலைக்குழம்பு அதன் சுற்றுப்புறத்தின் இயற்கை வளத்தையும் அதிகரித்திருக்கிறது என்பது ஆறுதலான விஷயம்.
இவ்விரு எரிமலைகளும் அமெரிக்கப் பழங்குடி இந்தியர்களுக்கு இறைமை சார்ந்தவையாய் தோன்றியதில் ஆச்சரியம் இல்லை. இவை இரண்டையும் சார்ந்த பல கதைகள் அவர்கள் பண்பாட்டில் இருக்கின்றன. அவற்றில் சுவையான ஒன்று டெகோமா என்று அவர்களால் அழைக்கப்பட்ட இன்றைய ரெயினியரும் லூவிட் என்ற செயிண்ட் ஹெலென்ஸும் கணவன் மனைவி, அவர்கள் இருவரும் சண்டை போடுகையில் இருவரும் சேர்ந்து வெடிப்பார்கள் என்பது.
ஸியாட்டில் இருக்கும் வாஷிங்டன் மாநிலம் 4000 வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவின் பழங்குடி இந்தியர்கள் வாழ்ந்த இடம். அதனால் இன்னும் பல ஊர்களின் பெயர்கள் ஸமாமிஷ், இஸ்ஸாகுவா, ஏனும் க்ளா, ஸ்னோக்வால்மீ, புய்யால்லுப், ட்யூலலிப் என்பதுபோல் அவர்களின் மொழியிலேயே இருக்கும். ஸ்னோக்வால்மீ என்ற இடத்தில் நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் ஒரு ஹோட்டலுக்குள். போனால் நம்ம தமிழ் மாமாவும் மாமியும் அவியல், தோசை, தயிர்சாதம் என்று மெனு கொடுக்கிறார்கள். மெக்ஸிகன் பணிப்பெண் வந்து ரசம் வேண்டுமா என்று கேட்கிறாள். சிந்துநதியின் மிசை பாடின கவி இதைப் பார்த்துப் புல்லரித்து என்ன பாடியிருப்பாரோ!
அமெரிக்காவில் ஒரிஜினலாய் இருந்த இந்தியர்களின் நிலங்களைப் பறித்த குறுகுறுப்பில் அவர்களுக்கு அரசாங்கம் பல சலுகைகள் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று காஸினோக்களை அவர்கள் நிலத்தில்தான் கட்டவேண்டும் என்பது. ட்யூலலிப் என்ற இடத்தில் உள்ள காஸினோவுக்குப் போனோம். களவும் கற்று மற என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே! போன சூட்டிலேயே ஸ்லாட் மெஷினில் போட்டதை எல்லாம் இழந்து திரும்புகையில் வைரத்தோடு போட்ட மாமி ஆட்டத்தில் ஆழ்ந்துபோய் ப்ளாக் ஜாக் ஆடிக்கொண்டிருப்பதையும் அவருடைய கணவரும் மகனும் பக்கத்து மேஜையில் ஆடிக்கொண்டிருப்பதையும் பார்த்தேன். ஆஹா நம்மைப் போல தமிழ் கற்ற மற்றவர்களும் இருக்கிறார்கள் என்று மகிழ்ந்தேன்.
கப்பலில் காரை ஏற்றிக்கொண்டு போய் பெயின்ப்ரிஜ் என்ற அழகான தீவில் வைன்களை (Wine) ருசித்தோம். அவர்கள் மரத்தின் ருசி, பழங்களின் ருசி என்று சொன்னதற்கெல்லாம் ஆமாம் போட்டு ஒன்றும் புரியாமல் விழுங்கிவைத்தோம். லெவன்வர்த் என்ற இடத்தில் ஒரு பவேரிய (ஜெர்மானிய) சிற்றூரைப்போல நிர்மாணித்து வைத்திருக்கிறார்கள். அதையும் போய் பார்த்தோம். ஒரு மலையின் பின்புலத்துடன் அழகான இடம். அங்கு பாக்குவெட்டிகளுக்கென்றே ஒரு ம்யூசியம். அக்டோபரில் இங்கும் ஜெர்மனியைப் போலவே ஒரு Oktoberfest உண்டாம்.
