இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் – ஆர். எஸ். நாராயணன்

தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் செய்வோர் யார் யார்? அவர்கள் எப்படி இயற்கை விவசாயத்துக்கு மாறினார்கள்? இப்படிப்பட்ட இயற்கை விவசாய முன்னோடிகளை ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர்வது எப்படி?

இவ்வாறெல்லாம் நான் 1996 – 2003 காலகட்டத்தில் சிந்தித்துக் கொண்டிருந்ததோடு நில்லாமல், அம்முன்னோடிகளின் பேட்டிக் கட்டுரைகளை தினமணி, விவசாயி உலகம், நவீன வேளாண்மை போன்ற பத்திரிகைகளில் வெளிக்காட்டியும் வந்ததால் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் செய்யும் பலரும் எனக்கு அறிமுகமாயினர்.

அப்படிப்பட்ட முன்னோடிகளின் பட்டியலில் என்னை மிகவும் கவர்ந்தவர்களில் மூவரைக் குறிப்பிட்டேயாக வேண்டும். முதலில் புளியங்குடி அந்தோணிசாமி. இரண்டாவது எஸ். ஆர். சுந்தரராமன். மூன்றாவது மது ராமகிருஷ்ணன். அதன்பின் செங்கல்பட்டு பி.பி. முகுந்தன், அரியன்னூர் ஜெயச்சந்திரன், கலசப்பாக்கம் அ. மீனாட்சி சுந்தரம், புளியங்குடி கோமதிநாயகம்.

DSC00417பிற்காலத்தில் (2005) அறிமுகமான மாரியம்மன் கோவில் கோ. சித்தர். இவரை முழுமையாக இயற்கைக்கு மாற்றிய பெருமை எனக்குண்டு. இன்றளவும் சித்தர் என்னைத் தன் குருவாகப் போற்றி இயற்கை விவசாயத்தில் மட்டுமல்ல, இயற்கை உணவு அங்காடி, இயற்கை மருத்துவம் என்று தஞ்சை மண்ணில் கொடிகட்டிப் பறக்கிறார். சித்தருடன் அறிமுகமான கோவர்த்தன் நடேசனைப் பற்றி எழுத வார்த்தைகள் போதாது. ரிசர்வ் வங்கி வேலையை உதறிவிட்டு, கோசாலைப் பராமரிப்பில் தொடங்கி தமிழகம் முழுதும் இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார் இவர். தாம்பரத்தில் வசிக்கும் இவர் நெல்லை மாவட்டத்தை இயற்கை விவசாய மாவட்டமாக மாற்றிவிடத் துடித்து நூற்றுக்கணக்கானவர்களை இயற்கைக்கு மாற்றியுள்ளார். இவர் போன்ற முக்கிய முன்னோடிகள் சிலரை தனித்தனியாக நாம் பின்னர் கவனிக்கலாம்.

அன்றைய காலகட்டத்தில், “இயற்கை விவசாயம் என்றால் நம்மாழ்வார். நம்மாழ்வார் என்றால் இயற்கை விவசாயம்,” என்று சொல்லுமளவுக்கு அவருக்கு தடபுடலான மரியாதை உண்டு. நான் அவரைச் சந்திக்க விரும்பி சத்தியமங்கலம் எஸ். ஆர். சுந்தரராமனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். “இப்போது நம்மாழ்வார் எனது விருந்தினராக என் வீட்டில் தங்கியுள்ளார். நீங்களும் உடனே புறப்பட்டு வாருங்கள். நாளை நாம் பல பண்ணைகளைப் பார்வையிடலாம். நீங்களும் பத்திரிகைக்கு எழுதலாம்,” என்று கூறினார் சுந்தரராமன். நானும் புறப்பட்டு இரவு சுந்தரராமனுடன் தங்கி மறுநாள் நம்மாழ்வார் முன் நின்றபோது, அவர் பஞ்சாபி பாணியில் என்னைக் கட்டிப்பிடித்து ஆரத் தழுவிக்கொண்டார்.

