நாக்கு

திருநவேலியிலிருந்து ஓவியர் பொன் வள்ளிநாயகம் ஃபோன் பண்ணினான்.
“எண்ணே! இன்னும் எந்திக்கலையா? காலைலயே மெஸேஜ் அனுப்புனனே பாக்கலயோ”
“இல்லயடே. என்ன விஷயம்? தி.க.சி. தாத்தா சும்மா இருக்காள்லா?”

“அவாளுக்கென்ன! ஜம்முன்னு இருக்கா. இப்பம் அங்கெதான் இருக்கென்… இன்னைக்கு நெல்லையப்பருக்கு திருக்கல்யாணம்லா! ஒதயத்துலயே எந்திரிச்சு குளிச்சு முளுகி வீட்டம்மாவும், நானும் கோயிலுக்கு வந்துட்டோம். நாலு மணிக்குல்லாம் தாலியக் கட்டிட்டாருல்லா! அதச் சொல்லத்தான் கூப்பிட்டேன்.”

வள்ளி சொல்வதற்கு இன்னும் விஷயம் இருக்கிறது என்பது தெரியுமென்பதால், “ம்ம்ம். அப்புறம்?” என்றேன்.

‘நாலே முக்காலுக்கெல்லாம் பந்தியப் போட்டுட்டானுவொ! கேஸரி, பொங்கல், உளுந்தவட, சாம்பார், தேங்காச் சட்னி . . . அத ஏன் கேக்கிய? வெளுத்துட்டான்”.

அத்தனையும் சாப்பிட்ட சுவை நாவிலும், மனதிலும் தங்கியிருக்க மேலும் தொடர்ந்தான், ஓவியன்.

“கைகளுவும்போது லோடுமேன் முருகானந்தம், ‘காலைலப் பந்தி அஞ்சு மணிக்குல்லாம் முடிஞ்சிட்டு. அப்பம் மத்தியானப் பந்தி பதினோறு மணிக்குல்லாம் போட்டுருவாங்க. வராம போயிராதே வள்ளிண்ணே’ன்னு சொல்லுதான்.திருநவேலிக்காரன் திருநவேலிக்காரன்தாம்ணே! என்ன சொல்லுதிய?”

வள்ளிநாயகம் சொல்வது திருநவேலிக்கும் மட்டும் பொருந்தாதுதான். சுவையான உணவைத் தேடி அலைகிற மனதுடைய மனிதர்கள் எல்லா ஊர்களிலும்தான் இருக்கிறார்கள். வீட்டில் என்னதான் ருசியாகச் சமைத்தாலும் வெளியிடங்களில் சாப்பிட மனம் கிடந்து அலைந்து கொண்டேதான் இருக்கிறது.

“விசேஷ வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சுங்கெ! ஆடிமாசத்துல மூர்த்தம்தான் வைக்க மாட்டானுவொ. ஒரு சடங்கு வீடு வரப்பிடாதாய்யா!”

இப்படி புலம்புபவர்களுக்கான விசேஷ வீட்டு சாப்பாட்டைப் போடுவதற்காகவே சில மெஸ்கள், மெஸ் வேடத்தில் இருக்கும் சிறு ஹோட்டல்கள் என திருநவேலியில் நிறைய உள்ளன.

சென்னையில் நடக்கும் விசேஷ வீடுகளில் போடப்படும் சாப்பாட்டைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்போது உள்ள நடைமுறையில் போடப்படும் சாப்பாட்டில் வகைகள் என்னவோ விதவிதமாகத்தான் உள்ளன. கைகளில் பிளாஸ்டிக் க்ளவுஸும், தலைக்கு குளியல் கவரும் போட்டு, சீருடையில் கேட்டரிங் ஊழியர்கள் பரிமாறும் சாப்பாட்டில் சுவை இல்லாமலில்லை. ஆனாலும் திருநவேலி விசேஷ வீடுகளில் கைநனைத்த எந்த ஒரு மனிதனையும் பெருநகர நவீனப் பந்திகள் திருப்திப்படுத்தி விடமுடியாது.

