ரிச்சர்ட் நிக்சன் பிரைஷுட்ஸ் ராக்

தமிழாக்கம்: நம்பி கிருஷ்ணன்

வசந்தம் மற்றும் இலையுதிர்க் காலப் போர்களில் தங்கள் படைப் பாசறைகள் யான் எல்லையை நெருங்கும் வகையில் ப்ரெஜவால்ஸ்கி குதிரைகள் மீது திரள் திரளாக வந்து கொண்டிருந்த மங்கோலியர்களை மத்தியப் பூ அரசின் இஞ்சித் தோட்டங்கள் மற்றும் உருளைக்கல் இடப்பட்ட சாலைகளுக்குள் வராமல் தடுப்பதற்காக தொடங்கப்பட்ட மாபெரும் பத்தாயிரம் லி சுவற்றின் மீது , ரிச்சர்ட் நிக்சன் கூறினார்:

– இது ஒரு பெருஞ்சுவர் தான் என்ற முடிவிற்கே நாம் வர வேண்டி இருக்கும் என்று நான் நினைக்கிறேன்

மார்ஷல் ஏ சீயென்-இங்கின் அழைப்பின் பேரில் மதில் மீதிருந்த காவல் மேடைகளைப் பார்வையிடுகையில், அவர் கூறினார்,

– இன்று நாம் உச்சி வரை ஏறப் போவதில்லை

லிமுஸீனில் நுழைதல் மறுக்கப்பட்ட நகரத்திற்குத் திரும்பிச் செல்லும் போது, அவர் கூறினார்,

-இந்த சுவரைப் பார்ப்பதற்காகவே பதினாறாயிரம் மைல்கள் கடந்து வரலாம்

மிங் அரசர்களின் கல்லறைகளைப் பற்றி, அவர் கூறினார்,

-இவைகளையும் பார்ப்பதற்காகவே இங்கு வரலாம்.

-சேர்மன் மாவோ சொல்லுவார், மார்ஷல் ஏ முனைந்தார், இறந்த காலம் இறந்து விட்டதென்று.

அக்கருத்தின் உணர்ச்சி மொழிபெயர்ப்பாளருக்கு சங்கடத்தை அளித்ததால், ஆங்கில மொழிபெயர்ப்பில் அதன் காழ்ப்பை இழந்தது.

-எல்லாம் முடிந்துவிட்டதா ? ரிச்சர்ட் நிக்சன் கேட்டார்.

-கவிதை இருக்கிறது மார்ஷல் ஏ கூறினார், நான் அதை ஒப்பிக்கிறேன்.

       

கூரிய மேற்காற்று,
செங்குத்தான வான் மீது
காட்டு வாத்துகள் அழுகின்றன
அதிகாலை நிலவிற்காக.

உறைபனி வெளுத்த
குளிர்மிக்க புலரிக்காக
குதிரை கனைக்கும் போது,
எக்காளம் முழங்கும்.

வீம்புப் பேச்சு வேண்டாம்,
இந்தக் கடும் கணவாய்
இரும்பைப் போலிருந்தது
காலடியில்.
அதோ மேலே
நமக்கு குன்றுகள் தெறிகின்றன
அதற்கும் அப்பால்
சிகப்பு சூரியன்.

குழந்தைப் பருவத்தை ப்ரூக்லின்னில் கழித்து ஆங்கிலத்தை கற்றறிந்த துபாஷி காம்ராட் டாங் வென்-ஷெங்கின் மொழிபெயர்ப்பை கேட்பதற்காக ரிச்சர்ட் நிக்சன் இளித்துக் கொண்டே கவனத்துடன் முன்னே சாய்ந்தார்.

Chinese_Painting_Running_Horses

-அது ஒரு நல்ல கவிதையாகத் தான் இருந்திருக்க வேண்டும், ரிச்சர்ட் நிக்சன் கூறினார்.

– சேர்மன் மாவோ எழுதிய கவிதை, காம்ராட் டாங் முனைந்தார்.

– அவர் அதை எழுதினாரா ? ரிச்சர்ட் நிக்சன் கேட்டார், சொந்தமாகவா?

-லூ மலையின் கடும் கணவாயைக் கடக்கையில், மார்ஷல் ஏ கூறினார், நெடும் பயணம், பிப்ரவரி 1935.

-ஆஹா! அருமை, ரிச்சர்ட் நிக்சன் கூறினார், உண்மையிலே மிக சுவாரசியமான விசயம்.

லிமுஸீன் “நுழைதல் மறுக்கப்பட்ட” நகரத்தின் உயரமான சாம்பல் நிறச் சாய்வான சுவர்களைக் கடந்து சென்றது. ரிச்சர்ட் நிக்சன் படிக்க இயலாத எழுத்துக்களுடன்,டென்னிஸ் அரங்களவிற்கு பெரிதான விளம்பரங்கள் சுவர்கள் மீது ஒட்டப் பட்டிருந்தன. கலகம் செய், தோல்வியுறு. மீண்டும் கலகம் செய், மீண்டும் தோல்வியுறு. தங்களைத் தானே அழித்துக் கொள்ளும் வரையில் ஏகாதிபத்திய பிற்போக்காளர்கள் கலகம் செய்து தோற்றுக் கொண்டிருப்பார்கள். சேர்மன் மாவோவின் சிந்தனை. என்று நீள லிமுஸீன் கடந்து சென்ற ஒவ்வொரு சுவரொட்டியும் பறைசாற்றின.

லிமுஸீன் டிராகன் மாளிகையில் நின்றது. ரிச்சர்ட் நிக்சன் வெளியேறினார். வீரக் குடிகளின் தொண்டர்ப் படைக் காவலர்கள் உருவமைதியுடன் நிமிர்ந்து நின்றார்கள். உள்ளே முற்றத்தின் சுவர் மீதிருந்த நான்கு உயரமான சுவரொட்டிகள் ரிச்சர்ட் நிக்ஸனின் கண்ணைப் பறித்தன.

– அது மார்க்ஸ், சுட்டிக்காட்டிக் கொண்டே அவர் கூறினார்.

– மார்க்ஸ், மார்ஷல் ஏ ஒப்பித்தார்.