சத்தியமங்கலத்திலிருந்து பவானி சாகர் வரை டூவீலர் பயணம். ஏழு டூ வீலர்களில் 14 பேர் பயணம். பயணம் செய்யும்போது காலை உணவு மதிய உணவு எல்லாம் விசிட் செய்த விவசாயிகள் வீட்டில் கிடைத்தது. ஒவ்வொரு பண்ணையிலும்சிற்சில நுட்பங்களை எடுத்துக் கூறினார். இரவு ஒரு கிராமத்தில் நடந்த கூட்டத்தில் தபோல்கர் பற்றிப் பேசினார். அவரை மண் ரசாயன நிபுணர் என்று வர்ணித்தார். பின்னர் தபோல்கர் எழுதிய Plenty for All படித்தபோது, அவர் தேசத்தியாகி என்றும் காந்தி காலத்தில் வாழ்ந்தவர் என்றும் அறிந்தேன். அவர் ஒரு காந்தியவாதி, கணிதப் பேராசிரியர் என்றாலும் 1937ல் சாஸ்திர சித்தி சாதனாலயம் என்ற அமைப்பை உருவாக்கி இயற்கை விவசாயத்தில் ஈடுபட வைத்தவர். மாடித்தோட்ட கருத்தை விதைத்தவர் இவர்.

நம்மாழ்வாரை நான் சந்தித்தபோது எனக்கு தாடி இல்லை. நான் வேட்டியும் அணிவது இல்லை. அரசு அலுவலர் பாணியில் பேண்ட், ஷர்ட், கிராப்புத் தலை வைத்திருந்த என்னோடு நம்மாழ்வார் நட்பு பாராட்டினார். அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களிலும் நடத்தும் மாநாடுகளிலும் என்னை முதல் பேச்சாளராகப் பேச அனுமதித்தார். அவர் ஏன் சிகை வளர்க்கிறார், தாடி வைத்துள்ளார் என்று எனக்குத் தெரியாது. பின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக நான் ஷேவ் செய்து கொள்வதையும் முடி வெட்டிக் கொள்வதையும் நிறுத்தினேன். நானும் முழுமையாக வெட்டி அணியத் தொடங்கினேன். இதனால் என் தோற்றம் மாறியது. எனவே அப்போது நான் கூட்டங்களில் பேசும்போது பலருக்கும் என்னையும் நம்மாழ்வாரையும் வித்தியாசப்படுத்தத் தெரியவில்லை. நம்மாழ்வாரின் விசிறி ஒருவர் என்னை, “கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி” என்று ஒரு விவசாய மாத இதழில் விமரிசித்தபோது, நம்மாழ்வாரின் போட்டியாளராக விவசாயிகள் மத்தியில் பேசப்படுமளவு என் மதிப்பு உயர்ந்திருப்பதை ஊகிக்க முடிந்தது.

நான் எழுதிய இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் 2004-ல் வெளிவந்தது. இந்த நூலுக்கு மிகவும் சிறப்பான அணிந்துரையை நம்மாழ்வாரிடமிருந்து பெற்றேன். நம்மாழ்வார் இன்றும் என்றும் என் இனிய நண்பரே. அவர் ஏறத்தாழ என் மானசீக குருநாதர் என்றும் கூறலாம். மக்களிடம் இயற்கை விவசாயத்தின் தேவையை அவர் எடுத்துச் சொல்லும் பாணி, இயற்கை விவசாயக் கூட்டம், கருத்தரங்கு ஆகியவற்றை எப்படி நடத்த வேண்டும் என்று ஏராளமான விஷயங்களை நாம் அவரிடம் பயில வேண்டும். அப்படிப்பட்ட பயிற்சியையும் அவரிடம் பெற்றேன்.

நான் 1996 முதல் 2004 வரை சுமார் ஏழு ஆண்டுகள் தமிழ்நாட்டில் உள்ள பல முக்கியமான முன்னோடிகளுடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன் காந்தி கிராம அறக்கட்டளைக்குச் சொந்தமான ஆதிலட்சுமிபுரம் மூலிகைப் பண்ணை மேற்பார்வை செய்த அனுபவத்தையும் கொண்டு இயற்கை விவசாய தொழில்நுட்ப அடிப்படையை எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு புத்தகம் எழுதும் ஆசை வந்தது. அவ்வகையில் அதை ஒரு முதல் நூலாக எடுத்துக்காட்டும் வாய்ப்பும் இருந்தது.

