[மகரந்தம் பகுதியில் பற்பல நாடுகளில் இருந்து தகவல்கள், கட்டுரைகள், கருத்துகளைக் கொண்டு வருவது என்பது திட்டம். இந்த இதழைப் போல சில இதழ்களில் ஒரு சில நாடுகளே அதிகம் கவனம் பெற்று விடுகின்றன. அது தற்செயல் நிகழ்வுதான். வரும் இதழ்களில் மேலும் விரிவாக, பல நிலப்பகுதிகளைக் கவனிக்கவிருக்கிறோம்.]
புராணமெல்லாம் கட்டுக்கதைகள் என்று பழி சாட்டி ஒழிக்கக் கிளம்பிய நவீனத்துவத்தின் புதுப் புரளிகள்
லெமூரியா கண்டம் என்று தமிழ்த் தேசியவாதிகள் கொஞ்சகாலம் டமாரம் தட்டிக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது தாளவாத்தியத்தை மாற்றுவார்கள். என்ன சத்தம் போட்டாலும் யாரும் கவனிக்க மாட்டேனென்கிறார்கள்,அதனால் தாளவாத்தியத்தை மாற்றினால் கவனிப்பார்களா என்ற ஆசைதான். ஆடிக்காற்றில் அம்மியே பறக்கிறது, இந்த கும்மியைக் காண யாருக்கும் நேரம் இருக்க மாட்டேனென்கிறது.
ஒரு புறமோ தொலைக் காட்சிப் பைத்தியம் குறைந்து போய், இப்போது மொபைல் ஃபோன்/ டாப்லெட் இத்தியாதி பைத்தியங்கள் வந்திருக்கின்றன. சென்னை ரயில், பஸ்களிலேயே பார்த்தால், இளைஞர்கள் காதில் ஒரு ஒயர் தொங்குகிறது- ஹெட்ஃபோன்கள். அவர்கள் எழுத்தைப் படிப்பதையே நிறுத்தி விட்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. தொலைந்து போன கண்ட்ம், சிலப்பதிகாரத்துக் காதைகள், புனித வெள்ளையர்கள்தான் திருக்குறளையே எழுதினார்கள், தமிழுக்கு அப்பன்களே வெள்ளைப் பாதிரிகள் என்ற அகழாராய்ச்சிகளையெல்லாம் விட்டு விட்டு, இந்த இளைஞர்களைத் தமிழைப் படிக்க ஊக்குவிப்பதில் இறங்கினால் நூலகங்களில் அடுக்கடுக்காகத் தூசி படிந்து கிடக்கும் புத்தகங்களையாவது புரட்டுவார்கள். தமிழ் மொழி 21ஆம் நூற்றாண்டுக்கு உருப்படியாக நகரும்.
இருந்தும் லெமூரியா என்ற கருத்துக்கு ஏதோ கவர்ச்சி இருக்கிறது போலிருக்கிறது. அதைப் பற்றிப் பேசுவதை எங்காவது மூலையில் யாரோ கிறுக்கர்கள் தொடர்ந்து செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். காலுக்கடியில் இருக்கும் மண்ணும், கல்லும் காணாமல் போய்க்கொண்டிருக்கையில், 10,000 ஆண்டுகளுக்கு முன்னால் சமுத்திரத்தில் மூழ்கிப் போன நிலத்தைப் பற்றிக் கவலைப்படு என்றால் யாருக்கு நாட்டம் இருக்கும்? சிலருக்கு இன்னும் இருக்கிறது என்பதுதான் ஒரு வினோதம். அப்படி ஒருவர் இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார். கட்டுரையில் பாதியும் யாரும் படிக்காத ஏதோ கதைப் புத்தகங்கள், கற்பனைக் கட்டுரைகள் போன்றனவற்றைப் பற்றி இருக்கிறது. கொனன் டாயிலும், ஜூல் வெர்ன் (Jules Verne) போன்றாரும் கட்டிய அதி புனைவுக் கதைகளை நிஜம் போல எடுத்துக் கொண்டு, காணாமல் போன நிலப்பரப்புகள் பற்றிக் கட்டுரை எழுதினால் யார் படித்து அதை மதிப்பார்கள்?
ஆனால் லெமூரியா என்ற பெயர் ஏன் வந்தது, அந்தக் கருத்தை யார் முதலில் சொன்னார்கள் என்பதை இக்கட்டுரை எடுத்துச் சொல்கிறது. யெலினா ப்ளாவாட்ஸ்காயா (Madame Blavatsky) நிறுவிய தியொஸஃபி இயக்கத்தினர் லெமூரியாவில் வசித்திருந்த மனித மூதாதையர் பற்றி ஏதேதோ பிரமிப்பூட்டும் கதைகளை எழுதி இருக்கின்றனர். ராமாயணத்தில் காணும் பல அபூர்வப் பிறவிகள் போன்றவர்கள் இந்த வருணிப்பில் காணும் பிறவிகள்.
இதையெல்லாம் தொகுத்து ஒரு கட்டுரை இங்கே.