-அது எங்கல்ஸ்

– எங்கல்ஸ்

– அது லெனின், அப்புறம் அது ஸ்டாலின்.

-துல்லியமாகச் சொன்னீர்கள், மார்ஷல் ஏ பதிலளித்தார்.

ரிச்சர்ட் நிக்சன் இரண்டாவது சுவரொட்டிக்குத் திரும்பிச் சென்று, கையுறை அணிந்த கையால் சுட்டிக் காட்டினார்.

– இது எங்கல்ஸா ?

– எங்கல்ஸ், மார்ஷல் ஏ கூறினார், கண்களில் கவலையும், மிகுதியான பணிவும் கலந்த பார்வையுடன்.

-அமெரிக்காவில் எங்கல்ஸின் படங்களை அதிகமாகப் பார்க்க முடியாது, ரிச்சர்ட் நிக்சன் விளக்கினார்.

Richard_Nixon_Mao_zedong_China_USA_Leaders_Communism_President_1972_Caricature

ஜப்பானிற்கும் கதேயிற்கும் போர்சுகலில் இருந்து மேற்கே கப்பல் மூலமாக அனுப்பப்பட்ட அந்தக் கிழவன் டோஸ்கனெல்லி, அந்த ஜெனோவாவின் கொலொம்போ, உஃப்பிசி பக்கம் பேசிக் கொள்கிறார்கள், அவன் அட்லான்டிக்கை கடந்து திரும்பி வந்து விட்டானென்று. Una pro`va elegantissima! (நளினமான நிரூபணம்) என்று பெனெடெட்டோவின் கணக்கு கூறும். அரிஸ்டோட்டலியர்கள் தங்களுக்கு பெரிய அவமானம் நிகழ்ந்து விட்டதென்று எண்ணிக் கொள்வார்கள், di quale se fanno beffa. (அவர்கள் அதை ஏளனம் செய்வார்கள்). ப்லேடோனிஸ்டுகள் தங்கள் பாவாடைகளை மொத்தையாக்கிக் கொண்டு திமிருடன் மூக்கை உயர்த்தி வெளியை உறைய வைப்பார்கள். E` una stella il mundo! (உலக நட்சத்திரம் !) . ஆனால் நிலவைப் போல, உண்மையாக சொல்ல வேண்டுமென்றால், தர்பூசணியைப் போல் உருண்டையாக, பருமனாக, பச்சையாக. ஓ, மங்கோல் நகரங்களின் சிகப்பு ஓடுகள் மற்றும் மூங்கில்களாலான பெர்கோலா (pergola)  கூரைகளும் கடல் முனை மற்றும் நிலக்கூம்புகள் பார்வையின் குவியத்திற்குள் வரும் வரையில், அந்த காரவெல் ( caravelle) கப்பல்கள் உப்புக்கரித்த கொடூரமான அலைகளை முட்டுவதையும், பயங்கரமான தண்ணீராலான பாலைவனத்தையும், கண்களைத் துன்புறுத்தும் பாழ் நிலையையும், கற்பனையே செய்யமுடியாத சிபோங்கோ கடற்பறவைகள் அவர்களது கப்பல் பாய்களைச் சுற்றி வருவதையும் அவனால் பார்க்க முடிந்தது. உள்நாட்டில் சமர்கண்ட், இந்தியா, பார்சீகம், ஹங்கரி மற்றும் ஹெல்வெடியாவிற்குச் செல்வதற்கான பாதைகள் இருந்ததால் டஸ்கனிக்கும் சாலை மூலமாகவே திரும்பி வருவதற்கான சாத்தியம் இருந்தது.

ஃபைசோலிலிருந்து சலாய் கொண்டு வந்த புற்கள் நிறம்பிய வாளிகளை நகர்த்துகையில், குழந்தை இயேசுவை பார்க்க வந்த மாகி அறிஞர்களின் பயணத்தையே டோஸ்கனெல்லியும் முடித்திருந்ததாக லியொனார்டோவிற்குத் தோன்றியது. அவர்கள் கிழக்கிலிருந்து வந்தவர்கள்,சோதிடர்கள். குறியீடுகளாலான இன்னாட்களில் அசையும் பொருட்கள் அனைத்தும் கடவுளுக்கோ அல்லது இஸ்லாமிற்கோ தங்கள் ஆதரவை பிரகடனம் செய்ய வேண்டிய நிர்பந்தம் இருந்ததால் கொலொம்போவின் கப்பல் பாய்கள் நிச்சயமாக சிலுவையணிந்திருக்கும். இருண்ட தொழுவத்தில் அவர்கள் தங்கள் அன்பளிப்புகளை அதன் முன் வைத்த குழந்தையின் மறைபொருட் குறியீடாக அந்தச் சிலுவை இருக்கும் என்பதை அறிவதற்காக மெடெஸிலிருந்து வந்த அந்த அறிஞர்கள் காத்திருக்கவில்லை. ஒலியாலும் தீர்கதரிசனத்தாலும் உலகம் பின்னப் பட்டிருந்தது.

ஃபைசோலிலிருந்து வந்த பசும்புல், இருபது பட்டை முகப்புடைய ஐகோஸாஹெட்ரா, சக்கரப்பற்கள், கியர்கள், காரை, வரைப்படங்கள், யாழ்கள், தூரிகைகள், ஒரு வாய்ச்சி, மாயச் சதுரங்கள், சாயப் பொருட்கள், ப்ருனெலெஸ்கியும், தோனதெல்லோவும் அவர்களின் அகழ்தல்களிலிருந்து அவனுக்காக் கொண்டு வந்த ஒரு உரோமானியத் தலை, பறவையின் எலும்புக்கூடு : எவ்வளவு அழகாக டஸ்கன் ஒளி அவனுடைய பொருட்களை அவனுக்கே ஒவ்வொரு காலையிலும் வழங்கியது, பருந்து அவனுடைய தூக்கத்தில் வந்தாலும் கூட.
நொடிகள், நாழிகைகள், நாட்கள். மனிதன் ஏதாவது ஒன்றையாவது செய்து முடித்திருக்கிறானா?

கிழவி மது, ரொட்டி மற்றும் வெங்காயத்தையும் கொண்டு வந்திருந்தாள். அவனும், டோஸ்கனெல்லியும், பைத்தாகோரஸின் வழி வந்தவர்களும் புலால் உண்ண மாட்டார்கள்.