சாலைகள் வழவழ என்று இருப்பதினால் 350 மைல்கள் ஓட்டுவதெல்லாம் ஒன்றும் சிரமமாகவே இல்லை என்கிறார்கள். ஸியாட்டிலில் வண்டி ஓட்டுபவர்கள் மிகவும் நல்லவர்களாய் இருக்கிறார்கள். லக்னோக்காரர்களைப் பற்றிச் சொல்வார்களே அதைப்போல “நீங்கள் போய்க் கொள்ளுங்கள், இல்லை, நீங்கள் போய்க்கொள்ளுங்கள்” என்று ஒரே மரியாதை. நீங்கள் பாதசாரி என்றால் கேட்கவே வேண்டாம். வண்டியை நிறுத்திவிட்டு உங்களுக்கு வழிவிட்டுவிட்டுத்தான் மறுவேலை
மிகச்செழிப்பாய் இருந்த ஸியாட்டில் நகரத்தின் வியாபாரப்பகுதி 1889ல் ஒரு பெரிய நெருப்பு விபத்தில் எரிந்துபோனது.. அதன்பின்பு சற்றே உயரமாய் எழுப்பிக் கட்டப்பட்ட புதிய நகரம்தான் தற்போது காணப்படுவது. ஆனால் அதன் கீழ் பழைய நகரத்தின் பகுதிகள் இன்னும் உள்ளன. 18 டாலர் கொடுத்தால் ஒருமணி நேரத்தில் அந்த இடங்களைச் சுற்றிக் காண்பிக்கிறார்கள். அழைத்துப் போகும் கைடுகள் நகைச்சுவையோடு விவரிப்பதிலேயே கொடுத்த பணம் வசூல் என்று தோன்றி விடும் அளவுக்கு அழகாய் பேசுகிறார்கள்.. கடலின் மட்டத்திலேயே நிர்மாணித்ததால் பழைய நகரத்தின் தெருக்களில் எப்படித் தண்ணீர் தேங்கி இருந்தது, அப்போதுதான் புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட டாய்லெட்டுகளில் ஃப்ளஷ் செய்கையில் தண்ணிர் எப்படி எதிர்த்துக் கொண்டு வந்தது , தையல்காரிகள் என்று ரெஜிஸ்தர் செய்யப்பட்டிருந்த 2500 பெண்களின் பிரபலத்திற்கு காரணம் என்ன என்பது போல எல்லாவற்றையும் சிரிக்க சிரிக்க விவரித்தார். ஒரு மணி நேரத்துக்கு 75 ஸெண்ட்வாடகைக்கு ரூம் கொடுத்த ஓட்டலின் பெயர்ப்பலகை இன்னும் இருக்கிறது.
முன்பெல்லாம் வெளிநாட்டு பயணங்களில் ஷாப்பிங்குக்கு முக்கியமான இடம் உண்டு. இப்போது அது தேவையில்லாமல் போய் விட்டது. எல்லாம் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.. கறை நீக்கிகள், துடைக்கும் துணிகள் (microfiber) IKEA கடையில் கிடைக்கும் சில புத்திசாலித்தனமான வீட்டுவிஷயங்கள்
(ப்லாஸ்டிக் ஷாப்பிங் கவர்களைச் சேர்த்து செருகி வைத்துக் கொள்ள ஒருகூடை. அலமாரியில் துணிகளை தனித்தனியாய் வைக்க ஒரு Organizer) என்பது போன்ற விஷயங்களை மட்டும் வாங்கி வந்தேன்.
மாசுகள் குறைந்த சூழல், வீட்டு வேலைகளை எளிதாக்க மெஷின்கள், தயாரான பொருட்கள், விதவிதமான காய்கறிகள், பழ வகைகள், சத்தமில்லாத சூழல், நம் விவகாரங்களில் மூக்கை நுழைக்காத அக்கம்பக்கம், உபயோகிக்க வசதியான நூலகங்கள், பார்க்குகள், பொழுதுபோக்கிடங்கள் என்று எத்தனை இருந்தாலும் அது சொந்த ஊர் இல்லை என்னும் போது ஒரு மாதத்தில் அலுத்துவிடுகிறது. நம்முர் சுவர்க்கம் இல்லைதான் ஆனாலும் நம்முடையதாச்சே. பெங்களூரு வந்து இறங்கியதும் விவரிக்கமுடியாத ஒரு நிம்மதி.
Nice style of writing.
Reminded me of sujatha sir’s style of writing. Thanks for a wonderful read. Look forward to Manny more such articles
Regards
Usha.Vai,
Seattllai patty kalakkiviteergahl. Enthaoru ponalum namma oru polaguma ?
Angu ponal carshedukkulla pathu erangunum endu sonnathukku nanti. Namma urule road pathu eranganum. Arumaiyana vimarsanam.