http://www.aeonmagazine.com/living-together/lost-civilisations-under-the-waves-still-fascinate-us/
பொதுவாக இந்தியாவையும், இந்திய சிந்தனையாளர்களையும் எப்படி எல்லாம் கேவலப்படுத்தலாம் என்று யோசித்து (ஆம், ரூம் போட்டு யோசித்து) எழுதுவது அமெரிக்க ‘சிந்தனையாளர்களில் கணிசமான கூட்டத்தினரின்’ வழக்கம். மேற்கு யூரோப்பியர்களும் இதில் ஒன்றும் சிறிதும் சளைத்தவர்கள் அல்ல. இந்திய ஜாதி முறைகள் பற்றி நமக்கு ஏதும் தெரியாது, இவர்களுக்குத்தான் தெரியும் என்ற ஆணவத்தோடு புத்தகங்கள் எழுதி அனுப்புவோர் இவர்களில் ஏராளம். ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும் பற்றித் தமக்கெ ‘உண்மை’ தெரியும் என்று கூடச் சாதிப்பார்கள். இந்து மதமே இவர்கள் சொல்லிப் போன வகையில்தான் இருக்கிறது என்று சொல்வாரும் இதில் உண்டு. Native informant என்று பாமரர் நிலையில் நம்மை இருத்தி, நிபுணர்கள் நிலையில் தம்மைத் தாமே பொருத்திக் கொள்ளும் பல்கலை ஆய்வாளர்கள் இவர்களில் ஏராளம். இவர்களுக்குப் பாதுகை தாங்கும் நம் நாட்டுச் ‘சிந்தனையாளர்கள்’ இந்தியாவில் ஊடகங்களில் நிரம்பி வழிகிறார்கள் அதோடு சேர்ந்து இந்தியப் பல்கலைகளிலும் சமூக ஆய்வுத் துறைகளிலும் இப்படிக் கைகட்டிச் சேவகம் செய்து வழக்கமானவர்கள் நிறைய உண்டு. என்பதை நாம் மறக்க முடியுமா?
‘புனிதங்களை’ ஒழித்தல் என்பது நவீனத்துவத்தின் அடிப்படைத் தர்க்கம் என்பதை நம்மவர்கள் நன்கு கற்று வைத்திருக்கிறார்கள், வேறொன்றையும் கற்கவில்லை என்பதை நாம் நினைவு கொள்ளுதல் கொஞ்சம் சங்கடத்தைக் கொடுக்கும். இந்தப் புனித ஒழிப்புப் பாணியைப் பின்பற்றிப் ப்ளாவட்ஸ்கியை இன்னும் கிண்டல் செய்து கொண்டிருப்பவர்கள் மேற்கில் இருக்கிறார்கள், அவர் துவக்கிய தியோஸஃபி இயக்கம் ஒரு மாதிரி பழைய பங்களாக்களில் சென்னையில் இன்னும் ஏதொ கொஞ்சம் அரை குறை உயிருடன் இருக்கிறது என்றாலும் இளைஞர்களுக்கு இப்படி ஒரு இயக்கம் இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் இருந்தது என்பதும், அதைத் துவக்கியவர்களில் பலர் யூரோப்பியர் என்பதும் தெரியுமா என்பது ஐயமே. கூகிளிட்டால் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. ப்ளாவட்ஸ்கியைக் கீழிறக்கிப் பேசும் கட்டுரையின் மாதிரி ஒன்று இங்கே கிட்டும்.
http://www.thedailybeast.com/articles/2010/01/06/dead-cool-madame-blavatsky.html
இதை அகம்கிழந்து படிக்கும் நம்மவரில் பலருக்கு இதே புனிதத்தை ஒழித் தல் என்ற பாணியில் இஸ்லாம், கிருஸ்தவம், மார்க்சியம் எனும் உலகளாவிய செமிதிய மதங்களைப் பற்றிப் பேசினோம் என்று வையுங்கள்- உடனே குருதி கொப்பளிக்கும். அத்தனைக்கு யூரோப்பியத்துக்கு, அன்னியருக்குச் சரணடைவது பழகிப் போயிருக்கிறது.
oOo
அதீத நவீனத்துவத்தின் என்றென்றைக்குமான அவலங்கள்
இது சீனாவின் மோசமான உணவு சப்ளை நிலைமை பற்றியது. மோசமான என்றால் உணவு இல்லாமை, பஞ்சம் என்றில்லை. சாப்பிடும் உணவில் என்னென்ன கலந்திருக்கின்றன, எது நம்மை கடுமையான நோய்க்குள் ஆழ்த்தும் என்பதெல்லாம் தெரியாத மர்மம் சீனர்களைப் பிடித்தாட்டுகிறது. அத்தனை ஊழல் நிறைந்த நாட்டில் உணவுப் பொருட்களைச் சந்தைக்குக் கொணருவார் ஏதேதோ பயங்கரமான விஷயங்களை எல்லாம் கலப்படம் செய்கிறார்கள். இதனால் சீனர்கள் யூரோப்பிலிருந்து பால் பொடியை குழந்தைகளுக்குக் கொடுக்க என்று ’இறக்குமதி’ செய்கிறார்களாம். இறக்குமதி என்றால் கப்பல்களில் கண்டெய்னர்களில் டப்பாக்களைக் கொண்டு வரும் இறக்குமதி இல்லை. அதைக் கூடக் கலப்படம் செய்வார்கள் என்று ஐயம் போலிருக்கிறது. சிங்கப்பூரிலிருந்து சூட்கேஸ்களில் நம் தமிழர்கள் ஏதேதோ பொருட்களை எல்லாம் இறக்குமதி செயது பர்மா பஜாரில் விற்பார்களே, ஒரு பததாண்டுகள் முன்பு வரை, அது போன்ற இறக்குமதி. சுற்றலாப் பயணிகளாக யூரோப்புக்கும் பல நாடுகளுக்கும் போகும் சீனர்கள் மூலமாகக் கொணரப்படும் முக்கியப் பொருட்களில் குழந்தைகளுக்குப் பால் பொடி ஒன்று.
சில யூரோப்பிய நாடுகளில் இதனால் அங்காடிகளில் ஒரு குடும்பத்துக்கு ஒரு நேரத்துக்கு ஒரு டப்பாதான் குழந்தைக்கான பால் பொடி என்று கூட கட்டுப்பாடுகள் கொணர நேர்ந்திருக்கிறது. ஆகவேதான், பால் பொடி வாங்குவதற்கென்று ஒரு கூட்டம் சீனச் சுற்றுப் பயணிகளை அனுப்பி அவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கடையிலும் போய் ஒரு டப்பி வாங்கி வந்து அவற்றைச் சேர்த்து விமானத்தில் அனுப்பும் நிலை எழுந்திருக்கிறதாம்.