Due rote (இரண்டு சக்கரங்கள்) என்ற இயந்திரம் வேலை செய்யும் மேசை மீது சாய்ந்திருந்தது, காரணம் கூற முடியாத ஒரு வழக்குமீறிய உருவமைப்புடன். கொல்லன் சக்கபானே இரண்டு rote dentate வீச்சளவுள்ள சங்கிலியை உருவாக்கிக் கொண்டிருந்தான். பாதங்களால் மிதிக்கட்டைகளைச் சுழற்றினால், பெரிய பற்சக்கிரம் சுற்றி, சங்கிலியை முன்னே இழுக்கும், சக்கரப்பல்லின் மேல் சக்கரப்பல்லாக. இது சின்ன பற்சக்கிரம் பின் rotaவை சுழல வைக்கும் படிச் செய்து முழு இயந்திரத்தையும் முன்னகர்த்தும்.

அவனுக்கு மட்டும் பிற பாஷைகள் தெரிந்திருந்தால் !. ஆர்கிமெடஸ் பெயரிடுவதைப் போல அவனால் அவனது இயந்திரங்களுக்குப் பெயரிட்டிருக்க முடியும், தொன்மையான வார்த்தைகளைக் கொண்டு. அவனுடைய பறக்கும் இயந்திரத்தை பறவை, l’ucello என்று அழைப்பான். கிரேக்கர்கள் அதை ornitotterro, பறவையின் சிறகுகள், என்று அழைத்திருப்பார்கள் என்று பெர்னடெட்டோ கூறினான்.

ஆடம்பரமாகவும், நுணுக்கத்துடனும் ஒளி, பொருண்மையை நறுக்கென மோதியதிலிருந்து கண்களின் திடக்கூழை அடையும் வரை, atomo per atomo (அணு மேல் அணுவாக) தன்னையே பிரதிபலித்துக் கொண்டு, உயரமான சன்னல்களிலிருந்து சமனிலைப்படுத்தும் இரண்டு-சக்கர இயந்திரத்தின் மீது குழுமியது.முன்சக்கிரம் திடமாக பொருத்தப் பட்டிருக்கும் கவரில் அமைக்கப்பட்ட இரு கொம்புகளையும் பற்றி ஓட்டுனர் பதற்றத்துடனும் துல்லியமான உன்னிப்புடனும் தன்னத் தானே வழிநட்த்திக் கொள்ளுவார். திடீரென்று ஸ்ஃபோர்ஸே அதிலேறி போருக்குச் செல்லும் காட்சியைக் கண்டான், ஈட்டியேந்திய வீரர்களைத் தாங்கியபடி செல்லும் ஒரு due rote பெருந்திரளை. Avanti O Corraggiosi, O! (முன்னே செல்லுங்கள், ஓ, அஞ்சாநெஞ்சர்களே, ஓ !) என்று எக்காளம் முழங்கியது, tambureggiandi le bacchette delli tamburi di battaglia (போர்முரசுகளை அடிக்கும் தடிகளையேந்திய கிணைவர்களே).

அந்தப் போக்கிரி சலாய் எழுந்து நடமாடிக் கொண்டிருந்தான்.

– Maestro! (ஞானியே!) அவன் கீச்சுக்குரலில் அழைத்தான், நீங்கள் செய்து முடித்துவிட்டீர்கள்!

லியனார்டோ மாநிறத்த பையன் சலாயை மைதாமாவு நிறம்பிய கோணிப்பையை தூக்குவதைப் போல தோள்களில் சுமந்து கொண்டு சராபாண்ட் நடனவகையின் நீண்ட மிதந்து செல்லும் அடிகளுடன் லியனார்டோ நடனமாடினான்.

– Si, Cupidello mio, tutto senonche` manca la catena. (ஆமாம், என் மன்மதனே, எல்லாம் முடிந்தது சங்கிலியைத் தவிர)

-அதன் பிறகு அதை என்னால் இயக்க முடியும், மட்டக்குதிரையை போல் ஓட்டிச் செல்ல முடியும் அல்லவா ?

– காற்றைப் போல, எஸெக்கியலின் தேவதூதனைப் போல, அங்கோனாவின் குதிரைகளைப் போல.

சலாய் நெளிவுடன் தன்னை விடுவித்துக் கொண்டு அந்த விசித்திரமான இயந்திரத்தின் முன் மண்டியிட்டு, மிதிக்கட்டைகளையும், பிரம்பு ஆரைகளையும், சேணத்தையும், சங்கிலி பொருத்தப்படப் போகும் பற்சக்கிரங்களையும் தொட்டுப் பார்த்தான், i vinci (வெற்றி)

– Como leone! ( சிங்கமே!)

பூக்கும் புற்கள் நிறம்பிய கூடைப் பக்கம் திரும்பி வெள்ளி வரைகோலிற்காக எட்டினான். சிலந்தியின் கால்களை ஒத்த பூக்காம்பிலைகளும், குடைப்பூக்களும் ! மெல்லிய பச்சை நாளங்களில் முடியை ஒத்த நீர் இழைகள் ஓடின. அந்த நீர் முடிகள் நெடுக ஒளி ஓடியது, கீழே இருளை நோக்கி, வேர்களுக்குள்ளே. தொலை தூரத்திலிருந்த நட்சத்திரங்களின் ஒளி இந்த நீளமான இலைகளுக்குள்ளே பாய்ந்தது. வெள்ளப்பெருக்கு காலத்தின் இலைகளின் புதைவடிவத்தையும், கடலிலிருந்து வந்த சிப்பிக்களையும் மலைப் பாறைகளில் அவன் பார்த்திருந்தான்.

– ஆசானே, சலாய் கூறினான், சங்கிலி எப்போது தயாராகும்?

-சங்கிலி ? லியனார்டோ கேட்டான், என்ன சங்கிலி ?