“அவன் என்னவே! மண்சட்டிப்பானைல தயிரக் குடுக்கான். மோர நல்லா நாலு கரண்டி அள்ளி ஊத்தி எலைல வளிஞ்சு ஓட வேண்டாமா!”

“பந்தி சமுக்காளத்த விரிச்சு, நல்லா சம்மணம் போட்டு உக்காந்து சாப்பிட்டாதானெ திங்கற சோறு செமிக்கும்! நீங்க ஒய்யார மயிரா டேபிள் சேர் போட்டு எலையப் போட்டுத் திங்கதுக்கு சென்ட்ரல் கபேக்குப் போயி வெஜிடபிள் பிரியாணி திங்க வேண்டியதானேங்கென்! நல்லா பட்டசோம்ப போட்டு மணக்க மணக்க குடுப்பான். என்ன மருமகனெ! நான் சொல்லது சரிதானெ!”

South Indian Food

திருநவேலியைப் பூர்விகமாகக் கொண்ட ரெஜினால்டு சித்தப்பாவின் மகன் திருமணம் சென்னையில் நடந்தது. திருமணம் சென்னையில் நடந்தாலும், மண்டபம் முழுக்க திருநவேலி ஆட்கள் நிறைந்திருந்ததனால், முழுக்க முழுக்க திருநவேலி பாஷை காதில் ஒலிக்க, பாளையங்கோட்டையில் இருக்கும் உணர்வு ஏற்பட்டது.

“அத்தானோய்! என்னய்யா அந்தப் பக்கமே லாந்திக்கிட்டிருக்கிய! கொஞ்சம் ஆம்பளேளு பக்கமும்தான் திரும்பிப் பாருங்களேன்”.

“ஒங்க மோரைகள்லாம் பாக்கற மாதிரியாவே இருக்கு! கொஞ்சம் நேரம் குளுகுளுன்னு இருக்குறது பொறுக்காதே”.

சுத்தமான திருநவேலி அத்தான் – மைத்துனர் கேலிப் பேச்சுகள். பாதிரியாரின் தலைமையில் திருமணம் நடந்து முடிந்தவுடன் ரெஜினால்டு சித்தப்பா, “மகனே சாப்பிடாம போயிராதே! வெஜிட்டேரியன் சப்பாடுதான். பந்தி மாடில”என்றார்.

சென்னையில் உள்ள யாரோ கேட்டரிங் சர்வீஸ் சமையல்தான் என்றாலும், சுற்றிலும் உள்ள திருநவேலிக்காரர்களின் குரல்கள், காதில் விழுந்து மனதை நிறைத்தது. அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர், வேகவேகமாகச் சாப்பிட்டு முடித்து இலையை மூடினார்.

“அண்ணாச்சி. வத்தக்கொளம்பு சாப்பிடலியா?”

“வத்தக் கொளம்ப நான் பாக்கவே இல்லையே!” வருத்தத்துடன் சொன்னார்.

“நல்ல டேஸ்ட்டு அண்ணாச்சி. நம்ம ஊர்ல சாப்பிட்ட மாரியே இருந்தது. படக்குனு எலைய மூடிட்டேளே!” என்றேன்.

“மெட்ராஸ் ஊர்ல நம்மள யாருக்குத் தெரியப்போகுது! ஏ, தம்பி! கொஞ்சம் சோறு போட்டு வத்தக்கொளம்பு ஊத்துங்க” மடக்கிய இலையை விரித்து, சரி பண்ணினார்.