ஒரு கட்டுரையில் சீனாவில் என்னென்ன விதமான கலப்படம் நடக்கிறது என்று எழுதுகிறது கார்டியன் பத்திரிகை.
ஆனால் சீனா முன்போல ஒரு ஏழை நாடோ, உலக அதிகார அடுக்கில் பின்னே நிற்கும் நாடோ இல்லையே. அதனால் இதர ஏகாதிபத்திய நாடுகளைப் போலவே சிறு நாடுகளுக்குச் சீனா இப்போதெல்லாம் புத்திமதி சொல்லத் துவங்கியுள்ளது. சமீபத்தில் நியுஜீலாந்தின் பிரதம மந்திரிக்கு உணவுப் பொருட்கள் சுத்தமாக இருக்க வேண்டியதன் அவசியம் பற்றி சீனாவின் அதிபர் ஒரு லெக்சர் அடித்தாராம். சீன வலைஞர்கள் இந்தச் சம்பவத்தின் கிறுக்குத்தனத்தைப் பற்றி எழுதிச் சிரித்து மாய்ந்து போகின்றனராம். நிதிநிலைமையை எப்படி நிர்வாகம் செய்து நாட்டை சுபிட்சமாக வைத்திருப்பது என்று உலக நாடுகளுக்கும், கு்றிப்பாக இந்தியாவுக்கும் அடிக்கடி ‘லெக்சர்’ அடித்த அமெரிக்கா வாங்கிய கடனுக்கு வட்டி கட்டக் கூட நிதி இல்லாது சந்தி சிரிக்கிற நிலையில் இன்று இருப்பது போன்ற நிலைதான் சீனாவுக்கு வேறு தளங்களில் என்றாலும், பெரும் ராணுவத்தையும், ராட்சத உற்பத்தி சக்தி இருப்பதால், உலக இறக்குமதிச் சந்தையில் பெரும் நுகர்வோராக இருப்பதால், சீனாவால் குட்டி நாடுகளுக்கு உணவுப் பாதுகாப்பு பற்றிப் புத்திமதி சொல்லத் தகுதி இருப்பதாக அந்நாட்டு அதிபர் கருதுவதில் என்ன தப்பு? ’தடி எடுத்தவன் தண்டல்ராயன்’ என்றுதானே தமிழ் மரபும் சொல்கிறது?
http://www.theguardian.com/world/2013/oct/11/china-food-scandals-fox-hair-animal-waste
oOo
அதி நவீனத்துவ முகமூடியில் பழைய கொலைஞர்கள்
உலகெங்கும் அரசியல் கருத்தியல் எது ஆட்சியில் இருந்தாலும் அரசு ஆளும் முறை ஒன்றேதான் என்று ஆகிக் கொண்டிருக்கிறது. சீனாவில் உலகப் பாட்டாளிகளை உய்விக்க வந்தவர்களாகவும், புனிதக் கம்யூனிஸ்ட்/ மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்/ மாஓயிஸ்ட் இத்தியாதி லேபல்களோடு கிழக்கில் உதித்த சூரியனாகவும் தம்மைப் பறைசாற்றிய ‘புரட்சி’யாளர்கள் உலக முதலியத்துக்குச் சீனப் பாட்டாளிகளைக் கூலிப் படையாக்கி விலை பேசி, ஒரு 40 ஆண்டுகளாக அடிமை முறை உற்பத்தியில் வெற்றி கண்டனர். அதோடு விட்டார்களா? தொழிலாளர்கள், விவசாயிகள், உதிரிப் பாட்டாளிகள் ஆகியோருக்கும் ஒரு உரிமையும் இல்லாது நசுக்கி வைத்திருந்தனர். அவர்கள் பேச்சுரிமை, பிரசுர உரிமை, தமக்கென ஒரு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை ஆகியன ஏதும் இல்லாததோடு, ஊர் விட்டு ஊர் போய் வேறிடங்களில் வசிக்கும் உரிமையும், தம் விருப்பத்துக்குக் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் உரிமையும், ஏன் தம் விருப்பத்துக்கு இருப்பிடங்களைத் தேடிக் கொள்ளும் உரிமையும் கூட இல்லாது ஆக்கப்பட்டனர்.
அத்தனை ஆழமான புரட்சியைத்தான் சீனாவின் பாதுகை தாங்கிகளாக இந்தியாவில் செயல்படும் இந்திய மாவோயிஸ்டுகள் இந்தியாவுக்கும் கொண்டு வரவேண்டுமென்று துடியாய்த் துடிக்கின்றனர். ஆயுதம் தாங்கி ஒளிந்து உலவிச் சாதாரண மக்களையும், அவர்களின் கூட்டத்திலிருந்து அரசு ஊழியராகச் செயல்படுவோரையும் ஆயிரக்கணக்கில் கடந்த பத்தாண்டுகளில் கொன்று குவித்ததும் இதே கூலிக் கொலைகாரர்கள் கூட்டம்தான். இவர்களை ஏதும் செய்யத் துப்பில்லாத இந்திய அரசு இந்தியச் செய்தி ஊடகங்களிலும், சமூகத் தொடர்பு ஊடகங்களிலும் அரசியல் கருத்துகளையும், போராட்டம் பற்றிய செய்திகளையும் பரிமாறிக் கொள்ளும் சாதாரண மக்களையோ, பத்திரிகையாளரையோ வாயடைக்கச் செய்யச் சட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
அதுவும் உலகெங்கும் நடக்கும் நடைமுறைதான். அமெரிக்கா, யூரோப்பிய ஐக்கியம், ரஷ்யா, எகிப்து, இராக், இரான், மலேசியா என்று பற்பல நாடுகளில் இப்படி மக்கள் கருத்துப் பரிமாற்றத்துக்குத் தடைகளும், அச்சுறுத்தும் வாய்ப்பூட்டுகள் போடும் தடைச் சட்டங்களும், நீதிமன்றம்/ நீதிபதிகளின் இடையீடு இல்லாமலே சிறையில் தள்ள வசதிகளும் தமக்கு வேண்டுமென மக்களவையில் அரசுகள் கோரிப் பெறுகின்றன.