இடக்கையால் புற்களாலான ஒரு வெள்ளிச் சுழிப்பை வரைந்தான். அருளையும், பூரணத்துவத்தையும் தான் அவன் வரைந்தான், பலவீனமான இலைகளுக்குள்ளே கடவுளின் முழுத் திறனும் இயங்கியது. ஒரு தும்பி புல்லின் பச்சை வட்டவில்லின் மீது உட்காருகையில் ஏற்படும் அந்த இணைப்பின் ஒளிர்வு சான் காப்ரியேல் தங்கத் தண்டாலான தன் உயரத்தைச் சுற்றி பிழியப்பட்ட வெள்ளி மற்றும் நார்க்கண்ணாடியாலான தனது நான்கு சிறகுகளையும் மூடிக் கொண்டு பிஸான்டியத்தின் பெரும் குவிமாடத்தின் மீது இறங்கும் அற்புதத்திற்கு ஒரு வித்ததிலும் குறைந்ததில்லை.

– சங்கிலி, சலாய் கூறினான், சங்கிலி !

மனிதன் எதையாவது அறிந்து கொண்டிருக்கிறானா என்ன ?

Trees_Desert_Birds_Ropes_Hanging_Holding_Ground_Shout_faces_People_Leave

சைனாவிற்கு பறப்பதற்கு முன்னர் ரிச்சர்ட் நிக்சன் லாவோஸிலும், கம்போடியாவிலும் ஆயிரம் இலக்குகளை B-52 விமானப் படைகளைக் கொண்டு வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்த ஆணையிட்டார். படைகளகற்றிய இடத்தின் (DMZ) எல்லையில் வடக்கு வியட்னாமின் தொலைவிசைப் பீரங்கிகளை வாயடைப்பதற்காக நூற்றி இருபத்தைந்து வெடிகுண்டு விமானப் படைகளை அனுப்பினார். இந்த பலப் பிரயோகாம் சேர்மன் மாவோவை கவர்ந்திருக்கும் என்பதை அறிந்திருந்த்தால் குண்டுவீச்சு ரிச்சர்ட் நிக்சனிற்கு மகிழ்ச்சியை அளித்தது. மாவோவைக் கவருவதற்காக ஆயிரத்து நூற்றி இருபத்தைந்து வெடிகுண்டு விமானப் படைகளை டாக்டர் கிஸ்ஸிஞ்சர் ரிச்சர்ட் நிக்சனிற்குப் பரிந்துரைத்தார். ரிச்சர்ட் நிக்சன் இளித்துக் கொண்டே சைனாவில் காலை வைக்கையில் குண்டுகள் கோடைக் கால புயலில் தோன்றும் ஆலங்கட்டி மழையின் அடர்த்தியுடன் விழுந்து கொண்டிருந்தன. தொண்டர்களின் அணிவகுப்பு என்ற பாடலை பாண்டு வாசித்தது. பிரதமர் சௌ என்லாய் முன்னே நடந்து வரவில்லை. இளித்துக் கொண்டு நின்ற பிரதமர் சௌ என்லாயை நோக்கி ரிச்சர்ட் நிக்சன் நடக்க வேண்டி இருந்தது. அவர்கள் கை குலுக்கினார்கள்.

-நாங்கள் குவாம் வழியாக வந்தோம். ரிச்சர்ட் நிக்சன் கூறினார். அதுவே சிறந்த வழி.

-பயணம் சௌகரியமாக இருந்ததா ? பிரதமர் சௌ கேட்டார்.

– உங்களுக்குத் தெரிந்திருக்குமே , ரிச்சர்ட் நிக்சன் சொன்னார், நீங்கள் தான் அடிக்கடி பிரயாணம் செய்பவர் ஆயிற்றே.

“நுழைதல் மறுக்கப்பட்ட” நகரத்தின் வெளியே டையோ யு டாயிற்கு ரிச்சர்ட் நிக்சன் லிமுசீனில் சென்றார். அவர் அறையை அடைந்தவுடன் தொலைபேசி மணி அடித்தது.

– சைனாவில் என்னை யார் அழைக்கிறார்கள்? அவர் கேட்டார்.

டாக்டர் கிஸ்சிஞ்சர் தொலைபேசியை எடுத்தார்.

– சொல்லுங்கள் , அவர் கூறினார்.

-மேதகு கிஸ்ஸிஞ்சர் ? ஒரு குரல் கேட்டது நீங்கள் அங்கு இருக்கிறீர்கள்?

-நாங்கள் இங்கிருக்கிறோம், டாக்டர் கிஸ்ஸிஞ்சர் கூறினார்.

-மேதகு ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் அங்கு இருக்கிறார் ?

-இதோ இங்கு தான் இருக்கிறேன் ரிச்சர்ட் நிக்சன் கூறினார். யாருடன் பேசிக் கொண்டிருக்கும் கௌரவத்தை பெற்றிருக்கிறேன் என்பதை தெரிந்து கொள்ளலாமா ?

-இப்போது நீங்கள் பேசுங்கள் , தோழர் செயலாளர் ஊவுடன்.

ஒரு புதுக் குரல் தொலைபேசியில் ஒலித்தது. அது கூறியது:

-சேர்மன் மாவோ உங்களை அழைக்கிறார், இப்போது, அவரை வந்து பாருங்கள்.

-இப்போதேவா? ரிச்சர்ட் நிக்சன் கேட்டார், இப்போது தான் விமானத்தை விட்டு இறங்கினோம். நாங்கள் குவாம் வழியாக வந்தோம்.

-இப்போதே, தொலைபேசி கூறியது, நீங்கள் வந்து பாருங்கள், சரியா ?

-சரி, ரிச்சர்ட் நிக்சன் சொன்னார், வருகிரேன். எங்களை அழைத்துச் செல்ல நீங்கள் வருகிறீர்களா ?

– தொலைபேசி கீழே வைக்கப் பட்டிருந்தது.

– தாயோளி, ரிச்சர்ட் நிக்சன் கூறினார்.

டாக்டர் கிஸ்ஸிஞ்சர் குதிகால்களில் ஊஞ்சலாடிக் கொண்டே, பெரிதாக இளித்தார்.