DSC00421

“சமைத்துப் பார்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல்களை வைத்து மாதரசிகள் சமைப்பதைப் போல், “இயற்கை விவசாயம் செய்து பார்” என்ற நோக்கத்தில் இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் எழுதப்பட்டு, பின் அந்த நூல் வெளிவந்ததும் அபாரமான வரவேற்பை விவசாயிகளிடம் பெற்றது. டெமி வடிவில் 200 பக்கங்கள் கொண்ட களஞ்சியத்தின் 1000 பிரதிகளை இரண்டே ஆண்டுகளில் விற்றேன். விலை ரூ.65. இது மறு அச்சு செய்யப்பட்டு மேலும் 1000 பிரதிகள் விற்றுத்தீரும் சமயத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் அன்றைய மேலாளர் திருமதி ஆர். சாரதா இப்புத்தகத்தைப் பதிப்பிக்க முன்வந்தார். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் மிக்க அவரது எதிர்பார்ப்புகளுக்கு அடிப்படை உழவியல் நுட்பங்களுடன் எழுதப்பட்ட இப்புத்தகம் பொருத்தமாக இருந்தது. கைவசம் சுமார் 300 பிரதிகள் இருந்த சூழ்நிலையில், அதே உள்ளடக்கத்தில் மேலும் சில திருத்தங்களைச் செய்து தலைப்பின் பெயரை மாற்றி, “இயற்கை வேளாண்மையின் வாழ்வியல் தொழில்நுட்பங்கள்” என்ற பெயரில் வழங்கினேன்.

2006ல் அந்த நூலை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டபோது நான் வெளியிட்ட இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் அவ்வளவு பிரதிகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. பெயர் மாறியுள்ளதே தவிர இரண்டும் ஒன்றே. நியூ செஞ்சுரி வெளியீட்டில் நம்மாழ்வாரின் அணிந்துரை இடம் பெறவில்லை. மக்கள் மத்தியில் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் சென்றைய வேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியமாக இருந்தது. காகித விலை ஏற்றத்தால் “இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்கள்” விலையை நியூசெஞ்சுரி ரூ.100/- என்று நிர்ணயித்து மறுபதிப்பு செய்தார்கள். அரசு நூலகங்களுக்கும் அது வழங்கப்பட்டது.

OoO

பசுமைப் புரட்சியின் கரிய விளைவுகளைப் பற்றிக் கூறுமுன் எல்லாருக்கும் எம்.எஸ். சுவாமிநாதனை விமரிசிப்பது வெல்லக்கட்டியாக உள்ளது. இது உலகளாவிய விஷயம். எம்.எஸ். சுவாமிநாதன் வகித்த இடத்தை சீனுவாசன் வகித்திருந்தாலும், சர்மா, பட்நாகர் என்று யார் வகித்திருந்தாலும் பசுமைப் புரட்சியின் வருகையைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா என்ன? அப்போது சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் நிலை இந்தியாவைவிட மோசம். தாய்லாந்தில் அரிசி சாகுபடி குறைந்துவிட்டது.

மண்வளத்தை மீட்கும் மாற்று உத்தியாக இயற்கை விவசாயத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது எப்படி என்று யோசிக்க வைப்பது முக்கியம். அந்தப் பணியை இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் செய்து வருகிறது. இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொண்ட விவசாயிகள் ஏராளம். என்னைத் தொடர்பு கொண்டு இன்றளவும் இயற்கை விவசாயம் மேற்கொண்டவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் வழங்கி வருகிறேன்.

இயற்கை வேளாண்மைக் களஞ்சியத்தில் முதல் பத்து பக்கங்களில் இயற்கை விவசாயத்தின் தேவை விவரிக்கப்பட்டுள்ளது. பசுமைப் புரட்சியை வடிவமைத்தவர் நார்மன் ஃபர்லாக், எம்.எஸ். சுவாமிநாதன் அல்ல என்பதையும், ஃபோர்டு ஃபவுண்டேஷன் அறிக்கை பற்றிய விபரத்தையும், உண்மையான வில்லன் அமெரிக்க நிபுணர்குழு விவசாயத் தொழில்நுட்பம் என்றால் NPK பேக்கேஜ் திட்டம் என்றும், இதுவே விவசாயப் பல்கலைக்கழகங்களின் பாடதிட்டமாகி பாரம்பரியம் தொலைந்த கதையைக் கூறிவிட்டு நஞ்சில்லா உணவை வலியுறுத்தும் புதிய பாடமாக இயற்கை விவசாய மேன்மை வலியுறுத்தப்படுகிறது. இயற்கை விவசாயத்தில் தற்சார்பு, குறைந்த செலவுமுறை, எரிசக்தி மிச்சமாகும் தத்துவம் பற்றியும் கூறிவிட்டு இரண்டாவதாக பத்து பக்கத்தில் நாம் தொலைத்துவிட்ட பாரம்பரிய விதைகள் பற்றியும் பயிர்த்திணை மரபு (crop zone) பற்றியும் புஞ்சை தானிய மேன்மை, வரண்ட நிலத்துக்கேற்ற பயிர் சாகுபடி முக்கியத்துவம் பற்றியும் விவரிக்கப்படுகிறது.