அடுத்த கட்டமாகப் பற்பல சமூக ஆர்வலர்களின் இயக்கங்கள் ஒடுக்கப்படுகின்றன. வால்ஸ்ட்ரீட்டை கொள்ளையர் கும்பலிடமிருந்து மீட்க எழுந்த ஒரு ஜனநாயக் இயக்கத்தை அமெரிக்க அரசு நாடெங்கும் கடும் போலிஸ் நடவடிக்கைகளால் ஒடுக்கியது பற்றிப் படித்திருப்பீர்கள். ரஷ்யா ஒரு நூறாண்டாகவே இதே போன்ற கடும் ஒடுக்கு முறைகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறது. ஜார் மன்னராட்சியின் இத்தகைய கொடும் முறைகள் இருந்ததை எதிர்த்து பாட்டாளிகளை விடுவிக்கப் போவதாகப் பெரும் பொய்யைச் சொல்லி ஆட்சியைப் பிடித்த லெனின், ஸ்டாலின் ஆகியோரின் கொடுங்கோல் அரசு அடுத்த 70-80 ஆண்டுகள் மக்களை ஒடுக்கிய வரலாறு நமக்குத் தெரியும். ஸ்டாலினின் பேயரசு பல பத்து மிலியன் மக்களின் பட்டினிச் சாவுக்கும் காரணமாக இருந்ததை உலக வரலாறு இன்று நன்கு பதிந்து வைத்திருக்கிறது. வழக்கம்போல இந்திய கம்யூனிஸ்டுகளும், கூட ஓடி அவர்களுக்குப் பாதை பெருக்கி வைக்கும் இந்திய அறிவு ஜீவிகளும், ஸ்டாலினியப் படுகொலைகளை மறைக்கவும் மறுக்கவும் பெரும்பாடு படுகின்றனர். அந்த ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகளை மக்கள் பெரும்பாடு பட்டு ஆட்சியில் இருந்து ஒழித்தனர். ஆனால் கம்யூனிஸ்டுகளின் வாரிசுகளாக அரசு எந்திரத்தில் எங்கும் இருந்த கொலைகாரர்கள் மறுபடி ஆட்சியைப் பிடித்து அந்த மக்களை மேன்மேலும் ஒடுக்கியபடியே இருக்கின்றனர். சமீபத்தில் உலகச் சூழலியக்கங்களில் ஒரு முக்கிய பங்கெடுப்பவராகப் பல பத்தாண்டுகளாக இருந்து வரும் பசுமைப் போராட்டக்காரர்களை (Green Peace activists) அவர்கள் ஆர்க்டிக் கடல் பகுதிகளில் ரஷ்யா செய்யும் ஆக்கிரமிப்புகள், மற்றும் சூழலை நாசம் செய்யும் நடவடிக்கைகளைக் கண்டித்துச் செய்த போராட்டத்தின்போது கைது செய்து, அவர்களைக் கொள்ளையர் என்று பட்டம் சூட்டி, 10-15 வருடங்கள் சிறைக்கு அனுப்ப முயன்று கொண்டிருக்கிறது. ஜார், லெனின், ஸ்டாலின் வழி இப்போது புடினிய கொள்ளையர் அரசு. அந்தச் செய்தியை இங்கே காணலாம்.
http://www.theguardian.com/environment/2013/oct/02/greenpeace-activists-charged-piracy-russian-authorities
oOo
காலனியம் தோல்வி கண்டதும் அவிழ்ந்த நெல்லி மூட்டை
ஸ்காட்லண்ட் என்ற நிலப்பகுதி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒரு அடிக்கல்லாகவோ, அல்லது தாய்ச்சுவராகவோ கருதப்படுகிறது. ஆனால் ஸ்காட்டியர்கள் அன்றிலிருந்து இன்று வரை எப்போது இங்கிலாந்திலிருந்து பிய்த்துக்கொண்டு போகலாம் என்று ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் மார்கரெட் தாச்சர் என்ற கிட்டத்தட்ட அரக்கியாகவும், முதலியத்தின் இரும்புக்கரமாகவும் இருந்த ஒரு பெண்மணி ஸ்காட்லண்டின் கரிச் சுரங்கங்களையும், கரிச் சுரங்கத் தொழிலாளர் இயக்கங்களையும் ஒழித்துக் கட்டிய பிறகு உழைப்பாளர் கூட்ட ஸ்காட்டியரிடம் இந்தப் பிரிவினை தாகம் நன்கு பரவி இருப்பதாகத் தெரிகிறது. எப்படிக் கனடாவில் ஃப்ரெஞ்சு மக்களிடம் குபெக் மாநிலத்தைக் கனடாவிலிருந்து பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுகிறதோ, அதே போல ஸ்காட்லண்டில் பிரிவினைக் குரல் எழுந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் இந்தப் பிரிவினை குறித்து ஒரு தேர்தல் நடக்கவிருக்கிறது. அது வெல்லுமா, அப்படி ஒரு தேர்தலில் என்னென்ன சாய்வுகள் போட்டி இடும், விளைவு என்னவாக இருக்கும் என்பது குறித்து ஒரு அமெரிக்க கருத்துக் கணிப்பாளர், பிரபலஸ்தரான நேட் ஸில்வர் ஏதோ கருத்து சொல்லப் போக அது மிக்க பரபரப்பை உருவாக்கி விட்டிருக்கிறது.