Girl_Hat_Light_Bulb_Show_Case_Doll_White_Red

ரோஜாக்கள், பொத்தான்கள், விரல் உறைகள், இறேந்தை. கற்கள் மற்றும் சாலை வரையிலும் புல் வளர்கிறது. புல்லின் ஊடே பூக்கள். அவளது ஆடையிலும் பூக்கள். ஆடையின் நீளப்போக்கு நெடுக பொத்தாங்கள். கழுத்துப்பட்டையிலும், கட்டும்பட்டையிலும், விளிம்பு மடிப்பிலும் , இறேந்தை. மேலும் அவளது காலணிகள் மீதும் பொத்தான்கள். லக்ஸம்போர்க்கில் அவள் செகோவியாவிலிருந்து வந்த சால்வையை அணிவாள். பெண்கள் கடுமையாகவும், சிறப்பாக பேணப்பட்டும், இரக்கமுள்ளவர்களாகவும் இருந்த பழைய சம்பிரதாயத்தில் வளர்ந்த ஸ்பானிய நாட்டுப் பெண்ணைப் போல அவள் இருக்கிறாள் என்று பாப்லோ கூறுவான். கூட்டரசுப் படையின் அதிகாரியைப் போல அவன் இருக்கிறான் என்று நான் கூறுவேன். நாங்கள் “The Trail of the Lonesome Pine” (தனிமையான் ஊசியிலை மரத்தின் அடிச்சுவடு) என்ற பாடலைப் பாடுவோம். நான் அதை பியானோவில் வாசிப்பேன், Marching through Georgia மற்றும் Alexander’s Ragtime Band ஆகிய பாடல்களிலிருந்து சில துணுக்குகளைச் சேர்த்துக் கொண்டு. அவளுக்கு பும்பெல்லியின் மூக்கும் , ஸ்பானிய புனிதரின் கைகளும் இருந்தது.

பிரான்ஸில் அவள் மஞ்சள் தொப்பியை அணிந்தாள். இத்தாலியில் பனாமாத் தொப்பி. ஆலிஸ், நான் சொன்னேன், அசிஸி , அசிஸியின் புல் மற்றும் சஸீட்டாவின் இலைகள். மாடக் கண்ணிகளுக்காகவும், பள்ளிச் சிறுமிகளுக்காகவும் ஒலித்த மணியோசையைக் கேட்டுக் கொண்டே கற்கள் மீது சுகமாக நடந்தோம். எவ்வளவு அமைதியாக இருக்கிறது என்று அவளே அமைதியாக இருந்து கொண்டு கூறினாள். ஸ்பெய்ன் ஒரு அசையா உருவ ஓவியம், நான் கூறினேன், இத்தாலி ஒன்று தான் இயற்கைக் காட்சி. அங்குள்ள பறவைகள், அவள் சொல்கிறாள், புனித பிரான்சிஸ் , நான் சொன்னேன். ஒவ்வொரு பறவையும் அதன் வாழ்நாளில் வேதனையைச் சுமக்கிறது, பொறுத்துக்கொண்டிருக்கையிலே அதை மறந்தும் விடுகிறது. நாமோ பல வருடங்கள் முன் ஏற்பட்ட வேதனைகளை நினைவில் வைத்திருக்கிறோம். பழங்கதைகளைப் பற்றிப் பேசாதே, அவள் கூறுகிறாள். காலம் என்ற ஒன்று இனிமேல் இல்லை, இப்போது மட்டும் தான். இல்லை, நான் கூறினேன், என்னைப் போல் எக்காளத்தைக் கேட்கவும், ஒண்சிவப்புகளை பார்க்கவும் உன்னால் முடியுமானால்.

என்னால் முடிந்தது, முடியும், எப்போதும் முடியும். அதிகாரிகள் சேணத்தில் அமர்ந்திருக்கிறார்கள். விக்டோரியா காலத்து எண்களும் மங்கிய சிவப்புகளும் நிரம்பிய கூரிய முனைகளக் கொண்ட கொடிகளை ஏந்திய படைகள் அணி வரிசையின் முன்னணிக்கு வருகிறார்கள். இது ஆண்களிடையே நிலவும் ஒரு பழைய வழக்கம், ஆஸ்டெர்லிட்ஸிலும், செவஸ்டபோலிலும் இவ்வாறே நிகழ்ந்தது. பாண்டு இசையையும் சார்ஜெண்டுகளின் ஆரவாரத்தையும் கேட்டுக் கொண்டு. ஜெனெரெல்கள் தங்கள் குதிரைகள் மீது உயரத்தில் வீற்றியிருந்தார்கள். லியோ வெளியே சென்ற போது, நாங்கள் குதிரைகளைப் போல் கெச்சை நடையுடன் அறையைச் சுற்றி வந்தோம். பாஸ்கெட்டும் எங்களுடன் சுற்றி வந்தது. நான் ஜெனெரல்,ஆலிஸ் ஆபீஸர், பாஸ்கெட் தான் குதிரை, ஆகமொத்தம் நாங்கள் அனைவறும் சேர்ந்து நெப்போலியன் ஆனோம். நாங்கள் பிக்கநின்னி என்றழைக்கப்படும் நீக்ரோ குழந்தைகளாக அலபாமாவில் சனிக்கிழமை அன்று பெரியவர்கள் முன் ஒயிலாக நடந்தோம். பார்னம், பெய்லி மற்றும் சுமத்திராவின் பெருச்சாளியாக ஷாண்டில்லியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தோம் இறேந்தையையும் பாலேடையையும் காண்பதற்காக.

அமைதியாக இருக்கிறது என்று அவள் கூறுகிறாள். நான், ஆலிஸ், பூக்களைப் பார், என்றேன். ஆமாம் என்று அவள் கூற நானும் ஆமாம் என்கிறேன். வேறேதையோ சொல்ல முற்பட்டு தரும்பத் திரும்ப ஆமாம் என்று சொல்வது செம்மையாக இருக்கிறதல்லவா. அவள் புதர் பின்னே சென்று அவளுடைய இறுக்க வார்க்கச்சையையும், உள்ளாடையையும் தளர்த்தி, அவை அவளது பொத்தான்கள் வைத்த காலணிகளைச் சுற்றி உருவாக்கியிருந்த தொங்கலிழைக் குவியலை விட்டு வெட்கமின்றி வெளியே வந்தாள். நான் கூறினேன், ஆமாம், இங்கு தான், புனித பிரான்சிஸ் நடந்த இட்த்தில், ஆலிஸ், நீ உணர்ந்திருப்பாய், இல்லயா, நாம் ஆசிஸிக்கு வந்த காரணத்தை… நீ சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்தவள், இதுவோ புனித பிரான்சிஸின் சொந்த ஊர். அவள் கூறுகிறாள், நான் என் உள்ளாடைகளை என் சால்வையில் சுருட்டி வைக்கப் போகிறேன். யாராவது அதை கவனிப்பார்கள் என்று நீ நினைக்கிறாயா?