இப்படி அபூர்வமாக அமைவது தவிர, சென்னையின் விசேஷ வீட்டு சாப்பாட்டில் என்னைப் போன்ற திருநவேலிக்காரர்கள் எதிர்பார்க்கிற, சொல்ல முடியாமல் சுவைக்க மட்டுமே தெரிந்த ஏதோ ஒரு ருசி கிடைப்பதேயில்லை. அதனால்தான் ஹோட்டல் ஹோட்டலாக ஏறி இறங்குகிறோம். சாலிகிராமத்துச் சுற்றுப் பகுதிகளில் இருக்கிற எல்லா ஹோட்டல்களோடும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அநேகமாக எல்லா ஹோட்டல் ஊழியர்களுக்கும் என் முகம் பரிச்சயம் என்று சொல்லலாம். அருகில் வந்து, “‘சும்மா இருக்கேளா” என்று கேட்பதில்லையே தவிர ஒரு சினேகப் புன்னகையை உதிர்க்காமல் இருக்க மாட்டார்கள். பெரிய ஹோட்டல்களிலிருந்து பெயர்ப் பலகை கூட இல்லாத சின்ன ஹோட்டல்களையும் விட்டு வைப்பதில்லை. ‘பாட்டையா’ பாரதி மணியின் ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகம் முடிந்து நானும் நண்பர் மனோவும் அவரது பைக்கில் கிளம்பும் போதே, மனோ சொன்னார். “சுகா. பசிக்குது. திருநவேலி ஹோட்டலுக்கு போலாமா? நாம சேந்து போயி ரொம்ப நாளாச்சு” என்றார். சாலிகிராமத்துக்கு நாங்கள் வந்து சேரும்போது திருநவேலி ஹோட்டல் பூட்டியிருந்தது. ஏற்கனவே பாட்டையாவின் நடிப்பைப் பார்த்த பாதிப்பினால் ஏற்பட்ட மனச்சோர்வுடன் பசியும் சேர்ந்து கொள்ள, மனோவின் முகம் ஏமாற்றத்தில் வாடியது.

“இப்ப என்ன செய்றது, சுகா?”

“ஒண்ணும் பிரச்சனையில்ல, மனோ. வண்டிய நான் சொல்ற எடத்துக்கு விடுங்க”.

காவேரி தெருவிலுள்ள ‘முத்துலட்சுமி பவனு’க்கு மனோவை அழைத்துச் சென்றேன். சுடச்சுட இட்லியும், சாம்பாரும், தேங்காய்ச் சட்னியும் மனோவை உற்சாகப்படுத்தின. “இந்த வழியா எத்தனவாட்டி போயிருக்கேன். ஆனா இந்தக் கடய மிஸ் பண்ணிட்டேனே! சே” புலம்பியபடி தொடர்ந்து அரைமணிநேரம் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார், மனோ.

முத்துலட்சுமி பவனி’ன் சொந்தக்காரர், கழுகுமலைக்காரர். ஊர்ப்பாசத்தில் என்னைப் பார்த்தால் மகிழ்ச்சியில் மலர்ந்து, “ஸார் வாங்க” என்றபடி உள்ளே எட்டிப்பார்த்து, “ஏட்டி. சட்னி அரஞ்சுட்டா?” என்று குரல் கொடுப்பார். உள்ளே அவரது வீட்டம்மா அப்போதுதான் கிரைண்டரில் தேங்காய்ச் சட்னியை அரைய விட்டிருப்பார்கள். “ஒரு பத்து நிமிசம். அதுவரைக்கும் ரெண்டே ரெண்டு புரோட்டா சாப்பிடுதேளா! சைவக் குருமாதான். பிச்சுப் போடச் சொல்லுதென். அதுக்குள்ள சட்னி ரெடியாயிரும். இட்லியும் வெந்திரும்’.

திருநவேலி ஹோட்டல் இல்லையென்றால், அந்த ஏமாற்றத்தை சரி செய்வது, முத்துலட்சுமி பவன்தான். திருநவேலி ஹோட்டல் எப்போது திறந்திருக்கும், எப்போது மூடியிருக்கும் என்பதை ‘வானிலை அறிக்கை ரமணன்’ அவர்களால் கூடக் கணிக்க முடியாது. பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் சென்னைக்கு வரும் போதெல்லாம் கேட்பார்.

“சுகா. நீங்க ‘தாயார் சன்னதி’ல எளுதுன திருநவேலி ஹோட்டலுக்கு எப்பதான் கூட்டிட்டுப் போகப் போறிய?”