ஸ்காட்டியத் தொழிலாளர்கள் அனைவரும் பிரிவினையை ஆதரிக்கிறார்கள் என்றில்லை. பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியோடு ஒற்றுமையாக இருந்து பிரிவினையை எதிர்க்கும் தொழிலாளர் குழுக்களும் இருக்கின்றன. ஆனால் தாச்சர் காலத்திலிருந்தே பிரிட்டனில் தொழிற்சங்கங்கள் மெலிந்து போய்க் கொண்டிருக்கின்றன என்பதால் அவற்றுக்கு ஸ்காட்லண்டில் என்ன வலு இருக்கும் என்பது அத்தனை தெளிவாக இல்லை. ஆளும் மரபுவாதக் கட்சியோ (கன்சர்வேடிவ்) பிரிவினையால் என்னென்ன பெருநஷ்டங்களெல்லாம் தனியாகிப் போன ஸ்காட்லண்டுக்கு நேரும் என்று பட்டியலிட்டு ஒரு பீதியை உருவாக்க முயல்கிறார்கள் என்று தொழிலாளர் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த பன்முக இழுபறி நிலையைக் குறித்த ஒரு கட்டுரையை இங்கே காணலாம்.
http://www.lrb.co.uk/blog/2013/09/18/peter-geoghegan/project-fear/
oOo
காலனியம் விட்டுப் போன இழிவுகள், விடாது தொடரும் அழிவுகள்
மெக்காலேயால்தான் இந்தியாவுக்கு சிந்தனையே வந்தது என்று புல்லரிக்கும் மனிதர் இந்தியாவில் இன்னமும் இருக்கிறார்கள். மற்றவரெல்லாம் ஒரு வழி என்றால் தாம் மட்டும் எதிர் வழியில் போவதைப் பெருமையாக நினைக்கும் போக்காக இது இருக்கலாம். கிருஸ்தவத்துக்கு மூளையை அடகு வைத்தவர்கள் மெக்காலேயை மூதாதையாகக் கொண்டாடுவதில் அதிசயம் இராது. அவர்களில் ஒர் கணிசமான பகுதியினர், குறிப்பாக ஆங்கிலத்தை வீட்டு மொழியாகவே கொண்ட அற்புதர்கள், பிரிட்டிஷார் மறுபடி வந்து ஆள மாட்டார்களா, வெள்ளையருக்கு நாம் சேவகம் செய்ய மாட்டோமா, அந்த பாக்கியம் எப்போது கிட்டும் என்று ஏங்கவும் செய்வார்கள். சுதந்திரமும், சுய மரியாதையும் அத்தனை கனமாகக் கனக்கிறது, எப்போது அவற்றை விட்டெறிவோம் என்று ஏங்கும் கூட்டம் இது. இது இந்தியாவில் எங்கும் ஆட்சியில் இருக்கும் கூட்டம் என்பது நம் நாடு ஏன் தொடர்ந்து நாசத்தின் விளிம்பிலேயே நின்று தத்தளிக்கிறது என்பதை ஒரு வேளை விளக்குமோ என்னவோ. எப்போது சொந்த நாட்டை அன்னியருக்கு அடகு வைக்கலாம், பெருவாரி மக்களின் வாழ்வுக்குத் தீ வைத்து விட்டு அதில் தாம் மட்டும் குளிர் காயலாம் என்றே ஏங்கும் பதர்களைப் பதவியில் வீற்றிருக்க வைக்கும் மக்களைத்தான் குறை சொல்ல வேண்டும்.
இந்த மெக்காலேயின் கூட்டம் இந்தியாவில் என்னென்ன பேரழிப்புகள், சீரழிவுகளை எல்லாம் கொணர்ந்தது என்பதை அறியாத மேதைகள் இங்கிலீஷ் படிப்பால்தான் நமக்கு உலகம் தெரிந்தது என்று மகிழ்வதில் ஆச்சரியம் இல்லை. யூரோப்பிய காலனியத்தால் இந்தியா எப்படி எல்லாம் அழிந்தது என்று காந்திக்கு முந்தைய தலைமுறையினர் நிறையவே எழுதி வைத்துப் போனார்கள். நேருவின், அவருக்குப் பிந்தைய தலைமுறையினர் அனேகமாக காலனியத்தின் அழிப்பைப் பற்றி மக்களுக்கு விளக்காமல் இருந்தே காலம் தள்ளி இருக்கிறார்கள். இன்றோ அமெரிக்கத் தொலைக் காட்சியின் சீரழிந்த வாழ்வுச் சித்திரங்கள் பெருநகர இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, இந்திய வாழ்வு கருமிருள் கானகமாகச் சித்திரிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவுக்கோ, யூரோப்புக்கோ போய் அங்கு பொதுமக்களின் வாழ்வைப் பெருமுதலியம் எப்படி அழித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தால்தானே நம் பெருநகர இளைஞர்களுக்கு உண்மை தெரியப் போகிறது? தெரியும்போது அவர்கள் ஏற்கனவே மேற்கின் சீரழிவில் பெரும் பங்கெடுத்துத் தாமுமே வழி தெரியாக் குருடர்களாகி இருப்பர்.
இன்று இன்னமும் துளித் துளியாக காலனியத்தின் பயங்கரங்கள் வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன. கருணையே உருவான கிருஸ்தவப் பிரதிநிதிகளாக மேலைக் காலனியரைச் சித்திரிக்கும் மூடர்கள் தமிழ் சினிமாவில் இன்னும் அப்படியே படமெடுத்து மக்களை மூளைச் சலவை செய்து கொண்டிருக்கையில், சென்ற நூற்றாண்டுகளில் உலகை உய்விக்க வந்த கிருஸ்தவர்களாக வலம் வந்த, மற்றெல்லாரையும் காட்டுவாசிகள் என்று கருதிய யூரோப்பிய வெள்ளையரின் கொடுமைகளைப் பற்றித் தொடர்ந்து புத்தகங்கள் மேற்கிலேயே வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஒரு புத்தகத்தில் பிரிட்டிஷ் ராணுவம், எப்படி ஒரு எதிர்ப்பு சக்தியுமில்லாத இந்தியக் கிராமங்களில் போய் இளம் பெண்களைக் கவர்ந்து கொண்டு போய் தம் படையினருக்குக் கேளிக்கைப் பொருட்களாகவும், பின்னர் நகரத்தில் விபச்சாரிகளாகவும் ஆக்குவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தது என்று விவரிக்கிறார்கள். அது குறித்த ஒரு கட்டுரை இங்கே.