சிவப்பு ஓடுகள், பாசி, பருந்துகள். நாங்கள் மரங்களுக்கடியே மது அருந்தினோம், வெப்ப நிலை அதற்கு ஏற்றதாக இல்லை என்றாலும் கூட.. ஒரு வழியாக நாம் இங்கு வந்து சேர்ந்துவிட்டோம் என்று நான் சொல்ல, அவள், ஆமாம் நாம் இங்கு இருக்கின்றோம் என்று கூறினாள். அவளது கண்கள் துடிதுடிக்கின்றன, அவள் சிரிப்போ, தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு, ஜெனெரல் கிராண்டை சந்தித்து, நன்றாக்ப் பேணப் பட்டிருந்ததால், அவரை மகிழ்விப்பதில் மகிழ்ச்சியடையும் ஒரு அழகான ஆபீசரின் சிரிப்பு.

இது ஃபுகேயுடையதல்ல , நான் கூறினேன். நிச்சயமாக ஃபுகேயுடையதல்ல என்று அவள் கூறுகிறாள். நான் அவள் பாதத்தை என் பாதத்தால் தொடுகிறேன். அவள் என் பாதத்தை அவள் பாதத்தால் தொடுகிறாள். எங்களைச் சுற்றி சிள் வண்டுகள் பாடுகின்றன, ஸ்ட்ராவின்ஸ்கியின் இசையைப் போல் நேர்த்தியாக. ஸ்பெய்ன் ஒரு அசையா உருவ ஓவியம் என்றால், இத்தாலியை என்னவென்று கூறுவது? அவர்கள் இங்கு வந்தார்கள், அந்த பழங்காலத்து பெரும் கவிகள் எல்லாம், பெண்களுக்கு அவ்வளவு அழகான கண்கள் இருந்ததால். நிச்சயமாக பூனைகளைப் பார்ப்பதற்காக அல்ல, ஆலிஸ் கூறுகிறாள். இல்லை, நான் கூறினேன், பூனகளுக்காக அல்ல. ஹென்ரி ஜேம்ஸ் இங்கு வந்தார், தொனிக்காக. வில்லியம் இங்கு வந்தால் கூட தொனியை ஒரு போதும் கவனித்திருக்க மாட்டார். வில்லியம் இங்கு வந்தால் விகிதப் பொருத்தங்களை உள் வாங்கிக் கொண்டிருப்பார் ஆனால் பூனைகளப் பார்க்கத் தவறியிருப்பார். இளவரசியும், ஒரு வண்டியும் கடந்து செல்கையில், ஹென்ரி இளவரசியைப் பார்க்கிறார், வில்லியம்ஸோ வண்டியின் சக்கரத்தையும் அது கடிவாளத்துடனும், வண்டியின் மொத்த உருவத்துடன் இசைந்து பொருந்தும் விகிதங்களைப் பார்க்கிறார்.

நீ பேசும் போது, அவள் கூறுகிறாள், எனக்கு உடலெங்கும் நடுங்குகிறது, உள்ளே படபடவென்று எல்லாம் சுழல்கிறது. நீ சிரிக்கும் போது, நான் கூறினேன், நான் பீச்பழங்களைக் கடிக்கின்றேன், கஸால்ஸ் கொரெல்லியை வாசிக்கிறார், எனது ஆன்மா செரிப் பழங்களுக்கு ஊடே இருக்கும் ஒரு கூம்பழகன் பறவை. நாம் எப்பொதும் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்போமாக. இதோ இது எப்போதைக்கும், ஆலிஸ் கூறுகிறாள். எவ்வளவு அமைதியாக இருக்கிறது. புழுதியைப் பார், நான் கூறினேன். நீ அதில் வெறுங்காலுடன் நடப்பாயா? இன்னொரு குவளை மதுவை அருந்தினால், அவள் கூறுகிறாள், நான் மணிக்கோபுரத்திற்கே பறந்து சென்று விடுவேன்.சான் பிரான்சிஸ்கோவில் உன்னிடம் நூக்கமரத்தாலான பியானோ ஒன்று இருந்ததல்லவா? நான் கேட்டேன். லிஸ்டின் மார்பளவு உருவச்சிலையுடனும், அவள் கூறுகிறாள், செண்டிகைப்பூ நிரம்பிய பூத்தொட்டியுடன்.

இந்த வண்ணங்களைப் பார், சஸீட்டா ஏன் சஸீட்டாவாக இருந்தான் என்பது உனக்குப் புரியும். நாம் மீண்டும் இங்கிலாந்திற்குப் போவோமா, அவள் கேட்கிறாள், தேவாலயங்களில் உட்காருவதற்காக ? அந்த மலைகளப் பார், புனித பிரான்சிஸ் ஏன் புனித பிரான்சிஸாக இருந்தார் என்பது உனக்குப் புரியும்.

ரோஜாக்கள் , அவள் சொல்கிறாள், மிகத் தொன்மையானவை. அவை ஓவிடின் ரோஜாக்கள், நான் சொன்னேன்.இந்த ரோஜாக்கள் மட்டும் தான் சிவப்பாக இருக்கின்றன. எனக்கு சிவப்பிற்கான லத்தீன் வார்த்தை தெரிந்திருந்தால் நான் அதை சொல்லி இருப்பேன், ரோஜாவிற்கான லத்தீன் வார்த்தை தெரிந்திருந்தால் நான் அதை சொல்லி இருப்பேன், தொன்மையான ரோஜாவில் மட்டும் இருக்கும் சிவப்பிற்கான் லத்தீன் வார்த்தை தெரிந்திருந்தால் நான் அதையும் சொல்லி இருப்பேன். நான் ஓவிடாக இருந்திருந்தால் உனக்கு ஒரு ரோஜாவைக் கொடுத்து, அது உன் கண்களுக்காகவே கொடுக்கப் பட்டது என்று கூறியிருப்பேன். நான் அதை வாங்கிக் கொண்டிருப்பேன், அவள் கூறுகிறாள். நீ வாங்கிக் கொண்டிருப்பாய் என்பதை நினைக்கையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, நான் கூறினேன், என் பாதத்தால் அவள் பாதத்தைத் தொட்டுக் கோண்டே. சஸீட்டாவின் ரோஜா, பாப்லோவின் ரோஜா.