சமீபத்தில் அதற்கு சந்தர்ப்பம் வாய்த்தது. காலை ஒன்பது மணியளவில் அவரை அழைத்துச் சென்றேன். சின்னஞ்சிறிய திருநவேலி ஹோட்டலின் உள்ளே நிற்கக் கூட முடியாத அளவுக்குக் கூட்டம். இருவரும் சிறிது நேரம் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தோம். இதற்குள் பேராசிரியரை அடையாளம் கண்டுகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் எழுந்து அவரை வணங்கினார்கள்.

“உள்ளெ வேணா போயி நிப்போமா சுகா?” என்றார், பேராசிரியர்.

“வேண்டாம் ஸார். எச்சிக்கையோட ஒங்க ரசிகர்கள் ஒங்களுக்குக் கை குடுக்க சான்ஸ் இருக்கு” என்று சொல்லித் தடுத்து வைத்தேன். நேரம் ஆக ஆக, இடம் காலியாகவேயில்லை.

“என்ன சுகா? யாருமே எந்திரிக்க மாதிரி தெரியலியே!”என்றார், பேராசிரியர்.

“ஒங்களப் பாத்த சந்தோஷத்துல எல்லாரும் கூட ரெண்டு எண்ணெ தோச சொல்லிட்டாங்கன்னு நெனைக்கிறேன்” என்றேன்.

சிறிது நேரத்தில் ஒரு இடம் காலியாக, பேராசிரியரை உட்கார வைத்தேன். திருநவேலி ஹோட்டல் உரிமையாளர் கதிருக்கு பேராசிரியரைப் பார்த்து சந்தோஷம் தாங்க முடியவில்லை.

“எண்ணே! ஸாரயே நம்ம கடைக்குக் கூட்டிட்டு வந்துட்டீங்களே” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

“நேத்து காலைல சாப்பிடதுக்கப்புறம் ராத்திரிதான் சாப்பிட்டேன், சுகா. தோசை ருசி நாக்குலயே தங்கிடுச்சு” மறுநாள் பேசும் போது சொன்னார், பேராசிரியர்.

நல்ல உணவுவகைகளை ருசிப்பது ஒரு வகை. ருசித்ததை ரசித்துச் சொல்வது ஒருவகை. இந்த இரண்டிலும் தேர்ந்தவர், நண்பர் கோலப்பன். ‘ஹிண்டு’வில் (தி இந்து அல்ல) பணிபுரியும் அவர், நாகர்கோயிலுக்கு அருகே உள்ள ‘பறக்கை’ என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். ஒரு நாள் சொன்னார்.

“சுகா. எங்கம்ம பறக்கைலேருந்து வந்திருக்கா. உளுந்தக்களிய நல்லெண்ணய ஊத்தி உருட்டி வச்சிருந்தா பாருங்க. ரெண்டு மூணு உருண்டய தின்னு போட்டேன். வயிறு தாயளி திம்முன்னு இருக்குல்லா.”

“தாயொடு அறுசுவை போம், கோலப்பன். இன்னும் ரெண்டு தின்னுங்க” என்றேன்.

தெற்கே உள்ளவர்கள்தான் ருசியைத்தேடி அலைபவர்கள் என்றில்லை. சென்னையில் நல்ல ஹோட்டல்களைத் தேடிப் பிடிப்பதற்காகவே எனக்கொரு நண்பர் இருக்கிறார். நட்பாஸ் என்கிற பாஸ்கர்தான் அவர். எண்ணிலடங்கா புனைப்பெயர்களில் இணையத்தில் எழுதும் அவர், ஒரு தீவிர வாசகர் (அவருடைய எழுத்துக்கு).

“ஸார்! கே.கே நகர்ல ‘ஒரு வடை’ன்னு ஒரு கட தொறந்திருக்காங்க. எப்படியாது அவங்களுக்கு ஒரு வாய்ப்பு குடுக்கணும், ஸார்”.