இது ஒரு எலெக்ட்ரானிக் புத்தகமாக வெளி வர விருக்கிறது. எழுதியவர் ஒரு சமூக மாற்ற ஊக்குவிப்பாளர். தெளிவாகவே சொல்கிறார்- இன்றும் பம்பாயில் தொடரும் விலைமாதர்களின் கூட்டங்கள், அன்றைய பிரிட்டிஷ் ராணுவத்தின் கொடிய வழக்கத்தின் வாரிசுகள் என்று. ஆனால் இன்னும் இந்தியப் பெருநகரங்களில் தொடரும் இந்தக் கொடுமைக்குப் பொறுப்பு மெக்காலேயின் வாரிசுகளாக ஆகி விட்ட நாம் என்பதை யாரால் மறுக்க முடியும்?
http://www.theguardian.com/world/2013/sep/28/mumbai-sex-slaves-prostitution-india
oOo
உலகெங்கும் ராணுவங்கள் சீரழிக்கும் இளைஞர்கள்
ராணுவம் என்றால் தேசபக்தி அல்லது நாட்டுப் பற்று என்று நினைக்கும் பேதமை படித்தவர்களிடமும் நிறைய உண்டு. பொதுவாக உலகெங்கும் வலது சாரி எனப்படும், பழமை வாதிகளும், முதலியத்தின் அடிவருடிகளும், சுதந்திர சிந்தனை என்ப தை அச்சத்தோடு பார்த்தே வளர்ந்தவர்களும் இதில் அடக்கம். இடது சாரிகளுக்கோ, சிவப்புப் பதாகை, மக்கள் புரட்சிப் படை என்று பெயரை மட்டும் மாட்டி விட்டு, அதை ஸ்டாலின், ட்ராட்ஸ்கி, லெனின் போன்ற கொலைஞர்களின் இரும்புப் பிடியிலும் சிக்க வைத்து விட்டால் அது ராணுவமல்ல, விடுதலை ஜோதியை முன்னெடுக்கும் அற்புத அணி. தம் உய்விற்காக அற்பு்தங்களை நாடுவதில் இரண்டு சாரிக்கும் ஒரு வேறுபாடும் இல்லை.
மேற்படியாரில் புத்தகப் புழுக்கள் பெரும் கூட்டம் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களில் அனேகமாக யாருமே ராணுவத்தில் பாதசாரிப் படையினராகச் சேர்வது நடக்காத ஒன்று. ஆனால் ராணு்வங்களோ பெரும்பாலும் பாதசாரிப் படையினரை நம்பியே கட்டப்படுகின்றன. இன்றைய தொழில் நுட்பமிகு ராணுவங்களில் சில நாடுகளில் மெள்ள மெள்ள பாதசாரிப் படையினரை வெகுவாக எண்ணிக்கை குறைத்து, ஆளில்லா சிறு விமானங்கள், பெரிய விமானங்கள், ரோபாட் எந்திர வண்டிகள், எந்திரமான படைகள் மூலம் போர் நடத்த முடியுமா என்று யோசித்து அதை நடைமுறைப்படுத்துவதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள். இருந்தும் அடிப்படையில் தரைப்படைகள்- தரையில் காலணி என்று இங்கிலீஷில் இதைச் சு்ருக்கமாகச் சொல்கிறார்கள் (shoes on the ground) – இல்லாது போரில் வெற்றி என்பது இல்லை. பெரும் நாசத்தை அணுகுண்டு போன்ற சகல அழிப்பான் கருவிகளால் சாதிக்கலாம் என்பது இருக்கவே இருக்கிறது. அத்த்னை பெரும் நாசத்தை இலக்காகவோ, அவசியமாகவோ கொள்ளாத இடைநிலைப் போர்களுக்குத் தரையில் காலணி முறை அவசியம். இப்படித் தானியங்கி எந்திரங்களையும் பின்னிருந்து இயக்க ஒரு சாதாரணர்களின் படைதான் தேவைப்படுகிறது. புழுதி, வெய்யில், கட்டா ந்தரை, காட்டுப் புதர் வெளி, பாலை, சதுப்பு என்று அல்லல்படாமல் காங்க்ரீட் சுவர்களுக்குள், குளிர் பதனப்பட்ட அறைகளில் கணனிகளுக்குப் பின்னிருந்து இந்த சாதாரணர் படை மேற்படி கொலைக் கருவிகளை இயக்கும்.
ஆனால் இந்த வகையோ, பழைய வகையோ, எந்த வகை ராணுவத்தையும் கட்டமைப்பதில் 20ஆம் நூற்றாண்டின் கடைசிக் கால் பகுதியில் உலகெங்கும் ராணுவங்களில் நிறைய சிக்கல்கள் எழு்ந்திருக்கின்றன. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஒரு காரணத்தை இங்கு பார்க்கலாம்.