மதீஸின் மனைவி ஒரு ஜென்ஷன் பூ, அவள் கூறுகிறாள், என் பாதத்தை அவள் பாதத்தால் தொட்டுக் கொண்டு. எல்லா பெண்களும் பூக்கள் தானா, சிறுமிகள் ? ஆன்றி ரூசு ஒரு சூரியகாந்தி பூவிற்கு வாழ்க்கைப் பட்டார். சேஸான் ஒரு பேரிக்காய் மரத்திற்கு.

ஆலிஸ், நான் கூறினேன். சொல்லுங்கள் , ஜெனெரல் கிராண்ட். ,அவள் கூறுகிறாள். பிக்கநின்னி என்று நான் சொல்ல, ஆகஸ்டஸ் சீஸர் என்று அவள் சொல்கிறாள். அதோ அங்குள்ள ஊசியிலை மரங்கள் உனக்குத் தெரிகிறதா, அதோ அங்கு வில்லியம் மக்கின்லி ரிப்பப்லிகன் கட்சி முன் உரையாற்றிக் கொண்டிருப்பதைப் போல் நின்று கொண்டிருக்கும் அந்த மரங்கள் ? மக்கின்லி பற்றிய பேச்சை பாப்லோ முன் எடுக்காதே, அவர் ஸ்பெயினின் கௌரவத்தை மிதித்துவிட்டார் என்று அவன் எண்ணுகிறான். ஆமாம், நான் கூறினேன், அது தான் அமெரிக்க வழி. ஆனாலும், ஊசியிலை மரங்கள் ஆலிஸ், ஊசியிலை மரங்கள். என்னால் அவைகளைப் பார்க்க முடிகிறது, அவள் கூறுகிறாள், அவற்றின் வாழ்க்கை கடினமானது., அவற்றின் கீழே நிகழும் ஊசிகளின் வெண்கல வீழ்ச்சியை உன்னால் காண முடிகிறதா, நான் கேட்டேன். நாம் அது வரை ஏறினால் நாம் முகரக் கூடும் ரோசனம், புழுதி மற்றும் பழைய மண்ணின் மணத்தை நீ அறிவாயா ? பதபதப்பு ஆரம்பித்துவிட்டது. மேலும் இப்போது பார் பாறைகளை, மலைகளின் ஊசியிலை மரங்களிலிருந்து சறிந்து விழும் கியூபிசப் பாறைகளை, கூரைகளின் சிவப்பு ஓடுகளை, அங்கு முற்றத்தில் இருக்கும் கோழிக்குஞ்சுகளை, கூடைகளை….நான் அதை எல்லாம் பார்க்கிறேன், அவள் கூறுகிறாள். பார்த்த பிறகு, ஆலிஸ்? நான் கேட்டேன். பார்ப்பதற்காக அது அங்கே இருக்கிறது, அவள் பதிலளித்தாள். அது தான் சரியான பதில், நான் கூறினேன். சரியான கேள்வியும் கூட.

மாவோ தனது சிவப்புக் கைவைத்த நாற்காலியில் மகிழ்ச்சியுடன் அமைதியாக உட்கார்ந்திருந்தார். ரிச்சர்ட் நிக்சன் முழங்கைகள் காதுகளின் உயரத்தை எட்டும் வகையில் நாற்காலியில் அமிழ்ந்திருந்தார். அவர் முறுவலித்தார்.ஆய்விதழ்களின் அடுக்குகளையும், புத்தகங்கள் நிரம்பிய நிலையடுக்கங்களையும், மடிப்பு உறைகளின் கற்றைகளையும் , ஜாடிகளில் இருந்த எழுதுவதற்கான தூரிகைகளையும் அவர் கவனிக்கவில்லை. மாவோவையும், மாவோ தற்கால மெட்டர்னிக் என்று அழைத்த கிஸ்ஸிஞ்சரையும் பார்த்துச் சிரித்தார். மாவோ அப்படி அழைத்ததை நிருபர்கள் குறித்து வைத்துக் கொண்டார்கள்.

நிரம்பி வழிந்த அந்த அறை இருண்டிருந்தது. அறையிலிருந்த கொஞ்சநஞ்ச ஒளியும் கிராமர் பள்ளியின் வறண்ட விளையாட்டுத்திடலை நோக்கியிருந்த உயரமான ஜன்னல்களின் வழியாக வந்தது. சேர்மன் மாவோ ஆதிக்க அரசியலைப் பற்றிக் கேட்கிறார் என்று மொழிபெயர்ப்பாளர் கூறினார்.

– நாங்கள் அதை ஆமோதிக்கிறோம். ரிச்சர்ட் நிக்சன் கூறினார்.

-உங்களுடைய உதவியாளர்கள் மிக இளமையாக இருக்கிறார்கள், சேர்மன் மாவோ கூறினார்.

– அப்படியா ? ரிச்சர்ட் நிக்சன் கேட்டார்.

– இந்த விசயத்தில் நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், சேர்மன் மாவோ கூறினார், எங்கள் ஆட்சியில் இருப்பவர்கள் எல்லோரும் வயதானவர்கள்.

ரிச்சர்ட் நிக்சனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

– வயதானாலும், இன்னமும் இங்கேயே இருக்கிறார்கள், சேர்மன் மாவோ கூறினார்.

-உலகம் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது, ரிச்சர்ட் நிக்சன் கூறினார்.

– நீங்கள் தாய்வானைச் சொல்கிறீர்களா, சேர்மன் மாவோ கேட்டார்.

– இல்லை, ரிச்சர்ட் நிக்சன் கூறினார், சிரித்துக் கொண்டே, வெளியே உள்ள உலகம், முழு உலகம். அவர்களது தொலைக்காட்சிப் பெட்டிகளில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சேர்மன் மாவோ இளித்து விட்டு தன்னுடைய சொகுசான கைவைத்த நாற்காலியில் சாய்ந்து கொண்டார்.