மூன்றாவதாக நீர் நிர்வாகம். நீர் நிர்வாகத்தில் மரங்களின் முக்கியத்துவம். ஒரு தோட்டத்தை மழை நீர் சேமிப்பாக எப்படி வடிவமைக்க வேண்டும் என்றும் உயர்ந்த வரப்புகளின் அவசியம் பற்றியும் சில பக்கங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

நான்காவதாக, மண்வள மீட்பு.பயிர் வளர்வதற்குரிய மண்ணின் நிலை. அதன் உவர், கார அமிலத்தன்மை. மண்ணின் உயிரூட்டம் பற்றியும் மண் பரிசோதனையை எந்த அளவில் நிறுத்திக் கொள்வது என்பது பற்றியும் எச்சரித்துவிட்டு ஐந்தாவது பகுதியில் இயற்கை உர உற்பத்தியை ஆறு துணைத் தலைப்புகளாகப் பகுத்து 45 பக்கங்களில் விபரமான குறிப்புகள் உள்ளன.

முதலாவதாக, வளமையை உயர்த்த மரங்கள். காடுகளைப் பார்த்து மனிதன் கற்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. இந்தக் காடுகளுக்கு யார் உரம் வழங்கினார்கள்? இவை பூத்துக் குலுங்கி கனியாவது எப்படி? மரங்களிலிருந்து இலைகள் உதிர்ந்து மரக்குவியலாக விழுகின்றன. இக்குவியல் மீது மழை நீர் விழுகிறது. சருகுகளின் குவியல் மக்கி மண்ணோடு மண்ணாகும்போது கரிமம் (Humus) உருவாகிறது. இப்படிப்பட்ட கரிமத்தில் கோடானுகோடி நுண்ணுயிரிகள் வளர்கின்றன. இவை மண்ணில் உள்ள உலோகச்சத்தைக் கரைத்து வேர்களுக்கு ஊட்டம் தருவதால் யாரும் காடுகளுக்கு உரம் வழங்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. ஆகவே இயற்கை விவசாயத்தில் மரங்களே உரம் தயாரிக்கும். மரங்கள் உதிர்க்கும் சருகுகளை உலர்மூடாக்காகப் பயன்படுத்தலாம். பயிர் சாகுபடியை மர வளர்ப்புடன் இணைத்துச் செய்ய வேண்டிய அவசியத்தை சில பக்கங்கள் எடுத்துரைக்கின்றன.

இரண்டாவதாக கால்நடைகள், தொழுவுரம், இடைமாடுகள் பற்றிய குறிப்புகள். இயற்கை விவசாயம் செய்வோர் பசுக்களைப் பராமரிக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது. கம்போஸ்ட் உரம் தயாரிப்பதைப் பற்றிய தொழில்நுட்ப விவரங்கள் உண்டு.

மூன்றாவதாக, பஞ்சகவ்யம் பற்றிய குறிப்பு. பஞ்சகவ்யம் செய்வது எப்படி? எந்த விகிதாசாரத்தில் பஞ்சகவ்யப் பொருட்களான பசும்பால், பசுந்தயிர், பசுவின் பச்சைச் சாணி, பசுவின் மூத்திரம் ஆகியவற்றோடு பிற பொருட்களான வாழைப்பழம், கள் அல்லது திராட்சை ரசம், வெல்லம் அல்லது கரும்புச் சாறு, இளநீர், புளித்த காடி அல்லது புளித்த உளுந்து மாவு அல்லது புளித்த கூழ் ஆகியவற்றை எப்படி கலந்து எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய விபரங்கள் உண்டு. மிகச்சிறந்த தெளிப்பான், மிகச்சிறந்த நோயாற்றி, மிகச்சிறந்த டானிக் என்று பஞ்சகவ்யத்தின் பலன் விண்டுரைக்கப் பட்டுள்ளது.

நான்காவதாக, மண்புழு வளர்ப்பு முறைகள். மண்புழு வளர்ப்பு பற்றிய பல தொழில்நுட்பங்களுடன் எப்படி மண்புழு உரம் எடுத்து பயன்படுத்துவது என்பது குறித்த விபரங்கள் உண்டு.