அதுப் புது வருகைகளைப் பழைய படைவீரர்கள் கொடுமைப்படு்த்தும் ஒரு கேவலமான வழக்கம். குறிப்பாக ரஷ்ய ராணுவத்தில் இது 70களில் துவங்கிப் பெரும் கெடுநாசமாகப் பரவி இருக்கிறதென்று சொல்லப்படுகிறது. அதைப் பற்றிய ஒரு கட்டுரை இங்கே.
http://russiapedia.rt.com/of-russian-origin/dedovshchina/
ஆனால் இது ரஷ்யாவில் மட்டும் நடக்கும் கொடுமை இல்லை. அங்கு கட்டாய ராணுவப் பணி என்பது இருப்பதால் இளைஞர்கள் இரண்டு வருடமாவது ராணுவத்தில் சிக்கிக் கொள்ளும் பயங்கரம் இருக்கிற்து. மாறாக அமெரிக்க ராணுவமோ மக்கள் தாமாக விரும்பிச் சேரும் வகைப் படை. இதில் சேர்பவர்கள் அனேகமாக கீழ் மத்திய நிலை குடும்பத்து இளைஞர்கள், விவசாய நிலப்பகுதிகளிலிருந்தும், சிற்றூர்களிலிருந்தும், மத நம்பிக்கைகள் அதிகமாக உள்ள சமூகஙகளிலிருந்தும் வருபவர்கள். அனேகமாக உயர்நிலைப் பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்தவர்கள். நகர்ப்புறங்களில் இருந்து சேர்பவர்கள் சிறுபான்மை இனத்தவராகவோ, வறுமைக் கோட்டுக்கு அருகில் உள்ள குடும்பத்தினராகவோ, மத நம்பிக்கை அதிகம் உள்ளவராகவோ இருக்கிறார்கள். அமெரிக்க ராணுவத்தில் சில வருடங்கள் பணி புரந்தால் குடியுரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சேரும் குடியேற்றக் குடும்பத்தினரும் இதில் உண்டு. இதனாலோ என்னவோ அமெரிக்க ராணுவத்தில் மோசமான வன்முறை அத்தனை அதிகம் இல்லை, என்றாலும் இங்கும் பெண்கள்,சிறுபான்மையினர் மீது அடக்கு முறை அல்லது பால் வன்முறை ஆகியன செலுத்தப்படுகின்றன. உலகில் பல ராணுவங்களிலும் இந்த வகைக் கொடுமை நுழைவு நிலைப் பயிற்சியாளர்கள் மீது பாய்கிறது என்றே தெரிகிறது.
ரஷ்யக் கொடுமை, மற்ற எல்லா விஷயங்களிலும் இருப்பது போல, மிகவே அதீதம், ரஷ்ய மாஃபியா தொடர்புகளெல்லாம் ராணுவத்தினுள் உண்டு, என்று சொல்லப்படுகிறது. இப்படிக் கொல்லப்படும் இளைஞர்களின் உடல் பாகங்களை விற்கவும் ஒரு கொடூரக் கும்பல் அலைகிறது என்று டைம் செய்தி ஒன்று சொல்கிறது. இந்த இளைஞரகள் வேறு வழி தெரியாமல் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்கள், அல்லது உடைந்து கடும் சினமடைந்து தம்மைக் கொடுமைப்படுத்துவோர் மீது கடும் தாக்குதல் நடத்துகிறார்கள். அப்படி நடத்தினால் விளைவு கொடுமையாக இருக்கும். ராணுவத்தால் கோர்ட் மார்ஷல் செய்யப்பட்டு வெஞ்சிறைவாசம் அல்லது சுடப்பட்டுக் கொல்லப்படுவது போன்றன நேரும். இதனாலும் தடுக்கப்படாத அளவு கோபம் கொள்ளும் இளைஞர்கள் சிலர் சேர்ந்து தம்மிடம் உள்ள கொலைக் கருவிகள் (துப்பாக்கி, வெடிகுண்டு இத்தியாதி) கொண்டு பலரை ஒரே நேரத்தில் கொன்றுவிட்டுத் தப்பி ஓட முயல்வதும் நடக்கிறதாம். அப்படி ஒரு சம்பவத்தை இந்தச் செய்தி சொல்கிறது.
http://www.hrw.org/reports/2004/russia1004/6.htm
இப்போது யோசித்தால் இந்திய ராணுவத்தில் அவ்வப்போது தம் மேலதிகாரிகளையோ, கூட இருக்கும் ராணுவ வீரர்களையோ சுட்டுக் கொல்லும் சில இந்திய ராணுவ வீரர்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது நம் ஊரின் உதவாக்கரை செய்தித்தாள்களில் கூட வெளிவருகின்றன, பார்த்திருப்பீர்கள். அவை எல்லாம் இப்படிப்பட்ட சித்திரவதைகள், கொடுமைகளைத் தாங்க முடியாது சில சாதாரண மனிதர்கள் எல்லையற்ற சினம் கொண்டு செய்யும் செயல்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ரஷ்ய ராணுவத்தின் கொடுமைகள் பற்றித் தற்செயலாக 70களில் தகவல் வெளிவந்ததாம். அதிலிருந்து இன்று வரையும் இந்தக் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ரஷ்ய ராணுவம் தன் இளைஞர்களில் பலரை இப்படி இழப்பது குறித்துச் சமீபத்தில்தான் கவலை தெரிவிக்கவோ, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவோ முயல்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்திய ராணுவம் அப்படி ஏதும் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்ததாக நமக்குச் செய்தி கிட்டியிருக்கிறதா என்று பார்த்தால் நாம் ஏமாற்றத்துக்குத்தான் உள்ளாவோம்.
oOo
நிகழ் எப்படி வரலாறாகும், நிகழ்த்துவாருக்கு வரலை ஆற்றுப்படுத்த முனைப்பில்லாவிட்டால்?
50, 60களில் அமெரிக்க இலக்கியத்தில் புகழோடு இருந்த சில பெண் எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. ஹான்னா ஆரெண்ட், மேரி மக்கார்த்தி, எலிஸபெத் ஹார்ட்விக் ஆகியோர் இதில் முக்கிய பாத்திரங்கள். ஹைடெக்கர், நார்மன் மெய்லர், ஃபிலிப் ராத், மேலும் பல புகழ் பெற்ற 30-60களில் இருந்த ஆண் சிந்தனையாளர்கள்/ எழுத்தாளர்களும் இதில் அடங்குவர்.