– ஆ, ஆமாமாம், அவர் கூறினார், உலகம்.

oOo

ஆங்கில மூலம்: ‘The Richard Nixon Freischutz Rag‘ from Guy Davenport‘s short story collection: Da Vinci’s Bicycle: Ten Stories (1979)

Guy_Davenport_Richard_Nixon_Post_Modernism_Writers_Authors_English_Fiction_Shorts

நிக்சன் – மாவோ கதையின் கர்த்தாவான கய் டாவென்போர்ட் (Guy Davenport) எனும் அமெரிக்க எழுத்தாளர் அசாதாரணமான திறமைசாலி. ஆனால் பெரும் பிரக்கியாதி பெற்ற எழுத்தாளர் அல்ல. ஒரு தாம்ஸ் பிஞ்சனோ, நார்மன் மெய்லரோ, ஜான் அப்டைக்கோ, ஜோன் டிடியனோ, ஜாய்ஸ் காரொல் ஓட்ஸோ, சூஸன் ஸாண்டாக்கோ போன்றவர் அல்ல. ஆனால் வில்லியம் காடிஸ், பாரி ஹான்னா, ரேமண்ட் கார்வர், டேவிட் ஃபாஸ்டர் வாலெஸ் போன்ற பல எழுத்தாளர்கள், வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி நின்று அதிகம் எழுதா விட்டாலும், நன்கு தெரிய வந்தவர்களாகவும், புதுப் பாதைகளை வகுப்பவர்களாகவும் அறியப்பட்டிருந்தனரே அந்த வரிசையில் சேர்பவர் என்று சொல்லலாம்.

மற்றவர்களுக்கும் இவருக்கும் ஒரு வேறுபாடு என்னவென்றால், டாவென்போர்ட் நிறைய மொழி பெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். குறிப்பாகப் பண்டை கிரேக்க இலக்கிய கர்த்தாக்களின் படைப்புகள் பலவற்றை மொழி பெயர்த்திருக்கிறார். சுமார் 46 புத்தகங்களை எழுதி இருக்கிற இவர், அவற்றில் பற்பல படைப்புருக்களில் எழுதியவர். புனைகதைகள், கவிதை, கட்டுரைகள், புத்தக/ கலை மதிப்புரைகள் என்று பற்பல வடிவுகள். தவிர இவர் ஒரு ஓவியர், க்ராஃபிக் கலைஞரும் கூட. அமெரிக்காவின் தென் மாநிலமான கெண்டகியில் சுமார் 40 வருடங்கள் வாழ்ந்தவர் என்றாலும் தெற்கு மாநிலங்களின் அடையாளம் இவர் மீது எளிதில் பொருத்தப்படக் கூடியதல்ல.

1927 இல் தென் காரொலைனா மாநிலத்தில் பிறந்த இவர், ஆக்ஸ்ஃபோர்ட், ஹார்வர்ட் போன்ற பல்கலைகளில் முதுநிலைப் பட்டம், முனைவர் பட்டம் ஆகியனவற்றைப் பெற்றார். பிறகு வாழ்நாளில் பெரும்பகுதியை, 40 வருடங்கள் போல, இல்க்கியத்தைக் கல்லூரி மாணவர்களுக்குப் போதிப்பதில் செலவழித்திருக்கிறார். இடையில் எழுதியவை அந்த 40 க்கும் மேற்பட்ட புத்தகங்கள். நவீனத்துவத்தை மிகவும் சுலபமாகத் தன்னுடையதாக்கிக் கொண்ட டாவென்போர்ட் நவீன உலகின் விளைவுகளைக் கடுமையாக விமர்சிக்கவும் செய்கிறார் என்பது கவனிக்கப்பட வேண்டியது, புரிந்து கொள்ளப்பட வேண்டியது.

உதாரணமாக, இவை அவர் எழுதிய சில வரிகள்:

“What was there in modernity that it went so wrong? Why did our dream of great mobility turn into a nightmare of paralysis? Could you not work around the bankers and their greed?”

பாரிஸ் ரெவ்யூவிலிருந்து இவருடைய பேட்டி ஒன்றை மொழி பெயர்த்துப் பிரசுரிக்கத் திட்டம் உள்ளது. இப்போதைக்கு அந்த பேட்டியிலிருந்து சில எடுத்துக் காட்டுகள் மட்டும்.
“Making things is so human that psychology and philosophy have gotten nowhere in trying to account for it.”
I think I retired just in time, because the whole English department was filling up with deconstructionist crap. There really is no teaching of English literature anywhere.
Europeans have faces; Americans wear masks . . . But then I don’t know either Europe or the United States very well.
I took my method of collage from Stan Brakhage and Gregory Markopoulos. I lifted my Jules Verne steam balloon from Bergman’s Magic Flute. I’ve borrowed from Jacques Tati, Bill Forsyth, and Mike Leigh. It was Leigh who showed me a new way to end a story: you simply walk away from it after having changed the subject. At the end of Nuts in May, an incomparable satire, the camera finds a pig eating from its trough while the credits run. So I end “The Lavender Fields of Apta Julia” by abandoning the story for botanical information about lavender.
The thing about technology is that it owns us. …..But the point is that all progress asks that we pay a kind of ransom or blackmail in order to have it. The telephone is God’s gift to the bore.
…..[w]e don’t read imaginative writing for its ideological content. All my stories are from a character’s point of view. I’ve carved the puppet, and I manipulate the strings, but while it’s on stage, the show belongs to the puppet. Empathy (knowing how another person feels) is explicit in a work of art; sympathy is private, unknowable, and best left implicit.
இந்த மேற்கோள்கள் பின்புலன் தெரியாதபடி பிய்த்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவை டாவென்போர்ட்டின் அமைதியும், ஆழமும் நிறைந்த களேபரச் சிந்தனைக்கு ஒரு கோடி காட்டலாம். ஆனால் நியாயம் செய்தவை ஆகா. அதற்கு முழு பேட்டியைப் படிக்க வேண்டும். அது வருமொரு இதழில்….!! அதோடு வேறு சில கட்டுரைகளிலிருந்தும் பகுதிகளைக் கொடுக்க முயல்வோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.