கவிதைகள்

கருணையும் அதன் வசீகரமும்

வாலாட்டும் நாயொன்றுdog-in-the-rain
மழையில் பொருமிக்கொண்டிருக்கிறது
இழுத்து அடைக்கப்பட்ட ஜன்னலுக்கு உள்ளே
அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்
கருணையையும் அதன் வசீகரத்தையும்

நிர்வாணப்பெருங்கடலின்
ஒருதுளி தொட்டு
வியாபிக்கும்
முனகல் ஒலிகள் மோதி
வியர்க்கும் நைட்லேம்பின் நிசப்தக் காத்திருப்பை
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இரவு
ஒருபுள்ளியில் சடாரெனத் தட்டிவிடுகிறது

கருணையும் அதன் வசீகரமும்
புறம் சென்று
வெள்ளந்தி நாயின் வாலைப் பற்றியபடி
மழையை விரட்டத்தொடங்கியது

அப்பொழுது
அவர்களின் கனவில் கடவுள் விசிறிக்கொண்டிருந்தார்
மழை இன்னும் வேகமாக கொட்டுகிறது.

-ஆறுமுகம் முருகேசன்