இதைப் படிக்கும்போது முக்கியமாகத் தோன்றியது- எப்படி நம்மிடம் 50-2000 காலகட்டத்து எழுத்தாளர்களின் (தமிழ் எழுத்தாளர்களை மட்டுமே சொல்கிறேன்) கடிதங்கள், பல உரையாடல்கள், பொதுக் கூட்ட நிகழ்ச்சிகள், ரேடியோ பேச்சுகள் என்று என்னென்னவோ இருக்கின்றனவே அவை எதுவும் சேமிக்கப்படாமல் என்ன விதங்களில் நம் கருத்துலகு மாறி என்ன விதமாக ஆகி இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடிக்கப்படுவது நடக்காமல் போகிறது என்பதை நினைத்தேன். நாமே எத்தனையோ நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதி இருப்போம். அவை எதற்கும் நம்மிடம் பிரதி இராது, அவர்களிடமும் அவை இரா. நாமாவது சாதாரண ஆள் என்று விட்டு விடலாம். நல்ல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என்று இருப்பவர்களிடமும் கூட இந்த வகைச் சேமிப்பு இருக்காது. இப்படித்தான் நடப்பு வரலாறு கூடப் பதிக்கப்படாமல் அழிகிறது. பின் ஆவணங்கள் அழிவதைப் பற்றி மட்டும் கலங்கி என்ன பயன்?
இதனால் நேற்று வரை காந்தியைச் சனாதனி, ஜாதி வெறியன், முஸ்லிம் எதிர்ப்பாளன், பிற்போக்கு வாதி என்றெல்லாம் வசை பாடி வந்த திராவிடியர்கள், மார்க்சிஸ்டுகள், மாலெ கும்பலார் இன்று திடீரென்று தி இந்து என்ற இந்து எதிர்ப்புப் பத்திரிகையில் காந்தியை ஆரத் தழுவும் வெட்கம் கெட்ட செயலை எதிர்க்க நம்மிடம் அனேகமாக ஒரு ஆவணங்களும் இல்லை என்றாகிறது. 70, 80களில் இவர்கள் எழுதிய புத்தகங்கள், பத்திரிகைகள் போன்றனவெல்லாம் எந்த ஆவணக்காப்பகத்தில் இருக்கும்? யார் அங்கே போய்த் தேடி எடுத்து எதையும் பெற்றுப் பின் பிரசுரிக்க முடியும். ஆவணங்களை ஓரளவு காப்பவர்கள் எல்லாமே திராவிட இயக்கத்தின் காவல்… கள், அல்லது பொய்ப் பிரச்சாரத்தில் வல்லுநர்களான ‘வரல்’ ஆற்றுத் திரிப்பாளர்கள். பொய்ப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு ஆவணங்களில் இருக்குமளவு கவனம், மேடைகளில், ஊடகங்களில் எல்லாம் கருத்து நேர்மை, இந்தியப் பண்பாடு இத்தியாதிகள் பற்றி நிறையப் பேசும் இதரருக்குச் சற்றும் இல்லை என்பதுதான் இந்திய வரலாற்றின் தொடர்ந்த சோகக் கதை.
இங்கேயோ அத்தனை தகவல்களோடு ஒரு எழுத்தாளரால் கட்டுரை ஒன்றை எழுத முடிகிறது. இது இத்தனைக்கும் ஒரு வரலாற்றுக் கட்டுரை இல்லை. இதிலுள்ளதுதான் உண்மை என்றும் இல்லை. இவர் அனேகமாகத் தன்மயக் கட்டுரையைத்தான் எழுதி இருக்கிறார். இருந்தும் இதில் இருந்து என்னால், ஒரு முழு வெளிநிலத்தானால், எத்தனையோ தகவல்களைப் பெற முடிகிறது. உள்ளூர் நபர்களால் இன்னும் எத்தனை தகவல்களைப் பெற முடியும்?
http://www.threepennyreview.com/samples/pinckney_f13.html
oOo
மொழிபெயர்ப்பாளர்களின்றி உலக இலக்கியம் என்பதுதான் சாத்தியமா?
டிம் பார்க்ஸ் என்பார் மொழி பெயர்ப்பு என்பது உலக இலக்கியத்தில் எத்தனை முக்கியமான பங்கு வகிக்கிறது இன்று, ஆனால் அனேகம் பேருக்கு அது குறித்துப் பிரக்ஞையே இல்லை என்றும் சுட்டி, உலக இலக்கியத்தில் இன்று பிரக்யாதியோடு இருப்பவர்கள் பலரும் மொழி பெயர்ப்பாளர்களின் திறமையாலேயே அந்த ஸ்தானத்தில் இருக்கிறார்கள் என்றும் எழுதுகிறார். மூலகர்த்தாக்களுக்குத் திறமை இல்லை என்றல்ல அர்த்தம், அவர்கள் உலகரங்கில் எழ மொழி பெய்ர்ப்பு அவசியம் என்று கருத்து. அதற்குப் பதில் சொல்லும் வகையில், பங்கஜ் மிஸ்ரா என்னும் விமர்சகர் (ஆம், இந்தியாவைக் கீழிறக்குவதில் எப்போதும் கவனமாக இருப்பவர், இல்லையேல் மேற்கில் வெற்றியுள்ள விமர்சகராவது எப்படி? ) ஃபைனான்ஷியல் டைம்ஸ் என்ற பத்திரிகையில் ஒரு வகையான பதில் சொல்லி இருக்கிறார். அது இன்னொரு திக்கில் நம்மை இட்டுச் செல்லும். அதை அடுத்த இதழில் பார்க்கலாம். இங்கு டிம் பார்க்ஸ் கட்டுரை மட்டும்.
http://tim-parks.com/the-nobel-individual/
[குறிப்புகள்: மைத்ரேயன்]
I have liked many of ur aticles and translations in the past. But theres a deep negative tone throughout this article(s). It feels a bit biased and very negative. Not one of ur best, sir.