“மைலாப்பூர் மாமி மெஸ்ல நாம பொங்கலும், வடையும் சாப்பிட்டு நாளாச்சு. பாவம் ஸார், அவங்க. நாளைக்காவது போவோமா?”

இப்படி குறுஞ்செய்திகளை எனக்கு அனுப்பும் இலக்கிய உபாசகர், பாஸ்கர்.

வழக்கமாக நான் அழைத்துச் செல்லும் திருநவேலி ஹோட்டல் தவிர, ஆற்காடு சாலையின் பரணி மருத்துவமனைக்கு எதிரே உள்ள மற்றொரு திருநவேலி ஹோட்டலையும் பாஸ்கருக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறேன். அந்த ஹோட்டலில் கிடைக்கும் சின்ன அடை காலியாகிவிடுமோ என்கிற பதற்றத்தில், கே.கே நகரிலிருந்து சாலிகிராமத்துக்கு, இருபது கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டாத அவரது டூவீலரில், புயல் போலக் கிளம்பி வருவார், பாஸ்கர்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு மாலைப் பொழுதில் நானும், பாஸ்கரும் கே.கே நகர் பிள்ளையார் கோயிலுக்கு அருகே வழக்கமாக நாங்கள் காப்பி சாப்பிடும் கடையில் அமர்ந்து சமோசா தின்றபடி காப்பி குடித்துக் கொண்டிருந்தோம். பேண்ட் பாக்கெட்டிலிருந்த கைபேசி ஒலித்தது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ராஜகோபால் அழைத்தார். ராஜகோபால் மீது எனக்கிருக்கும் தனி பிரியத்துக்குக் காரணம், அவரும் திருநவேலிக்காரர். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கிறோம் என்கிற மமதை சிறிதும் இல்லாதவர். சாதாரண ஆனந்த விகடன் வாசகர்களிடம் கூட சகஜமாகப் பேசிப் பழகக்கூடியவர்.

“வணக்கம் ராஜகோபால்! சௌக்கியமா?” என்றேன்.

“எங்கண்ணே இருக்கிய? நான் ஒரு வாரமா ஒங்க ஏரியாலதான் சுத்திக்கிட்டிருக்கேன்” என்றார்.

“அடடா! என்ன விஷயம்? வீடு மாத்திட்டேளா?” அவர் நிலைமை தெரியாமல் இப்படிக் கேட்டுத் தொலைத்து விட்டேன்.

“வீட்டம்மாவ இங்கெ விஜயால அட்மிட் பண்ணியிருக்கெண்ணே. நாலு நாளா ஐ.சி.யூ.ல இருந்துட்டு இன்னைக்குத்தான் ஜெனரல் வார்டுக்கு மாத்துனோம்” என்றார்.

அதிர்ந்து போனேன். ராஜகோபால் தொடர்ந்து விவரம் சொல்லிக் கொண்டிருந்தார். என் முன்னால் காப்பி ஆறிக் கொண்டிருந்தது. அதை நான் கவனிக்காமல் பேசுகிற தீவிரத்தை என் முன்னே அமர்ந்திருந்த பாஸ்கரும் உணர்ந்து அமைதியாக நான் பேசுவதையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“எப்பன்னாலும் எனக்கு ஃபோன் பண்ணுங்க. என்னைக்கு டிஸ்சார்ஜ் பண்றீங்கன்னும் தகவல் சொல்லுங்க” என்று வருத்தத்துடன் சொல்லிவிட்டு, ஃபோனை கட் செய்யப் போனேன்.

“எண்ணே! ஒரு முக்கியமான விஷயம். நான் ஒங்களுக்கு ஃபோன் பண்ணுனதே அதுக்குத்தான்”.

“சொல்லுங்க தம்பி. தயங்காதிய”.

“இந்த திருநவேலி ஓட்டல் பூட்டியே கெடக்கெ! ஏம்ணே? இதோட நாலஞ்சு மட்டம் போயிட்டு வந்துட்டேன்” என்றார், ராஜகோபால்.

