குரல்
நான் எப்போதும் பேசினேன்
நீ கேட்டாய்
நான் என்ன சொன்னாலும்
ஏனென்றால் நான் சொல்வதற்கு எதுவும் இருந்ததில்லை
இப்போது சொல்வதற்கு என்னிடம் ஏதோ இருக்கிறது
உணர்ச்சிகரமாய்
காதலாய்
தெளிவாய்
நான் பேசும் போது
யாரும் கேட்பதில்லை
அதனாலோ
எதனாலோ
என் குரல் நிசப்தமாகிப் போனது
தன்னை இழக்கும் மயக்கம்
சந்தோஷத்தின் இனிமை
நீ கேட்காதது
என எதுவோ
குரல் நிசப்தமாயிருக்கிறது
ஆனால்
இந்த நிசப்தத்தில்
தூங்கும் இதயத்தின்
மகிழ்ச்சிப் பெருமூச்சு
தனக்குள்ளே..
தெலுங்கில் : ரேவதி தேவி
ஆங்கிலத்தில் : வெல்செரு நாரயண ராவ் மற்றும் ஏ.கே.ராமானுஜம்
1951-1981
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர். 1981ல் வெளிவந்த கவிதை தொகுப்பான சிலலொலிதா [Stone Tossed ] கவிதைத் தொகுப்பில் இக்கவிதை இடம் பெற்றுள்ளது.
oOo
பெண்
அவள், ஆறு
அவன் கடல் :
சொன்னாள்
வாழ்க்கை முழுவதும்
என்னை கரைத்துக் கொண்டிருக்கிறேன்
உன்னை நோக்கிப் பாய்கிறேன்
எல்லாம் உனக்காக
கடைசியில் நான்தான்
கடலாகியிருக்கிறேன்
ஒரு பெண்ணின் பரிசு
எப்போதும் வானத்தைப் போல
ஆனால் நீ எப்போதும்
உன்னையே ஆராதித்துக் கொண்டு ..
ஆறாக மாறி
என்னோடு கலக்க
எப்போதும் நீ நினைத்ததில்லை.
மராத்தியில் : ஹீரா பன்சோட்
ஆங்கிலத்தில் : வினய் தர்வாட்கர்
இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். சவந்தினி தலித் பெண்கள் இலக்கிய அமைப்பின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவரும் ஆவார். தாழ்த்தப்பட்ட பெண்களின் அவலத்தை வெளிப்படுத்தி போராடியவர்.
oOo
திரும்பும் வழியில்
இந்தச் சாலைகளில் நான் நடந்திருக்கிறேன்
உடைந்திருக்கிறேன் சிதறியிருக்கிறேன் பரவியிருக்கிறேன்
இப்போது நான் மீளும் வழியில்
துண்டுகளாய்ச் சிதைந்து போன என்னை
உதிரிகளை முழுமையாய் திரட்ட
முயற்சிக்கிறேன்
இருட்டு என்னைச் சுற்றி வளர்கிறது
மராத்திய மொழி : சாந்தா செல்கே
ஆங்கிலத்தில் : ஆசா முண்ட்லே மற்றும் அரின் சட்
பூனாவை சேர்ந்த சாந்தா செல்கே எல்லாத் துறைகளிலும் ஈடுபாடுடையவர் என்றாலும் கவிதையின் மீது தனிக் காதல் கொண்டவர். பிற மொழிக் கவிதைகளை மராட்டிய மொழிக்கு கொண்டு சென்ற பெருமை உடையவர்.