ஐந்தாவதாக, இதர இயற்கை உர உத்திகளில் தபோல்கரின் பலதானிய விதைப்பு முறை, பசுந்தாள் உரம், களைகளை உரமாக்குவது, நீலப்பச்சைப் பாசி தவிர உயிரி உரங்களான அசொஸ்பெயரில்லம், ஃபாஸ்டோ பாக்டீரியா, சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விருடி போன்ற 12 வகையான நுண்ணுயிரிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

ஆறாவதாக, பழம்பெரும் சுவடி நூலான விருட்சாயுர்வேதத்தில் கூறியுள்ள பல்வேறு இலை ஊட்டத்தெளிப்பான் விபரங்கள். உதாரணமாக குணவம். இறந்த உடலின் அற்புதமான பயிர் டானிக் முறைகள். பன்றி குணபம், எலி குணபம், மீன் குணபம் ஆகியவற்றின் செய்முறை மற்றும் பயன் விபரங்கள்.

ஏழாவதாக, பல்வேறு பூச்சி விரட்டிகளைப் பற்றிய குறிப்புகள், செய்முறை விளக்கங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

புத்தகத்தின் ஐந்தாவது பகுதி இத்துடன் நிறைவு பெறுகிறது.

ஆறாவது பகுதியில் பயிர்களுக்கான பருவம், பட்டம் ஆகியவற்றை அனுசரித்து நெல் சாகுபடி. மண் பக்குவமாவதிலிருந்து அறுவடை வரை உரமிட்டு பாதுகாத்து வளர்க்கும் விபரங்கள் மட்டும் 10 பக்கங்கள் உள்ளன. பாரம்பரியமான நெல் சாகுபடி முறை, புழுதி சாகுபடி முறையுடன் நெல்லின் ஒற்றை நாற்று முறை மடகாஸ்கர் முறையும் விளக்கப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டிலேயே எனது இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் ஒற்றை நாற்று நடவு முறையைப் பதிவு செய்து விட்டது.

நான் அறிந்தவரையில் தமிழ் நாட்டில் ஒற்றைநாற்று சாகுபடியை இயற்கை விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தியவர் இயற்கை ஞானி நம்மாழ்வார். முதல் முறையாகக் களத்தில் கடைபிடித்து வெற்றிபெற்ற விவசாயி எஸ்.ராமவேல்.இவர் தஞ்சை மாவட்டம்​ குத்தாலம் அருகில் உள்ள முரு​கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்.பாமர விவசாயி. இவருக்கு சேதுராமன் என்ற விவசாயியும் எஸ்.ஆர்.சுந்தரராமனும் வழிகாட்டியுள்ளனர்.இப்போது தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை இதையே `எஸ்.ஆர்.எஸ் திருத்திய நெல் சாகுபடி முறை` என்ற பெயரில் சிபாரிசு செய்து அரிசி உற்பத்தியை​ப் பெருக்க ஊக்கமளித்து வந்தாலும், கிரெடிட் ராமவேலுக்குச்செல்ல வேண்டும்.ராமவேலின் வெற்றியே அது. 2003 ஆம் ஆண்டிலேயே ராமவேலுக்குப் பின் தஞ்சை மாவட்டத்தில் பல விவசாயிகள் கடைபிடிக்கத் தொடங்கிவிட்டனர். ஒரு தொழில்நுட்பம் விவசயிகளிடமிருந்து சோதனைக் கூடம் சென்ற சிறப்பு இதுவே.