0 Replies to “நாக்கு”

  1. சுவையாக இருக்கிறது. தமிழர் எங்கே போனாலும் சாப்பாடு என்ன கிடைக்கிறது என்றே பயணக்கட்டுரைகளில் எழுதி நிரப்புகிறார்கள், சிற்பங்கள், சங்கீதம், இலக்கியம், நாடகம் என்று பற்பல விஷயங்களைப் பற்றி எதையும் எழுதுவதில்லை என்று ஒரு குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். உங்கள் கட்டுரை, சாப்பாட்டைப் பற்றி எழுதினால்தான் என்ன தவறு என்று கேட்கிறது! அதுவும் ஒரு கலைதானே? இல்லையா?

  2. அருமை சுகா, அருமை! படிக்கப் படிக்க, பல பதார்த்தங்களின் சுவையும் மணமும் மூக்கில் ஓடும் அளவுக்கு எழுதியிருக்கிறீர்கள்! நடுநடுவே கூடவே பிறந்த நக்கலும் குறும்பும் வேறு. வேறு வழியே இல்லை இப்போது – நீங்கள் குறிப்பிட்டுள்ள கடைகளைத் தேடிக் கிளம்பியே ஆகவேண்டும்…

  3. சாப்பாட்டுப் பிரியர்களைக் கிண்டலடித்து ,புதுமைப்பித்தன் எழுதிய “இலைக்குணம்” கட்டுரை ஞாபகத்துக்கு வருகிறது. சுகாவின் கட்டுரை அதை விஞ்சாவிட்டாலும், உணவு மேல் மனிதர்களுக்கு இருக்கும் சாகாக் காதலை நன்கு வெளிப்படுத்துகிறது.

  4. நீங்கள் கூறிய கடைகள் அனைத்தின் முழு விலாசமும் கொடுத்தால் சென்னை சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்த நெல்லைச்சீமையைச் சேர்ந்த எங்களைப் போன்ற சாவாற செத்த ஜீவன்ளுக்கு பேருதவியாக இருக்குமே.!!!!

  5. சோத்த கண்ணுல பாக்குறதே பெரிய விஷயமா இருக்குற ஊர்ல இருக்குற எனக்கு, இந்தமாதிரி கட்டுரைகள் என்னத்த சாதிச்சிட்டிருக்கோம் இந்த நாட்டுல என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. எனது சமையல்கலை ஆராய்ச்சிகளும் நான் நினைத்துச் செய்யும் பதார்த்தங்களின் அருகில்கூட வருவதில்லை என்பது இன்னொரு சோகம்.. ஒரு 10 நாள் லீவப்போட்டுட்டு சுகா அண்ணாச்சி மாதிரி ஆளுக கூட சுத்தி பிடிச்சதையெல்லாம் வாங்கித்திங்கனும்னு இருக்கு.. இந்த வட்டி ஊருக்கு வந்ததுல கொஞ்சம்கூட கூச்சப்படாம வளைச்சிக் கட்டிட்டுத்தான் வண்டி ஏறுனேன். அட்டகாசமான நடை. வழக்கம்போல தின்னேலிக்காரங்களை எழுத்திலேயே காண்பித்துவிட்டார் சுகா

  6. My father and his brothers used to visit regularly the Pothi Hotel at the junction of Sandipillaiyar koil street of Tirunelveli Town. There was also a hole-in-the gate tiffin shop at the door of the Nellaiyappar temple. This shop sold tasty bajji, pakoda etc. and also gave kashayam to nullify the effect of the deadly combination of besan and ground nut oil used in the cooking. Near the Junction railway station we had the Chandra Vilas Hotel.

  7. I remember Pothi Hotel near Sandipillaiyar koil and also a hole-in-the- gate tiffin shop at the door of Nellaiyappar Temple. The former was famous for its dosa which went down one’s throat without having to munch!The latter sold tasty bajji and pakoda and also kashayam to nullify the deadly combination of besan and ground nut oil!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.