நெல்சாகுபடியைச் சற்று விவரமாக கவனித்துவிட்டு​பின்னர் புஞ்சை நிலப் பயிர்களான சோளம், கம்பு, கேழ்வரகு,சாமை​, தினை​, வரகு, குதிரைவாலி, பளிவரகு மக்காச்சோளம், துவரை, உளுந்து, பாசிப்பயறு, கொள்ளு,தட்டைப்பயறு, நரிப்பயறு, வேர்க்கடலை, எள்,சூரியகாந்தி​, ஆமணக்கு, பருத்தி, காய்கறிகளில் தக்காளி, கத்தரி​, வெண்டை,பாகல்​, புடலை, கறிக்கோவை, வெங்காயம், பச்சைமிளகாய், கீரைவகை​கள்​, மஞ்சள்,வெற்றிலை, கரும்பு, மரவள்ளி, சர்க்கரை வள்ளி, வாழை, மா, சப்போட்டா, கொய்யா, தென்னை,திராட்சை பின்னர் மலர் சாகுபடியில் மல்லிகை, முல்லை, ஜாதி முல்லை, ரோஜா, சவ்வந்தி,சாமந்தி, சம்பங்கி, மரு​வு,​மரிக்கொழுந்து வரை பலவகைப் பயிர்சாகுபடிக் குறிப்புகள் 60பக்கங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. பின்னர் இயற்கை விவசாயும் செய்யும் முன்னோடிகளின் சிறுபட்டியல் மட்டும் உள்ளது. இவ்வகையில் நான் எழுதிய இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் முதல் நூலாகவும் முழுமையுள்ள நூலாகவும் இயற்கை விவசாயிகளுக்கு மத்தியில் பிரபலமா​னது.

இயற்கை வேளாண்மைக்களஞ்சியத்திற்காக நம்மாழ்வார் வழங்கியுள்ள அணித்துரையில்…`முதலாளித்துவத் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்ததால் விடுதலை பெற்ற இந்தியா மீண்டும் அடிமை நுகத்தடியைச் சுமக்கிறது. சமுதாயத்தில் படித்து மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு இந்த உண்மையை வெளிப்படுத்தி உழவர்களையும் உணவு உற்பத்தியையும் பாதுகாக்கும் பொறுப்புள்ளது. அப்படிப்பட்ட ஒரு கடமை உணர்வு கொண்டவர் ஆ.எஸ்.நாராயணன். ஒரு சிறந்த எழுத்தாளர். இந்த நூல் பச்சைப்புரட்சியின் விளைவுகளில்​ வணிக உழ​வியலின் கொடூரத்தை நாராயணன் விளங்கிக்கொண்டதை உணர்த்துகிறது. பல்லுயிர் பெருக்கத்தின்​ முக்கியத்துவத்தை இவர் உணர்ந்துள்ளார். ஈரோடு மாவட்ட நிலங்களையும், புளியங்கொடி அரிய​ன்னூர் போன்ற ஊர்களின் இயற்கை வேளாண்மையையும் பார்வையிட்ட நாராயணன் அவர்களுக்கு இயற்கை வழி உழவாண்மையில் நம்பிக்கை வந்துவிட்டது. கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் முதல் ஆடு மாடு கிடைபோடுவது வரை நிறையப் பாடங்கள்  பொருளடக்கமாயு​ள்ளன. உழவர்கள் தங்கள் தங்கள் சூழலுக்கு ஏற்ப பண்ணையை வடிவமைக்க வேண்டும். அந்நிலையில் வேளாண்மைக் களஞ்சியம் கைகொடுக்கும் ​என்று நம்பலாம். தமிழகத்து உழவர் வாழ்வின் அக்கறை காட்டும் ஆர்.எஸ்.நாராயணன் உழவர்களைத் தொடர்ந்து ஆராய்ச்சியில் இறங்கத் தூண்டுவது இவரது சரியான புரிதலை உணர்த்துகிறது. வெற்றிக்கனி பறிக்க இவரை வாழ்த்துகிறோம்..`

இயற்கை வேளாண்மைக்களைஞ்சியம் நான் நினைத்தபடி வடிவம் பெற்று​ப் பலரை இயற்கை விவசாயத்தில் ஈடுபட வைத்துவிட்ட சூழ்நிலையில்10 ஆண்டுகள் கழித்து எண்ணிப்பார்த்தபோது என்னைப்பற்றிய புரிதலை நம்மாழ்வார் 10 ஆண்டுகட்கு முன்பே சரியாக கணித்துவிட்டார். அடுத்த கட்டமாக நான் சிந்தித்த விஷயம் தமிழ்நாட்டு இயற்கை விவசாயிகளை ஒரே ​அணியில் திரட்டுவதுதான். கிளாட்​ ஆல்வாரிசின் `ஆர்கானிக் ஃபார்மிங் சோ​ர்ஸ் புக்` என்ற ஆங்கில நூலை மாதிரியாக வைத்து நானும் ஒரு புதிய முயற்சி செய்தேன்.அந்த நூலுக்கு `வாழ்வின் ரகசியங்கள்` என்று பெயரிட்டு முன்னூறுக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகளின் பணிகளை இடம் பெற வைத்த கதையை அடுத்த இதழில் கவனிப்போம்.

(தொடரும்)